5.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,629
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 5.2
.
இரு வாரங்கள்… கௌதமன், தன்னை, தன்னை சுற்றி இருந்தவர்களை என ஒட்டு மொத்த நினைவையும் இழந்து தவித்த இரு வாரங்கள் அவனை வெகுவாய் பாதித்துப் புரட்டிப் போட்டிருந்தது. ஒரு காலைப் பொழுது கண் விழிக்கும் போது எல்லாம் மீண்டிருந்தது. எந்த உடலை… எந்த தழும்பை எல்லாம் பார்த்து தன்னையே வெறுத்தானோ அதை உண்மையிலுமே கொண்டாடினான். ஆறு மாதங்கள் விரலைக் கூட அசைக்க முடியாது பட்ட பாடெல்லாம் நினைவில் வந்தபின் தழும்பெல்லாம் ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது கௌதமனுக்கு.
Advertisement
“இப்போ தான மச்சான் தொண்டையில பிரச்சன வந்து, சர்ஜரி வரைக்கும் போயி… நினைவு இழந்து, அத மீட்டிருக்க. உடனே பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியே ஆகணுமா?” எனத் தோழன் தடுத்தும் கௌதமன் அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை.
“ஃபிராங்கண்ஸ்டைன் மான்ஸ்டர் மாதிரி சுத்த சொல்றியா?” என தோழனின் வாய் அடைத்து மருத்துவரின் ஒப்புதலோடு முகத்தையும் சரி செய்யும் முடிவில் இறங்கினான்.
தென் கொரியாவின் தலை நகரான சோல்லை நோக்கிப் பயணித்தனர் அன்னையும் மகனும், கூடவே விக்ரமும். விமான கதவு மூடுவதற்கு பத்து நிமிடங்கள் முன் ஓடி வந்து ஏறியிருந்தான் விக்ரம்.
Advertisement
அழகிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் தென் கொரியா மக்களிடம் பிளாஸ்டிக் சர்ஜரி மிகப் பிரபலம். அங்குச் சிறந்த முறையில் முக சீரமைப்பு செய்யப்படுவதால், தன் முகத்தையும் தழும்புகளையும் சீர்படுத்த தென் கொரியாவைத் தேர்ந்தெடுத்தான் கௌதமன்.
Advertisement
விமானம் பறந்து கொண்டிருந்தாலும் நேரம் மட்டும் நகர்வேனா எனக் கௌதமனை வெறுப்பேற்றியது. பிசினஸ் கிளாசில் பயணித்துக் கொண்டிருந்தவன் அருகில் இருந்த இருக்கையில் இருந்த விக்ரமும் வாயை மூடுவதாகத் தெரியவில்லை. தோழன் முழுமையாகத் தனக்குக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை இப்படி அவன் கொண்டாடிக் கொண்டிருக்க, கௌதமனும் அவன் வாய்க்குப் பூட்டு போடவில்லை.
இரண்டு வாரங்கள் யோசித்திருக்கிறான்… இப்படி ஒருவனை எப்படித் தோழனாக ஏற்றேன் என்று. நினைவு வந்தபின் அதற்கான பதிலும் கிடைத்தது. இதோ… இதனால் தான் போலும். தன் நலன், குடும்பம், வேலை என அனைத்தையும் விட்டுவிட்டு தோழனின் நலன் மட்டுமே தன் பிறப்பின் பயன் என்பது போல் கௌதமனையே சுற்றி வருபவனை எப்படி உயிர்த் தோழனாய் மனம் ஏற்காது இருக்கும்?
இருவருக்கும் இடையே இருந்த தடுப்பை இறக்கி விட்டிருக்க, முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான் விக்ரம். ஒருவழியாக விக்ரம், படுக்கையில் கண் அசர, தன் எதிரே இருந்த திரையை ஆராய தமிழ் படங்கள் வரிசையில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற திரைப்படம் இருந்தது.
Advertisement
கதாநாயகன், நாயகியைத் தெரியவில்லை என்றதும் யோசனையோடே தலைப்பை பார்த்திருந்தவன் காதுகளில், “இது தான் நான் வீர் கூட கடைசியா பார்த்த படம் டா” என்ற வாக்கியம் விழுந்தது.
