Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 27

 அத்தியாயம் 27:

கௌரியின் குரல் கேட்டதும் நினைவுக்கு வந்தாள் சந்தியா. ஆதியின் தலையை பிடித்து தள்ள பார்த்தாள். ம்ஹும் அவனை கலைக்கவே முடியவில்லை.

“மாமா கௌரி வந்துருக்கா” என்றதும் பட்டென்று தலையை தூக்கி பார்த்தான் ஆதி. 

“சும்மா சொல்றியா டி”



Advertisement

“ச்ச இல்ல மாமா. உண்மையாவே அவ கூப்பிட்டா” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே திரும்பவும் கௌரி சந்தியா என்றழைத்தாள்.

உடனே அவள் மேலிருந்து எழுந்த ஆதி, அவளையும் கிளப்பி புடவையை சரி செய்தான்.

சந்தியாவும் போய் கண்ணாடியில் தன்னை பார்த்து சரி பண்ணி கொண்டவள் கீழே செல்ல போனாள். 

Advertisement

அவளை பொம்மு என்று கூப்பிட்டு நிறுத்தியவன் “நைட் மேல ஃபாஸ்ட்டா வந்துடு டி” என்றான்.

Advertisement

அதற்கு “அதெல்லாம் முடியாது பாஸ். நானும் கௌரியும் ஒரு புது வெப் சீரிஸ் பாக்கலாம்ன்னு பிளான் பண்ணி வச்சிருக்கோம். லேட்டாதான் வருவேன்” என்றுவிட்டு ஓடிவிட்டாள்.

ஆதி தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

கீழே சென்ற சந்தியா கௌரி எங்கே என்று தேடினாள். மணி ஐந்து தான் ஆனதால் பெரியவர்கள் படுத்திருந்தனர். அருண் வெளி வேலையாக சென்றிருந்தான்.

Advertisement

கௌரி கிச்சனில் நின்றாள். “என்ன கௌ கூப்பிட்ட” என்றபடி வந்தவளிடம் காஃபி கப்பை கொடுத்தாள் கௌரி.

“எல்லாரும் எழுந்திரிக்கறதுக்கு முன்ன குடிச்சிடலாம்ன்னு போட்டேன் டி  அண்ணி . எழுந்திரிச்சா அம்மா எனக்கும் காபி கொடுக்க மாட்டாங். அருண் வந்தான்னா அண்ணாகிட்ட போட்டு குடுத்துடுவான். அதான் இப்பவே போட்டு ரகசியமா கிச்சன்லயே நம்ம ரெண்டு பேரு மட்டும் குடிச்சிடலாம்ன்னு போட்டேன். எப்படி என் பிளான்” என்று கேட்ட கௌரியை கட்டி கொண்டவள் 

“இவ்வளவு நாள் சிறந்த பெஸ்டியாக இருந்த நீ இன்று முதல் சிறந்த நாத்தனாராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளாய் கௌ. அண்ணி டி” என்று அவளிடம் ஹை பை கொடுத்தாள்.

“அப்புறம் இன்னொரு விஷயம். உங்க அண்ணா உன்கிட்ட  நம்ம வெப் சீரிஸ் பாக்க போறமான்னு வந்து கேட்டா ஆமான்னு சொல்லணும்” 

“அடியே என்ன வச்சி என்ன பிளான் பண்ணிருக்கடி. அண்ணாட்ட எனக்கு பொய் சொல்ல வராது டி”

“உன்ன யாரு பொய் சொல்ல சொன்னா , நம்ம நிஜமாவே சீரிஸ் பாக்கத்தான் போறோம்” என்ற படி காபியை குடித்துவிட்டு வெளியே சென்றார்கள்.

பிறகு பெரியவர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்தார்கள். சித்ரா சந்தியாவிடம் விளக்கேற்ற சொன்னார். விளக்கேற்றிவிட்டு வந்தவள் நல்ல பிள்ளையாக அடுப்படியில் நின்ற சிவகாமியிடம் “நா ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை” என்று கேட்டாள்.

“ஒன்னும் வேண்டாம் கண்ணு. நைட் இட்லி மட்டும்தேன்.நானும் சித்ராவுமே பண்ணி போடுவோம்” என்றவர் “நீ போய் ஆதிக்கு ஏதும் குடிக்க வேணுமான்னு கேட்டுட்டு வா சாமி” என்றார்.

அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே கிட்சன் வாசலுக்கு வந்தான் ஆதி. அவனை பார்த்த சிவகாமிதான் “என்ன கண்ணு. இங்கவே வந்து போட்ட. குடிக்க எதும் வேணுமா? என்று கேட்டார்.

