Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 26

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 26

   நர்மதாவுக்கு நாள் இனிமையாக இருந்தது. அவர்கள் வட்டத்தில் எல்லோருக்கும் தெரியும் நிரஞ்சன் கொஞ்சம் முசுடு, பெரிதாக உறவை ஆதரிக்க மாட்டான், தள்ளியே நிற்பான், தலை கனம் கொண்டவன் என்று…

   பொதுவான விசேஷங்களில் நர்மதா கணவன் கண் பார்த்து தான் நிற்பாள். போலாம், கிளம்பு என்று ஒரு வார்த்தை வந்தால், மறுவார்த்தை சொல்லாம பிள்ளைகள் உடன் கிளம்பி இருக்க வேண்டும்.



Advertisement

  என்றோ வரும் சொந்தம், அவளும் வேலைக்கு போகும் பெண், கொஞ்சம் சந்தோசமாக இருக்கட்டும் என்றோ, மனைவிக்காக சில இடங்களில் விட்டு கொடுத்து செல்வோம் என்றோ இது வரை நினைத்தது இல்லை. நான் நிரஞ்சன். நான் இப்படித்தான் என்பான்.

  இன்று பிருந்தா சொன்னதும் தயங்கி நின்றதும், முகத்தில் அடித்தது போல பேசாமல் மனைவி முகம் பார்த்ததும், லேசான வெட்க சிரிப்பும் அவளுக்கு தன் கணவனா என்று அதிசியமாக இருந்தது.

   நர்மதா எப்போதும் கணவன் பக்கம் நின்று யோசிப்பாள். நிரஞ்சன் மனைவிக்காக யோசித்தது அவளுக்கு பெரிய விசயம் தான். ஒரு பெரிய நட்டத்தில் இருக்கிறோம், வாடகை வீடு, வேலை இல்லை, மற்றவர் முன் ஒரு தாழ்ந்த நிலை என்று எதுவும் அவளை பாதிக்கவே இல்லை. என் கணவன் இவ்வளவு மாறியாச்சா!… நடப்பில் இருக்கும் ஆயிரம் கவலையையும் தூக்கி போடும் அளவுக்கு நிறைவு கிடைத்தது. யார் முன்னே சென்றால் என்ன?… மெதுவாக முன்னேறினாலும் கணவன் கை பிடித்து அல்லவா செல்ல வேண்டும்…

Advertisement

     நிரஞ்சன் நிறைய டீலர்கள் பார்க்கிறான். ஒன்றும் அவனுக்கும் சரி வர வில்லை. அவனின் கார் ஒன்னே கால் கோடிக்கு மேல் போட்டு வாங்கினான். அதில் லாபம் இல்லாவிட்டாலும், நஸ்டபட விரும்ப வில்லை. நிறைய டீலர்கள் தேட ஆரம்பித்தான்.

Advertisement

    ஏதோ ஒரு நம்பிக்கையில் திரும்ப தொடங்க, சரிவு தான் வந்தது. அவ்வளவு பணம் போட்டு கார் வாங்கும் போது கூட உழைப்பின் மதிப்பு தெரிய வில்லை. இன்று, விக்க அழையும் போது நன்றாக தெரிந்தது. பாடுபட்டு சம்பாதித்த பணத்தை அவ்வளவு எளிதாக தூக்கி கொடுத்து விட்டான். இன்று அதில் இருந்து நியாயமான தொகை கூட பெற முடியவில்லை.

  அஸ்வினிடம் புலம்பினான், “ரொம்ப வலிக்குது மச்சான். இன்சூரன்ஸ், டேக்ஸ், பிரிபரேஷன்னு எவ்வளவு பணம் போட்டு இருக்கேன் தெரியுமா?… அதிக லாபம் வேண்டாம். ஐம்பது லட்சம் குறைச்சு கேக்குறாங்கடா… எப்படி தர முடியும். நியாயமா பேச வேணாம்…” நொந்து போனான் நிரஞ்சன்.

