Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிரில் ஒரு சஞ்சாரம்

உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 5

அத்தியாயம் 5

வைஷ்ணவி அவனைக் கண்டதும் வழியும் கண்ணீரை நிறுத்த முடியாது வேறு பக்கம் முகத்தைத் திருப்ப அசோக் தனது கரத்தை நீட்டிப் பேசினான்.

“கையை பிடிச்சு எழுந்திரு. ஒரு மணி நேரத்துக்கு இன்னும் அஞ்சு நிமிசம் தான் இருக்கு. அப்புறம் பெட் கட்டி தோத்துட்டு எல்லாம்”

அவன் சொல்லி முடிப்பதற்கு முன் அவன் கரத்தைப் பற்றி எழுந்த வைஷ்ணவி கண்களைத் துடைத்துக் கொள்ள முடியாது நிற்க தனது கைக்குட்டையை அவளிடம் நீட்டி மீண்டும் பேசினான்.



Advertisement

“நான் பார்க்கவே இல்லை நீ அழுததை அந்த பக்கம் திரும்பி மூஞ்சியைத் துடைச்சுக்க. அப்புறம் நீ..”

அசோக் சொல்ல சொல்லவே சிரிப்பு வர வைஷ்ணவி அவனது கேலியில் மீண்டும் கோபமுற்றவளாக அவனது கைக்குட்டையை திருப்பி அவனது கரங்களில் திணித்து விட்டு விடுவிடுவென நடக்க அசோக் அவள் பின்னே தொடர்ந்தான்.

காப்ரியல் அடலின் தம்பதியர் அவர்கள் முன்னே இருக்க அடலின் கூடச் சேர்ந்து நடக்கத் தொடங்கினாள் வைஷ்ணவி. காப்ரியல் அவரது அருகே நடந்துக் கொண்டு இருந்தவர் மெல்லப் பின்வாங்கி அசோக்குடன் இணைந்துக் கொண்டார்.

Advertisement

எலிபன்ட் கடற்கரை வந்ததும் ஆழ்கடல் நீச்சல் செல்ல காப்ரியல் அடலின் பெயர் கொடுத்திருக்க வைஷ்ணவி தானும் செல்ல அதற்குத் தனியாக பணம் கட்ட வேண்டியிருந்தது. வைஷ்ணவி தனது கைப்பையைத் தேட அசோக் அவளுக்கும் சேர்த்து பணம் கட்டி விட்டு வர வைஷ்ணவி அவனை முறைத்தாள்.

Advertisement

அசோக் ஒன்றும் சொல்லாது படகை நோக்கி நடக்க அடலின் வைஷ்ணவியுடன் இணைந்து நடந்தார். படகின் இருபுறமும் பலகைகள் மேலே கூரை இருக்க அவர்களை ஆழ்க்கடலில் நடக்க உதவும் கருவிகளை முன்னே சரிப்பாத்துக் கொண்டு இருந்தான் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த இளைஞன். அடலின் காப்ரியல் ஒரு பலகையில் அமர அவர்களுக்கு எதிரே இருந்த பலகையில் அசோக்கும் வைஷ்ணவியும் அமர்ந்தனர். அப்பொழுது அசோக்கிடம் இருந்து தள்ளி அமர்ந்த வைஷ்ணவியைக் கண்டு காப்ரியல் கேலிப் புன்னகை செய்து கடல்நீரை நோக்கி கண்களைத் திருப்பினார்.

இருபது நிமிட பயணத்தில் அவர்கள் ஆழ்க்கடலில் இறங்கி பார்வையிடும் இடம் வந்தது. அந்த பயிற்சிக் கொடுக்கும் இளைஞன் முதலில் அடலினுக்கு தலையில் பெரிய குவளை போலான தலைக்கவசத்தை அணிந்து அழைத்துச் சென்றான். அருகில் காப்ரியல் உள்நீச்சலுக்கான உடை அணிந்து இருவரும் கடலினுள் செல்ல அடுத்து வைஷ்ணவியின் பயிற்சியாளன் வந்தான். வைஷ்ணவி அவர்கள் சொன்ன முறையில் பாதுகாப்பு உடையையும் தலைக்கவசத்தையும் அணிய அசோக் அவள் அருகே வந்து நின்றான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு தண்ணீருக்குள் செல்ல அவள் பின்னே சென்ற பயிற்சியாளனை சைகையால் நிறுத்தி விட்டு பாதுகாப்பு உபகரணங்களுடன் முகம் மறைத்து அவள் பின்னே தண்ணீருக்குள் இறங்கினான் அசோக்.

