Skip to content
Post Views: 4,326
உயிரில் ஒரு சஞ்சாரம்
நிலா பிரகாஷ்
அத்தியாயம் 1
தனது மேஜையின் மேல் இருந்த காக்டெயிலை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி. அவளது முகத்தில் கோபம் வெறுப்பு மகிழ்ச்சி தனிமை துக்கம் என எந்த உணர்வை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். அத்தனையும் கலந்து ஒரு கலவையாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது அவளது முகம். வைஷ்ணவி பற்றிய சிறு அறிமுகம். வைஷ்ணவி இருபத்தாறு வயதான ஒரு கணினி பொறியாளர். மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை. மாதம் லட்சங்களில் சம்பளம்.
அவளுக்கு அனைத்தும் அந்த அந்த வயதில் அழகாக கிடைத்துவிட்டது. அன்பான பெற்றோர் வசதியான வாழ்வு நல்ல படிப்பு, படித்து முடித்தவுடன் வேலை. வேலையில் நல்ல சம்பாத்தியம். அழகு அறிவு வாய்ப்பு என எல்லாமே அதீதமாக அமைந்திருப்பது அவளுடைய சாபமா ? வரமா? என அமர்ந்து இருந்தாள்.
திருமணம் செய்து கொள் என்று நச்சரிக்கும் பெற்றோர். 24 வயதில் அவளுக்கும் காதல் பிறந்தது. வருண் அவளுடன் வேலை செய்த இன்னொரு கணிப்பொறியாளன். அவனாகத் தான் வந்து காதலைச் சொன்னான். வேற்று மதம் ஒத்து வராது என்று அவள் எச்சரித்தும் தனது காதலில் விடாப்பிடியாக இருந்தான். அவனது இடைவிடாத பிடிவாதமான அன்பினால் மெல்ல வைஷ்ணவியின் மனம் அவன் பால் சென்றது. பெரிதாக வெளியில் சுற்றி திரிந்தது இல்லை இருவரும்.
காரணம் வைஷ்ணவிக்கு வேலை மீது உள்ள காதல். எதிலும் தான் முதன்மையாக வர வேண்டும் என்ற எண்ணம் அவளை மிக மிக உறுதியாக உழைக்க வைத்திருந்தது. ஒரு மிகப்பெரிய கணிப்பொறி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக மாறும் அளவிற்கு அவளுடைய உழைப்பு அதிகமாக இருந்தது. அவளுடைய காதல் வாழ்வில் அவனுடனான சில காபி டே சந்திப்புகளும் அலுவலக ரீதியான பயணங்களும் பேச்சுகளுமே அதிகம் இருந்தது. தன்னை, தனது திறமையை, தனது வேலை நிமித்தமான நேரமின்மையை, அவன் வெகுவாகவே உணர்ந்துக் கொண்டான் என அவள் எண்ணியிருக்க அவ்வாறு இல்லை என்பதை இரு வாரங்களுக்கு முன்பு அவன் தனது திருமண அழைப்பிதழைக் கொண்டு வந்துக் கொடுத்து நிரூபித்தான்.
“வருண், ‘இட்ஸ் எ ப்ராங்க், ரைட்’, போதும் உன் விளையாட்டு. உன் விளையாட்டுக்கு எனக்கு நேரமில்லை”
வைஷ்ணவி அந்த திருமண அழைப்பிதழை வாங்கி தனது மேஜையில் வைத்து விட்டு கணினியில் முகம் புதைத்துக் கொண்டாள். வருணுக்கும் அவளுக்கும் ஆறு மாதங்களாகவே திருமணம் பற்றிய பேச்சு சண்டையில் முடிவதாகவே இருந்தது. வருண் திருமணம் பற்றி பேசும் போதெல்லாம் வைஷ்ணவி வேலை நிமித்தம் தனது நிலையை உறுதிப்படுத்த தள்ளிப்போட நினைத்தாள். அப்போது விளையாட்டாக ஒரு முறை
‘கல்யாண பத்ரிக்கையோட வந்து நிக்கிறேன் அப்பவாவது நானே கல்யாணம் பண்ணிக்கறேன் னு சொல்றீயானு பார்க்கறேன் வைஷூ ..’ அவன் சொன்ன வார்த்தைகள் நினைவு வந்து அதை கீழ வைத்துப் பேசியிருந்தாள்.
