Skip to content
Post Views: 2,671
அத்தியாயம் 3
அந்த விமானம் அந்தமானின் போர்ட் ப்ளேர் விமான நிலையத்திற்கு வரும் வரை அவளுக்கு பதட்டம் குறையவே இல்லை. ஒரு வழியாக பயணத்தின் முதல் தொடக்கம் நடந்தேற
‘இனி சஞ்சலப்பட்டு என்னாவது நிகழும் நொடியை எதிர்க்கொள்வதே மனிதன் இயங்குவதற்கு மிக எளிய சூட்சமம் அது இயல்பாகவே சில சூழல்களில் வந்து விடுவது அதன் அழகியல்’
வைஷ்ணவி அத்தகைய மனநிலை கொண்டவளாக அந்தமான் எனும் பூவுலகின் சொர்க்கத்தில் கால் பதித்தாள். அங்கிருந்து அவர்கள் ஹேவ்லாக் தீவுக்குச் செல்ல ஒரு தனியார் சொகுசு கப்பலில் பயணம் ஆகினர். பயணம் நெடுகிலும் அசோக் வைஷ்ணவியுடன் அதிகம் பேசவில்லை. அவளுடைய பெட்டிகளை எடுத்து வைப்பதிலும், வெளியேறுவதிலும் கப்பலில் ஏறுவதிலும் அசோக் தனக்கு உதவி செய்வதை வைஷ்ணவியும் பெரிதுபடுத்தவில்லை. ஒரு பயணத்தில் பெயர் தெரியாத ஒருவரிடம் பெறும் உதவிகள் போல், அவள் அதை எடுத்துக் கொள்ளத் தயாரானாள். இருவரும் தங்கள் பெட்டிகளை வைத்து விட்டு அந்த கப்பலுக்குள் செல்ல, கப்பலின் உள்ளே இருந்த அறைகள் சற்றே விசாலமாக இருந்தது. அறைகளுக்கு முன்னே முப்பது பேர் அமரக்கூடிய ஒரு அரங்கம் இருந்தது. அதை தாண்டி நடக்கையில் சிறிதான அறைகள் இருக்கும் இருவருக்கும் இருவருக்கும் ஆக அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
Advertisement
“எனக்கு தனி ரூம் தான் வேணும்”
என்று வந்து நின்ற வைஷ்ணவியைப் பார்த்தான் அசோக்.
“இரண்டு மணி நேர டிராவலுக்கு தனி ரூம், நான் ஒண்ணும் உன்னைக் கடிச்சு தின்னுட மாட்டேன். தயவு செஞ்சு எரிச்சல் மூட்டாம போயிரு. நானே உன் கூட டிராவல் பண்ணணுமேனு செம கடுப்பில இருக்கேன்”
Advertisement
அசோக் சொல்ல வைஷ்ணவி அவனை முறைத்துக் கொண்டு நின்றாள். அவன் எரிச்சலாகி வெளியே சென்றவன் சிறிது நேரத்தில் தன் அறைக்கு அருகில் அவளுக்கு ஒரு தனியறை ஏற்பாடு செய்தான்.
Advertisement
வைஷ்ணவி ஒன்றும் சொல்லாதே தனது பெட்டிகளை அந்த அறைக்கு எடுத்துச் சென்று வைக்க அசோக் அவளுக்கு உதவி செய்தான். பின் வைஷ்ணவி அங்கேயே உட்கார்ந்திருக்க அசோக் தன் கரங்களை கட்டிக்கொண்டு அந்த அறையின் வாயிலுக்கு சென்றவன் அவளிடம் திரும்பினான்.
“இங்கே உட்கார்ந்து இருக்கறதற்கு பதிலா”
அசோக் முடிப்பதற்குள் வைஷ்ணவி முறைத்தாள். அசோக் அதை சிறிதும் கண்டுக் கொள்ளாது தொடர்ந்தான்.
