10 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,622
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 10
.
இளவேனிற்காலம் வந்தால் அடுத்து கோடைக்காலம் வருவது இயல்பு. கருமேகத்திற்குப் பின் மழையும்… மழைக்குப் பின் வெயிலும் இயற்கை.
Advertisement
தனிமை என்பது கடந்த காலமாகி இருக்க, ரகு இருவீட்டினரின் செல்லப் பிள்ளையாகச் சுற்றி வந்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகனை காண நகுலன் வந்து நின்றார். கை நிறைய விளையாட்டுப் பொருட்கள், மகன் மீது அவரின் பிரியத்தை காட்டவா இல்லை அவரின் குற்ற உணர்வை மறைக்கவா தெரியவில்லை. ஆனால் ரகுவிற்கு அப்பா வரப்போகிறார் என்றால் கொண்டாட்டம் தான்.
ரகுவின் தகப்பன் வந்தால் என்ன… அந்த கடவுளே ரகுவை பார்க்க வந்தால் என்ன? ரகுவின் குட்டி விரல் அவன் பேபியின் கரத்தினுள் இருக்க, அவள் சென்ற இடமெல்லாம் அவனை இழுத்துச் சென்றாள்.
Advertisement
ரகு மகிழ்ச்சியோடு காணப்பட்டாலும், நகுலனுக்கு, மகன் விரலைப் பிடித்துக் கொண்டே சுற்றும் சின்னவள் இடத்தில் ரகுவின் சகோதரனும் சகோதரியும் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அடுத்த கல்வியாண்டில் மகனை அழைத்து செல்வதென முடிவெடுத்தார்.
Advertisement
ஒரு வருடம் சென்றது. முழு ஆண்டு தேர்வு முடிவடையவும் நகுலன் திருச்சிக்கு வருகை புரிந்தார். வீட்டிற்கு வந்த தகப்பனை வாஞ்சையோடு மகன் கட்டிக்கொண்டான். இரண்டு நாள்கள் திருச்சியை மகனோடு தகப்பன் சுற்றினார். கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தார். தகப்பனின் அணைப்பில் உறங்கி, தகப்பனோடு ஊர் சுற்றி, நாள் முழுவதிலும் இருக்கும் தகப்பன், மகன் மனதைக் கொள்ளை அடித்தார்.
இரவில் கதை பேசிக்கொண்டே படுத்துக் கிடந்த மகனின் தலையை ஆசையோடு வருடி விட்டுக் கொண்டிருந்தவருக்கு, ‘இதைக் காலம் முழுவதும் அனுபவிக்க வேண்டும்’ என எழுந்த ஆசையை இம்முறை அடக்கவில்லை.
“அப்பா கூடவே இருக்க பிடிக்குதா ரகு?” என கேட்டார் நகுலன்.
Advertisement
ரசித்ததே… அப்பாவோடு இருக்கக் கசக்குமா என்ன குழந்தைக்கு? “யெஸ் பா… ரொம்ப பிடிக்குது” எனக் கண்கள் விரித்து மகன் மனதை மறையாது உரைத்தான்.
சந்திரிகாவின் பாடல் ரகுவின் காதில் விழுந்தது. “பேபிக்கு குட் நைட் சொல்லவே இல்ல பா” என விழுந்தடித்துக் கொண்டு பின்வீட்டிற்கு ஓடினான் பேபியின் ரகு.
எப்பொழுதும் போல் அவனுக்கான கதவு திறந்தே இருந்தது. ஹாலில் இருந்த நாற்காலியில் ரகுவின் ஐயா அமர்ந்திருந்தார்.
“ஐயா” என ஓடிச் சென்று அவர் மீது ஏறிக் கொண்டான். கழுத்தைக் கட்டிக் கொண்டு தோளில் முகம் புதைத்தான். அவன் முதுகை வாஞ்சையோடு வருடிக் கொடுத்தார். இதோ… இந்த அணைப்பும் அழைப்பும் இனி கிட்டாதே என நினைத்தவர் மகனை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டார். மனம் முழுவதும் நிறைத்து வைத்திருக்கும் நேசத்தை இனி யாரிடம் கொட்டுவார்? மனம் கனத்தது மனிதனுக்கு.
