Skip to content
Post Views: 18,222
இறுதி அத்தியாயம்
பொழியும் மேகம்!…
நர்மதா கைகளை கட்டி கொண்டு கணவனை பார்க்க… இவள் விடவே மாட்டாளா என்று பார்த்தான் நிரஞ்சன்.
“என்ன நர்மதா?…”
Advertisement
“மாடர்ன் இந்தியாவின் தந்தை யார்?…”
“மாடர்ன்னா?… அது யாரு?..” புரியாமல் கேட்டான் கணவன்.
“ராஜாராம் மோகன் ராய்..”
Advertisement
“அப்படியா! அதுக்கு என்ன இப்போ?..”
Advertisement
“அவருக்கு ஏன் மாடர்ன் இந்தியாவோட தந்தைன்னு பேர் வந்துச்சு தெரியும்?…”
“நீங்க நினைக்கிற வெஸ்டர்ன்னா தூக்கி பிடிச்சது கிடையாது. சுதந்திரத்துக்கு முன்னாடி பெண்கள் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்துச்சு. அதை எதிர்த்து போராடி, அந்த வழக்கத்தை ஒழிச்சதால நவீன இந்தியாவின் தந்தைன்னு அவருக்கு பேர் வந்துச்சு…”
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “அதை ஏன் இப்போ சொல்ற?…”
Advertisement
“மாடர்னிசம் அப்படின்னா வெஸ்டர்னிசம் கிடையாது நிரஞ்சன். நம்ம கலாச்சாரத்தில் இருக்குற மூட நம்பிக்கைகளை அகற்றி, நம்மளை மெருகேற்றி கொள்வது தான் மாடர்ன் சொசைட்டி. அதை விட்டு யாரோ ஒருத்தவங்க கலாச்சாரத்தை தூக்கி பிடிப்பது கிடையாது…”
“நம்ம சொசைட்டில இருக்குற மூட நம்பிக்கைகளை அகற்றி போடணும்மே தவிர முழுசா குப்பைன்னு ஒதுக்கிட கூடாது. மாடர்ன் சொசைட்டி அப்படின்ற உங்க வரையறை வேற… நான் புடவை கட்டி இருக்குறதால, என்னோட கட்டுப்பாடான பேச்சு, அழுத்தமான பார்வை எல்லாம் உங்களுக்கு பூமரா, பட்டிக்காடா தெரியும். வில்லேஜ் டாங்கின்னு சொன்னீங்க நிரஞ்சன்…”
“நிஜமாவே சாரி நர்மதா.. அன்னைக்கு என்னோட யோசனையே வேறு…” விளக்கமும் கொடுத்தான்.
“நம்ம சஸ்டிக்கு மொபைல் யூஸ் பண்ண கொடுக்குறீங்க தான.. எவ்வளவு நேரம்? கொஞ்ச நேரம் தான். அப்புறம் போதும்ன்னு நீங்க வாங்கிடுவீங்க.. அவ வயசுக்கு இவ்வளவு நேரம் போன் பார்த்தது போதும்ன்னு நினைக்கிறீங்க. அது ஒரு வரைமுறைக்கு உட் பட்டு…”
“ஆனா, நான் எல்லாத்திலும் ஒரு வரைமுறையை கொண்டு வாங்கன்னு சொல்றேன். கட்டுபாடுகளோடு, நிபந்தனைகளோடு கூடிய சுதந்திரம் தான் நல்லது. நான் நாகரீகமாக இல்லன்னு சொன்னீங்க. அப்ப எது மாடர்ன் சொசைட்டி நிரஞ்சன்…”
“நம்ம பிள்ளைக விளையாட வெளிய போனா கூட நம்ம ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் கூடவே தான் இருக்கோம். ஏன்? காலம் கெட்டு கிடக்குன்னு சொல்றோம். ஏன் அப்படி இருக்கு.. ஏன்னா? மாடர்ன் சொசைட்டிக்கான புரிதல் குறைவா இருக்கு… எது முன்னேற்றம்? எது சுதந்திரம்ன்னு இப்ப இருக்குற தலைமுறைக்கு புரியல… இங்க எல்லாம் கலாச்சார சீர்கேடு பேசுனா ஓல்ட்ன்னு மொத்தமா தள்ளி வச்சுடுறாங்க…”
“நிரஞ்சன் இப்போ ட்ரெண்ட் என்ன தெரியுமா?.. என்ஜாய்மெண்ட் வித் நோ ரெஸ்பான்ஸ்பில்ட்டி. ரெண்டு பெண் பிள்ளைகளுக்கு தகப்பனா உங்களால அது சரின்னு சொல்ல முடியுமா?.. நாம நம்ம பிள்ளைகளை ரொம்ப பொறுப்போடு தான் வளர்க்க நினைக்கிறோம். நம்ம பிள்ளைக மேல மத்தவங்க பார்வை மரியாதையோடு விழனும்ன்னு நினைக்கிறோம்…” என்றவள், நிரஞ்சன் அமைதியை கண்டும் பின் வாங்க வில்லை.