விக்ரமின் தொண்டை தழுதழுக்க, “கடைசியா வெஸ்டர்ன் கார்ட்ஸ் போனோமே, அப்போ இந்தப் படத்தை பார்தோம். அப்போ நினைக்கவே இல்ல டா… அதுதான் நான் அவனோட இருக்க போற கடைசி நாட்கள்ன்னு.
மறந்துடுவான்னு சொல்லும் போது கூட ரொம்ப எல்லாம் ஒண்ணும் தோணல மச்சான். ஆனா…விட்டுட்டு போவான்னு சத்தியமா நினைக்கல டா. சின்ன சர்ஜரி டா… ஒரு வாரத்துல வீட்டுக்கு போயிடலாம்ன்னு சொன்னாங்க. ஒரேயடியா போயிட்டான் டா. இல்ல… இல்ல… அவன் போகல” என தலையை உலுக்கினான்.
“படம் பாக்கிற வரை நல்லா இருந்தான் டா. இந்த படம் பார்த்த பின்னாடி தான் ஒரு மாதிரி ஆகிட்டான்.
அடிக்கடி தலைய ஆட்டினான். என்னடான்னு கேட்டதுக்கு ‘கல்யாணத்துக்கு முன்ன உடல் உறவுனால அந்த பொண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானம்…. அவ குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய தல குனிவு. அந்த பையனுக்கு அறிவு ஏன் டா அப்பிடி போச்சு. உணர்வுகள அடக்க தெரியாத கேவல பிராணியாடா அவன்? ச்ச! அந்த குழந்த… அது என்னடா தப்பு பண்ணிச்சு?
ஏன் டா குழந்தைய அனாதையா விட்டாங்க? என்னால அத பாக்கவே முடியல டா. என்னவோ நானே… என் ரத்தமே அனாதையா நிக்கிற மாதிரி இருக்குடா’ன்னு ரொம்ப வருத்தத்தோட ரொம்ப நேரம் புலம்பினான். அவன் அப்படிக் கலங்கி நாங்க பார்த்ததே இல்ல. அந்த ஸ்க்ரீனுக்கு உள்ள மட்டும் அவனால போக முடிஞ்சிருந்தா அந்த குழந்தைய அவனே எடுத்து வளர்த்திருப்பான்” என மெல்லப் புன்னகைத்தவன் கண்களில் நீர் நிரம்பி இருந்தது.
கண்கள் மூடி விக்ரம் அமர்ந்துவிட, திரைப்படத்தைப் பார்ப்பதா? வேண்டாமா? என எண்ணியிருந்தவன் திரைப்படத்தில் மூழ்கினான். அசட்டையாகப் பார்க்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் படம் அவன் கவனத்தை இழுத்துக் கொண்டது.
கல்லூரியில் படிக்கும் நாயகனும் நாயகியும் காதலில் விழுந்தனர். நாயகனோடு ஊர் சுற்ற வாய் கூசாது அம்மாவிடம் பொய் உரைத்தாள் நாயகி.
காதல் என்பது என்ன? கரம் பிடித்து ஊர் சுற்றுவதா? ஒரே பானத்தை இரு ஸ்ட்ரா கொண்டு அருந்துவதா? மணிக் கணக்காக வேண்டாத பேச்சை எல்லாம் பேசுவதா? உடல் உரசி உள்ளுக்குள் சூடு ஏறுவதா? உடல் சூட்டைத் தணிக்கத் தனிமையைத் தேடுவதா? இப்படித் தான் நாயகனும் நாயகியும் காதல் புரிந்தனர் திரையில்.
“தப்பு பண்ற வயசுல தப்பு பண்ணினா எதுவுமே தப்பில்ல” என்ற மாபெரும் தத்துவத்தை அசால்டாக உதிர்த்தான் நாயகன். ‘என்ன கேவலமான டையலாக் டா இது’ என நினைக்காமல் இருக்க முடியவில்லை கௌதமனால்.
நாயகியின் மாதாந்திர நாள் தள்ளிப் போனது. நாயகிக்குக் கர்ப்பம் உறுதியாக நாயகியின் அவஸ்தையும் அவமான உணர்வும் பார்க்கப் பாவமாக இருந்தது.
“இத தான் பாக்கிறியா?” என திரையை பார்த்தவாரே கேட்டான் விக்ரம். வசனங்கள் அவன் காதில் விழவில்லை என்றாலும், காட்சி புரிந்தது.
