Skip to content
Post Views: 1,599
அத்தியாயம் 14
மறுநாள் காலை ஜங்ஜியாஜே மாகாணத்தில் இருந்து வங்சியான் பள்ளத்தாக்குக்கு செல்ல ரயிலில் புறப்பட்டனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேர பயணம். அதிவிரைவு ரயிலில் காலை ஏழரை மணிக்கு அங்கிருந்து கிளம்பி மதியம் பன்னிரண்டு மணிக்கு வங்சியான் பள்ளத்தாக்கு சென்றடைந்தனர். வைஷ்ணவி அங்கிருக்கும் பல பெயர்கள் வாயில் நுழையாததால் போகிற இடம் எங்கே எதற்கெல்லாம் என்று தெரியாது அசோக்கிடம் இடை இடையே சந்தேகத்தை கேட்டுக்கொண்டாள். இரயில் பயணம் முடிந்து மீண்டும் டாக்ஸியில் பயணித்தனர்.
வழக்கம் போல் எட்டு எட்டு பேராக குழுக்கள் பிரிக்கப்பட்டு இருக்க ஸ்டான் பென்னி லிடியா ரெய்ச்சல் அடலின் கேப்ரியல் உடன் தான் வைஷ்ணவியும் அசோக்கும் பயணித்தனர்.
வைஷ்ணவியிடம் கால் டாக்ஸியில் வரும் போதே இந்தியாவைப் பற்றி பல கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்தாள் ரெய்ச்சல். அவள் பேசுவதில் இருந்து அவர்களுடைய அடுத்த பயணம் இந்தியா முழுக்க இருக்கும் இடங்களை சுற்றி பார்ப்பது போல் தோன்றியது. வைஷ்ணவி தனக்கு தெரிந்த வரையில் தென்னிந்தியாவின் சுற்றுலா தளங்களை சொல்லிக் கொண்டு வந்தாள்.
Advertisement
அதே நேரம் அசோக், அடலின் கேப்ரியல் தம்பதியரிடம் பிரான்சை பற்றிய விஷயங்களை கேட்டு கொண்டே இருந்தான்.
‘ஓ! அடுத்து இவன் பிரான்சைச் சுற்றிப் பார்க்கப் போறான் போல! அப்பவாவது நம்மள பிரச்சினை ல இழுத்து விடாம இருப்பானாப் பார்க்கலாம்!’
என்று நினைத்த வைஷ்ணவி அவன் செல்லும் இடமெல்லாம் தன்னை எப்படி கூட்டிச் செல்வான்? ஏன் கூட்டிச் செல்வான் என தன் மனம் நினைக்கிறது என்ற சிந்தனையே முற்றிலும் இல்லாதிருந்தாள். அசோக்கின் அருகிருப்பும் நட்பும் அவ்வளவு இயல்பான ஒன்றாக அவளுக்கு மாறியிருந்தது. அவனுடனான சாகசப் பயணங்களும் ஓயாத சண்டைகளும் ஒவ்வொரு முறையும் அவன் காட்டிய அன்பும் அக்கறையும் வெறும் ஐந்து நாட்களில் இதைச் சாத்தியப்படுத்தி இருந்தது.
Advertisement
அடலின் அசோக் ரெய்ச்சல் பென்னி ஒருவருக்கு ஒருவர் தங்கள் நாடுகள் பற்றிப் பேச வைஷ்ணவி ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். உலகம் அதன் மக்களை அழகாய் இணைத்துக் கொள்ள எத்தனை ஆயிரம் வழிகளை கொடுத்து இருக்கிறது. உணவு பரிமாற்றம் கலாச்சார பரிமாற்றம் எல்லைகள் இல்லாத ஒரு உலகம் எவ்வளவு அழகாக இருக்கும் பகிர்ர்தலும் புசித்தலும் வாழ்ததும் மட்டுமே அதன் விதி ஆக இருந்திருக்கும். மனிதனின் பேராசை உலகைப் பீடித்த உயிர்க்கொல்லி நோய்.
