Skip to content
Post Views: 3,274
அத்தியாயம் 2
அந்த புதியவன் அவளைக் கோபமாக நோக்க வைஷ்ணவி கைகளை அமர்த்தி பேசினாள்.
“விடு விடு ஃப்ரீயா விடு யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். ஆமா அவ ஏன் உன்னைக் கழட்டி விட்டா?”
வைஷ்ணவி பேசிக் கொண்டு முன் இருந்த மர மேஜையில் கை வைத்து தலை சாய்த்து அவனை நோக்கி குறுகுறு பார்வை பார்த்தாள். அவனோ பிராவோவைத் தேடித் தோற்றவனாக அவளை அந்த இடத்தில் தனியாக விட்டுச் செல்ல முடியாது அமர்ந்து இருந்தான்.
Advertisement
அதே சமயம் வைஷ்ணவியின் தோழி ரிசாட்டின் முன்னறையில் மூர்க்கத்தனமாக சண்டையிட்டு அடிப்பட்டு வந்து இருந்த நால்வரைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தெழுங்கில் பேசினாள்.
“என்ன ஆச்சு? ஏன் திடீர்னு சைட் சீயிங் வேணாம் னு சொல்லிட்டு வந்தீங்க? இப்ப பார்த்தா?”
அந்த அறையில் இருந்த நால்வருக்கும் முகத்தில் அடி வாங்கி வீக்கம் இருந்தது. அவர்கள் தயங்கிக் கொண்டே பேசினர்.
Advertisement
“ஒண்ணும் இல்லைங்க.சும்மா தான்”
Advertisement
செரீன் அவர்களில் சற்று பேசக் கூடிய நிலையில் இருந்த மகேஷை அணுகி தெழுங்கில் பேசினாள். அவன் பேச பேச ரிசாட் ஓனர் சஞ்சீவ்வை நோக்கினாள்.
அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த லோக்கல் டூவிலரை கோவா எல்லைத் தாண்டி எடுத்துச் சென்றிருந்ததால் அந்த டூவீலர் ஓனர் ரவுடிகளுடன் வந்து அவர்களை அடித்து நொறுக்கியிருந்தான். அவள் சஞ்சீவ்கு தகவலைத் தெரிவித்து விட சொல்ல மகேஷ் உள்ளூர் காவல்துறை வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாதவாறு சமாளித்துக் கொண்டிருந்தான். அவளைத் தேடிக் கொண்டிருந்த வந்திருந்த பிராவோவும் அந்த பிரச்சினையில் ரிசார்ட்டின் பெயர் அடிபடாதிருக்க பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் போதை மருந்து பயன்படுத்தும் இடத்திற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டு இருந்ததால் பிரச்சினை பெரிதாகி இருந்தது.
நடந்த விபரீதத்தில் வைஷ்ணவியை முழுவதுமாக மறந்து போயிருந்தனர் இருவரும். அங்கு வைஷ்ணவியோ இன்னும் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றில் மாட்டிக்கொள்ளத் தயாராக இருந்தாள். அந்த ரிசாட்டில் கூடும் டிராவல் ஹல்ட் எனப்படும் பல நாடுகளுக்கு செல்லும் பயணத்தில் செரீன் தன்னையும் வைஷ்ணவியையும் இணைத்து விட நினைத்திருந்தாள். அன்றிரவு அவர்கள் கோவாவில் கூடி கிளம்புவதாக இருந்தது.
Advertisement
செரினுக்கு நடந்த பிரச்சனைகளில் அது முற்றிலுமாக மறந்து இருந்தது. டிராவல் கல்ட் எனப்படுவது மன அமைதி தேடி செல்லும் பயணம். இயற்கையின் மிக அழகான நுட்பமான யாரும் பார்த்திராத இடங்களை தேடிச் சென்று பயணத்தில் மன அமைதியை திரும்ப பெற முயற்சிப்பது.
