Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிரில் ஒரு சஞ்சாரம்

உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 6

அத்தியாயம் 6

தனது கன்னத்தில் அறைந்து நின்ற அவளை ஒரு நொடியில் திருப்பி அறைந்து விடலாம் என்ற கோபத்தைக் கட்டுப்படுத்தி அசோக் அவளிடம் எதுவும் பேசாது நகர வைஷ்ணவி தனது தவறுக்காக மன்னிப்புக் கூட கேட்கத் தோன்றாது அமைதியாக நின்றாள்.

ஸ்டானும் பென்னியும் அவளிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்க வைஷ்ணவி அவர்களிடம் பரவாயில்லை என்பதாகத் தலையசைத்து தனித்துச் சென்ற அசோக்கைப் பார்த்தப் படியே நின்றாள்.

அறைகள் அறைகளாக அமானுஷ்யத்தைத் தாங்கி நின்ற அந்த கட்டிடம் நொடியில் தன் திகிலை இழந்து அவளது மனதில் குற்ற உணர்ச்சியை அப்பி நின்றது.



Advertisement

ஒரு மணி நேர சுற்றிப்பார்ப்பு முடிந்திருக்க மீண்டும் படகு கிளம்புவதாக இருந்தது. அசோக் மிகக் கோபமாக அங்கிருந்து சென்றவன் அதன் பின் மீண்டும் படகில் ஏறும் போது தான் அவளது கண்களில் தட்டுப்பட்டான். மீண்டும் அவள் பக்கமே திரும்பக் கூடாது என முடிவு செய்திருந்தான். ஆனால் வைஷ்ணவி அவனைத் தேடி துலாவி அவனிருக்கும் இடம் வந்திருந்தாள்.

அசோக் அவளைக் கண்டதும் வேறு புறம் திரும்ப அவள் நேராக அவன் முன் வந்து நின்றாள்.

“சாரி அசோக், நீ தான் என்னை சீண்டறதுக்கு பண்ணினேனு கோபத்தில, எனக்கு பேய் னா பயம்….இல்லை இல்லை ரொம்ப பயம். அதான் கோபத்தில. சாரி அசோக் நான் அப்படி பண்ணி இருக்கக் கூடாது. ஐ அம் ரியலி சாரி”

Advertisement

அசோக் அவள் சொன்ன வார்த்தைகளைக் காதிலே கேட்காதவன் போல் அமர்ந்திருக்க வைஷ்ணவி என்ன செய்வது எனப் புரியாது சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். அசோக் கடலின் மடியில் அசைந்தாடும் படகில் தன் பார்வைகளை ஆழியின் ஆழத்தை அளப்பது போல் கடல் நீரை வெறித்திருந்தான். வைஷ்ணவி அவன் அருகே நின்றுக் கொண்டே இருந்தாள்.

Advertisement

அசோக் படகில் இருந்து இறங்கியதும் விடுதி இருக்கும் இடத்திற்கு தனியே இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல வைஷ்ணவி மிடறு விழுங்கி நின்றாள். நீல் தீவு மட்டுமே கூட்டாக அனைவரின் பயணத் திட்டத்தில் இருந்தது. ராஸ் தீவு தனிப்பயணம் என்பதால் வந்தவர்கள் அனைவரும் தங்கள் செலவில் கப்பல் பயணம் பேசி வந்திருந்தனர். அசோக் உடன் வந்தவளுக்கு எங்கே எப்படி செல்வது என்ற தவிப்போ கவனமோ இதுவரை இருந்திருக்கவில்லை. இப்போது யாரிடம் எப்படி விடுதி பெயர் சொல்லி வழியெல்லாம் நினைவுகளில் ஏற்றிக் கொண்டதே இல்லை அவள். அவள் ஃபோர்ட் ப்ளேர் செல்வதாகச் சொல்லி ஆட்டோ பேச முந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு முக்கு திரும்பினாற் போல் இருந்த இடத்திற்கு விட்டுச் சென்றான் அந்த ஆட்டோ ஓட்டிய இளைஞன்‌.

‘இங்கிருந்து எப்படி செல்வது?’