Advertisement
அவர்கள் சற்று நேர பயணத்தில் அந்த வங்சியான் பள்ளத்தாக்கை வந்தடைந்தனர். வங்சியான் பள்ளத்தாக்கு. எதிர் எதிரே பெரிய மலைத்தொடர் இடையில் நீர்வீழ்ச்சியில் வழியும் நீர் நதியாக பாயும் நில அமைப்பு உள்ள ஒரு அழகான பள்ளத்தாக்கு. அதன் இயற்கை நில அமைப்பு தாண்டி அதன் அழகை இன்னும் கூட்டியது அந்த மலையின் பக்கவாட்டில் வீடுகளை கட்டி இருந்த அதிசயம். நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வந்து கொண்டே இருக்க அதனை ஒட்டியே நடப்பதற்கு பாலம் எதிரே தெரிந்த தொங்கும் வீடுகளை இணைக்க ஜிக்ஜாக் வடிவில் படிக்கட்டுகள் இருந்தன.
சீன அரசு சமீபத்தில் தான் அதனை மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக அறிவித்திருந்தது.
நடுவில் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஓட அதை கடக்க ஒரு அரை வட்ட வடிவில் பாலம் இருந்தது. அதைத் தாண்டி படிகளில் நடக்க வேண்டும். அவர்கள் இடத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு முன் வழக்கம் போல் அந்த இடம் பற்றிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருந்தான் எரிக். வெகு காலத்திற்கு முன்பு ஒரு சீன இளைஞர் அந்த ஊரை விட்டு வெளியே சென்றதாக அவன் ஆரம்பிக்க அசோக் கதை குறிப்பு போதும் என்பது போல் அங்கிருந்து நடக்கத் தொடங்கினான். வைஷ்ணவி பெருமூச்சு விட்டு அசோக்கை பிடித்து நிறுத்தினாள். மற்ற ஆறு பேரும் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
Advertisement
“எங்க போற எல்லாரும் நம்மள பார்ப்பாங்கல?”
வைஷ்ணவி சொல்ல அதற்கு அசோக், “உனக்கு இப்ப இந்த இடத்தோட பழங்கால கதையை தெரிஞ்சுக்கணுமா இல்லை இந்த இடத்தோட இந்த நிமிஷம், இந்த நொடி, இதோட அழகை ரசிக்கணுமா?”
“ரெண்டும் தான்!”
வைஷ்ணவி சொல்ல அசோக் படிகளில் ஏறுவதை நிறுத்தி அவளிடம் திரும்பினான்.
“அப்ப அவர் சொல்ற கதையை நான் சொல்றேன் வா?”
அசோக் சொல்ல வைஷ்ணவி மீண்டும் கேள்வி கேட்டாள்.
“ஏன் நீ ஏற்கனவே இங்கே வந்து இருக்கியா?” வைஷ்ணவியின் கேள்விக்கு,
“வந்திருக்கேன் ! இரண்டு மூன்று முறை”
அசோக் பதில் பேசிக் கொண்டே நடக்க, வைஷ்ணவி சீனர்களை திட்டிக் கொண்டே நடந்தாள்.
“இந்த சீனாக்காரங்க படியேறும் போது கடவுள் படைச்சிருப்பார் போல! எப்ப பார்த்தாலும் எங்கப் பார்த்தாலும் இத்தனை படி ஏறிட்டே இருக்காங்க. யாராவது ஒருத்தர் குண்டா இருக்காங்களான்னு பாரு?”
வைஷ்ணவி சொல்ல அசோக் திரும்பினான். வைஷ்ணவியின் சற்றே குண்டுக் கன்னங்கள் சிவந்திருக்க அவனது கண்களில் ரசனை மிகுந்தது.
அசோக் சிரித்துக் கொண்டே சொன்னான். “என்ன பண்றது அழகு கொழுக்கட்டை மாதிரி கொஞ்சமே கொஞ்சம் தான் இருக்காங்க. பப்ளியா அழகா!”
அவன் தன்னைத்தான் சொன்னானா என்று ஒரு நொடி திகைத்து நின்றவள் கண்களை படபடவென அடித்துக் கொண்டாள். அசோக் இப்படி பேசுவானா அதுவும் தன்னைப் பற்றி வாய்ப்பே இல்லை அவள் திரும்பி பார்க்க பின்னே ஒரு அழகான சீனப் பெண்மணி சற்று உடல் பருவமனுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தார். வைஷ்ணவி அந்த பெண்மணியை அவன் சுட்டியதாக நினைத்துக் கொள்ள அவன் வைஷ்ணவியை ரசித்தானா இல்லை சீனப் பெண்ணை வர்ணித்தானா என்பது அவனது விழிகளுக்கும் இதயத்திற்கும் மட்டுமே அறிந்த அதிசயம்.