  அவனுக்கு இதெல்லாம் பழக்கமே இல்லை. காலமும், நேரமும் மாற அரசனும் ஆண்டியாக மாறுவான். நிரஞ்சன் எல்லாம் காலத்திற்கு ஒரு ஆள் கிடையாதே?…

Advertisement

        அஸ்வின் சொல்லி விட்டான், “மச்சான், உனக்கே எல்லாம் தெரியும். நாம அந்த ஃபீல்டுல தான் இருக்கோம். புது கார் வாங்கும் போது இருக்குற மதிப்பு. அதே காரை திரும்ப விக்கும் போது எப்படி இருக்கும்…”

   “டேய் என் கார் பழைய கார் இல்லடா… எடுத்து ஆறு மாசம் தான் ஆச்சு. குடும்பத்தோட ஒரு மூணு தடவை தான் வெளிய போனோம்…” என்று நிரஞ்சன் சொல்ல,

    “ஆறு மாசமா அல்லது அறு வருசமோ… வாங்குன காரை திரும்ப வாங்கும் போது விலை குறைக்க தான் செய்வாங்க. அது தானே அவங்களுக்கு லாபம். மச்சான், நம்ம பணத்தை தங்கம், நிலம், வீடுன்னுஇது எதுலையாவது போட்டா, அது மதிப்பு கூடும். ஆனா, கார் எவ்வளவு விலை போட்டு வாங்கினாலும், விக்கும் போது குறைச்சு தான் கேட்பாங்க…”

  நிரஞ்சனுக்கு நெஞ்சே வலித்தது. எத்தனை முறை மனைவி சொன்னாள், “ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கு, நகை எடுப்போம் என்று…” ஆறு வயது பெண்ணுக்கு நகை எதுக்கு என்று எகத்தாளம் பேசினான். உண்மையில் அன்று மனைவி சொன்ன மாதிரி கொஞ்சம் நகையோ, இடமோ வாங்கி இருந்தால், இன்று எதிர்காலம் பற்றிய கவலை இன்றி இருந்திருக்கலாம்… அதையும் விட கையிருப்பு எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையை கொடுக்கும் அல்லவா…

   இவனின் கொள்கை, கோட்பாடு எல்லாம் மனைவி, மக்களின் எதிர்காலத்தை அல்லவா கேள்வி குறி ஆக்கியது…

  தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் நிரஞ்சன். திரும்ப ஒரு விரக்தி நிலை… தன்னை தாங்கும் மனைவிக்கு ஏதேனும் செய்ய துடிக்கிறான். கையில் இருக்கும் போது பணத்தின் அருமை தெரிய வில்லையே…

  “முன்னாடியே நர்மதா சொன்னதை கொஞ்சம் காது கொடுத்து கேட்டு இருக்கலாம். இன்னைக்கு கஷ்டமா இருக்கு மச்சான். யாரும் என்னை மாதிரி முட்டாளா இருக்க மாட்டாங்க… நான் என்னவோ பெரிய அறிவாளி மாதிரி, எம் பொண்டாட்டிக்கு ஒன்னுமே தெரியாதுன்னு பேசினேன். இன்னைக்கு என்னோட யோசனை தப்பு, என் மனைவி போட்ட திட்டம் தான் சரி. ஆனா காலம் கடந்து போச்சு…”

   “உண்மை தான் மச்சான். நமக்கு எல்லாம் மளிகை வாங்க திட்டம் போடுறதுக்கு தன் மனைவி லாயக்குன்னு நமக்கு ஒரு நினைப்பு… உண்மையில் கோடில டீலர் பேசுற நம்மளை விட, கடுக்கு உளுந்தம் பருப்புல காச மிச்சம் பண்ணுற நம்ம வீட்டு பொம்பளைக யோசனை தான் சரி. அதுவே நமக்கு லேட்டா தான் புரியுது. கடன் இல்லாம, எதிர்கால பயம் இல்லாம ஒரு ஆண் வாழனும்ன்னு ஆசை இருந்தா, நிர்வாகத்தை பொண்டாட்டி கைல விட்டுடனும்…” என்று அஸ்வின் சொல்ல,

  “எல்லாம் சரி தான். ஆனால் காலம் தான் போய் விட்டதே… தன் மனைவி, பிள்ளைகளுக்கு எதுவும் செய்ய முடியாமல் போய் விடுமோ? பயமா இருந்தது…”

  கொஞ்சம் சரியாக இருந்தவன், மீண்டும் தடுமாற தொடங்கினான். உள்ளுக்குள் வைத்து மருகி கொண்டான். தன் பைத்தியகாரதனத்தை நினைத்து தன்னையே அடித்து கொள்ளும் வெறி வரும்.

