Skip to content
Post Views: 3,173
வேளை 11
லாலா எப்படியோ உதயாவை பேசி சரிகட்டியிருக்க சண்டை பெரிதாகாமல் சமாதானமாகியது. சித்ரஞ்சன் மட்டும் லாலாவை முறைத்துச் சென்றான். லாலாவுக்கு எப்போதும் சித்தப்பாவை சங்கடப்படுத்துகிறோம் என்று வருத்தமாக இருந்தபோதிலும் அவன் எதையும் யோசித்து செய்யவில்லை. அந்த நேரம் எதையாவது சொல்ல நினைத்தான். அவ்வளவே!
Advertisement
ப்ராஜக்ட் டெலிவரி தேதி நெருங்கிய காரணத்தால் உதயாவிற்கு வேலைகள் கொஞ்சம் மிச்சமிருந்தன. தாலி பிரித்துக் கோர்க்க வேறு தேதியில்லை என்று சித்ரா அதட்டலாக லாலாவிடம் சொல்லியிருக்க, ஒரு நாள் விடுமுறை எடுத்து வந்திருந்தாலும் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன் என்றிருந்தாள்.
அன்று காலை தாலி பிரித்துக் கோர்ப்பது நடந்து முடிக்க, மாலை உதயாவுக்குப் பெரிதாக வேலையில்லை. சமையலறையில் சித்ரா, வசுந்த்ரா நின்றனர். மதியம் செய்த உணவே இரவுக்குமிருந்தது. அந்திப்பொழுதில் சரோஜினியும் வந்திருக்க அவளோடு பேசியபடி சிறிது நேரமிருந்த உதயா,
Advertisement
Advertisement
“சரோ! எனக்கு ஆபிஸ் வர்க் கொஞ்சமிருக்கு. இங்க எங்க நல்லா நெட்வர்க் கிடைக்கும்?” என்று கேட்டாள்.
“மாடியில உங்க ரூம்ல கிடைக்கும் அண்ணி. கீழ இருக்க ரூம்லதான் லாலா முன்னாடி இருந்தான், ஆன்லைன் க்ளாஸ் அங்க எடுப்பான். அங்கயும் கிடைக்கும்” என்றதும் யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாமென்ற எண்ணத்தோடு மாடிக்கு அவர்கள் அறைக்குச் சென்றாள் உதயா.
Advertisement
மணி ஆறரைத் தாண்டியிருக்க உதயாவை காணாமல் லாலா மாடியேறினான். வேகமாக படியேறியவனின் நடை உதயா லேப்டாப் முன் அமர்ந்திருப்பதைக் கண்டு குறைந்தது. மெல்லிய எட்டுகள் வைத்து அவள் பக்கம் சென்றவன் அமைதியாக நின்றான்.
லாலா, “மீட்டீங்?” சன்ன குரலில் கேட்டான்.
அவன் குரலுக்கு எதிராக கொஞ்சம் சத்தமாகவே, “மீட்டிங் இல்ல, ப்ராஜக்ட் நெக்ஸ்ட் வீக் டெலிவரி கொடுக்கணும்ங்க. லாஸ்ட் மினிட்ல கொஞ்சம் வேலையிருக்கு, அதான்” என்ற உதயாவின் கண்கள் சோர்ந்திருந்தன.
“எனக்குக் கொஞ்சம் டீ போட்டு எடுத்துட்டு வரீங்களா?”
ஏற்கனவே தேனீரால் ஒரு போர் வந்திருக்க, இந்த முறை லாலா உஷாராக இருந்தான். புன்னகையுடன் தலையசைத்தவன் சமையலறைக்குச் சென்றான். சித்ரா பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.
“மா, ஒரு டீ வேணும்” என்று கேட்க அவரும் வழக்கம்போல் மகனுக்கு டீ வைத்துக் கொடுத்தார்.