அசோக் படி ஏறியப் பின் வைஷ்ணவியை அழைத்துச் செல்வதாக எரிக்கிடம் கையசைத்து விட்டு வைஷ்ணவியை கூட்டிக்கொண்டு நடந்தான். துஃவையலிடம் அந்த பயணத்திற்கு எரிக்கை அறிமுகம் செய்தவனே அசோக் தான். எரிக்கு அவனுக்கு முதல் பயணத்தில் பழக்கம். அவன் இதற்கு முன்பு இந்த இடத்திற்கு இரண்டு மூன்று முறை வந்திருக்கிறான். அதனால் இந்த விளக்கங்களில் அவனுக்கு சுவாரஸ்யம் இருந்தது இல்லை. வைஷ்ணவி அவனுடன் நடந்தாள். படிகள் இப்போது நீர்வீழ்ச்சி ஒட்டிய பாலத்திற்கு வந்து இருந்தது. அரை வட்ட வடிவில் இருந்த பாலம் மேல் ஏறி சீன மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் அது வார நாட்கள் என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது அசோக் அவளை அழைத்துக்கொண்டு மேலே படியேற ஜிக்ஜாக் வடிவத்தில் மலையின் பக்கவாட்டில் படிகள் இருக்க அங்கங்கே வீடுகள் கட்டப்பட்டிருந்தது. “இப்படி ஒரு இடத்துல எப்படி கட்டியிருப்பாங்க?!”
அவள் ஆச்சரியப்பட்டு கேட்க அசோக் பதிலளித்தான்.
“2010 வரைக்கும் இந்த இடம் அவ்வளவு பேமஸ் எல்லாம் இல்ல. 2010 ல இந்த ஊரைச் சேர்ந்த பத்து இளைஞர்கள் இந்த இடத்தை புதுப்பிக்கணும்னு நினைச்சாங்க. அவங்களுடைய ரெண்டு பில்லியன் யுவான் செலவு பண்ணி இந்த நகரத்தையே கலாச்சார நகரமாக மாத்தினாங்க இன்னைக்கு சீனாவில் மிக மிக முக்கியமான சுற்றுலா தளத்தில் இதுவும் ஒன்னு இதை இப்ப பார்க்கிறதை விட நைட்ல பார்க்கிறது தான் நல்லா இருக்கும்”
அவன் சொல்ல அவளுக்கோ அது அப்பொழுது மிக அழகாக தெரிந்தது.
‘இதை விட அழகா?’ அவள் பிரமிப்பைக் கூட்டியது அசோக்கின் பேச்சு. அவர்கள் நடக்க நடக்க அந்தப் படிகள் அருவியை ஒட்டியப் பாலம் தாண்டி வந்து இருந்தது. அவர்கள் கை நீட்டினால் தண்ணீரை தொடும் அளவுக்கு நீர்வீழ்ச்சி விழுந்துக் கொண்டிருந்தது. அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் சத்தம் காதுகளில் விழ இயற்கையின் இனிமையான இசை செவிகளில் விழுந்து இதயத்தில் பரவியது.
வைஷ்ணவி சற்று நேரம் அந்த அழகை ரசிக்க அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள். படிகளில் பின்னே வந்தவர்கள் அவளைத் தள்ளி நடந்துக் கொண்டு இருந்தனர். அந்த நீர்வீழ்ச்சியின் ஈரப்பதமான சாரல் முகத்தில் அறைய காற்றுடன் கலந்த குளுமை முகம் உணர அப்படியே நின்றாள். அசோக் அவள் அருகில் வந்து நின்றான்.
“எப்படி இருக்கு?” அவன் கேட்க, வைஷ்ணவி புன்னகைத்தாள்.
“எனக்குத் தெரிந்து உலகமே சொர்க்கமா தான் இருக்கணும்!”
அவளது பேச்சில் அசோக் புன்னகைத்தான்.
“உண்மைதான் நாம தான் அதை எங்கெங்கேயோ தேடிட்டு இருக்கோம்”
அவன் சொல்லிவிட்டு நடக்க வைஷ்ணவி அவனுடன் நடந்தாள். அவர்கள் மேலே செல்ல ஒரு பெரிய திடல் இருந்தது. அந்த திடலின் முகப்பில் மிகப்பெரிய நுழைவு வாயில் இருந்தது. அங்கங்கே கடைகள் இருக்க மீண்டும் மேலே ஏறும் படிகள் வந்தது. இப்பொழுது மலையின் பக்கவாட்டில் அவர்கள் ஏறிச் செல்ல அங்கங்கே சீன உணவு கடைகள் இருந்தது.
“அசோக் பசிக்குது. சாப்பிடலாமா?”