இன்று அவர்களுடன் வருவது கிட்டத்தட்ட 14 ஜோடிகள். இந்த 14 ஜோடிகளும் இருவர் ஆணாக இருவர் பெண்ணாக ஆண் பெண் இருவராக தனித்தனி இணையராக பயணங்கள் மேற்கொள்கின்றனர். இந்தியாவிலிருந்து இரு ஜோடிகள் அவர்களுடன் இணைந்துக் கொள்வதாக இருந்தது. ஷெரின் தற்போதைய நிலையில் நிச்சயம் அந்த பயணத்தைத் தொடர முடியாது. அவள் யோசித்துக் கொண்டு இருக்க பிராவோவின் அலைபேசியில் அழைத்து இருந்தான் பயண மேலாளர். அங்கே வைஷ்ணவியோ அந்த புதியவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
“ஆமா சும்மா உறுஉறுன்னு இருக்கீயே உன் பெயர் என்ன புலிமூஞ்சியா ?”
அந்த புதியவன் தன் கையில் இருந்த கிளாசை நகர்த்தி விட்டு அவளை நோக்கினான்.
“உன் பேர் என்ன கிளிமூக்கியா?”
தனது சற்றே பெரிதான மூக்கை அவன் கேலி பேசியதைக் கண்டு கோபத்தில் மூக்கு வெடக்கப் பேசினாள் வைஷ்ணவி.
“ஏ புலிமூஞ்சி ஓவரா பேசுற,அப்புறம்..!”
அவள் சொல்ல சொல்ல அவன் மீண்டும் கேட்டான்.
“அப்புறம்,அப்புறம்..”
“நான், நான் உன்னை அடிச்சிடுவேன்”
அவளது தடுமாறலில் சிரித்தப்படியே பேசினான்.
“ஓ அப்படியா? எங்க அடி பார்க்கலாம்!”
அந்த சீண்டலில் வைஷ்ணவி தட்டுத் தடுமாறி எழுந்தாள் எழுந்தவுடன் நிதானம் தவறி அவன் மேலே விழுந்தாள். அவனோ தன் மேல் விழுந்த அவளது கரங்களை மெல்ல பிடித்து அவளை தன் மேல் சாயாதவாறு பார்த்துக் கொண்டான். பின் மெல்ல எழுப்பி நிறுத்திப் பேசினான்.
“முதலில் நிதானமா நில்லு, அப்புறம் என்னை அடிக்கிறது பத்திப் பார்க்கலாம்”
அவள் அவனது கரங்கள் பட்டவுடன் தன்னை அவன் ஏதோ செய்து விடுவான் என்ற எண்ணத்தில் சற்றுத் தடுமாறினாள். அந்த நிலையிலும் அவளது கரங்கள் தன்னைக் காத்துக் கொள்ள தேடியதைக் கண்டு அவன் சிரித்தான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னவோ ஆம்பளைகளை அடிப்பேன் கொல்லுவேன் னு பேசின, இப்ப பார்த்தா பயந்து சாகுற”
“யார் சொன்னா பயந்துட்டேன்னு? உனக்கு என்ன பத்தி என்ன தெரியும்? நான்,நான்.”
“நீ…நீ…நீ..”
“நான் வந்து,நான் வந்து, சர்ச் ஆப் சோல் அட்வெஞ்சர் ஜர்னி(ஆத்மாவைத் தேடும் சாகசப் பயணம்) தனியா போறேன் தெரியுமா?”
அந்த கேள்வியில் புருவம் உயர்த்தினான் அவன். ஏனென்றால் அவனும் அந்த பயணத்திற்கு தான் வந்திருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் இங்கிருந்து அவர்கள் புறப்படுவதால் அவர்களுடன் இணைந்துக் கொள்ள வந்திருந்தான். பேசிக் கொண்டே எலுமிச்சை சாறு கலந்த பானத்தை அவள் அருகில் அவன் வைக்க வைஷ்ணவி அதை எடுத்து குடித்துவிட்டு பேசினாள். அந்த புதியவன் மேலும் கேள்விகள் எழுப்பினான்.
“நீ வர்றீயா?.நீ மட்டுமா?”
அவன் கேள்விக்கு வீறாப்பாகப் பதிலளித்தாள் வைஷ்ணவி.
“ஆமா நான் னா நான், என் ப்ரண்ட், எல்லாம் சேர்ந்து..ஏன் தனியா வர்றணும் னா கூட வருவேன் ..”
அவள் சொல்லிவிட்டு தன் அருகில் இருந்த இடத்திலிருந்து தன்னுடைய பயணப் பெட்டியை எடுத்து வைத்தாள். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பது கண்டு பயண மேலாளர் அங்கு வந்திருந்தார்.