அவள் யோசனையில் ஆழ்ந்திருக்க காபிரியல் தம்பதியர் ஒரு படகில் ஏறுவது தெரிந்தது. அவர்களைக் கண்டதும் அவசர அவசரமாக நீலநிற மிதப்பானில் ஓடியவள் பயணத்திற்கான பணத்தைச் செலுத்தி அமர அவளருகே மூன்று இளைஞர்கள் அவளை வெறித்தப்படி அமர்ந்தனர். அதில் ஒருவனது பார்வை மிகத் தீவிரமாக ஆராய வைஷ்ணவி தனது கைப்பையை இறுகப் பற்றினாள். பெப்பர் ஸ்பிரே அவள் தேட அவனுடன் பயணிக்கையில் ஒரு முறை கூட அது அவனருகில் தேவைப்பட்டதாக உணரவில்லையே. பார்வைகளில் என்ன எண்ணங்களில் கூட எல்லை மீறாதவன் அவன். அவனைப் போய் அடித்து இப்படி தனித்து பயணித்து, வைஷ்ணவிக்கு எண்ண எண்ணவே தன் மீது கோபம் வந்தது.

Advertisement

அவளை வெறித்துக் கொண்டு இருந்தவன் நேரே அவள் அருகே வந்து அமர்ந்து பேச்சுக் கொடுத்தான்.

“ஆர் யூ ஃப்ரம் இந்தியா?”

வைஷ்ணவி அவனது கேள்வியைக் காதில் வாங்காது தனது கைப்பையை இறுகப் பற்றி கடலை வெறிக்கத் தொடங்க அவன் கண் ஜாடை செய்து அங்கேயே அமர்ந்தான்.

வைஷ்ணவி காப்ரியேல் இணையர் சென்ற படகைத் தேட அவளது கண்களில் தென்பட்டதில் எது அவர்களது படகு என அறிய முடியாதிருந்தது. ஏற்கனவே முன்சென்ற படகு செல்லும் தீவுக்கு என பணம் செலுத்தியிருந்தாள். போகிற இடம் சரியானதாக இருக்குமா? எப்போதும் தான் எடுக்கும் அவசர முடிவுகள்? அவள் சிந்தித்தப்படியே எதிரே தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த மூன்று இளைஞர்களைக் கண்டாள்.

பயண நேரம் எல்லாம் பயத்தின் காரணமாக மனதில் பதியாது அந்த படகு ஓர் தீவில் நிற்கவே அவசர அவசரமாக இறங்கிச் சென்றாள். உண்மையில் அவள் வந்து இறங்கியிருந்தது நார்த் பே தீவு. அதிகம் கூட்டம் இல்லை சில நீர் விளையாட்டுகள் மட்டும் நடந்துக் கொண்டு இருந்தது. அவள் கூட்டமாக இருக்கும் இடம் நோக்கி விரைய அவளது கண்கள் பின் வரும் மூன்று இளைஞர்களைப் பார்த்துக் கொண்டே தான் வந்தது. அவள் கடைகளில் பொருட்கள் வாங்குபவள் போல் நிற்க அந்த இளைஞர்கள் அவளைச் சீண்டாதே சற்றுத் தள்ளி ஆனால் அவளைக் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.

வைஷ்ணவி தேடிய வரையில் தன்னுடன் பயணித்த ஒரு இணையரைக் கூட காணவில்லை. யாருக்கு அழைக்கலாம் என்றாலும் அலைபேசி இணைய இணைப்பு தொடர்பு இரண்டும் இல்லை.

பசி அதிகமாக சரியாக சிந்திக்க கூட முடியாதது போலிருக்க அருகில் இருந்த ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் உணவருந்தச் சென்றாள். அவள் உணவை கொண்டு வரச் சொல்லி விட்டுப் பார்க்க அவளுக்கு எதிரே இரு இருக்கைகள் தள்ளி அந்த இளைஞர்கள் அவளை வெறித்துக் கொண்டு அமர்ந்திருக்க வைஷ்ணவி எழுந்தாள்.

அவசர அவசரமாக வெளியே வந்தவள் மீண்டும் படகுகள் இருக்கும் இடத்திற்கு செல்ல அந்த இளைஞர்கள் பின்னே வருவது வழியில் இருந்த தொப்பிக் கடையின் கண்ணாடி வழியேத் தெரிந்தது. சட்டென அப்படியே நின்றவள் அவர்களை நோக்கித் திரும்பினாள். திரும்பியவள் நேராக தன்னை நோக்கி வந்தவன் கன்னத்தில் பளார் என அறைய சுற்றிலும் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அவர்களைப் பார்க்கத் தொடங்கினர்.

