Skip to content
Post Views: 6,735
அத்தியாயம் 24:
இரவு உடையில் வந்த சந்தியாவை பார்த்து மனதிற்குள் கடுப்பானான் ஆதி.
புடவைல எப்படி சிலை மாதிரி இருந்தா. இப்போ பாரு சோள கொள்ளை பொம்மை மாதிரியே இருக்கா.
சந்தியா ஆதிக்கு எதிர் பக்கமாக வந்து கட்டிலில் படுத்து கொண்டாள். கடுப்பாக அமர்ந்திருந்த ஆதியை பார்த்து “வாங்க பாஸ். தூங்குவோம்” என்று துள்ளலான குரலில் கூறினாள்.
Advertisement
அவளின் மகிழ்ச்சியை பார்த்து கடுப்பான ஆதி வேண்டா வெறுப்பாக படுத்தான். நேராக விட்டத்தை பார்த்து படுத்திருந்த ஆதியை பார்த்து திரும்பி படுத்தவள் “ஆமா பாஸ். எதுக்கு என்ன பொம்முன்னு கூப்பிடறீங்க” என்றதும் அவளை பார்த்து திரும்பி படுத்தான் ஆதி.
இவ்வளவு நேரம் கடுப்பான மனநிலையில் இருந்தவன் அவளின் உதட்டில் பார்வையை பதித்து இனிய மனநிலைக்கு சென்றான்.
ஐயையோ ராங் டைமிங் ராங் கொஸ்டின் போலவே என்று ஜெர்கான சந்தியா உதட்டை கடித்து கொண்டாள். அதை பார்த்த ஆதி மெதுவாக கையை கொண்டு போய் அவளின் உதட்டை மென்மையாக வெளியில் எடுத்தான். சந்தியாவும் அதிர்ச்சியில் அசையாமல் படுத்திருந்தாள்.
Advertisement
“எவ்ளோ குட்டியா சாஃப்ட்டா இருக்கு. அதை போட்டு ஏண்டி இப்படி கடிக்கிற. என்ன கேட்ட? ஏன் பொம்முன்னு கூப்பிடறேன்னா. நா அப்படி கூப்பிட உன்னோட இந்த சொப்பு உதடுதான் காரணம். இத பாரேன். குட்டியா இருந்தாலும் எவ்ளோ குண்டா இருக்கு பாரேன். உன்னோட முகத்துக்கே இந்த உதடுதான் அழகு தெரியுமா. ஆமா நீ ஏன் பொம்மு என்ன மாமான்னே கூப்பிடல” என்று கேட்டுவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல்
Advertisement
“நீ மாமான்னு கூப்பிடும்போது நா ஏன் உன்ன திட்டுவேன் தெரியுமா. நீ ஒவ்வொரு தடவை இந்த உன் சொப்பு வாய திறந்து மாமான்னு கூப்பிடும்போதும் உன்னோட இந்த உதட்டை, அப்படியே கடிச்சி முழுங்கிடணும்ன்னு எனக்கு வெறியே வரும் தெரியுமாடி. ப்ளீஸ் பொம்மு குட்டி உன் லட்சியத்துக்கு இடைஞ்சல் வராம ஒரே ஒரு டைம் இந்த உதட்டை மாமா கடிச்சிக்கவா? என்று கேட்டு விட்டு அவள் அனுமதிக்கு காத்திராமல் அவள் உதட்டை அவன் வாய்க்குள் எடுத்து கொண்டான்.
எவ்வளவு நிமிடங்கள் கடந்ததோ தெரியவில்லை. சந்தியாவும் முழு மயக்கத்தில் இருந்தாள். ஆதியின் அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறுக ஆரம்பித்ததும்தான் சந்தியா சுய நினைவுக்கு வந்தாள்.