அப்பாவோடு ஊர் சுற்றிய கதையை ஒப்பித்தான்.
‘ம்ம்கூம்’ ‘ஓஹ்’ ‘அப்பறம்’ என அவரும் ஆசையோடு கேட்க அவனும் கண்களை விரித்து கரம் அசைத்துக் கவி பாடினான். மகனை மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டார்.
இவன் சத்தம் கேட்டுக் குட்டி வாண்டு ஓடி வந்தாள். “பேபி உனக்கு கார் பொம்ம வாங்கி வச்சிருக்கேன். நாளைக்கு கொண்டு வரேன்” என பேபியோடு கதைத்தான்.
இரு கரத்திலும் இரு குழந்தைகள் இருக்க அவர் அமைதியாகக் கதை கேட்டார்.
சந்திரிகாவை பார்த்தவன், “அம்மா” என அவர் மடி சாய்ந்தான். மீண்டுமாக அதே கதையை அம்மாவிடம் ஒப்பித்தான். அவரால் மகன் மேல் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை.
“அவன் அப்பா அவன கூட்டிட்டு போறேன்னு நிக்கிறான் மா. அவனுக்கும் குடும்பத்தோட வளருறது தானே நல்லது” என நேற்றே ரகுவின் அம்மாச்சி உரைத்திருக்க, சந்திரிகாவும் ஏதோ நடமாடுகிறேன் என இரு தினங்களாகச் சுற்றி வருகிறார்.
“நானுக்கும்” என ஓடி வந்து ரகுவோடு சேர்ந்து படுத்தவளை அணைத்துக் கொண்டான் குட்டி ரகு.
“பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ..ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ..ஆரீரோ ஆரோ”
அன்னை பாடினார். பாடல் முடியும் முன்பே இரு குழந்தைகளும் உறங்கியிருந்தனர்.
சந்திரிகா சத்தம் போட்டு அழவில்லை என்றாலும் அவர் கண்களில் நீர் வழிவது நிற்கவில்லை.
“சந்துமா” என அழைத்த கணவனை இயலாமையோடே பார்த்தார் சந்திரிகா.
“என் ரகுங்க… அவன் இல்லாமா… எப்படிங்க?” என மூக்கை உறிஞ்சினார்.
மகனை தேடி வந்த நகுலன் கண்களில் விழுந்த அந்த காட்சி ஆழ பதிந்தது. அரவம் கேட்டு கணவனும் மனைவியும் வாயிலைப் பார்க்க, நகுலன் நின்றிருந்தார். தூங்கிக் கொண்டிருந்த மகனோடு இல்லம் சென்றார்.
இரவெல்லாம் அவருக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. பக்கத்து வீட்டில் தன் மகனுக்கு இருக்கும் பிடிப்பு கூடப் பெற்றவரோடு இல்லை என மனம் எடுத்துக் கொடுத்தது. வீட்டிற்கு அழைத்துச் சென்றபின்னும் இவரால் இப்படி தன் மகனை மகிழ்வோடு வைத்துக் கொள்ள முடியுமா தெரியவில்லை. ஆனால்… ரகு, அவர் பிள்ளை. அவருக்கு வேண்டும் என்றது மனம்.
மறுநாள் பேபியோடு விளையாடிக் கொண்டிருந்த மகன் அருகில் அமர்ந்தவர், “நம்ம வீட்டுக்கு போலாமா? அப்பா கூட வரியா?” எனக் கேட்டார்.
“இது தானே ப்பா நம்ம வீடு” என்றான், நகுலனின் மூத்த மகன்.
“அப்பாவோட போறியா? தம்பி கூட விளையாடலாம். அன்னைக்குப் போய் பார்த்துட்டு வந்தோமே அந்த குட்டி பாப்பா… அவக் கூட விளையாடலாம்” எனத் தாத்தா கேட்டதற்கு, மாட்டேன் என்று தன் விருப்பமின்மையைக் கூறி ஓட்டம் எடுத்த சிறுவன், பேபியோடு தன் ஐயாவின் மடியில் தஞ்சமடைந்தான்.
