Skip to content
Post Views: 4,287
“ஹாய் ஜனனி!” என்றவாறு ஜனனியின் அறைக்குள் உள்ளே வந்தான் பரத்.
“ஹாய்” என்று அவனைக் குழப்பத்துடன் பார்த்தாள் ஜனனி.
“இவன் நம்மோடு இவ்வளவு ப்ரீயாக பேசமாட்டானே, எப்போதும் ஒரு சின்ன கடுப்பு இவன் முகத்தில் இருக்குமே, நம்மைப் பார்க்கும் போதெல்லாம்! இன்று என்ன ஆச்சு இவனுக்கு?” அவளுள் கேள்விகள்!
“அண்ணன் சொன்னாரு, உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு, கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்க சொல்லி வீட்டுல எல்லோர்கிட்டயும் சொல்லியிருக்காரு. அதான் நான் உங்களைப் பார்த்துட்டு ஏதும் வேணுமான்னு கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்” என்றான் பரத்.
Advertisement
“இப்ப கொஞ்சம் பரவாயில்ல, ஆனா எதுக்கும் ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க”.
“உனக்காடி ஸ்ட்ரெஸ் வரும், உன்னால மத்தவங்களுக்கு தான் ஸ்ட்ரெஸ் வரும் என்று உள்ளுக்குள் நினைத்தாலும், காட்டிக்கொள்ளாமல், நீங்க பரணி அண்ணனோட பெஸ்ட் பிரன்ட், இப்ப அண்ணன் வேற உங்கள் ரொம்ப கேர் எடுத்துப் பரத்துக்க சொல்லியிருக்காரு.
உங்களுக்கு ஏதும் ஆச்சுன்னா, அப்புறம் அண்ணன் எங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாரு.
Advertisement
உங்களுக்கு என்ன வேணுமின்னாலும் என்கிட்ட கேளுங்க, நான் வெளியே போயிட்டேன்னா கூட, பவிகிட்ட சொல்லிட்டுப் போறேன்.
Advertisement
பவியோ, இல்லை பாரதியோ உங்களுக்கு வேணும்கிறத செய்வாங்க, நான் இல்லாத பட்சத்தில்! ஸோ, எதுக்கும் ஹெசிடேட் பண்ண வேண்டாம்!” என்றான் பரத்.
“ஓ! கதை இப்ப இப்படி போக ஆரம்பிச்சிடுச்சா, இந்த பரணி ரொம்பதான் பயந்துட்டான் போல, அதும் இல்லாம, நம்ம மேலே இன்னும் சாப்ட் கார்னர் இருக்கதான் செய்யுது.
நாம இத முதலாக்கிட்டு, இங்கே இருக்கிறவங்க எல்லாம் நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வந்துடனும். அப்புறம் அந்த ஜான்வியை எப்படியாவது துரத்தி விட்டுடணும்.
Advertisement
என்ன இந்த கிழவிங்கள தான் சமாளிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும், பார்த்துக்கலாம், எவ்வளவோ பண்ணி, திரும்ப இந்த அளவு இந்த வீட்டுல இன்ப்ளுயன்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டோம், இத பண்ண முடியாதா?” ஜனனிக்குள் ஓவர் கான்பிடன்ஸ்!
யோசித்தபடியே, பரத்தின் கையில் இருக்கும் புது போனை பார்த்தாள்.
அவள் பார்ப்பது தெரிந்தவுடன், “ஓ! இதுவா, இது மணிக்கு அண்ணன் வாங்கிக் கொடுக்க சொன்னிச்சு. அவன் போனை கழனித் தொட்டியில் போட்டு கண்டம் ஆகிடுச்சு.
அதனால அவன் ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டுகிட்டு இருந்தான் இந்த ஐ போன்!
அவன் தீபாவளி பொங்கலுக்கு ட்ரெஸ் கூட ஆசைப்பட மாட்டான், ஆனா ரொம்ப போன் பயித்தியம்! அதான்!