“ஒன்னும் வேண்டாம்ன்னு சொல்லத்தான் வந்தனுங்ம்மா” என்று சொல்லிவிட்டு சந்தியாவை பார்த்துவிட்டு வெளியே சென்றான். அவன் சென்றதும் சந்தியாவும் வெளியே சென்று  முற்றத்தில் அமர்ந்திருந்த ஆதியை கண்டு கொள்ளாமல் கௌரியின் அறைக்கு சென்று விட்டாள்.  

சித்ராதான் “அக்கா கேட்டீங்ளா. உங்க பையனுக்கு ஒன்னும் வேண்டாமாம் . அதை சொல்லத்தான் இவ்ளோ தூரம் வந்திருக்காரு” என்று சொல்லி சிரித்ததும் சிவகாமிக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

“இப்போதேன் சந்தோசமா இருக்கு சித்ரா. என்ர புள்ள வாழ்க்கை என்ன ஆவுமோன்னு பயந்து இருந்தேன். உன்ர பொறந்தவரு குடும்பம் வந்து என்ர புள்ள வாழ்க்கைல விளக்கேத்தி வச்சிருக்கு” 

முற்றத்தில் அமர்ந்திருந்த ஆதி கௌரியை அழைத்தான். “என்னங்ண்ணா” என்று வந்தவளிடம் “என்னைக்கு காலேஜ் போறீங்க நீயும் அருணும்” என்றான்.

“நாளைக்கு சனிகிழமை. சனி ஞாயிறு லீவ் தாண்ணா. திங்கள்கிழமைல இருந்து போலாம்ன்னு இருக்கோம்ண்ணா”

“சந்தியா வர்றவரையிலும் அருண் கூடவே போயிட்டு வா”

“சரிங்ண்ணா”

“சந்தியா என்ன பண்றா”

“படிச்சிட்ருக்காண்ணா. கூப்பிடவா”

“வேண்டாண்டா. நீயும் போய் படி” என்றதும் கௌரி சென்றுவிட்டாள்.

பிறகு ஈஸ்வரனும் , சுந்தரமும் வந்து அமர்ந்து ஆதியிடம் பேசி கொண்டிருந்தனர். அருணும் அப்பொழுதுதான் வந்தவன் அவன் ரூமிற்க்கு சென்று ரெப்ரேஷ் ஆகிவிட்டு  வந்து அமர்ந்தான். ஏழு மணியானதும் சிவகாமி “எல்லாரும் சாப்ட்டு போட்டு பேசுங். உடம்பு அலுப்பாருக்கு. வேலை முடிச்சிட்டு போய் தூங்கோணும்” என்றதும் ஈஸ்வரன் கௌரியையும் சந்தியாவையும்  சாப்பிட அழைத்தார்.

அனைவரும் சேர்ந்து கீழேயே முற்றத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். அப்படி அமர்ந்து சாப்பிட்டது சந்தியாவிற்கு புதுமையாகவும் இருந்தது. பிடித்தும் இருந்தது.  

சாப்பாடு முடிந்ததும் ஈஸ்வரனும் சுந்தரமும் வாசலில் சென்று தெருக்காரர்களுடன் பேசி கொண்டிருந்தனர்.

சிவகாமியும் சித்ராவும் சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தால் கௌரியும் சந்தியாவும் முற்றத்தில் கோடு போட்டு சில்லு கோடு  விளையாண்டனர்.

ஊருக்கு வந்ததில் இருந்து இந்த மாதிரி விளையாட்டுக்களை சந்தியாவிற்கு அறிமுக படுத்தி இருந்தாள் கௌரி.

ஆதி மாடிக்கு சென்றுவிட்டான். மொபைலை பார்த்தபடி விளையாடி கொண்டிருந்த அருண் சிறிது நேரத்தில் அவனும் விளையாட்டில் சேர்ந்து கொண்டான்.

இதை பார்த்த சித்ரா கடுப்பானார் “அக்கா இந்த சந்தியா ஊருக்கு வந்ததில இருந்து இதுக ரெண்டுக்கும் இதான் வேல. இந்த கௌரி சொல்லி கொடுத்து அவளையும் கெடுத்து வச்சிருக்கா. இவ்ளோ நாளு விளையாண்டாளுங்கன்னு பார்த்தா இப்ப கல்யாணமாகியும் விளையாண்டுட்டு இருக்கா பாரேன் இந்த சந்தியா”  என்றதற்கு சிவகாமி 

“விடு சித்ரா. இப்பத்தேன் வீடே கலகலன்னு இருக்கு. சின்ன புள்ளைங்கதான. விளையாடி போட்டு போகட்டும். கொஞ்ச நாள்ல குழந்தை குட்டியாச்சுன்னா எங்க நேரமிருக்க போது”

“அக்கா நீ ரொம்ப உன்ர மருமகளுக்கு இடம் குடுக்கிற. இப்பவே அவளுக்கு வேலையெல்லாம் பழகி விடு”

“அதெல்லாம் என்ர மருமக தங்கமா இந்த குடும்பத்த பாத்துக்குவாளாக்கும்” என்று அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே ஆதி இவர்களை அவ்வ பொழுது வந்து எட்டி எட்டி பார்த்தபடி சென்று கொண்டிருந்தான்.