Advertisement
“வெளில வா கடல் அழகா இருக்கும் பாக்கறதுக்கு”
“நான் என்ன ரசிக்கணும் னு நீங்க முடிவு பண்ணாதீங்க!”
அவள் பதிலில் அசோக்குக்கு கோபம் வந்தது. “சரி இங்கேயே கெட, சோம்பேறிகளுக்கு சாகசப் பயணம் சரியானதில்லை இது உடம்பை வருத்தி மனசை இதமாக்கற கலை. இதில வந்து வீம்புக்கு சேர்ந்துட்டு.., .நான் அப்பவே சொன்னேன். உனக்கு இது ஒத்து வராதுன்னு”
அவன் சொல்ல தூணை ஒட்டிய படுக்கை போல் இருந்த இடத்திலிருந்து எழுந்தாள் வைஷ்ணவி. அசோக் மனதுக்குள் சிரித்துக் கொண்டே அவளுக்கு பின்புறமாக நடக்கத் தொடங்கினான்.
‘இப்ப வீம்புக்காகவாது இவ கண்டிப்பா எந்திரிச்சு வருவா. ஒன்றை செய்யாதே என்று சொன்னால் செய்வாள் செய் னு சொன்னால் செய்யமாட்டாள் இவளிடம் எதிர்மறை மொழி தான் பேச வேண்டும்’
அசோக் மனதிற்குள் நினைத்ததை மெய்யாக்கி அவள் எழுந்து நிற்பதை கண்டுக் கொள்ளாது தனது எண்ணத்தை வார்த்தைகளில் பேசினான்.
“தயவு செஞ்சு மேல வந்துடாதே! வந்து வாந்தி எடுத்து என் உயிரை எடுக்காதே!’
அவன் சொல்லிவிட்டுச் செல்ல அவன் நினைத்தது போலவே அந்த காரிடரைத் தாண்டி பின்னாடி வந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி. மெல்ல இருவரும் கப்பலின் மேற்புறம் செல்லும் படிகளில் ஏறி மேல் வர மக்கள் கூடுகை தெரிந்தது. அதில் வைஷ்ணவி கண்களில் முதலில் பட்டது முதல் முறை பேருந்தில் ஏறும்போதே அவளிடம் அழகான ஒரு புன்னகையை படர விட்ட ப்ரெஞ்ச் தம்பதியர். காபிரியல், அட்ரியன். நாற்பது வயதிற்கு மேலிருக்கும் இருவருக்கும் ஆனால் உடலை மிக கச்சிதமாக வைத்திருந்தனர். அவர்களோடு இணை வைத்தால் அசோக் சொல்வது போல் தனது உடல் தகுதி குறைவே. சாகசப் பயணத்திற்கான ஆர்வம் அவர்கள் உடல் மொழியிலேயே தெரிந்தது, படிக்கட்டு ஏறுவதை உடற்பயிற்சி ஆக நினைத்துக் கொள்ளும் அவளை சுயப்பரிசோதனை செய்ய வைத்திருந்தான் அசோக்.
வைஷ்ணவி கப்பலின் முற்பகுதிக்கு வர, அவள் கண்முன் ‘என் எல்லை எதுவென கண்டுபிடி?’ எனக் கேட்பதாக பரந்து விரிந்திருந்தது கடல்.
வைஷ்ணவி அந்த கடலை ரசிக்கத் தொடங்கினாள். கூடியிருந்த மனிதர்கள் எல்லாம் காற்றில் கரைந்தது போல் உணர்ந்தாள். அந்தக் கப்பல் ஒரு தாயின் தாலாட்டு போல் மெல்ல அவளது மனதை ஆற்றுபடுத்தத் தொடங்கியது. தன் கரங்களினால் அந்த கப்பலின் ஓரத்தில் இருந்த கம்பிகளில் பிடித்து தன் முன் விரிந்தக் கடலை வெறித்து பார்க்கத் தொடங்கினாள்.