“என்னடா? ஆளாளுக்கு ஃபாலோ பண்றீங்க? வாடா இங்கே டேய்?!”

மூவரில் ஒருவன் மறைய அவனை நோக்கி கத்தியவள் தன் கைகளில் சிக்கியிருந்த ஒருத்தனை தனது கைப்பையால் அடிக்க எங்கிருந்தோ ஒருவன் ஓடி வந்து அவளது கரங்களைப் பிடித்துக் கொண்டான். அவன் பிடித்ததும் அவளிடம் அடி வாங்கிய இருவரும் அவ்விடம் விட்டு ஓட வைஷ்ணவி கோபத்துடன் திரும்பியவள் அங்கே அசோக்கைக் கண்டதும் அதே கோபத்துடன் பேசினாள்.

“இப்ப எதுக்கு என்னைப் பிடிச்ச? அவனுகள..எங்கிருந்து துரத்திட்டு வர்றானுக தெரியுமா? நானும் போனால் போகட்டும் போனாப் போகட்டும் வந்த இடத்தில் பிரச்சினை வேணாம்னு பார்த்தா, பொறுக்கி நாய்ங்க”

அவள் மேலும் எகிற ஓடிய மூவருக்கும் அவள் பேசுகிற பாசை புரியாவிட்டாலும் அவள் கற்றுக் கொடுத்தப் பாடம் நிச்சயம் புரிந்திருக்கும்.

அவர்கள் செல்வதைப் பார்த்து கோபமுற்றவளாக அசோக்கிடம் திரும்பினாள் வைஷ்ணவி.

“அவனுகள எல்லாம் போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கணும் டேய்”

அவர்களை நோக்கி ஓடிய வைஷ்ணவியைப் பிடித்து நிறுத்திய அசோக் தலையிலடித்துக் கொண்டுப் பேசினான்.

“இந்த டிராவல் நான் வந்திருக்கிறதே இவளைக் காப்பத்தறதுக்குத் தானா ஆண்டவா! டேய் பிராவோ உன்னை!”

அசோக் புலம்ப வைஷ்ணவி தன்னைப் பிடித்திருந்த அவன் கைகளை உதறி அவனை நோக்கி சீறினாள்.

“ஆமா இவர் பெரிய கிருஷ்ண பரமாத்மா நான் திரௌபதி எனக்கு ஏதாவது பிரச்சனைனா உடனே வந்துருவாரு”

“நான் யாருக்கு வேணா கிருஷ்ணா இருக்கேன். உனக்கு மட்டும் நான் கிருஷ்ணனா இருக்க எனக்கு இஷ்டம் இல்ல”

அவன் சொல்வதில் இரு அர்த்தம் உள்ளது என்பதை அவளும் உணர்ந்தாள் இல்லை அவனும் உணர்ந்தான் இல்லை. அசோக் அவளிடம் மேலும் பேசினான்.

“நாம வந்திருக்கிறது அழகான அனுபவத்திற்கான பயணம் இதில போலீஸ் கேஸ் சாட்சினு சுத்தப் போறீயா?”

“அப்ப அவனுகளே அப்படியே விட்டுடலாமா?”

அவளது கேள்விக்கு அவளை ஆழமாகப் பார்த்து விட்டு அவளை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த கடைக்கு அழைத்துச் சென்றான். அவளை அமர வைத்து விட்டு உணவை ஆர்டர் செய்தான்.

உர்ரென்று அமர்ந்திருந்த அவளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு. சற்று முன் தன்னை அறைந்த ஒருத்தியிடம் தான் இவ்வளவு பொறுமையாகப் பேசுவோம் என அவனே எதிர்பார்த்திருக்கவில்லை. தன்னைப் பற்றி தான் அறியாத விடயங்களை எல்லாம் அறிமுகம் செய்யும் அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் அசோக். பின் பேசினான்.

“நீ எப்பொழுதுமே இப்படித் தானா?! பட்டாசு மாதிரி படபடனு வெடிச்சுட்டு”

“இப்ப என்ன நான் உன்னை அறைஞ்சேன் தப்பு தான் சாரி கேட்டுட்டேன். ஆனா நீ தான்”

அவனது கேள்விக்கு மீண்டும் வெடித்தாள் வைஷ்ணவி.

