Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 30

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 30

   ஓரளவு நன்றாக இருந்த பாலமரத்தான் உடல்நிலை அடுத்தடுத்த நாளில் மோசமாக தொடங்கியது. கிட்னியிலும் பாதிப்பு இருக்க காப்பாற்ற முடியாத நிலைதான். மேலும் பத்து நாட்கள் ஹாஸ்பிடலில் வைத்து பார்த்தவர்கள். அதற்கு பின் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

  ஏதோ ஒரு நம்பிக்கை மகள்களுக்கு.. எப்படியும் தந்தையை காப்பாற்றி விடலாம் என்று… தன் குடும்பம், வேலை என்று அனைத்தையும் மறந்து தகப்பனே கதி என்று கிடந்தார்கள்.



Advertisement

   நிரஞ்சன் தான் பிள்ளைகளை பார்த்து கொண்டான். பள்ளி விட்டதும் தன்னோடு கடைக்கு கூட்டி போய் வைத்து கொள்வான். காலையில் சுசீலா உணவு கொடுத்து விட, இரவு மட்டும் நிரஞ்சன் தனக்கு தெரிந்த அளவு செய்து சமாளித்து கொண்டான். அவனுக்கு நன்றாக தெரியும்.. நர்மதாவுக்கு தந்தை மீதுள்ள பிடிப்பு. அதனால் அவளை கடமை என்று பிடித்து வைக்காமல், தோல் கொடுத்து துணை நின்றான்.

  நர்மதாவுக்கு எதுவும் கவனத்தில் இல்லை. நாளுக்கு நாள் மோசமாகும் தந்தை உடல் நிலை மட்டும் தான் கவனத்தில் நின்றது…

    முகுந்தன் தன் மனைவி அருகில் போய் நின்றான்.

Advertisement

  “வித்யா…”

Advertisement

   “என்னங்க…”

   “உனக்கு தெரியும்ல நர்மதா அப்பாக்கு முடியல. நிரஞ்சன் பிள்ளைகள் கூட தனியா தான் இருக்கான். அவனும் முடியாதவன். இப்போ ஸ்கூல் லீவ் தான். பிள்ளைகளை நம்ம கூட வச்சு பார்த்துகளாமா?…”

  “ பிளீஸ் வித்யா. அவனுக்கு கொஞ்சம் சிரமம். இங்க சொந்தமா இருக்கிறது நாம தான்…”

Advertisement

    “என்னால முடியாதுங்க. எனக்கு என் வீட்டை பார்த்து, எம் பிள்ளையை பார்க்கவே நேரம் சரியா இருக்கு.. எதோ ஒரு நேரம் சமைச்சு கொடுக்கலாம். அதை விட்டு லீவுக்கு கூட்டி வர வேலை எல்லாம் வச்சுகாதீங்க… என்னால பார்க்க முடியாது..” என்று திட்டவட்டமாக சொல்லி விட்டாள்.

   முகுந்தனுக்கு மனைவி குணம் முழுதாக புரிந்தது. தள்ளி நின்று ஏதேனும் நல்லது, கெட்டது போய் வந்து இருக்க தான் நினைக்கிறாள் தவிர்த்து… ரொம்பவும் ஒட்டி உறவாவோ அல்லது உறவுகளை இழுத்து பிடித்து அனுசரிக்கவோ விரும்ப வில்லை.

  நீ உன் இடத்தில், நான் என் இடத்தில் என்ற நிலையில் நிற்கிறாள் வித்யா. அதை ஒரு வகையில் முகுந்தன் ஏற்று கொண்டான். மொத்தமாக வெட்டி நிற்காமல்.. குடும்பம் என்ற அளவில் ஒட்டி கொள்கிறார்கள். மற்ற படி அவரவர் வேலை, அவரவர் வாழ்க்கை.