   கணவன் முகம் வாட்டமாக இருக்க, “என்னங்க, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. என்னாச்சு?…”

  “ஒன்னுமில்லை நர்மதா.. வீட்டுலையே இருக்கேன்ல அதான்…” என்று ஒரு நேரம் சமாளிப்பான். ஒரு நேரம் முகம் காட்டி விட்டு, பின் அதற்கும் வருத்த படுவான்.

  நர்மதா கணவனை நன்றாக இழுத்து கொண்டு போனாள். அவனின் சுபாவம், மனநிலை அறிந்து அதற்கு தக்க நடந்து கொள்வாள்.

    அன்று ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என்று நர்மதா சீக்கிரம் கிளம்பி விட… நிரஞ்சன் தான் பிள்ளைகளை கிளப்பி விட்டான். சான்வியை குளிக்க வைத்து தயார் செய்தவன். பின் பெரிய மகளை குளிக்க வைத்து ரெடி செய்யும் போது மனதில் ஒரு வலி. ஒரு மாதிரி அழுத்தமாகி விட்டது.

   இருவரையும் அழைத்து கொண்டு நடந்தான். சான்வியை தூக்கி கொண்டவன், சஸ்டியை கை பிடித்து அழைத்து வந்தான். நிரஞ்சன் பார்வை முழுக்க பெரிய மகள் மீது தான். தன் இடுப்பை தாண்டி வரும் மகளை பெருமையும், வலியும் விழியில் தேங்க பார்த்து வந்தான்.

  இதுவரை பிள்ளைகள் விசயம் என்னவென்று மனைவியிடம் கேட்டு கொள்வான். அவனுக்கு தெரியாமல் எதுவுமில்லை. அவன் உடன் இருந்து தான் பார்த்தது கிடையாது. இன்று என்னவோ சஸ்டி கிளாஸ் வரை சென்று, அங்கிருக்கும் ஆசிரியர்கள் வரை பார்த்து தான் வந்தான்.

   மாலை நர்மதா வீடு வரும் வரை நிரஞ்சன் நார்மலாக இல்லை. ஏதோதோ யோசனை… நர்மதா வந்தவள், கணவன் முகத்தில் அவ்வளவு வேதனையை கண்டதும் பதறி போய்,

  “என்னங்க , என்ன ஆச்சு?…” என்று விசாரிக்க,

  அமர்ந்த வாக்கில் நர்மதாவை இடுப்போடு அணைத்து, வயிற்றில் முகம் புதைத்து கொண்டான். நர்மதா ஒன்றும் புரியாமல் பார்த்தவள், மெல்ல எட்டி பிள்ளைகளை பார்க்க… அவர்கள் மாலை உறக்கத்தில் இருந்தார்கள்.

  “என்னங்க…” என்று அவன் முகத்தை தூக்கி பார்க்க,

     நிரஞ்சன் நிமிரவே இல்லை. அவன் அழுகிறான் என்று புரிய, ஒரு மாதிரி பதற்றம் ஆகியது மனைவிக்கு…

  “என்னங்க, என்னன்னு சொல்லுங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு…”

  கண்ணை துடைத்து கொண்டு மெல்ல நிமிர்ந்தான்,

   “நம்மு, நம்ம பாப்பா வளருது…” லேசாக கண் நிறைந்தது.

  “யாரை சொல்றீங்க… ரெண்டு பேருமே உங்க வீட்டு ஆளுக ஜாடை தான். உங்க வீட்டுல எல்லாரும் உயரமா தான் இருக்கீங்க…”

  “அதில்லைதிடி… நான் சொல்றது நம்ம சஸ்டிய.. ஒன்பது வயசு இல்லையா… இப்போ தான் பொறந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள காலம் ஓடி போச்சு, பிள்ளை வளர்ந்து நிக்குது…” நிரஞ்சன் மனம் பாரமாக இருந்தது.

  நர்மதாவுக்கு கணவன் சொல்ல வருவது புரிந்தது… பொதுவாகவே ஆண்கள் அவர்களின் வயதை ஒட்டியே பெண் பிள்ளைகளின் வயதை கணக்கீடு செய்வார்கள் போல… நிரஞ்சனும் அந்த வகை தான். தற்போது தான் எட்டு வயது, தம் மகள் திருமண வயது வர காலம் கிடக்கு. அதற்குள் எவ்வளவோ சம்பாதித்து விடலாம் என்று தான் கணித்து வைத்து இருந்தான்.