மாதம் ஒரு முறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ வந்து இரு தினங்கள் இருந்து செல்லும் தகப்பனைக் காட்டிலும் தன் மேல் நேசம் காட்டும் ஐயா போதும் என்றது அந்த சின்ன இதயம்.
அன்று அப்பாவோடு ஊர் சுற்றச் செல்லவில்லை சிறுவன்.
“பேபி கூட விளையாட போறேன்” என ஐயாவே கதி எனக் கிடந்தான் ரகு.
“ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்க. போதாததுக்கு கைக் குழந்தை வேற! ஒரு இடத்துல நிக்க மாட்டேன்றான் உன் மகன். குறும்பு பசங்க ரெண்டு பேரோட கைக் குழந்தையையும் வச்சுகிட்டு அவளும் எப்படி சமாளிப்பா சொல்லு? ரகு இங்க இருக்கட்டும் சாமி” என்று பாட்டி அவர் மருமகனிடம் கூறிவிட, அவரும் யோசனையோடே சரி என்றுவிட்டார்.
அவரின் மனைவியால் உண்மையிலுமே அவரின் சின்ன குழந்தையை பார்த்து கொள்ள முடிவதில்லை. மனைவியின் அண்ணியின் பராமரிப்பில் தான் வளர்கிறான் பால் மணம் மாறாத சின்னவன். இதில்… ரகுவை யார் பார்ப்பது?
“சரி மா” என மனமின்றி மகனை அவன் அம்மாச்சியிடம் விட்டுச் சென்றார் மனிதர்.
“டாடா அப்பா” என இருந்த அத்தனைப் பற்களும் தெரிய பேபியின் கரம் பிடித்துக் கொண்டே அப்பாவிற்கு விடை கொடுத்தான் ரகு. ஒவ்வொரு முறையும் மகனைப் பார்க்க வரும் தகப்பன் கை நிறைய வாங்கி வரும் விளையாட்டுப் பொருள்களை ஆண்டு அனுபவிக்கும் பேபியும் மிகுந்த மகிழ்ச்சியோடே “ப்ப்…பை ப்ப்பை ல்ல்லகு அப்பா” என விடை கொடுத்து அனுப்பினாள்.
உள்ளுக்குள் அடைத்து மூச்சு குழாயை நெரித்த காற்று ஒருவழியாக வெளியே வந்தது சந்திரிகாவிற்கு. மலைக் கோட்டையின் பக்கம் திரும்பி இறைவனுக்கு ‘கோடி நன்றிகள்’ என்றார் நிம்மதியோடு.
போன உயிர் வந்தால் அதற்கு மதிப்பு அதிகம் தானே? சந்திரிகா ரகுவை கொண்டாடித் தீர்த்தார். ரகுவின் நாள்கள் ஐயாவின் வீட்டில் கழிந்தன.
ஓர் அன்னையின் கையால் பிள்ளைகள் இருவரும் அன்னம் உண்டு, ஒரே தாலாட்டுக்கு இருவரும் கண்ணயர்ந்து, ஒன்றாய் மண்ணில் சண்டையிட்டுப் புரண்டு, ஒன்றாய் குளித்து… என நாட்கள் மிக மிக அழகாகச் சென்று கொண்டிருந்தது.
வருடங்கள் உருண்டோட, ரகு படித்த அதே பள்ளியில் பேபியும் வந்து சேர்ந்தாள். வால் மட்டுமே இல்லை அந்த சேட்டைக்காரிக்கு. தினமும் “ப்ப்பென்சில் க்க்காணம் ல்ல்லகு”
“ல்லபர் தொதொலைஞ்சுடுச்சு”
“ந்ந்நோட்டு க்கிழுஞ்சுடுச்சு”
“த்ததண்ணி தீந்துடுச்சு”
“சா..சாப்பாடு கொட்டிடுச்சு… ப்பசிக்குது” என ஏதாவது காரணம் கூறி கொண்டு அவன் வகுப்பறை நோக்கி வருவாள். திட்டிக் கொண்டே என்றாலும் அவள் கேட்டதைக் கொடுத்தே அனுப்புவான்.
“ரகு அண்ணா… இவ அடிச்சுட்டா” என நித்தம் ஒரு பஞ்சாயத்திற்கும் பிரெசிடென்ட் ஆனான் ரகு.
