Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

Epilogue பொழியும் மேகம்!…

Epilogue

பொழியும் மேகம்!…

      நிரஞ்சன் சந்தோஷமாக தனது தாம்பத்திய வாழ்க்கையை தொடங்கலாம் என்று டாக்டர் அறிவுறுத்திய பின்.. அவனை கையில் பிடிக்க முடியவில்லை. நர்மதா தான்,

 “என்னங்க இது? ஏதோ பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையான்டானாம்.. அந்த மாதிரி இருக்கு…” என்றவள்,



Advertisement

  “வயசுக்கு தக்க நடங்க…” லேசான சடவுடன் மனைவி சொல்ல,

   “ரொமான்ஸ்க்கு ஏது வயசு? புருசன் தன் பொண்டாட்டிய இந்த வயசுல தான் ரசிக்கன்னு ஏதாவது இருக்கா என்ன?.. ஆசைக்கு அணையும் இல்ல, வயசும் இல்ல நர்மதா…” கேலியாக நிரஞ்சன் சொல்ல..

  “அதுக்காக இது என்ன புதுசா கல்யாணம் ஆன மாதிரி. நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாதாக்கும்…”

Advertisement

 “தெரியாம என்ன… எம் பொண்டாட்டிய எனக்கு நல்லாவே தெரியும். அப்படி தெரிஞ்சதால தான் நீ ரெண்டு பிள்ளைக்கு அம்மா ஆனா…”

Advertisement

“தெரியுது தான.. அப்பறம் என்ன கொண்டாட்டம். காலையில இருந்து பாட்டு, ஆட்டம், தாங்க முடியல. கொஞ்சம் ஓவர் தான்…”

 “எல்லாம் தெரிஞ்சாலும் புதுசு புதுசா கத்துகிற ஃபீல் தான் தாம்பத்தியம். எனக்கு ரொம்ப எக்சைட்மென்ட்டா இருக்கு நர்மதா…”

  “இப்படி எல்லாம் பேசாதீங்க நிரஞ்சன். எனக்கு என்னவோ ஒரு மாதிரி.. எப்படி சொல்ல சங்கோஜமா இருக்கு.. கல்யாணம் ஆன புதுசுல நிறைய பேசுவீங்க. அப்ப ஓகே.. நடுத்தர வயசுல நிறைய பொறுப்ப சுமந்துட்டு ஓட்டிட்டு இருக்கோம். இப்போ எப்படி?…”

Advertisement

  “அதாவது, முன்ன எல்லாம் எல்லாம் நமக்கு ஃப்ரீ டைம் பார்த்து, லீவ் பார்த்து, குழந்தைக பக்கத்துல இல்லாம இருந்தா.. அது ஒரு நிகழ்வா போயிடும். ஆசை, எதிர்பார்ப்பு, ஒருத்தருக்கு ஒருத்தர் பக்கத்துல இருக்கும்போது இருக்கிற ஒரு நெருக்கம், உங்க கையணைப்புக்குள்ள உங்க வாசத்தை உணர்ந்துட்டு உறங்குற உறக்கம், உங்க ஷார்ட்ட நான் போட்டு பார்க்கிறது, என் சேலையை போர்திட்டு நீங்க தூங்குறது, அப்பப்ப கொடுக்குற முத்தம் சொல்ற ஐ லவ் யூன்ற வார்த்தை எல்லாம் எப்போ ரெண்டு பிள்ளைக்கு அப்பா, அம்மா ஆனோமோ அன்னைக்கே போயிருச்சு…”

  “முப்பது வயசு தொட்டதும் தன்னால ஒரு பொறுப்பு வந்துருது. எதிர்காலத்தை பத்தின பயம் வந்துருது. நிறைய சேர்த்து வச்சா நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமோன்னு ஒரு எண்ணம். ஒரு மாதிரி ஓடிப் போச்சு. இப்போ திரும்பி பார்க்கும் போது என்னடா இது நிறைய மிஸ் பண்ணிருக்கோம் அப்படின்னு தோணுது…” என்று நர்மதா சொல்ல,

  “உண்மை தான் நம்மு.. உன் போட்டோ பார்த்து ஆசைப்பட்டு கட்டிக்கிட்டது நான் தான்.. எனக்கு வேற மாதிரி காலம் ஓடிப் போச்சு… கல்யாண வாழ்க்கையில் இதுவும் ஒன்னு அப்படின்னு ஃபீல் ஆகிப்போச்சு நாள் போகப் போக…”

   “நான் உண்மையா ஒரு விசயம் சொல்லவா நர்மதா. என் வாழ்க்கையில எனக்கு கிடைச்ச கஷ்டத்தை நினைச்சு, நான் இப்ப சந்தோஷப்படுறேன். அந்த கடவுள் எனக்கு ஒரு அடி போடலைன்னு வச்சுக்கவே, நான் எல்லாம் திருந்தவே மாட்டேன். வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி வந்துட்டே இருக்கும்போது நம்ம யோசிக்கிறது, செய்யிறதெல்லாம் சரின்னு நமக்கே தோணும். எங்கேயாவது அடிபட்டு நின்னாத்தான்.. எதுக்கு அடிபட்டுச்சு, நம்ம என்ன தப்பு பண்ணிட்டோம்னு நம்மள நாமே திரும்பி பார்ப்போம்…”

“நான் உணர்ந்து ஒன்னு சொல்லுவேன் நர்மதா. நமக்கு மேல ஒருத்தர் இருக்காரு.. நீ போற பாதை தப்பு, அப்படின்னு நமக்கு சொல்லும் போதே நம்ம திருந்திடனும். அப்படி இல்லையா லேசா ஒரு அடி படும்போதே மாறிடனும். அதுவும் இல்லாம நம்மள நாம உணராமல் இருந்தோம்னா காலம் நமக்கு உணர்த்தும். ஆனா, விளைவு மோசமா இருக்கும். எனக்கு திரும்ப கொடுத்த ஒரு வாய்ப்பை, நான் சரியா பயன்படுத்தணும். ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை எனக்கு வேணாம். ஆக்கபூர்வமான, உணர்வுபூர்வமான, சந்தோஷமான, ஒரு வாழ்க்கையை என் மனைவி கூட நான் வாழனும்…” உணர்ந்து சொன்னான் நிரஞ்சன்.