  ஆனால், தன் மகள் தன் உயரத்துக்கு பாதி நிற்கும் போது தான் நிதர்சனம் எதுவென்று புரிகிறது. ஆண் பிள்ளைக்கு பதினேழு, பதினெட்டு வயதில் தான் அரும்பு மீசையே வளரும். ஆனால், பெண் பிள்ளைக்கு அவ்வாறு இல்லையே… பத்தை கடந்து விட்டால், அடுத்து எந்த நேரமும் எதிர்பார்க்கலாம். தன் மகள் வளர்ந்து விட்டாள் என்பதை தான் நிரஞ்சனால் ஏற்று கொள்ள இயல வில்லை.

    பெற்றவர்கள் கண் உறங்கும் பிள்ளைகள் மீது படிந்தது. நிரஞ்சன் மனமெல்லாம் ஒரே யோசனை தான். அப்பா, அம்மா இருக்கிறார்கள், அவர்கள் பார்ப்பார்கள் என்று தான் எந்த கவலையும் இன்றி நிம்மதியாக உறங்ககிறார்கள். அவர்களுக்கு நான் என்ன வைத்து இருக்கிறேன்.

  தலை வலித்தது. தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான்.

  “என்னங்க…” என்று நர்மதா அவன் அருகே அமர,

  தன்னால் எதுவும் முடியாதோ என்று ஒரு நினைப்பு வந்தது. அந்த நிமிடம் அவனுக்கான ஆறுதல் அவன் மனைவி தான். இன்னும் உடல் ரீதியான நெருக்கம் அவர்களுக்குள் இல்லை. அவன் உடல் நிலையை மனதில் கொண்டு தள்ளி தான் நிற்கிறார்கள். அதுவும் அழுத்தம் கொடுத்தது கணவனுக்கு… தான் மனைவிக்கு நியாயம் செய்ய வில்லையென்று…

     சஸ்டி முதலில் எழுந்து வர, நிரஞ்சன் தூக்கி கொண்டான். பிள்ளை வாசம் கொஞ்சம் இதம் கொடுத்தது. தன் மகள் குழந்தையாவே இருந்து விட்டால் தான் என்ன? நினைவு எங்கெங்கோ ஓடியது. அவனின் சொல்லப்படாத ஆறுதல் மனைவி மட்டும் தான்.

   அடுத்த நாளில் இருந்து நிரஞ்சன், இருக்கும் அத்தனையையும் கூட்டி சேர்க்க ஆரம்பித்தான். இதுவரை சிந்தி கிடந்த அவன் சேமிப்பை ஒரே பேக்கேஜாக மனைவி பெயரில் கொண்டு வந்தான். மிக சுறுசுறுப்பாக இருந்தான்.

  எப்படியாவது தன் குடும்பத்தை தலை நிமிர செய்ய வேண்டும். தன் பிள்ளைகளுக்கு வளமான எதிர்கால பாதை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். இதுவரை மனைவி சம்பாத்தியம் பத்தி ஒரு நாள் கூட கேட்டது இல்லை. இன்று சிறுதுளி பெருவெள்ளம்.

  தயங்காமல் மனைவியிடம் அவள் சேமிப்பை பற்றி கேட்டான். ஏன்? எதற்கு? என்றெல்லாம் நர்மதா கேட்க வில்லை. ஆரம்பம் முதல் அவள் சொல்வதும் அதை தானே… கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எதிர்கால முடிவு எடுப்போம் என்று… கணவனே முன் நிற்கும் போது அவளுக்கு என்ன?

    இதுவரை வைத்து இருந்த சேமிப்பை தயங்காமல் கணவன் கை சேர்த்தாள். அதில் ஆச்சர்யம் நிரஞ்சனுக்கு தான். நர்மதா தன் ஊதியத்தை பணமாக அல்லாமல் நகையாக சீட்டு போட்டு வரவு வைத்து இருந்தாள். பணத்தை விடவும் நகையின் மதிப்பு உயர்ந்து இருந்தது.

  சேமிப்பில் நம் வீட்டு பெண்கள் தான் எவ்வளவு கெட்டி!…

தான் இல்லாமல் போனாலும் தன் மனைவி பார்த்து கொள்வாள் என்ற திடம் வந்தது. ஆம், ஒரு முறை மரண வாசலை தொட்டதால், மரண பயம் வந்து விட்டது. எப்போது வேண்டுமானாலும், யாருக்கு என்றாலும் இறப்பு வரும். காலமும் எப்போது வேண்டுமானாலும் மாறும் என்று கண்டு கொண்டான்.