இன்று இல்லாவிட்டால் வேறு என்று பேசுவது…
“பெண் விடுதலைன்ற குரலை முதன் முதல்ல உயர்த்தி சொன்னது ஒரு ஆண் தான் நிரஞ்சன். இன்னைக்கு பெண்களுக்கு, அவங்க பாதுகாப்புக்கு எத்தனையோ சட்டம் இருக்கு, மகளிர் அமைப்பு இருக்கு.. சுதந்திரத்துக்கு முன்னால எந்த அமைப்பு இருந்துச்சு. பெண்களுக்கும் உரிமை கொடுங்கன்னு போராட முன் வந்தது எல்லாம் ஆண்கள் தான் நிரஞ்சன். உங்க வர்க்கம்…”
“அந்த காலத்துல போராடின எல்லாரும் பெண்களோட உயர்வு தான் சமுதாயத்தை உயர்த்தும்ன்னு நினைச்சாங்க.. உண்மையான மாடர்ன் சொசைட்டி பெண் கல்வியும், அவங்களோட உயர்வும் தான்ன்னு நினைச்சாங்க. இன்னைக்கு எல்லாம் அப்படியா இருக்கு?”
“ஆண்களோ, பெண்களோ வரம்பு மீறி, வரையறை தாண்டி போயிட்டு இருக்கு… அது தப்புன்னு சொல்ற எங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் எங்க புருசன் கிட்ட கூட தோத்து போயிடுறோம். என்னுடைய சிந்தனை சரியானதா, என்னுடைய கருத்து நேர்மையானதாக இருக்கும் போது நீங்க ஏன் அதை தப்புன்னு சொல்றீங்க நிரஞ்சன். எங்களுக்கு போராட்டம் வெளில இல்லை, வீட்டுல தான். நீங்க என்னோட உணர்வு பூர்வமான உறவு. நீங்களே என்னை விமர்சிக்கும் போது நான் காய பட்டது உண்மை…” என்று நகர்ந்து விட்டாள் நர்மதா.
ரொம்ப நாள் கோபம் போல.. போட்டு பொளந்து விட்டாள் என்று நினைத்து கொண்டான். ஒரு பெரு மூச்சு அவனுக்கு…
“மனைவி சொல்வது உண்மை தான். வேலைக்கு போகும் பெண்களுக்கு வெளியிலே ஆயிரம் போராட்டம் இருக்கும். இதில் வீட்டில் கணவனும் குடைச்சல் கொடுத்தால். குடும்பமாவது அனுசரணையாக இருக்க வேண்டும். மனைவியை அவள் இயல்பில் விட வேண்டும். நான் மட்டுமா என் குடும்பத்திற்காக ஓடுகிறேன். அவளின் ஓட்டமும் எங்களுக்காக தானே.. அவளுக்கான சுதந்திரம் முதலில் வீட்டில் தான் கொடுக்க வேண்டும்…” முடிவெடுத்து கொண்டான்.
நர்மதா கணவன் உடன் சண்டை என்றெல்லாம் இல்லை. பொதுவான விமர்சனமாக தான் வாதத்தை வைத்தாள். மற்றபடி கோபம் எல்லாம் ஒன்றும் இல்லை. நாள் எப்பவும் போல சென்றது.