“அக்கா ஆதி வந்து வந்து பொண்டாட்டிய பாத்துட்டு போறான் பாரு” என்றவர் விளையாடி கொண்டிருந்தவர்களிடம் “புள்ளைங்களா. போதும் போய் படுங்க . நேரமாகுது பாருங்க” என்றதும் சந்தியா 

“அத்தை மணி எட்டுத்தான ஆகுது. நாங்க வழக்கமா பத்து மணிக்குத்தான் தூங்குவோம்” என்றாள்.

“ஏ சந்தியா. உனக்கு கல்யாணமாயிட்டு நியாபகம் இருக்கா”

“அட என்னத்த நீங். இங்பாருங்கல்யாணமானதாலதான் இந்த புடவைய கட்டிக்கிட்டு கஷ்ட்ட பட்டு விளையாடிக்கிட்டு இருக்கேன். ஏன் அத்தை, நா போய் என் நைட் ட்ரெஸ்ஸ போட்டுட்டு வரவா” என்றதும் 

“செருப்புலேயே போடுவேன். இந்த பேண்ட் சட்டையெல்லாம் உன்ர ரூம்லயே வச்சுக்கணும். வெளில போட்டுட்டு வந்த, உன்ர அம்மாகிட்ட சொல்லி கொடுத்து போடுவேன்”  என்று இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே மேலிருந்து ஆதி சந்தியா என்று கூப்பிட்டான்.

அதற்கு சந்தியா “என்ன பாஸ்” என்றாள் அவனை அன்னாந்து பார்த்து.

“எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும். மேல தண்ணி சரியா போயிடுச்சி” என்று ஆதி கூறியதும் சந்தியா சித்ராவிடம் 

“அத்தை உன்ர புள்ள கேக்கிறது காதுல விழுதா. வெட்டியாதான உக்காந்துருக்கீங்க. போய் தண்ணி குடுத்துட்டு வாங்க” 

“ஏண்டி. நீதான அவன் பொண்டாட்டி. நீதாண்டி போகோணும்” என்றதும் 

“ம்ஹும். நீ சரிப்பட்டு வர மாட்ட. அருண் கொளுந்தனாரே. நீங் கொஞ்சம் போயிட்டு வாரீங்களா” என்றதும் “அதெல்லாம் முடியாது. நா போனா ரெண்டு பேரும் சேந்து என்ன ஏமாத்தி போடுவீங்க”

“ஒ அப்ப போக மாட்டீங்க. உங்க ஸ்நேகிதகாரங்கள பத்தியெல்லாம் அத்தைக்கு தெரியுமா” என்றதும் 

“அண்ணி தாயே நானே போயிட்டு வரேன்” என்று அவனே சென்று ஆதிக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு வந்தான். 

 இவளை… என்ன செய்வது என்று கடுப்பான ஆதி  “கௌரி, அருண் போய் படுங்க” என்று மேலிருந்து குரல் கொடுத்தான். அவ்வளவுதான். இருவரும் சிட்டாக பறந்து விட்டனர்.

அடப்பாவிங்களா என்று இருவரையும் பார்த்து விட்டு கௌரி ரூமிற்க்கு செல்ல போனாள் சந்தியா. அவளை அழைத்த சிவகாமி “கண்ணு இந்தா பால். உனக்கும் உன்ர புருஷனுக்கும் இருக்கு. காலைல கௌரிய பாக்கலாம். இப்ப மேல போ கண்ணு” என்றதும் அவர் பேச்சை மறுக்க முடியாமல் “சரிங்கத்தை” என்றுவிட்டு மேலே சென்றாள்.

நல்ல பிள்ளையாக அவள் மேலே செல்வதை பார்த்த சித்ரா “என்ன அக்கா இவ. இப்படியிருக்கா. ஆதி இவ பின்னாடியே சுத்துறான். இவ கண்டுக்கவே மாட்டேங்குறா. ஆதி பாவம்தான் போ” என்றாள். அதற்கும் சிரித்த சிவகாமியை பார்த்து “நம்ம பையன் நிலைமை பரிதாபமா இருக்கு. நீ என்னமோ சிரிக்கிற” என்றதும் 

“நம்ம பையனும் ஒண்ணும் லேசுப்பட்ட ஆளில்ல போ. அவன் பாத்துக்குவான். வா நாம தூங்க போகலாம்” என்றுவிட்டு படுக்க சென்றார்கள்.

