Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

06 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 6

.



Advertisement

வசந்த முல்லை போலே வந்து

அசைந்து ஆடும் பெண்புறாவே

மாயமெலாம் நானறிவேனே

Advertisement

வா வா ஓடி வா!

Advertisement

பாடல் மெல்லிய இசையாக வீட்டை நிரப்பிக் கொண்டிருக்க, சலக் சலக் என அதையும் தாண்டிய கொலுசொலியே கூறியது வீட்டினுள் ஓடுவது யார் என்று.

Advertisement

“என் அழகு குட்டி செல்லம்… வாங்க வாங்க” என பாட்டி, ததக் புதக் என முழுப் பாதத்தையும் தரையில் பதிக்காது ஓடி வந்த குட்டி அழகியின் பக்கம் கை நீட்ட, அவளுக்குப் பாட்டி எல்லாம் இன்று கண்ணில் படவில்லை.

“ல்லகு…” என ரகுவின் அறையை நோக்கி அவளின் ஓட்டத்தைத் தொடர்ந்தாள்.

“ல்ல்லகு…” என்ற மழலையில் சத்தம் கீதமாகத் தோன்ற இன்னும் இழுத்துப் போர்த்திக்கொண்டு குட்டி ரகு உறக்கத்தைத் தொடர்ந்தான். கட்டிலின் கீழே நின்றிருந்த சின்ன குட்டியால் என்ன முயன்றும் மேலே ஏற முடியவில்லை. கீழே நின்று கொண்டே தளிர் கரம் நீட்டி, தூங்கிக் கொண்டிருந்தவன் முகத்தில் அறைந்து, தலை முடியை இழுத்து… “ல்ல்லகு.. லகு எஞ்சி லகு” என மழலையில் மிழற்றி எழுப்பினாள் ரகுவை.

முதலில் ஒன்றும் புரியவில்லை சின்னவனுக்கு. கண்களைக் கசக்கி எதிரே தெரிந்த உருவத்தைப் பார்த்தான். ஈ என அனைத்துப் பால் பற்களையும் காட்டி சிரித்த குழந்தை தன் குட்டி குட்டி கைகளை அவன் முகத்திற்கு நேராக விரித்து “ல்லகு” என மழலையில் அவன் பெயரை இனிமையாக்கிக் கொண்டிருந்தாள்.

“ச்ச்சூக்கு…” என இரு கரங்களையும் நீட்டி, தன்னை மேலே தூக்கச் சொல்லி கேட்கும் சின்ன குட்டியைப் பார்த்தான். நேற்று அறிமுகமாகி, நேற்றே தோழியுமாகிய பக்கத்து வீட்டு குட்டி தோழியைப் பார்த்தவன், முகம் மலர்ந்து சிரித்தான்.

குட்டி பாப்பா தன்னை பெரியவனாகப் பாவித்து தன்னை நோக்கிக் கரங்கள் நீட்டி நிற்கிறாள். “பேபி” என்றான் சிரிப்போடே.

கைகளை அவனுக்கு நேரே விரித்து, “ன்நானு பேலி” எனப் பற்கள் காட்டி சிரித்தவள், “ல்ல்…ல்லகு ச்சூக்கு…” என்றாள் மீண்டும்.

கட்டிலின் கீழே இறங்கியவன் அவளைத் தூக்க முடியாது தூக்கி மேலே போட்டான். அழ வேண்டியவளோ கைகொட்டி சிரித்தாள். அந்த சிரிப்பு அவனையும் தொற்றிக் கொண்டது.

காலைப் பொழுது இரு குழந்தைகளின் கீச்சொலியில் அழகாகப் புலர்ந்தது.

“ரகு கண்ணு, உச்சா போயிட்டு வா” எனப் பேரனை பாட்டி விரட்ட, “ல்ல்லகு நானு உச்சா. ச்சூக்கு பாத்தி” என பாட்டியை நோக்கி கை விரித்தாள் குட்டி மகள்.