பெரியப்பாவை கூட இருந்து நல்லா பார்த்துக்கிறான்னு தான் அவன் ஆசைக்கு வாங்கித் தர சொன்னாரு பரணி அண்ணன்”.
“ஆனாலும் ஒரு வேலைக்கார எடுபிடி பையனுக்கு ஐபோனெல்லாம் ரொம்ப ஓவர், ஏன் இந்த பரணி, இதை எல்லாம் யோசிக்க மாட்டேங்கிறான், எல்லாம் நான் வந்துதான் இனி ஒண்ணு ஒண்ணா சொல்லித் தந்து அவனை மாத்தணும் போல” என்றாள் ஜனனி!
“யூ ஆர் எக்ஸாட்லி கரைக்ட்! அண்ணன் இப்படி தான் வேலை செய்றவங்களுக்கு ரொம்ப தான் இடம் கொடுக்கிறாரு, இந்த மணியில் ஆரம்பிச்சு, ஜான்வி, அப்புறம் இந்த கனகு கிழவி எல்லோருக்கும் ரொம்ப தான் பண்றாரு, எனக்கும்தான் பிடிக்கல, என்ன பண்றது, வீட்டுக்கு அவர் தான் இப்ப ஹெட், அவர் சொல்றது தானே நாங்க கேட்கணும்” பரத் புலம்பினான் போலியாக.
“இந்த வீட்டுக்கு அவன் ஹெட், நான் அவனுக்கே ஹெட்! இன்னும் கொஞ்ச நாளில்!” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்ட அவள்,
“என்கிட்டயே ஆன்ராய்டு போன் தான் இருக்கு, மணிக்கு இது தேவையா, பரத், ஒண்ணு பண்றீங்களா, இந்த போனை என்கிட்ட கொடுத்துடுங்க, அவனுக்கு வேறே எதுனா கம்மி விலையில் வாங்கிக் கொடுத்துட்டு, அவன் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சுடுங்க” என்று பரத்திடம் அந்த போனைக் கேட்டாள் ஜனனி.
“எனக்கும் கூட இது தான் சரின்னு படுது, ஆனா அண்ணன்..” அவன் இழுக்க
“நான் பரணிகிட்ட பேசிக்கிறேன் நீங்க கொடுங்க” என்று கையை நீட்டினாள்.
அவன் மேலும் தயங்க, பரணியை அழைத்தாள் ஜனனி!
அவன் எக்ஸ்போர்ட் கம்பனியில் முக்கிய மீட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தான்.
என்னமோ ஏதோவென்று அவன் போனை அட்டென்ட் செய்ய, அவள் பரத்திடம் போனைக் கொடுக்க சொல்லும்படி கேட்க, என்ன போன், யாருக்கு என்றெல்லாம் யோசிக்க கூட நேரம் இல்லாத பரணி, “போனை அவன் கிட்ட கொடு” என்று சொல்லி, “பரத் அவ என்ன கேக்குறாளோ கொடுத்து தொலை” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
“சரி” என்று சொல்லிவிட்டு, “அண்ணன் உங்களுக்கே கொடுக்க சொல்லிட்டார். உங்க போனைக் கொடுங்க நானே, சிம்மை மாத்திப் போட்டு தரேன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டான்.
“சரி போட்டு வைங்க, நான் குளிச்சுட்டு வரேன்” என்று சொல்லி எழுந்துப் போனாள் ஜனனி!
பரத், அந்த புது போனில் அவன் நண்பனிடம் பேசி அந்த போனை முழுவதும் ஹேக் செய்வதற்கு தயார் செய்த ஒரு சிப்பையும், சிம் கார்ட் போடும் சாக்கில் அதில் சொருகி விட்டு, நல்லப் பிள்ளையாக அதை சார்ஜ் வேறு போட்டு வைத்தான்.