மெல்ல மெல்ல நீரின் தாக்கம் உணர்ந்து அச்ச உணர்வு மேலிட அவள் செல்ல அங்கே அவள் கண்முன் வேறொரு உலகம் சட்டென்று உருவானது போலிருந்தது. அழகு அழகான பாறைத் திட்டுகள் அதன் மேல் படரும் வெவ்வேறு வடிவ மீன்கள் அதுவும் அந்த கவசத்தின் கண்ணாடி முன் நீந்திய மீன்களும் படர்ந்த வண்ணங்களும் அதிசயங்களை உணர்வதற்கு தயக்கத்தையும் அச்சத்தையும் விட்டொழித்தேத் தான் ஆக வேண்டும் என பாடம் கற்பித்தது.

Advertisement

உண்மையில் அச்சம் விட்டொழித்து துணிவதே அதிசயங்களின் வாயில். அங்கிருப்பவர்களைப் போன்று வெகு சிலருக்கே அது ஒரு வாழ்வியல்.

அவள் தடுமாறாத வண்ணம் தன் கைகளைப் பின்னிருந்து பிடித்திருந்தது அசோக் என்பதை அவள் அறியவில்லை. அசோக் அவளது கரங்களைப் பற்ற அவளை நடக்க வைக்க வைஷ்ணவி அவளது மனதிலிருந்த கோபம் ஏக்கம் வலி அனைத்தும் கடல்நீரில் உப்பாக கரைந்துப் போக மீன்களைப் பிடிக்க விரல்களை நீட்டுகையில் எதிரே அடலின் பின் நின்றிருந்தவனைக் கண்டாள். அவளது பயிற்சியாளன் தான் அப்பொழுது தன் பின்னே நிற்பது அவள் திரும்ப முயற்சிக்க பின்னிருந்தவனோ அவளை மெல்ல நடத்திச் செல்ல பாறை இடுக்கில் ஒரு மீன் தன் நிறத்தை மாற்றி மேலெழும்பியது. அந்த அழகைக் கண்டப் பின் வீணான ஆராய்ச்சிகளை விடுத்து அந்த நொடி இன்பத்தை துய்ப்பதைத் தேர்ந்து எடுத்தாள் வைஷ்ணவி.

ஆழ்க்கடலின் ஆழத்தில் பாதம் பதியும் பதியாது நீரின் குளிர்ச்சி உடல் எங்கும் பரவ காணும் அதிசயம் ஒவ்வொன்றையும் காட்சி அனுபவமாகக் கோர்க்கத் தொடங்கினாள்.

அசோக் அவளது பின்னே அந்த காட்சிகளை ரசித்துக் கொண்டே ஒவ்வொரு உயிரினமும் தென்பட அவளை அழகாக அவ்விடம் அழைத்துச் சென்றான். அவர்கள் ரசித்து முடிக்க, நேரம் கருதி பயிற்சியாளன் சைகை செய்ய கடலின் மேற்பரப்புக்கு வந்தனர். முதல் முறையாக அந்த பயணத்தை மேற்கொண்டதற்காக மகிழ்ச்சியாக உணர்ந்தாள் வைஷ்ணவி.