“ம் இரு நல்ல கடையாப் பார்த்துச் சொல்றேன்”
இப்படி சொல்லி சொல்லியே ஒரு மணி நேரம் நடக்க வைத்திருந்தான். வைஷ்ணவி பொறுமை இழந்துக் கத்தினாள்.
“அசோக், இப்ப நீ சோறு வாங்கித் தரல இங்கிருந்து குதிச்சிருவேன்”
அவள் படியின் பக்கவாட்டில் இருந்து மிரட்ட அசோக் ஒரு நிமிடம் திகைத்து தான் போனான். தான் நின்றிருந்த இடத்தில் இருந்து ஓடி வந்தவன் அவளது கரங்களைப் பற்றி கூட்டிச் சென்றே பேசினான்.
“இதான் இங்க தான் அடுத்த டர்னிங்”
“பொய் சொல்லாதேடா! எனக்கு நிஜமாவே ரொம்ப ரொம்ப பசிக்குது”
தன் குண்டுக் கன்னங்கள் ஆட அவள் கேட்க அசோக் இமை அசையாது அவளை நோக்கினான். வைஷ்ணவி மீண்டும் சத்தமாகக் கேட்டாள்.
“ஏ! எதுக்காக இப்படி பார்த்துட்டே இருக்கே! இப்ப வாங்கித் தர்றீயா இல்லையா? நான் பேசினா இவனுகளுக்கு புரிய மாட்டேங்குது அவனுக பேசினா எனக்கு புரிய மாட்டேங்குது. இதுக்காக உன்னை எதிர்பார்க்க வேண்டி இருக்கு. உன்னை நம்பி கைடையும் கட் பண்ணிட்டு வந்துட்டு இப்ப கொலை பசியில சுத்திட்டு இருக்கேன்!”
வைஷ்ணவி சொல்ல அசோக் அவள் காதில் மட்டும் கேட்குமாறு சொன்னான்.
“சோறு, சோறு னு சோறு தான் ரொம்ப முக்கியமா?”
“நீ வேணா இந்த மலையைப் பார்த்துட்டே இந்த காற்றை சுவாசிச்சுட்டே உயிர் வாழு! எனக்கு சோறு தான் முக்கியம்”
அசோக் தலையில் அடித்துக் கொண்டு அடுத்த வீடு தாண்டி ஒரு இடத்தில் கடைகள் இருக்க அங்கே எதையோ ஆர்டர் செய்து அமர்ந்தான். அசோக் தட்டிற்கு முதலில் உணவு வர வைஷ்ணவி அவன் சாப்பிட்டதை எடுத்து அதில் ஒன்றை சாப்பிட்டாள்.
“ரொம்ப டேஸ்டா இருக்கு இன்னொன்னு வாங்கு”
அசோக் ஒரு குறும்புக்கார புன்னகையுடன் கேட்டான்.
“அப்ப உனக்கு இன்னொன்னு சொல்லிடவா?”
“சொல்லு நல்ல டேஸ்டா இருக்குல்ல”
என்று சொல்லி அவள் அந்த குச்சியில் இருந்த அந்த உணவை சாப்பிட்டாள். அது கோழிக்கறியாக இருக்கும் என்று அவள் நினைத்திருந்தாள் பார்பிக்யூ சிக்கன் போல் ஒரு குச்சியில் இடப்பட்டு சுடப்பட்டு இருந்தது. அசோக் மீண்டும் அவளுக்கு ஒன்றை சொல்ல இப்போது அது கோழியை முழுதாக தீயில் வாட்டி எடுத்தது போல் கைகால்கள் பரப்பி சுடப்பட்டு இருந்தது. வைஷ்ணவி பசியில் அதையும் வாங்கி நன்றாக சாப்பிட்டாள் பின் அவனை நோக்கிக் கேட்டாள்.
“சிக்கன் மட்டும் எப்படி இவ்ளோ டேஸ்டா இருக்கு! செமையா சமைக்கிறாங்கல அசோக்”
அந்த கடையின் முகப்பில் கோழிக்கறி உருவம் இருந்ததால் அது நிச்சயம் கோழி கறியாக இருக்கும் என்று அவள் நினைத்து இருந்தாள்.
“ஐயோ வைஷூ இது சிக்கன் னு நெனைச்சீயா இது தவளைக் கறி வைஷூ”
அசோக் சொன்னதும் வயிற்றில் சென்ற உணவு தொண்டைக்கு வரத் தயாராக வைஷ்ணவி விழிகள் அகல அழும் குரலில் பேசினாள் வைஷ்ணவி.