குளித்து விட்டு வந்த ஜனனி, அது ஹேக் செய்யப்பட்டிருக்கும் போன் என்று அறியாது, அதை ஆசையுடன் கையில் எடுத்து வைத்துக் கொண்டு,
இந்த வீட்டில் என்னுடைய முதல் சக்சஸ் இந்த போன், இனி அடுத்தடுத்து சக்சஸ் தான்! என்று மனதில் கும்மாளாமிட்டவாறு, அதில் இருந்து அவள் அம்மாவை அழைத்துப் பேசினாள்.
“என்ன தீபு, திருச்சியில் உனக்கு வேலை கிடைச்சுடுச்சா, பிஜி எல்லாம் வசதியா இருக்கா? என்று கேட்டாள் அவள் அம்மா பேபி.
“யாரு இனி வேலைக்கு போகப் போறா, நான் இனிமே பாஸ்!”
“என்னடி சொல்ற எனக்கு ஒண்ணும் புரியல!”
“அம்மா, நான் இங்க வந்ததே, எப்படியாவது பரணியை மீட் பண்ணி, மறுபடியும் அவனோட லவ்வை கண்டினியு பண்ணிடனும் தான்!
ஆனா எப்படி, எப்போன்னு தெரியாம தான் முதல்ல இங்க வந்தேன். ஆனா உன் பொண்ணு ரொம்ப அதிர்ஷ்டக்காரி தெரியுமா, நான் தேடாமலே அவன் நான் இருக்கும் இடத்திற்கு தானே வேறே வேலையா வந்துட்டான்.
அவனைப் பார்த்த பிறகும் அவனை விட்டுடுவேனா, அவன் பின்னாலேயே அதையும் இதையும் சோகக் கதைகள சொல்லி, அவன்கிட்ட சிம்பதி வர வச்சு அவன் வீட்டுக்கே வந்திட்டேன்.
சரி, வீட்டுக்குள்ள வந்திட்டோம், அவனையும் மடக்கிடலாம்னு பார்த்தா, இப்ப அவன் வேற ஒரு பொண்ணை ரொம்ப சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்கான்!
நான் ரொம்ப ஷாக் ஆகிட்டேன், அப்புறம் எதுலயும் பின் வாங்குற பழக்கம் தான் எனக்கு இல்லையே, என்னால முடிஞ்ச வரை அவங்கள சந்திக்க விடாம பண்ணிட்டே தான் இருந்தேன், இந்த நாலு நாளா!
ஆனா அது அவ்வளவு ஈசியா இல்ல எனக்கு, இங்க ரெண்டு கிழவிங்க.. பரணியோட பாட்டியும் இன்னொரு வேலைக்கார கிழவியும் சேர்ந்துட்டு என் பிளானை எல்லாம் கெடுத்துட்டு இருந்துச்சுங்க.
நான் விடுவேனா, அதுங்க ரெண்டும் ஒரு டெத்துக்கு வெளியே போய் இருந்த சமயமா பார்த்து, இந்த பரணியோட அம்மா ஒரு டம்மிப் பீசு, அதுக்கிட்ட போய் ஒரு நெஞ்சு வலி டிராமா போட்டேன், அந்தம்மா அய்யோ அம்மான்னு பயந்துட்டு, பரணிய கூப்பிட்டு என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போக சொன்னுச்சு.
பரணியும் வந்தான்.
அவன் அவன் அம்மாவுக்கு மேல! அவனும் ரொம்ப பயந்துப் போய் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனான்.
போற வழியில அந்த ஜான்வி, அதான் அவன் இப்ப லவ் பண்ணிட்டு இருக்கிற டாக்டர் அவ எதிர்ல வந்துட்டு இருந்தா ஸ்கூட்டில!
பரணி பதட்டத்தில் அவளைக் கவனிக்கல, ஆனா நான் அவளைப் பார்த்துட்டேன்.
வேணும்னே அவனை நெருங்கி ஹக் பண்ணிட்டு போற மாதிரி உட்கார்ந்தேன்!
அதை ஜான்வியும் பார்த்துட்டா, அவ முகம் அப்படியே செத்துப் போய்டுச்சு தெரியுமா! அவ எல்லாம் ரொம்ப சென்சிடிவ் கேரக்டர்! இதுவே போதும் அவ பரணிய விட்டு போறதுக்கு!”