டீ தயாரானதும் லாலா குடிக்காமல் மாடிபக்கம் போக,
“டேய்! டீயை எடுத்துட்டு எங்கடா போற, குடிச்சிட்டு டம்ளரைப் போடு. நான் ஒருதிரியா(ஒன்னா) கழுவி வைச்சிடுவேன்” என்ற சித்ராவின் பேச்சில் திரும்பிய லாலா,
“அம்மா! டீ உதயாவுக்கு” என்றபடி அவன் மாடியேறிட, சித்ராவின் சினமும் ஏறியது.
தன் மகனை எப்படி அவள் வேலை வாங்கலாம் என்ற எரிச்சல் மிகுந்தது. மகனிடம் ஒருவார்த்தை பேசாதவர் மருமகளை விடவில்லை. லாலா மனைவிக்கு டீ கொடுக்க உதயாவின் முகம் டீயைப் பருகும் முன்னே இனிதாய்க் கனிந்தது.
“தேங்க்ஸ்ங்க, சிஸ்டம் பார்த்து ஒரே தலைவலி” என்றபடி தலையை ஒருவிரலால் அழுத்தித் தேய்த்தவள் தேனீரைப் பருகினாள்.
“பசிச்சா சொல்லுடி, சாப்பிட எடுத்துட்டு வரேன்” லாலா அக்கறையாக சொல்ல,
“பசிச்சாலும் வேலை முடியறவரைக்கும் டீ தான்ங்க. சாப்பிட டைம் இல்ல, ஒரு இரண்டு மணி நேரம் அசையாம உட்கார்ந்தா முடிச்சிருவேன்” என்ற உதயாவை தொந்தரவு செய்யாது லாலா கீழே சென்றான். சக்தியும் வேலை முடிந்து வந்திருக்க இருவரும் காம்பவுண்ட் சுவரில் சாய்ந்து நின்று கதை பேசினர்.
வாஞ்சிநாதன் அதனை பார்த்தவர் சித்ரஞ்சனிடம், “ஏண்டா இவனுங்க என்னமோ பல வருஷமா பேசுறவனுங்க மாதிரி பேசிக்கிறானுங்க” என்று சந்தேகமாக மகனை பார்க்க
“பசங்கனா அப்படித்தான் டக்குனு சேர்ந்திருவாங்கண்ணா. இப்ப என்ன லாலாவும் சக்தியும் ஒன்னா இருக்கிறது நல்லதுதானே? சரோஜினி சந்தோஷப்படுவா” என்றான் சித்ரஞ்சன்.
சக்தியிடம் பேசிவிட்டு லாலா வர, திலகர் பேரனை அழைத்தார்.
“சொல்லுங்க தாத்தா”
“இங்க பாருடா லாலா, ஒன்னு சொல்றேன். மனசுல வச்சிக்கோ. என்னதான் மாமன் மச்சனானாலும் அந்த பய கிட்ட ரொம்ப பேச்சு வச்சுக்காத! உன் பரீட்சையெல்லாம் எப்படி போகுது, அவனை மாதிரி முதல்ல கவர்மெண்ட் வேலை வாங்குடா. அப்பதான் எனக்குக் கௌரவம், உனக்கும் மரியாதை” என்று திலகர் லாலாவிடம் சொல்லி செல்ல, லாலாவுக்கு சுருக்கென்றது.
இரவு உணவுக்கு உதயா கீழே இறங்கி வந்தவள் பத்தே நிமிடத்தில் உண்டு எழுந்தாள். அவளின் அவசரம் கண்ட வசுந்த்ரா,
“பொறுமையா சாப்பிடேன் மா” என்றிட
“இல்லத்த, சாப்பிட்டேன். ஆபிஸ்வர்க் அவசரமா முடிச்சிக் கொடுக்கணும்.” என்றாள் உதயா.
“அப்படியா ஆயி, அப்போ போய் செய்” என்றார் அஞ்சம்மா. அஞ்சம்மாவுக்குப் பெண்கள் வேலைக்குப் போகக் கூடாதென்ற எண்ணமெல்லாம் இல்லை. அவர் பேத்தி சரோஜினி வேலைக்குப் போவதையே பெருமையாக நினைப்பார்.
உதயாவும் உண்டு எழுந்து தட்டினை கழுவி வைத்து சென்று அவள் வேலையைப் பார்த்தாள். லாலா அமைதியாக வந்து உறங்கிப்போனான்.