தினமும் ரகுவின் வகுப்பறைக்கு அவள் வருவதும் அவனிடம் திட்டுவாங்குவதும் வாடிக்கையான விஷயமாகிப் போனது.
உருண்டு… புரண்டு, அடித்து… கடித்து என எல்லா குழந்தைகள் போல அவர்களுக்குள்ளும் அடிதடி சண்டை எல்லாம் தூள் பறக்கும்.
சண்டையும் சமாதானமும் அவர்கள் இருவருக்குள் மட்டுமே. நடுவே ஒருவரையும் நுழைய விட்டதில்லை. அப்படித்தான் அவன் ஐயா பழக்கப் படுத்தியிருந்தார்.
“நீங்க தான் சண்டை போட்டது. அதனால நீங்க தான் பேசி தீத்துக்கணும். நடுவுல யாரையாவது விட்டீங்கனா சின்ன சண்டைய பெருசாக்கி பகைய கொண்டு வந்துடுவாங்க” என்பார்.
சின்ன குட்டிகளுக்கு அவர் கூறுவதின் பொருள் விளங்கியதா தெரியவில்லை. ஆனால் அவர்கள் சண்டையில் ஒருவரையும் பஞ்சாயத்திற்கு இழுத்தது இல்லை.
“ந்நீ த்தூக்கு லகு. வ்வெயிட்டா இலுக்கு” என அவளின் பள்ளி பையை அவனிடம் கொடுப்பவள், “ந்ந்நான் ல்லன்ச் பேக் தூக்கிறேன் லலகு” என அவனுக்கு உதவிக் கரம் நீட்டுவாள். இரு பைகளையும் தூக்கிக் கொள்பவனுக்கு அவள் பாரம் என்றுமே ஒரு பாரமாகத் தோன்றியதில்லை.
வயது ஐந்தை தொட்டபின்னும் பேச்சில் திருத்தமில்லை சின்னவளுக்கு. இதை வருடம் முன்பே மருத்துவரிடம் ஆலோசித்த போது, “இப்போ எல்லாத்துக்கும் பேரன்ட்ஸ் பயப்படுறீங்க. ஐஞ்சு வயசார நேரம் எல்லாம் சரியாகிடும்” என்றார்.
“நான் கூட பேச ஐஞ்சு வயசாச்சுன்னு அம்மா சொல்லுவாங்க. ஏன் பயப்படுற. சரி ஆகிடும்” என்று மனைவியை சமாதனப் படுத்தினாலும் தந்தைக்கு உள்ளுக்குள் உறுத்தல் தான்.
தினங்கள் முன்பு மகளைப் பரிசோதித்த பழைய மருத்துவரின் மகன், “’டங்-டை’ன்னு இத சொல்லுவோம். அதாவது நாக்க நீட்டினா கீழ் பல்வரிசைய தாண்டி நாக்கு வெளியில வரல பாருங்க. அதே மாதிரி மேல் பல் வரிசையை நாக்கால தொட முடியாது. நாக்கோட இயல்பான இயக்கத்தை தடுக்கிற இந்த நரம்பால வர பேச்சு தடை தான் உங்க மகளுக்கு. சின்ன பிரச்சன தான். இதோ… நாக்குக்கு கீழ அத பிடிச்கிருக்க மெம்ரேன்ன கட் பண்ணிட்டா போதும். முன்னமே கவனிச்சிருந்தா இந்த அளவுக்குப் பேச்சு பிரச்சனை ஆகி இருக்காது. குழந்தைக்கு வலியும் அதிகம் தெரிஞ்சு இருக்காது.” என்றார்.
பள்ளி அரையாண்டு விடுமுறையில் பார்த்துக் கொள்ளலாம் என அதைத் தள்ளி போட்டிருக்க, திக்கலும் திணறலும் கூட குட்டி பெண்ணின் வாயைக் கட்டி போட முடியவில்லை. தினமும் ஓர் முறையேனும் ரகு அவள் செய்யும் சேட்டைகளில் இருந்து அவளைக் காக்கவென பஞ்சாயத்துக்கு போவான். அடிதடியோ சண்டையோ சமாதானமோ எதுவென்றாலும் பிள்ளைகளுக்குள்ளான அன்பு மட்டும் நாளுக்கு நாள் ஆழமாகிக் கொண்டே போனது.