அசோக் அடலின் பின்னே இடம் மாறி வைஷ்ணவியை அந்த பயிற்சியாளன் கரங்களில் ஒப்படைத்து படகின் அருகே சென்றான். ஆனால் தனது கைகளை மாறிப் பிடிக்கையில் வைஷ்ணவி உணர்ந்து திரும்ப அங்கே அடலின் பின்னே ஒருவன் செல்வதே தெரிந்தது. படகுக்குள் வந்ததும் பாதுகாப்பு உடைகள் களைய எதிரே அசோக் நின்றிருந்தான். அவனது உடையும் நனைந்திருக்க அவனும் நீருக்குள் இறங்கியிருக்கான் என்று எண்ணினாள் வைஷ்ணவி.

ஒரு வேளை தன் பின் நின்றது அவனாக இருக்குமோ என்ற அவள் சந்தேகம் தேடல் ஆவதற்கு முன் அடலின் எப்படி இருந்தது அனுபவம் எனக் கேட்க அசோக் பெருமூச்சு விட்டுத் திரும்ப காப்ரியேல் நக்கல் புன்னகை செய்தார்.

விரைவிலேயே படகு எலிபன்ட் கடற்கரை வர மீளவும் கீழே செல்ல அனைத்து ஜோடியினரும் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். வைஷ்ணவி அசோக்கை பார்த்தாள். அடலினும் காப்ரியலும் இருசக்கர வாகனத்தில் ஏறியப் பின் தீவைச் சுற்றிப் பார்த்து வருவதாக சொல்லிச் சென்றனர். அனைத்து ஜோடியினரும் சுற்றி இருக்கும் தீவுகளை கடற்கரையை கண்டுக் களிக்க கிளம்பியிருந்தனர்.

‘இப்போது நான் மறுபடி கீழ இறங்கி நடக்கணும். தனியா நடக்கணும், அதுல அசோக்கையும் துணைக்கு கூப்பிட முடியாது. என்ன செய்வது? தயக்கத்தை விட்டு பேசிடலாமா?’

அவள் சிந்தனையில் ஆழ்ந்திருக்க அசோக் இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து விட்டு அவளிடம் வந்து நின்றான். அவனது பார்வை கூராக அவளைத் தீண்டியது. உன் கோபங்கள் போதும் ஒழுங்காக வண்டியில் ஏறு என்பது போல் இருந்தது அந்த பார்வை.

வைஷ்ணவி அடம்பிடிப்பது முட்டாள்தனம் என்பதால் அமைதியாக அந்த வண்டியில் ஏறி அமர்ந்தாள். சற்று முன் கண்ணெதிரே உணர்ந்த அந்த கடலின் அழகு இன்னும் இந்த தீவில் என்னென்ன அதிசயங்களையும் அழகையும் ஒளித்து வைத்திருக்கிறது எனத் தேடச் சொல்லியது.

இருவரும் பேசிக்கொள்ளவில்லை அந்த இருசக்கர வாகனம் தன் இயல்பைப் புரியாத இரு இதயங்களை சுமந்துக் கொண்டு சாலையில் செல்லத் தொடங்கியது.

மெலிதாக கோபம் இருவருக்கும், கடலில் நனைந்த ஈரம் ஏனோ உடலில் காய்ந்தே இருந்தாலும் மனதிற்குள் ஈரமாகவே இருந்தது நினைவுகள். அவன் பின் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த வைஷ்ணவி மோதிய காற்றை மெல்ல உள்ளிழுத்து சுவாசப்பைகளை நிரப்புகையில் கசப்பான நினைவுப் பைகள் காலியாகத் தொடங்கியது. அந்த காற்று உடல் முழுவதும் பரவ, ஏதோ ஒன்றிலிருந்து விடுதலை பெற்றது போல் உணர்ந்தாள் வைஷ்ணவி.

எப்போதும் தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டே இருந்த மனிதர்கள் மத்தியில் தான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவள் இல்லை என்பதையும் தான் அறியா உலகம் வேறானது என்பதையும் அந்த பயணமும் அசோக்கின் பார்வைக் கோணங்களும் உணர்த்துவதாக இருந்தது அவளுக்கு.

இதுவரை தன்னைக் கட்டி வைத்திருந்த எதிலும் முதல், திறமை, திறமைக்கான அங்கீகாரம், காதல் காயம் என எல்லா மாயையிலிருந்து மெல்ல மெல்ல விடுபடுவதாக தோன்றியது. இத்தனை நாள் தூக்கி சுமந்த ஒரு பாரம் மெலிதாக இறங்குவது போல இருந்தது.