வலுக்கட்டாயமாக அவளின் வாயை ஆதியின் வாய்க்குள்ளிருந்து பிடுங்கியவள் ஆதியை முறைத்தாள். ஆனால் ஆதிக்கு அதெல்லாம் புரியவே இல்லை. சின்ன குழந்தையிடமிருந்து மிட்டாயை பிடுங்கிய நிலையில் இருந்தான்.
Advertisement
“ஏன் பாஸ். உங்கள எவ்ளோ ஜென்டில் மேனுன்னு நினைச்சி உங்க பக்கத்துல வந்து படுத்தேன். நீங்க என்ன இப்படி பண்றீங்க” என்று கோபமாக அவள் கேட்டதும்
“அடியே பொம்மு. பொண்டாட்டிகிட்ட ஜென்டில்மேனா நடந்துக்கிட்டா என்ன கேனையன்னு சொல்வாங்கடி. இப்ப என்ன நடந்து போச்சி. ஒரே ஒரு சின்ன முத்தம். இதுக்கு போய்…” என்று பேசி கொண்டிருந்தவனை முடிக்க விடாமல்
“என்ன.. சின்ன முத்தமா… நைட்டு டிஃபன் சரியா சாப்பிடாம வந்துட்டு என் உதட்டை போட்டு தின்னு வச்சிருக்கீங்க”
“எங்கடி பொம்மு. பசி போகவே இல்லடி. முழுசா சாப்பிட்றதுக்குள்ள நீதான் பிடுங்கிட்டியே”
“வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு எவ்ளோ டீசண்டா இருந்தீங்க பாஸ். இப்ப இப்படி கெட்டு போய்ட்டிங்க”
“எங்கடி என்ன நல்லவனா இருக்க விட்ட. சுத்தி சுத்தி வந்து என்ன கெடுத்ததே நீதான”
“அநியாயமா பேசாதீங்க பாஸ். நா பண்ணது லவ். நீங்க என்ன பண்றீங்க. நீங்க இப்படி பண்ணதுல எனக்கு பேபி வந்துட்டுன்னா, என் லட்சியம் என்னாவறது பாஸ்”
“என்ன… ஒரு முத்தத்துல உனக்கு பேபி பார்ம் ஆகுதா? வேணாண்டி பொம்மு. பேசாம தூங்கிடு. அப்புறம் எதாவது எசகு பிசகா நடந்துடுச்சின்னா, உன் லட்சியத்துக்கு என்னால இழுக்கு வந்துட்டுன்னு சொல்ல கூடாது” என்று ஆதி கூறியதும் வாயை மூடி கொண்டு பெட் ஷீட்டை இழுத்து முழுவதுமாக மூடி தூங்கி விட்டாள் சந்தியா.
மறுநாள் காலை ஆறு மணிக்கு கண் விழித்தாள் சந்தியா. எங்கிருக்கிறோம் என்று நினைவு வந்து திரும்பி பார்த்தவளின் அருகில் ஆதி தூங்கி கொண்டிருந்தான்.
அவளின் பக்கமாகத்தான் பார்த்து படுத்திருந்தான் ஆதி. எதிரில் இருப்பவர்களை பதட்டமடைய செய்யும் அவனின் கூர்மையான கண்கள் மூடியிருந்ததால் அவனை நிதானமாக சைட் அடித்து கொண்டிருந்தாள்.
அடர்ந்த முடி படர்ந்த அகன்ற நெற்றி. கூர்மையான மூக்கு. இவனுக்கு இவ்வ்ளவு கம்பீரத்தை கொடுப்பது அவனின் கூர்மையான மூக்கா, இல்லை இந்த அடர்ந்த மீசையா என்று சந்தேகம் வந்தது சந்தியாவிற்கு.
இரவு நடந்ததெல்லாம் அவளின் நினைவில் வந்து அவளை புன்னகைக்க வைத்தது.
அவனின் முகத்தையே பார்த்து படுத்திருந்தவளுக்கு அவனின் மீசையை இழுத்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. மெதுவாக ஒரு விரலை மட்டும் கொண்டு போய் அவன் மீசையை தொட்டுவிட்டு கையை இழுத்து விட்டாள்.
