Skip to content
Post Views: 9,609
காதல் – இன்று
ஆட்டினை ஓட்டி சென்ற வெண்ணிலா, அவள் பக்கத்து வீட்டின் வேலிப்படலைத் திறந்து கொண்டு உள்ளே போய், அங்கிருந்த வேப்ப மரத்தில் அதைக் கட்டியபடி, வீட்டின் உள்ளே நோக்கி குரல் கொடுத்தாள்.
“மலரக்கா..”
“ஓவ்..” என்றபடியே இடுப்பைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள் நிறைமாத கர்ப்பிணியான மலர்!
Advertisement
“இந்தா பாரு. மணிய நான் ஓட்டிட்டு வந்து கட்டிப் போட்டுட்டேன், நல்ல டைட்டாதான் கட்டியிருக்கேன், இனிமே அவுந்துக்காது.”
“ரொம்ப தாங்க்ஸ் வெண்ணிலா, நீ மட்டும் இல்ல, இது போய் ஊர் வம்பை ஒண்ணா இழுத்துட்டு வந்திருக்கும்!” என்றாள் மலர்.
“அது என்னமோ சரிதாங்க்கா, இது எங்க இருந்துச்சு தெரியுமா?
Advertisement
அந்த ராமசாமி காட்டுல, அதுவும் அங்க இப்ப தான் நாத்து விட்டிருக்காங்க.
Advertisement
அங்க போகப் பார்த்துச்சு, நல்ல வேளையா நான் கரெக்டா போயிட்டேன்!
சரி நான் வரேன்க்கா.” என்றபடியே வெளியே வந்தவளுக்கு பழனி தாத்தாவின் காசு நினைவு வர, நேரே அவர் மனைவியிடம் போய் அந்த நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தாள்.
“நல்ல வேளை ஆயி, நீ அங்க இருந்த, இல்லன்னா இந்தக்கிழவன் அந்த காசுக்கும் தண்ணியடிச்சுட்டு வந்திருப்பான்.” என்றாள் அந்த பாட்டி.
Advertisement
“சரி அப்பாயி அம்மா தேடும் நான் வரேன்” என்று சொல்லி விட்டு அவள் வீட்டினுள் நுழைந்தாள் வெண்ணிலா.
அந்த பழையக்கால கிராமத்து வீட்டின் முன்புற திண்ணையில் ஒரு சிறு பெட்டிக்கடை ஒன்று இருந்தது.
சோப்பு, ஷாம்பூ, பொருட்களுடன் கொஞ்சம் சிறிய சில்லறை அளவில் பாக்கெட் செய்யப்பட்ட மளிகைப் பொருட்களும்.
அப்புறம் கொஞ்சம் காய்கறிகள் தனித்தனி ட்ரேக்களில்.
அந்த கடையில் உட்கார்ந்து கொண்டு யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார் அவளின் அப்பா “அஜித்” அருண்!
தீவிர அஜித் ரசிகர்!
அதனால் தான் அவரின் முழுப் பெயர் அருணாச்சலம் என்பதை சுருக்கி, அருண் என்று வைத்துக்கொண்டவர், அடைமொழியாக அஜித்தையும் பேரின் முன் இணைத்துக் கொண்டார்.
வயது ஐம்பதைத் தாண்டி விட்டது!
இந்த மாதிரி ஆட்கள், முதலில் அவர்கள் குடும்பத்தை கவனிக்கட்டும் என்றுதான் அஜித் தன் ரசிகர்மன்றத்தை எல்லாம் கலைத்து விட்டார் என்று சொல்வார்கள்!
ஆனால் இவர் மாதிரி ஆட்கள் கேட்டால் தானே!
இப்போது கூட விடாமுயற்சி படத்திற்கு பர்ஸ்ட் டே பார்ஸ்ட் ஷோ பார்க்க முடியவில்லை என்று தான் அவருக்கு ஒரே வருத்தம்!
அதன் டிக்கெட் வாங்கி வைக்க சொல்லி தான் யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தார்.
அருண் வசந்தா தம்பதிக்கு மொத்தம் மூன்று பெண்கள்!
மூத்தவள் மதி என்கிற வான்மதி!
அஜீத்தின் வான்மதி படம் வந்தபோது பிறந்தவள்!
அடுத்தவள் வளர்மதி!
இவள் பிறக்கும் போது வசந்தாவிற்கு பிரசவம் கொஞ்சம் சிக்கலாகி விட்டது.
