உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 7
அத்தியாயம் 7
வைஷ்ணவி தனது பெரிய விழிகளை இன்னும் அகல விரித்து அடி வாங்கி விழுந்த இளைஞர்களைப் பார்க்க அசோக் அவர்களைப் புறந்தள்ளி அவளிடம் வந்து நின்றான். அந்த மூவரும் நொண்டிக் கொண்டே தென்னை மரங்கள் பின்னே மறைய வைஷ்ணவி பேசினாள்.
“எல்லாம் உன்னால தான் வந்தது?”
அவன் வாய் திறக்கும் முன்னரே அவன் மீதே குற்றப்பத்திரிக்கை வாசித்த அவளைக் கண்டு அசோக் வாய் பிளந்து நிற்க வைஷ்ணவி மேலும் பேசினாள்.
Advertisement
“நீ பாட்டுக்கு தனியா தனியா டூர் சுத்த கிளம்பிற! இது கபுள்ஸ் ட்ரிப் தானே! அஞ்சாங் கிளாஸ் வாத்தியார் கணக்கா அட்வைஸ் மட்டும் நல்லா பண்ணத் தெரியுது!”
“வாட் ஹேப்பன்ட் அசோக்?”
அவர்கள் மீண்டும் சண்டையிடுவதைக் கண்டு கேப்ரியல் இடைமறித்தார்.
Advertisement
“நத்திங் மிஸ்டர் கேப்ரியேல்”
Advertisement
அசோக் வைஷ்ணவியை முறைப்பதை நிறுத்தி விட்டு கேப்ரியலிடம் அந்த இளைஞர்கள் மதுவருந்தி தகராறு செய்தததாகச் சொல்லி விட்டு காப்ரியலையும் அடலினையும் தொடர்ந்து செல்லுமாறு கூறினான். அவர்கள் இருவரும் கடந்ததும் வைஷ்ணவியின் முன்பு மார்பில் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான். வைஷ்ணவி என்ன என்பது போல் பார்க்க,
“ஏ சீனிப் பட்டாசு, நீ பண்ணத் தப்புக்கு என்கிட்ட ஏன் வெடிக்கற”
“என்னைத் தனியா விட்டது உன் தப்பு தானே”
Advertisement
வைஷ்ணவி கேட்க அசோக் தலையை இருபுறமும் ஆட்டி நம்பாத குரலில் கேட்டான்.
“சத்தியமா சொல்லு, நீ மனநல காப்பகத்தில் இருந்து தப்பிச்சு தானே வந்திருக்க?”
அவனது கேலியில் கோபமாகி அவள் முறைக்க அவன் மீண்டும் பேசினான்.
“ஓங்கி காதோட அறைஞ்சு கன்னத்தை பதம் பார்த்ததும் இல்லாம அம்மா பத்திரமா ஊர் சுத்த நான் பாடி கார்டு வேலை வேற பார்க்கணுமா?”
அவனது கேள்விக்கு,
“நான் தான் சாரி சொன்னேன்ல. நீயும் தான் என்னைத் தனியா விட்டுட்டு வந்த. நான் எவ்ளோ பிரச்சினைல சிக்குனேன். அதுக்கு இப்ப நீ சாரி கேட்டாக் கூட நான் எல்லாம் உடனே மன்னிச்சிடுவேன். உன்னை மாதிரி பழி வாங்கற மனசு எல்லாம் எனக்கு கிடையாது!”
வைஷ்ணவி அவனிடம் தான் குழந்தையாவதை அறியாதேப் பேசினாள்.
“ஓ இப்ப நான் சாரி வேற கேக்கணும். மேடம் தேங்ஸ் எல்லாம் சொல்ல மாட்டீங்க”
அசோக் மேலும் கேட்க,
“ஓகே தேங்க்ஸ். தேங்க்யூ வெரி மச் இப்படி தனியா சிக்கல்ல மாட்டி விட்டுப் போன உங்க பெரிய மனசுக்கு பெரிய தேங்ஸ்”
வைஷ்ணவி சொல்லி விட்டு வெள்ளை வெளேர் என இருந்த கடல் மணலில் கால் புதைய நடக்க அசோக் அவளது கோபம் கண்டு தன் ரசனை மிகுவதைத் தடுக்க முடியாது தோற்று நின்றிருந்தான்.
அகந்தை, அதிகாரம், சுற்றத்திற்கு மாட்டும் முகமூடி, குழந்தைத்தனம் கொன்ற அனுபவங்கள், எவரும் வேண்டாம் எனும் வலி கொடுத்த விழுமியம் இவை அனைத்தையும் வெறும் நீர்க்குமிழாக உடைத்துச் சிதற வைக்கும் உலகத்தில் நாம் சந்திக்கும் ஒரே ஒரு உயிரின் அருகிருப்பு.
