வெந்து தணிந்தது காதல் – 13
கொதித்துப் போயிருந்தாள் நவிரா!
என்ன தான் அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை வெற்றிகரமாகவே அவள் நடத்தி முடித்திருந்தாலும், அதில் அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் நவிராவை கொதி நிலைக்கு இட்டுச் சென்றிருந்தன.
“வணக்கம்..!” கூறிவிட்டு எழுந்து வேகமாக கட்சி அலுவலகத்திற்குள் வந்தாள் அவள். அவள் பின்னேயே தொடர்ந்து கொண்டு சூரியவர்மன் வந்தான்.
Advertisement
“மேடம், ஒரு நிமிஷம்..” என்று அவன் அழைக்க.. அப்படியே நின்றவள், திரும்பி கூட பார்க்கவில்லை.
“என்ன ஆச்சு?” என்று அவன் சாதாரணமாகவே கேட்க, இவனுக்கு எப்படி இதெல்லாம் சாதாரணமாக இருக்கிறது என்பதில் மேலும் ஆத்திரம் வந்தது அவளுக்கு.
“எவ்வளவு தைரியம் இருந்தா அந்த ரிப்போர்ட்டர் என்கிட்டயே இப்படி பேசுவான்? கேள்வி கேட்கிற உரிமை இருக்குன்னா, அதுக்காக என்ன வேணும்னாலும் கேட்கலாமா?” என்று அவள் ஆத்திரமாய் பொறிய, சூரியவர்மனோ அதை பெரிதாகவெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை.
Advertisement
ரொம்பவும் சாதாரணமாகவே.. “அது தான் எல்லா கேள்விக்கும் நீங்க பட்டு பட்டுன்னு பதில் கொடுத்து, அந்த ரிப்போர்ட்டரோட மூக்கை உடைச்சுட்டீங்களே? அப்பறம் என்ன மேடம்?” என்று கேட்க, இன்னமும் கொதித்துக் கொண்டு வந்தது நவிராவுக்கு.
Advertisement
அவள் கோபத்தை உணர்ந்த சூரியவர்மனும்..
“இங்க பாருங்க மேடம், ரோட்ல ஏதோ நாய் குலைக்குதுன்னு விட்டுட்டு போவீங்களா.. அதை விட்டுட்டு இவங்கள எல்லாம் பெரிய ஆளுங்களா நினைச்சுட்டு, இவங்க பேசுறதெல்லாம் யோசிச்சு டென்ஷன் ஆகிட்டு இருக்கீங்க?” என்று கேட்க, அவனை திரும்பி நேராய் பார்த்தாள் அவள்.
அவள் பார்வையில் கோபம் இருந்தது!
Advertisement
ஆத்திரம் இருந்தது!
இவனுங்களை எல்லாம் கண்டபடி சுட்டுப் பொசுக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை இருந்தது!
அடங்காத ஆத்திரத்துடன்.. “ரோட்ல போற நாயா இருந்தாலும் சரி.., என் கால்ல கிடக்கிற நாயா இருந்தாலும் சரி.. என்னைப் பார்த்துக் குரைக்கக் கூடாது.
என்னை மட்டுமில்ல.. எந்தப் பொண்ணையும் பார்த்துக் குரைக்கக் கூடாது!” என்று குரலில் சீற்றத்துடன் அவள் கூற, இப்பொழுது சூர்யவர்மனுக்கு கோபம் வந்தது.
அது எப்படி இவள் எல்லா ஆண்களையும் நாய் என்று கூறுவாள்? என்று அவனது தாடை இறுகவும், அவனது கோபத்தைப் புரிந்து கொண்ட நவிரா..
“என்ன சூர்யவர்மன்? உங்களுக்கு எதுக்கு கோபம் வருது?!
குரைக்கற நாய்க்கு தான் கோபம் வரணும். பொண்ணுங்கள பத்தி தப்பா பேசுறவன் எல்லாருமே நாய் தான்.
‘கேரக்டர் அசாசினேஷன்’ அர்த்தம் தெரியுமா?