அப்போது அவளுக்கு ரொம்பவும் உதவிகள் புரிந்த விஹெச்என்(கிராம செவிலியர்) வளர்மதியின் பெயரையே வைத்து விட்டார்கள்.
அடுத்தவள் தாம் நம் நாயகி வெண்மதி.
மூத்தவளின் பெயரை மதி என்று சுருக்கியாயிற்று. அடுத்தவளின் பெயரை வளர் என்றும்!
இப்போது வெண்மதியை எப்படி கூப்பிடுவது!
அதனால் அவளைப் பள்ளியில் சேர்க்கும் போதே வெண்ணிலா என்று பெயர் கொடுத்து விட்டார் வசந்தா!
வான்மதியும் வளர்மதியும் இரண்டு இரண்டு ஆண்டுகள் இடைவெளியில்!
ஆனால் வளர்மதிக்கும் வெண்ணிலாவுக்கும் கொஞ்சம் இடைவெளி அதிகம்!
காரணம் அப்போது இடையில் இரண்டு வருடம் அருண் பஹ்ரைனில் வேலைப் பார்த்தார்.
இரண்டு பெண் குழந்தைகள் ஆகி விட்டது, காசு சேர்த்தே ஆக வேண்டும் என்று அவரை வலுக்கட்டாயமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார் வசந்தா.
அப்போது அவர் அனுப்பிய பணத்தில் வசந்தா சிக்கனமாக இருந்து சேர்த்து வைத்து வாங்கிய இரண்டு ஏக்கர் நிலத்தில்தான் இன்று விச்சிப்பூ, சாமந்திபூ என்றும் செடிகள் நட்டு, மலர் விவசாயம் பண்ணுவதால் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது!
அருண் கொஞ்சம் சோம்பேறி. வேலை செய்தால் வேர்த்து விடும் என்று நினைக்கும் ரகம்!
அவர்களுக்கு கல்யாணம் பேசும் போது அவர் டைலர் கடை வைத்து இருந்தார். ஆண்கள் தையலகம்!
சர்ட் பேன்ட் மட்டுமே தைப்பார் அவர்.
பெண்களின் ஜாக்கெட் கூட தைக்க மாட்டார்.
பெண்கள் விஷயத்தில் சுத்த ராமன்!
வசந்தாவைத் தவிர வேறு எந்த பெண்ணையும் அவர் மனதால் கூட நினைத்ததில்லை!
அக்மார்க் ஏகப்பத்தினி விரதன்!
இந்த ஒரு நல்ல க்வாலிட்டியோடு, கூடவே கொஞ்சம் இரக்க குணமும் தாராள குணமும் உண்டு!
அது அளவு மீறும் போதெல்லாம் வசந்தாதான் கண்ரோல் செய்ய வேண்டியிருக்கும்.
இவர் இப்படி என்றால், வசந்தா கடும் உழைப்பாளி!
ரொம்ப திறமையான, அதே சமயம் நல்லகுணமும் உள்ளவர்.
யாரைப் பார்த்தும் பொறாமைப்படுவதோ, இல்லை வீண் வம்பு பேசுவதோ அவர் ஒருநாளும் செய்ய மாட்டார்.
அவர் பெண்களை நல்லவிதமாக வளர்த்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்து விடவேண்டும் என்பதே அவரின் ஒரே குறிக்கோள்.
ஒரு ஆண்பிள்ளை இருந்திருந்தால் கொஞ்சம் பொறுப்பினை பகிர்ந்து கொண்டிருப்பான் என்று அவருக்கு ஒரு ஆசையும் இருந்தது.
அதனால் தான் வளர்மதிக்கு பிறகு அவர் ஒரு குழந்தைக்கு தாயானார்.
ஆனால் அதுவும் பெண்ணாகி விட்டது. மேலும் மூன்று டெலிவரியும் சிசேரியன் என்பதால்,
இனி வயிற்றில் கிழிப்பதற்கு இடமே இல்லை என்று வெண்ணிலா பிறந்தவுடனேயே அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசனும் செய்து விட்டார்கள்.
வெண்ணிலா பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரு மகன் போல தான் அவருக்கு குடும்பம் நடத்த வசந்தாவுக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்!
இந்த வெட்டி ஆபிசர் அப்பாவை வைத்துக் கொண்டு அம்மா படும்பாட்டை வெண்ணிலா நன்கு அறிவாள்.