காதலாகவே இருந்து விட்டுப் போகட்டுமே அவனுடைய நினைவுகளைப் பாரமாகத் தான் சுமக்க வேண்டுமா என்ன? அவள் மீண்டும் சுவாசித்தக் காற்றை வெளியேற்றி தனது கைகளை இருபுறமும் நீட்ட இன்னும் வேகமாக வீசிய காற்று அவளது சிந்தனையை வளரவொட்டாது ‘இயற்கை ஒரு மருந்து’ எனும் ஒரு புள்ளியில் நின்றது. அசோக் தன் புறத்திலிருந்து கண்ணாடி வழியே அவளது முகபாவனைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் ஏதோ ஒன்றை மனதிற்குள் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறாள் மனதளவில் தன்னை வருத்திக் கொள்ளும் ஒருத்தியிடம் கோபத்தைத் தூண்டுவது அவளது இயல்பை வெளிக்கொணரும் என்பதாலேயே அவளைச் சீண்டிக் கொண்டு இருந்தான். ஆனால் அவள் கீழே விழுந்துக் கண்களில் கண்ணீருடன் தன்னை நோக்கிய போது அவளை அதிகமாகவே சீண்டி விட்டதை உணர்ந்தான் அசோக். அதன் பின் அவளிடம் வார்த்தை சீண்டல்கள் எதுவும் செய்யக் கூடாதென முடிவெடுத்தான்.

ஆனால் எலியும் பூனையும் சண்டையிடாது இருந்தால் தானே ஆச்சரியம். இரு வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவரை ஏதோ ஒரு உறவுக்குள் இணைத்து வைத்து ஆடுவது விதியின் அழகிய விளையாட்டு. நீரின் நெருப்பின் குணாதிசயங்கள் கொண்ட இருவரும் இணைவது வார்த்தைகளில் அழகாகத் தோன்றலாம் வாழ்வில் எப்போதும் வலித் தொக்கி நிற்கும் கேள்விக்குறியே.

அசோக் அவளுடன் சண்டை போடக் கூடாது என நினைத்திருந்தாலும் கேலிக்கும் சீண்டல்களுக்கும் சண்டைகளுக்கும் பேர் போனதாகவே இருக்கும் அவர்களது சந்திப்புகள் என மீண்டும் நிரூபித்தது வரவிருக்கும் காலம்.

கீழே இருசக்கர வாகனம் ராதாநகர் கடற்கரைக்குச் செல்ல வழியில் கடைகள் இருந்தது. அங்கே மாம்பழங்கள் விற்கப்பட்டன அதை வாங்கி உண்டுவிட்டு மீண்டும் பயணித்தனர். பின் ராதா நகர் கடற்கரையில் சூரியன் அஸ்தமனத்தை பார்த்துவிட்டு அன்று இரவு தங்கள் விடுதிக்கு வந்தனர். ருசியான அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செம்மீன் நண்டு கோழி என மிக ருசியான அசைவ உணவுகள் இருந்தது. மீன் வகை பிரதான உணவாக எல்லா கடைகளிலும் பரிமாறப்பட்டது.

அசோக் வைஷ்ணவி இருவருமே அமைதியாக இருந்ததை காப்ரியேல் தம்பதியர் கவனிக்கத் தவறவில்லை.

வைஷ்ணவி அன்றிரவு வெகு நாட்களுக்குப் பின் மனதில் எந்த அழுத்தமும் இன்றி ஆழ்ந்து உறங்கினாள். காலையில் அவள் துயில் எழுந்து வரத் தாமதமானதால் அசோக் எதுவும் பேசாது முன்னறையில் அமைதியாக அமர்ந்திருந்தான். மறுநாள் உடன் வந்தவர்கள் அனைவரும் நீல் தீவுக்கு பயணமாகியிருந்தனர். அசோக் அவர்களிடம் தான் பின்பு இணைந்துக் கொள்வதாகக் கூறியிருந்தான்.