“அண்ணா உச்சா போயிட்டு, பல் தேச்சுட்டு வருவான் உன் கூட விளையாட” என்ற பாட்டி, குட்டி மகளுக்குப் பால் கொடுத்து அமர வைத்தார். இது அங்கு வழமை என்பது போல் அவளும் சிப்பி கப்போடு அவன் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

தன் வீட்டில் பாதி நேரம் என்றால், குழந்தையின் மீதி நேரம் பாட்டியின் வீட்டில் நகரும். அவன், மீண்டும் “பேபி” என அழைத்துக் கொண்டு வரும் வரை அமைதி காத்தவள் அதற்கு மேல் பொறுக்க இயலாதவளாய் பால் கப்பைத் தூர எரிந்து, “வ்வா ல்லகு அப்பா ப்ப்போயாம்” என மழலையில் மொழிந்தாள்.

அவனுக்கு என்ன புரிந்ததோ… அவள் இழுப்பிற்கு எல்லாம் செவி மடுத்தான். அவள் பேச்சை எல்லாம் கேட்டு அவளோடு நடக்கும் அந்தச் சிகப்பு மனித பொம்மையை சின்னவளுக்கு மிகவும் பிடித்துப் போனதில் எந்த அதிசயமும் இல்லை. அப்படித் தான் இருந்தான் ரகு. சின்னதாக, சிகப்பாக பார்க்க அத்தனை அழகாக…

எல்லாவற்றிற்கும் மேல், மழலையில் அதிகாரம் செய்யும் அந்த குட்டி உருவம் கூறுவதை எல்லம் கேட்டுக் கொண்டு இருக்கும் சிறுவனை எப்படிப் பிடிக்காது போகும் குழந்தைக்கு?

கைபிடித்து, ரகுவோடு தன் வீட்டை நோக்கி நடந்தாள் சின்னவள். கொலுசொலியோடே, “ப்பா” என விளித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவளை வரவேற்க அவளின் அப்பா காத்திருந்தார்.

பேபியின் தகப்பன், “வாங்க வாங்க… என் தங்கப் பாப்பா கூட யாரு வரது?” என இரு கரங்களையும் நீட்டி வாஞ்சையாக அழைத்தார், மகள் கையை பிடித்து தயக்கத்தோடு வாசலில் வந்து நின்ற அந்தக் குட்டி உருவத்தை நோக்கி.

சிரித்த முகமாய் தன்னை நோக்கி கையை நீட்டியிருந்த மனிதனிடம் பாய்ந்து ஓட மனம் ஆசை கொண்டது குட்டி ரகுவிற்கு. இருந்தும் ஒரு சின்ன தயக்கம். தன் விரல் பிடித்துத் தளிர் நடையிட்டு தன்னை அவளின் இல்லத்திற்கு அழைத்து வந்த குட்டி தேவதையின் முகம் பார்த்தான் ரகு.

“ப்பா.. ப்பா” என ரகுவை விடாது அவனை இழுத்துக் கொண்டே அப்பாவிடம் ஆசையோடு ஓடின மகளை ஒரு கையிலும், அவரை வாஞ்சையோடு பார்த்த ரகுவை ஒரு கையிலுமாக தூக்கியவரை விழி விரித்துப் பார்த்தான் சின்னவன்.

“யாரு இது? என் தங்க பாப்பாவோட ஃப்ரெண்டா?” என்ற அப்பாவின் கேள்விக்கு இல்லை எனும் விதமாகத் தலையசைத்த குட்டி மகள், “ல்ல்லலகு” என்றாள்.

“ரகுவா? ரகு உன்னோட பெரியவங்க தான… அப்போ அண்ணா சொல்லணும்” என்றார் அப்பா.

இல்லை… என்று தலையாட்டி மீண்டும் “ம்ம்ம்மை ல்ல்லகு அப்பா” என்றாள் மகள். அவன் அவளுக்கு ரகு. அவ்வளவு தான். அம்மா ரகு என்றார். அவன் ரகுவாகி போனான்.