    “ நானும் மாறனும் தாங்க.. நிறைய யோசிக்கிறதை குறைக்கணும். நாம போற வழி சரியா இருந்தா.. அடுத்தடுத்து முன்னேற கடவுளே வழிகாட்டுவார். எதுக்கு யாரையும் பார்த்து நிறைய யோசிக்கணும். நீங்க சொன்ன மாதிரி நமக்கு, நம்ம பிள்ளைகளுக்கு சேர்த்து வச்சா போதும்.. அப்படி இல்லையா சேர்த்து வைக்கிற அளவுக்கு அவங்களை உயர்த்தி விட்டா போதும்.. அவங்க வாழ்க்கை அவங்க பார்க்கட்டும்.. நம்மளோட விருப்பத்தை நம்ம பிள்ளைகள் மேல திணிக்க கூடாது. அதே மாதிரி அவங்களோட ஓட்டத்தையும் நம்ம ஓடவும் கூடாது. பிள்ளைகளுக்கு நிறைய சேர்த்து வைக்கணும்னு சொல்லி நிகழ் காலத்தில இருக்கிற நம்ம வாழ்க்கையை நாம தொலைக்க கூடாது…” நர்மதாவும் தன் பக்க தவறை உணர்ந்து சொல்ல..

    ஒரு மாதிரி இருவருக்கும் நிறைவாக இருந்தது. அடிக்கடி சண்டை வாக்குவாதம் என்றெல்லாம் இல்லாமல் எதிர்காலத்தைப் பற்றி மன நிறைவாக பேசுவதே ஒரு ஆறுதலாக இருந்தது. சரிதான் மனதில் அன்பு இருக்கும் பொழுது எண்ணங்கள் கூட ஒரே அலை வரிசையில் நிற்கத தொடங்கியது.

   நிரஞ்சன் ஆறு மணியிலிருந்து மனைவி பின்னே சுத்த நர்மதா முறைக்க ஆரம்பித்து விட்டாள். அவளுக்கும் ஒரு ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் இருக்குதான். அதற்காக புது மாப்பிள்ளை போல் துள்ளிக் கொண்டு திரியும் கணவனை பார்க்கையில்.. ரெண்டு பிள்ளைகள் இருக்க என்ன இது? என்றுதான் தோன்றியது.

      புது பெட் சீட், ரூம் ஸ்பிரே என்று நிரஞ்சன் எடுத்து வைக்க,

  “ஓவர் அலட்டல் தான்…” முனங்கி கொண்டாள் நர்மதா.

 “ உனக்கும் ஆசை இருக்கு.. ஆனால் ரொம்ப ஹெட் வெய்ட்டா மெயின்டைன் பண்ற நர்மதா…”

    “இது என்ன கூத்தா இருக்கு.. புருஷன் மேல பொண்டாட்டிக்கு ஆசை இருக்காதா?…”

  “அப்ப என் மேல உனக்கு ஆசை இருக்கு?…”

  “இதுக்கு நான் பதில் சொல்லனுமா?..”

  “சொல்லேன். நீ எல்லாம் அடிக்கடி பாராட்டவே மாட்ட… லேசா தொப்பை வைத்து, காதோரம் நரைச்சு போச்சு. ரெண்டு வார்த்தை சொன்னா எனக்கும் குளுகுளுன்னு இருக்கும். மொத எல்லாம் எனக்கு அடிக்கடி முத்தம் கிடைக்கும். இப்ப எல்லாம் கண்டுக்கறதில்லை…”

“அப்ப எல்லாம் நீங்களும் பின்னாடி வந்து என்னை தூக்குவீங்க.. கொஞ்சம் ஷாக் சர்ப்ரைஸா இருக்கும். அதனால ஒரு ஆசையில முத்தம் கொடுப்பேன்…”

  “ஓ.. நான் உன்னை தூக்கணும்ன்னு நீ ஆசைப்பட்டாயா?.. இப்ப தூக்கினால் எனக்கு அதே மாதிரி முத்தம் கிடைக்குமா?…”

 “ எது என்னத்தையாவது பேசாதீங்க…” என்று நகர்ந்தாள் நர்மதா.

    ரொம்ப வெயிட் என்று இல்லாவிட்டாலும், நர்மதா இரு பிள்ளைகளை பெற்றவள். அந்த உடம்பு இருக்கும்.. வேகமாக வந்த நிரஞ்சன் பட்டென்று நர்மதாவை தூக்க…

 “ என்ன பண்றீங்க, இறக்கி விடுங்க. நீங்க வெயிட் தூக்க கூடாது…”

 “நீ அவ்வளவு ஒன்னும் வெய்ட் இல்ல லேசா தான் கூடியிருக்க…” இறக்கி விடாமலே நிரஞ்சன் பேச,

   இறங்க முயன்றாள் நர்மதா. “நீதான் சொன்ன?.. தூக்குனா, முத்தம் கொடுப்பேன்னு.. அப்ப கொடு..” என்று நிரஞ்சன் கன்னத்தை காட்ட.

