Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

07 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 7

.

ஒரு காலம் பல உணர்வுகளை ஏந்தி நின்ற வீட்டின் முன் நின்றிருந்தார் அரவிந்தன். கைகள் நடுங்க ஒரு வருடமாகப் பூட்டியிருந்த வீட்டை மெல்ல திறந்தார். அடுத்தடுத்து மூன்று இறப்புகள் எனப் பல கோரக் காட்சிகளைக் கண்டதற்குச் சாட்சியாக, கூடிக் களித்த வீடு இன்று மௌனமாக நிற்கிறது.



Advertisement

இருபதுகளில் மணமுடித்து இங்கு வந்தவர், நாற்பதுகளின் முடிவில் அனைத்தையும் இழந்து நிற்கிறார். காதல் மனைவி இல்லை என்பதால் அனைத்தும் இருந்தும் இல்லை என்ற நிலைதான் அரவிந்தனுக்கு. நாளையோடு தன் மனைவி தன்னை விட்டுச் சென்று ஒரு வருடம் பூர்த்தியாகிவிடும்.

‘நீ இல்லாது நான் இல்லை’ என்ற ஆழமான அன்பைக் கொண்ட தம்பதியாகத் தான் வாழ்ந்தனர். மனைவியின் உயிர் பிரிந்த பின் இவருக்கும் இதயம் துடிக்க மறுத்தது நிஜம் தான். இறந்தவர்களோடு நாம் இறப்பதில்லையே! மகளை நினைத்து எழுந்து நின்றாரோ இல்லை அவர் காலம் முடியவில்லையோ… மனிதன் உயிர் பிழைத்தார்.

வீட்டினுள் நுழைந்தவரின் விழிகள் நடுக்கூடத்தைப் பார்வையிட்டது.  திருமணப் புகைப்படத்தில் மனைவி சிரித்துக் கொண்டிருந்தார். மனம் விம்மி தவித்தது. திருமணப் புகைப்படம் போலவே குடும்பப் படமும் தூசி படிந்திருந்தது.

Advertisement

“ஐயா? தூசியா இருக்குங்களே… துணியால மூக்க மூடிக்கிறீங்களா?” என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பது போல் தலை அசைத்தவர், “நான் வெளியில இருக்கேன். கிளீன் பண்ணிடுங்க” என அழைத்து வந்த வேலையாட்களை, வீட்டையும் வீட்டைச் சுற்றி இருந்த இடத்தையும் சுத்தம் செய்யப் பணித்தார்.

Advertisement

மரத்தடியில் நாற்காலி போட்டு அமர்ந்தவரை காண அக்கம் பக்கத்தினர் வந்தனர். விசாரித்துச் சென்றனர்.

“இந்தா… இத குடி, நீ சென்னைலயே இருந்துடுவியோன்னு நினைச்சேன் அரவிந்தா. உன்ன பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என இவரோடு வேலை பார்த்த… அதே தெருவில் வசிக்கும் கோபாலன் காபி கோப்பையோடு வந்து அமர்ந்தார்.

“ஒரு வருஷமா என்ன ஆனன்னு தெரியாம… ப்ச்! சாவி இருந்தா வீட்டையாவது பராமரிச்சு இருப்பேன். வீட வித்துட்டதா பேசிகிட்டாங்களா, எனக்கும் என்ன நினைக்கிறதுன்னு தெரியாம இந்த பக்கமே வரல.”

Advertisement

“வந்துடுவேன்னு நினைச்சு தான் போனேன். ஆனா… போன இடத்துல இருக்க வேண்டியதா போச்சு!”

“ஆமா… யசோ குட்டி எங்க?” என்றவருக்கும் யசோதரா அவரின் குட்டிப் பெண்ணாகவே தோன்றினாள் போலும்.

“நான் மட்டும் தான் வந்தேன் கோபாலா. அவ… அவ வர நிலையில இல்ல கோபாலா” என்றவரிடம் மணி நேரம் செலவிட்டவர், “மதியம் சாப்பாட்டுக்கு வந்திடு. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு… போயிட்டு வரேன். நான் வரதுக்குள்ள பசிச்சா வீட்டுக்கு போ, சென்பாவும் பசங்களும் இருக்காங்க.” எனக் கிளம்பினார் கோபாலன்.