அந்த உயிர் தரும் அன்பும் பாதுகாப்பும் வலி தாங்கும் மனமென்னும் பிணியின் மாமருந்து. இவ்வுணர்வின் இறுதி முகவரி காதல். இருவரும் வழி மாறாது அந்த காதல் முகவரியைக் கண்டு அடைவார்களா? காலம் பதில் சொல்ல காத்திருந்தது.
அவர்கள் மீண்டும் படகில் ஏறி திகில்பூரில் தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தனர். வைஷ்ணவி அந்த ஊரின் பெயரை நினைவுப்படுத்திக் கொண்டு நினைத்தாள்.
‘நல்லவேளை ஃபோர்ட் ப்ளேர்கு போகாம இருந்தோம். இப்ப இருக்கிற இடம் திகில்பூர். எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சுக்கணும் இல்லைனா இவன் பாட்டுக்கு தனியா நம்மள டீல்ல விட்டுட்டு போனா என்ன பண்றது’
படகில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் விடுதி வரும் வரை அவள் ஊர் பெயர் பலகையும் வழிக்காட்டி குறியீடுகளையும் விடுதி பெயர் பலகையும் மனனம் செய்வது போல் படித்து வர அசோக் அவளை தினுசாக பார்த்தான். வண்டியில் இருந்து இறங்கிய வைஷ்ணவி அவனது முகத்தைப் பாராது நடந்தாள்.
“ஏ சீனிப் பட்டாசு”
அசோக் அவளைக் கேலியாக அழைக்க வெடுக்கென்று திரும்பி அவனை முறைத்தாள்.
“எதுக்கு இப்படி எல்லாத்தையும் படிச்சு மனப்பாடம் பண்ணிட்டு வர்ற? அந்தமான் பத்தி பரீட்சை எழுதப் போறீயா என்ன?”
அசோக் சொல்லி விட்டு வண்டியில் இருந்து இறங்க வைஷ்ணவி படபடவென மனதில் இருந்ததை வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள்.
“திடுதிப் னு நட்ட நடு தீவில அம்போனு விட்டுட்டு வந்தா திரும்பி வர்ற திக்கு திசை தெரியணும்ல”
அவளின் பதிலில் அசோக்குக்கு மெலிதான குற்ற உணர்ச்சி வந்தது. என்ன தான் அவள் பின்னே அவளே அறியாது பாதுகாப்பாக வந்தாலும் அவள் பார்வையில் அவள் தனித்து விடப்பட்டதாகத் தானே உணர்ந்திருப்பாள் அச்சமும் அடைந்திருப்பாள்.
அசோக் விடுதி அறைக்கு வர வழக்கம் போல் முன்னறையில் அசோக் உறங்க தனியறைக்குள் சென்ற வைஷ்ணவியை அசோக்கின் குரல் நிறுத்தியது.
“உன்னைத் தனியே விட்டுட்டு போனது தப்பு தான் இந்த பயணம் முடியும் வரை இப்படி ஒரு தப்பு இனிமே நடக்காது”
வைஷ்ணவி அவனுடைய பேச்சுக்கு மறுப்போ ஆமோதிப்போ ஒன்றும் சொல்லாது கடக்க அசோக் மீண்டும் பேசினான்.
“நாளைக்கு காலையில சீக்கிரம் கிளம்பு உன்னால ஒரு முக்கியமான இடம் நான் பார்க்காம மிஸ் ஆயிடுச்சு. எல்லாரும் மறுபடியும் ஃபோர்ட் பிளேர் கிளம்பறதுக்குள்ள போய்ட்டு வந்திடலாம்”
‘நான் எப்ப உன் கூட வரேன் னு சொன்னேன்?’ என்பது போல் அவள் பார்க்க அசோக் அவளை நோக்கி அசட்டையான குரலில் பேசினான்.
“உன்னை இங்க தனியே விட்டுட்டு அடுத்து நீ என்ன பிரச்சினையை இழுத்துட்டு வருவ? பத்திரமா இருக்கீயானு? எல்லாம் என்னால யோசிட்டே இருக்க முடியாது. நீ சொன்ன மாதிரி உனக்கு எதாவது ஒன்னுனா நான் தானே ஜெயிலுக்குப் போகணும். எல்லாத்துக்கும் மேல முக்கியமா உன்னைத் தனியா விடறதும் ஒன்னு என் மேல நானே கொலைக் கேஸ் எழுதிக்கறதும் ஒன்னு”
இறுதி வாக்கியத்தை அவன் முனகியப்படி முடிக்க வைஷ்ணவி கோபத்துடன் பார்க்க அசோக் போர்வையை இழுத்து மூடி முகத்தை மறைத்துக் கொண்டான்.