  “முதல்ல என்னை இறக்கி விடுங்க…”

“ஒரு அஞ்சு, பத்து முத்தமாவது கொடு நான் விட்டுவிடுறேன்…”

 ஐயோ என்று நர்மதா தலையில் அடிக்க,

  விஜயாவும் பிருந்தாவும் கதவைத் திறந்து கொண்டு “நர்மதா” என்று உள்ளே வந்தார்கள்.

தம்பதிகள் நின்ற நிலைப்பார்த்து விஜயா திரும்பிக் கொள்ள, பிருந்தாவுக்கு சிரிப்பு வந்தது… பட்டென்று மனைவியை விட்ட நிரஞ்சன்,

 “ வாங்க அத்தை, வாங்க பிருந்தா.. நர்மதா என்னன்னு பாரு…” என் வீட்டு ஆளாக வரவேற்று உள்ளே சென்று விட்டான்.

 ஒரு சங்கட சிரிப்போடு நர்மதா வரவேற்று பேச.. அவளை மேலும் சங்கடப்படுத்தாமல் சாதாரணமாக பேசினார் விஜயா.

 “என்னம்மா திடீர்னு வந்து இருக்க… நீங்க வர்றது எனக்கு தெரியவே தெரியாது..”

 “வீட்ல பல்லி சத்தம் போட்டுட்டே இருந்துச்சு. என்னவோ மனசுக்கு சங்கட்டும். ஓர் எட்டு வந்து உங்களை பார்த்துட்டு வந்தா தான் நிம்மதி, அதான் வந்துட்டேன். பெரிய மாப்பிள்ளைக்கு சொன்னேன். அவரே டிக்கெட் போட்டு கொடுத்தாரு…” என்றவர், வாங்கி வந்தவற்றை எடுத்து வைக்க.

  நர்மதா உள்ளே எடுத்து வைத்தாள். எல்லாம் அவங்க அப்பா கொண்டு வந்த மாதிரியே இருக்க, லேசாக கண் கலங்கியது மகளுக்கு…

  “அப்பாவும் இப்படித்தான் எங்களுக்கு எடுத்துட்டு வருவாரு ம்மா…”

 “ஆமா, உங்க அப்பா தான் உன் ஒவ்வொன்னும் பார்த்தாராக்கும்.. நான் தான் கொடுத்து விடுவேன். நான் பெத்து வளர்க்காமல் தான், நீங்க உங்க அப்பாவுக்கு மகளாக வந்தீங்க… நான் எம்புட்டு பாத்தாலும் உங்க அப்பா தான் உங்களுக்கு உசத்தி..” சடவு போல் சொல்லிக் கொண்டார்.

  பெரிய இழப்பு என்றாலும் பெற்றவரை நினைத்து மகள் கண்கலங்கவும், அதை மாற்ற ஒரு சடவாக பேசினார் விஜயா. தங்களுக்கு அப்பா இல்லை என்ற ஒரு நினைப்பு மகள்களுக்கு வந்து விடக்கூடாது என்று தானே வயதான காலத்தில் ஓடி வந்தது. கணவரிடத்திலிருந்து பிள்ளைகளை கூட்டிச் சேர்க்கும் கடமை இவருக்கு உள்ளதே…

    நர்மதா நன்றாக கவனித்தாள். அவளுக்கு தாயை சில நாட்கள் தன்னோடு வைத்துக் கொள்ள ஆசை. இரவு உணவை முடித்துக் கொண்டு விஜயா பெரிய மகளோடு கிளம்ப,

  “ஏம்மா அக்கா வீட்லதான் இருப்பியா? எங்க வீட்ல எல்லாம் இருக்க மாட்டீங்களா?…”

 “அப்படி இல்லடா நர்மதா…” என்றவருக்கு மகளுக்கு எப்படி புரிய வைக்க என்று தெரியவில்லை. விநாயகம் என்றால் ஒரு வகையில் சொந்தம். முன்பிருந்தே தெரிந்தவன் என்பதால் அங்கு தங்க சங்கடம் இல்லை. ஆனால் நர்மதா வீட்டில், கணவன் உடன் இருந்த காலத்திலேயே மகள் வீடு என்று போய் ஒரு நாள் கூட இருந்ததில்லை. இன்று அவர் இல்லாத போது எப்படி தங்க?…

 நிரஞ்சன் தான், “ஆமா அத்தை. நர்மதா சொல்ற மாதிரி எங்க வீட்ல கொஞ்ச நாள் இருங்க.. மதுரையில அங்க தனியாவே இருக்கணுமா என்ன?.. உங்களுக்கு மூணு பிள்ளை இருக்காங்க. மூணு பேர் வீட்டுக்கும் போய் வாங்க.. மாமா இப்ப இல்ல, அடுத்து வீட்டுக்கு பெரியவங்கன்னு நீங்க தான் இருக்கீங்க.. எங்களுக்கு நல்லது சொல்லி வழி காட்டுங்க, தள்ளி நிக்காதீங்க அத்தை” என்று மருமகன் சொல்லவும்,

  ஒரு மாதிரி நிறைவாக உணர்ந்தார் விஜயா. மருமகன் இவ்வளவு சொல்ல, சின்ன மகள் வீட்டில் தங்க விஜயா சம்மதித்தார்.

 “ நர்மதா இந்தா மல்லிகைப்பூ நம்ம ஊர்ல இருந்து கொண்டு வந்தேன்…”

“என்ன!…”

“பிளைட்ல தான் வந்தேன். உங்க ரெண்டு பேருக்கும் நம்ம ஊரு பூ புடிக்கும் இல்ல, அதான் எடுத்துட்டு வந்தேன்…” என்றவர் மகளைப் பின் திருப்பி தலை நிறைய வைத்து விட்டார்.