  இதுவரை விட்டது போதும்… இழப்பு வரும் முன் தன் குடும்பத்தை ஒரு நிலையில் வைக்க நினைத்தான். கணவனின் சேமிப்பு திட்டம் பிடித்து இருந்தாலும், அவனின் அவசரம் ஒரு மாதிரி அவளை யோசிக்க வைத்தது. என்னவாம்?…

  அடுத்த நாளே நிரஞ்சன் ஐந்து கோடிக்கு தன் பெயரில் பாலிசி எடுத்து வர, பயந்து போனாள் நர்மதா.

  அடுத்து கணவனை விட வில்லை. என்ன? எதுவென்று தோண்டி துருவ, நிரஞ்சன் மனைவியிடம் மறைக்க எல்லாம் இல்லை. எல்லாம் சொல்லி விட்டான்.

   “உங்களை தாண்டி எங்களுக்கு தனியா வாழ்க்கையில என்ன இருக்கு நிரஞ்சன்?…” வேதனையோடு மனைவி கேட்க.

   “யாரும் என்னை எதுவும் சொல்லலை நம்மு. ஆனா, எனக்குள்ளவே நான் அசிங்க பட்டு நிக்கிறேன். என் மேல எனக்கே வெறுப்பா இருக்கு… என்னால என் குடும்பத்துக்கு என்ன ஆதாயம். என் வருமானத்துக்கு உங்களை எப்படியோ வைத்து இருக்கலாம். ஆனா, நான்…” என்று பார்வையால் வீட்டை காட்டியவன்,

    “அன்னைக்கே எனக்கு ஏதாவது ஆகி இருக்கலாம். அப்படி இருந்தா என் கம்பெனில இருந்து நிறைய பணம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு உதவி… நான் வெட்டியா இருக்கேன்” என்று அவன் சொல்லும் போதே,

  “நிரஞ்சன்…” கத்தி விட்டாள் நர்மதா.

  “என்ன பேசுறீங்க நிரஞ்சன். உங்களை தாண்டியா எங்களுக்கு வளமான வாழ்க்கை முக்கியம். நாம என்ன நடு தெருவுல நிக்கிறோம். நல்லா தானே இருக்கோம்…”

  “ஆனா, சக உறவுகள் மத்தியில் ஒன்னும் இல்லாம போயிட்டோம் நர்மதா. மத்தவங்க பார்வையில எம் பிள்ளைக தரம் இறங்கி போயிட்டாங்க. எனக்கு வலிக்குது. அவங்க அப்பா ஒன்னுக்கும் ஆகல…” கண் கலங்கியது அவனுக்கு…

 எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதாக இருக்காது…

  “உங்க முடிவு தான் என்ன நிரஞ்சன்…” தீர்க்கமாக கேட்டாள் நர்மதா.

  “இருக்குற எல்லாத்தையும் பிள்ளைகளுக்கு சேர்த்து வச்சுட்டு, நான் ஒரு வேலைக்கு போக போறேன்..”

  “உங்க உடல் நிலைக்கு ஓய்வு அவசியம். இனி அதிக அழுத்தம் கொடுக்குற வேலைக்கு போக கூடாது…” பல்லை கடித்து கொண்டு நர்மதா சொல்ல,

  “பரவாயில்லை. எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது. வேலையில இருக்கும் போது எதுவும் ஆனா கூட இன்சூரன்ஸ் இருக்கு…” மனைவி முகம் பார்க்காமல் சொன்னான்.

  அவனையே பார்த்து நின்ற மனைவி, “நிரஞ்சன், நான் ஸ்கூல் படிக்கும் போது அடிக்கடி ப்ரேயர் மீட்டிங் நடக்கும். அப்படி ஒரு மெசேஜ் என் கவனத்தை ஈர்த்தது. நாம் எல்லாம் கடவுளை எதிர்பார்க்கிறோமா அல்லது அவர் மூலமா கிடைக்கிற ஆதாயத்தை எதிர் பார்க்கிறோமா?… நாம கேட்கிறாத கடவுள் கொடுக்கணும்ன்னு எதிர் பார்க்கிறோம். அதை கேட்டு தான் ஓடுரோம். கடவுள் மட்டும் போதும்ன்னு யாரும் நினைக்கிறது இல்லை. ஆனா, உண்மையிலேயே நம்ம தேடுதல் கடவுளா தான் இருக்கணும்..”