“பொய் சொல்லாதே அசோக்! அங்கே படத்தில கோழி தான் வரைஞ்சிருஞ்சு!”
“அப்படியா! எங்கே திரும்பி நல்லாப் பாரு!”
அசோக் சொல்ல வைஷ்ணவி திரும்பிப் பார்க்க அந்த விளம்பரப் பலகையின் பின்புறம் பாம்பு தவளை படங்களும் இருந்தது.
வைஷ்ணவியின் முகம் கண்டு அசோக் கலகலவென சிரித்தான்.
“நீ என்னை சீண்டறதுக்கு தானே இப்படி சொன்னே?”
வைஷ்ணவி கேட்க அசோக் சிரித்து அந்த உணவு சமைத்து பரிமாறியவரிடம் பேசி விட்டு மீண்டும் வைஷ்ணவியை நோக்கினான். அந்த சீன சமையல்காரர் கைகளை ஆட்டி இல்லை என்பதாக மீண்டும் மீண்டும் ஏதோ சொல்ல வைஷ்ணவி நம்பிக்கையான குரலில் கேட்டாள்.
“அது தவளை கறி இல்லை தானே”
“ஆமா வைஷூ அது தவளை கறி இல்லை ஆமை கறியாம்”
அசோக் சொல்ல வைஷ்ணவி குமட்டிக் கொண்டு கை கழுவும் இடத்திற்கு ஓட அசோக் கத்தினான்.
“ஏ வைஷூ! அது கோழிக்கறி தான்”
வைஷ்ணவி குமட்டியதைத் துப்பியவள் அருகாமையில் இருந்த டிஸ்யூவில் வாய் துடைத்து அவனை நோக்கினாள்.
“சோறு எப்படி இருந்துச்சு? இனி சோறு முக்கியம் னு சொல்லுவ?”
அசோக் மேலும் அவளை எரிச்சல் மூட்ட அவள் பிதா மகன் லைலா குரலில் பேசினாள்.
“நானும் பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு பார்க்கறேன். உன்னை”
வைஷ்ணவி அவனை வெறிக் கொண்டு துரத்த அசோக் படிகளில் வேகமாக ஏறி ஓடினான். வைஷ்ணவி அவனைத் துரத்திக் கொண்டே ஓடி ஒரு வீட்டினுள் புகுந்து அதன் பால்கனியில் இருவருமே ஓடி வந்த களைப்பில் நின்று மூச்சு வாங்கினர்.
பின் இருவரும் எதிரே பார்க்க பால்கனியிலிருந்து கீழே தொங்கும் படிகள் இசட் வடிவில் இருந்தது. அந்த இடம் மலை மீது தொங்கிக் கொண்டு இருக்க கீழே இருபுறமும் மலை இருக்க ஒரு புற மலையிலிருந்து நீர்வீழ்ச்சியில் அருவி நீர் வழிந்து இரு மலைக்கும் நடுவில் நதியாக பாய்ந்துக் கொண்டு இருந்தது. காண்பதற்கு மிக அழகான ரம்யமான காட்சியாக இருக்க இருவரும் தாங்கள் ஓடி வந்தக் காரணத்தை மறந்து இயற்கையின் மாய பிடியில் கண் இமைக்காது பொம்மைகள் ஆயினர்.
வைஷ்ணவி அவ்வளவு நேரம் அவனிடம் சண்டை இட்டு இருந்ததை மறந்து அப்படியே பார்த்துக் கொண்டு நின்றாள். முதலில் அசோக் தான் வைஷ்ணவியிடம் பேசினான்.
“இயற்கை எவ்வளவு பெரிய மாமருந்து தெரியுமா வைஷூ?”
இயற்கையின் அழகு வைஷ்ணவியின் மொழியை மௌனம் ஆக்கியிருந்தது.
“நிஜமாவே மனசுக்கு வலிக்குது! ரொம்ப ரொம்ப வலிக்குது! இந்த மனசுல தாங்க முடியாத ஒரு வலி இருக்கும்போது யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு, யாருமே தெரியாத ஒரு இடத்துக்கு, ஒரே ஒரு பயணம் நிம்மதியா போயிட்டு வர்றது எவ்வளவு பெரிய மருந்து தெரியுமா? அது எல்லா வலிகளுக்கும் மாமருந்து! இயற்கை எனும் மாமருந்து!”