 குடும்பத்தில் சண்டை, பிரச்சனை என்று பஞ்சாயத்து வரை போய் வந்தாயிற்று.. கணவனோடு சேர்ந்து வாழட்டும் என்று விட்டாலும், மகள் எப்படி இருக்கிறாளோ என்ற கவலையும் ஒரு பக்கம் இருந்தது. கல்யாணம் ஆன புதிதில் நீ சந்தோஷமாக இருக்கிறாயா என்று மகளிடம் கேட்பது போல, நடுத்தர வயதில் கேட்க முடியவில்லை. என்னவோ ஒரு சங்கடம். ரெண்டு பிள்ளைகள் பெற்று பத்து வருடத்திற்கு மேலான பின் உன் கணவனோடு சந்தோஷமாக இருக்கிறாயா என்று மகளிடம் எப்படி கேட்பது?.

   ஆனால், மகள் எப்படி இருக்கிறாள் என்று நினைப்பிருக்க… இந்த வயதிலும் மகளை தூக்கி வைத்து நிற்கும் மருமகனை பார்க்கையில் நிறைவாக இருந்தது. மகள் எப்படி வாழ்கிறாள் என்று சொல்லாமலே புரிந்தது.

      காட்டன் சேலையும், தலை நிறைய பூவோடு இருக்கும் மனைவியை பார்த்து நிரஞ்சனனின் பார்வை கணவனின் பார்வையாக மாற… நர்மதா தாயை கண்காட்டி முறைத்தாள்.

  இருவரின் முக பாவனைகளை பார்த்த விஜயா. வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல், அன்றிரவு உறங்கும் போது,

  “நர்மதா பிள்ளைக என்கூட தூங்கட்டும். நானும் தனியா இருக்கேன். எப்பவாது தான் வாரேன். அவங்க அம்மாச்சி கூட இருக்கட்டும்…” என்று பேத்திகளை தன்னோடு உறங்க வைத்துக் கொண்டவர்,

  “அங்க டேபிள்ல பால் வச்சிருக்கேன். எடுத்துட்டு போ நர்மதா…” என்று அம்மா சொல்லவும்,

 “அம்மா” என்று சங்கடமாக ஒரு சத்தம் போட்டாள்.

  தனியாக அறைக்கு வந்த மனைவியை பார்த்த நிரஞ்சன்,

 “மாமியார் வாழ்க…” என்று சிரிப்போடு சொல்ல,

  “பேச்சை பாரு.. அரை கிழவன் ஆகியாச்சு. இன்னும் ஆசை போகல…”

  “இன்னைக்கு இந்த அரை கிழவன் பெர்பார்மன்ஸ் பாருடி…”

“ நிரஞ்சன் ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க.. எனக்கு என்னவோ ஒரு மாதிரி சங்கடமா, தயக்கமா, வெட்கமா இருக்கு…”

 “இந்த வயசுல எனக்கு ஆசை வந்தா தப்பு. உனக்கு வெட்கம் மட்டும் வரலாமா…” என்று மனைவியை இழுத்து அணைக்க,

 அவளால் நிரஞ்சன் முகம் பார்க்க முடியவில்லை. நீங்கதான் அலையிறிங்க, எனக்கு ஒன்னும் அப்படி இல்ல என்பது போல் காட்டிக் கொண்டாலும், கணவன் தன்னை சுற்றி வருவதும், தன்னைத் தாங்கி, கொஞ்சி, கெஞ்சி எடுத்துக் கொள்வதும் பிடித்து இருந்தது. கணவன் தன்னை தாங்குவதை மனம் எதிர்பார்க்கவும் செய்தது. இவளும் கொஞ்சம் பிகு பண்ணி, கணவனோடு மிக இணக்கமாக நடந்து கொண்டாள். எத்தனை வயதிலும் அவரவர் வாழ்க்கைத் துணை அவரவர்களுக்கு ராஜா, ராணி தான்.

  மகள் வீட்டில் இருக்கும் வரை அவளுக்கு உதவியாக இருக்கும் வேண்டுமென்று காலையில் சீக்கிரமாக எழுந்து விஜயா வெளியே வர, நிரஞ்சன் அப்போதுதான் டீ போட்டுக் கொண்டு இருந்தான்.

 சமையல் கட்டில் மருமகனை பார்த்து மாமியார் திகைத்துப் போய் நிற்க.. அவரை சாதாரணமாக எதிர்கொண்டவன்,

  “நர்மதா இனிதான் எழுந்து வருவ அத்தை. இந்தாங்க உங்களுக்கு டீ..” என்று கொடுத்துவிட்டு, தனக்குரியதை எடுத்துக்கொண்டு பால்கனிப்பக்கம் சென்றான்.

 அடுத்து வந்த நர்மதா, தனக்கான டீயை எடுத்துக்கொண்டு அம்மா அருகில் வர,

  “என்னடி இது மருமகன் டீ போடுறாரு…”

“ஒன்னு ரெண்டு நான் சொன்னேன். நீங்க போடுற டீ ரொம்ப நல்லா இருக்கு, எனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு… அன்னைக்கு இருந்து எனக்கு முன்னாடியே எந்திரிச்சு டீ போட்டு வச்சிருவாரு. எனக்கும் அப்படியே பழகிருச்சு ம்மா.. இனி சுறுசுறுப்பாக அடுத்து வேலையை பார்ப்பேன்…” என்று நர்மதா எழுந்து கொள்ள,

  உள்ளே வந்த நிரஞ்சன் மனைவியிடம் மெல்லிய குரலில் நர்மதா உங்க அம்மா என்ன சாப்பிடுவாங்க… மீன் எடுத்துட்டு வரவா? காய் எதுவும் வேணுமா? வேற எதுவும் வீட்டுக்கு தேவையா?…

மகள் முகம் பார்த்து நிற்கும் மருமகனை அதிசயமாக பார்த்தார் விஜயா.