படைப்பின் பெருந்திரள் முன் அண்டத்தின் சிறுதுகளென நினைவுகளற்று நிற்பது தான் எவ்வளவு பெரிய விடுதலை.
‘சோம்பேறிகளுக்கு இந்தப் பயணம் நிச்சயம் சரியல்ல இது உடம்பை வருத்தி மனசை இதமாக்கற கலை’
அசோக்கின் வார்த்தைகள் அந்த கடல் அலைகள் போல் மனதிற்குள் மீண்டும் மீண்டும் வந்து போனது. அசோக் அந்த கப்பலின் அசைவில் அவள் தடுமாறாது நிற்கும் வரை தூரத்திலிருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்
அவளோடு சேர்ந்து அந்தக் கடலை ரசித்தது அழகாகத் தான் இருந்தது. முக்கியமாக அவளைச் சீண்டும் பொழுதுகள். மாலை மயங்கி இரவு தொடும் வேளையில் அவர்கள் அங்கே தங்கி இருக்கும் விடுதிக்கு வந்தனர். காடுகளுக்கு இடையில் இருந்தது அந்த விடுதி.
அங்கொன்றும் இங்கொன்றுமாக தனி தனிக் குடில்கள் இருந்தது. அந்த குடில் கட்டைகளால் ஆன சுவர்கள் சூழ மேற்புறத்தில் அந்தமானில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் கூரையைத் தாங்கி நின்றது. பழமையும் புதுமையும் பிசைந்து செய்த அறைகளாக அனைவரையும் ஈர்த்தது அந்த தங்கும் விடுதி.
அமெரிக்க நண்பர்கள் ஸ்டானும், பென்னியும் அதன் அழகை சிலாகித்துக் கொண்டு நடக்க ஜோடிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குடில் போன்ற அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வைஷ்ணவி அசோக்குடன் உள்ளே வந்தாள். அசோக்
“உனக்கு இன்னொரு குடில் பக்கத்தில..?”
என்றவன் அவளது அச்ச முகத்தைக் கண்டு அந்த பேச்சை நிறுத்தினான். வைஷ்ணவி மனதிற்குள் நினைத்தாள்.
‘தனியே அங்கே போய்? பேய் படம் பார்த்ததுக்கு அப்புறம் நான் எல்லாம் நைட்ல பாத்ரூம் போறதுக்கே அம்மாவைக் கூட்டிட்டு போற ஆளு! பேய் கூடு கட்டிக் குடியிருக்க இடம் மாதிரி இருக்கு. என்னைக் கூட்டிட்டு வந்து இப்படி காட்டுக்குள்ளே தனி குடில் போ ன்கறானே’
அவளுக்கு பயமாகத்தான் இருந்தது.
‘அதை அவனிடத்தில் எப்படி சொல்லுவது? நான் இங்கே இருக்கிறேன் என்றும் சொல்ல முடியாது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தனி ரூம் எதுக்கு கேட்டனு கேட்பான்? சரி ரோசத்தை விட்டு பயமா இருக்குனு சொன்னா மறுபடியும் உனக்கு இந்த ட்ராவல் னு ஆரம்பிப்பான். என்ன செய்வது?’
என அவள் திகைத்திருக்க அசோக் அவளது மனநிலையை ஓரளவு புரிந்துக் கொண்டான்.
‘காடுகளுக்கு நடுவில் வெளிச்சங்கள் மங்கிய அறை தனியே இருக்கறதுக்கு அச்சப்படுவது இயல்புதான் ஆனால் பயப்படறேன்ற வார்த்தை இவகிட்ட இருந்து வராதே. அது வராம இவளுக்கு பாவம் பார்க்கக் கூடாது’
அசோக் அருகில் இருந்தக் குடிலை நோக்கி நடக்க ‘ம்க்கும்’ என்ற கணைக்கும் குரல் வந்தது. அசோக் திரும்பினான்.