அன்று சனிக்கிழமை. பிள்ளைகளுக்கு விடுமுறை. இவளுக்கு அரை நாள் பள்ளி இருந்தது… நிரஞ்சன் பிள்ளைகளை பார்த்துக் கொள்வான். அரை நாள் பள்ளி மட்டும் நர்மதாவுக்கு ரொம்ப சிரமம். கிராமத்து பள்ளி மதிய நேரம் ஆட்டோ, பஸ் எதுவும் கிடைக்காது. வெயிலோடு மல்லுக்கட்டி நடந்து வந்து மெயின் ரோட்டில் தான் பஸ் ஏற வேண்டும்.
அன்றும் சேலை முந்தியை தலையில் போட்டுக்கொண்டு வெயிலில் முகம் வாடாமல் இருக்க மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள். மதியம் ஒன்றை இருக்கும். நன்மதாவை ஒட்டி வண்டி சத்தம் கேட்க, யார் என்று திரும்பிப் பார்த்தாள்.
“அட நிரஞ்சன். நம்ம புருசனா இப்படி எல்லாம் யோசிக்கிறது…” ஆச்சரியமாக பார்த்தபடி வண்டியை நோக்கி முன்னேற உள்ளே அவள் கணவனோடு, அவள் பெற்ற செல்வங்களும் இருந்தது.
வண்டியில் ஏறிக் கொண்டவள், “என்னவாம்?…”
“சும்மாதான் பிள்ளைகளுக்கு லீவு. உனக்கும் மதியம் வரை தான். கடை வைத்ததுக்கப்புறம் எங்கேயும் போகல சும்மா ஒரு அவுட்டிங்…”
“என்ன பிளான்?…”
“பெருசா ஒன்னும் இல்ல. சும்மா அப்படியே சுத்தி வரலாம் பிள்ளைகளுக்கும் ஜாலியா இருக்கும்…” என்றவன்,
பைபாஸ்சை சுற்றி வந்தான். வெயில் குறைந்திருக்க, கண்ணாடியை இறக்கிவிட்டு மிதமான காற்றை அனுபவித்தபடி பேசிக் கொண்டு வந்தார்கள். நன்றாக இருந்தது.
நிரஞ்சன் கொஞ்சம் மனைவியை ஆழ்ந்து உள்வாங்கினான். அவள் யோசனைகள், சிந்தனைகள் எல்லாம் வேறுபட்டதாக இருக்க, அவற்றை ரசிக்க தொடங்கினான். முன்பெல்லாம் பூமர் என்று கிண்டல் பேசியவன், இன்று அவளைப் பேச விட்டு அவள் வாதங்களை உள்வாங்கினான். அவனையே ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவளின் பேச்சுத் திறன் இருந்தது. தன் மனைவிக்கு இவ்வளவு கூறிய சிந்தனைகளா!.. என்று நினைக்கும் அளவுக்கு நர்மதா அழுத்தமான பெண்ணாக தெரிந்தாள்.
“நீ உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியமான பெண் நர்மதா…”
“அப்படியா நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகப்போகுது நிரஞ்சன்…” சிரித்த முகமாக சொன்னாள்.
“உன்ன பத்தி என்னோட பார்வை இப்பதான் மாறி இருக்கு… உண்மையிலேயே நீ ரொம்ப வித்தியாசமா இருக்க.. என்கிட்ட ஒரு முகம், வெளியில் ஒரு முகம்.. எனக்கு புரியவே இல்லை…” என்றவன்,
என் பொண்டாட்டி ரொம்ப சாஃப்ட், அமைதி, கேரிங்கான பர்சன். ஆனா அன்னைக்கு உங்க வீட்ல ஒரு நர்மதா இருந்தாங்களே?.. அப்பாடி பயங்கரம், என்னம்மா பேசுற.. யாருமே எதிர்த்து பேச முடியல போ…”
“வேற எப்படி பேசினாலும் சுபாவ கண்ட்ரோல் பண்ண முடியாத நிரஞ்சன். ஆரம்ப ஆரம்பத்துல இருந்தே அவகிட்ட நல்ல முறையில் நடக்க நினைச்சாலும் எங்களை தள்ளியே தான் வச்சா.. என்னவோ அவளுக்கு எங்களை பிடிக்கல. எங்க தம்பின்னு அவனுக்கு நாங்க நிறைய பாப்போம், நிறைய செய்வோம், அவன் பிள்ளை வரைக்கும்… ஆனா எங்க அப்பா எங்களுக்கு செய்றதுக்கு அவ கணக்கு பாப்பா…”
“எங்க அப்பா இருந்த வரைக்கும் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. செழியன் மேல மட்டும் தப்பு சொல்ல முடியாது. எங்க அம்மாவும், அப்பாவும் ஒரு நம்பிக்கையை அவனுக்கு கொடுத்து இருக்காங்க. இப்போ எங்க அப்பா இல்லை. அவர் நினைப்பு என்னவென்று எங்களுக்கு தெரியல. ஆனா, எங்க அம்மாவை எங்களுக்கு நல்லா தெரியும் நிரஞ்சன். எல்லாமே மகனுக்கு போகணும்னு தான் ஆசைப்பட்டாங்க..”