இதைத் தூக்கி அதில் போட்டு, அதைத் தூக்கி இதில் போட்டு என்று விவசாயக் கடன், பயிர்க்கடன், சுயஉதவிக் குழு லோன் என்று போட்டுப் புரட்டி தான், அவள் முதல் இரண்டு பெண்களுக்கு கல்யாணம் செய்ததும், வெண்ணிலாவை எம்சிஏ வரை படிக்க வைத்ததும்.
இதில் வசந்தாவிற்கு கூடவே துணை நிற்கும் இன்னும் ஒரு உறவும் உண்டு!
அது அன்பு! அன்பரசன்!
அருணின் ஒன்று விட்ட அக்கா தனத்தின் மகன்தான் அன்பு.
கணவனை இழந்து விட்ட தனத்திற்கு ஆரம்பத்தில் துணை நின்றார்கள் அருணும் வசந்தாவும்.
இப்போது அன்பு அவனின் அத்தைக்கு துணை நிற்கிறான்.
“அண்ணே, நீ மூணு பொண்ணு வச்சுருக்க, என் பையனுக்கு நீ தான் பெண் கொடுக்கணும், நீயே கொடுக்கலன்னா, நான் யார்கிட்ட பொண்ணு கேட்பேன்?” என்பார் தனம் ஆதியில் இருந்தே!
காரணம், அன்புக்கு இருந்த ஒரு குறை! ஆள் பார்ப்பதற்கு நன்கு வளர்ந்த வாலிபனாக இருந்தாலும் குரலில் மட்டும் ஒரு குறை!
அவன் குரல் பெண் குரல் போல மெல்லிய குரலாக இருக்கும். போனில் பேசினால் பெண் என்று தான் நினைத்துக் கொள்வார்கள்.
ஆனால் வசந்தாவோ இல்லை அவரது பெண்களோ ஒரு நாளும் இதை குறையாகவே நினைக்கவில்லை, யாரையும் கிண்டல் பண்ணவும் விட மாட்டார்கள்!
அன்பு. பெயருக்கு ஏற்றார்போல் அன்பு அதிகம் கொண்டவன்.
தினமும் அதிகாலை வேளையில் அவன் வசந்தாவுடனும் உதவி ஆட்களுடனும் சென்று பூக்களை பறித்து எடுத்துசென்று ஹோல்சேல் மார்கெட்டில் போட்டுவிட்டு,
பின் அங்கிருந்து வரும்போது வசந்தாவின் கடைக்குத் தேவையான மளிகைப் பொருட்களை மொத்த விலை கடையில் வாங்கிக் கொண்டு அப்படியே கடையில் விற்பதற்கு காய்கறிகளையும் வாங்கிவந்து விடுவான் அவன் குட்டியானை வண்டியில் போய்!
ஏழு மணிக்கெல்லாம் திரும்பிவிடுபவன், பின் அவசரமாக குளித்துவிட்டு, வெண்ணிலா வேலை செய்யும் பள்ளியில் ஸ்கூல் வேன் டிரைவர் வேலைக்கு சென்றுவிடுவான்.
பின் பகலில் அவனது சொந்த வயல் வேலைகள் இருக்கும் அவனுக்கு. பின் முற்பகல் நேரம் மீண்டும் பள்ளி வேன் ஓட்ட சென்று விடுவான்.
பள்ளி விடுமுறை நாட்களில் எங்காவது ஆக்டிங் டிரைவராக போய் விடுவான். அவனும் கடும் உழைப்பாளி!
வசந்தா, இவன் காய்கறி லோட் ஏற்றி வருவதற்குள் அவர்கள் வீட்டில் இருக்கும் இரண்டு கறவை மாடுகளில் பாலைக் கறந்து டிவிஎஸ் பிப்டியில் வைத்துக் கொண்டு வாடிக்கைக்காரர்களுக்கு பால் சப்ளை செய்யப் போய் விடுவார்.!
அதற்குள் வெண்ணிலா எழுந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு காலைக்கும் மதியத்திற்கு அவளுக்கு மட்டும் ஏதாவது சமைத்து எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பி விடுவாள்.
பின் வசந்தா வந்து மீதி வேலைகளைப் பார்த்து மதிய சமையலைப் பார்ப்பார்.
அது வரை கடையில் ஒரு ஆளாக உட்கார்ந்து இருப்பது மட்டுமே அருணின் வேலை!