சிறிது நேரம் சென்று திரும்பவும் தொட விரலை கொண்டு செல்லும்பொழுது சரியாக ஆதி கண் விழித்தான்.
கையை வெடுக்கென்று பின்னே இழுத்து கொண்டு கண்ணை இறுக்கி மூடி கொண்டாள் சந்தியா. அதை பார்த்த ஆதி சிரித்து கொண்டே அவளின் கையை பிடித்து தானாகவே அவனின் மீசையின் மீது வைத்து “தொட்டு பாரு பொம்மு. மாமா மீசையை ரொம்ப பிடிக்குமா உனக்கு” என்றான்.
சந்தியாவிற்கு உடலெல்லாம் கூசியது. கையை வெடுக்கென்று இழுத்து கொண்டு பெட்டை விட்டு இறங்கி பாத்ரூமிற்கு ஓடிவிட்டாள்.
குளித்துவிட்டு லைட் கிரீனில் லாங் ஸ்கர்ட்டும் வைட் கலரில் குட்டி டாப்பும் அணிந்து வெளியே வந்தாள். குளித்த ஈரம் முகத்தில் இருக்க மஞ்சள் ரோஜா மாதிரி வந்தவளை விழி இமைக்காமல் பார்த்து அமர்ந்திருந்தான்.
அவனை கண்டுகொள்ளாமல் ட்ரெஸ்ஸிங் டேபிளின் எதிரே சென்று அமர்ந்து முடியில் சுற்றியிருந்த டவலை பிரித்து விட்டாள் சந்தியா.
ஆதியும் எழுந்து பாத்ரூமிற்கு செல்ல போனவன் நின்று “பொம்மு. இந்த ட்ரஸ்ல கீழ போயிடாத” என்றான்.
“ஏன் பாஸ் இந்த ட்ரஸ்க்கு என்ன?” என்று கேட்டவள் அருகில் வந்து நின்றவன், அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்தான்.
அவனின் பார்வையிலேயே சந்தியாவின் ரோமங்களெல்லாம் குத்திட்டு நின்றது.
“இந்த ட்ரெஸ் என் கண்ணுக்கு சூப்பரா இருக்குது பொம்மும்மா. ரூம்ல நீ என்ன ட்ரெஸ் வேணா போட்டுக்கலாம். ஆனா நமக்கு நேத்துதான் கல்யாணம் ஆயிருக்கு. இது கிராமம். வெளி ஆளுங்க இருப்பாங்க. இந்த ட்ரெஸ்ல போனா நல்லாருக்காது. புடவைதான் கட்டணும். அதனால வெய்ட் பண்ணு . மாமா குளிச்சிட்டு வந்து உனக்கு புடவை கட்டி விடறேன்” என்றுவிட்டு ஜாலியாக விசில் அடித்து கொண்டே பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான்.
ஆதி குளித்து விட்டு வெளியே வந்தவன் பார்த்தது அழகாக பீச் கலரில் டார்க் ப்ளூ பார்டர் வைத்த காட்டன் சில்க் சேரி அணிந்து முடியை பின்னல் போட்டு கொண்டிருந்த சந்தியாவைத்தான். ஆஹா, புடவை கட்ட கத்துக்கிட்டா போல. வடை போச்சே, என்று பார்த்தவன்,
முடியில் இருந்து ஈரம் சொட்ட சொட்ட இடுப்பில் வெறும் டவலுடன் சந்தியாவின் அருகில் வந்து நின்று “பரவால்ல பொம்மு. மாமா அளவுக்கு இல்லன்னாலும் நீயும் நல்லாத்தான் புடவை கட்டிருக்க” என்றுவிட்டு புடவையின் கீழ் மடிப்பை சரி பண்ணிவிட்டான்.