அவள் சரியாக நிற்பதற்கே ஒரு கையை அந்த மேஜையில் வைத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நின்றிருப்பதை கண்டு அவன் இதழ்கள் ஏளனத்தில் சற்று வளைந்தது. வைஷ்ணவிக்கு அந்த நிலையிலும் அவன் முகம் சிறிதளவு கூட களை இழந்ததாக தோன்றவில்லை. நிச்சயம் ஏதாவது ஒரு மாடலாக இருக்கத் தகுதியானவன் தான். அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டே தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். அவன் இறுதியாக கொடுத்த ‘லைம் ஜூஸ்’ ஒரு அளவுக்கு அவளது போதையை தெளிய வைத்திருந்தது.
டிராவல் மேனேஜர் தன் அருகில் வந்ததும் ஷெரின் அவரிடம் கொடுக்கச் சொன்ன பைலை நீட்டினாள் வைஷ்ணவி. அதை அவர் வாங்கிக் கொண்டு சரி பார்த்து ஷெரீனிடம் அலைபேசியில் பேசினார். அதன் பின் வைஷ்ணவியிடம் பேசினார்.
“ஏம்மா ஷெரின் வர முடியலன்னு சொல்றாங்க. உங்களாலயும் தனியா வர முடியாதுனு சொல்றாங்க”
அவர் கேட்டுக் கொண்டு இருக்க அந்த புதியவன் குறுகுறு கண்களுடன் வைஷ்ணவியை நோக்கியபடி இருந்தான். தனியா வருகிறேன் என்று சொன்னது பொய்யா என்பது போல்.
வைஷ்ணவி பற்களைக் கடித்துக் கொண்டு
“செரீன்னுக்கு நீங்க மறுபடியும் கூப்பிடுங்க..நான் பேசிக்கறேன்.”
என்று சொல்லி மெல்ல அமர்ந்தாள்.
சற்று நேரத்தில் அங்கே 12 ஜோடிகள் வந்திருந்தனர் .பெரும்பான்மையாக கணவன் மனைவியர் இருந்தனர். சிலர் ஆண் நண்பர்கள் இருவர் வந்திருந்தனர். சிலர் பெண் நண்பர்கள் இருவர் வந்திருந்தனர்.
அந்த மேனேஜர் மீண்டும் ஷெரீனைத் அலைபேசியில் தொடர்பு கொண்டார்.
“மேடம், பிராவோ சாரும் வரலையா?”
“ஆமா சார், அவனும் இங்க இன்வெஸ்டிகேசன் ல இருக்கான்”
“இப்படி ஒரே சமயத்தில் நாலு டிக்கெட் ‘கேன்சல்’ பண்ணா எப்படி மேடம்? இரண்டு பேரா தான் டிராவல் கண்ட்னு சொன்னேனே, பிராவோ ப்ரண்டும் போக முடியாது”
“சரி இப்ப என்ன பண்ணறது?”
“உங்க பிரண்ட் தனியா மேனேஜ் பண்ணிக்குவேன் னு சொல்றாங்க”
என்று சொன்ன மேனேஜர் துஃவையல் அதை உறுதிப்படுத்த மீண்டும் வைஷ்ணவியை நோக்கிக் கேட்டார்.
“ஏன் மேடம் தனியா வருவீங்கல, ‘ஸ்பிரிச்சுவல் ஜர்னி’ அதான் கேட்கிறேன்”
அவரின் கேள்வியில் அந்த புதியவன் கரங்களை கட்டி இம்முறை நிமிர்ந்து அவளை நேராகப் பார்த்தான். வைஷ்ணவி அவனையும் துஃவையலையும் மாறி மாறி பார்த்துவிட்டு
“ஓ மேனேஜ் பண்ணிக்குவேன் என் பிரண்டு கிட்ட சொல்லுங்க நான் போயிடுவேன்”
அவள் சொன்னதும் துஃவையல் ஷெரினிடம் பேசினார்.
“மேனேஜ் பண்ணிக்குவேன்னு சொல்றாங்க”
“அப்படியா ஒரு நிமிஷம் அவகிட்ட ஃபோன கொடுங்க “
ஷெரீன் சொல்ல துஃவையல் வைஷ்ணவியிடம் போனை நீட்டினார்.