“இல்லை வைஷூ, எனக்கு நிஜமாவே”
அவன் குரலில் குற்ற உணர்ச்சியும் வருத்தமும் இருக்க நிமிர்ந்தாள்.
“எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு,இது என்னோட மேரேஜ் இன்வைட்”
வைஷ்ணவி நம்ப முடியாது அவனை வெறித்து நிற்க வருண் கம்மியக் குரலில் பேசினான்.
“எனக்கும் உனக்கும் செட் ஆகாது வைஷூ”
“இதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன் அப்பெல்லாம் லவ் பண்ணு லவ் பண்ணு அலைஞ்சுட்டு, இப்ப என்ன புதுசா?”
“புதுசா எல்லாம் இல்ல வைஷூ, நான் ரொம்ப நாளா நினைச்சுட்டே தான் இருந்தேன், நீ எனக்கு ரொம்ப அதிகம் வைஷூ! நான் எவ்வளவோ தடவை யோசிச்சு பாத்துட்டேன்”
“உளராத வருண், நான் கல்யாணத்தை தள்ளி போட்டதுனால இப்படி பண்றியா..ஆன்சைட் ல ஸ்விட்சர்லாந்து கிளம்பறேன் ஒன் மன்த் ல, உன் ப்ராஜக்ட் லீடு பார்த்துட்டு மேரேஜ் பத்திப் பேசுவோம்”
வைஷ்ணவி இன்னும் நம்பாமலே பேச அவளது கேபின் கதவு தட்டப்பட்டு உள்நுழைந்தாள் ஒரு யுவதி.
“ஹாய் மிஸ் வைஷ்ணவி ஐ அம் மேக்தலின் வருண் வுட்பீ, இவனுக்கு நீங்க தான் லீவு அத்தாரிட்டியாமே த்ரீ வீக்ஸ் சாங்ஷன் பண்ணுங்களேன்”
அவள் பேச பேசவே வருண் அவளை வெளியே செல்லுமாறு கெஞ்சினான். அதே அலுவலகத்தில் இருந்து வேறு ஒரு பெண் அவளது தோழியாக இருக்க அவள் வரவும் இருவரும் வெளியே சென்றனர். வருண் வைஷ்ணவியை எப்படி சமாளிப்பது என நின்றிருந்தான்.
“இது போன தடவை நீ பண்ண மாதிரி சும்மா ப்ராங்க் தானே, ஃவேக் தானே”
தன் மீது இவ்வளவு நம்பிக்கையாக இருக்கும் ஒருத்தியின் மனதை உடைப்பது வருண் பெருமூச்சு விட்டு தொடர்ந்தான்.
“வைஷூ எனக்கு நிஜமா கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு. இந்த ரெண்டு வருஷத்துல நான் உன்கிட்ட பல தடவை கேட்டு பாத்துட்டேன். என் கூட வெளியே வா, ஒரு பார்ட்டி ஃபன் எதுவுமில்லை சரி கல்யாண பேச்சு எடுக்கலாம்னா, கல்யாணத்துல உங்க வீட்ல பேசு இல்ல நான் வந்து பேசுறேன்னு சொன்னேன். ஆனா ஒவ்வொரு தடவையும் உனக்கு ஆன்சைட் போகணும் இல்ல வெளியில உன்னுடைய பிராஜெக்ட் னு நீ மறுத்துட்டே இருந்த. என்னால என் வீட்ல சமாளிக்க முடியலை வைஷு. எனக்கே சந்தேகம் ஆயிடுச்சு நீ என்ன விரும்புறீயா இல்லையானு?”
அந்த பேச்சில் நிதானம் இழந்து கத்தினாள் வைஷ்ணவி.