வைஷ்ணவி அவனுடன் செல்லக் கூடாது என முடிவெடுத்துப் படுத்தவள் மறுநாள் அவன் சொன்னப்படியே கிளம்பி நின்றாள். அசோக் அவளை அழைத்துக் கொண்டு முதலில் திகில்பூர் வனத்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு வாங்கி படகு பயணம் அரை மணி நேரத்தில் அவர்கள் ராஸ் தீவு வந்திருந்தனர். மீண்டும் அந்த திகில் தீவைக் கண்டதும் அசோக்கிடம் சண்டை இட நினைத்த வைஷ்ணவி அசோக் உதடுகள் மேல் விரல் வைத்து அமைதியாக என்னுடன் வா என சைகை செய்ய வைஷ்ணவி அமைதியானாள். அசோக் அவளை அழைத்துக் கொண்டு ஒரு கடற்கரைக்குச் செல்ல அங்கே அவள் கண்ட காட்சி ஆயிரமாயிரம் சண்டைகளும் இரத்தப்பழிகளும் ஏன் இந்த மண்ணிற்காக நடக்கிறது என்பதற்கு பதில் சொல்லியது.

தான் ஒரு தீவின் கடற்கரையில் வெள்ளை மணல்திட்டின் மேல் நின்றிருக்க ஒரு குறுகிய சாலை போல் வெண்மணல் திட்டு நீண்டு அங்கொரு தீவை மணல் சாலையால் இணைத்திருந்தது. அந்த அழகின் பிரமிப்பில் அவள் வாய் பிளந்து நிற்க அசோக் அவளை அழைத்துக் கொண்டு அந்த மணல் திட்டில் நடந்தான். இருபுறமும் கடல் நடுவே ஒரு குறுகிய மணல் சாலை கரம் கோர்த்து நடக்க காதல் இல்லையா இருவரிடமும்?! ம்..இருப்பதாகவே காட்டியது வருந்தி வரவழைக்கப்பட்ட இருவருக்குமான இடைவெளி.

ராஸ் தீவையும் ஸ்மித் தீவையும் இணைக்கும் மணல் திட்டு கடல் அலைகள் குறைவாக இருக்கும் போது பார்வைக்கு வெளிப்படும் அப்போது நடந்தே இரு தீவுகளுக்கும் சென்று வரலாம். அந்த தீவை ரசித்து முடித்து அன்றைய நாளின் அழகு முத்தாய்ப்பு அதுவென அவள் நினைத்திருக்க அது இல்லை என்பதாகக் கூறி இன்னொரு இடத்திற்கு அழைத்துச் சென்றான் அசோக். அது திகிலிபூர் நேசனல் பார்க்.
அசோக் அதைச் சுற்றிப்பார்க்க படகு பயணம் தேர்ந்தெடுத்து இருந்தான்.
“இங்கிருந்து ட்ரெக்கிங் போலாம் செமையா இருக்கும் ஆனா நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!”
“ஏன் சரிப்பட்டு வர மாட்டேன்?”
அவளின் கேள்விக்கு அதே கேலிப் புன்னகையோடு மறு கேள்வி கேட்டான்.
“ஏழு மணி நேரம் ட்ரெக்கிங் போகணும் போலாமா?”
“இல்லை பரவாயில்லை நான் சரிப்பட்டு வராத லிஸ்ட்லயே இருந்துட்டு போறேன்”
அவள் சொல்லி விட்டு அந்த படகில் வசதியாக அமர அந்த படகு திகிலிபூர் வனத்தை சுற்றி இருக்கும் ஆழியில் பயணித்தது.
வைஷ்ணவி மாங்குரூவ் மரங்கள் தாண்டிய சதுப்பு நிலம் தாண்டி கண்ணில் விரிந்த அந்த தீவின் அழகை ரசித்தப்படி நீரில் கை வைக்க அசோக் எச்சரித்தான்.
“ஏ இங்க உப்பு நீர் முதலை இருக்கும்”

வழக்கம் போல் அவன் கேலி செய்வதாக நினைத்து அவனை முறைத்துப் பேசினாள் வைஷ்ணவி.
“உனக்கு என்னைப் பயப்படுத்தலனா தூக்கமே வராதா?”