வைஷ்ணவியின் அருகே அமர்ந்திருந்த அந்த புதியவன் தனது கையில் இருந்த கண்ணாடி குவளையில் மிதந்த பனிக்கட்டிகளை கலக்கிக்கொண்டே மென் புன்னகை இழையோட அமர்ந்திருந்தான்.
அது வைஷ்ணவிக்கு இன்னும் கோபத்தை மூட்டியது.
“ஷெரின் நான் போறேன்”
வைஷ்ணவி சொல்ல அங்கே ஷெரீனிடம் வந்து நின்றார் ஒரு காவலர். ஒரு நிமிடம் என சைகை செய்து மீண்டும் வைஷ்ணவியிடம் பேசினாள்.
“வைஷு இது அட்வெஞ்சரஸா இருக்கும், தனியா நீ இப்ப தான் பெங்களூர் கே வந்துருக்க. உன்னால சமாளிக்க முடியாது வைஷூ. அவங்க போகட்டும் நெக்ஸ்ட் ட்ரிப் நாம போய்க்கலாம்”
“இல்லை நான் போவேன்”
வைஷ்ணவி அவளிடம் கத்தி விட்டு அலைபேசியை துஃவையலிடம் கொடுக்கவும் ஷெரீனின் அருகே வந்து காவலர் அந்த நால்வரை அழைத்துச் செல்வதாகக் கூறவும் சரியாக இருந்தது. அலைபேசியை அணைத்து விட்டதாக நினைத்து ஷெரீன் பேசினாள்.
“சரி சார், நீங்க கிளம்புங்க”
துஃவையல் அதை அனுமதியாக எடுத்துக் கொண்டு அவளை அழைத்துச் செல்ல அவள் பின்னே அந்த புதியவன் வந்தான்.
அந்த புதியவனும் அவள் பின்னே வரக்கண்டு திரும்பிப் பார்த்தாள் வைஷ்ணவி. அவனோ அலட்சியமாக தோளைக் குலுக்கினான். அவர்கள் வெளிவர ஒரு அழகிய சொகுசு பேருந்து வாகனம் வந்திருந்தது. அதில் இருவரும் ஏறினர், பயணம் தொடங்கியது.
அந்தப் பேருந்து கோவாவின் விமான நிலையம் சென்று இருந்தது. அங்கே அவர்களது பெட்டிகளை எடுத்து வைக்க ஏற்கனவே ஆட்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தன் கைகளில் இருந்த ஹேண்ட் பேக்கை எடுத்துவிட்டு திரும்பினாள் வைஷ்ணவி. அங்கே அவனை மீண்டும் கண்டாள். அவன் பேருந்தில் யாருடனோ தொலைப்பேசியில் பேசிக் கொண்டு நின்றிருந்தான். அவளைக் கண்டதும் அலைபேசியை அணைத்தவன் அவளை நோக்கினான்.
“ஏ! மிஸ்டர் என்ன என்னை ஃபாலோ பண்றீயா?”
அவளது கேள்விக்கு அலட்சியமாக பதிலளித்தான் அவன்.
“ஏன் உன்னை ஃபாலோ பண்றவங்க எல்லாத்தையும் பத்திரமா இந்த பஸ்ல கூட்டிட்டு வந்து டூர் சுத்தி காமிக்கிறாங்களா?”
அவன் கேட்க வைஷ்ணவிக்கு கோபத்தில் முகம் சிவந்தது.
‘உண்மை தான் அவனும் நம்முடன் பயணிக்கும் பயணியாக இருக்கக் கூடும்’
அவள் யோசித்துக் கொண்டிருக்க துஃவையல் அங்கிருந்து அவனை அழைத்து இருந்தார்.