“ மீன் வேணாம். மட்டன் இருந்தா எடுத்துட்டு வாங்க.. கொஞ்சம் ஈரல் சேர்த்து எடுத்துட்டு வாங்க. கோஸ் வாங்கிட்டு வாங்க. எங்க அம்மாவுக்கு அசைவம் சாப்பிட்டாலும் காய் கொஞ்சம் எடுத்துக்கணும்…” என்று சொல்லி அனுப்ப,

   “நர்மதா, எங்க சின்ன மருமகனா இது?…”

  “நீங்க, அவர் கிட்ட தள்ளியே நிக்கிறீங்க. அப்புறம் எப்படி அவர் குணம் தெரியும். போய் உங்க பேத்திகளை ரெடி பண்ணுங்க. நான் சமையல் வேலையை பாக்குறேன்…”

     மகள் ஆசையாக தாய்க்கு எல்லாம் செய்ய, ஒரு மாதிரி நிறைவான மனநிலை விஜயாவுக்கு… மூன்று பிள்ளைகள் என்று வந்தபின், தனக்கு விருப்பமான உணவு என்றெல்லாம் மறந்து போய் பிள்ளைகள் என்று அவர்கள் பின்னோடே ஓடிக் கொண்டிருந்தவர்கள். இன்று எங்க அம்மாவுக்கு இது பிடிக்கும் என்று மகள் செய்வதை பார்க்கும் பொழுது, கணவன் சென்ற பின் நாம் தனியோ என்று இருந்த பயம் நீங்கியது. தாங்கிப் பிடிக்க பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்தது.

  விஜயா மருமகன் முன்னால் சாப்பிட சங்கடப்பட, வீட்டுக்குள்ளே வரும்போது எழுந்து நிற்க, டீ கொடுத்தால் அறைக்குள் எழுந்து போக என்று தள்ளியே இருப்பதை பார்த்த நிரஞ்சன்,

  “அத்தை, நான் என்ன மிலிட்டரி ஆபீஸரா? ஒரு நாளைக்கு என்னை பார்த்து எத்தனை தடவை எழுந்து நிப்பீங்க… மாமா சொல்லுவாரு மருமகன்னாலும், நீங்க எனக்கு மகன்தான்னு.. உங்க மகன் மாதிரி பாருங்க…” என்றவன்,

  “நீங்க இங்க இருக்கிறது எங்களுக்கு எவ்வளவு உதவியா இருக்கு தெரியுமா?.. பிள்ளைகளை நீங்க பார்த்துக்கிறீங்க நாங்க எந்த டென்ஷனும் இல்லாம இருக்கோம். ரெண்டு பேருமே வேலைக்கு போறோம். நீங்க வீட்ல இருக்குறது எங்களுக்கு அவ்வளவு நிறைவா இருக்கு. தயவு செஞ்சு விருந்தாளி மாதிரி ஒதுங்கி நிக்காதீங்க. இது உங்க மக வீடு…” என்று நிரஞ்சன் சொல்லவும்,

  விஜயாவுக்கு கண்கள் கலங்கியது. கணவர் சென்ற பின் மருமகளுடன் வந்த பிணக்கு விஜயாவை ஒரு மாதிரி தாக்கியது. தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறோமோ என்று… என்னதான் நர்மதா அம்மாவை உடன் வைத்து பார்த்துக் கொள்ள ஆசையாக இருந்தாலும் விஜயாவுக்கு, சுசிலாவை நினைத்து பயம் தான்.

   மகன் வீடு என்பது வேறு, மகள் வீடு என்பது வேறல்லவா… மாமியார் உடன் இருப்பது தங்களுக்காகத்தான், தங்களுக்கு உதவியாக இருக்க தான் என்று நினைப்பது வேறு…

  மாமியாருக்கு யாருமில்லை. அவர்களை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை கொடுப்பது வேறு… நிரஞ்சனின் பேச்சு உண்மையில் விஜயாவுக்கு ஒரு நிறைவு. நாம் ஒன்றும் மகளுக்கு பாரமாக இல்லை என்ற நிம்மதி.

  அடுத்த கொஞ்ச நாளில் விஜயா, பிருந்தா வீட்டுக்கு சென்று விட்டார். அவளும் வேலைக்கு போகும் பெண் தான். அவளும் ரெண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட, அந்த மகளுக்கு உதவி செய்ய கிளம்பிவிட்டார். பிருந்தா கூட சொன்னாள்,

 “சின்ன மருமகனே ஆகாதுன்னுவீங்க.. இப்ப எல்லாம் உங்களுக்கு சின்ன மருமகன் புராணம் தான்…”

“போடி, கிட்ட நின்று பார்க்கும்போது தான் தெரியுது உண்மையாவே மருமகன் ரொம்ப நல்லவரு.. உங்க அப்பா ஒரு முடிவு எடுத்து செஞ்சா, அது சரியா தான் இருக்கும்னு, அவர் இல்லாத காலத்திலும் புரியுது பாரேன்…” ஒரு நாளில் கணவரைப் பற்றி சில வார்த்தைகளாக வெளியே வந்து விடும்.