அவள் தன்னுடைய ஆரஞ்சு வண்ண லைஃப் ஜாக்கெட்ஐ சரி செய்துக் கொண்டே கேட்க அசோக் அவள் அருகே நகர்ந்து வந்தவன் கண் ஜாடையில் அங்கே பாரு என்று சொல்ல வைஷ்ணவி திரும்பினாள். இருபது அடி தொலைவில் ஒரு முதலையின் நீண்ட மூக்கு பகுதி மட்டும் பாறை போல் தெரிய சற்று தள்ளி தண்ணீரில் வளையங்களாக அதிர்வு தெரிந்தது.

வைஷ்ணவி தன் வாயைத் திறந்து கத்தும் முன் அசோக் அவளது இதழ்களை தனது ஒரு கையால் மூடியவன் மறு கையால் அவளது கரங்களைப் பற்றி காதோடு பேசினான்.
“ஏ சீனிப் பட்டாசு, கொஞ்சம் நேரம் வெடிக்காம இரு”
அவன் சொல்லி விட்டு மறு நொடி தான் அவளது இதழ்களைத் தொட்டு இருப்பதை உணர்ந்து விலக வைஷ்ணவி அவனது கரங்களை இறுகப் பற்றி அவனது காதோடு கிசுகிசுத்தாள்.
“என்னை முதலைக்கு டின்னர் சாப்பிட கூட்டிட்டு வந்தியா? அப்படி இப்படி நான் முதலை வாய்ல செத்தேன் பேயா வந்து உன்னைப் பழிவாங்காம விட மாட்டேன். நீ நிம்மதியா வாழவே முடியாது பார்த்துக்க”
“இப்ப மட்டும் அப்படியே நிம்மதியா வாழ விட்ருர பாரு பேசாம சுத்தி இருக்கிற அழகை ரசி. அந்த உச்சில ஒரு நீர்வீழ்ச்சி இருக்கு”
அசோக் கைக் காண்பித்து சாடில் பீக் ஐ வர்ணித்து, சுற்றியும் இருந்த அழகை ரசித்தான். வைஷ்ணவியோ இதயத்துடிப்பை கட்டுப்படுத்த முடியாது மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டு இருந்தாள்.
சற்றுத் தூரம் தெரிந்த நிலப்பரப்பில் முதலைகள் படுத்து இருப்பது கண்ணுக்குத் தெரிந்தது.

‘படுபாவி கொலைக்காரா! உயிர்ப் பயத்தில் உட்கார்ந்து இருக்கேன் இதில உச்சில நீர்வீழ்ச்சி நல்லாருக்குமாம்! உயிரோட இருந்தாத் தான்டா பார்க்க முடியும். சீக்கிரம் கரை வந்தரணும் செந்தில் ஆண்டவா! உயிரோட இறங்கிட்டேன் இதோ இவனைக் கூட்டிட்டு வந்து பழனில மொட்டை போடறேன்’
அவள் கண்களை மூடி வேண்ட அசோக் அவள் காதில் கடிந்துப் பேசினான்.
“ஏ கண்ணைத் திறந்து பாரு. கண்ணை மூடி யோகா பண்ணவா வந்த?”
அவனது கேலியில் கோபம் வந்தாலும் அவனது கரத்தை இழுத்து பிடித்துக் கொண்டாள். அவன் கேள்வியாக நோக்க
“என்னைச் சாப்பிட்டா முதலைக்கு நொறுக்குத் தீனி அளவுகுத் தான் பத்தும் அதான் உன்னையும் பிடிச்சிருக்கேன். செத்தா இரண்டு பேரும் சேர்ந்து சாவோம்”
அவள் சொல்ல கலகலவென சிரித்த அசோக்கின் இதழ்களை இம்முறை மூடியது வைஷ்ணவியின் கைகள்.
“உன் சத்தத்தில் முதலை வந்தர்றப் போகுது”
வைஷ்ணவி சொல்ல அசோக் மேலும் சிரித்து அவள் கரங்களைப் பற்றி அங்கே பார் என சைகை செய்ய கிங்பிஷர் பறவை தெரிய அதன் அருகே வைஷ்ணவி கண்களைத் தேய்த்துக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அங்கே யானை ஒன்று ராஸ் தீவு புறம் நீந்திக் கொண்டு இருந்தது. யானை நீரில் நீந்துவது ஆதவனின் கதிரில் பளபளப்பாகத் தெரிய வைஷ்ணவி விழிகளை மூடி மூடித் திறந்துப் பார்த்தாள். அவள் அந்தக் காட்சியின் பிரமிப்பில் மூழ்கியிருக்க அசோக் பேசினான்.