செல்ல மகளுக்குத் தலையாட்டியே பழக்கப்பட்டிருக்கும் சில அப்பாக்களைப் போலவே இவரும் பழகி இருப்பார் போலும். மகளின் கூற்றுக்குச் சிரித்த அப்பா, “சரி… ரகு!” என்றார்.

அப்பாவும் ரகுவை ஏற்றுக் கொண்ட குஷியில், “ப்ப்ப்பா ல்லகு” என்றவள் தன் அப்பாவின் கழுத்தைக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டாள். ஆசையோடு பார்த்திருந்த பிஞ்சின் ஏக்கப் பார்வை அந்த மனிதரை ஏதோ செய்தது.

பேபி அவள் அப்பாவிடமிருந்து இறங்கி ஓடிய பின்னும், வாரி அணைத்திருந்த பேபியின் அப்பாவின் அணைப்பிலிருந்து கீழே இறங்கவே இல்லை ரகு. இந்த அணைப்பிற்காக அவன் எத்தனை நாள் ஏங்கியிருப்பான். வாஞ்சையோடு தன் கழுத்தைக் கட்டியிருந்த அந்தக் குட்டி உருவத்தை நெஞ்சோடு அணைத்து உச்சி முகர்ந்தவருக்கு ஏனோ அந்தப் பிள்ளையை அவ்வளவு பிடித்துப் போனது.

“ஐயா… தென்னமரம் ஏறவாங்க?” எனக் கேட்டு வந்தவனிடம், “இன்னைக்கு வேண்டாம். குழந்தைங்க இங்கயும் அங்கையுமா ஓடிட்டு இருக்காங்க” என வந்தவனை அனுப்பி வைத்தார் குழந்தையின் தந்தை.

இவர் ‘ஐயா’வா என பார்த்துக் கொண்டிருந்தான் குழந்தை. தன்னையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் பெரிய பெரிய விழிகள் அவரை விழுங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனிக்கவே செய்தார்.

அணைத்துப் பிடித்திருந்த ரகுவின் தலை வருடி, உச்சியில் முத்தமிட்டு, “சாப்டிங்களா நீங்க?” என அன்போடு அவர் கேட்க, குழந்தை உடைந்தே போனான். கண்கள் நீரை நிரப்ப, உதடு கீழ் நோக்கிப் பிதுங்க ஆரம்பித்தது. எத்தனை நாள் கனவு இது? தன்னை மார்போடு தந்தை ஏந்த வேண்டும், தலை வருடி அன்றைய நாளை பற்றி விசாரிக்க வேண்டும், வயிறு நிரம்பியதா என அக்கறை கொள்ள வேண்டும் என எத்தனை நாள் ஏங்கி இருப்பான். இப்படி அதை ஒரே நொடியில் ஒரு மனிதனால் நிறைவேற்ற முடியுமா?

ரகுவின் சின்ன இதயத்தின் ஏக்கமெல்லாம் இவ்வளவு தானா? இதற்கா இந்த பச்சிளம் குழந்தை ஏங்கித் தவித்தது?

“என்ன டா கண்ணா பாக்கிற? பசிக்குதா? சாப்பிடலாமா?” எனக் குட்டி மகனை அன்போடு மார்பில் அணைத்துக் கொண்டவரை, “ஐயா” என்றான் விசும்பலோடே. அந்த நொடி அவருக்கும் அவன் பெறாத மகனாக மட்டுமே தெரிந்தான் போலும், “ஒண்ணும் இல்ல… ஒண்ணும் இல்ல” என மகனை தன்னுள் பொத்தி வைத்துக் கொண்டார்.

அவனைப் பற்றியும், அவன் நிலையை கேள்விப்பட்ட அன்றே அவரின் மனம் கனத்து போனது. ‘தாயில்லாத பிள்ளையை எப்படி ஒரு தகப்பனால் விடமுடிந்தது?’ என்பது தான் அவரின் கோபம்.