அசோக்கின் அமைதி வைஷ்ணவிக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வைஷ்ணவி அனைவரும் கிளம்பி விட்டதை அறிந்து அவசரமாக் கிளம்ப அசோக் அவளை அழைத்துக் கொண்டு கப்பலில் பயணித்து நீல் தீவு வந்தடைய ஒரு மணி நேரம் தாமதமானது. கப்பலில் இருந்து இறங்கி விடுதி செல்ல விடுதியை ஒட்டி கடற்கரை இருந்தது. அங்கே வானுயர்ந்த மரங்கள் இருந்தன. கடற்கரையோரம் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. அந்த தீவின் மிகச் சிறப்பான விஷயம் இயற்கையாக அங்கே உருவான ஒரு பாலம். பாறைகள் தண்ணீர் அரிப்பினால் துளை ஏற்பட்டு அழகாக இதயம் போன்ற ஒரு துளை இடையில் இருக்க மேலே ஒரு பாலம் போன்று நடைப்பாதை இருந்தது.

அதிகாலையில் செல்ல முடியவில்லை என்பதால் கூட்டம் சிறிது குறைவாக இருந்தது. பெரும்பான்மையானோர் சென்று விட அடலின் கேப்ரியல் இன்னும் சிலர் மட்டும் அந்த பாலத்தின் அருகில் நடந்துக் கொண்டு இருந்தனர். வைஷ்ணவி கஷ்டப்பட்டு அந்த இடத்தை அடைந்து இருந்தாள்.

அவள் கடினப் பட்டு நடப்பதைக் கண்டு அசோக்கிற்கு மெலிதான சிரிப்பு எட்டிப் பார்த்தது. ‘கஷ்டமா இருந்தா இங்கேயே இரு என்று சொன்னால் அப்ப என்னால நடக்க முடியாதுனு சொல்லிக் காட்றீயானு சொல்லுவா என்ற பண்றது?’

எதுவும் பேசக் கூடாது என மனதில் மீண்டும் உறுதிக் கொண்டவனாக நடந்துக் கொண்டிருந்தான். கரடுமுரடான பாறையில் நடக்கத் தடுமாறிய வைஷ்ணவி அவனிடம் மட்டும் உதவிக் கேட்கக் கூடாது என உறுதியாக நடக்க பின்னே இருந்து அவள் தடுமாறும் சத்தத்தை அசட்டை செய்தவனாகத் தொடர்ந்து நடந்தான் அசோக்.

சற்று நேரத்தில் மனது பொறுக்காது அவள் புறம் திரும்பிய அசோக் அவளை நோக்கி கைகளை நீட்டினான். அதை ஏற்பதா வேண்டாமா என வைஷ்ணவி திகைத்து நிற்க மறு நொடி நீட்டிய கரத்தை தன்னிடமே திருப்பியவனாக வேகமாக நடந்தான் அசோக். அதன் பின்னர் வைஷ்ணவி ஒரு அளவு தட்டுத் தடுமாறி நடந்து அந்த பாறை உச்சியை அடைய அங்கிருந்து சூரிய ஒளி மிக அழகாக தெரிந்தது. இளமஞ்சள் நிறத்தில் சூரியன் மின்ன அதற்கு கீழே இளம் பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் தண்ணீர் இருக்க அதை ஒட்டி மணல் திட்டு பரப்பு அழகின் கலாரசிகன் இறைவன் என எடுத்தியம்பி நின்றிருந்தது. அவள் அதை ரசித்து விட்டு மெல்ல நடக்க முன்னே கடற்கரையில் காலை உணவு ரெஸ்டாரண்டில் உண்ண அமர்ந்தனர். அசோக் இட்லி சப்பாத்தி சாப்பிட வைஷ்ணவி செம்மீன் மட்டும் வாங்கி வந்தாள். உணவு உண்ணும் போது அசோக்கின் முகத்தில் இறுக்கம் பரவிக் கிடந்தது.