“என் ப்ரண்ட் உன்னை நம்பி தான் என்னை அனுப்பினா? இங்க சுத்தியும் காடு”
அசோக் அவளை நோக்கித் திரும்பினான்.
“அது எப்படி இந்த வாய் நிமிசத்துக்கு நிமிசம் மாறி மாறிப் பேசும்?”
அவன் கேள்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள் போல் பேசினாள் வைஷ்ணவி.
“எனக்கு எதாவது ஆச்சுனா நீ தான் ஜெயிலுக்கு போவ?! அதான் உனக்கு உதவி பண்ணலாம்னு நெனைச்சேன்”
வைஷ்ணவி சொல்ல அசோக் பெட்டியைக் கீழே போட்டு திரும்பினான்.
“ஓ! இது எனக்கு உதவி!”
“ஆமா! இல்லையா பின்னே?! நான்”
அவள் பேசி முடிப்பதற்கு முன் அசோக் கைகளை எடுத்துக் கும்பிட்டு அந்த குடிலின் முன்னறையில் பெட்டிகளை எடுத்து வைக்க வைஷ்ணவி இன்னொரு அறைக்குச் சென்றாள். உள்ளே வந்ததும் முதல் வேளையாக கதவின் தாழ்ப்பாளைப் பார்க்க வெளியிலிருந்து அசோக்கின் குரல் கேட்டது.
“சும்மா தாழ்ப்பாளைப் போட்டு தொங்கிட்டு இருக்காதே நான் உனக்கு பயந்து வெளியிலே தாழ்ப்பாள் போட்டுட்டேன்”
வைஷ்ணவி காது கேட்காதது போல் எதற்கும் கதவை ஒரு முறை பரிசோதித்து விடலாம் என திறக்க முயற்சிக்க வெளியில் கதவு ஆட அசோக் எரிச்சலுற்று திரும்பினான்.
“ஏ அரைலூசு கதவு டைட் ஆ தான் சாத்தியிருக்கு ஒழுங்கா குளிச்சிட்டு வெளியே வா டின்னர் சாப்பிடணும்”
வைஷ்ணவி கதவிடுக்கிலிருந்து சத்தம் வராது நடந்தாள். அசோக் குளித்து விட்டு சார்ட்ஸ் அணிந்து நின்றிருந்தான். வைஷ்ணவி உடல் அலுப்புத் தீர குளித்து தனது அறைக் கதவை திறக்க முயற்சிக்க அசோக் கதவைத் திறந்தான்.
அசோக் வைஷ்ணவி இருவரும் வெளிவர மரங்களுக்கு நடுவில் அவரவர் பரிமாறிக் கொள்ளும் வகையில் பெரிய குடிலின் கீழே உணவிருந்தது கிட்டத்தட்ட இருபது பேர் ஏழு மணிக்கே இரவு உணவை முடித்திருந்தனர். அந்தமான் வாழ் மக்களின் பாரம்பரிய உணவு சற்று காரம் குறைவாக சமைக்கப்பட்டிருந்தது. அசோக் வைஷ்ணவி இருவரும் இரவு உணவு முடித்து நிற்க சற்று தள்ளி இருக்கும் கடலை ரசிக்கலாம் என அனைவருமே வெளியே நடக்கத் தொடங்கினர். வைஷ்ணவிக்கு கோபமாக வந்தது.
‘இப்ப தான் இவ்வளவு தூரம் பயணம் வந்தோம். அதுக்குள்ள என்னமோ உலகமே அழியப் போற மாதிரி இப்படி யாரை காப்பாத்தறதுக்கு தான் நடந்துட்டே இருக்கானுங்க’
அசோக் ‘நீ வரலையா?’ என்பது போல் பார்க்க
‘தனியாக இருக்கவும் பயமா இருக்கு. வேற வழி இல்ல. இவன் கூட போய் தான் ஆகணும்’
வைஷ்ணவி பெருமூச்செறிந்து அசோக்குடன் நடந்தாள். ஜோடிகள் ஒவ்வொருவராக கடலை நோக்கி நடக்க இவர்களும் இணைந்துக் கொண்டனர்.