      வாரத்தில் இரண்டு நாள் முகுந்தன் உணவு கொண்டு வந்தான். நிரஞ்சன் வேண்டாம் என்றாலும் விடவில்லை. சில நேரம் கடையில் போய் இருந்து கொஞ்சம் தம்பிக்கு ஓய்வு கொடுத்தான். என் அளவில் என் தம்பியை நான் பார்க்கிறேன், அவ்வளவு தான்.

         நர்மதா வீட்டில் சொந்தங்கள் கேள்விபட்டு வர ஆரம்பித்தார்கள். உயிரோடு இருக்கும் போதே பார்த்து விட்டு செல்வது நலம் என்ற ரீதியில் நெருங்கிய சொந்தங்கள் குமிந்தது. விஜயா இடிந்து போய் அமர்ந்து விட்டார். அவருக்கு ஒன்றுமே ஓட வில்லை. கணவர் இல்லையென்றால் அடுத்து என்ன?… அதை யோசிக்கவே முடியவில்லை.

       சுபா தான் வந்தவர்களை எல்லாம் பார்ப்பது.. எல்லோருக்கும் பதில் சொல்லி அங்கும், இங்குமாக ஓடி கொண்டு இருந்தாள். எப்படி தான் சுபா வீட்டையே சுற்றி வந்தாலும், மாமனார் அருகே மட்டும் வரவே மாட்டாள். அவளுக்கு ஒரு மாதிரி கம்பார்ட்டாக இல்லை. நோயாளி என்று தள்ளியே தான் நின்றாள்.

  யாரும் அவளை குறை சொல்ல வில்லை. அவள் வந்து தான் பார்க்க வேண்டும் என்றில்லாமல் மகள்களே தாங்கி நிற்கிறார்கள். விஜயா மனம் எதிர்பார்த்ததோ என்னவோ?

      படுத்த படுக்கையாக பாலமரத்தான் இருக்க.. பார்க்க என்று கோடி ஜனம் குமிந்தாலும், தொட்டு தூக்கவும், நெருங்கி அமரவும், நாங்கள் உன் அருகில் தான் இருக்கிறோம் என்ற உணர்வை கொடுக்கவும் பெற்ற பிள்ளைகள் அன்றி யார் வருவார்?…

  அதற்கு தக்க சுபா முன் நின்று சொந்தங்களை பார்த்தாலும், ஒரு நிமிடம் கூட பாலமரத்தான் படுக்கை அருகே வந்து நிற்க வில்லை. பார்க்க வந்த சொந்தங்கள் எல்லாம் சொல்லி விட்டார்கள்,

  “முடியாதவர் தான் என்றாலும் சுத்தமா வச்சு இருக்கீங்க. சில பேர் கிட்ட நிக்க கூட முடியாது. அதுக்கு தான் பொம்பளை மக்கள் வேணும்ன்னு சொல்றது… எந்த சுணக்கமும் இல்லாம பெத்த தகப்பன்னு அவங்க தான் பார்க்க முடியும்…”

  அதை விஜயாவும் உணர்ந்தே இருந்தார். பெண் மக்கள் இருவர் தான் தொட்டு தூக்க, சுத்த படுத்த, குழந்தைக்கு கொடுப்பது போல பொறுமையாக பாலை குடிக்க வைக்க, டயாபர் போட்டு விட கூட பிள்ளைகள் தயங்கவே இல்லை.

     செழியன் பார்க்க வில்லை என்று சொல்ல முடியாது. தினமும் மூன்று முறை பார்க்க வருகிறான். தந்தைக்காக மனம் கவலை படுகிறது. ஆனால், ஆண் மகனாக அடக்கி தள்ளி நிற்கிறான். பெற்றவள் மனம் வேற என்னவோ மகனிடம் எதிர்பார்த்தது போல…

     பால மரத்தான் சில வார்த்தைகள் பேசினார். லேசாக எழுந்து அமர்ந்தார். மனைவி, மக்கள் அருகே இருக்க, கொஞ்சம் தெம்பாக இருந்தார் போல…

  “பேரன், பேத்தி களை வர சொல்லுங்க மக்கா… நினைபாவே இருக்கு..” என்ற தந்தையின் வார்த்தை நர்மதாவுக்கு அழுகையை கொடுக்க.