“ரெண்டாவது கர்ப்பமாம். தல சுத்தல் வாந்தின்னு இவன கவனிக்க முடியலியாம். அதுதான் அம்மாச்சியோட இருக்கட்டும்ன்னு விட்டுட்டு போயிருக்கார் ரகுவோட அப்பா” என மனைவி முன்தினம் கூறிய போதே அவ்வளவு வருத்தம் இவருக்கு.

“ஓ… அவங்க பெத்த முதல் பிள்ளைய என்ன பண்ணினாங்க?” என்ற கேள்விக்குப் பதில் தேவைப் படவில்லை என்றாலும், “மகனைப் பெற்ற தகப்பனுக்கு கடமை இல்லையா?” என்ற கேள்விக்கு பதில் வேண்டும் போல் இருந்தது. 

ரகுவை பார்க்கும் வரை ‘கடமை’ என்பது வரை மட்டுமே யோசித்தார் சின்னவளின் தகப்பன். ஆனால் இந்த நொடி… அந்தக் குட்டி உருவத்தின் ஏக்கப் பார்வையும், அவன் கண்களில் தெரிந்த வெறுமையும், ஒரு தகப்பனாய் உருகிப் போனார் ரகுவின் ஐயா.

“ரகு குட்டிக்கு என்ன பிடிக்கும் சாப்பிட?” என பேபிக்கு ஊட்டிக் கொண்டே வந்த அம்மா, அவனிடம் கேட்டார்.

அவனிடம் பதில் இல்லை. இவன் பிடித்தத்தை இன்றுவரை யார் கேட்டது? கொடுப்பதைச் சாப்பிட்டு தானே பழக்கம். அதனால் அவனிடம் பதில் இல்லை.

“அம்மா ஊட்டினா சாப்பிடுவ தானே?” என ஆசையோடு அவர் கேட்டு ஊட்டும் முன்னமே, “ச்ச்சாப்பி ல்ல்லகு” எனப் பொங்கலை அள்ளி எடுத்து அவன் வாயில் திணித்திருந்தாள் குட்டி அழகி.

“தாரா… அவன் முகம் பூரா பூசாத” என அன்னை, இடுப்பில் இருந்த மகளை அதட்டினாலும் அவள் காதில் அதெல்லாம் விழவில்லை.

“ச்ச்சா..சாப்பி ல்லகு” என மீண்டும் பொங்கலை அப்பாவின் கரத்தினுள் அடங்கியிருந்தவன் வாய்க்குள் விழுந்தடித்துக் கொண்டு திணித்தாள்.

‘யார் இதில் அவன் அம்மா?’ எனப் பார்த்தான் இருவரையும். குட்டி குட்டி விழி விரித்து… வாயில் பொங்கல் வழிய, “ச்சாப்பி ச்ச்சாப்பி” எனத் தலை அசைக்கும் அவன் பேபி தான் அவனுக்கு அம்மாவாகத் தோன்றினாள்.

“அடியேய்… அவன் முகம் பூரா பூசி வச்சிருக்க பாரு.” என கூறிக்கொண்டே ரகுவின் முகம் துடைத்து, “இது வெண் பொங்கல். ரகுவுக்கு பிடிக்குதான்னு பார்ப்போமா? இப்போ வாய் திறங்க” என உணவை ரகுவிற்கும் மகளுக்குமாக ஊட்டினார் சந்திரிகா.

பிடித்தது. அவ்வளவு பிடித்தது ரகுவிற்கு. உணவா இல்லை தன் மேல் பொழியும் இந்தப் பாசமா என அவனுக்கு பிரித்தறியத் தெரியவில்லை. சந்திரிகா அவர் கரம் கொண்டு ஊட்டியதை நல்ல பிள்ளையாக வாங்கிக் கொண்டான்.

ஐயா, அம்மா, பேபி என்று தனக்கென ஒரு குடும்பம் ஏற்பட்ட அந்த நாள், ரகுவின் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஐயா, அம்மா இருவரும் எந்தப் பாரபட்சமும் பார்க்கவில்லை. இரு பிள்ளைகளையும் ஒன்று போலவே பாவிக்க, குட்டி ரகுவின் பெற்றோர் ஏக்கம் எங்குச் சென்றதோ தெரியவில்லை.