தீபாவளி அன்று போல் இன்றும் அவனின் அடர்ந்த கேசத்தில் கையை விட்டு கோதி கொடுக்க வேண்டும் போல் இருந்தது சந்தியாவிற்கு. அமைதியாக நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன நினைத்தானோ அவளின் கையை எடுத்து தன் தலையில் வைத்துவிட்டு “உன்ன மாதிரி எனக்கு லட்சியமெல்லாம் இல்ல பொம்மு. அதனால நீ என்ன செய்ய நினைக்கிறியோ அதை இந்த மாமாகிட்ட செய்யலாம். இந்த ஆறடி உடம்பும் உனக்குத்தான் சொந்தம்” என்றான்.
அதை கேட்டதும் வெட்கமாக வந்தது சந்தியாவிற்கு. அதை வெளியில் காட்டாமல் “போதும் விடுங்க பாஸ் . நா கீழ போறேன்” என்றாள்.
நிமிர்ந்து அவளிடம் “போகலாம். நானும் வரேன் சேர்ந்து போகலாம். என்ன மாமான்னு கூப்பிட மாட்டியா பொம்மு” என்றான்.
“எதுக்கு. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானே வாய கொடுத்து எதுக்கு புண்ணாக்கிக்கணும்” என்றுவிட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் சேரில் அமரபோனவளை உட்காரவிடாமல் வேகமாக இழுத்தான். நெஞ்சில் வந்து விழுந்தவளை கட்டி அணைத்து அவளின் முகத்தை பார்த்தான்.
“மாமாவுக்கு ரொம்ப பசிக்குதுடி பொம்மு. உன்னோட இந்த உதட்டை கொஞ்ச நேரம் கொடுத்தீன்னா புண்ணாகாம, பேபி பார்ம் ஆகாத மாதிரி கொஞ்சூண்டு சாப்டுட்டு திருப்பி கொடுத்திடறேன்” என்றுவிட்டு ப்ளீஸ் என்று சொல்ல போனவனை சொல்ல விடாமல் தடுத்து, ஒரு வேகத்தில் காலை எக்கி அவன் உதட்டில் தன் உதட்டை வைத்தாள்.
அவளை சிரமப்பட விடாமல் அவன் முழு உயரத்திற்கு அவளை தூக்கி கொண்டு அவள் உதட்டை கவ்வி கொண்டான்.
ஒரு முத்தமே உயிர் வரை தீண்டும் என்பதை சந்தியா இப்பொழுதுதான் உணர்கிறாள்.
மெதுவாக ஆதி அவளை விடுவித்ததும், அவன் முகத்தை பார்க்க வெட்க பட்டுக்கொண்டே கீழே ஓடிவிட்டாள் சந்தியா.
அவளை பார்த்து சிரித்து கொண்டே உடை மாற்ற சென்றான் ஆதி.
கீழே வந்த சந்தியா ஹாலில் யாரும் இல்லாததால் நேராக அடுக்களைக்கு சென்றாள். அங்கு சிவகாமியும் சித்ராவும் காலை டிபன் வேளையில் ஈடுபட்டிருந்தனர். கூடவே மேல் வேலை செய்யும் முத்துலட்சுமியும், இன்னும் இரு பெண்களும் இருந்தனர்.
சந்தியாவை பார்த்த சிவகாமி “வா கண்ணு. அப்படியே பூஜை அறைல விளக்கேத்தி போடு சாமி” என்று நேராக அவளை பூஜை அறைக்கு அனுப்பி விட்டார்.
சந்தியாவும் விளக்கை ஏற்றி சாமியை மனதார வணங்கி, ஆதி தனக்கு கிடைத்ததற்கு நன்றி சொல்லிவிட்டு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
அப்பொழுது அங்கு தூங்கி எழுந்து வந்தமர்ந்த அருண் “குட் மார்னிங் அண்ணி மேடம்” என்றான்.
இந்த ஒரு மாதமாக அவன் அண்ணி என்று கூப்பிடுவது பழகி விட்டது சந்தியாவிற்கு. முதலில் அவன் அப்படி அழைக்கும்போது காமெடியாகத்தான் இருந்தது. வேண்டாம் என்று சொன்னாலும் அவன் கேட்கவில்லை. அதனால் விட்டு விட்டாள்.