    “ஏன்த்தா அழுகுற… செழியன் எல்லாம் நம்ப முடியாது. எம் பேத்திக்கு நான் செய்ய வேண்டிய சீர் செய்யாம கண்ணை மூட மாட்டேன் நர்மதா.. அப்பா நான் இருக்கேன். உங்களுக்கு செய்ய வேண்டியதை செஞ்சு முடிச்ச பின்னாடி தான் தெக்க போவேன்…” என்று அவ்வளவு தைரியமான வார்த்தைகளை பேசியவர்.

   இரவு பத்து மணிக்கு மூணு இட்லி சாப்பிட்டார். நர்மதா மாத்திரை கொண்டு வந்து கொடுக்க,

  “வேணாம்டா நர்மதா. அப்பாவுக்கு நெஞ்சு என்னவோ அடைக்கிற மாதிரி இருக்கு. கொஞ்சம் சுடு தண்ணி மட்டும் கொண்டு வா…” என்று சொல்ல,”

  பயந்து போன நர்மதா, வேகமாக தண்ணி கொண்டு வந்து அவள் கையாலேயே கொடுக்க, ரெண்டு அடி கூட தொண்டையில் சரிய வில்லை. ஒரு பெரிய விக்கலோடு கண் மூடி கொண்டார்.

  “அப்பா…”

  “அப்பா…” என்று பெரியதாக நர்மதா அலற… அப்புறம் தான் வீட்டில் எல்லோரும் ஓடி வந்தார்கள்.

     அப்போது தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிரஞ்சன், போன் சத்தத்தில் பதறி எழுந்து என்னவோ என்று காதில் வைத்து கேட்க…

    ஒரு நொடி மூச்சே நின்று விட்டது. பால மரத்தான் இயற்கை எய்தினார். நம்பவே முடியவில்லை. ஒன்பது மணிக்கு தான் மாமனாரோடு ரெண்டு வார்த்தை நன்றாக பேசினான். பேத்தியை பார்க்க வேண்டும் என்று அழைத்து வர சொன்னார். அதற்குள் … நெஞ்சை லேசாக நீவி விட்டான் நிரஞ்சன்.

     அடுத்த அழைப்பு விநாயகம். நிரஞ்சன் எடுக்க விமான நிலையத்தில் இருப்பதாகவும், வாருங்கள் என்றும் சொல்ல… அடுத்து அவசரமாக பிள்ளைகள் உடன் கிளம்பி விட்டான்.

   விநாயகத்தை நேரில் பார்க்கும் போது வார்த்தையே வர வில்லை. பெரிய அமைதி மட்டும் தான். மெளனமாக ஊருக்கு கிளம்பினார்கள்.

     நர்மதா வீடு இருக்கும் தெருவில் நுழையும் போதே.. பால மரத்தான் அமைதியான முகம். இரங்கல் செய்தியாக வரவேற்க… அவனுக்கு கடக்கவே முடியவில்லை. எத்தனை நல்ல, உண்மையான மனிதர்.

  அழுகை சத்தம் வீட்டை நெருங்கும் போதே கேட்க. மனம் மனைவிக்காக கலங்கியது. தந்தை தானே அவளுக்கு எல்லாம்.. எப்படி தாங்கி நிற்கிறளோ…

   வெளி வாசலில் தான் வைத்திருந்தார்கள். அமைதியாக உறங்குவது போல ஒரு தோற்றம். மௌனமாக கண்ணாடி பெட்டிக்குள் இருந்தார் பால மரத்தான். பிருந்தாவும், நர்மதாவும் தான் கத்தி கதறி அழுது கொண்டு இருந்தார்கள். விஜயாவுக்கு பேச்சே இல்லை. முழுதாக உடைந்து போனார் போல… முப்பத்தி ஐந்து ஆண்டுகள் முழுதாக சுக துக்கங்களை கடந்து வாழ்ந்த மனிதர். இன்று வெறும் உடல் மட்டும் கண்முன்னே கிடந்தது.