அடுத்த நாள் காலையில் உதயா சீக்கிரம் எழுந்தாள். மாடியை விட்டு கொலுசொலி கேட்க இறங்கி வந்த மருமகளை அழைத்தார் சித்ரா. கொல்லைப்பக்கத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தவர் அருகே சென்ற உதயா பளிச்சென்ற புன்னகையோடு,
“சொல்லுங்கத்த” என்றாள்.
“சொல்லத்தான் கூப்பிட்டேன். உன் மனசுல நீ என்ன நினைச்சு செய்ற தெரியல, ஆனா அதெல்லாம் இங்க எடுபடாது” என்றார் கட்டளையாக. உதயா உறங்க இரவு நேரமாகியது. வேலையை முடித்துவிட்டாலும் அத்தனை நேரம் உட்கார்ந்திருந்ததில் முதுகில் பயங்கர வலி. அதில் உறக்கம் உடனே வேலை முடித்த நிம்மதியில் கண்ணயர காலையில் எஞ்சியிருந்த உறக்கத்தை விரட்டித்தள்ளி விரைவாகவே எழுந்திருந்தாள்.
குளித்து சுடிதாரில் தயாராக வந்திருந்தாள். இதில் மாமியார் கண்ணில் என்ன தவறு தென்பட்டது என்று தெரியாது அவள் விழிக்க,
“வேலைக்குப் போய் சம்பாரிச்சா எல்லாம் வெளியே இருக்கணும். வீட்ல அந்த பவுசெல்லாம் காட்ட கூடாது!” என்றதும் உதயாவின் புருவங்கள் இடுங்கின.
“என்னாச்சுத்த?” என்றாள் நேரடியாக.
சித்ரா அவளின் கேள்வியில், “என் புள்ள என்ன நீ வச்ச ஆளா?” என்றார் கோபமாக.
“அத்த! என்னாச்சுனு தெளிவா சொல்லுங்க. நீங்க சொல்றது புரியல” உதயா புரியவில்லை என்று கேள்வி கேட்டது கூட சித்ராவுக்குக் குற்றமாகவே பட்டது.
“புரிஞ்சாலும் புரியாத மாதிரிதான் நடிப்ப. டவுன்ல வளர்ந்த புள்ளையாச்சே! நேத்து என் மவனை உனக்கு டீ எடுத்தாந்து தர சொல்ற? ஏன் மகாராணிக்கு அஞ்சு நிமிஷம் வந்து டீ குடிச்சிட்டு போவ முடியாதோ” என்றதும் உதயாவுக்குக் கோபம் வந்தது. ஆனாலும் லாலாவின் அம்மா என்பதற்காக பொறுமையாக இருந்தாள்.
“எனக்கு நிஜமா வேலை இருந்துச்சு அத்த, அப்படியெல்லாம் சட்டுனு வர முடியாது. டயர்டா இருந்துச்சு அதான் டீ கேட்டேன்” என்று சொல்ல
“அதுக்குனு என் புள்ளையை வேலை வாங்குவியா? எங்கிட்ட கேட்க வேண்டிதானே? என்ன அவனை விட பெரிய வேலையில இருக்கணும்னு அவனை மட்டம் தட்ட பார்க்கிறியா?” என்று கேட்டு விட உதயா உடைந்து போனாள். அவளிடம் வருத்தம், கோபம், இயலாமை என கலவையான உணர்வுகள். உணர்வுகளின் குவியலாக இருந்தாலும் அதில் கொஞ்சமும் வெளிப்படுத்த முடியாத நிலையே அவளை வேதனைப்படுத்தியது.
“என்னமோ நீ விருந்தாட வந்தவ மாதிரி ராத்திரி சாப்பிட்டு எழுந்து போற, வீட்ல எல்லாரும் சாப்பிட்டாங்களா கேட்கல. மருமகளா யாரையும் கவனிக்கல” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.