  “இது எப்பவும் எம் மனசுல ஓடும். நானும் எம் மனசை கேட்கிறேன். எனக்கு என் புருசன் வேணுமா? இல்லா புருசன் மூலமா கிடைக்கிற ஆதாயம் வேண்டுமா?… எனக்கு என் புருசன் தான் வேண்டும் நிரஞ்சன். ஆமா, எனக்கும் வளமான வாழ்க்கை மேல ஆசை இருக்கு தான். அதுக்காக உங்களை வருத்தி கிடைக்கிற எதுவும் எனக்கு சந்தோசத்தை, பெருமையை கொடுக்காது நிரஞ்சன். உங்க கூட சேர்ந்து வாழ்கிற வாழ்க்கை மட்டும் தான் எனக்கு நிறைவு…” மனம் உவந்து தான் சொன்னாள் நர்மதா.

  நிரஞ்சன் உள்ளம் துடித்தது. இந்த காதலுக்காக தானே அவளுக்கு ஏதேனும் செய்து விட துடிக்கிறான். அவள் ஆசையை நிறைவேற்ற தவிக்கிறான்.

    “ உனக்கு நான் நியாயம் செய்யவில்லை நம்மு. ரொம்ப கெட்டவனா வாழ்ந்து இருக்கேன்…”

   “நிரஞ்சன் இந்த உலகத்துல ரெண்டே நபர் தான். ஒன்னு ரொம்ப கெட்டவன், இன்னொன்னு ஓரளவு கெட்டவன். முழுசா நல்லவன் ஒருத்தன இந்த உலகத்தில் தேடவே முடியாது. எல்லாரும் ஏதோ ஒரு தவறோட தான் வாழ்ந்துட்டு இருப்பாங்க. நீங்க முழுசா கெட்டவன் கிடையாது நிரஞ்சன். உங்களோட இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாமோ அப்படி யோசிக்கிற அளவுக்கு நீங்க தப்பானவரும் கிடையாது. எங்களுக்கு நீங்க வேணும் நிரஞ்சன். உங்களோட வாழ்ற முழு வாழ்க்கையும் எனக்கு வேணும். நம்ம பிள்ளைகளை அவங்களுக்கான துணை கிட்ட கொடுத்ததுக்கு அப்புறம், எனக்கான துணை எப்பவும் வேணும்…”

  “சம்பாத்தியம் தானே பண்ணலாம் நிரஞ்சன் காலம் இருக்கு.. ரெண்டு பேரும் இருப்போம், ஓடுவோம். எனக்கு வயசான காலத்துல எல்லாம் வேலைக்கு போக முடியாது. அதனால், நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே ஓடுவோம். நீங்க இல்லாம, உங்கள கஷ்டப்படுத்தி கிடைக்கிற எதுவும் எங்களுக்கு வேணாம். எங்களுக்கு கிடைக்கிற ஒரு சின்ன சந்தோஷம் கூட நீங்க இருக்கணும். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நீங்க கொடுக்கிற பாதுகாப்பை பணம் கொடுக்காதே நிரஞ்சன்…”

 “நாம இனி நிறைய கஷ்டத்தை பார்க்கணும் நர்மதா… அது என்னால மட்டும் தானே. என்னால உனக்கு நிறைய கஷ்டம்…” வேதனை அவனுக்கு..

  “வாழ்க்கையே கஷ்டம் நிறைந்தது தான் நிரஞ்சன். இங்கு தனிப்பட்டு ஒவ்வொருத்தரும் அவங்க கஷ்டங்களை வச்சு ஒரு சரித்திரமே எழுதலாம். யாருக்குமே வாழ்க்கை ஈஸியானது கிடையாது நிரஞ்சன். நான் தினமும் வேலைக்கு போறேன். ஆரம்பத்துல வேலைக்கு போகும் போது அவ்வளவு தூரம் போய் வருது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ரெண்டு ஆட்டோ, பஸ் வெயில் எனக்கு அவ்வளவா பிடிக்கவே இல்லை. எப்படா வீடு வரும் பிள்ளைகளை பாப்போம் அப்படித்தான் இருக்கும். அப்புறம் தான் நான் என்ன பண்ணேன், எனக்கு புடிச்ச புத்தகங்கள நான் பஸ்ல போகும்போது படிக்க ஆரம்பிச்சேன். நிறைய புத்தகங்களை படிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு தெரியும் தானே… எனக்கு புடிச்ச புத்தகத்தை படிச்சிட்டு நான் போகும் போது தூரம் எனக்கு பெருசா தெரியல. அட இவ்வளவு சீக்கிரமா நம்ம வரவேண்டிய இடம் வந்துருச்சு! அப்படி யோசிக்கிற அளவுக்கு எல்லாம் நான் புத்தகத்தில் மூழ்கி போயிருவேன். ஏன்னா, எனக்கு புக் ரீட் பண்றது பிடிக்கும்…”