ஒருத்தங்க நடத்தைய கொலை செய்யறது .
ஒரு பொண்ணோட நடத்தைய தப்பா பேசறது கொலைக்கு சமம் சூரியவர்மன்!
உயிர எடுக்கறது மட்டும் தான் அசாசினேஷன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? இங்க ஒரு பொண்ணோட நடத்தைய, இத்தனைப் பேருக்கு முன்னாடி தப்பா பேசறதும் அசாஸினேஷன் தான்.
அதை சுத்தி இருக்கிற எல்லாருமே.. ஆம்பள, பொம்பளைன்னு எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? இதுல.. அவன் கேட்ட கேள்விக்கு நான் தைரியமா பதில் சொல்லி அவன் மூக்கை உடைச்சுட்டேன்னு பெருமையா வேற காலர தூக்கி விட்டுக்கணும்னு வெட்கமே இல்லாம வந்து சொல்லறீங்க?
இந்த மாதிரி ஒரு கேள்வியை ஒரு ஆம்பளைய பார்த்து கேட்டுடுவீங்களா நீங்க?
ஏன் நம்ம கட்சிக்கும் நிறைய ரிப்போர்ட்டர்ஸ் இருக்காங்கல்ல? நம்ம கட்சியை சேர்ந்த ரிப்போர்ட்டர்ஸ், ஷிவ்கிட்ட போய் இந்த கேள்விய கேட்பாங்களா?
ஏன்னா இங்க ஒரு ஆம்பளையோட நடத்தைய கேள்வி கேட்கிறதுங்கற விஷயமே கிடையாது. ஆனா ஒரு பொம்பளைய அடக்கணும்னா, அவ நடத்தைய பேசணும்!
அவ நடத்தைய கொலை பண்ணனும்!
அதுவும் தைரியமா எத்தனைப் பேர் முன்னாடியும் அந்தக் கொலையை செய்யலாம். அதுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.
ஆனா.. அந்தப் பொண்ணு தான் அதுக்கப்புறம் தலைல முக்காடு போட்டுட்டு வீட்ல ஒரு மூலைல ஒளிஞ்சி உட்காரணும்.
அதான் நான் திரும்பவும் சொல்றேன் சூர்யவர்மன், நாய் ரோட்ல இருந்தாலும் சரி.. என் வீட்ல இருந்தாலும் சரி.. வாய மூடிட்டு இருக்கணும்!” என்று அடக்க முடியாத பெரும் புயலாய் அவனைச் சுழற்றி அடித்துவிட்டு, விறு விறுவென்று அவள் உள்ளே செல்ல, சூர்யவர்மனுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
நவிரா பேசிய வார்த்தைகளில் தலைக்கேறிய கோபத்தில் தான் நின்றிருந்தான் சூரியவர்மன்.
அது எப்படி பொத்தாம் பொதுவாக எல்லா ஆண்களையும் நாய் என்பதா? என்ற கோபம் அவனுக்கு. ஆனால் இப்பொழுது அந்தக் கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் சமயம் அது அல்ல.
வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கட்சியின் தலைவியாக நவிராவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் இந்த உணவை, முன் நின்று கவனிக்கும் பொறுப்பு அவளது.
ஆனால் இப்பொழுது தயாளன் தான் அந்த பொறுப்பை ஏற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தான் செய்தது. ஆனால் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை அவர். கண்களால் மட்டும் சூர்யவர்மனை எரித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இத்தனையாய் ஆத்திரப்படும் தயாளன், ஏன் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக நவிராவின் தாளத்துக்கெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறார்? என்ன தான் சீறிக்கொண்டு தான் என்றாலும்.. அவரது இந்த அடிபணிதல் ஏன் என்ற இந்தக் கேள்விக்கு மட்டும் சூர்யவர்மனிடம் பதிலே இல்லை!
ஆனால் இந்தக் கேள்வியைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கவோ.. அல்லது நவிராவின் மீது கோபப்பட்டுக் கொண்டிருக்கவோ கூட அவனுக்கு இப்பொழுது நேரமில்லை.