    நிரஞ்சனுக்கு உயிரற்ற உடல் போலவே மாமனார் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏதோ உறங்குவது போலவே ஒரு தோற்றம். அந்த அளவில் தான் இருந்தார் பாலமரத்தான்.

  தாமோதரன், சுசீலா, முகுந்தன் என்று குடும்பம் வந்துவிட்டது. சம்மந்தியாக மரியாதை செய்தார்கள். நிரஞ்சன் வெகு நேரம் தள்ளி நின்று தான் மனைவியை பார்த்தான். எந்த ஆறுதலும் தேறுதலும் சொல்லி சமாதானம் செய்து வலியை போக்க முடியாது. பிரசவ வலியை பெண் கடக்க வேண்டும் என்பது போல உறவுகளின் இழப்பின் வலியையும் முழுதாக அனுபவித்து தான் கடக்க முடியும்.

  மனைவியை நெருங்கி என்ன பேச முடியும். என்ன சொன்னால் சமாதானம் ஆவாள். உயிரற்று இருப்பது பெற்ற தகப்பன். இனி ஒரு முறை எப்படியும் காண முடியாத தகப்பன். இனி என்றாவது அந்த தந்தையின் குரலைக் கேட்க முடியுமா?… அழுகட்டும் மனதின் வேதனை தீர, வழி குறைய, அல்லது வழி அதிகமாக கூட அழுகட்டும்.

  இன்று விட்டால் இனி என்று இந்த தந்தையின் முகம் பார்க்க முடியும். இன்னும் ஐந்து மணி நேரம் அதற்குப்பின் என்ன பாடுபட்டாலும் தந்தையின் முகத்தை, உடலை காணவே முடியாது. அவள் வேதனை அழுதால் அழுகட்டும் என்று தள்ளி நின்றான் நிரஞ்சன்.

         மாலை ஐந்து மணி. உறவுகள் பார்ப்பதற்காக கண்ணாடி பெட்டியை திறந்தார்கள். மக்கள் விரைத்துக் கிடந்த கையை முகத்தை காலை எல்லாம் தொட்டுப் பார்த்து அழுதார்கள். நிரஞ்சன் மெல்ல தன் மாமனார் கால் அருகே போய் நின்றான். தாமோதரன் பார்வை மகன் மீதுதான்.. கலங்கிய கண்களை சரி செய்து தன் மாமனார் பாதத்தில் தலையை வைத்து அழுத்தி, இரு கை கூப்பி வணங்கி ஒதுங்கி கொண்டான்.

      நிச்சயம் தாமோதரனுக்கு ஆச்சரியம்தான். மகன், தன் மாமனார் மேல் இவ்வளவு மரியாதையா வைத்திருந்தான்…

        செழியன் தான் எல்லாம் பார்த்தான். நிரஞ்சன், விநாயகம் இருவரும் செய்ய முன் வந்தாலும்.. அவன் அவர்கள் பக்க ஆட்களை வைத்தே பார்த்துக் கொள்ள, இவர்கள் தள்ளி நின்று கொண்டார்கள்.

  துக்கத்திலே இரண்டு நாட்கள் கடந்து விட்டது. ஆனாலும், நர்மதா அழுகை குறையவே இல்லை. என்னென்னவோ சொல்லி சொல்லி அழுது கொண்டிருந்தாள். விஜயா முழுதாக முடங்கிப் போனார். இன்னும் ஒரு வாய் உணவு மகள்களுக்கு இறங்கவில்லை. இதற்கு மேலும் தள்ளி நிக்க முடியாமல் தான் நிரஞ்சன் மனைவியை நெருங்கினான்.

 “நர்மதா…”

 “எங்க அப்பா நிரஞ்சன். எங்க அப்பா.. இன்னைக்கு அவர் இல்ல. இந்த உலகத்திலேயே இல்லை. நான் எங்க போனாலும் அவரை பார்க்க முடியாது…”

  “கடந்து வர தான் வேண்டும் நர்மதா…”

    “நெஞ்சே எரியுது. நடந்தது என்னால தாங்கவே முடியல.. இதை கடக்கவே முடியல… அவ்வளவு வலிக்குது. எங்க அப்பா.. என் கையிலேயே…” தொண்டை அடைத்தது.