ஒரு நாள், “ஐயா எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் குடுங்க” என அரவிந்தன் முன் வந்து நின்றான் ரகு.
“இப்போவே எதுக்கு டா?” என அடுக்களையில் இருந்து சந்திரிகா குரல் கொடுத்தார்.
“அம்மா… பேபிக்கு சைக்கிள்ல ஸ்லுக்கு போக ஆசையா இருக்காம்” என்றவன் தலையை அவரின் மென் விரல்கள் கொண்டு ஆசையாக வருடினார்.
“ஆமா… அவ என்னைக்கும் எனக்கு பேபி தான். பேபி ரோட்டுல சைக்கிள் ஓட்டக் கூடாதே. சோ, நான் தானே அவள ஸ்கூல் கூட்டிட்டு போய் அவ ஆசைய நிறைவேத்த முடியும்” என்றான்.
“நீ எதுக்கு ரகு அவ ஆசைய நிறைவேத்தணும்?” சந்திரிகாவிற்குப் பெரிய மனிதனின் தோரணையில் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ஏன்னா அவ என் பேபி” என்றபோது ரகுவிற்குப் பத்து வயது. அந்த பத்து வயது ரகுவிற்கு அப்படித்தான் தோன்றியது. பேபி என்னும் குட்டி பெண்ணை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனது என.
“நீ ஒரு பொக்கிஷம் டா கண்ணா. என் வயத்துல பிறக்காம போயிட்டியே டா” என ரகுவை என்றும் போல் அணைத்து கேசம் கலைத்து விட்டார் சந்திரிகா.
“இப்பவும் நீங்க தான் என் அம்மா” என்றான் ரகு.
தாத்தா, பாட்டி, ஐயா, அம்மா, பேபி என அழகான… அன்பான குடும்ப சூழல் அந்த ஒரு வருடத்தோடு ரகுவிற்கு முடிந்துவிடும் என இவர்கள் ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அந்த வருடம் பாட்டி வீட்டில் சுகித்தான் குழந்தை.
பள்ளியில் முழுவருட விடுப்பு விடவுமே, “ஆறாவது அங்க வந்து படிக்கட்டும் மா. அங்க ஸ்கூல் பார்த்துட்டேன். அவன் எதிர்காலத்துக்கு அதுதான் நல்லது. அவனும்… அவன் தங்கை தம்பியோட வளரணும் இல்லையா மா?” எனச் சென்னைக்கு அழைத்துச் செல்வதில் பிடிவாதமாக நின்றார் பிள்ளையைப் பெற்றவர்.
‘இவர் என் அப்பா… இவர் என் சிற்றன்னை… இவன் என் தம்பி…இது என் வீடு, இது தான் என் உலகம்…’ என வாழ்ந்த மகனை வேரோடு பிடுங்கி, “இனி இது தான் உன் இடம்” எனத் தாத்தா பாட்டியைக் காட்டிவிட்டுச் சென்றபோதும் அவன் விருப்பு வெறுப்பை ஒருவரும் கேட்கவில்லை. அந்த சின்ன குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு இருக்கவே இல்லை அன்று.
இன்று, இவர்கள் என்னைப் பெறாது பெற்ற தாத்தா பாட்டி… இவள் என் பேபி… இவர் என் கண்ணீரைத் துடைத்து, என் மீது அன்பு காட்டும் என் ஐயா, இவர் என் மனதையும் வயிற்றையும் நிறைக்கும் என் அன்னை… இது என் பள்ளி… இவர்கள் எல்லாம் என் நண்பர்கள்… இவர்களோடு தான் தன் வாழ்வு… இது தான் என் இடம்… இது மட்டுமே என் உலகம், என ஒரு வட்டத்தை இட்டு அதில் தன்னை பொறுத்தி கொண்டு வாழ்வை வாழ ஆரம்பிக்கவும், “உன் குடும்பத்தோடு இருக்க வா” என மீண்டும் அவன் விருப்பு வெறுப்பைக் கேட்காதே அழைத்துச் செல்ல அப்பா வந்து நிற்கிறார்.