“இதே சொத்து பிரச்சனை நம்ம வீட்டிலும் வந்து இருக்கு நிரஞ்சன்…” என்றதும் அவன் முகம் லேசாக மாறியது.
“ நாங்க சொத்து கேட்டது எங்களுக்கு நியாயமா பட்டாலும், மனம் சார்ந்து உறவு ரீதியா பார்க்கும் போது கூடப்பிறந்தவன் தானே கொஞ்சம் விட்டுக் கொடுத்து இருக்கலாம்னு தோணும். சில நேரம் ரத்த உறவுகள் கிட்ட நியாயம் பேச முடியாது நிரஞ்சன். வீட்ல மூத்தவங்களா இருக்கிறவங்க, பல இடத்துல விட்டுக்கொடுத்து போற மாதிரி தான் இருக்கும். என் தம்பிக்கும் சொந்த வீடு வாங்க ஆசை இருக்கலாம், நாம எல்லாம் நடுத்தர குடும்பம் தானே. இங்க பலருக்கு பணம்தான் அளவுகோல், முன்னேற்றம் தான் பிரதானம். நம்ம சுத்தி இருக்கிற உறவுகளிலேயே சொந்த வீடு இல்லாம இருக்கிறது நாமதான் நிரஞ்சன். நமக்கு நம்பிக்கை இருக்கு.. எல்லாரும் அப்படின்னு சொல்ல முடியாது…”
“எங்களுக்கு உரியது எங்க அம்மா கொடுக்கட்டும், நாங்க கேட்க மாட்டோம். நம்ம ரெண்டு பேருக்கும், ரெண்டு பக்கமும் சொத்து இருக்கு நிரஞ்சன். ஆனா, இன்னைக்கு நம்மகிட்ட என்ன இருக்கு?… நம்மளால தான் நம்ம வாழ்க்கை போயிட்டு இருக்கு நிரஞ்சன். ஏன் நீங்க எங்கள பாக்க மாட்டீங்களா?…”
“நான் இந்த உலகத்துல இல்லாம போனா கூட உங்களை யார் வீட்டு வாசல்லையும் போய் நிக்க விடமாட்டேன் நர்மதா. நிறைய சம்பாதிப்பேன், கோடிக்கணக்கில் சொத்து சேர்ப்பேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். என்ன நம்பி வந்த என் மனைவி, பிள்ளைகளை கடைசி வரைக்கும் நான் பாதுகாப்பேன்…” என்று உறுதியாக சொன்னவன்,
“ஆனா, நீ ரொம்ப கஞ்சத்தனம் பண்ண கூடாது. ரெண்டு பெண் பிள்ளைக இருக்கு, சிக்கனமா இருக்கணும்னு ரூல்ஸ் போடக்கூடாது. என் பொறுப்பு என் மனைவி, என் பிள்ளைகள் மட்டும் தான். அவங்களுக்கு என்ன தேவையோ, அவங்களுக்கு என்ன சேர்த்து வைக்கணுமோ அதை நான் பண்ணுவேன். என் வாரிசுகளுக்கு நான் சேர்த்து வைக்கிறேன். அவங்க வாரிசுகளுக்கு அவங்க சேர்த்து வைக்கட்டும். அத விட்டு வாழ்நாள் முழுக்க சேமிப்பு பின்னாலே, என்னால ஓட முடியாது நர்மதா…” என்று கண்டிப்பாக சொல்லி விட்டான் நிரஞ்சன்.