மனதில் பதட்டத்துடன் மேலே ரூமிற்க்கு சென்ற சந்தியா அங்கிருந்த சேரில் அமர்ந்திருந்த ஆதியிடம் “என்ன பாஸ். நா சீரிஸ் பாக்க போறேன்னு சொன்னேன்ல. நீங்க ஏன் என்ன கூப்ட்டீங்க” என்றாள் படபடவென்று.

மெதுவாக எழுந்து அவள் அருகே வந்த ஆதி “நா எங்க உன்ன கூப்ட்டேன் பொம்மு. நீயேதான் மேல வந்துருக்க” 

“ம் நீங்கதான கௌரி அருணை போய் படுக்க சொன்னீங்க”

“நீயும் கௌரி ரூமிற்க்கு போயிருக்க வேண்டியதுதான”

“ம்ஹும் எல்லாரும் தூங்க போரோம்ன்னு அத்தைதான் என்னை அனுப்பி விட்டுட்டாங்க. சரி எனக்கும் காலைல இருந்து வேலை பார்த்தது டையர்டா இருக்கு. தூங்க போறேன்” என்று கட்டிலுக்கு சென்றவளை ஒன்றும் சொல்லாமல் பார்த்தவன் நமுட்டு சிரிப்புடன் 

“என்ன வேலை பாத்ததுல பொம்மும்மா டயர்டா இருக்கீங்க” என்றுவிட்டு அவனும் கட்டிலில் சென்று அமர்ந்தான்.

“என்ன பாஸ். இப்படி கேட்டுட்டிங்க. பொங்கல் வச்சேன். அப்புறம் நிறைய பேருக்கு சாப்பாடு போட்டேன். குனிஞ்சி நிமிந்ததுல இடுப்பு ரொம்ப வலிக்குது. தெரியுமா” என்று உதட்டை பிதுக்கியபடி பாவமாக இடுப்பை பிடித்துவிட்டவளை பார்த்தவன், எழுந்து சென்று டேபிள் டிராயரில் இருந்து எதையோ எடுத்து வந்தான்.

“சரி பொம்முக்குட்டி. இடுப்பை காட்டுங்க. மாமா மூவ் தேச்சி விடறேன்” என்று விட்டு கிட்டே நெருங்கியவனை பார்த்து சந்தியா 

“மருந்தெல்லாம் வேண்டாம் பாஸ். நல்லா படுத்து தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும் ” என்றுவிட்டு பெட்ஷீட்டை இழுத்து மூடினாள்.

பெட்ஷீட்டை அவள் மேல் இருந்து இழுத்தவன் “ஒழுங்கா எங்கன்னு காட்டு பொம்மு” என்றான்.

“ம்ஹும் எனக்கு வலிக்கல . நா தூங்கபோறேன்” என்று கண்களை இறுக மூடி கொண்டாள்.

சரி என்று பெட்ஷீட்டை திரும்பவும் அவளுக்கு போர்த்திவிட்டு செல்ல போனவனின் கையை பிடித்தவள் அவன் கண்களை பார்த்து “சாரி மாமா” என்றாள்.

அதற்கு அவள் தலையில் கை வைத்து தடவி கொடுத்தவன் “பரவால்ல தூங்கு” என்றுவிட்டு பக்கத்தில் வந்து படுத்தான்.

சிறிது நேரத்தில் “பொம்மு தூங்கிட்டியா” என்றான் ஆதி.

“இல்ல மாமா” என்றுவிட்டு அவனை பார்த்து திரும்பி படுத்தாள்.

அவனும் அவளை நோக்கி திரும்பி படுத்தவன் “அப்ப கொஞ்ச நேரம் பேசலாமா” என்று கேட்டான். அதற்கு ‘ம்’ கொட்டியவளை பார்த்து “நம்ம ரெண்டு பேரும் எப்ப ஃபஸ்ட் பாத்துக்கிட்டோம். நியாபகமிருக்கா?”

“ஏன் இல்லாம. நானும் கௌரியும் காலேஜ் போகும்போது ஒருநாள் நா தவக்களைய வேடிக்கை பாத்துட்டு நின்னனே. அப்பதான் பாத்தோம்”

“ம் நீதான் அப்ப பஸ்ட்  டைம் என்ன பாத்த. ஆனா நா அதுக்கு முன்னவே உன்ன பாத்துட்டேன்”

சந்தியா படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து “எப்ப?” என்று ஆர்வம் தாங்க முடியாமல் கேட்டாள். 

 

 

 

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!