மகனுக்குப் புரியவில்லை. இது தானே என் குடும்பம் எனப் பார்த்தான். “நான் வரல அப்பா. எனக்கு இங்க தான் இருக்கணும். பாட்டி… தாத்தா… என் பேபி… நான் வரமாட்டேன்” என்ற அவன் பிடிவாதமும் கோரிக்கையும் இம்முறை கேட்காதே போனது.
“அங்கயும் உனக்குச் சின்ன பேபி இருக்கா. குட்டி தம்பி இருக்கான். ஜாலியா விளையாடலாம்.” என ஆசை காட்டினார்.
“வேண்டாம் என் பேபி இங்க தான் இருக்கா. என் ஃப்ரெண்ட்ஸ் இங்க தான் இருக்காங்க. நான் வர மாட்டேன்” என்றான் சட்டமாய்.
“சிக்ஸ்த் ஸ்டேன்டர்டுக்கு பெரிய ஸ்கூல் போகலாம். கலர் கலர் லைட் அடிக்கிற சைக்கிள் வாங்கி வச்சிருக்கேன். டெயிலி நாம ஐஸ்கிரீம் வாங்கப் போகலாம். உனக்கு பிடிச்ச பெல்ஜியம் சாக்கிலேட் குக்கி ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரலாம்” என அவர் கூறியது அந்த சின்னவனை ஆசை கொள்ள வைத்தது.
“தாத்தா பாட்டிய பாக்க வந்து போகலாம்…” என்றவரை ஐஸ்கிரீம் வழியும் வாயோடு மகன் குழப்பமாகவே பார்த்தான். வயதுக்கு மீறிய இறுக்கத்தோடு ஐந்து வயதில் இறுகி நின்ற குழந்தை இன்று அப்படி இருந்திருந்தால் பிடிவாதம் பிடித்து… குழம்பி… யோசனையில் இருந்திருக்க மாட்டான்.
“கிளம்பலாம். பாட்டி தாத்தாக்கு டாட்டா சொல்லு” என்றதும் பிள்ளை பயந்து போனான்.
“என் பேபி வேணும். நான் இல்லாட்டா ஸ்கூளுக்கு யார் கூட போவா? லன்ச் சாப்பிட மாட்டா. ஈவ்னிங் நான் அவ கூட விளையாட முடியாதே. அவ… அவ… நான் இல்லாம அழுவாளே” என்றவனுக்கு ஐஸ்கிரீமும் வேண்டாம் புது சைக்கிளும் வேண்டாம் என்பதில் தெளிவாகவே இருந்தான்.
“அதுக்கென்ன அடிக்கடி வந்து போவோம். சென்னை பக்கதுல தானே இருக்கு” என்ற வார்த்தை அவனுக்குப் புரிந்ததா தெரியவில்லை. அது பெற்றவருக்கு வசதியாகப் போனது.
“நான் வந்து போறேன் இல்ல… அந்த மாதிரி நீயும் வந்து போகலாம். உன் பேபி அவ அம்மா அப்பா கூட தான இருக்கா? உனக்கும் அப்பா அம்மா கூட இருக்க வேண்டாமா? நமக்குக் குட்டி தம்பி இருக்கான். குட்டி பாப்பா இருக்கா. அவங்கள பார்த்துட்டு லீவுக்கு வந்திடலாம்” என்றார்.
“மாட்டேன். இது தான் என்னோட வீடு. நான் பெருசானதும் உங்கள மாதிரி உங்கள பாக்க வந்துட்டு போறேன்” என ரகு பதில் அளிக்க, மனிதன் நொந்தே போனார்.
உண்மை உதவாது எனத் தெரிந்து கொண்டவர், “இப்போ உனக்கு லீவ் தான? லீவ்க்கு போயிட்டு வந்துடுவோம்” எனப் பொய் உரைத்தார்.
“வந்திடுவோம் தான?” என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான்.