அன்று முழுவதும் மனம் போல் பேபியோடு விளையாடினான். அவனோடு ஆசையாக நேரம் செலவழிக்க அவனைச் சுற்றி ஆள்கள் இருந்து கொண்டே இருந்தனர். தூங்கி விழுந்தவனைத் தட்டி கொடுத்துப் படுக்க வைக்க ஆள் இருந்தது. பசியால் வயிறு வலி வரவில்லை.

அன்று இரவு தன் மெத்தையில் இருந்து நிலவைக் கண்ட ரகுவின் கண்களில் ஏக்கமில்லை. நிலவில் ஒருவரையும் அவன் விழி தேடவில்லை. தென்றலோடு தாலாட்டும் அவனை நித்திரைக்குள் ஆழ்த்தியது.

போதும். இப்படியான நாள்கள் தனக்குப் போதும் என ரகு எண்ணினான். ஆனால் அந்தச் சின்ன சிறு குருத்திற்குத் தெரியவில்லை வார நாட்களில் இவை எல்லாம் அவனுக்கு திகட்ட திகட்ட கிடைக்காதென்று.

திங்கள் காலையில் தாராவை காண ரகு ஓடி வந்தான். இருவருக்குமாக உணவை ஊட்டினார் சந்திரிகா.

“நீ சமத்தா பாட்டி கூட விளையாடிட்டு இருப்பியாம். தாரா பிளே ஸ்கூலுக்கு போயிட்டு ஈவ்னிங் உன் கூட விளையாட வருவா சரியா?” என்ற அன்னையின் கூற்று புரிய நேரம் எடுத்தது ரகுவிற்கு.

“த்த்தாதா ல்லலகு” என வெளி கேட்டை பிடித்து நின்ற ரகுவிற்கு ‘டாடா’ கூறி சின்னவள் செல்லும் வரையுமே ரகுவிற்கு சந்திரிகா கூறியது புரியவில்லை.

காலையில் வேலைக்கும் செல்லும் பெற்றோர், மகளை நர்சரியில் விட்டுவிட்டு செல்ல, மாலை நான்கு மணி அளவில் பாட்டியும் அவர் வீட்டில் வேலை செய்யும் மலருமாகத் தாராவை வீட்டிற்கு அழைத்து வருவர்.

அதன் பின், இரவு ஏழு அல்லது சில நேரங்களில் எட்டு வரையுமே பாட்டியும் பேத்தியுமாக நேரம் கடத்துவர். வார இறுதியில் அப்பாவோடு செல்லம் கொஞ்சி… அம்மாவோடு விளையாடி என்று நேரம் கடத்துவாள் குட்டி மகள். இது தான் அவளது வழமை. இப்பொழுது புதிதாக, ரகு என்னும் குட்டி சைஸ் பொம்மை அவளுக்குக் கிடைத்துவிடவே சின்னவளின் நேரம் முழுவதும் ‘லலலகு’வோடே சென்றது.

திங்கட்கிழமை ஆரம்பிக்கவும் அவன் கண்டு ருசித்த உலகம் மாறிப் போனது. அவனை ‘லகு’ என கன்னம் தட்டி எழுப்ப பேபி வரவில்லை. அவனோடு சேர்ந்து பால் அருந்தவில்லை. மூன்று வேளையும் ஒரே தட்டில் வைத்து அம்மா இருவருக்கும் உணவை ஊட்டவில்லை. தூக்கிப் போட்டுப் பிடித்து ஐயா கொஞ்சவில்லை. தோள் சாய்த்துத் தட்டி தூங்க வைக்கவில்லை. மீண்டும் அதே பழைய உலகம்.

பாட்டி எழுப்பினார். தாத்தா உதவினார். தனியே பால் குடித்தான். தாத்தாவோடு அமர்ந்து காலை உணவை உண்டான். தனியே அமர்ந்து விளையாடினான். நேரம் போகாது பேப்பரில் வண்ணம் தீட்டினான். கால் விரல் வலிக்க… பூட்டியிருந்த பக்கத்து வீட்டை ஏக்கத்தோடு பார்த்தான்.