கடற்கரையில் நிலவின் வெளிச்சத்தில் கடல் அலையின் முன்பு ஒவ்வொருவரும் தங்களுக்குரிய கதைகளை பேசிக்கொண்டே கடற்கரையில் அமர்ந்திருந்தனர்.
ஆயிரம் கதைகள் ஒவ்வொருவருக்குள்ளும் அம்புலி காலத்தின் போக்கில் எத்தனை கோடி கதைகளை கேட்டிருப்பானோ?! அவை அத்தனையும் காதல் பேசியிருக்குமோ?!
இருவரும் கடற்கரை மணலில் கால் பதித்து நடக்க அம்புலியின் வெளிச்சம் அபரிதமாக அவ்விடத்தை நிறைத்தது. கடலலையின் சத்தம் அதிகமாக இல்லாதிருக்க வைஷ்ணவியின் நினைவுகளில் வருணுடன் பேசிய பொழுதுகள் வந்துப் போனது
“ஹே நியாபகம் இருக்குல்ல இந்த வாரம் பிரண்ட்சோட பாண்டிச்சேரி ட்ரிப். பீச் மணல்ல உன் கூட நடக்கணும். அதைப் பார்த்து ஊரே”
“வரு, சாரி எனக்கு இந்த வாரம்”
அதைக் கேட்டதும் வருணின் முகம் வாடியது நினைவு வர அசோக்கைத் திரும்பிப் பார்த்தாள். அவன் சற்று தள்ளி நடந்து வந்துக் கொண்டிருந்தான். சிறிது தொலைவில் ஜோடி ஜோடியாக உடன் வந்தவர்கள் நடப்பதும் பேசுவதும் தெரிந்தது. அசோக்கும் நினைவுகளில் தொலைந்திருக்க வைஷ்ணவி அவனை நோக்கிக் கேட்டாள்.
அசோக் சற்றே தள்ளி அவளுக்கு பாதுகாப்பாக நடந்து வந்துக் கொண்டிருந்தவன் அவளது கேள்வியில் அவளைப் பார்த்தான்.
“சரி உன் லவ் ஸ்டோரி பத்தி சொல்லு? அந்த பொண்ணை எங்கப் பார்த்த?”
அசோக் குரலில் ஏக்கம் இழையோடப் பேச ஆரம்பித்தான்.
“அன்னைக்கு எனக்கு காலேஜ் செமஸ்டர். செகண்ட் இயர். நானும் என் ப்ரண்ட்ம் படிச்சுட்டு இருந்தோம். சச்சின் என்கிட்ட சத்தமா டேய் பிட் பேப்பர் எழுதிட்டுயா னு கேட்கும் போது அவ க்ராஸ் ஆனா”
அவன் சொல்ல வைஷ்ணவி ஆர்வமானாள். அசோக் தொடர்ந்தான்.
“சும்மா தேவதை மாதிரி வெள்ளை சுடிதார் ல சிகப்பு துப்பட்டா கண்ணில மை யப்பா? அவ அழகு. ஆனா அதுக்குள்ள எக்ஸாம் பெல்”
வைஷ்ணவி ஆர்வம் தாங்காது மறுபடியும் கேட்டாள்.
“ஓ! அதுக்கு அப்புறம் எப்ப பார்த்த?”
“அன்னைக்கே அதே எக்ஸாம் ஹால்ல”
அவளது கேள்விக்கு அசோக் பதில் சொல்ல வைஷ்ணவியின் கண்கள் அகல விரிந்தது. அசோக் அதைக் கண்டதும் மெலிதாக திகைத்தவன் பின் பேசினான்.
“உனக்கு மூக்கு மட்டுமில்ல கண்ணும் பெருசு”
அவனது கேலிக்கு மற்ற சமயம் என்றால் வைஷ்ணவிக்கு மூக்கு விடைக்க கோபம் வந்திருக்கலாம் ஆனால் இப்பொழுதோ கதையின் சுவாரஸ்யம் அவளைத் தடுத்திருந்தது.