“சரிதாங்க, நான் ரொம்ப சிக்கனம் எல்லாம் புடிக்க மாட்டேன். அதுக்காக நீங்க ரொம்ப செலவாளியாவும் இருக்கக்கூடாது…”
“டீல் டீல் வருமானத்துக்கு தக்க செலவு.. இது ஓகே தான…”
“இது ஓகே தான்…” என்றவள்,
“ரெண்டு வருமானம் எல்லாம் கிடையாது. ஒரே வருமானம் தான். அந்த மாசம் முதல் தேதி இல்ல நம்ம கையில காசு எவ்வளவு நிக்குதோ, அதுல சேமிப்புக்கு ஒதுக்கி வச்சிட்டு, மிச்சத்தை அடுத்தடுத்த செலவுக்கு திட்டம் போடணும். அதாவது, நிகழ்காலத்தை மிச்சம் பிடித்து, எதிர்காலத்துக்கு சேமிச்சு வைக்கணும்…”
“வயசு இருக்கும் போதே ஓட்டமும் இருக்கணும். அப்பத்தான் வயசு போன காலத்துல வாழ்க்கை அமைதியை கொடுக்கும்…”
“ஓகே ஓகே மனைவி சொல்லே மந்திரம்…”
“நான் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டாதீங்க நிரஞ்சன். எனக்கே என் புருசன் தானான்னு சந்தேகம் வந்துடுது…” செல்லமாக நர்மதா சொல்ல,
“அட என்னம்மா நீ, வில்லனா இருந்தாலும் குறை சொல்ற, ஹீரோவானாலும் குறை சொல்ற.. பொண்டாட்டிகளை புரிஞ்சுக்கவே முடியாது போ…” அவனும் செல்லமாகவே அழுது கொண்டான். பிள்ளைகள் பின் சீட்டில் மதிய உறக்கத்தில் இருந்தார்கள்.
“ஸ்டிபன் ஹாக்கிங்ன்னு ஒரு பெரிய அறிவியல் மேதை இருந்தார். அவர்கிட்ட ஒரு பேட்டி எடுத்தாங்களாம். உங்க வாழ்க்கையில இதை என்னால புரிஞ்சுக்கவே முடியல, அப்படி ஏதாவது இருக்கான்னு கேட்டதுக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?…”
“என்ன சொன்னார்?…”
“பெண்கள் என்று சொன்னார்…”
“என்ன? நர்மதா கிரேசி…” லேசாக சிரித்தான் நிரஞ்சன்.
“உண்மைதான் நிரஞ்சன். அவர் எவ்வளவோ கண்டுபிடிச்சாலும்… தனக்கு புரியாத புதிர் பெண்கள் தான்னு சொன்னார்.. எங்களை புரிஞ்சுகிறது ஒன்னும் அவ்வளவு ஈசி கிடையாது நிரஞ்சன்.” கேலியாக சொன்னாள் நர்மதா.
“அது என்னவோ உண்மைதான்…” ஒத்து கொண்டான் நிரஞ்சன்.
இரவு உணவை ஒரு ஹோட்டலில் முடிக்க… பக்கத்தில் இருந்த ஒரு பெரிய கடையில் நிறைய ஆபர் போட்டு இருந்தார்கள். நர்மதா பார்வை கணவனை தொட்டு மீள,
“உன் விருப்பம் தான் நர்மதா. கால் கிலோ கத்திரிக்காவாவே அரை மணி நேரம் தேடி எடுப்ப.. டிரஸ் எல்லாம் அலசி எடுத்துற மாட்ட…”
ஆஃபரில் குழந்தைகளுக்கு நிறைய போட்டு இருக்க, நர்மதா தேடி தேடி எடுத்தாள். முன்பு போல நிரஞ்சன் அது, இது என்று எதுவும் சொல்லவில்லை. ஆனால், நர்மதா சொன்னாள்…
“ இது அவங்க தினமும் போடுறதுக்காக எடுக்குறது நிரஞ்சன். ரெண்டு பேரும் கீழ இருக்கிற கிரவுண்ட்ல வந்து தான் விளையாடறாங்க.. உங்க செல்ல குட்டி பொண்ணுக்கு, ஒரு டிரஸ் பத்து நாள் கூட தாங்காது. நாம ஆஃபர்ல, விலை கம்மியா எடுக்கறதுனால நம்ம பிள்ளைகளுக்கு நல்லது கொடுக்கலன்னு எல்லாம் அர்த்தம் கிடையாது. தேவைன்னு ஒன்னு இருக்கு.. அது பொருத்து விலை மாறுபடும் நிரஞ்சன்…” என்ற மனைவியின் விளக்கம் ஏற்புடையதாக இருந்தது.