   “இதை ஏன் இப்ப சொல்றேன்னா?… வாழ்க்கையில நிறைய கஷ்டமான சூழ்நிலைகள் வரும். நம்ம கூட இருக்கிற வாழ்க்கைத் துணை நமக்கு புடிச்ச மாதிரி இருந்தா?… கஷ்டங்களை எளிதா கடக்கலாம் நிரஞ்சன். எனக்கு உங்கள புடிச்சிருக்கு.. இந்த நிரஞ்சன ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. அதனால இந்த வாழ்க்கையில எனக்கு வர கஷ்டத்தை நான் ரொம்ப ஈஸியா கடந்தரலாம்னு நினைக்கிறேன், உங்க கைய புடிச்சுட்டு… இனி வாழ்க்கைல என்னவோ இதுக்கு கீழ போனாலும் சரி, இதுக்கு மேல போனாலும் சரி.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் சேர்ந்து மட்டும் தான்… அது மாறாது நிரஞ்சன்…”

   மனைவியை தாவி அணைத்து கொண்டான். எந்த நிலையிலும் விட்டு கொடுக்காத, விட்டு விடாத, நிலை மாறாத அன்பு. பேசவே தோன்ற வில்லை.

  “என்ன பண்ணலாம் நர்மதா. நீ எனக்கு யோசனை சொல்லு… வேலைக்கு போகம எப்படி? என்ன பண்ண? உனக்கு ஒரு யோசனை இருக்கும் தான…”

  “ஏதாவது தொழில் பண்ணுங்க நிரஞ்சன். உங்களுக்குத்தான் கார் பத்தி எல்லாம் தெரியுமே. புடிச்சத செய்யுங்க… இப்போ வீடு வேணாம் நிரஞ்சன். நமக்குத் தேவை ஒரு நிலையான வருமானம். நீங்க வேலைக்கு போய் அதிகமான அழுத்தம், வேலையோட பாரம் இதெல்லாம் வேணாம்… உங்களுக்கு புடிச்சதை சின்ன தொழில் ஆரம்பிங்க. ஷேர் மார்க்கெட்டையும் விட வேணாம். ஒரு தடவை தோத்தா, அதுல தோத்துட்டேவா இருப்போம்.. வெற்றி தோல்வி இரண்டுமே தான் வரும்… எனக்கு உங்க உடல் நிலை ரொம்ப முக்கியம். அத பாதிக்காத வகையில ஏதாவது தொழில் பண்ணுங்க நிரஞ்சன். கையில இருக்குற முதலீட்டை தொழில்ல போடுங்க. நமக்கு ஒரு நிலையான வருமான வரட்டும். அதுக்கப்புறம் நம்ம சொந்தமாக வீடு வாங்கலாம், என்ன வேணாலும் பண்ணலாம். இப்ப நமக்கு ஒரு வருமானம் வேணும் நிரஞ்சன். அது தான் முக்கியம். உங்களை வீட்டுல இருங்கன்னு சொல்ல மாட்டேன். எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நல்லதுன்னா… அது நீங்க மட்டும் தான்…”

  எவ்வளவு தெளிவாக தன் மனைவி தனக்கு அறிவுரை சொல்கிறாள்.

 “ரொம்ப தேங்க்ஸ் நர்மதா…” மனமார சொன்னான்.

  “தைரியமா இறங்குங்க நிரஞ்சன் கூட நான் இருக்கேன். இனி என்னவோ நாம சேர்ந்தே பாப்போம். வழிகாட்ட நான் இருக்கேன் வழிநடத்த நீங்க இருக்கீங்க. மெதுவாத்தான் அப்படின்னாலும் நாம முன்னேறலாம் நிரஞ்சன். ஒரு நாள் நம்ம ஆசைப்பட்ட பாலா அடி உயர்ந்து நிற்போம்…” அவன் தோல் சாய்ந்து கொண்டாள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!