“மதியம் சாப்பாடு எங்க வீட்ல” என, முதல் முதலாக மனைவியை அழைத்து வந்த அன்றும் இப்படித்தான் அன்போடு வரவேற்றனர் கோபாலனும் அவர் மனைவி சென்பாவும். அன்றே பெண்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது. சில வாரங்களே போதுமானதாக இருந்தது இரு பெண்களும் உயிர் தோழிகள் ஆவதற்கு. இப்பொழுது அடுக்களைக்குள் சென்று பார்த்தாலும் சென்பா வீட்டுப் பாத்திரங்கள் இருக்கும். அங்கும் அப்படித் தான், இவர்கள் பாத்திரங்களைப் புழக்கத்தில் காணலாம்.

பெண்கள் இருவரும் சேர்ந்தே கடைத் தெருவைச் சுற்றி திரிவர். என்ன நேரமோ… அன்று… அந்த விபத்தன்று, சென்பா ஊரில் இல்லை. இருந்திருந்தால்… ப்ச்!

இன்று மனைவி இல்லை. மனைவி இனி வரப்போவதில்லை என்ற நிதர்சனத்தை ஒத்துக் கொள்ள அரவிந்தனுக்கு வருடம் ஒன்று தேவைப்பட்டது. முதலில் மனைவியின் இழப்பை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது என்றாலும் மகளுக்காக நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டார் மனிதர்.

“மாமா, அம்மா இத கொடுக்க சொன்னாங்க.” என ஒரு கோப்பை பழத்தைக் கொடுத்த சென்பாவின் மகன், “ரொம்ப நேரம் இங்கயே இருக்காம, நேரத்துக்குச் சாப்பிட வருவீங்களாம்.” என்றான்.

நரேன்… யசோவின் உடன் பிறவா சகோதரன். படிப்பு முடிந்த கையோடு வேலை என வெளியூர் சென்றான். அதன்பின் வெளிநாடு. இப்பொழுது மீண்டும் திருச்சிக்கே வந்து விட்டதாகக் கூறினான்.

“சட்டுன்னு என்னனென்வோ நடந்துடுச்சு. அத்தைக்கு ஆன மாதிரி எங்க வீட்டுல நடந்தா…? இருக்க வரைக்கும் அம்மா, அப்பா, குடும்பம்ன்னு இருக்கலாம்ன்னு வந்துட்டேன் மாமா” என்றான் அரவிந்தனிடம்.  

“நாங்க எல்லாம் இருக்கோம் மாமா. யசோதாவோட இங்கயே வந்துடுங்க மாமா. துறுதுறுன்னு ஒரு இடத்து நிக்காம ஓடிட்டும், வாய் ஓயாம வாயாடிட்டும் இருக்க எங்க யசோதா குட்டிய கூட்டிட்டு இங்கயே வந்துடுங்க மாமா. அம்மா, அவள பத்தி பேசாத நாளே இல்ல. அத்தையும் இல்லாம… யசோதாவும் இல்லாம அம்மா ஒரு மாதிரி ஆகிட்டாங்க. அதுதான் வேலைய அப்படியே விட்டுட்டு வீட்டோட வந்துட்டேன்.” நரேன் அத்தையின் பாசத்திலும், தங்கையின் சேட்டைகளிலும் தன்னை மறந்தான்.

யசோதரா பிறந்த போது பெண் பிள்ளை இல்லாத சென்பா, மகளை கொண்டாடி தீர்த்தார். ‘யசோதா’ என்ற பெயரை வைக்க விரும்பிய சென்பாவின் ஆசைக்காகவே, மனைவி ஆசை கொண்ட பெயரோடு சேர்த்து ‘யசோதரா’ எனப் பெயர் பதியப்பட்டது பிறப்பு சான்றிதழிலில்.

மனைவி இறந்த நேரம் சென்பா இருந்திருந்தால் மகளின் நிலையைக் கண்டிருப்பாரோ? விதியோ எதுவோ தங்கள் வாழ்க்கையை இவ்வளவு அலைக்கழித்திருக்க வேண்டாம் என நினைத்தவர் கண்கள் முன் அந்தக் கரிநாள் வந்து நின்றது.  