“பார்த்தியா டா. ரெண்டும் குஜால்சா இருந்துதுங்க. அவ மட்டும் இப்போ மாட்டிக்கிட்டா. அது தான் என் பாட்டி சொல்லுவாங்க ‘முள்ளு சேலைல பட்டாலும் சேலை முள்ளுல பட்டாலும் சேலைக்குதான் சேதம்’ன்னு.” என அன்று விக்கி சிரிக்க, “டேய்… வாய மூடிடு இல்ல வர எரிச்சலுக்கு என்னவாது சொல்லிட போறேன்” என ஜீவன் எரிந்து விழுந்தது என அனைத்துமே நினைவில் அப்படியே இருந்தது.
“என்னடா தப்பா சொன்னேன்… இப்போ அது தான நடக்குது? அந்த பொண்ண பாரு… எல்லார் முன்னாலையும் தல குனிஞ்சு… அசிங்கப் பட்டு நிக்குது. ஏன்? அவன் கூட படுத்தனாலையா? இல்ல… அவன் கூட படுத்ததை அந்த வயிறு காட்டி கொடுத்திடுச்சு அதனால. இங்க தப்பு சரின்னு எதுவும் இல்ல டா. மாட்டினா திருடன்… இல்லன்னா யாருக்கு தெரியும்ன்னு காலர தூக்கி விட்டுட்டு யோகியன் மாதிரி நடப்பானுங்க.
அதுக்குத் தான் என் பாட்டி, மாலதிட்ட சொல்லுவாங்க ‘முள்ளு சேலைல பட்டாலும் சேலை முள்ளுல பட்டாலும் சேலைக்குதான் சேதம்’ன்னு. இந்த விஷயத்துல பொண்ணுங்க மட்டும் தான் மாட்டுவாங்க. டோட்டல் டேமேஜும் பாவம் அவங்களுக்கு மட்டும் தான்! சோ… அவங்க தான் கேர்புல்லா இருக்கணும் மச்சி!” என அன்று சிரித்துக் கொண்டே கூறியதை நினைத்தவனுக்கு இன்று சிரிப்பு வரவில்லை. தோழர்கள் மட்டுமே நினைவில் வந்தனர்.
கர்ப்பம் கலைக்க மருத்துமனைக்குப் பெண் செல்லவும் கௌதமனுக்கு தொண்டை ஏறி இறங்கியது. நாயகியின் அம்மாவிற்கு விஷயம் தெரிந்த வேளை அந்தப் பெண் பட்ட அவமானம்… ஐயோ என்றிருந்தது கௌதமனுக்கு. திருமணத்திற்குப் பின் கொண்டாடப்படும் அதே விடயம் திருமணத்திற்கு முன் அசிங்கமாக பார்க்கப்படுகிறது. சென்ற நிமிடம் வரை தவறாகத் தோன்றாததெல்லாம் இந்த நொடி பூதாகரமாக தோன்றியது கௌதமனுக்கு. நான் எப்பொழுதில் இருந்து இப்படி எல்லாம் உணர்கிறேன் என்ற கேள்வி அவனுள் வந்து போனது.
எப்பொழுதில் இருந்து? எல்லாம் அறுவை சிகிச்சைக்குப் பின் தான்!
படம் முடிந்தது. கௌதமனின் உணர்வுகளை வடிக்க வார்த்தைகளே இல்லை. கண்கள் கலங்கிப் போயிருந்தன. இருவர் காதல் என்ற மயக்கத்தில் சுற்றித் திரிந்தனர். காமம் கொள்ள ஆசை கொண்டனர். ஆசையை அடக்கும் நோக்கம் இல்லாது, படிக்கும் வயதில் தனிமையே தேடிச் சென்றனர். பலனாய் வயிற்றில் வந்த கருவை, கலைக்க முயன்று தோற்றனர். இதற்கு இடையே இருவருக்கும் மனம் ஒத்துப் போகவில்லை எனப் பிரிந்தும் விட்டனர். இங்கு மனம் சார்ந்த காதல் என்ற ஒன்று இல்லவே இல்லையே…
பிள்ளையை அவள் தனியே வளர்ப்பாளோ என இவன் எண்ணியிருக்க, அவளோ பெற்றதோடு அதை மறந்தும் போனாள். யாரோ இருவரின் பிழையால் உதித்த அந்த பச்சிளம் பிள்ளை அனாதை இல்லத்தில் ஒப்படைக்கப் பட்டதை கௌதமனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தனக்கென யாருமற்று திரிந்த அந்தக் குழந்தையின் அவல நிலை அவனை ஏதோ செய்தது. அவனால் அந்த தனிமையைத் தெள்ளத் தெளிவாக உணர முடிந்ததில் அவனுக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இரண்டு வாரங்கள்… இப்படியான உணர்வோடு தானே இவனும் சுற்றித் திரிந்தான். அதனால் ஆதரவற்ற அந்தக் குழந்தையின் வலி அவனுக்கு நன்றாகவே விளங்கியது.