அவன் சொல்ல வைஷ்ணவி கண்களில் கண்ணீர் மெலிதாக எட்டிப் பார்த்தது. அசோக் மௌனமாக இருந்தான். அவளது அலைபேசி சிணுங்கிக் கொண்டே இருந்தது. ஏனோ அவள் அதை எடுக்கவில்லை அவள் இந்த நான்கு ஐந்து நாட்களில் யாரிடமும் பேசவில்லை. அவளுக்கு அதிகம் அழைப்பே வரவில்லை. இரண்டு மூன்று முறை ஷெரீன் பேசியதாக நினைவு. அவன் கூட இடையில் தன் நண்பர்களுடனும் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவள் பேசவில்லை. அசோக் அமைதியாக நிற்க வைஷ்ணவி பேசினாள்.
“எல்லா வலிகளுக்கும் மருந்து இருக்குனு நம்பறீயா அசோக்?”
அந்த கேள்வியில் அசோக் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான். சற்றுமுன் சிறுபிள்ளை போல் தன்னிடம் சண்டையிட்டு அடிக்க ஓடி வந்தவள் அவனிடம் கேட்கிற முதல் முதிர்ச்சியான கேள்வி. அவன் திகைப்பைக் கூட்ட வைஷ்ணவி மீண்டும் பேசினாள்.
“என்னோட வலிகளுக்கு எல்லாமே இயற்கை தான் மருந்துன்னா காலம் முழுக்க இந்த இயற்கையை ரசிச்சிட்டு வாழ்ந்திடலாம் ஆனா இது நிரந்தரமா?”
வைஷ்ணவி மீண்டும் கேள்வி எழுப்ப அசோக் அவளை கூர்மையாக நோக்கினான். காதல் தோல்வியில் இவ்வளவு துவண்டுப் போயிருப்பாளா இல்லை அதுவல்லாது இவளுக்கு வேறு வலி இருக்கக்கூடுமா அவன் யோசித்து இருக்க கேபிரியேல் அடலின் தம்பதியர் அவ்விடம் வந்திருந்தனர். பேச்சு அப்படியே நின்று போனது.
அதன் பின் அனைவரும் சேர்ந்து செல்ல அங்கொரு கடையில் சீன பாரம்பரிய உடைகள் வாடகைக்கு விடப்பட்டு சுற்றுலா பயணிகள் அதை உடுத்தி அருவி நீர் விழும் பிண்ணணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அசோக் வைஷ்ணவி பார்க்க அடலின் காப்ரியல் தம்பதியர் சீன பாரம்பரிய உடைகளில் மாறியிருந்தனர். வைஷ்ணவியும் சீன பாரம்பரிய உடையில் சற்று நேரத்தில் உடைமாற்றி வந்தாள். அவளுக்கு நடக்கவும் தெரியவில்லை அந்த ஆடையை கட்டிக்கொண்டு அவள் அங்கும் இங்கும் நடக்கத் தடுமாறி நிற்க அசோக் அவளது கைகள் பிடித்து நிறுத்தினான்.
“ஏ சீனி பட்டாசு உனக்கு ஜீன்ஸ் பேண்ட் போட்டாவே தடுக்கி விடும் இதில நீளமான துணி எல்லாம் போட்டு உன்னால் நடக்க முடியுமா? பேசாம நின்னு ஒரே ஒரு போட்டோ தான்”
“உனக்கு என்ன சும்மா ஒரு டிரஸ் தான் மாட்டிவிட்டு இருக்காங்க. இங்க பார்த்தியா? தலையில என்னமோ தொங்குது! இது என்னமோ தடுக்கி தரையை கூட்டுது! இது எல்லாம் சேர்த்து நேரா நிக்க வேண்டாமா?”
வைஷ்ணவி மேலும் சண்டையிட அசோக் தலையை ஆட்டிப் பேசினான்.
“இப்ப இந்த போட்டோ வேணும்னு உன்னை யாரு அடம்பிடிக்கச் சொன்னா?”
“இங்க வந்திருக்கறதுக்குஒரு மெமரி வேண்டாமா மக்கு?” வைஷ்ணவி சொல்ல
“யாரு?! நான் மக்கு!” அசோக் எகிறினான்.
இருவரும் பேசிக்கொண்டே இருக்க இரு புகைப்படங்கள் அவர்கள் இருவரையும் சேர்த்து எடுத்து விட்டான் அந்த புகைப்படக் கலைஞன். அவன் அவர்களைத் தம்பதியர் என்று நினைத்திருக்க கூடும். அவன் சேர்த்து எடுத்த புகைப்படத்தை தர அந்த சீன இளைஞரிடம் சண்டைக்கு சென்றாள் வைஷ்ணவி. அவளை இழுத்து பிடித்து நிறுத்தினான் அசோக்.