உயிராகக் காதலித்த மனைவியின் உயிர் பிரிந்த பின்னும் நான்கு நாள்கள் தாக்குப் பிடித்த அரவிந்தன் அதன் பின் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்தார். அன்று கோபாலன் தான் இவரோடு மருத்துவமனையில் இருந்தார். சென்பா வெளிநாட்டில் மருமகளின் பிரசவத்திற்காக சென்றிருக்க, யசோவை கவனிப்பார் இல்லாது போனது.

“விஷயம் கேள்விப்பட்டு வந்தேன் அரவிந்தா. புள்ள ரொம்ப தொவண்டு கெடக்கு. எனக்கும் ஆடு மாட எல்லாம் விட்டுட்டு இங்க இருக்க முடியாது. நீயும் ஆஸ்பித்திரில கெடக்க. நீ தேறி வர வரைக்கும் என்னோட ஒண்ணு ரெண்டு மாசம் இருக்கட்டும் புள்ள. நான் பாத்துகிடுதேன்” என இவரின் தூரத்துச் சொந்தமான சரோஜா பாட்டி, வீட்டில் அரை மயக்கத்தில்… கேட்பார் இல்லாது இருந்த யசோவை அவரோடு அழைத்துச் சென்றார்.

உடலின் நிலை மாறியதும் மனைவியின் இழப்பை விழுங்கி மகளைக் காணக் கிளம்பியவரை தடுத்து நிறுத்தியது பக்கத்து வீட்டுப் பிரச்சனை. அவர்கள் வீட்டிலும் பெரும் இழப்பு. குடும்பமாக பழகியவரை தனித்துவிட மனமில்லை. தொடர்ந்து மருத்துவமனை வாசம் என அரவிந்தன் நாள்கள் திருச்சியில் நீண்டன. மகளை காண கிளம்பியவரை நிறுத்தியது மரண ஓலம். இரண்டு மாதங்களின் மீண்டும் ஒரு துக்கச் செய்தி. அரவிந்தன் இடிந்து போனார். பெரியவரை தனியே விடாது தாங்கினார் அரவிந்தன். மூன்றாம் மாதம் பக்கத்து வீட்டுப் பெரியவர் இவரிடம் கூறிவிட்டு வடக்கு நோக்கிச் சென்றுவிட்டார். மீண்டும் ஓர் அடி… என வாழ்க்கை அரவிந்தனை புரட்டிப் போட்டது.

மீண்டும் மீண்டும் இப்படியான செய்தி மகளை உடைத்துப் போடும் என்பதால் மகளை மூன்று மாதங்கள் அரவிந்தன் அழைத்துக் கொள்ளவே இல்லை. அலை அடித்து ஓயவும் மகளை அழைத்து வரக் கிளம்பினார் அரவிந்தன்.

மகளை அழைத்துச் சென்ற சரோஜா பாட்டி ஒரு மூலையில் முடங்கிக் கிடக்க, யசோ ஒரு மூலையில் உடலில் மட்டுமே ஜீவனைச் சுமந்து கிடந்தாள்.

“பொண்ணு ஒரு வார்த்த பேசறது இல்ல. காத்து கருப்பா இருக்கும்ன்னு சாமியார கூட்டி வந்தேன். விபுதி பூசி, ஆத்தா போன துக்கம்ன்னு சொல்லிட்டார். பேசறது இல்ல, ஒழுங்கா தூங்கறது இல்ல, சாப்பாடும் சாப்பிடறது இல்ல. ஊட்டி விட்டா நாலு வாய் வாங்குவா.” எனவும், பாதியாகி போன மகளை பார்த்த அரவிந்தன் பயந்தே போனார்.

திருச்சிக்கு வந்ததும் மருத்துவரிடம் காட்ட, “மூணு மாசமா இப்படித்தான் இருக்காங்கன்னு சொல்றீங்க… சைக்கியாட்ரிஸ்ட்ட தான் பாக்கணும்” என்றார்.