ஆனால் கௌரி ஒரு சமயம் அண்ணி என்றும் ஒரு சமயம் சந்தியா என்றும் குழப்பியடித்து கொண்டிருக்கிறாள்.
இப்பொழுது சித்ரா சந்தியாவிற்கு காஃபி எடுத்து வந்து கொடுத்தார். அதை பார்த்ததும் அருண் “என்ன சித்தி மருமகளுக்கு மட்டும்தேன் கவனிப்போ. எனக்கு கஞ்சி எங்கங்”
“அருண். இது காஃபி. உனக்கு அம்மா கஞ்சி போட்டுட்டுருக்காங்க” என்றதும்
அம்மா என்று வேகமாக அலறினான் அருண். எதுக்குடா இவன் இப்படி கத்துறான் என்று காபியை குடிக்காமல் அவனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் சந்தியா. அவன் கத்திய கத்தலில் பக்கத்து ரூமில் தூங்கி கொண்டிருந்த கௌரியும் எழுந்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து தூக்க கலக்கத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
அடுக்களையில் இருந்து வந்த சிவகாமியிடம் “அம்மா எனக்கும் இன்னிக்கு காபி வேணுங்ம்மா” என்றான் அருண்.
“தம்பு. உன்ர அண்ணிக்கு கஞ்சி பழக்கமில்லன்னு சித்திதேன் காஃபி வச்சி கொடுத்தாலாட்ருக்கு . இதுக்கே உங்கொண்ண என்ன சொல்வானு தெரியல. வெளித்திண்ணைலதேன் ஓரமொற எல்லாம் இருக்காங். கோயிலுக்கு கிளம்ப வேற நேரமாகுது. இதுல நீ வேற எசிலி போடாம போய் கிளம்பு கண்ணு”
இன்று மணமக்கள் குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைக்க செல்கிறார்கள். அது முடித்துதான் மறு வீடு அதாவது சந்தியா வீட்டிற்க்கே செல்ல வேண்டுமென்று சிவகாமி கூறிவிட்டார். ஆதிக்கு நல்ல படியாக இந்த கல்யாணம் நடக்க வேண்டுமென்று சிவகாமி வேண்டி கொண்டிருந்ததால் இன்றே செல்கிறார்கள்.
“அம்மா இதெல்லாம் நெம்ப ஓவருங்ம்மா. புது மருமகளுக்கு காஃபி கொடுப்பீங். உங்க சின்ன பையன் நா உங்களுக்கு பழசாயி போயிட்டேனுல்ல” என்று அருண் குறை பாடி கொண்டிருக்கும் போதே ஆதி அங்கு வந்து சேர்ந்தான்.
டைனிங் டேபிளில் அமர்ந்து “என்ன அருண்” என்றான்.
“ஒண்ணுமில்லீங்ண்ணா. அம்மாட்ட கஞ்சி கேட்டுட்டிருந்தேனுங். அதுக்கு இன்னைக்கு கஞ்சி போட நேரமில்லை. கோயிலுக்குப் போக லேட்டாகுது. அதனால நேரா டிஃபன் சாப்பிட்டுக்கலாம்ன்னு சொல்லிட்டிருந்தாங்” என்றதும் சிவகாமியும் சித்ராவும் சிரித்து கொண்டே உள்ளே சென்றார்கள்.
ஆதி சந்தியாவிடம் “நீ என்ன குடிக்கிற” என்றான்.
அதற்கு சந்தியா பதில் சொல்வதற்குள் அருண் “அது அண்ணிக்கு கஞ்சில்லாம் குடிச்சி பழக்கமிருக்காதுன்னு அம்மாதான் காஃபி குடுத்திருக்காங்” என்றதும் சந்தியாவின் கையிலிருந்த காபி டம்ளரை வாங்கிய ஆதி அம்மா என்றழைத்தான்.