    “நல்லாத்தான் இருந்தார் நல்லா பேசினார். எல்லாம் சரியா போச்சுன்னு நெனச்சேன். என் கண் பார்க்க எங்க அப்பா எங்களை விட்டு போயிட்டாரு… என்னைக்காவது என்னால மறக்க முடியுமா நிரஞ்சன்…”

  “நர்மதா.. ரொம்ப அழுதா உனக்கு முடியாம போயிடும்..”

    “எங்க மூணு பேருக்காக தான் அவர் வாழ்ந்ததே.. இன்னைக்கு நாங்க வாழ்ற இந்த வாழ்க்கை, படிப்பு, கவுரவம் எல்லாம் அவர் கொடுத்தது. இன்னைக்கு நாங்க நல்லா இருக்கோம் நிரஞ்சன். அவர நல்லா வச்சுக்கணும்னு நினைச்சோம். அவரை கடைசி வரை வச்சு பார்த்துக்கிற கொடுப்பினை எங்களுக்கு இல்லாம போயிருச்சு…”

  “அவர் விதி முடிஞ்சது நர்மதா…”

     “என் பிள்ளைகளை ஆளாக்கி பாக்காம போயிட்டாரே நிரஞ்சன். இனி எங்களுக்கு யார் இருக்கா நிரஞ்சன்? எங்களை யார் பாப்பா… நானும், எங்க அக்காவும் அனாதை மாதிரி போயிட்டோமே.. யார் இருந்தாலும் எங்க அப்பா மாதிரி வருமா?…”

   “நாங்க தனியாகிட்டோம். எங்க அப்பா எங்களுக்கு இல்லாம போயிட்டாரு.. பாதியில் விட்ட மாதிரி இருக்கு. நான் இனி என்ன பண்ண போறேன்…” என்று நர்மதா கதறி அழுக,

  கலங்கிய கண்களோடு நிரஞ்சன் மனைவியை அனைத்து கொண்டான். என்றோ ஒரு நாள் உன் பிறந்த வீட்டு உறவு உனக்கு தேவையில்லை என்று சொன்னவன் தான். இன்று மனைவிக்காக கண்கள் கலங்கியது. அவளுக்காகவாது, அவர் கொஞ்ச நாள் இருந்து இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது.

   நிரஞ்சன் தன் மக்களை பார்த்தான். பிள்ளைகள் உறங்கிக் கொண்டு இருந்தார்கள். நெஞ்சு துடித்தது. சிறுவயதோ! பெருவயதோ! எந்த வயதிலும் தகப்பன் தகப்பன் தான். அந்த அரவணைப்பை பிள்ளைகள் எந்த வயதிலும் தேடுவார்கள் போல…

   நர்மதாவுக்கு என்ன இல்லை?.. கணவன், ரெண்டு பிள்ளைகள், வீடு, வேலை, வசதி என்று நிறைவான வாழ்க்கை இருந்தாலும் அவளுக்கு என்று குடும்பம் இருந்தாலும்… அவள் தந்தையின் இழப்பு, அவளை யாருமற்றவளாக உணரச் செய்கிறது.

    அடுத்தடுத்து விசாரிக்க என்று ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள். விஜயா உறங்கிக் கொண்டு இருக்க யாரோ உறவினர்கள் வந்தார்கள் என்று சுபா எழுப்ப வந்தாள்.

      பிருந்தா தான் “விடு, எங்க அம்மா இப்பதான் கொஞ்சம் தூங்குறாங்க. வந்தவங்கள நீயே பாரு, அவங்கள எழுப்பாத…” என்று தாயோடு இருந்து கொண்டாள் பாதுகாப்பாக..