அதீத அதிர்ச்சியால் மகளுக்கு மன நிலை பிழறி விட்டது என்ற அதிர்ச்சியிலிருந்து வெளி வரும் முன், அலுங்காது குலுங்காது “பிரெக்னென்டா இருக்க பொண்ண இன்னும் கவனமா பாத்துக்க வேண்டாமா?” என அடுத்தக் குண்டை இறக்கினார் மருத்துவர்.

திருமணமாகாத மகள் வயிற்றில் கருவா? எங்கு? எப்பொழுது? யாரால்? என்ற எந்த கேள்விக்குமே பதில் இல்லாது அரவிந்தன் தவித்து போனார். சென்ற இடத்தில் ஏதேனும் நடந்திருக்கும் என இவர் நினைத்து கருவைக் கலைக்கக் கேட்க, “நாலு மாசம் ஆகிடுச்சு. இனி முடியாது” என அடுத்த வெடிக் குண்டைப் போட்டார் மருத்துவர்.

இதயத்தைப் பிடித்துக் கொண்டு சாயக் கூட மனிதனுக்குத் தெம்பில்லை. நான்கு மாதங்கள் என்றால்… அனைத்தும் அவர்கள் வாழ்வில் சரியாகச் சென்று கொண்டிருந்த காலகட்டம் ஆகிற்றே. அரவிந்தனுக்கு ஏதோ புரிவது போல் இருக்கவும் மனிதன் செய்வது அறியாது அமர்ந்துவிட்டார்.

மகளின் வயிற்றில் வளரும் கருவை விட, சூனியத்தை வெறித்துப் பார்த்து அமர்ந்திருக்கும் மகளின் நிலை அரவிந்தனை பயமுறுத்தியது. வாழும் இடத்தில் பெண்பிள்ளையை ‘பைத்தியம்’ என முத்திரை குத்திவிட்டால், அவள் எதிர்காலம் என்னாவது? மாசமாக இருப்பது வெளியே தெரிந்தால்? கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் தவித்து நின்றார் தகப்பன்.

நாளை கடத்தாது தெரிந்த மருத்துவரைச் சென்று பார்த்தார் அரவிந்தன். “சென்னையில எனக்கு தெரிஞ்ச நல்ல டாக்டர் ஒருத்தர் இருக்கார். என் கூட படிச்சவர். ஒரு தரம் அவர்ட்ட காட்டி பாருங்களேன். இத விடப் பெரிய பெரிய கேஸ் எல்லாம் குணப்படுத்தியிருக்கார் மனுஷன். யசோதராவுக்கு அதிர்ச்சி அவ்வளவு தான்… கண்டிப்பா குணப்படுத்திடுவார். அவங்கள பாதிச்ச இடத்த விட்டு நகர்ந்தாலே பாதி குணமாகிடும்.” என சென்னையின் திசையை நோக்கி கை காட்டினார் யசோவைப் பரிசோதித்த மருத்துவர்.

அப்படி ஆரம்பித்தது தான் அரவிந்தன், யசோதராவின் சென்னை பயணம். இன்று மகளில் நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இன்றுவரை பேச்சு வரவில்லை.

மன நிலை பிழறியதால் பேச மறுக்கிறாள் என்றிருந்த மருத்துவர், “வோக்கல் கார்ட்ல பிரச்சன இருக்குமோ?” எனச் சந்தேகித்தார். அதை அடுத்து அவர் கூறிய மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அவரோ, “அளவுக்கு அதிகமா தொண்டைய ஸ்ட்ரெஸ் பண்ணும் போது வோக்கல் கார்ட்ல ஹெமொரேஜ் ஆகும். அத ஹீல் ஆகவிடாம திரும்பத் திரும்ப அந்த தொண்டைய மிஸ்யூஸ் பண்ணினா இந்த மாதிரி பேச்சுல பிரச்சனை வரும். போதாத குறைக்கு இவங்க தொண்டையில அடிபட்டிருக்கும் போல.

நேரத்துக்கு கவனிக்காம போகவே பேச்சு வரல. இவங்களும் பேச முயற்சி பண்ணலங்கறனால, அது உங்களுக்கு தெரியாமலே போயிருக்கு. சர்ஜரி ஒரு ஆப்ஷன் இருக்கு. ஆனாலும் திரும்பவும் பேச முடியும்ன்னு என்னால கேரண்டி கொடுக்க முடியாது. டெலிவரி முடியட்டும்… அதுக்கு முன்ன சர்ஜரி வேண்டாம்.” என்றுவிட்டிருந்தார்.