அதன் பின் ஒரு பெரிய கப்பலில் ராஸ் தீவிற்கு பயணம் ஆனார்கள். அசோக் அப்பொழுதும் அவளிடம் இருந்து தனது இருப்பை தூரப்படுத்தவும் இல்லை அதே நேரம் அவளோடு இணைந்து நடக்கவும் இல்லை. அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சற்றே விலகி இருந்தான். ஆனால் தன் கண்ணுக்குள்ளே அவள் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக் கொண்டான்.

வைஷ்ணவி மட்டும் அதை உணர்ந்தாள் இல்லை அவனை வழக்கம் போலவே ஒரு தொல்லையாகவே பாவித்து அவனை எட்டவே வைத்து இருந்தாள். அடலின் அவள் அருகே வந்து நின்றார்.

“என்ன அசோக் கூட சண்டையா?”

அடலின் ஆங்கிலத்தில் கேட்க அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாது சற்று நேரம் அமைதியாக நின்றாள் வைஷ்ணவி. பின் குரலை செருமிக் கொண்டு அவன் தனது நண்பன் மட்டும் தான் என தெளிவுபடுத்தினாள் வைஷ்ணவி. அதைக் கேட்டதும் குரலில் கேலி இழையோடப் பேசினார் அடலின்.

“அவன் உனக்கு என்ன உறவு என்று கேட்கவில்லையே அவனோடு ஏன் சண்டை என்றுதான் கேட்டேன்?”

எனச் சொல்லி மீண்டும் அவளது கண்களை நோக்கிப் பேசினார் அடலின். “நீங்கள் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி என்று அழைப்பதற்கு சரியானவர்கள்?” என்று சொல்லி சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அடலின் சென்ற பின் அசோக்கைத் தேடினாள் வைஷ்ணவி. அவன் எங்கும் இல்லாதிருக்க மனதிற்குள் எழுந்த சிறு ஏமாற்றத்தை கோபத்தில் கரைக்க முயன்றாள்.

‘ரொம்ப அழகான கடற்கரை காட்சி. நல்லா என்ஜாய் பண்ணலாம். அவன் கூட இருந்தா தான் இதெல்லாம் பார்க்கணுமா என்ன? நாம என்ன பேய் இருக்கிற இடத்திற்காக போறோம்? யாராவது கூட இருந்தா நல்லாருக்கும்னு தோணறதுக்கு இல்லை கையை பிடிச்சிட்டு போனால் தான் தெம்பா இருக்கும்னு நினைக்கிறதுக்கு”

வைஷ்ணவி தன் மனதிற்குள் இரு நாட்களுக்கு முன் அறிமுகமான ஒருவனைப் பற்றி இவ்வளவு தீவிரமாக ஏன் சிந்திக்கிறோம் என்ற அடிப்படை கேள்விச் சிந்தனைத் தவிர மற்ற அனைத்தையும் எண்ணினாள். ஆனால் அந்த தீவு இதுவரை அவள் ரசித்த இயற்கை காட்சி போல் இல்லாது அமானுஷ்யத்தை தாங்கி நின்றது தான் அன்றைய நாளின் முத்தாய்ப்பு.

வைஷ்ணவி‌ ஏற்கனவே ஒரு மணி நேரத் தாமதம் என்பதால் பயணிகள் விரைவிலேயே கிளம்ப வைஷ்ணவி உடன் நால்வர் ஐவர் மட்டுமே இருந்தனர். துஃவையல் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வராத நாட்களிலே அந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்தான். பெரும்பான்மையான இடங்களில் அவர்கள் கூட்டத்தை குறைவாகவேக் கண்டனர். முக்கியமாக அவர்களது குழு காலியாக வைஷ்ணவி அந்த கட்டிடங்களைக் கண்டு மெலிதான பயத்தோடு நிற்க அவற்றின் வரலாறு எடுத்துரைக்கப்பட்டது. உண்மையில் அது பிரிட்டிஷ் காவல் அதிகாரி குடும்பங்கள் தங்கியிருந்த‌ தீவு ஆகும். அருகே இந்திய கைதிகளைக் பெருங்கொடுமைக்கு ஆளாக்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள் அன்பையும் மன்னிப்பையும் மனிதநேயத்தையும் போதித் ஏசுநாதரிடம் அப்படி என்ன மன்றாடியிருப்பார்கள் எனப் பெரும் கேள்வி நின்றது ஆலயம். உயிரில்லாத கூடு போல் எலும்புகள் தெரிவதாக இருந்தது அந்த சுவற்றில் ஊடுருவி நின்றன ஓங்கி வளர்ந்த மரத்தின் வேர்கள். காலத்தின் காயத்தில் மிகவும் உருவிழந்து வரலாற்றின் சாட்சியாக நின்று கொண்டிருந்தது இந்திய சுதந்திர தியாகிகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று குவித்த இரக்கமற்ற மனசுக்காரர்களைத் தூக்கி சுமந்ததற்காக வெட்கி நின்றது அந்த தீவு.