   செழியன் தனி குடுத்தனம் என்றெல்லாம் செல்லவில்லை. அங்கு தாயோடு ஒன்றாகத்தான் இருக்கிறான். விஜயா தான் மருமகளோடு ஒரு பிணக்கு வந்தபின், அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்து, தள்ளி நின்று கொண்டார். இனி அவர்களும் தலையெடுத்து குடும்பத்தை பார்க்கட்டும்.. மகள்களோடு கொஞ்ச நாள் இருப்போம் என்று தான் வந்து விட்டார்.

  இப்போது இதுவே அவருக்கு செட் ஆகிவிட்டது. இங்கு வந்து இரு மகள்களும் வேலைக்கும் போய்க்கொண்டு வீட்டையும் பார்க்க சிரமப்பட்டு கொண்டு இருக்க, தனியாக இருக்க ஆசைப்படும் மருமகளோடு மல்லு கட்டுவதை விட, பிள்ளைகளை பார்க்க சிரமப்படும் மகள்களுக்கு துணையாக இருக்கலாம் அல்லவா…

  விஜயா பெரிய மகள் வீட்டுக்கு சென்ற பின் சுசிலா தன் மகன் வீட்டுக்கு வந்து விடுவார், எனக்கும் உரிமை இருக்கு என்று… எப்பவும் போல நர்மதா அரவணைத்து சென்று விடுவாள். வித்தியா பட்டென்று முகத்துக்கு நேர திரும்ப கொடுத்து விடும் ஆள் என்பதால் ரொம்பவும் மருமகளிடம் வைத்துக் கொள்ள முடியாது. நர்மதா எப்பவும் ஒரே மாதிரி இருந்தாலும், நிரஞ்சன் மாறி மனைவியை விட்டுக் கொடுக்க மாட்டான். அதனால், நர்மதாவுக்கு பெரிதாக சிரமம் என்றெல்லாம் இல்லை.

  யார் வந்தாலும் போனாலும் தம்பதிகள் அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள் நிம்மதியாக…

   மாமியார் ஒரேடியாக மகள்கள் பக்கம் போய் விடுவாரோ என்று நினைத்து சுபா கொஞ்சம் தன் நாத்தனார்களோடு இணக்கம் காட்டினாள். அன்று நீ அவ்வளவு பேசினாய் என்று வேறுபாடு பார்க்காமல், அரவணைத்துக் கொண்டாள் நர்மதா. வித்யா ஓடும் பேச்சு வார்த்தை இருக்க, உண்மையில் நிரஞ்சனுக்கு தான் ஆச்சரியம். அதை அப்படியே மனைவியிடம் கேட்கவும் செய்தான்.

  லேசாக சிரித்தவள், “உங்களுக்கு நம்ம பூமியை பத்தி ஒன்னு தெரியுமா?… பூமி தன்னை சுத்தி ஒரு ஈர்ப்பு விசையை வச்சு இருக்கு. அது தனக்குள்ள இருக்கிற பொருட்களை ஈர்த்துக்கும். தன்னை விட்டு தள்ளி நிற்கிற பொருட்களை ஈர்க்காது, விலக்கும். ஒருவேளை அது தன்னை தாண்டி நிக்கிற மத்த பொருட்களை ஈர்த்தா என்ன ஆகும். எல்லாம் வெடித்து சிதறும்.. உறவுகளும் அப்படித்தான். தள்ளி நிற்கிற உறவுகளை இழுத்து புடிச்சா, வெடிச்சு பிரச்சனை தான் வரும்…”

 “நானும் அப்படித்தான் என்னை ஒட்டி நிக்கிற உறவுகளை நானும் ஒட்டி நிக்கிறேன். அப்படி வேணாம், நீங்க தள்ளியே நில்லுங்க… நாம ஒரு லிமிட்குள்ளயே இருப்போம். அப்படி சொல்ற உறவுகளை அந்த லிமிட்லயே நானும் வச்சுப்பேன். ஒரே குடும்பம் சொந்தம்னு ஆகியாச்சு அட்லீஸ்ட் எப்பவாவது விசேஷம் கோவில்ன்னு பார்க்கும்போது முகத்தை திருப்பாமாவது போகலாம் இல்ல. இவங்க எல்லாம் யாரு உங்க சொந்த அண்ணே, என் கூட பிறந்த தம்பி எப்படி விட முடியும். நீ எனக்கு ஒட்டி நிக்காட்டியும் பரவாயில்லை, எதிரியா நிக்காத, அவ்வளவுதான்…”

 ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு…

  இன்று நிரஞ்சன், நர்மதா தம்பதிகளின் புது வீட்டு கிரகப்பிரவேசம்… எத்தனையோ பார்த்து கடந்து வந்தாச்சு. இவர்களின் பெரிய மகள் பெரிய பெண்ணாகவே ஆகி விட்டாள். நிறைய யோசித்து, சேமித்து தான் ஒரு முழு வீட்டை தங்களுக்கு என்று கட்டிக் கொண்டார்கள்.

  நிரஞ்சன் முன் வைத்தது தன் பெற்றோர்களையும் மாமியாரையும் தான். வீட்டிற்கு பெரியவர்கள், அவர்களை விட்டு விடக்கூடாது. யாரோடும் பிணக்கு சண்டை என்றெல்லாம் இல்லாமல் எல்லா உறவுகளுமே வந்து நின்றார்கள்.