“புல்ஷிட் இப்ப வந்து உன்கூட டான்ஸ் ஆடிட்டா, நீ கூப்பிடும் போது வெளியே வந்துட்டா, லவ்வா? கல்யாணம்ன்கறது ரெண்டு பேருக்கு இடையில இருக்கிற நம்பிக்கை தானே! நான் பேசுறேன்னு சொன்னேனே! சரி இதுதானே பிரச்சினை பேசி சரி பண்ணிக்கலாம் வருண்”
“இல்லை வைஷூ, இது பிரச்சனை இல்லை”
“பின்ன என்னதான்டா பிரச்சனை”
வைஷ்ணவியின் குரலில் மரியாதை இறங்கி இருந்தது. வருண் வருத்தத்திற்கு மாறாக புன்னகைத்தான்.
“நீ, நீ எனக்கு ரொம்ப அதிகம் வைஷூ..”
அந்த பதில் அவளைக் குழப்பியது. அவள் நிமிர்ந்து அவனை நோக்கிப் பேசினாள்.
“ப்ளீஸ் டோன்ட் டெல் மீ இட்ஸ் பிகாஸ் ஆஃப் யுவர் இன்செக்யூரிட்டி. நீ தாழ்வு மனப்பான்மை ல இப்படி பண்றனு என்னால் நம்ப முடியலை வருண்”
வைஷ்ணவி சொல்ல வருண் மேலும் புன்னகைத்தான்.
“உன்னுடைய ஜொலிப்புல நான் வெளியே தெரியாமையே போயிடுவேன்னு பல நாள் நினைச்சுருக்கேன். நான் உன்னை விட்டு விலகறது தான் சரி வைஷூ. நீயே ஒரு சமயத்தில புரிஞ்சுக்குவ. என்னால உன் பக்கத்துல உனக்கு சமமா கையை பிடிச்சுட்டு நிற்க, எனக்கு, எனக்கு தகுதி இல்லை னு தோணின பின்னாடி உன் கூட வாழ நினைக்கிறது உன்னையும் என்னையும் சந்தோஷமா வாழ விடாது வைஷூ. எப்பவும் தோல்வியில முடியற என் காதல் உன்கிட்ட ஜெயிக்கறப்ப நான் தோத்துட்டேன்..”
அவன் சொன்னப் பின் கொடுத்து விட்டுச் சென்ற அந்த அழைப்பிதழைப் பார்த்து அன்றிரவு வெகுநேரம் உறக்கமில்லாது அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி. மறுநாள் அவளது தாய் லட்சுமியிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்திருந்தது.
காலையிலயே அழைப்பு வந்திருந்ததால் அதை எடுத்தவள் பேசினாள். அவள் அன்று அலுவலகத்திற்கு செல்லவில்லை.
“சொல்லுமா என்ன விஷயம்?”
“பாப்பா இந்த ஜாதகம் வந்திருக்குன்னு அனுப்பி விட்டு இருக்கேன். அந்த பையனை பார்த்துட்டு இந்த வாரம் போய் பேசுறியா?”
“அம்மா ஏம்மா என் உயிரை எடுக்கிற கல்யாண கல்யாணம்னு”
“இருபத்தேழு வயசு ஆச்சுடி உனக்கு. இப்பவே 35 வயசுல தான் மாப்பிள்ளை கிடைக்கும் புரியுதா?”
தனது தாய் பேச வைஷ்ணவி கோபமுற்று பேசினாள்.
“பரவாயில்லை எவனும் கிடைக்காட்டியும் பரவாயில்லை”
“சொல்ல சொல்ல கேட்காம மேல படிக்கிறேன்னு படிச்சே. வேலைக்கு போகாதே கல்யாணம் பண்ணிட்டு வேலைக்குப் போன்னு சொன்னாலும் கேட்கல வேலைக்கு போனே. இப்ப நீ சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு மேல இருக்கிறவன் தான் பாக்கணும். நீ படிச்ச படிப்புக்கு மேல் இருக்கிறவன தான் பாக்கணும் நம்ம சாதி சனத்தில அது இல்லைன்னு சொன்னாலும் உன் மண்டைல ஏற மாட்டேங்குது என்ன தாண்டி பண்றது?”
மறுபக்கம் லட்சுமி கத்த வைஷ்ணவி தான் காத்து வைத்திருந்த அத்தனை பொறுமையும் விட்டு தனது தாயிடம் கத்தினாள்.