“கண்ணை மூடிட்டு இருந்தா நீ பார்த்து ரசிக்க வேண்டிய உலகத்தின் அழகு இருட்டாகவே முடிஞ்சிடும். பயம் தாண்டிய ரிஸ்க் வேக்டர் தான் பல சாதனைகளுக்கும் அதிசயங்களுக்கும் முகவரி எழுதிக் கொடுக்கும்”
அவன் முடிக்க வைஷ்ணவியின் மனதோ இவன் இன்னும் நான் அறியாத எத்தனை உலகத்தை எத்துணை உணர்வுகளை எனக்கு அறிமுகப்படுத்துவான் என எண்ணித் திகைத்தது.
அது எண்ணிலடங்காதது என தரையில் கால் பதித்ததும் மீண்டும் மெய்பித்தான் அந்த மாயக்காரன்.
வைஷ்ணவியை ஆலிவ் ரிட்லே எனும் அழிந்து வரும் ஆமைகளின் முட்டைகள் பராமரிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே மூங்கில் குச்சிகள் ஒன்றாக சேர்த்துக் கட்டியது போல் தடுப்புகள் பல அமைக்கப்பட்டு ஆலிவ் ரிட்லே முட்டைகள் பராமரிக்கப் பட்டு இருந்தது.
அசோக் அதனைக் காட்டி விட்டு கடற்கரைக்கு வர இரவில் பெரும்பாலும் வரும் ஆலிவ் ரிட்லே ஆமைகள் தற்போது எல்லாம் பகலில் வரத் தொடங்கியிருந்தன. வைஷ்ணவி பார்க்க பார்க்கவே ஒரு ஆமை சற்று தள்ளி மணலை பறிக்கத் தொடங்கியது. அசோக் அவளிடம் அமைதியாக இரு என சைகை செய்து அவள் கரம் பற்றி அதன் அருகே அழைத்துச் செல்ல சிறு துளை போன்ற குழியில் அதன் முட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாக விழத் தொடங்கியது.
வைஷ்ணவி அதன் வலியும் அந்த காட்சியும் கண்டு இமைகளைப் படபடத்து நின்றவள் சட்டென அவன் அருகே அவனை ஒட்டி ஒடுங்கி நின்றாள்.
“ஏன் என்னாச்சு?”
அவளது செயலில் பசியில் திகைத்து, பசியில் அல்லது அலைச்சலில் அவள் மயங்கியிருக்கக் கூடுமோ என அசோக் அவள் கைகளைத் தாங்கிப் பிடிக்க வைஷ்ணவி கேட்டாள்.
“ஏன் அசோக் இங்கே எங்கேயாவது அந்த முதலை இருக்குமா? அது வந்துடுச்சுனா?”
அவள் மருண்ட விழியில் கேட்க அசோக் சிரித்து விட்டுப் பேசினான்.
“அடுத்த நொடி எனக்கோ உனக்கோ நெஞ்சு வலி வந்துக் கூட சாகலாம். ஏன் நாம வந்த படகு திரும்பிப் போகும் போது மூழ்கிக் கூடச் சாகலாம். சாவுக்கு பயந்தா வாழவே முடியாது வைஷூ”
அசோக் சொல்ல அந்த சொல்லின் உண்மையில் வைஷ்ணவி அமைதியாக அருகில் முட்டையிலிருந்து வெளி வந்த ஆமைக்குஞ்சுகள் கூட்டமாக கடல் நோக்கி மெல்ல ஊர்ந்து செல்ல அசோக் அவளிடம் கண்சிமிட்டினான்.
வைஷ்ணவி தான் கேட்டக் கேள்வியை மறந்து அந்த ஆமைகளின் நகர்வையும் கடல் நோக்கிய தேடலையும் ஆர்வமாக காணத் தொடங்கினாள். இயற்கையின் இன்னொரு ஜனனம் அழகியலாகக் கடல் மண்ணில் உருப்பெறத் தொடங்கியிருந்தது. அந்த காட்சி தந்த மகிழ்வின் மிகுதியில் வைஷ்ணவி அவனது கரத்தை குதூகலமாகப் பற்றி முகம் முழுவதும் இன்பம் ததும்ப அவன் விழிப் பார்த்து சிரித்தப் பொழுது, அவளுடனான அவனது ஈர்ப்புக்கும் அக்கறைக்கும் பெயர் வைக்கும் நிர்ப்பந்தமும் உடன் சேர்ந்து உருப்பெறத் தொடங்கியது அசோக்கின் மனதில்.

கவிதை
உன் மேல் எழும் ஈர்ப்புக்கு
பெயரிடத் தயங்கி
உணர்வுக்கு வார்த்தைக் கிடைக்கா
கவிஞனின் பெருங்கோபத் தேடலாக
சிக்கித் திணறுகிறது மனது!