வானுயர்ந்த மரங்களும் முக்கியமாக சுவர்களுக்கு உள்ளே நரம்புகள் போல் படர்ந்த மரங்களின் வேர்களும் ஒருவித அச்சத்தை தோற்றுவித்துக் கொண்டே இருந்தது ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி என்பதால் மிக விரைவாக அனைவரும் சென்றிருக்க ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி தனித்துவிடப்பட்டாள். ஒரு சுவற்றில் உருவம் தெரிவது போல் தோன்ற இந்த மாதிரி தனித்த தீவில் ஈவு இரக்கமற்ற அந்த ஆத்மாக்கள் இந்த சுவர்களில் தெரியுமோ?! அவள் அருகே செல்ல சுவற்றின் பின்னிருந்த செடிகளில் அவளது உருவம்‌ பார்வைக்கு மறைந்தது. வைஷ்ணவி கூரிய விழிகளில் மரத்தின் வேர்கள் கோர முகம் போல் காட்சியளிக்க அவளது சிந்தனை கண நேரத்தில் பேய்களைப் பற்றிய பெரும் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்தது.‌ அச்ச உணர்வில் மனித உணர்வு செய்யும் அனிச்சை செயலாகச் சட்டென தான் தனித்து விடப்படவில்லை என உறுதி செய்யத் திரும்பினாள் வைஷ்ணவி. அவள் தனித்து தான் விடப்பட்டிருந்தாள். மெல்ல அவளது இதயத்துடிப்பு எகிறும் சத்தம் கேட்க அந்த சுவற்றின் பின்னே மிக கோரமாக ஒரு அமானுஷ்யக் குரல் ஒலிக்க வைஷ்ணவி வீர் எனக் கத்தியவள் குரல் வந்த திசை நோக்க அங்கே அசோக்கின் பிம்பம் தெரிய அதைத் தொடர்ந்து கலகலவென கேலிச் சிரிப்பொலியும்‌ கேட்டது. வைஷ்ணவி அவனிருக்கும் திசை நோக்கி ஓடிச் சென்றவள் அவனது கன்னத்தில் பளார் என அறைந்தாள்.

அசோக் ஒரு நொடி அவளை எரிக்கும் கண்களில் பார்க்க அமெரிக்க இளைஞன் ஸ்டான் ஓடி வந்தான். தான் பென்னியைப் பயப்படுத்த நினைத்ததில் மரத்திற்கு பின் நின்றிருந்த வைஷ்ணவியைக் கவனிக்கவில்லை என கூற தான் நின்றிருந்த இடத்தில் இருந்த புதருக்குப் பின்னே பென்னி நிற்பதைக் கண்டாள் வைஷ்ணவி. அவளின் சத்தம் கேட்டு அவளைக் காப்பாற்ற வந்த அசோக்கின் கன்னங்கள் அடியின் தாக்கத்தை விட சினத்தின் தாக்கத்தில் அதிகம் சிவந்திருந்தது.

கவிதை

என் காயங்களின் முகவரி

நம் காதல்

என் கண்ணீரின் முதல் துளி

உன் முத்தத்தின் ஈரம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!