“இனிமே இப்படி நடக்க மாட்டேன் அத்த” என்ற உதயா சித்ரா அடுத்துப் பேசுவதற்குள் விறுவிறுவென்று நடந்து வீட்டினுள் சென்று மாடியேறினாள். லாலா குளித்துவிட்டு வெளியே வர அவசரமாக வந்த உதயா அவன் முகம் கூட பார்க்காது குளியறைக்குள் புகுந்தாள். உள்ளே சென்றவள் அழுதுத் தீர்த்தாள்.
லாலாவோ, “ஓய், ரொம்ப அவசரமா?” என்று சிரித்தபடி தயாரானான். அவன் கீழே சென்று அன்றைய தினசரியை வாசித்து முடித்து காலை உணவு உண்ண உட்காரும் வரை உதயா கீழே இறங்கவில்லை.
“இரும்மா உதயாவை சாப்பிட்ட கூப்பிடுறேன்” என்று லாலா எழ, சித்ரா அதட்டினார்.
“ஏன் அவளா வரமாட்டாளா? கூப்பிட ஒரு ஆளா?” என்று கேட்க வாஞ்சிநாதன் முறைத்தார்.
“அந்த புள்ளை வேலையா இருக்கும், பத்து படியேறினா உன் மவன் ஒன்னும் தேஞ்சு போக மாட்டான்.” என்று மருமகளுக்கு ஆதரவாகப் பேச சித்ராவுக்கு இன்னும் கோபமேறியது. காலையில் அவர் அடுத்துப் பேசுவதற்குள் உதயா சட்டென்று சென்றது அவர் கண்களுக்கு அவமரியாதையாகத் தெரிந்தது. இருந்தும் அமைதியாக இருந்தார். லாலா உதயாவை அழைக்க அவளும் உண்ண வந்தாள்.
“என்னாயீ ரொம்ப வேலையோ, கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு?” என்று திலகர் கேட்க
உதயாவும் அழுத தடத்தினை அசதியின் தடமென பொய்யுரைத்தாள்.
“ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதமா” வாஞ்சிநாதன் வாஞ்சையாக சொன்னார். குறைவான சம்பளமென்றாலும் கூட அவர் பெண் சரோஜினி வேலைக்குப் போவதை ஊக்குவித்தவர். அப்பா இல்லாத பெண் என்பதால் மருமகள் மீது கூடுதல் வாஞ்சை.
அன்றிரவு அவர்கள் ஊருக்குச் செல்ல வேண்டும். காலை உணவு முடிந்தபின் லாலாவும் உதயாவும் துணிகளை எடுத்து வைக்க, லாலாவை அழைத்தாள் வசுந்த்ரா.
காலையில் சித்ரா உதயாவிடம் கோபமாகப் பேசுவதை வசுந்த்ரா கேட்டிருந்தாள். உதயா சென்றதும் சித்ராவிடம்,
“ஏன் கா உதயா கிட்ட இப்படி பேசுனீங்க?” என்று வசுந்த்ரா அதிருப்தியாகக் கேட்டிட
“பின்ன என்ன வசு லாலா என்ன இவ வச்ச ஆளா? புருஷன்னு ஒரு மட்டு மரியாதை இல்லை. என் புள்ளையை வேலை வாங்குறா. எல்லாம் சம்பாரிக்கிறோம்னு திமிரு, நம்ம வீட்ல உள்ளவங்களும் அவளைத் தூக்கி வச்சுப் பேச கொழுப்பாகிடுச்சு.” என்று திட்டிச் செல்ல சொன்னாலும் கூட சித்ரா புரிந்துகொள்வார் என்று வசுந்த்ராவிற்குத் தோன்றவில்லை. அதனையும் விட அந்த வீட்டில் எப்போதும் வசுந்த்ரா உரிமை எடுத்ததில்லை. எல்லாம் இந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் சுமூகமான பேச்சுகள்.
இருந்தாலும் உதயாவின் வாடிய முகம் பொறுக்கவில்லை. லாலாவை தனியே அழைக்க,
லாலா, “என்ன சித்தி?” என்று வந்தான்.
“உதயா எதாச்சும் சொன்னாளாடா?” என்று கேட்க
“என்ன சித்தி? எதை பத்தி?” என்று லாலா கேட்ட விதத்திலே அவள் எதுவும் சொல்லவில்லை என்பது புரிய,
வசுந்த்ரா லாலாவிடம் கண்டிப்பான குரலில், “அவளை நல்லா பார்த்துக்கோ. புரிஞ்சதா?” என்றாள்.