“அசோக் நீங்க கொஞ்சம் வரிங்களா? ஃபார்மாலிடிஸ் முடிக்கணும்”
அவன் நேரே துஃவையலிடம் சென்று தன்னைப் பற்றிய சில தகவல்களை அளித்துவிட்டு கீழே இறங்கினான். அவன் கையில் இருந்த பெட்டி அவ்வளவு பெரிதாக இல்லை ஆனால் இவளிடம் இருந்த பெட்டியோ மிக கனமாக இருந்தது. ஒவ்வொருவராய் இறங்கிய பின்னர் மெல்ல கீழே இறங்கினாள். அசோக் முன்னே நடந்தவன் பின் மேலும் நடக்காது அங்கேயே நின்றிருந்தான். அவள் ஆச்சர்யமாக பார்க்க அவள் அருகே வந்தவன் அவளது பெட்டியை இழுத்துக் கொண்டு நடந்தான். வைஷ்ணவி சந்தேக கண்ணோடு அவனை நோக்கினாள். அசோக் ஒன்றும் பேசாது நடந்ததால் வைஷ்ணவி அவனது அந்த தன்னிச்சையான செயலைக் கண்டு கோபம் கொண்டவளாகக் கத்தினாள்.
“ஹலோ, நீங்க பாட்டுக்கு எடுத்துட்டு போறீங்க? அது என் ஃபேக்”
அசோக் திரும்பினான்.
“ஏன் நீயே இதை தூக்கிட்டு வந்துருவியா?”
அவனது கேள்வி கோபம் வருவித்தாலும் அவள் கோபத்தை அடக்கிக் கொண்டு நிற்க இம்முறை அவனுக்கு கோபம் வந்தது.
“இங்க பாரு கபுள்ஸ் ட்ரிப் ஜர்னி இது. எல்லாருமே இரண்டு பேரா ஃபேரா அரேஞ்ச் பண்ணி இருக்காங்க. என் ஃப்ரெண்ட் பிராவோ, உன் பிரண்டு ஷெரின் ரெண்டு பேருமே இல்லாததுனால இப்ப நாம ரெண்டு பேரும் ஒரு கபுளா இந்த ஸ்பெஷல் டூர் போறோம் புரியுதா? என் ஃப்ரெண்ட் ப்ராவோ ஃபோன் பண்ணான். அவனோட பிரண்ட் அதான் உன் தோழி ஷெரீன் கெஞ்சிக் கேட்டுக்கிட்டதால உன்ன பத்திரமா கூட்டிட்டு போறேன் னு சொல்லிருக்கேன். அதான் இந்த ஹெல்ப். போதுமா இல்லை இதுக்கு மேல உனக்கு ஏதாவது விளக்கம் வேணுமா?”
அவன் மேலும் கேட்க வைஷ்ணவி சற்று நேரம் அவனைப் பார்த்தவள் மறுகேள்வி கேட்டாள்.
“இதை நான் எப்படி நம்புறது?”
அசோக்குக்கு புன்னகை வந்ததை தனது கைக்குட்டையில் முகம் துடைப்பது போல் மறைத்துக் கொண்டான்.
‘எந்த நிலையிலும் இவளுடைய திமிரு புத்தியும் சந்தேகமும் அடங்கவே அடங்காது’
அவன் ஒன்றும் பேசாதே ஷெரினுடைய அலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேசினான்.
“ஷெரீன் நீங்க கெஞ்சி கேட்டுக்கிட்டதால தான் இந்த மாதிரி ஒரு கேரக்டர் கூட பயணம் பண்ணலாம்னு முடிவு எடுத்தேன். இது சரிப்பட்டு வராது. இவங்கள இங்க வந்து கூட்டிட்டு போயிருங்க”
என்றதும் வைஷ்ணவி கோபம் வந்தவளாக அவனை நோக்கினாள். அசோக் மேலும் பேசினான்.
“அப்புறம் இந்த அட்வென்ச்சர் டூர் க்கு எல்லாம் இந்த மாதிரி அவசரகுடுக்கை பயந்தாங்கொள்ளி பொண்ணெல்லாம் ஒத்து வர மாட்டாங்க”
அவன் முடிக்க சட்டென்று அவனது கையில் இருந்து அந்த செல்போனை பிடுங்கினாள் வைஷ்ணவி. அவளுடைய அந்த எதிர்பாராத செயலில் சற்று திணறியவனாக தள்ளி நின்று அவளை நோக்கினான் அசோக். வைஷ்ணவி பேசினாள்.
“என்னை எதுக்கு இந்த ஆள் கூட போக சொல்ற? நான் தான் தனியா போயிக்கறேன் னு சொன்னேன்ல!”