பட படவென்று குதூகலமாய் அவள் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஜனனி!
“ஹாஸ்பிட்டலில் உனக்கு ஒண்ணும் இல்லன்னு தெரிஞ்சு போயிருக்குமே! அப்ப என்ன பண்ணின?” பேபியம்மா கேட்டாள்.
“அங்கயும் எனக்கு லக் வேலை செய்துச்சும்மா, அன்னிக்குப் பார்த்து, அங்க டூட்டியில் இருந்த டாக்டர், ஜான்வியப் பிடிக்காத அவ கிட்ட ஈகோ கிளாஷ் வச்சுட்டு இருக்கிறவ!
அவ கிட்டயும் நான் நைசா பேசி, நான் கொஞ்சம் கிரிட்டிகலா தான் இருக்கேன், ரொம்ப கேர் எடுத்துப் பார்த்துக்கணும்னு பரணிகிட்ட சொல்ல சொன்னேன். அவளும் அப்படியே சொல்லிட்டா!
அதுக்கப்புறம் என்ன, இங்க எனக்கு இப்ப ஒரே ராஜமரியாதைதான்!
பரணியோட தம்பி ஒருத்தன், என்னைக் கண்டாலே கடுகடுன்னே இருப்பான், இப்ப அவன் கூட பரணிக்காக என்னைத் தாங்கு தாங்குன்னு தாங்கறான்!” அவள் கர்வமாக சிரித்தாள்!
“சரிடி, இது எல்லாம் எத்தனை நாளைக்கு?”
“அங்க தான்மா, நீ உன் பொண்ணோட திறமைய பார்க்கணும்!
இங்க எல்லாமே பரணி கண்ரோல்ல தான். அந்த பரணி என் கண்ரோல்ல தான் இருக்கான்னு ஒரு பிம்பத்தை நான் இங்க ஏற்படுத்தி, இங்க எல்லோரையும் கண்ட்ரோல்ல எடுத்து, இன்னொரு டிராமா பண்ணி, அவனை எப்படியாவது கல்யாணம் பண்ணிடனும்!
கல்யாணம் பண்ணியே தீரணும்ங்கிற ஒரு சிச்சுவேசனுக்கு அவனைத் தள்ளிவிடணும்.
கல்யாணம் மட்டும் ஆகிட்டா போதும், அப்புறம் அவனை இங்க இருந்து கிளப்பிடுவேன்! இந்த சனியன்கள எல்லாம் விட்டுட்டு!”
“உன் ப்ளான் எல்லாம் சரிடி! ஆனா கொஞ்சம் அடக்கி வாசி! வீட்டு ஆளுங்க கிட்ட கொஞ்சம் நிதானமா நட, ஓவரா, இங்க உன் அண்ணிகிட்ட அதிகாரம் பண்ணின மாதிரி இருக்கறதையும் கெடுத்துக்காத!” என்றாள் பேபி!
“அடப் போம்மா, இவ்வளவு செஞ்சவ, இதுங்கள சமாளிக்க மாட்டேனா! அதுக்காக இதுங்களுக்கு எல்லாம் கும்பிடு சலாம் போட்டு, சர்வீஸ் பண்ண முடியாது என்னால எல்லாம்!
நான் கூட ஆரம்பத்துல நீ சொல்ற மாதிரி, வீட்டுல எல்லோர்கிட்டயும் நல்லபடியா நடந்து, அதன் மூலம் பரணியின் மனசுல மறுபடியும் வரணும்னு தான் நினைச்சேன்.
ஆனா அதுக்கு இப்ப தேவையே இல்லாம போச்சு, பரணி இப்ப என் பக்கம்.
அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத ஆணியெல்லாம் பிடிங்கிட்டு?
அதான் இதுங்கள எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கப் போறேன்!
ஸோ, நீ ஒண்ணும் கவலைப் படாதே!
எல்லாம் எனக்குத் தெரியும், நான் பார்த்துகிறேன் நீ போனை வை!