தற்போது எல்லாம் நிரஞ்சன், நர்மதாவுக்கிடையே பேச்சுவார்த்தை சகஜமாக நிகழ்கிறது. முன்பெல்லாம் ஒன்றில் தொடங்கி இன்னொன்றில் ஆரம்பித்து சண்டையில் தான் முடியும். தற்போது நிறைய பேசினாலும் அவ்வளவு ஒன்னும் வாக்குவாதம் இல்லை. அதற்கு ஒரே காரணம் அடுத்தவர் நிலையில் நின்று அவர்கள் கருத்தை புரிந்து கொள்வது. நிரஞ்சன் ஒன்னு சொல்ல, அவன் இடத்தில் நின்று நர்மதா புரிந்து கொள்வாள். மனைவி ஒன்றை சொல்ல, அவள் என்னதான் சொல்ல வருகிறாள் என்று காது கொடுத்து கணவன் கேட்பான். அது சரியாக இருக்கும் பட்சத்தில், அவளுக்கே விட்டுக் கொடுத்து விடுவான்.
ஆண், பெண் என்ற பாலினத்தில் வேறுபட்டு நின்றாலும், தாம்பத்தியத்தில் இருவரும் ஒன்றுதான்… கருத்து ஒற்றுமை இல்லாவிட்டாலும், இருவருக்கும் வாழ்க்கை ஒன்றுதான்… எண்ணங்கள் வேறுபட்டாலும் நோக்கம் ஒன்றுதான்… சிந்தனையும் செயல்பாடும் தனித்து நின்றாலும், இருவரும் சேர்ந்து நிற்பது தான் வாழ்க்கை…
தவழும் குழந்தை தவறி விழுந்து தான் எழுந்து நடக்கும்… தாம்பத்திய வாழ்க்கையும் இடறி விழுந்து, இடர்பாடுகளைக் கண்டு, அட!.. தனித்து நிற்பது ஒன்றும் அவ்வளவு சுவை கிடையாதோ… எப்படியும் மனித வாழ்க்கை பாடுகள் நிறைந்ததே, மாற்று இல்லை. இந்த உலகில் மனிதராக நீ பிறந்து விட்டாயா?…
உனக்கான பாடுகளை முழுதாக நீ அனுபவித்து தீர்ந்த பின் தான் கரை காண்பாய். அதற்கு ஏன் இந்த உலகில் தனியாக சுத்த வேண்டும். நம்மோடு சேர்ந்து கைகோர்த்து நடக்க, தட்டிக் கொடுக்க, ஆறுதல் படுத்த, இந்த உலக வாழ்க்கையில் நான் தனி இல்லை என்று ஒவ்வொரு நொடியும் உணர்த்த, பாதி ராத்திரியில் பயந்து கண் விழித்தாலும் ஆறுதலாக அருகே இருக்கும் உறவை, தனியாக வந்த உலகில், சாவிலும் உன்னோடுதான் என்று வரும் உறவை உறுதியாக கைப்பற்றிக் கொண்டால் இந்த உலக வாழ்க்கை நமக்கு பாரமாக இராது. இந்த உடம்பில் இருக்கும் உயிரும் தித்திப்பாக இருக்கும்.
வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் கூட சுவையானதாக இருக்கும். அப்படியா?.. என்றால் ஆம் என்றே சொல்லலாம்.