பிரசவமும் முடிந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் மகளைத் தொண்டைக்கான மருத்துவரிடம் காட்டவில்லை. ஆத்விக் பால்குடி மறந்தபின் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என இவர் நினைத்திருக்க, கடந்த மூன்று மாதங்களாக யசோவிடம் நல்ல முன்னேற்றம்.

மகள் தேறிவிடுவாள் என்ற நம்பிக்கை அரவிந்தன் மனதில் துளிர்த்திருக்கிறது. மகள் சரியானால் சிகிச்சை செய்வது எளிது என்பதால் அரவிந்தன் மகளின் குரலை மீண்டும் கேட்கக் காத்திருக்கிறார். தன் வேலையைத் தானே செய்தாலும், அவ்வப்போது தன்னையும் மறந்து சூன்யத்தைப் பார்ப்பது மட்டும் மாறவில்லை. இப்பொழுது என்ன செய்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ?

“ஐயா… கிணத்த தூர் வார வேண்டாங்களா?” என கேட்டு நின்ற வேலையாள் பக்கம் கவனத்தைத் திருப்பினார் அரவிந்தன்.

“ம்ம்… செய்வீங்களா?” என இருக்கையை விட்டு எழுந்தவர் வீட்டின் ஒரு புறம் இருந்த கிணற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

“சின்ன குட்டி எப்படி இருக்குங்க ஐயா?” எனக் கேட்டுக்கொண்டே நடந்த வேலையாளின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது?

அவர் கூறிய சின்ன குட்டி… அதாவது யசோதரா, கொடைக்கானலில் சூன்யத்தைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.

கொடைக்கானலில் சீதோஷ்ணம் நன்றாக இருந்தது. தோட்டத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த யசோதரா அங்கிருந்த பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் கவனம் அங்கில்லை.

இரவு நிலவு. நீளமான சாலை. குளிர்ந்த காற்று. அவளை நிறைத்த அவன். அங்கு அவனோடு அவள். நீள நீளமான பன்னீர்ப் பூக்களைக் கொத்தாக ஏந்தி நின்றிருந்தவன் இவளைப் பார்த்துப் புன்னகைத்தான். பூத்துக் குலுங்கும் மலர்களை விட அவன் புன்னகை அவளை மலர்வித்தது.

‘இந்தா’ என அதை இவளிடம் கொடுத்தவன் இன்னும் சிலதைப் பொறுக்கி எடுத்து இவள் விரிந்த கூந்தலில் சொருகிக் கொண்டே, ‘கார்மேகம் நடுவே நட்சத்திரக் கூட்டம். கவித எப்படி?’ என புருவம் உயர்த்திக் கேட்டான். ரசித்தாலும், ‘சகிக்கல’ என்றாள் இதழ் சுழித்து. ‘பொய்… வாய திறந்தாலே பொய்’ என சுழித்த மென் இதழை இரு விரல்களால் இழுத்து மென்மையாகக் கசக்கினான். ‘விடுடா’ என அவனை அடித்து இதழை அன்று போல் இன்றும் தேய்த்துவிட்டாள்.

பூக்களைக் கூந்தலில் சொருகி முடித்தவன் பார்வையில் அத்தனை ரசனை. ரசனையைக் காட்டாது, ‘வன தேவத மாதிரி இருக்க டி’ கேலி செய்து சிரித்தான். அவன் புன்னகை அவளையும் தொற்றிக்கொள்ள அவள் இதழ்கள் மில்லி மீட்டர் அளவு விரிந்தன. ‘சிரிச்சு பயமுறுத்தாத தெய்வமே’ என அதற்கும் கேலி செய்தான்.

மர பெஞ்சின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தவளை, “யசோ?” என அழைத்துக் கொண்டே வந்து நின்றார், சுபத்ரா.

அவள் கவனம் எப்பொழுதும் போல் ‘அவள் உலகில்’ இருந்தது. “யசோதரா, குளிரலியா மா?” எனப் பெண்ணின் தோள் தொட்டார். தலை உயர்த்தி அவரை பார்த்தவள், மெல்லிய புன்னகையைப் பதிலாக கொடுத்தாள்.