“நான் அதை சொல்லலை!”

“பின்னே இவனுகள அடிச்சது தப்புன்னு சொல்றியா?” வைஷ்ணவி கேட்க அசோக் நிதானித்து பதில் பேசினான்.

“இந்த உலகம் அனுபவத்துக்கானது. அழகான பல விஷயங்கள் மனிதர்கள் காட்சிகள் நிறைஞ்சது. குறையான, அருவெறுப்பான சிலதும் இருக்கு இதே உலகத்துல. இதில நீ எதைத் தேடி, எதை உன் மனசில போட்டு நிரப்பிக்கலாம்ன்கறது உன்னுடைய விருப்பம்‌”

“அப்ப இவனுக எல்லாம் தப்பு பண்ணிட்டே இருப்பானுக இவனுகள”

வைஷ்ணவி மேலும் விடாப்பிடியாக நிற்க

“சரி போ! போய் உன் விலைமதிக்க முடியாத நேரத்தையும் மனநிம்மதியையும் அவனுகளுக்கு கொடுத்துட்டு உட்காரு. அவனுக அடுத்த தப்புக்கு போய்ட்டே இருப்பானுக. இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை, வார்த்தைகளும் எண்ணங்களும் தான். அதை உருவாக்கறவன் அதையே தன்னை நோக்கி ஈர்க்கிறான். உன் எண்ணத்திலும் வார்த்தையிலும் பாசிடிவ்வான விஷயங்களை மட்டும் நிரப்பி வை. நான் கிளம்பறேன்”

அசோக் சொல்லிக் கிளம்ப வைஷ்ணவி திடுக்கிட்டாள்.

‘அப்ப இவனுக்கு இன்னும் கோபம் தீரலையா?’

வைஷ்ணவி அவன் செல்வதைப் பார்த்திருக்க அசோக் திரும்பினான். அவன் தன்னை அழைப்பதற்குத் தான் திரும்பினான் என அவள் ஆவலோடு பார்க்கப் அசோக் பேசினான்.

“அப்புறம் நீ என்னைக் கண்ணாடிலப் பார்த்ததுக்கு அப்புறம் தான் அவனுகளை அடிச்சனு தெரியும். நான் எப்பவும் உன் கூடவே இருக்க மாட்டேன். தேவையில்லாத சிக்கல்ல மாட்டிக்காத! இந்த மாதிரி பயணத்தில இப்படி யாராவது தொல்லை பண்ணினா யூனிபார்ம்ட் பர்சனல் யாராவது இருப்பாங்க அவங்கள தேடிப் போ. இப்ப நீ பண்ணினதும் சரி தான். ஆனா வார்த்தையோட நிறுத்தியிருக்கணும் எனிவே கூட்டமா இருந்துச்சு பரவாயில்லை. தனியா இருக்கும் போது தற்காப்பு தான் முக்கியம் புரியுதா?”

அசோக் சொல்லி விட்டு விடுவிடுவென சென்றவன் அவள் பார்வைகளின் எல்லையில் இல்லாது, காணாது போயிருந்தான். மீண்டும் தனித்து விடப்பட்டிருந்தாள் வைஷ்ணவி.

அடுத்து எப்படி இயங்குவது எனப் புரியாது அமர்ந்து இருந்தவள் அவன் ஆர்டர் செய்து சென்ற உணவை உண்டு அமர்ந்து இருந்தாள்‌. பின் அவன் சொன்ன அழகான நினைவுகளைச் சேகரிக்க முடிவு செய்து அந்த தீவைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தாள்.