இம்முறையும் அவன் விருப்பு வெறுப்பை பற்றியும், அவன் மனநிலையை பற்றியும் எந்த யோசனையுமின்றி… அவன் உணர்வுகளைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி, ஆசை காட்டி… பொயுரைத்து ரகுவை ஏமாற்றினார் அவனைப் பெற்ற தகப்பன்.
விடுமுறைக்குக் கூட செல்ல மனம் இல்லாத ரகு, தன் பாட்டி தாத்தா தன்னை காப்பார்கள் என அவர்கள் முகம் பார்க்க, “எங்களுக்கும் வயசாகுது கண்ணு. அப்பா அம்மா கொடுக்கிற பாதுகாப்ப நாங்க தர முடியாதே” எனக் கண்ணீரோடு ஒதுங்கிக் கொண்டனர்.
மீண்டுமாக ஒரு பயணம் சென்னையை நோக்கி ஆரம்பித்தது. ஐந்து வருடமாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டுச் செல்வது அந்த பிள்ளைக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை. அவன் குட்டி தேவதையை விட்டுச் செல்ல மனமில்லை.
“பேபிய கூட்டுட்டு போலாம். வரும் போது கூடவே கூட்டு வரலாம்” எனக் கேட்டு… அழுது புரண்டு என என்ன முயன்றும் அவனை மட்டுமே அழைத்துச் சென்றார் அவனை ஈன்றவர்.
“ஐயாவ விட்டு நான் போக மாட்டேன்…. அம்மா அம்மா” எனச் சின்னவன் அழ அழ அவனை இழுத்துக் கொண்டே காரில் ஏற்றினார் நகுலன்.
அவன் ஒரு புறம் அழ, அவனுக்கு என்ன ஆனதோவென புரியாத சின்னவளும் அழ ஆரம்பித்தாள்.
அவன் பேபி… அவன் ஐயா… அம்மா… பாட்டி… தாத்தா… அவன் சுற்றம்… அவன் சுகம்… அவன் உலகம் என நினைத்த அனைத்தையும் விட்டு மீண்டும் ஒரு விருப்பமில்லா பயணம் ஆரம்பமானது ரகுவின் வாழ்வில்.
“ந்…நநானூ… நானும் ப்ப்போணும்… லலலகு ல்ல்லகு” என அப்பாவின் தோளில் திமிறிக் கொண்டிருந்த சின்னவளுக்கு மகிழுந்தின் ஜன்னல் வழியே “பேபி… பேபி… என் பேபி வேணும்” என அழுது கொண்டே சென்றவனின் பிரிவு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்பதே உண்மை.
“அப்படி எல்லாம் அவன அனுப்ப முடியாதுன்னு சொல்லுங்க” என அழுகையில் கரைந்த சந்திரிகாவிற்கு அவர் கோபத்தில் அர்த்தமில்லை என்று தெரிந்தாலும் மனதிற்குப் புரியவில்லை.
ஒன்று சட்டப்படி தத்தெடுத்திற்க வேண்டும். இல்லை, குழந்தை அவர்களின் உயிரணுவில் உருவாகி இருக்க வேண்டும். இரண்டுமே இல்லாத போது ரகு எவ்வாறு அவர்களுக்கு சொந்தமாவான்?
மகிழுந்து விட்டுச் சென்ற புழுதி தரையிறங்கிய பின்னும் அனைவரின் விழியும் வழியையே பார்த்திருந்தன.
“அவ்வளவு தானங்க? நான் பாடாம என் பிள்ளை தூங்க மாட்டானே. யார் அவனுக்கு சோறு ஊட்டுவா இனி? ஏங்க அவன இப்பிடி இழுத்துட்டு போயிட்டார்” என்ற சந்திரிகாவால் கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை.
என்னதான் அன்பைக் கொட்டி வளர்த்தாலும், உயிரணுவைக் கொடுத்த தகப்பனின் உரிமையின் முன் அன்பு செல்லுபடி ஆவதில்லை.
“என் பிள்ளைங்க அவன். அவன் வேணுங்க” என அழும் மனைவிக்கும், “ப்ப்பா ப்பா மை ல்ல்லலகு” எனத் திக்கி திணறும் மகளுக்கும் ஆறுதல் கூற முடியவில்லை, மகனை பெறாத அந்த தகப்பனால்.