இரண்டு வருடங்களில் நாயகி சந்தோஷமாகத் திருமணத்திற்கு தயாரானாள். நாயகன் அவனுக்கான பெண்ணோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். அவர்களால் மண்ணில் தோன்றிய சின்ன குருத்து அனாதையாக இல்லத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.
‘ஆராரோ பாட இங்கு தாயுமில்லை… உன்னை அள்ளி செல்லம் கொஞ்ச இங்கு யாருமில்லை’ என்ற பாடல் கல்லையும் கரைக்கும் என்றால், பார்த்து அமர்ந்திருந்த ஆண் மகன் கரைய மாட்டானா என்ன? கொளுத்தும் வெயிலில் ஓடிய குழந்தை சூடு தாங்காது கால்களை பிடித்து கொண்டு அந்த சுடு மணலில் அமர்ந்து வீரிட்டு அழ… படம் முடிந்து போனது. கௌதமனின் மென்மையான மனம் குழந்தையின் நிலை கண்டு உருகிப் போனது.
கண்களின் ஓரம் துளிர்த்த நீரைக் கௌதமன் சுண்டி விட்டிருந்தான். சுடு மணலில் அனாதையாக அமர்ந்திருந்த இரண்டு வயதுக் குழந்தையின் தனிமையையும் வலியையும் உணரமுடிந்த கௌதமனின் மனம் கனக்க, கண்களை மூடி அமர்ந்தே இருந்தான்.
“காதல் செய்வீர்-ன்னு பேர பார்த்ததும் ஏதோ காதல் படம்ன்னு அன்னைக்கு பாக்க ஆரம்பிச்சோம். ஆனா படம் முடியும் போது படத்துக்கும் பேருக்கும் சம்பந்தமே இல்லன்னு தோணிச்சு. அத நான் வெளியில சொல்ல… ஜீவன் பொங்கிட்டான்.” என சிரித்தான் விக்ரம்.
“‘வெண்ண… இதுங்க பண்ணினது பேரு காதலா டா? அது வெறும் வயசு கோளாறுல… கொஞ்சம் கூட வாழ்க்கையோட புரிதலே இல்லாம, ரெண்டு பேருக்கான உடல் தேவைக்கான பழக்கம். அவங்களுக்குள்ள இருந்தது லவ் இல்ல லஸ்ட்! இவங்களுக்கு ஏற்பட்ட சபலத்தால ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அட்டென்ஷன்… அன்பு… நல்ல எதிர்காலம்… இப்படி எதுவுமே கிடைக்கல!
காதல் இருந்திருந்தா அந்த பொண்ண அவமானப்பட விடுவானா அவன்? அவங்க பார்ட்னர் மேல மதிப்பும் மரியாதையும் வேணும் டா. அவ கல்யாணம் ஆகாம கர்ப்பம் ஆனா அந்த பொண்ணுக்கும் அவ குடும்பத்துக்கும் எவ்வளவு பெரிய தல குனிவுன்னு யோசிச்சு இருப்பான். உண்மையான காதல் இருக்கவனுக்கு அவனோட இச்சைய விட அவனோட காதலியோட மரியாதை முக்கியமா இருந்து இருக்கும்.
அதனால காதல் செய்வீர்… அதாவது காதல்ன்ற பேர்ல காமம் செய்யாதீர்ன்னு டைரக்டர் சொல்றார்! இது விழிப்புணர்வு படம் டா’ன்னு விம் போட்டு விளக்கி என் மரமண்டைக்குள்ள ஏத்திவிட்டான்” என விக்ரம் கூறியது காதில் விழுந்தாலும் கண்களையோ வாயையோ கௌதமன் திறக்கவே இல்லை.