“ஏ சீனிப் பட்டாசு! பேசாம வா!”
அதன் பின் அவர்கள் அனைவரும் இணைந்து சுற்றிப் பார்த்து மலையுச்சியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு வந்தனர். மிக அதிக வாடகையில் அந்த அறைகளை வாடகைக்கு எடுத்து இருந்தனர். ஒரு நாள் வாடகை 4000 யுவான் ஆக இருந்தது. அது ஏன் அவ்வளவு அதிகம் என்பது அன்றிரவு வைஷ்ணவிக்குப் புரிந்தது. அசோக் சொன்னது போல் வங்சியான் பள்ளத்தாக்கு இரவில் செயற்கை ஒளியில் ஜொலித்தது. நீலம் சிகப்பு ஒளியில் பிரமிப்பை ஏற்படுத்தியது கீழிருந்த வீடுகளில் ஜொலித்த விளக்குகளின் அழகு.
அவர்கள் இருவரும் ஒரு அறையில் தங்கியிருந்தனர். இம்முறை இரண்டு அறைகள் கொண்ட வீடு எல்லாம் எடுக்க முடியாது ஒரே அறை தான். அதில் இருவருமே தங்கி இருக்க வேண்டும். வைஷ்ணவி அந்த ஐந்து நாளில் அசோக்கை பற்றிய அவளது மதிப்பீடு வெகுவாக மாறியிருந்தது. அசோக் சிறிது நேரத்தில் அறையின் குறுக்கே ஒரு மூங்கில் தடுப்பினை ஏற்படுத்தி அவனுக்கென்று தனியறையும் அவளுக்கென்று தனி அறையும் ஏற்பாடு செய்திருந்தான். அதனால் தான் அவன் மேலான அவளது நம்பிக்கை அளப்பரிய வகையில் அதிகரித்திருந்தது.
தான் கேட்கும் முன்னே தன் மனதை அறிந்து அழகாய் தன்னை தவிர்த்துக் கொள்வான். இரவு இருவரும் வெளியே பால்கனியில் நிற்க நட்சத்திரங்கள் மின்மினியாக மின்னிக் கொண்டிருந்தது. எவ்வளவு தான் இவர்கள் செயற்கையாக மின்னும் ஒளி வைத்து அந்த இடத்தை ஜொலிக்க வைத்தாலும் அவையெல்லாம் என் கால்தூசிக்கு சமம் ஆகுமா என்று எழுந்து நின்றது இயற்கையின் சுடர்கள். நினைத்துப் பாருங்களேன்! ஒரு பெரிய மலையின் விளிம்பில் தொங்கும் அழகான வீடு அதன் பால்கனியில் நின்று நிலவையும் விண்மீன்களையும் வானவேடிக்கை காட்டும் எரிக் கற்களையும் ரசித்து நிற்பது அதிமுக்கியமாக ஜொலிக்கும் நட்சத்திரங்களை எண்ணி எண்ணி எண்ணி எண்ணி முடியாது தோற்று நிற்பது பூட்டிய இதயத்தை திறக்கும் சாவியல்லவா?! அது திறந்தது! அவளது இதயம் மொழியானது! அவளது கண்களில் இயற்கை மாமருந்தாக மாற அவளது இதழ்கள் வலிகளைப் பகிர்ந்தது.
“அசோக் நீ எப்பவுமே இப்படி தானா? வாழ்க்கையை ரொம்ப ஈசியா எடுத்துக்கற மனநிலைல தான் இருப்பியா?”
வைஷ்ணவியின் கேள்விக்கு நட்சத்திரங்களை எண்ணியப்படியே பதிலளித்தான் அசோக்.
“ஆமா வருத்தமோ கோபமோ எதையும் மாத்திடப் போறதில்ல! நான் எப்பவுமே என்னோட பழைய நினைவுகளை வைச்சு புதிய நாளை அணுக மாட்டேன் ரொம்ப சிம்பிள்”
அசோக் சொல்ல வைஷ்ணவி பெருமூச்சுடன் நிலவை விட்டு கண்கள் அகலாது பேசினாள்.