ஏன் என்னானது அந்த இனிமையான இரண்டு நாள்கள்? அவனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரவர் வேலைக்குச் சென்றுவிட ரகு மீண்டும் தனித்து போனான். மாலை இவன் வாசலில் சைக்கிள் உருட்டும் வேளையில் பேபி வருவாள் என்பது மட்டும் அடுத்து வந்த நாள்களில் புரிந்தது.

சில தினங்கள் அவள் தூங்கிக்கொண்டே வருவாள். அன்றெல்லாம் ரகுவை பாட்டி அவள் அருகில் விட மாட்டார். “பேபி தூங்கட்டும்” என்பார். அவள் எழுந்த பின் சற்று நேரம் விளையாடிய பின் பாட்டி அவளுக்கு உணவு ஊட்ட என அவளை அழைத்துக்கொள்வார். அதன் பின் அம்மா வந்து அவளை அழைத்துச் சென்றுவிடுவார். அதுவே வாரம் முழுவதும் நீள அந்த பச்சிளம் பிள்ளை துவண்டு போனான்.

மீண்டும் தனிமையும் ஏமாற்றமுமே மிஞ்சியது. அந்த ஐந்து வயதிலேயே வாழ்க்கை வெறுமையும் கசப்புமாகத் தோன்றியது சிறுவனுக்கு.

அதிசயமாக மீண்டும் அந்த ‘இரண்டு நாள்கள்’ வந்தன. வாடிய பயிருக்கு நீர்பாய்ச்சினால் என்னாகும்? அதுதான் நிகழ்ந்தது. வார இறுதி இனிதாகக் கடந்தது. சில நாட்களிலேயே ‘இது தான் தனக்கான வாழ்க்கை’ என்ற புரிதல் வந்தது சிறுவனுக்கு. தாத்தா பாட்டியோடு பழகிக் கொண்டது குழந்தை.

மாலை, நர்சரியிலிருந்து வரும் சின்னவள், அம்மா வரும் வரை பாட்டியோடு தங்குவது வழமை என்பதால் மாலை வேளைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான் ரகு.

இப்பொழுதெல்லாம் தாராவும் தூங்காது, வீட்டுக்குள் நுழைந்ததுமே, “ல்..ல்..லகு… லகு..” என அவனையே பூனைக் குட்டி போல் சுற்றி வருபவள் அவனைத் தன் பொம்மையாகவே பாவித்தாள். அவனும் சலிக்காது “பேபி குட்டி…” என பிஞ்சின் கைப்பிடித்து அவளையே சுற்றி வந்தான். 

“லலலகு சூக்கு” என்று நிற்பவளை தூக்க தெரியாது தூக்குவான். அதில் இருவருக்குமே மகிழ்ச்சி. அந்த குட்டிக் குட்டி கைகளும், கொஞ்சும் குரலும் சின்னவனின் தனிமையைத் துடைத்துப் போட்டது. 

மாலையில் அம்மா வீட்டிற்கு வந்ததும் ரகுவும் பேபியோடு செல்ல ஆரம்பித்தான். அதன்பின் இரவு தூங்கும் வரை அவன் இருப்பிடம் அவன் ஐயாவின் மடி தான். சொர்க்கமாக நாள்கள் நகர்ந்தன.

‘இரண்டு மாதமே இங்கு’ என்று வந்தவனை அருகிலிருந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தனர். ஏனோ மற்ற பிள்ளைகள் போல் முதல் நாள் அழவில்லை ரகு. இருந்து கொண்டான். நாள்கள் நகர்ந்தன. வார நாள்கள் ஒன்று போலவே சென்றன. காலை எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பி ஓட்டம். பள்ளியில் அவனைப் போலவே சிறுவர் இருந்தனர். அனைவரோடும் நன்கு பழகினான். விளையாடினான். படித்தான். மாலை வரும் வழியில் பேபியும் அவனோடு இணைந்துகொள்ள ரகுவின் வாழ்வில் வானிலை மாறியது. அவன் காட்டில் மழை, அதில் இன்பமாக நனைந்தான் ரகு.