உன் பையன்கிட்ட சொல்லு, நான் அவனை விட பெரிய இடத்துல மகாராணி மாதிரி வாழப்போறேன்னு!” என்று மித மிஞ்சிய கர்வத்துடனும் திமிர் தலைக்கேறி சிரித்துக்கொண்டே போனை கட் செய்தாள் ஜனனி தீபிகா!
அவள் இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தது பரத் ஹேக் செய்து, அவள் பேசிய அத்தனை ஒப்புதல் வாக்குமூலத்தையும் தன் லேப்டாப்பின் மூலம் கேட்டுக்கொண்டும் ரெக்கார்ட் செய்து கொண்டு இருப்பதை அறியாமல்!
இந்த அறியாமையோடு, மிதமிஞ்சிய திமிரும் சேர்ந்துக்கொள்ள, அவளின் சுழி அவளை சும்மா விடாமல், பரணியின் வீட்டினரிடம் இன்னும் அதிகாரம் காட்ட செய்தது.
இதைக் கண்டு கொதித்த ஜகதுவை, கனகுவும் பரத்தும் அடக்கினர்.
ஜனனி இப்படி ஏதாவது ஜான்வியையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று அவளை பாட்டிமார் இருவருமே அந்த மெடிக்கல் கேம்பிற்கு அனுப்பி வைத்து விட்டனர்.
ஜகது, அவர் மகள் சந்திரா வீட்டுக்கு போய் விட, பரத்தும் பரணியும் ஆபிசில் ரொம்ப பிசியாகி விட, வீட்டில் இருந்த பெண்களைப் பாடாய் படுத்த தொடங்கி விட்டாள் ஜனனி!
பரணி வேறு அவளை நன்றாக பார்த்துக்க சொல்லியிருப்பதாலும் அவளின் உடல்நிலையைப் பற்றி எண்ணியும் அவர்கள் எல்லோருமே அவள் சொல்படி ஆட வேண்டியிருந்தது!
இதற்கு பரணியின் அம்மா தமிழரசியும் பரத்தின் அம்மா வத்சலாவுமே தப்பவில்லை எனும் போது, வேலைக்காரியான செல்வியையும் மணியையும் ரொம்பவே படுத்தினாள் ஜனனி!
“ஆண்ட்டி, அது தான் அந்த ஜான்வி இல்லையே, அப்ப நீங்க நம்ம வீட்டிலேயே நான்வெஜ் சமைக்கலாமே” என்று கேட்டு, விதவிதமாய் மூன்று வேளையும் சமைக்க சொல்லி பெண்டு நிமிர்த்தினாள் செல்வியை!
தொட்டதுகெல்லாம் வேலை ஏவி மணியையுமே!
“என்ன இது உடம்பு சரியில்லாத பொண்ணு, இப்படி சாப்பிடுறாளே” என்று தமிழ் கூட ஆச்சரியமாக பார்த்தார் அவளை!
பரத்தின் அப்பா எதிரில் பாஸ்கர் வரும் போது கூட கொஞ்சமும் மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அவளின் மேல் கொலை காண்டில் இருந்தார் வத்சலா!
பவியையும் பாரதியையும் கூட அவள் வேலை ஏவிக் கொண்டே இருந்தாள்.
ஹாலில் சோபாவில் உட்கார்ந்து கொண்டு, “ஏய் பாரதி, இந்த என் போனை சார்ஜில் போட்டு வை” என்று ரொம்ப தூரம் போய்விட்டவளை திரும்ப அழைத்து வேலை சொன்னாள்.
இத்தனைக்கும் பிளக் பாயின்ட் அவள் கை எட்டும் தூரத்தில் இருக்கும் போதே!
“பவி, இன்னிக்கு எனக்கு பிரியாணி ஆர்டர் பண்ணு, உன் ஸ்கூல் லஞ்ச் டைமில்! எனக்கு டயத்துக்கு சாப்பிடனும், மறந்திட்டேன்னு சொல்லிடாத!” என்றாள் பவித்ராவிடம்.