கடவுள் இந்த உலகில் ஆணை படைத்த பின்… அவனுக்கு ஏற்ற துணை பெண் என்றே கண்டார். நம் பிறப்பே அப்படித்தானே ஆணுக்கு பெண் துணை.. பெண்ணுக்கு ஆண் துணை.. இருவரும் ஒருவருக்கொருவர் துணை கொண்டு உலக வாழ்க்கையை கடக்க வேண்டும். அதை விட்டு தனிமையை தீர்மானித்து தனித்து நின்றால் தனிமை மட்டுமே கிட்டும்…
அதை முழுதாக உணர்ந்து கொண்டார்கள் நர்மதா, நிரஞ்சன் தம்பதிகள். அடுத்த வாரத்திலே நிரஞ்சன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு தாங்கள் கடைக்கு சென்றான். நர்மதா முன்பே பலமுறை கடைக்கு போய் இருக்கிறாள் தான். சும்மா நிரஞ்சனை காண வந்து போயிருக்கிறாள்.
இன்று என்னவோ கணவன், அவளை அழைத்து சென்றான். பெரிதாக என்ன வித்தியாசம் புரியவில்லை?… காரணம் கணவன் சொன்னான்.
“நர்மதா போன வாரம் நீ ஒன்னு சொன்ன, எதார்த்தமா தான் வந்துச்சு…”
“என்ன சொன்னேன்.. என்னங்க?”
“நம்ம சுத்தி இருக்கிற உறவுகள்ல நாம மட்டும் தான் வாடகை வீட்டில் இருக்கும்ன்னு சொன்னா…” என்றவன்,
“நிஜமா நர்மதா இன்னைக்கு நம்ம வாடகை வீட்டில் இருந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் என் மனைவி, பிள்ளைகளுக்கு நான் சொந்தமாக ஒரு வீட்டை கட்டுவேன். அதுக்கு முன்னால…” என்று தன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் கைகொண்டு காட்டியவன்,
“இதெல்லாம் உனக்கானது நர்மதா. இங்க நீ தான் முதலாளி…” என்று அவளை, அவன் சீட்டில் அமர வைக்க,
“என்னங்க! நான் அன்னைக்கு போற போக்குல வந்தது. பர்பஸா எதுவும் சொல்ல கிடையாது…” தன்னை புரிய வைக்க முயன்றாள் நர்மதா.
“தெரியும் நர்மதா. ஆனாலும், எனக்கு ஒரு எண்ணம்.. உனக்காக உன் புருசன் ஏதோ ஒன்னை பண்ணி இருக்கான். இந்த இடம், தொழில், வருமானம் எல்லாம் உனக்கானது.. உன் பேர்ல தான் இயங்குது. என்னோட இந்த ஓட்டம் உனக்கானது தான்…”
“தெரியும்.. நீங்க பண்ற இவ்வளவும் எனக்காக வேண்டி தான்னு எனக்கு தெரியும் நிரஞ்சன். ஆனா இது எதுவும் இல்லாட்டியும் நான் உங்களுக்கானவ தான். இந்த நிரஞ்சனுக்கு பின்னால, எதுவும் இல்லாம இருந்தாலும் என் அன்பு எப்பவும் மாறாது நிரஞ்சன்…” குரல் உடைய பார்த்தது.
“உன்னோட இந்த அன்பை உணர்ந்ததால தான். இந்த வாழ்க்கையை உனக்காக வாழ்றேன். எப்பவும் நீ தானே உதாரணம் சொல்லுவ… இன்னைக்கு நான் உனக்கு ஒரு உதாரணம் சொல்லவா?…” என்று மனைவி கைகளை எடுத்து நெஞ்சு பகுதியில் வைத்து கொண்டவன்,
“ஒரு பக்தன் கடவுள் கிட்ட மனம் உருகி பாடுனானாம். என் அப்பனே இந்த உலகத்துல உனக்கு மறைவான இடம் எங்கு இருக்கு?… நான் வானத்துக்கு போனாலும், பூமிக்கு கீழே போனாலும், கடலுக்குள்ள போனாலும், எங்கும் நிறைந்து நிற்பது நீயல்லவா என்று… அப்படித்தான் அதேபோலத்தான் நர்மதா நீ எனக்கு… நிரஞ்சனுக்கு எங்கும், எப்போதும், எந்த நிலையிலும் நர்மதா, நர்மதா, நர்மதா மட்டும் தான்…”
error: Content is protected !!