இப்பொழுதெல்லாம் அவனுக்குப் பள்ளியிலும் தோழர் உண்டு, வீட்டைச் சுற்றியும் தோழர் உண்டு. அவன் வீட்டை சுற்றி காலி நிலம் இருக்க, அவன் வயது அக்கம் பக்கத்து பிள்ளைகளோடு அவன் வீட்டை சுற்றி விளையாட ஆரம்பித்தான். ரகு நன்கு பழகிக் கொண்டான் அங்கு. தாத்தா பாட்டி அவனைப் பெற்றெடுக்காத பெற்றவர்களாக மாறினர். தாத்தா பாட்டி வீடு, தன் வீடாக மாறிப் போனது. சென்னை வீடு… அப்பா வீடாகத் தோன்றியது.

“பாட்டி… ஹோம் வர்க்ல ஃபேமிலி போட்டோ ஒட்டணுமாம்” என வந்து நின்றான் ரகு.

“அதுக்கு நான் எங்க டா போவேன்?” என்றவர் கணவனிடம் அதையே கூற, அவர்கள் மூவரையும் புகைப்படம் எடுக்கப் புகைப்படக் கலைஞன் அழைக்கப்பட்டான்.

ரகு முன்போல் உணர்ச்சிகளை அடக்குவதில்லை என்பதால், “எல்லார் ஃபேமிலி பிக்ச்சர்லயும் அம்மா அப்பா இருக்காங்க. எனக்கும் அம்மா அப்பா வேணும்” என சிறியவன் கண்களைக் கசக்கினான்.

“இப்போ அவங்களுக்கு எங்க டா போவேன்.” என நொந்துக் கொண்டவர், “அப்பாக்கு வேலை இருக்கு ரகு கண்ணு. எப்படி வருவாங்க? பாட்டி தாத்தா போதும், மிஸ் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.” என ரகுவின் கண்களைத் துடைத்து விட்டாலும் அவன் காதில் எதுவும் ஏறியதாக தெரியவில்லை.

“பெத்த பிள்ளை ஒண்ணு இங்க இருக்குன்னு இவன் அப்பனுக்கு நினைவிருக்கான்னே தெரியல. இதுல போட்டோக்கு அப்பன் வேணுமாம் என் குழந்தைக்கு” என்ற புலம்பல் புரியவில்லை என்றாலும் பாட்டியிடம் அவன் சண்டையிடுவதை நிறுத்தவில்லை.

“என்ன ரகள இங்க நடக்குது?” என கேட்டுக் கொண்டே அவனின் ஐயா வந்து அவனைத் தூக்கி பொட்டு பிடித்து விளையாட்டு காட்டினார். சின்னவன் வயிற்றில் உதடு குவித்து கிச்சு கிச்சு மூட்ட, ரகு பொங்கிச் சிரித்தான்.

“இப்படி தான் எப்பவும் ஹேப்பியா இருக்கணும் என் ரகு குட்டி” என அவனைத் தன்னோடு அணைத்து எப்பொழுதும் போல் உச்சி முகர்ந்தார்.

“ந்ந்நானு ப்பா” என வந்து நின்ற பேபியை மறு கையில் தூக்கி எடுத்தார் அப்பா. தன்னையும் பேபியையும் ஒன்றாக தூக்கக் கூடிய திடகாத்திரமான ஐயாவை பார்த்தான். குட்டி மகள் வந்ததும் அவனைப் புறக்கணிக்காது அவர் கைக்குள் தன்னையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அப்பா என்றால் யார்? தன் மேல் எல்லாக் காலகட்டங்களிலும் அன்பு காட்டி… யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது… எப்பொழுதும் அக்கறை கொண்டு… கண்ணீர் துடைத்து… தன் பலம் கொண்டு பாதுகாக்கும் மனிதர் என்றிருந்தார் ஆசிரியர். அப்பொழுது இவர் தான் என் அப்பா என மனம் அவனுக்கு எடுத்துச் சொன்னது.