“அதை நீ தனியா ஆராய்ச்சி பண்ணி டாக்ட்ரேட் வாங்கு. மீதி கதையை சொல்லு”
“அன்னைக்கு எக்ஸாம். ஒரு மண்ணும் படிக்கல. என் ப்ரண்ட் என்னைப் பார்க்க நான் அவனைப் பார்க்க கொஞ்ச நேரத்தில அவன் என் மேல பிட் பேப்பர் தூக்கி வீச அது சரியா சூப்பர்வைசர் மேல விழ”
அவனை மேலும் பேச விடாது வைஷ்ணவி பேசினாள்.
“இரு நான் சொல்றேன். நீ பிட் பேப்பர் எடுக்க அந்த சூப்பர்வைசர் அந்த வெள்ளை சுடிதார் பொண்ணா நிக்க”
வைஷ்ணவி கைகளில் ஒரு சினிமா இயக்குனர் கதை சொல்வது போல் சைகை செய்ய அசோக் கைக்கட்டி தலை மேல் கைவைத்து நின்றான். வைஷ்ணவி அவனது பாவனையில் பேசுவதை நிறுத்த அசோக் பேசினான்.
“அரைலூசு! இங்க என்ன அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் ஸ்டோரி டிஸ்கஸனா நடக்குது. மீதி கதையை நீயே எழுது. நான் போறேன்”
அவன் சொல்லித் திரும்ப வைஷ்ணவி பொங்கி வந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டு பேசினாள்.
“சரி நீயே சொல்லு. நான் ஒன்னும் பேசல”
“அந்த சூப்பர்வைசர் பிட் பேப்பரை கையில எடுத்துட்டு என்னை கேவலமா கேட்க, நான் எவ்ளோ எக்ஸ்க்யூஸ் கேட்டும் அசராம வெளியே போகச் சொன்னான். வேற வழி இல்லாம நான் வெளியே போகும் போது தான் அவளைப் பார்த்தேன். அந்த ரூம்ல எனக்கு ரெண்டு சீட் முன்னாடி எக்ஸாம் எழுதிட்டு இருந்தவ அந்த ஆளு போட்ட சத்தத்தில என்னைப் பார்த்து கேவலமா ஒரு பார்வை பார்த்தா!”
அசோக் சொல்ல சற்று முன் எதுவும் பேச மாட்டேன் என்று சொன்ன வைஷ்ணவி மீண்டும் வாய் திறந்தாள்.
“ச்சை உன் லவ் ஸ்டோரி என்ன இவ்ளோ கேவலமா இருக்குது. ஒரு பிட் பேப்பர் மாதிரி உன் லவ் ஸ்டோரியும் இவ்வளவு சின்னதா இருக்கு”
வைஷ்ணவி கை சைகையை சிறிதெனக் காண்பித்துப் பேச
“அரைலூசு! அரைலூசு! முழுசா சொல்ல விடாம எதுக்கு இப்ப?”
அசோக் பொறுமை இழந்து கத்தினான். வைஷ்ணவி அவனை முறைத்துக் கொண்டு நின்றாள். இருவரும் முறைத்துக் கொண்டு நிற்க கடலலையில் பயோலூமினன்ஸ் ஒளி தண்ணீரில் பரவத் தொடங்கியது. தண்ணீரில் நீலவண்ணத்தில் விளக்கொளிப் போல் படர அவர்கள் இருவரும் கால் பதித்த இடமெல்லாம் தண்ணீரில் ஒளிவெளிச்சம் ஜொலித்தது.
கவிதை
இரசனைகளின் உச்சமாக
படைத்தவன் இருப்பதை
பறை சாற்றும் இரு ஓவியம்
அவளும்! இயற்கையும்!


error: Content is protected !!