என்ன கண்ணு என்று திரும்ப வந்தவரிடம் “இது என்னங்ம்மா. காலைலேயே இவளுக்கு காபி கொடுத்திருக்கீங்” என்றதும் சந்தியா மனதிற்குள் அடப்பாவிங்களா கடைசில பஞ்சாயத்த என்னோட காபில வந்து நிறுத்திட்டிங்களா என்று அலறி கொண்டிருந்தாள். அவளுக்கு காலையும் மாலையும் கட்டாயம் காஃபி குடித்தே ஆக வேண்டும்.
சிவகாமியும் ஆதியிடம் “புள்ளை காலைல காபிதேன் குடிக்கும்ன்னு சித்ராதேன் போட்டு கொடுத்திச்சி கண்ணு. இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம வீட்டு பழக்கத்துக்கு மாத்திக்கலாம் கண்ணு”
“ம்மா. உடம்ப கெடுக்கிற உணவ ஒரு நாள் சாப்பிட்டாலும் தப்புதான். இன்னையிலேந்தே அவளுக்கும் கஞ்சிய பழக்க படுத்துங்க. வீட்ல டீத்தூள் காஃபித்தூளே இருக்க கூடாதுன்னு நா சொல்லிட்ருக்கேன். நீங்க என்னன்னா என் பொண்டாட்டிக்கே காஃபி கொடுத்து வச்சிருக்கீங்க” என்று பேசி கொண்டே போனவனை நிறுத்திய சந்தியா
“எனக்கு கஞ்சில்லாம் செட்டாகாது பாஸ். அதும் காலைலயும், ஈவினிங் காலேஜ்ல இருந்து வந்த உடனேயும் எனக்கு காஃபி குடிச்சே ஆகணும்”
“படிக்கிறதான அறிவில்லையா உனக்கு. வெறும் வயித்துல யாராவது காபி குடிப்பாங்களா. குளிர்ச்சியா நீராகாரம், மோர் இப்படித்தான் குடிக்கணும்”
ஐயையோ ஒரு இயற்கை விவசாயியை கல்யாணம் பண்ணி தப்பு பண்ணிட்டோமோ என்று சந்தியா முழித்து கொண்டிருந்தாள். அவளை அருணும் கௌரியும் நமுட்டு சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.
சிவகாமி “விடு கண்ணு. இந்த வயசுல கள்ள தின்னாலும் செறிச்சி போடும். கொஞ்ச காலத்துக்கு புடிச்சத சாப்பிடட்டும்” என்றார்.
“ம்மா. விஷம்ன்னு தெரிஞ்சே குடிக்க கொடுப்பீங்களா” என்று பேசி கொண்டிருக்கும் போதே சந்தியா “மாமா. ப்ளீஸ் மாமா. எனக்கு தல வலிக்குது. காபியை குடிச்சாத்தான் நிக்கும். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் குடிச்சிக்கிறேனே. ப்ளீஸ் மாமா” என்றதும் ஆதி காபி டம்ளரையும் அவள் உதட்டையும் மாறி மாறி பார்த்தவன் சிவகாமியிடம் “ம்மா. இந்த காஃபி ஆறிடுச்சி. அவளுக்கு வேற சூடா போட்டு குடுங்க. இன்னைக்கு மட்டும்தான்” என்று விட்டு யாரையும் பார்க்காமல் வெளியே சென்றுவிட்டான்.
சிவகாமி முகம் கொள்ளா சிரிப்புடன் உள்ளே சென்றார். சந்தியா அருணை பார்த்து ப்ளௌஸ் காலரை தூக்கி விட்டு கொண்டாள்.
அருணுக்கும் கௌரிக்கும் மயக்கம் வராத குறைதான். கௌரி அருணிடம் “அருணு நம்ம வீட்டு சிங்கத்த சாச்சுப்புட்டா அருணு” என்று ராகம் வைத்து கொண்டிருந்தாள்.
error: Content is protected !!