“இப்ப என்ன பிரச்சனை? படிச்சது ஒரு பிரச்சனையா? நல்ல வேலையில் இருக்கிறது ஒரு பிரச்சனையா? திறமையா இருக்கறது ஒரு பிரச்சினையாமா? இது எல்லாமே இருக்கிற பொண்ணு கல்யாண வாழ்க்கையில நல்லா இருக்க கூடாதா ? இது எல்லாமே ஏத்துக்கிற ஒருத்தன் வரமாட்டானா? அப்படின்னா அந்த கல்யாணமே எனக்கு தேவையில்லை விட்டுடு. நான் நாளைக்கே சுவிஸ் கிளம்பறதுக்கு பேப்பர் போடறேன். ஆன்சைட் ல போறேன். டூ இயர்ஸ் ஆகும் இந்தியா வர”
அவள் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தாள். உண்மையில் அவள் சுவிஸ் செல்ல ஒரு மாதம் மேலிருக்க அலுவலகத்தில் விடுப்பு எடுத்து பெங்களூர் வந்திருந்தாள். அங்கிருந்து தனது தோழி இருக்கும் கோவாவிற்கு பயணமான அவளுக்கு தனிமை பயணம் தேவையாக இருந்தது. யாரிடமும் எதுவும் பேசாத ஒரு பயணம் தன்னைத்தானே மீட்டு எடுக்க வேண்டிய ஒரு பயணம் அவளுக்கு விருப்பமாக இருந்தது.
இரு நாட்கள் சென்றிருக்க அன்று அவள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த கோவா கடற்கரையில் வருணையும் அவன் மனைவியையும் சந்திக்க நேர்ந்தது. திருமணம் முடிந்த இரு நாட்களில் தேனிலவு வந்திருந்தனர். அவர்கள் தன்னைக் காணாதவாறு கண்களில் பெரிய கறுப்பு கண்ணாடியிட்டு அந்த டூவீலரை இயக்கி தனது தோழியின் ரிசார்ட் கு வந்தவள் அங்கிருந்த காக்டெய்லை மடமடவென குடித்து அமர்ந்தாள். அவளது தோழி செரீன் சிரித்துக் கொண்டே அவள் முன் அமர்ந்தாள்.
“ஏ வைஷூ, ப்ரூட் காக்டெய்லும் போதை ஆகும் பார்த்து.. நாம இன்னும் கொஞ்சம் நேரத்தில கிளம்பணும்”
வைஷ்ணவிக்கோ வருண் தனது மனைவியை காக்டெய்லை அருந்த வைத்தது நினைவு வர மேலும் காக்டெய்லை அருந்தினாள். செரீன் தனது தோழன் பிராவோவிடம் அவளுக்கு ‘நான் ஆல்ககாலிக் பீவரேஜை’ கொடுக்கப் பணித்து விட்டு வேலைக்குச் செல்ல, பிராவோ அவளுக்கு அதை தயார் செய்ய அவளருகில் வந்தமர்ந்தான் அந்த புதியவன். அவன் பிராவோவிடம் ஒன் நெக்ரோனி எனக் கூற பிராவோ ஒண்ணு ஃபெனி(பழரசம்) ஒண் நெக்ரோனி(மது) என இரண்டையும் அருகில் வைத்து வேறொருவரிடம் திரும்ப வைஷ்ணவி அந்த புதியவனிடம் வைக்கப்பட்ட காக்டெய்லை எடுத்து மடமடவென குடித்து அப்படியே தலை கவிழ்ந்தாள்.
பிராவோ வேறு ஒரு ஆர்ட்ரை முடித்து வர அந்த புதியவன் அவனை நோக்கினான். அந்த புதியவனுக்கு வைக்கப்பட்ட காக்டெய்லை வைஷ்ணவி குடித்திருப்பதைக் கண்டு பிராவோ மன்னிப்பு கேட்டான்.
“சாரி மேன்.ஐ வில் மேக் எ நியூ ஒன். கீப் ஏன் ஐ ஆன் ஹெர்.”