“நான் அப்படி இல்லை அசோக்! எனக்கு எப்பவுமே முதலாவதாக இருக்கணும்! எதாவது என்னால முடியாது னு சொன்னா என்னால ஏத்துக்க முடியாது ஏன் இந்த பயணம் கூட அப்படித் தான்! என்கூட பழகி இருந்தா உனக்கு தெரிஞ்சிருக்கும். நான் ஏன் இப்படி இருக்கேன் னு தெரியுமா?!”
அவள் பேச அசோக் மௌனமாக அவள் சொல்வதைக் கேட்டு மட்டுமே நின்றிருந்தான். வைஷ்ணவி பேசினாள்.
“எல்லாரும் போல் என் அப்பா தான் எனக்கு சூப்பர் ஹீரோ. என் அப்பா எனக்கு நினைவு தெரிஞ்சு இப்ப வரைக்கும் என் மேல பாசத்தை பொழிகிற அப்பா. ஆனா எனக்கு பத்து வயசிருக்கிறப் போது எங்க ஆத்தா ஒரு சண்டையில உண்மையைப் பேசறேனு வார்த்தைகளைக் கொட்டிருச்சு. பிறந்த ஒன்னும் பொட்டையா போச்சுனு என் அப்பா என்ன பாக்கவே வரலையாம் மூணு மாசம் னு சொன்னாங்க. அதிலயும் அவரோட தம்பிக்கு மகன் பிறந்து நான் பொண்ணா பிறந்ததில் என் அப்பாவுக்கு வருத்தம் னு சொல்லுச்சு. என் அப்பாவைப் பத்தின பிம்பத்தில விழுந்த முதல் விரிசல் என்னை ரொம்பவே உடைச்சது. என் அம்மா மூணு மாசம் தனியாவே இருந்து இருக்காங்க இதையும் எங்க ஆத்தா எனக்கு சொல்லிடுச்சு. அப்ப எனக்கு உண்டான வலி போகவே இல்லை. அதில் இருந்து உங்க கண்ணுக்கு நான் ஒரு பொண்ணுன்ற விஷயத்துல கீழா தெரிஞ்சா எல்லாத்தையும் நான் பெஸ்ட் ஆ தான் இருப்பேன்னு முயற்சி பண்ணற எல்லாத்தையும் சாதிச்சேன்! படிப்புல விளையாட்டுல எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்கணும் அவர் தம்பி மகன் என்ன அவர் ஊர் சாதி சனத்திலேயே என்னை மாதிரி பெஸ்ட் ஆ ஒருத்தர் இருக்கக் கூடாதுன்ற உயரத்துக்கு போனேன்! என் அப்பாவுக்கு நான் பெரிய கிஃப்ட் னு புரிய வைக்கணும்னு அதை செஞ்சேன்! ஆனா இப்ப எல்லாமே வெறும் அபத்தமா இருக்கு! ஒருத்தன் வந்து உன் கூட இருக்கிறதே ரொம்ப கஷ்டம் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டான். காதல்னு அவனே வந்தான். இப்ப நீ எல்லாத்திலயும் பெஸ்ட்டா இருக்கிறது தான் பிரச்சினை னு சொல்லிட்டு போறான். அப்பாவுக்காக எல்லாத்திலயும் பெஸ்ட் , இப்ப பெஸ்ட்டா இருக்கிறது பிரச்சினை னு காதலன் சொல்லிட்டு போறான். யாருக்காவோ வாழ்ற வாழ்க்கை எவ்வளவு கேவலமான வாழ்க்கை இல்ல! இவங்களுக்காக அவங்களுக்காக வாழ்ந்து ஓடி எனக்காக நான் வாழவே இல்லை. எனக்காக என் வாழ்நாள் ல நான் வாழ்ந்தது இந்த அஞ்சு நாள் தான் தோணுது அசோக்!”
வைஷ்ணவி சொல்லி முடிக்க அசோக் சற்று நேரம் அவளையேப் பார்த்திருந்தான். அவள் வாழ்வின் மிகப்பெரிய வலியை தன்னுடன் பகிர்ந்துக் கொள்கிறாள் என்பதை அறிந்து அவளை அணைத்து தோள் மீது தலை சாய்த்து நெற்றியில் முத்தமிட்டு ஆற்றுப்படுத்த தோன்றிய மனதை அடக்கி பேசாது மௌனமாக நின்றான்.

கவிதை
உயிர் கலக்கும் காதல்
ஒரு நொடியின் பின்னத்தில்
நிகழும் அதிசயமடி!
அது பூக்கும் நொடி முதலே என்
உலகமே உன் பெயரில் விடிகிறதடி!
error: Content is protected !!