இப்பொழுது நவிரா இங்கே வந்தாக வேண்டும்! அதுவும் இன்முகமாக!
அதை அவன் தான் செய்தாகவும் வேண்டும். கடுப்புடன் வந்த ஒரு பெருமூச்சை மற்றவர் அறியாது வெளியேற்றிவிட்டு, அவள் பின்னாலேயே லிஃப்ட்டில் ஏறினான் சூர்யவர்மன்.
அதற்குள் நவிரா அவளது அறையில், கோபத்துடன் அமர்ந்திருந்தாள்.
உள்ளே வந்தவனை, செக்கச்செவேல் என்று சிவந்திருந்த கருவிழிகளில் தெறிக்கும் ரௌத்திரத்துடன் அவள் ஏறிட்டுப் பார்க்க.. சூர்யவர்மனோ, அதற்கெல்லாம் சற்றும் தயங்கவில்லை.
மாறாக எடுத்ததுமே.. “மேடம்.. உங்க கோபத்தை எல்லாம் அந்த பக்கம் வச்சிட்டு, இப்போ நீங்க கீழே வரணும்.
ஏன்னா நம்ம சார்பா ப்ரெஸ் பீப்பிளுக்கு சாப்பாடு ஏற்பாடு செஞ்சிருக்கு. இந்த டைம்ல நீங்க இப்படி வந்து உட்கார்ந்து இருக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்ல!” என்று அவன் கூற, கண்களில் கோபம் அகலவில்லை அவளிடம்.
அது புரிந்தாலுமே.. “இது அரசியல் மேடம்! உங்களோட அமெரிக்க “பாப் உலகம்” கிடையாது.
யார் என்ன கேள்வி கேட்டாலும் அது எல்லாத்துக்கும் ஜஸ்ட், “நோ கமெண்ட்ஸ்!” அப்படின்னு சொல்லிட்டு தூக்கி எறிஞ்சிட்டு போக முடியாது இங்க..
அங்கயுமே உங்களுக்கு ப்ரெஸ்ஸை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரிஞ்சு இருக்குமே.. அதனால தான் இங்கயும் நீங்க இவ்ளோ ஈசியா அவங்கள ஹேண்டில் பண்ணீங்க.
ஆனா கொஞ்சம் உங்களோட பர்சனல் கோபத்தை எல்லாம் தள்ளி வச்சுட்டு.. ஒரு கட்சியோட தலைவி மாதிரி மெச்சூர்டா நடந்துக்கோங்க.” என்று அவன் கூறி முடிக்க, அவன் கூறிய இந்த வார்த்தைகளில் இன்னும் தான் கோபம் பிறந்தது நவிராவுக்கு.
“மெச்சூர்டாவா? நான் அப்படி என்ன அமெச்சூர்டா நடந்துட்டேன் சூர்யவர்மன்?” என்று அவள் எகிறிக் கொண்டு வர, சூர்யவர்மனோ..
“ஈஸி.. ஈஸி.. மேடம்!” என்று அவளை சமாதானப்படுத்தினான்.
“கேள்வி கேட்கிற நேரம் போக, மத்த நேரத்துல ப்ரஸ் பீப்பிள், நாம கொஞ்சம் ஃபிரண்ட்லியா இருக்கணும்னு எதிர்பாப்பாங்க.
அது இன்னொரன்ன வகையில நமக்கு ஹெல்ப்ஃபுல்லாவும் இருக்கும்.
அதாவது.. அடுத்த முறை அவங்க கேள்வி கேட்கும் போது, கொஞ்சம் பார்த்து கேட்பாங்க..” என்று அவன் கூற, கூர்மையாக அவனை ஏறிட்டவள்..
“அப்போ அவங்க என்ன பேசினாலும் சிரிச்சிட்டே போகணும்.. இல்ல?” என்று கேட்க, சூர்யவர்மனோ மறுப்பாய்த் தலையசைத்தான்.