அவசரமாக ஹையர் கிளாஸ் குழந்தைகளுக்கு ஸ்பெசல் கிளாஸ் எடுக்க கிளம்பிக் கொண்டிருந்தவளிடம்!
“என்ன பார்க்குற ஞாபகமா பண்ணிடுவ இல்ல!”
“ஏன், அத நீங்களே பண்ணிக்க வேண்டியது தானே?” என்றாள் பவி சூடாக
“அது எனக்கு தெரியாதா. இங்க, இந்த வீட்டுல சிக்னல் வீக்கா இருக்கு! அதான் உன்கிட்ட சொன்னேன், நீ பண்றியா, இல்ல இதுக்கு கூட பரணிய கிட்ட தான் நான் பேசணுமா?”
“நானே பண்றேன்” என்று சொன்னவள், “பண்ணித் தொலைக்கறேன்” என்று முணுமுணுத்துக் கொண்டே அவள் அம்மாவை முறைத்துக் கொண்டு கிளம்பினாள்.
அடுத்து தாமரையின் குழந்தைகளையும் அவள் விட்டு வைக்க வில்லை!
மகிழினி டிவியில் சோட்டா பீம் பார்த்துக் கொண்டிருக்க, வேகமாக டிவி ரிமோட்டைப் பிடுங்கி வேறு சானல் வைத்தாள்.
மகிழினி அழத் தொடங்க, அங்கு வந்த ஆதவன் “ஆண்ட்டி, ரிமோட்டை அவகிட்ட கொடுங்க, அவ கொஞ்சம் நேரம் தான் பார்ப்பா, அப்புறம் பவி அக்கா கிட்ட படிக்கப் போய்டுவா” என்றான்.
“ அதெல்லாம் குடுக்க முடியாது, போடா அங்க, வந்துட்டான் பெரிய மனுஷன், நியாயம் கேட்டுட்டு!” என்று அவனை தலையில் அடித்து விரட்ட, அப்போது பார்த்து ,வீட்டினுள் நுழைந்த தாமரையின் கண்களில் இந்த காட்சி விழுந்து விட்டது!
வேகமாக கோபத்துடன் அருகில் வந்தவள், மகிழினியைத் தூக்கிக்கொண்டு, ஆதவனையும் இன்னொரு கையில் பிடித்துக்கொண்டு, ஜனனியை ஒரு முறை முறைத்தாள்.
“இன்னொரு வாட்டி இந்த மாதிரி நடந்துட்ட, நடக்கிறதே வேற” என்று வார்ன் செய்தபடி!
“என்ன பண்ணுவ நீ, இரு முதல்ல உன்னை உன் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன், அதான் உன் புருஷன் செத்துப் போய்ட்டான்ல, அப்புறம் எதுக்கு இன்னும் இங்கயே டேரா போட்டுட்டு இருக்க!” என்று முணுமுணுப்பாக தாமரையைத் திட்டினாள்.
அது ஹாலில் இருந்த சிசிடிவியில் பதிவாகிக் கொண்டிருந்தது.
பரத் அதை மறைத்து வைத்திருந்தான், முன்னேற்பாடாக!
“ரொம்ப ஓவரா போறோமோ, போவோம், பரணியே நம் பாக்கெட்டில், அப்புறம் என்ன?” என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் ஜனனி!
அடுத்த நாள், அவளது டார்கெட் கனகு!
அவள் ரூமில் படுத்துக் கொண்டு, கனகுவை அழைத்து, “என் கால் லேசா சுளுக்கு விழுந்த மாதிரி இருக்கு, நீ வந்து காலை பிடிச்சு விடு” என்றாள்.
“காலைப் பிடித்து விடணுமா, அதுவும் உன் காலை! உன் வயசு என்ன? என் வயசு என்ன, நான் பரணியோட ஆத்தா தெரியுமில்ல!” கனகு கோபப்பட,
“எது ஆத்தாவா, அந்த ஜகது கிழவிக்கே நான் கட்டுப்பட மாட்டேன், நீயெல்லாம் இங்க வேலைக்கு இருக்கிற கிழவி, நான் பரணிய கல்யாணம் செய்யப் போறவ, இந்த வீட்டு வருங்கால எஜமானி, என் காலைப் பிடிக்க கூடாதா?”