“வாயேன் உள்ள போலாம்” என அழைத்தவர், அவளிடம் அசைவில்லாது போகவே அவளோடு அமர்ந்து கொண்டார். மீண்டும் அவளின் பார்வை வானத்தை நோக்கியது. ‘அங்க என்ன தான் தெரியுமோ?’ என சுபத்திரா வானைப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அவளுக்கு?

யசோதராவிற்கு அவன் தெரிந்தான். ‘சொல்லு… அந்த மேகம் எனக்குப் பூனை மாதிரி தெரியுது. உனக்கு?’ எனக் கேட்டு வெட்டாந்தரையில் தலைக்குக் கைகொடுத்து இவளோடு படுத்திருந்தான். அவன் கையில் தலை சாய்த்து படுத்திருந்தவள், ‘பூனையோட வாலு காத்துக்கு பறக்குது பாரு. அது தான் தெரியுது எனக்கு’ என கிளுக்கி சிரித்தாள்.

‘முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்…

யாரோடு இங்கு..எனக்கென்ன பேச்சு

நீதானே கண்ணே..நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே’ என இல்லாதவனை எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் யசோவை பார்த்திருந்தவர் பார்வையில் அத்தனை பரிதாபம். முன்பைவிட முன்னேற்றம் இருந்தாலும் இவள் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்ற பயமும் இருக்கிறது சுபத்ராவிற்கு.

சுபத்ரா, விசாகன், அரவிந்தன் மூவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அரவிந்தனுடையது காதல் மணம். வீட்டில் பேசி சம்மதம் வாங்கியே மணம் புரிந்தாலும், இருவர் பக்கமும் திருமணத்தோடு அவர்கள் இருவரையும் தலை முழுகி விட்டனர். சுபத்ரா விசாகனை மணந்து சென்னை பக்கம் வந்துவிட, அரவிந்தன் திருச்சியில் தன் மணவாழ்வை துவங்கினார்.

இன்லான்ட் கடிதம் மூலமாகத் தொடர்ந்த அவர்கள் தொடர்பு நாளடைவில் போஸ்ட் கார்டில் முற்றுப்பெற்றது. நட்பு அப்படியே இருந்தாலும், அவரவர் வேலை… குடும்பச் சூழல் முன்னுக்கு வர, கடிதப் போக்கு வரத்து பின்னுக்குச் சென்றது.

மாதங்கள் முன்பு மாசமாக இருந்த மருமகளை மருத்துவரிடம் காட்டச் சென்ற அன்றுதான் அரவிந்தனை யசோவோடு மருத்துவமனையில் பார்த்தார் சுபத்ரா. வருடங்கள் உருவத்தை மாற்றி இருந்தாலும் நட்பு அப்படியே இருந்தது.

“அரவிந்தா?” என சுபத்ரா தான் முதலில் அடையாளம் கண்டு அரவிந்தனை அழைத்தார்.

“உன் பொண்ணா அரவிந்தா?” எனக் கேட்டவர், அதோடு நிறுத்தாது தொடர, நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டவர் மனம் ஆறவே இல்லை.

“நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் அரவிந்தா? பாத்துக்கலாம்” என நம்பிக்கை அளித்தார் சுபத்ரா. நம்பிக்கை அளித்தவர், இன்று வரை தோழனையும் அவர் மகளையும் விடவே இல்லை.

இதோ, நாளை தாயின் முதலாம் நினைவு நாள் இருக்க எங்கே யஷோதரா மீண்டும் மான உளைச்சலுக்கு உள்ளாகி விடுவாளோ என அவளைத் தங்களோடு கொடைக்கானலுக்கு அழைத்து வந்துவிட்டார் சுபத்ரா.

சுபத்ராவின் கரத்தில் இருந்த ஆத்விக், “ம்ம” என யசோவை நோக்கிச் சரிந்தான். குழந்தையின் சத்தம் கேட்கவே யசோவின் கவனம் ஆத்விக்கின் பக்கம் சென்றது. தன் மீது பாய்ந்த குட்டி மகனைத் தூக்கிக்கொள்ள, எப்பொழுதும் போல் “ஆ ஊ” என்று குழந்தை பசிக்கு மார்பை முட்ட ஆரம்பித்தான்.