அங்கிருந்த நீர் விளையாட்டுகளில் ஸ்கூபா பயணம் மேற்கொண்டாள். கண்ணின் முன் விரிந்த சிவப்பு பச்சை மஞ்சள் நிற மீன் கூட்டங்கள், பாறைகள் தண்ணீர் ஒளித்து வைத்திருக்கும் தனிப்பெரும் உலகத்தை தனித்துச் சென்று ரசித்தது வார்த்தைகளில் அளவிட முடியாத தைரியத்தை அவளுள் விதைத்தது. இரு மணிக்கூறுகள் எப்படிப் பறந்து சென்றது என்பதை அவளது பறவை மனது உணர்வதற்குள் மெல்ல அந்த தீவு காலியாவதை உணர்ந்தாள். அங்கிருந்து நடந்தே படகு செல்லும் இடத்திற்குச் செல்லலாம் என நடக்கத் தொடங்கினாள். வழியில் குடிசை போன்ற அமைப்புக் கடைகள் உள்ள ஒரு விடுதி வழியாக புதர்களுக்கு நடுவே பயணிக்க தென்னை மரங்கள் பார்வைக்குத் தெரிந்தது. அங்கங்கே சில குடிசைகள் வேயப்பட்டு பின் பராமரிப்பு இன்றி விடப்பட்டிருந்தது. வழி மாறி விட்டோமா என அவள் குழம்பி நிற்க பின்னே ஆள் நடந்து வரும் அரவம் கேட்டுத் திரும்பினாள். ஒருவருமில்லை. மீண்டும் நடந்தவள் சத்தம் அதிகமாகத் திரும்ப அங்கே அவள் ஓங்கி அறைந்து அடி வாங்கிய இளைஞன் கண்களில் கோபத்துடன் நின்றிருந்தான். அசோக் சொன்னது நினைவு வந்தது. சுற்றியும் யூனிஃபார்ம்ட் ஆட்கள் ராணுவம் போலீஸ் செக்யூரிட்டி ம்ஹூம் ஒருவருமில்லை. தற்காப்புக்கு ஓடுவது தான் வழி. வைஷ்ணவி சரசரவென அங்கிருந்து ஓட மூவரில் ஒருவன் வேறொரு திசையில் இருந்து அவளைத் துரத்த வைஷ்ணவி புதர்கள் தாண்டி ஓடத் துவங்கினாள் முக்கியமாக பெருங்குரல் எடுத்து சத்தமிட்டு ஓடத் துவங்கினாள்.

அவள் நினைத்தது போலவே கடற்கரை வந்திருக்க வெள்ளை வெளேர் என்ற மணல் திட்டு அவளை வேகமாக ஓடாது செய்தாலும் பார்வைக்கு தெரியும் இடத்தில் வந்து விட்டதாக அவள் நினைத்திருக்க உண்மையில் அது தீவின் மறுபுறம் ஆள்அரவம் எதுவுமின்றி இருக்க அவள் முன்னே அந்த இளைஞர்கள் மூவரும் அவளுக்கு புரியாத பாஷையில் சத்தமிட்டப் படி அவளை நெருங்க அவள் தன் பின்னே சத்தம் கேட்டுத் திரும்பினாள். அவள் நெஞ்சம் அச்சத்தில் மூழ்கி இருந்தது. இந்திய நாட்டு இருபது ரூபாய் நோட்டின் பின்னிருக்கும் நார்த் பே தீவு காட்சி தனக்கு இப்படி ஒரு அனுபவத்தைத் தரும் என அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அங்கே காப்ரியேல் அடலின் இருவரும் மறைவுத் தாண்டி வந்துக் கொண்டு இருந்தனர். நார்த் பே தீவில் உள்ள கலங்கரை விளக்கைப் பார்க்க சிறிய குன்று ஏறிச் சென்றவர்கள் அதனைப் பார்வையிட்டு விட்டு கடற்கரையில் நடந்து சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அவ்வழியே வந்திருந்தனர். வைஷ்ணவி கண்களில் கண்ணீர் துளிர்த்தது. வைஷ்ணவி அழும் நிலையில் நின்றிருக்க அடலின் பேசினார்.

“ஹே அசோக்?”

அடலின் தன்னை நோக்கவில்லை என்பதை அப்போது தான் அறிந்து வைஷ்ணவித் திரும்ப அங்கே அந்த மூவரையும் அடித்துக் கீழேத் தள்ளி விட்டு வைஷ்ணவியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தான் அசோக். அவளின் ஆபத்துக்கால துணையானவன். அவளுடைய துடுக்குத்தனத்தின் பெரும் ரசிகன்.

கவிதை

என் தடுமாற்றங்களில்

உன் தடம் தெரிகிறது!

தயக்கங்கள் எதுவுமின்றி

என் நிமிடங்கள் தாராளமாகவே

தாரை வார்க்கப்படுகிறது

உன் நினைவுகளின் சுகங்களுக்காய்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!