“கண்டிப்பா சித்தி. என்ன அவ சொன்னாளா கேட்டீங்களே?” என்று லாலா கேட்க
“அக்கா உதயாவை காலையில திட்டிட்டாங்கடா” என்று நடந்தததை சொல்ல, லாலா இயலாமையோடு பார்த்தான்.
வசுந்த்ராவும் லாலாவும் பேசுவது கண்டு சித்ரஞ்சனும் அங்கே வந்தான்.
“இங்கதான் இருக்கியா நீ? என் ஃபைல் காணும், தேடி தா வசு” என்றவன் லாலாவின் முகம் பார்த்து,
“என்ன?” என்றான் புருவமுயர்த்தி.
வசுந்த்ரா சொல்ல சித்ரஞ்சன்,
“அண்ணி மாமியாரா ப்ரோமோஷன் வாங்கிட்டாங்க” என்று சிரித்தான்.
லாலாவோ சித்ரஞ்சனை முறைத்து, “சிரிக்காதீங்க சித்தப்பா! உங்களுக்கென்ன நீங்க சித்தியோட தனியா போய்ட்டீங்க. இப்பவும் ஆத்தா சித்தியைப் பேச விடறதில்லை. இப்போ நான் கல்யாணமான கொஞ்ச நாளே போய் சண்டை போட்டா என்ன நடக்குமோ?” என்றான் கவலையாக.
“இங்க பாரு லாலா! உன் சித்தப்பா மாதிரி நீ சண்டையெல்லாம் போட வேண்டாம். அவர் எங்கிட்ட கெத்து காட்டா அப்படி செய்வார். நீ உன் அம்மாவை சண்டை போட்டா அக்கா அந்த கோவத்தை உதயா கிட்ட காட்டுவாங்க. புரிஞ்சதா?” என்று பொறுமையாக சொல்ல
“உதயா பாவமே சித்தி” என்றான். சித்ரஞ்சன் வாஞ்சையாக புன்னகைக்க வசுந்த்ராவும் கணவனின் புன்னகையோடு கோர்த்தவள் லாலாவிடம்,
“உதயா பாவம்தான். ஒரே இடத்துல இருந்தா நியாயத்துக்காக சண்டை போடலாம் டா. எப்பவும் பொறுத்துப் போக முடியாது, ஆனா நீங்களே லீவுக்கு வர போறீங்க. ரெண்டு மூணு நாள் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்டுங்க. உதயா கூட பாரு உங்கிட்ட ஒன்னுமே சொல்லல. நான் சொன்னது கூட நீ அவளை ஒழுங்கா பார்க்கணும்ன்றதுக்காக, அவ எங்களை நம்பி வரல. உன்னை மட்டும் நம்பி வந்திருக்கா.” என்றதும் லாலாவும் தலையசைத்தான்.
அறைக்குள் வந்தவன் உட்கார்ந்திருந்த உதயாவை பின்னிருந்து கட்டிக்கொண்டவன்,
“அம்மா திட்டினாங்களா?” என்று கேட்க, அதுவரை அமைதியாக இருந்த உதயாவுக்கும் பொறுக்க முடியாமல் அழுகை. தேம்பி தேம்பி அவள் அழ லாலாவுக்குப் பொறுக்க முடியவில்லை.
உதயா, “நான் டயர்டா இருக்குனுதான் லாலா டீ கேட்டேன். உங்களை வேலை வாங்கணும்னு எல்லாம் நான் நினைக்கல. நேத்து வேலை ரொம்ப அதிகம் இல்லன்னா அத்தைக்கு ஹெல்ப் பண்ணிருப்பேன். வேணும்னு செய்யலங்க” என்று அவள் குழந்தை போல் தேம்பிக்கொண்டே சொல்ல லாலாவுக்குத் தாங்கவில்லை.
உதயா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சித்ராவிடம் சண்டைக்குச் சென்றான்.
error: Content is protected !!