“நான் உங்கள சிரிச்சிட்டே போகணும்னும் சொல்லல.. அவங்க கேட்ட கேள்விக்கு நீங்க சிரிச்சிட்டு போகவும் இல்ல.
ஆனா அந்தக் கேள்வி நேரம்.. அது கிரிக்கெட் விளையாடுற மாதிரி.
அப்போசிட் டீம் ரொம்ப கடுமையா பௌலிங் செஞ்சு உங்கள அவுட் பண்ண பார்த்தாங்கன்னா.. அவங்க போடுற பால்ல, நீங்க சிக்ஸ் அடிச்சீங்க.. அந்த கேம் முடிஞ்சுடுச்சுன்னா, அதுக்கப்பறம் சுமூகமா பழகறது தான், நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்!
இதெல்லாம் உங்களுக்கே ஏற்கனவே கண்டிப்பா தெரியும் மேடம். ஆனா நீங்க கொஞ்சம் எமோஷனலா இருக்கீங்க இப்போ. அதனால தான் இதை எல்லாம் ரொம்ப பர்சனலா எடுத்துக்கறீங்க..
ப்ளீஸ் எல்லா கோபத்தையும் ஓரமா வச்சுட்டு கொஞ்சம் இப்போ நீங்க கீழ வரணும். இல்லைனா, அதுவும் இதே ப்ரெஸ் பீப்பிளால வேற மாதிரி வெளில வரும்.
அது கட்சிக்கோ.. முக்கியமா, இப்போ தான் புதுசா இந்தக் கட்சிக்குத் தலைமை ஏத்துருக்கற உங்களுக்கோ நல்லது இல்ல..” என்று அவன் கூற.. அதிலிருந்த உண்மை சுட்டது அவளை!
ஆனாலும் உள்ளே கொதித்துக் கொண்டிருந்த குருதியின் தகிப்பை, ஆத்திரமாய் வந்த பெருமூச்சில் அடக்கமாட்டாமல் வெளியேற்றிவிட்டு, “சரி..” என்று தலையசைத்தாள் நவிரா.
அதில், “ஹப்பாடா..” என்று சற்று ஆசுவாசமடைந்தான் சூர்யவர்மன்.
இருவரும் லிஃப்ட்டில் தான் கீழே இறங்கினார்கள். அந்த லிஃப்ட்டிற்குள்ளும் இருவரிடையிலும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை.
இரண்டு தளங்களைத் தாண்டி கீழே செல்ல வேண்டும்.. மீண்டும் அந்த முகங்களையே பார்க்க வேண்டும்.. இன்முகத்துடன் விருந்துபசாரம் செய்ய வேண்டும்.. என்பதிலேயே கடுப்பாக வந்தது நவிராவுக்கு.
அந்தக் கடுப்பை வெளியே காட்டவும் முடியாமல்.. உள்ளுக்குள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாமல் அவள் திணறிக் கொண்டிருக்கையில், பெரும் சத்தத்துடன் லிஃப்ட் பாதியிலேயே நின்றது!
திடுக்கிட்டு அவள் பார்க்க.. சூர்யவர்மனும் சற்று அதிர்ந்து தான் போனான்.
‘என்ன ஆச்சு?’ என்று அவன் யோசிக்க.. நவிராவோ, “என்ன பிராப்ளம்?” என்று கேட்டாள்.
“தெரியல மேடம்.. இருங்க நான் எமர்ஜென்சிக்கு போன் பண்றேன்.” என்ற சூர்யவர்மன், லிஃப்ட்டிலேயே இருந்த போனில் தகவல் சொல்ல.. உடனே, ஃபயர் சர்வீஸில் இருந்தும், லிஃப்ட் ரிப்பேருக்கும் ஆட்கள் தருவிக்கப்பட்டனர்.
ஆனால் அதற்குள் இந்தச் செய்தியும் காட்டுத் தீயாக தமிழ்நாடு எங்கும் பரவியது!