 வித்யா வீட்டை ஆச்சரியமாக பார்த்தாலும், ஐந்து வருஷத்துக்கு முன்பே நான் பெரிய வீட்டை கட்டி விட்டேன் என்று நினைத்துக் கொண்டாள். வித்யா தள்ளி நின்றாலும் முகுந்தன் தம்பியை ஒட்டியே நின்றான். நிரஞ்சனின் பாதி வேலைகளை பார்த்தது அவன்தான். மனைவி சொன்ன வார்த்தையின் புரிதல் கணவனுக்கு நன்றாக விளங்கியது. ஏனென்றால் விஜயா எல்லாம் செய்தாலும் தாய்மாமன் முறையில் முன் நின்றது செழியன் தான். எவ்வளவு நேர்த்தியான அமைப்பு கொண்டது உறவு முறை…

  வண்ண விளக்குகளால் வீடு மிளிர, தங்களின் சொந்த வீட்டுக் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில்.. தம்பதிகள் வீட்டையே ஆசையாக பார்த்துக் கொண்டார்கள்.

  “உண்மையா இது எல்லாம் உன்னால தான் சாத்தியம் நர்மதா. நீ இல்லாம இது எதுவுமே கிடையாது. நான் உன் தன்மானத்தை நிறைய இடத்தில உரசி பார்த்தும், உனக்கான மரியாதைய கொடுக்காம விட்டும் கூட நீ என்ன விட்டுக் கொடுக்காமல் இழுத்துக் கொண்டு வந்த… இன்னைக்கு இது எல்லாம் உன்னால.. ஆனா, நீ முன்ன வச்சு நின்னது என்னதான். இன்னைக்கு இந்த உறவுகள் கிட்ட எனக்கு கிடைக்கிற மதிப்பு, மரியாதை இது எல்லாம் உன்ன வச்சு. நீ ஒரு சூப்பர் வுமன் நர்மதா…” உணர்ந்து சொன்னா நிரஞ்சன்.

  “இல்லங்க நான் ஒரு சாதாரண பெண். எனக்கு என் புருஷன் நல்லா இருக்கணும், என் பிள்ளைங்க நல்லா இருக்கணும், நாங்க முன்னேறனும்.. இப்படி எல்லாம் யோசிக்கிற சாதாரண குடும்பத்து பெண்ணு தானே தவிர, நீங்க சொல்ற மாதிரி புரட்சி பெண்ணெல்லாம் இல்லை. என் வீடு நல்லா இருக்கு நான் என்ன பண்ணனும்.. சில இடத்தில விட்டுக் கொடுத்து போகணும். அ இங்க நர்மதாவை விட பொறுமையான பொண்ணுங்களும் இருக்காங்க, நிரஞ்சனை விட மோசமான ஆண்களும் இருக்காங்க.. நீங்க எந்த அளவுக்கு மோசமான ஆள் இல்லை நிரஞ்சன்..”

“ஆனாலும் நான் உனக்கு நிறைய காயத்தை கொடுத்து இருக்கேன் நர்மதா. உன்னை ஒரு தடவை கூட நான் மதிச்சது இல்லை. நீ தான் எனக்கு வாழ்க்கையில் இன்னொரு வாய்ப்பு கொடுத்து இருக்க.. என்ன தள்ளி விட்டு தனியா, துணிந்து நிற்கிற எல்லா தகுதியும் உனக்கு இருந்துச்சு. ஆனாலும் என்னை நீ சேர்த்துகிட்ட..”

“இருக்கலாம்.. நான் படிச்சிருக்கேன், நல்லா வேலையில இருக்கேன். என் பிள்ளைகளுக்கு என்னால ஒரு சிங்கிள் மதரா ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும்தான். உங்களோடு எனக்கு பிரச்சனை வந்தப்ப, அப்படி ஒரு யோசனை எல்லாம் வந்துச்சு. என்ன செஞ்சாலும் என் புருஷன் தான் அப்படி எல்லாம் நினைக்கல.. உங்க கூட நானும் சண்டை போட்டு இருக்கேன். நம்ம பிரச்சனையை பஞ்சாயத்து வரைக்கும் கூட்டிட்டு வந்து இருக்கேன்…”

  “வைராக்கியமா நான் நின்னு, பிள்ளைகளை வளர்த்து கட்டிக் கொடுத்த பின்னாடி, எனக்கு என்ன கிடைக்கும் நிரஞ்சன். நான் இங்க தனியா.. நீங்க அங்க தனியா நின்னு வாழ்க்கையில என்ன பாப்போம் நிரஞ்சன். அன்னைக்கு வாழ்க்கை முழுசா தொலைந்து போய் இருக்குமே… சண்டை போட்டுக்கிட்டாலும் சமாதானமாகி, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம பிள்ளைகளுக்காக நிற்கறது எப்படி இருக்கும். வீணா வைராக்கியம் புடிச்சு தனியா நிக்கிறது எப்படி இருக்கும்…”

“ஐன்ஸ்டீன் எனக்கு ரொம்ப புடிச்ச ஒருத்தர். அவர் மேல இருக்கிற ஆர்வம் தான் எனக்கு சயின்ஸ் எடுத்து படிக்கவே தோணுச்சு. அவர் எவ்ளோ பெரிய ஆளு. ஆனா அவரோட தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா!… எனக்கு அவர் மேல இப்போ நிறைய விமர்சனமே இருக்கு. அவர் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவர் மனைவிக்கு உண்மையா இல்ல.. அவருக்கு நிறைய ஆப்பேயர் இருந்துச்சு. தன் மனைவியை விட்டுட்டார் நிறைய கண்டுபிடித்து பெயரும் புகழும் பணமும் கிடைச்சுச்சு. ஆனாலும், அவருக்கு வாழ்க்கை எப்படி இருந்துச்சு. ரொம்ப கொடுமையா இருந்துச்சு. கடைசி காலத்துல அவர் தனியாத்தான் இருந்தார். அப்போ அவருக்கு கிடைத்த நோபல் பிரைஸ்ஸ தன் மனைவியோடு பங்கு போட்டுக் கொண்டார். தன்னோட உயர்வுக்கு பின்னாடி இருந்த உழைப்பு என் மனைவிக்கானதுன்னு சொன்னார் அவர்களுக்கு நான் உண்மையா இல்ல, அவங்கள நான் ஒரு வேலைக்காரியைப் போல நடத்தி இருக்கேன்னு எல்லாம் சொன்னார்…”