     தந்தை முடியாமல் போனதிலிருந்து தற்போது இறப்பு வரை மிகவும் சீரழிந்தது விஜயா தான். கண்விழித்து இருக்கும் நேரமெல்லாம் அழுகையும் புலம்பலும் தான். அவரையும் அறியாமல் உறங்கும் உறக்கம் மட்டுமே அவருக்கு ஓய்வு. அதனால் தான் பிருந்தா, சுபாவை தடுத்து விட்டாள்.

      சுபா வீட்டு மருமகளாக அந்த வீட்டு பெண்களுக்கு சீர்வரிசையை அடுக்க தொடங்கினாள். அண்டா, பானை, ஆளுக்கு பத்து சவரன் நகை, பட்டு சேலை என்று பொதுவில் பட்டியல் போட, அவ்வளவு கடுப்பு பிருந்தாவுக்கு…

  மதுரை பக்கம் வழக்கம்தான். பெரியவர்கள் இறப்புக்கு பின் பிறந்த மக்களுக்கு சொத்தாக ஏதேனும் ஒன்றை செய்வார்கள். அந்த வழக்கத்தில் தான் சுபாவும் அடுக்க, பிடிக்க வில்லை பிருந்தாவுக்கு..

  சுபாவுக்கு என்ன.. பெரியவர்கள் இருக்கும்போதே செய்து விட்டால், நாளை எந்த சொத்து பிரச்சனையும் வராது.

  வீட்டில் இன்னும் உலை வைக்கவில்லை. பெரிய இழப்பு என்பதால் இன்னும் அடுப்படி புழங்கவில்லை. அது சுபா அம்மா திலகாவுக்கு பிடிக்கவில்லை. அவர் நேராகவே சொல்லிவிட்டார்,

    “இழப்புதான் யார் இல்லை என்று சொல்லியது. எல்லாரும் ஒரு நாள் போகத்தான் போறோம். கடைசி வரைக்கும் இங்கேயே இருந்து யாரும் ஆளவில்லை…” என்றவர்,

  “அண்ணன் என்ன சின்ன பிள்ளைகளை விட்டுட்டா போய் சேர்ந்திருச்சு.. அதெல்லாம் மூன்று மக்களுக்கும் சீரும், சிறப்புமாக கல்யாணம் முடிச்சு. பேரன், பேத்திய பாத்து நல்லபடியா தான் போய் இருக்காரு..” என்றவர் மகள் வீடு என்ற உரிமையில் அவரை அடுப்படி வேலைகளை தொடங்கிவிட்டார்.

      பிருந்தாவுக்கு இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் பிடிக்கவில்லை. எந்த வயதில் போனால் என்ன அவர்கள் இழப்பு அவர்களுக்கு… அந்த வலியை முழுதாக அனுபவிப்பவர்களும் அவர்கள் தான். வெளியில் நிற்பவர்கள் ஆயிரம் நியாயம் பேசலாம். தந்தை இருக்கும்போது தள்ளி நின்றவர்கள் எல்லாம் இன்று நியாயம் பேசுகிறார்கள். புடிக்கவே இல்லை…

     அடுத்தடுத்து காரியங்கள் தொடங்கும் பொழுது பொதுவில் சுபா சீர் பொருட்களை அடுக்க கத்தி விட்டாள் பிருந்தா,

     “எவ்வளவு பெரிய வலி தெரியுமா எங்களுக்கு?… பெத்த தகப்பன முழுசா தூக்கி குடுத்துட்டு நொந்து போய் கிடக்கோம். இதுல பட்டு சேலையும், நகையும் தான் முக்கியமா?… எங்க தகப்பன் செத்து வந்த சீர் எங்களுக்கு இனிக்குமா?… நெஞ்சே தீயில வச்ச மாதிரி இருக்கு, பொறந்த வீட்டு சீர பார்த்து பூரிச்சு போய் நிக்க முடியும். உன் கடமை ஒன்னும் எங்களுக்கு தேவையில்லை. உன் வேலைய பாத்துட்டு போடி…”

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!