பிராவோ இன்னொரு காக்டெய்ல் ஐ அவன் அருகில் வைத்து விட்டு வைஷ்ணவியை பார்த்துக் கொள்ளுமாறு கை ஜாடை செய்து விட்டு ஷெரீனை அழைத்து வரச் சென்றான். மரப்பலகை மேலிருந்த அந்த கண்ணாடி குவளையை வைஷ்ணவி மீண்டும் எடுக்க முயல அந்த புதியவன் கரங்கள் அவளைத் தடுத்தது.
வைஷ்ணவி அந்த புதியவனை நோக்கினாள். அவனது கண்கள் நீல நிறத்தில் இருக்க மீசை இல்லாதே நல்ல நிறமாக கொரிய நாட்டினன் போலிருந்தான்.
“கொரியனா நீ?”
அவள் கேட்க
*இல்லை”
என செந்தமிழில் பதிலளித்தான் அவன்.
“என்னடா பிரச்சனை உங்களுக்கு?! நான் குடிச்சா உனக்கு என்னடா பிரச்சனை..கொடுடா”
9
அவள் போதையில் ஏகவசனத்தில் எகிற அந்த புதியவன் அவளிடம் அந்த கோப்பை சிக்காது அங்குமிங்கும் நகர்த்திக் கொண்டே பேசினான்.
“நீ குடிக்கிறது எல்லாம் பிரச்சினை இல்லை. இது என்னோட ட்ரிங்க்”
“ஓ, ஏ பேரர்..”
அவள் கத்த பிராவோ ஷெரீனை அழைக்கச் சென்றிருக்க அந்த இடத்தில் இருந்த வேறொரு பார் அட்டெண்டர் அவளை நோக்கி வந்தான்.
“கெட் மீ த சேம் ட்ரிங்க்”
“நெக்ரோனி?”
அவன் மீண்டும் கேட்க அவள் அதை ஆமோதிக்க சில நிமிடங்களில் அந்த புதியவன் கைகளில் இருந்த அதே கோப்பை அவள் கையில் வந்தது. அவள் அதை அவன் கண்கள் முன்பே மடமடவென குடித்து அவனை நோக்கியவள் தலை சுற்றி அவன் மார்பில் மேல் சரிந்தாள். அந்த புதியவனோ அவளை நிமிர்த்தி அவளது இருக்கையில் நேராக அமர வைக்க வைஷ்ணவி பேசினாள்.
“லவ் பண்ணிருக்கீயா?”
அவன் இல்லை என்பதாக தலையசைக்க வைஷ்ணவி பேசினாள்.
“அதானே பார்த்தேன். ஆம்பளைங்க என்னைக்குடா உண்மையா லவ் பண்ணிருக்கீங்க? உங்களுக்கு ஒருத்தி கிடைக்கற வரைக்கும் தேவதை, என் உசிருக்கு மேல னு சுத்துவீங்க ..கிடைச்சதும் மசிருக்கு கூட மதிக்க மாட்டீங்க”
வைஷ்ணவி பேச அந்த புதியவன் பேசினான்.
“ஏன் பொம்பளைங்க எல்லாம் பசங்க படிப்பையும் பர்சையும் பார்க்காமலேயே தான் லவ் பண்றீங்களா?”
அவனது பதிலில் கோபமுற்றவளாக வைஷ்ணவி பேசினாள்.
“நீ தான் லவ் பண்ணலீயே, அப்புறம் ஏன்டா பேசறே? நானே லவ் பெயிலியர் ல சோகமா இருக்கேன் ம் மட்டும் சொல்லுடா”
அவளது மழலை போன்ற அடம் பிடித்த பேச்சில் புன்னகைத்தவனாக பிராவோவையும் செரீனையும் தேடிக் கொண்டே பேசினான் அந்த புதியவன்.
“இப்ப லவ் பண்ணலைனு தான் சொன்னேன். நானும் லவ் ஃபெயிலியர் தான் சொல்லு”
“ஓ அப்ப நீயும் கழட்டி விட்ட கேஸா?”
அவள் கைக் கொட்டிச் சிரிக்க அந்த புதியவன் அவளிடம் கோபம் படர திரும்பினான்.
கவிதை
இரு விழி படர
இமை அசையாது நின்ற நொடி
என்னுள் உன்னை
கோர்க்கும் காதல் நூலை
சுற்றத் தொடங்கியது கால ராட்டினம்!
error: Content is protected !!