இப்போது எல்லாம் பெரும்பான்மை ஆண்கள் ரெடிமேட் சர்ட் பாண்ட்களே அணிவதால் அவருக்கு டைலர் வேலை எல்லாம் இருப்பதில்லை.
ஸ்கூல் ஆரம்பிக்கும் ஜூன் மாதம் மட்டும் ஸ்கூல் யுனிபார்ம் தைக்கும் வேலைகள் இருக்கும். மத்தபடி நாள் முழுவதும் வெட்டி ஆபிசர் தான்!
அன்பு தான் வசந்தாவிற்கு பெறாத மகன் போல இருந்து சப்போர்ட் செய்பவன்.
முதலில் அவனுக்கு வான்மதியை தான் திருமணம் செய்ய இருந்தார்கள்.
அப்போது பார்த்து, அவளை சொந்தத்தில் ஒரு பையனுக்கு மிகவும் பிடித்துப் போய், கட்டினால் அவளைத் தான் கட்டுவேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட, அவர்கள் பெண் கேட்டு வந்துவிட்டார்கள்.
முதலில் தயங்கிய வசந்தாவையும் அருணையும் சமாதானம் செய்து பெண் கொடுக்க வைத்ததே அன்பு தான்!
“மாமா, சொல்றத புரிஞ்சிக்கோங்க. என்னடா இவன் இப்படியெல்லாம் கணக்கு போடுறானேன்னு நினைக்காதீங்க.
இப்ப எனக்கு வான்மதியை கட்டி வச்சா, அப்புறம் இன்னும் ரெண்டு பொண்ணுங்களுக்கு நீங்க சீர் செஞ்சி கல்யாணம் செய்ய வேண்டியிருக்கும்.
இதுவே இந்த சம்பந்தம் அவங்களே ஆசைப்பட்டு வந்து கேக்குறதால, பெரிசா ஒண்ணும் செய்ய வேண்டியிருக்காது.
அப்புறம், என் கல்யாணத்திற்கு அப்புறம் இன்னும் ஒரு பொண்ணுக்கு மட்டும் தான் நீங்க சீர் செய்து வைக்கிற மாதிரி இருக்கும், அதனால ப்ராக்டிக்கலா யோசிச்சு தான் சொல்றேன், இதுக்கு ஒத்துக்கோங்க” என்றான் அன்பு!
அவர்களுக்காக ரொம்பவும் யோசித்து!
ஆனால் பெண் கேட்டு வந்த அந்த சுசிலா, இவனை விட கில்லாடி!
அவனின் கணக்கிடலை மொத்தமாக தோல்வியடைய செய்து வசந்தாவைக் கடனாளி ஆக்கியவள்!
வான்மதி கல்யாணம் இப்படி என்றால், அடுத்து வளர்மதி கல்யாணத்தில் சொதப்பியது சாட்சாத் அவர்கள் அப்பா அருண் தான்!
இத்தனைக்கும் இதுவும் லவ் மேரேஜ் தான்.
வளர்மதி, நட்ராஜை தான் கல்யாணம் செய்வேன், இல்லையென்றால், உயிரை விடவும் தயார் என்று முரண்டுப் பிடித்து வசந்தாவை சம்மதிக்க வைத்தாள்.
அதன் பின்புலத்தில் அம்மா பாவம், என்ற எண்ணமே முன்னில் இருந்தது.
“அவன் அரசியலில் இருக்கிறான், வட்டமோ சதுரமோ ஏதோ கட்சிப் பொறுப்பில் இருக்கிறான், யோசிம்மா,” என்று அவள் பலவாறு எடுத்து சொல்லியபோது, அவள் சிம்பிளாக ஒன்றே ஒன்று சொன்னாள்.
“அம்மா, எனக்கு புருசனா வர்றவன் திருட்டுப் பயலா இருந்தாலும் பரவாயில்ல, ஆனா அட்லீஸ்ட் அவன் குடும்பத்தை மட்டுமாவது நல்லபடியா, அவன் பொண்டாட்டி பிள்ளைங்கள நல்லா பார்த்துகிறவனா இருந்தா போதும்.
போதும்மா, நம்ம அப்பா மாதிரி நல்லவனா மட்டும் இருந்துட்டு பிழைக்கத் தெரியாதவன கட்டிக்கிட்டு காலம் பூரா கஷ்டப்படுறத விட இது மேல்!”