“தமிழக மக்கள் கழகத்தின் தலைவர் நவிராவும்.. அதே கட்சியின் எம் பி சூரியவர்மனும் வந்த லிஃப்ட் பாதியிலேயே ரிப்பேர் ஆகி நின்றுவிட்டது. இருவரும் கடந்த ஒரு மணிநேரத்துக்கும் மேலாக, அதே லிஃப்ட்டுக்குள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்!” என்ற செய்தி அனைத்து செய்தி ஊடகங்களிலும், படத்துடன் பிரசுரிக்கப்பட்டது.
டிஜிட்டல் மீடியாவையும் அந்தச் செய்தி விட்டு வைக்கவில்லை! அங்கேயே அத்தனை பத்திரிகை நிருபர்களும் இருந்த நிலையில், அவர்களை யாராலும் தடுக்கவும் முடியவில்லை.. யாரும் தடுக்க முனையவும் இல்லை!
அந்த லிஃப்டை சுற்றிச் சுற்றி போட்டோ எடுப்பதும்.. கட்சி அலுவலகத்தின் முன்பாக நின்று பரபரப்பு செய்திகளை வெளியிடுவதுமென பத்திரிகைகளுக்கு சூடான அவலாகிப் போனது அந்தச் செய்தி!
அதே செய்தியை தனது மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தான் ஷிவ்!
அதற்கு முன்னதாக அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவனுக்கும் நவிராவுக்கும் இருந்த உறவு பற்றி கேட்ட கேள்விக்கு, அவள் கூறிய பதிலில் மண்டை சூடேறிப் போய் டிவியை உடைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்திருந்தான் அவன்!
கண் மண் தெரியாத வேகத்தில் ஊரை விட்டு வெகுதூரம் தள்ளி வந்திருந்த அவன், ஒரு கட்டத்தில் ஆத்திரம் சற்று மட்டுப்பட.. ஓரிடத்தில் காரை நிறுத்தி தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கையில் தான் அவன் கண்களில் பட்டது இப்பொழுது இதோ இந்தச் செய்தி!
அதுவும் சூர்யவர்மனையும், நவிராவையும் இணைத்து வந்திருந்த இந்தச் செய்தி, அவனது கோபத்தின் எல்லையை கரைகடக்க வைத்திருந்தது!
இரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, லிஃப்ட் முழுமையாக சரியாகா விட்டாலும், அதன் கதவை மட்டும் திறக்க முடிந்தது.
ஓர் ஆள் மெதுவே வெளியேறும் அளவிற்குத் தான் வழி இருந்தது. யாருடைய உதவியும் இல்லாமல், அவளின் உடல்நிலை இருக்கும் இந்த நிலையில் நவிரா வெளியேற முடியாது. அனைவரும் சூர்யவர்மன், அவளைத் தூக்கி வெளியேற வைப்பான் என்று எதிர்பார்த்து இருக்க.. சூர்யவர்மனோ,
“ஒரு சின்ன ஸ்டூல் மாதிரி கொடுங்க. மேடம் அதுல ஏறி வெளில வரட்டும். அவங்களால தனியா வெளிய வர முடியாது.” என்று கண்ணிய கனவானாகக் கூற.. அதில் சூர்யவர்மனின் “ஜென்டில்மேன்தனம்” வேறு எட்டுத் திக்கிலும் பறந்தது!
அவன் கூறியதில் நன்றியுடன் சூர்யவர்மனைத் திரும்பி நவிரா பார்த்த பார்வை, அப்படியே புகைப்படக்காரர்களால் படமாக்கப்பட்டு..
“சூர்யவர்மன் – ஒரு உத்தம விசுவாசி! கட்சிக்கு மட்டும் அல்ல.. கட்சித் தலைவிக்கும் தான்!” என்பது போல கேப்ஷனுடன் செய்தி வலம் வர.. தீப்பற்றிக் கொண்ட உடம்பில் கார மிளகாய் வைத்துப் பற்றுப் போட்டது போல ஆனது ஷிவ்வுக்கு!
அத்தனை எரிச்சலின் விளைவு.. மீண்டும் ஆத்திரத்துடன் அன்றைய இரவில் நவிராவின் அறைக்கு அவனைச் செல்லத் தூண்டியது!
