Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

5.3 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 5.3

.

தென் கொரியாவில் சென்றடைந்த இரு தினங்களில் சிறந்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (Plastic surgery) மையத்தில் கௌதமன் சேர்க்கப்பட்டான். தாடை எலும்பு சீரமைப்பு, முகத்திலும் கழுத்திலும் இருந்த தழும்பிற்குமான அறுவை சிகிச்சை எந்தப் பிரச்சனையையும் இல்லாது நல்ல விதமாகவே முடிந்தது என்றார் மருத்துவர். ஆனால் அந்த முகம்… முன்பை விட மோசமாக… நூறு தேனீக்களால் கொட்டு வாங்கியது போல் இருந்தது.



Advertisement

மகனின், அஷ்ட கோணத்திற்கு வீங்கி சிவந்த முகத்தைப் பார்த்த வைஷாலி அழுது தீர்க்க, “இருக்க வலிக்கு நடுவுல நீங்க வேற” என எரிந்து விழுந்தவன், “கிளம்புங்க மாம்… நான் முழுசா சரி ஆனதும் வரேன். நீங்க அழுத்துட்டு இருந்தா என்னால ரிலாக்ஸ் பண்ண முடியாது. கிவ் மீ மை ஸ்பேஸ். ஏழு வாரம் கழிச்சுப் பார்ப்போம். நீயும் கிளம்பிடா” என ஒரு வாரத்தில் வைஷாலியை விக்ரமோடு இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான்.

வீங்கிப் போன முகம் வலித்தது. வலி ஒன்றும் புதிதில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் வலி… வலிக்கத் தான் செய்கிறது. வலிகள் ஒரு பக்கம்… மருந்து மாத்திரைகள் தரும் உடல் உபாதை என்று கௌதமன் தினம் தினம் சித்திரவதையை அனுபவித்தான். எதற்கு… யாருக்காக இந்த வலியோடான வாழ்க்கை என நினைக்காத நாள் இல்லை. ஒன்றரை வருடமாக படும் நரக வேதனையில் இருந்து விடுதலை கிடைக்காதா என்ற எண்ணத்தை தவிர இப்பொழுதெல்லாம் வேறு எண்ணங்கள் எழுவதில்லை கௌதமனுக்கு.

வாரங்கள் கடந்தன. மருந்து மாத்திரையின் உபயத்தால் வலி கட்டுப்பாட்டுகுள் வந்தது. முகம் ஓரளவிற்குப் பார்க்கும் படி இருந்தது. மருத்துவமனையில் தங்கி இருக்க அவசியம் இல்லை எனக் கூறியிருக்க, ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து மருத்துவரை சென்று பார்த்து வந்தவனுக்கு தனிமை துணை இருந்தது.  தனிமையில் அதிகம் சிந்தித்தான்.

Advertisement

தனக்கு உயிர் கொடுத்தவனை பற்றி அதிகம் யோசித்தான். சுமார் ஒரு வருடம் முன்பு மருத்துவமனையில்… கண்விழித்த அன்று அவனின் பெற்றோர் இவனைப் பார்த்துச் சென்றனர். “நாங்க அவன ஒழுங்கா பாத்துகல. நீ… அவன பாத்துகோ” எனக் கரத்தை பிடித்துக் கூறிய பெரியவர் கண்கள் கலங்கி நா தழுதழுத்தது இன்றும் நினைவில் அழியாது நிற்கிறது.

Advertisement

“உடம்ப பாத்துக்கோ பா” என அன்போடு கூறிய அவன் அன்னை செல்லும் முன், “இது… என் மகனுக்கானது. இது உனக்கு தேவை இல்லன்னு தெரியும். இருந்தாலும் இது அவனுக்கு மட்டுமே உரிமையானது. நீ ஏத்துகிட்டா சந்தோஷ படுவேன்” எனப் பத்திரம் அடங்கிய ஒரு பையைக் கொடுத்துச் சென்றார். அதன் பின் அவர்கள் இவனைக் காண வரவில்லை.

இன்னும் ஒரு வாரத்தில் இவன் இறந்து பிறந்த நாள் வரவிருக்க, தனக்கு உயிர் கொடுத்தவனுக்கு மரியாதை செலுத்தவாவது திருச்சிக்குச் செல்ல வேண்டும் போல் இருந்தது. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து பழக்கப்பட்டவனுக்கு திருச்சிக்குச் செல்வது என்ன பெரிய காரியமா? மருத்துவரை பார்த்து கடைசிக் கட்ட சிகிச்சையைப் பற்றிக் கேட்டுக் கொண்டான். அடுத்த நான்கு நாள்களில் கௌதமனை ஏந்திய விமானம் சிங்கபூர் வழியே திருச்சராபள்ளியை வந்தடைந்தது.