“ல்ல்லகு லகு” என அவனையே சுற்றி வருபவள் இல்லாது புகைப்படமா? “பேபியும் வேணும்” என ஆரம்பித்தவன், “ஐயா அம்மா வேணும்” என முடித்தான். பின்னே அவன் குடும்ப படத்தில் அவன் அம்மா அப்பா இடத்தை யார் நிரப்புவதாம்?

ஒருவழியாகத் தாத்தா பாட்டி நாற்காலியில் அமர அவர்கள் பின்னால் ஐயாவும் அம்மாவும் ஆளுக்கு ஒரு பிள்ளையை ஏந்தியவாறு நிற்க, அழகான அர்த்தமான குடும்பப்படம் எடுக்கப்பட்டது. அதுவே இரு வீட்டின் நடுக் கூடத்தையும் அலங்கரித்தது.

தாராவின் மூன்றாம் பிறந்த நாள் வந்தது. மகளுக்கு உடுப்பெடுக்கச் செல்லும் வேளை, ரகுவையும் கடைத் தெருவிற்கு அழைத்துச் சென்றனர்.

“என் பட்டு குட்டிக்கு என்ன கலர் வேணும்…?” என ஆசை ஆசையாக மகளுக்கு பார்த்துப் பார்த்து எடுத்தார் சந்திரிகா. அதே அன்போடும் ஆசையோடும் ரகுவிற்கும் அவன் விருப்பம் கேட்டு சட்டையும் கால்சட்டையும் எடுக்க, ரகுவிற்கு தலை கால் பிடிபடவில்லை.

பெட்டி நிரைய ஆடைகள் இருந்தாலும் சின்னவன் மனம் துள்ளிக் குதித்தது. “எனக்கா ஐயா? எனக்கா அம்மா? பேபிக்கு தான பர்த்டே? எனக்கும் புது டிரெஸ்சா?” என முகம் முழுவதும் மலர்ச்சியை அப்பி நின்ற மகனின் கன்னத்தை வருடிய அம்மா, “பேபி பர்த்டேக்கு என் ரகு குட்டிக்கு புது டிரெஸ் இல்லாமலா?” எனவும் அவரை பாய்ந்து அணைத்த சின்ன வாண்டு ஆசையாக அவர் கன்னத்தை ஈரப் படுத்தியே விட்டான்.

இருவருக்கும் துணி எடுத்து, விளையாட்டு பொம்மைகள் வாங்கி, ஹோட்டலில் உணவு முடித்து வீட்டுக்கு வரும் வேளை ரகு, அவன் ஐயாவின் கழுத்தை கட்டிக் கொண்டு உறங்கி இருக்க, மகள் சந்திரிகாவின் தோளில் உறங்கி இருந்தாள்.

இப்படியான ஒரு குடும்ப வாழ்வை எதிர்பார்க்காத ரகுவிடம், “ஹூ இஸ் யுவர் கீரோ?” என ஆசிரியர் கேள்வித் தாளை நீட்டினால், அவன் என்ன எழுதுவான்? “மை ஐயா, மை அம்மா” என எழுதினான். பதிலைப் பார்த்த ஐயா, மகனைத் தன் நெஞ்சோடு வாரி அணைத்துக் கொண்டார்.

‘குடும்பப் படம் வரைக’ என்ற இடத்தில் மனதில் பதிந்து போன காட்சியை வரைந்து வைத்திருந்தான். தாத்தா பாட்டி வராண்டாவில் அமர்ந்திருந்தனர். அம்மா, பேபியை மடியில் வைத்துச் சோறூட்ட, ஐயா இவனைத் தூக்கி போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அனைத்து உருவமும் குச்சி மனிதர்கள் என்றாலும் அனைவர் முகத்திலும் இருந்த உதடு மேல் நோக்கிச் சிரித்துக் கொண்டிருந்தன.

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!