இனி யசோவின் கவனத்தை தங்களின் பக்கம் திருப்புவது எளிதெனத் தெரிந்ததால், “குழந்தைக்கு பசிக்குது. பால் கொடுக்கிறியா?” எனக் கேட்டார்.

சரி என்பது போல் அவள் தலையாட்ட, “வா… உள்ள போயிடலாம்” என ஒருவழியாக யசோதராவை வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

குட்டி மகன் முகம் பார்த்துப் புன்னகைத்த யசோ, அவனின் தலையை மெல்ல வருடினாள். மகன் பால் அருந்த, அவனின் குட்டி விரல்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தவள் கவனம் முழுவதும் குழந்தையின் மீதிருந்தது.

பிரசவம் முடித்து வந்த யசோவை எப்படிக் குணப்படுத்துவது என வழிகளைத் தேட, யசோவின் மடியில் படுத்து மார்பை முட்ட ஆரம்பித்த ஆத்விக், மருந்தும் மருத்துவமும் முடியாததைச் செய்து முடித்தான்.

அன்றுவரை சூனியத்தை மட்டுமே வெறிந்திருந்தவளின் பார்வை, முதன் முதலாகத் தாழ இறங்கி தன் மார்பில் முட்டிக்கொண்டிருந்த குழந்தையின் மீது படிந்தது. அதன்பின் இந்த மூன்று மாதங்களில் யசோதராவிடம் அதிக மாற்றம். முன்பெல்லாம் அதிகம் தூங்கி வழிந்த குழந்தை இப்பொழுது அதிக நேரம் யசோவிடம் செலவழித்தான் என்றாலும் அரவிந்தனுக்கு சற்று பயம் தான் பிள்ளையை மகளிடம் கொடுக்க.

“நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு… இந்த ஃப்ளோவ கெடுக்க வேண்டாம். குழந்தைய அவங்க ஒண்ணும் பண்ண மாட்டாங்க” என மருத்தவர் கூறிவிடவே யசோவிடம் ஆத்விக்கின் நேரம் கூடியது.

விசாகன், இரவு கிளம்பி அரவிந்தனோடு இருக்க திருச்சிக்குச் செல்ல இருப்பதால் விசாகன் குடும்பம் முழுவதும் கொடைக்கானலில் இருக்க, விசாகன் மட்டும் சென்னையில் இருந்தார்.

“மான்வி, அப்பா சென்னைக்கு போக நாலு நாள் ஆகும் போல. இந்நேரம் காலேஜுக்கு போகாம நான் இங்க இருக்க முடியாது.  விவான் இருப்பான் மேனேஜ் பண்ணிடுவ தானே? கிளம்பிட்டா? இல்ல அவன போக சொல்லட்டா?” என மனைவியின் முன் வந்து நின்றான் ரித்விக்.

விசாகன் சுபத்ரா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் ரித்விக், சென்னையில் இருக்கும் தங்கள் ‘களஞ்சியம்’ கல்லூரியில் விசாகனுக்கு உதவியாகவும், மாணவர்களுக்கு  ஃபுட்பால் கோச்சாக இருக்க, சின்னவன் விவான், மொரிஷியசில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது விடுமுறைக்கு வந்திருக்கிறான்.

“விவான் இருப்பான்னா, நீங்க கிளம்புங்க ரித்து. அவன் இருந்தா பொழுது ஜாலியா போகும். ஏதாவது வேணும்னா… கேட்டதும் சாக்கு போக்கு சொல்லாம பொறுப்பா செஞ்சுடுவான்.” என்றவள் கணவன் பெட்டியை அடுக்க எழுந்தாள்.

“ஒரு வார்த்த கூட என்னைப் பத்தி தப்பா பேசாமலே என்னை டோட்டல் டேமேஜ் பண்ண நீ ஒருத்தி போதும் டி” என்றவன் மான்வியில் தலையில் செல்லமாகக் கொட்டு வைத்து, “விவான்” என அழைத்துக் கொண்டே தம்பியைத் தேடி சென்றான்.