ஏற்கனவே புக் செய்திருந்த வாடகை மகிழுந்தில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. இவன் இறந்து இவனைப் புதைத்த இடத்தில் செடி முளைத்திருக்க வேண்டியது. யாரோ ஒருவனால் பிழைத்திருக்க, அவன் வாழ்ந்த இடத்தை நோக்கி எதற்கு என்றே தெரியாது சென்றான். என்ன மாயமோ ஜி.பி.ஸ். காட்டிய வழி இவனுக்குப் பரிச்சயமான இடம் போன்றே தோன்றியது. அவன் வாழ்ந்த வீடு பூட்டி கிடந்தது. கவனிப்பார் இல்லாது புல்லும் ஒட்டையுமாக இருந்தது.

Advertisement

இரும்பு கேட்டில் பூட்டு தொங்கிக் கொண்டிருக்க, மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றான். வீட்டைச் சுற்றி அதிக இடம் இருந்தது. இங்கு தானே அவன் ஓடிப் பிடித்து விளையாடி இருப்பான்? மனம், ஆம்… என்றது. இங்கு தானே அவன் ஆயிரம் கனவோடு அவன் குடும்பத்தோடு களித்திருந்திருப்பான்? மனம், ஆம்… என்றது. அவன் விட்டுச் சென்ற கனவுகள் இங்கு தானே சமாதியாகி இருக்கும்? மனம் பதில் தரவில்லை.

தூசி படிந்த வரண்டாவில் அமர்ந்தான். மனம் எதையோ தேடியது. எதை எனத் தெரியவில்லை. பொக்கிஷம் எதையோ இங்குத் தொலைத்த உணர்வு. தனியே அனாதையாக நின்றிருக்கும் வீட்டில் என்ன பொக்கிஷம் இருக்கப் போகிறது? எழுந்து வீட்டைச் சுற்றி நடந்தான். காய்ந்து நின்றிருந்த செடிகளும், ஓங்கி உயர்ந்து நின்றிருந்த மரங்களும் மட்டுமே இருந்தன.

மொட்டை மாடிக்குச் சென்றான். மலைக் கோட்டையில் பார்வை நிலைத்தது. நிலவு மெல்ல எட்டிபார்க்க ஆரம்பித்தது. மொட்டை மாடி… நிலவு… மலைக் கோட்டை… கௌதமனை ஏதோ செய்தது. இதயம் அதி வேகமாக அடித்துக் கொள்ள, உள்ளுக்குள் பயம் கவ்வியது. இதயத்தை அழுந்த தேய்த்துக் கொண்டான். உடலில் மீண்டும் பிரச்சனை வந்தால் அவனால் கண்டிப்பாகத் தாங்க முடியாது. வந்த வழியே வெளியே சென்றான்.

“சின்ன தம்பி போனப்பறம், அம்மாக்கு முடியாம போயிடுச்சு. அம்மா காலமாகவும் ஐயா கோவில் குளம்ன்னு கிளம்பிட்டார். எப்பவும் இளம் வட்டத்தோட அத்தன சந்தோஷமா… சிரிப்பு சத்தத்தோட இருந்த இடம் இப்போ கவனிப்பார் இல்லாம கிடக்கு” என்றார் அருகில் கடை போட்டிருந்த பெரியவர்.  

அதற்கு மேல் எங்கு செல்வதெனத் தெரியவில்லை. ஒரு இலக்கும் இல்லாது நகர உலா சென்று கொண்டிருந்த கௌதமனுக்கு மனதில் சொல்லொன்னா வேதனையும் அழுத்தமும் ஏறிக் கொண்டே போனது.

என்ன நினைத்து திருச்சிக்கு வந்தான்? யார் தனக்காகக் காத்திருப்பார்கள் என எதிர்பார்த்தான்? யாரையும் பார்க்க வரவில்லை. எந்த எதிர்பார்ப்பும் உடையவில்லை. ஆனாலும்… உள்ளுக்குள் ஓர் அழுத்தம்… ஒரு நிறைவற்ற தன்மை. எதையோ எங்கோ தொலைத்த உணர்வு. உயிரைக் கொடுத்தவனுக்குச் சொந்தமான யாரையேனும் பார்த்துப் பேசியிருந்தால் மனம் ஆறியிருக்குமோ? நிம்மதி கிட்டியிருக்குமோ?

சென்ற ஓர் உயிர், தன்னை சுற்றி இருந்த அனைவரின் ஜீவனையும் வேரோடு பிடுங்கி எடுத்துச் சென்றிருக்க, இவன் யாரைப் பார்க்க நினைத்தான்?

அப்படி ஒரு ஜீவனால் மட்டுமே கௌதமனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் என்றால்… கிடைக்கட்டுமே அப்படி ஒரு பொக்கிஷம். 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!