அன்று ஜான்வி பரணியிடம் கோபித்துக் கொண்டு டபுள் டூட்டி பார்த்ததால், அவளுக்கு மிகுந்த கால் வலி! மன உளைச்சல் கூட.
அதனால் அவள் ஜகதுவின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
கனகு அவள் கால் மாட்டிற்கு அருகில் வந்தவர், அவள் காலை இழுத்துப் பிடித்து விட்டார், அவர் ஆசைப் பேத்திக்கு வலிக்கிறது என்பதால்!
அதை தான் பார்த்து விட்டுதான் இப்போது ஜனனி கனகுவை அவள் காலைப் பிடித்து விட சொல்லிக் கொண்டிருக்கிறாள்!
ஏன் அன்னிக்கு கூட நீ அந்த ஜான்வி காலைப் பிடிச்சு விட்டுட்டு இருந்தத தான் பார்த்தேனே!
அவளுக்குப் பிடிச்சுவிடுவ, எனக்கு பிடிக்க மாட்டியா?
நீ என்ன தான் மாமா வேலைப் பார்த்து அந்த ஜான்விய பரணிக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்னு நினைச்சாலும், நான் விட மாட்டேன்!
பரணி ஜான்விய கல்யாணம் பண்ணி அவ இந்த வீட்டுக்கு எஜமானி ஆகப் போறான்னு தானே அவளுக்கு கால் பிடிச்சு விடற, அது என்னிக்கும் நடக்காது, நான் தான் பரணிய கல்யாணம் செய்யப்போறவ.
அதனால என் காலை பிடிச்சு விடு, நான் உன்னை நல்லபடியா கவனிச்சுக்கிறேன்!”
“ஜனனி தீபிகா! ஸ்டாப் இட்! இட்ஸ் இனப்(Enough)!” கத்தியபடி உள்ளே நுழைந்தான் பரணி!
அவன் முகம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது!
“அது இல்ல பரணி, நான்.. சும்மா… இந்த பாட்டிக்கிட்ட.. சும்மா” அவள் திணறிக் கொண்டிருந்த போது, அவள் அருகில் வேகமாக வந்தவன் அவள் வேகமாக அறைந்து கீழே தள்ளினான்!
“என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல, போனாப் போவுதுன்னு உனக்கு இரக்கப்பட்டத்துக்கு, போதும் இது எனக்கு! இனி ஒரு நிமிஷம் கூட நீ இந்த வீட்டுல இருக்கக் கூடாது!
மணீ.. வாடா, இவளைக் கொண்டு போய் டோல்கேட்ல இறக்கி விட்டுட்டு வந்துடு, இன்னும் பத்து நிமிசம் தான் உனக்கு டைம்!” என்றான் ஜனனியைப் பார்த்து!
“சாரி, பரணி, நான் எங்க போவேன், எனக்கே உடம்பு வேறே சரியில்ல..” அவள் மீண்டும் கெஞ்ச தொடங்க,
“இந்த ரீல் எல்லாம் எப்பவே அந்துப் போச்சு, நீ கிளம்பு!” என்று சொல்லி விட்டு இப்போது கனகுவை முறைத்துப் பார்த்து, “ஏன் ஆத்தா, இப்ப நான் செஞ்சத, இந்நேரம் நீ இல்ல செஞ்சுருக்கணும், மண்ணு மாதிரி நின்னுக்கிட்டு இருக்க!” என்று அவரையும் திட்டினான்.
கனகுவுக்கே இந்த அளவு ஜனனிப் பேசுவாள் என்று எதிர்பாராதால் கொஞ்சம் ஷாக்!
பின் மீண்டவர், அடுத்த தான் உடனடியாக செய்ய வேண்டியதைப் பற்றி சிந்திக்கலானார்!
error: Content is protected !!