“வாழ்க்கை முழுசா போனதுக்காப்புறம் வாழலையேன்னு கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது நிரஞ்சன். அன்னைக்கு என்ன நினைப்போம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இருந்திருக்கலாமோ, சமாதானம் பேசி இருந்திருக்கலாம், யோசித்து இருக்கலாம், நிதானமா இருந்து இருக்கலாம், எவ்வளவு நினைப்போம். ஆனா காலம் ஓடிப் போகும் நிரஞ்சன். பணத்தை விட்டா கூட திரும்ப நம்மளால சம்பாதிக்க முடியும். ஆனா, நம்ம வாழுற நேரத்துல வாழ்க்கையை விட்டோம் திரும்ப அந்த வாழ்க்கையை எடுக்க முடியாது நிரஞ்சன்…”

“இங்க பேரும், புகழோடு வாழ்ந்த பலரோட வாழ்க்கை இருண்ட பக்கமா தான் இருந்திருக்கு.. எனக்கு அந்த இருண்ட பக்கம் வேணாம். எனக்கு அமைதியான நிம்மதியான வாழ்க்கை வேணும். அதுக்கு நான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இறங்கிப் போனா தப்பு இல்லையென்று தோணிச்சு…”

“இன்னைக்கு நீங்க சொல்றீங்க இல்ல நர்மதா இந்த வாழ்க்கை உனக்காகத் தான்னு.. வேற எனக்கு என்ன வேணும் நிரஞ்சன். நான் தனியா வாழ்க்கையில எவ்வளவு தூரம் ஓடி சாதித்தாலும், திரும்பிப் பார்த்து என் புருஷன் என் கூட இல்லைன்னா.. எனக்கு அது வலி. அந்த வலி எனக்கு வேணாம்னு தோணுச்சு. யார்கிட்ட நான் இறங்கி போறேன். என் புருஷன் கிட்ட தானே.. நீங்களும் நானும் வேற வேற கிடையாதே.. அன்னைக்கு ரெண்டு படி நான் இறங்கி வந்தேன். இன்னைக்கு எனக்காக முழுசா நீங்க இறங்கி நிக்கிறீங்க.. இன்னைக்கு இருக்கிற இந்த முழு சந்தோஷமும் எனக்கானது அல்லவா!…”

 “நன்றி… இத தவிர வேற எதுவும் எனக்கு வரல.. ஏதோ ஒரு ராத்திரி மனைவி, ரெண்டு பிள்ளைகளோட தனியா நின்னேன். இன்னைக்கு இவ்வளவு சொந்தம், வீடு, கடை, தொழில் எல்லாம் உன்னால…”

“உங்களுக்கு கிடைத்த எல்லாம் எனக்கானது தான் நிரஞ்சன். உங்களோட இந்த வெற்றியும் எனக்கான வெற்றி தான். உங்களோட ஓட்டமும் எனக்காகத்தான்.. புருஷன் பொண்டாட்டிக்கு இடையில தனித்தனிந்து என்ன இருக்கு நிரஞ்சன்…”

மனைவி கைகளை உறுதியாக பற்றி கொண்டவன்,

 “அடுத்து வாழ்க்கை நமக்கு என்ன வச்சி இருக்குன்னு எனக்கு தெரியல… இந்த உடம்பு தளர்ந்து, எல்லாம் அடங்கி, கட்டுலோட கிடக்கும் போதும் பக்கத்துல நீ இருக்கனும் நர்மதா…” கண் கலங்க சொன்னான் நிரஞ்சன்.

“ என்னங்க என்ன இது…” கண்ணீர் கண் தாண்டி வெளியே வராமல் தடுத்தாள் நர்மதா.

“ நிஜம். என்னைக்கோ ஒரு நாள், யாரோ ஒருத்தர்.. உனக்கு முன்ன நான்.. நீ இல்லாத உலகத்தை நிஜமா பாக்குற சக்தி எனக்கு இல்ல.. அப்படி பார்க்கவும் மாட்டேன்…” ரொம்ப அழுத்தமான வார்த்தைகள். அவளுக்கு தாங்க முடியவில்லை..

  “இப்பவே எதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க. நமக்கு நிறைய வேலை இருக்கு… நம்ம பிள்ளைங்க படிப்பு, கல்யாணம், வேலை, பேரன் பேத்திகள் எவ்வளவு இருக்கு.. அதை யோசிங்க நிரஞ்சன்…” நர்மதா கண்களும் கலங்கிப் போனாலும் எப்பவும் போல கணவனுக்கு ஆறுதல் சொன்னாள்.

  மனைவியை புரிந்து கொண்டு தன்னை தேற்றி, அவளை அணைத்துக் கொண்டான். தற்போது அவர்களுக்கு வாழ்க்கை நிறைவாக இருந்தது.. எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்த்தார்கள். எதிர்காலம் என்னவோ நமக்கு தெரியாது. நல்ல எண்ணங்களோடு பாதை அமைத்தால் நல்ல விடிவு கிடைக்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!