வைஷ்ணவியின் குரலில் ஷெரீன் பற்களை கடித்துக் கொண்டு தனது கோபத்தைக் கட்டுப்படுத்தினாள். தனது தோழி சில நேரங்களில் மிகப்பெரிய புத்திசாலி சில நேரங்களில் அடிமுட்டாளாகப் பேசுவாள் என்பது அவள் அறிந்தது தான்.
“இங்க பாரு வைஷு, அவர் ப்ராவாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட். எனக்கும் தான். இந்தியா வந்தா இங்கே அடிக்கடி வருவார். வேறு யாரை நம்பியும் உன்னை தனியா எல்லாம் அங்க அனுப்ப முடியாது. பெட்டர் அவரோட போறதுன்னா போ இல்ல கிளம்பி வா நானும் இங்க உங்க வீட்ல பதில் சொல்லணும்”
ஷெரீன் சொல்லி முடிக்க அசோக் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் அவளது கண்களை நோக்கி அக்கறையுடன் பேசினான்.
“தயவு செய்து கிளம்பி போயிரு. அதான் உனக்கு நல்லது உன்னால எல்லாம் இந்த பெட்டியவே தூக்க முடியல. எப்பயாவது எக்ஸைஸ் பண்ணி இருக்கியா? இல்லை ஜிம் னு ஒன்னைப் பத்தி கேள்விப் பட்டு இருக்கியா?”
அந்த கேள்விகள் அவனை கோபமாக நோக்கினாள் வைஷ்ணவி. அசோக் மேலும் தொடர்ந்தான்.
“இந்த பயணம் எவ்வளவு கஷ்டமானதுனு தெரியுமா? சும்மா என்கூட சண்டை போட்ட கோபத்தில எல்லாம் கிளம்பி வராதே. உனக்கு இதைப் பத்தி ஒன்னும் தெரியாது. உன் பிரண்டு உன்ன கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. இங்கே வெயிட் பண்ணு. நான் துஃவையல் கிட்ட பேசிக்கிறேன்”
அவன் சொல்லிவிட்டு அவளது பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு முன்னே சென்றான். இருப்பினும் அவன் மனதிற்குள் மெலிதான ஏமாற்றம் இருந்தது. ‘வருவாளா?’அந்த கேள்விக்கு அவன் மனதிற்குள் அவனே பதில் சொல்லிக் கொண்டான்.
‘நிச்சயமா வருவாள்! அடங்காப்பிடாரி நான் சொன்னதுக்காகவே வருவாள்’ அவன் மனதிற்குள் சொல்ல ஆம் என்பது போல அந்த பெட்டியை கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு அவனை விட விரைவாக நடக்கத் தொடங்கி இருந்தாள் வைஷ்ணவி.
அசோக்கிற்கு அவளது நடையைக் கண்டு சத்தமிட்டு சிரிக்கத் தோன்றிடினும் ஒரு தீவிர முகப்பாவனையை வைத்துக் கொண்டு அவளோடு கூட நடந்தான்.
பின் அவள் காதருகே “இங்க பாரு” அவன் பேசத் தொடங்குவதற்கு முன் அவள் அவனை நோக்கி கைகளை உயர்த்தி ஒன்றும் பேசாதே என அமர்த்தினாள். அசோக் ஒன்றும் பேசாது புன்னகையை அடக்கிக் கொண்டு நடக்க இருவரும் விமான நிலையத்திற்கு உள்ளே சென்றனர். போர்டிங் பாஸ் முடிந்து விமானத்தின் உள்ளே நடக்கையில் இருவர் இருவராக சென்று அமர்ந்திருக்க அசோக்கின் அருகில் வைஷ்ணவி வந்து அமர்ந்தாள். விமானம் மேலெழும்ப அவனைக் குறித்த கேள்விகளும் அச்சங்களும் வைஷ்ணவியின் மனதில் சேர்ந்தே எழுந்தது. ‘வீம்புக்கு வம்பை விலைக் கொடுத்து வாங்கி விட்டோமா?’ என்ற அவளது சிந்தனை விரைவிலேயே உண்மையானது.
கவிதை
என் விழிகளில் விழுந்த
முதல் ஆச்சரியம் நீ!
நான் தவிர்த்திருந்த உணர்வுகள்
அனைத்தும் உடைத்து பெய்யும்
மாமழை நீ!
எப்போதும் என் மையலின்
தீராத் தேடல் நீ!
error: Content is protected !!