வசந்தா அப்படியே பேச்சிழந்து தான் போய் விட்டார்.
அவள் கணவனின் நடத்தை, இந்த பெண்களை இவ்வளவு தூரம் பாதித்து இருக்கிறது!
ஆனால் வளர் சொன்னது போல தான் அருணும் நடந்து கொண்டு விட்டார்!
வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்காமல், சபையில் வைத்து வான்மதிக்கு செய்த எல்லாவற்றையும் வளர்மதிக்கும் செய்வோம் என்று வாக்குக் கொடுத்து விட்டார், பெரிய மகாராஜா போல!
கடுப்பானார்கள் பெண்கள் மூவரும்!
குறிப்பாக, வளர்மதி!
அம்மா கஷ்டப்படக் கூடாது என்று தான் அவள் தன் பின்னால் சுற்றிய நட்ராஜிற்கு ஓகே சொன்னதும், கல்யாணம் வரை கொண்டு வந்ததும்.
மூவரில் வளர்மதி தான் நல்ல நிறம்! அவள் அப்பா அஜித் அருணைப் போல!
அந்த சிவந்த நிறத்தால் ஈர்க்கப்பட்டு வந்து ப்ரபோஸ் செய்தவன் தான் நட்ராஜ்!
மூத்தவள் அப்படியே அம்மாவின் களையான முகத்தைக் கொண்டிருந்தாலும் அவள் வசந்தாவை போல் கொஞ்சம் கருப்பு!
ஆனால் வெண்ணிலா அம்மாவின் முகக் களையுடன் அப்பாவின் நிறத்தையும் கொண்டு பேரழகோடு இருந்தாள்.
கூடவே சரஸ்வதியின் அருளும் அவளுக்கு நிறையவே இருந்தது.
அவள் காலேஜில் படிக்கும் போது அவளின் பேராசிரியர்கள் கூட ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள்.
“எப்படி இந்த பெண், எந்த படித்த பின்புலமும் இல்லாத வீட்டில் இருந்து வந்து விட்டு, ஆங்கிலத்தில் இந்த போடு போடுகிறாள்!
இத்தனைக்கும் படித்தது என்னவோ அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில்!” என்று அவர்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.
காரணம் வெண்ணிலா படித்த அரசுப் பள்ளியில் அந்த அளவு தரம் இருந்தது!
பள்ளியின் ஹெச்செம், அவரின் மாணவர்களுக்கு நல்ல ஆங்கிலத்தை தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கு இணையாக, அதுவும் அமெரிக்க ஆக்சென்ட் வரை பயிற்றுவித்திருந்தார்!
அருண் மட்டும் கொஞ்சம் கொள்கைகளை தளர்த்திக் கொண்டு விட்டால் போதும் அவளின் திறமைகளுக்கு வானமே எல்லை!
இதை நன்கு உணர்ந்தவன் அன்பு!
அவனுக்கு, வெண்ணிலா தனக்கு மிகவும் அதிகம் என்றே சமீபகாலமாக தோன்றிக் கொண்டிருக்கிறது!
அவளின் கல்வித் தகுதி, திறமை, தன்னம்பிக்கை, உழைக்க அஞ்சாத குணம், எல்லோரிடமும் பாசமாக பழகும் சுபாவம் என்று நிறைய காரணங்கள்!
குறிப்பாக, அவளின் அக்காக்களின் கல்யாணத்திற்கு பணம் புரட்ட, அவள் அம்மா வசந்தாவோடு வெண்ணிலா போராடியதை அருகில் இருந்து பார்த்தவன் அவன்!
வளர்மதியின் கல்யாணத்தின் போது, விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் கூட பணத்திற்கு அவர்கள் பட்டப் பாட்டை அவன் நன்றாகவே அறிவான்.
அப்போது அவனால் கூட அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத கஷ்டசூழலில் இருந்தான்.
அப்போது தான் அவன் அம்மாவிற்கு கர்ப்பப்பை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, நிறைய ஆஸ்பத்திரி செலவால் அவனே ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயம் அது!
இதோ, இப்போது கூட வசந்தாவிற்கு அந்த கடன்கள் அடைந்தபாடில்லை!
கூடவே கொசுறாக இப்போது வான்மதி வகையில் இன்னொரு பிரச்சினை வேறு!
ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் பெண்ணும்!
error: Content is protected !!