“வரேன் ண்ணா” எனச் சத்தம் வந்த திசையின் பக்கம் இவன் செல்ல, அடுப்படியில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தான் விவான்.

“இன் நேரம் யாருக்கு டா பால்?”

“யசோ, குட்டிக்கு ஃபீட் பண்றா. அதுதான் அம்மா யசோக்கு குடிக்க கொண்டு வர சொன்னாங்க” என்றவனிடம், “அவளுக்கு பால் பிடிக்காதே டா. ஜூஸ் இல்லியா?”

“ஏற்கனவே குளிருது ண்ணா. சளி பிடிச்சா பாப்பாக்கு கஷ்டம்”

“கேரட் ஜூசோட பாலும் நாட்டு சக்கரையும் சேர்த்து கொடுப்பா உன் அண்ணி.” என்றான்.

“இங்க ஜூசர் இல்ல. மிக்சில எல்லாம் அடிச்சு ஃபில்டர் பண்ணி எடுக்கதுக்குள்ள விடிஞ்சுடும். பால் ஆகிடுச்சுண்ணா.”

“அப்போ கொஞ்சம் ஹார்லிக்ஸ் போடு. அண்ணிய கூப்பிட்டா அவ செஞ்சுருப்பாளே” என்றான் ரித்விக்.

அந்தக் குடும்பம் யசோவை தத்தெடுக்காத குறையாகக் கவனிப்பது இன்று நேற்றில்லை. என்று மான்வி யசோதராவை பார்த்தாளோ அன்றிலிருந்தே அவள் மீது ஒரு பிடித்தம். ஜீவன் வடிந்து, வயிற்றை தள்ளிக் கொண்டு, தன்னை மறந்து சூனியத்தைப் பார்த்து நின்றிருந்த யசோவை பார்த்த அன்றே மான்விக்கு அவள் மீது ஒரு பற்று. எப்படியாவது இவள் குணமாக வேண்டுமே என மனமார ஆசை கொண்டாள்.

அன்னை இல்லாத யசோவை பிரசவம் முடிந்த கையோடு சுபத்ரா அவரின் வீட்டில் வைத்துக் கொண்டார். அரவிந்தன் மறுப்பு அங்குச் செல்லுபடி ஆகவில்லை. “அவ நார்மலா இருந்தா வேற விஷயம். இப்போ அவளுக்கு பொம்பள துணை வேணும். நீ சும்மா இரு அரவிந்தா” என சுபத்ரா அரவிந்தன் பேச்சைக் காது கொடுத்து கேட்கவில்லை.

அன்னைக்கு ஏன் யசோ மீது இவ்வளவு அன்பு எனப் பிள்ளைகள் வியாக்காது இல்லை. காரணம் இல்லாது வருவது நட்பு என்றாலும் இவ்வளவு அக்கறைக்குக் காரணம் இருந்தது.

 “காலேஜ் டேஸ்ல என்னோட ரொம்ப கிளோஸ் ஃப்ரெண்ட் அரவிந்தன். என் மூலமா உங்க அப்பாவும் அவனுக்கு ஃப்ரெண்ட் ஆனார். மூணு பேரும் சேர்ந்தே தான் சுத்துவோம்.

அவனுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கலாட்டா… அதுல உங்கப்பா மண்டைய ஒருத்தன் பொளந்துட்டான். இவருக்காக கத்தி குத்தும் வாங்கினான் அரவிந்தன். அதோட விட்டானா… கத்தி குத்தோட என்னையும் அவனுங்க கிட்ட இருந்து காப்பாத்தினான்.

இவன் மட்டும் அன்னைக்கு உங்க அப்பாவ சரியான நேரத்துக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்கலனா… என்னை அவனுங்க கிட்ட இருந்து காப்பாத்தாம போயிருந்தான்னா, இன்னைக்கு நாம யாருமே இல்ல.” என தந்தையும் தாயும் உணர்சி வசபட்டு பேசிய அன்றிலிருந்தே இப்படித்தான், அரவிந்தன் மாமனாகி போக, இவர்கள் குடும்பம் ஆகிப் போனாள் யசோதரா.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!