உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 16
அத்தியாயம் 16
தன் கையை கோர்த்திருந்த வைஷ்ணவியின் கண்களை ஆழமாக நோக்கினான் அசோக்.
“ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே வைஷூ”
அசோக் கேட்க வைஷ்ணவி அவனிடம் பார்வையைத் திருப்பாது வானத்தை நோக்கிக் கொண்டே ம் என்றாள்.
Advertisement
“உன்னுடைய பிரேக் அப்கு நீதான் காரணம்னு என்னைக்காவது நினைச்சு இருக்கியா?”
அந்த கேள்வி அவளுக்கு உள்ளூர வலியை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அது கண்களில் மட்டும் வெளிப்பட்டது. முகத்தில் ஏனோ சலனத்திற்கான எந்த ஒரு சுவடும் தெரியவில்லை. மீண்டும் மாறிய அதே புன்னகை முகத்துடன் பேசினாள்.
“நான் காரணம்னு நினைச்சதில்ல அசோக். ஒரு பிரச்சனைல இருந்து தப்பிக்க மத்தவங்கள காரணம் காட்டிட்டு போற மனுஷங்க தான் நம்மள சுத்தி அதிகம்”
Advertisement
“அப்போ உன் மேல தப்பே இல்லைனு நினைக்கிறீயா?”
Advertisement
அசோக் மீண்டும் கேட்க வைஷ்ணவி மின்னும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டே அவனிடம் பதில் பேசினாள்.
“சில விஷயங்கள் சரி தவறுக்கு அப்பாற்பட்டது அசோக். மனுஷங்க மனசு தண்ணி மாதிரி, தான் ஏத்துக்கிற பாத்தரத்த பொறுத்து மாறிக்கிட்டே இருக்கும். நிலையானதா இருக்கிற மனசு யாருக்கு இருக்கு சொல்லு?”
குழந்தைத்தனம் மாறிய முதிர்ச்சியான முகம் வைஷ்ணவியிடம் தெரிய அசோக் பிரமித்து அவளை மீண்டும் பார்த்தான். அசோக்கின் பார்வையை அறியாது மீண்டும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு அசோக்கிடம் பேசினாள் வைஷ்ணவி.
Advertisement
“நேசிக்கறதுக்கோ அன்பு செலுத்துவதற்கோ தகுதியான ஒரு மனிதன்னு கடவுள் தேடினா யார் மிஞ்சுவாங்க? காதல் அது போல தான்!”
வைஷ்ணவி கேட்ட கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டே அசோக் அமைதியாக அமர்ந்திருந்தான். வைஷ்ணவி தொடர்ந்தாள்.
“யார் தப்பு? யார் காரணம்னு எல்லாம் நான் ஆராயல அசோக். நான் காரணம் இல்ல அப்படிங்கிறது போதும். எனக்கு காதலிக்கப்படாதது வலி தான் அசோக். அதுவும் நீ கொட்டிக் கொடுத்த காதல் ஒரு துளி கூட உங்கிட்ட திருப்பிக் கொடுக்கப்படலைன்கிற உண்மை தெரியும் போது வலிக்கும். துரோகங்கள் ரொம்ப நிறையவே வலிக்கும். அதுக்காக நீ செலுத்தின காதலும் செலவிட்ட நேரமோ முட்டாள்தனம்னு ஏத்துக்க முடியாதுல்ல. நான் என் காதலை உண்மையா முழு மனசா ஒருத்தரிடம் செலுத்தினேன். என் வரையில் என் காதல் அழகானது. தாய் இழந்துப் போன ஒரு குழந்தை மாதிரி தோற்றுப் போன காதல். அந்த குழந்தையை நான் ரொம்ப நேசித்தேன். எப்பொழுதுமே அதைப் பத்தி நினைக்கும் போது மனசுக்குள்ள இதமாகத் தான் இருக்கும்ன்ற நினைப்பு போதும் அசோக். அதைத் தாண்டி வலிகளை ஆராயக் கூடாது. இழந்தது எப்பொழுதும் நினைக்கும் போதெல்லாம் கூரான ஆயுதம் மாதிரி இதயத்தை கிழிச்சுக்கிட்டே இருக்கட்டும்! ஆனா செலவிட்ட நிமிசங்கள் நினைவுகளா பசுமையா இருந்துட்டு போகட்டுமே! அது மட்டும் தான் எஞ்சியிருக்கும்”
வைஷ்ணவி சொல்லிவிட்டு தனது போர்வையை இழுத்து கீழேப் படுத்துக்கொண்டாள். அசோக் வெகு நேரம் பேச்சிழந்து அமர்ந்திருந்தான். அவள் எப்படிப்பட்டவள் என அவனது முடிவுகளுக்குள் அவளை வரையறுக்கவே முடிவதில்லை. குழந்தைத்தனமானவள் என நினைத்தால் முதிர்ச்சியான குமரி நான் என உணர்வுகளை இவ்வளவு எளிதாக வார்த்தைகளில் கோர்க்கிறாள். அசோக் திரும்பிப் பார்த்தான். அவளது கண்கள் உறக்கத்தில் மெலிதாக அயர்ந்திருந்தது. அன்றிரவு அவன் விடுதிக்கு வந்தப் பின் உறங்கச் சொல்கையில் தனது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்தான்.
“ஹலோ அப்பா” இரு நாட்கள் முன்பு தன் மகனிடம் பேசியது என ஆர்வமாக மறுபுறம் பேச்சை ஆரம்பித்தார் அசோக் கௌதமனின் தந்தை லீடங்.
மறுநாள் அவர்கள் அபுதாபியில் இருந்து புறப்பட்டு தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சதாரோ விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் ஆருசா விமான நிலையத்திற்கு உள்ளூர் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். வெறும் முப்பது நிமிட பயணத்தில் அவர்கள் அங்கு சென்றடைந்தனர்.
அங்கிருந்து ஆருஷா ஆப்ரிக்க சவாரி எனும் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போகிற வழி எல்லாம் காட்டுப் பாதை கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருந்தது. அசோக் துஃவையலை நோக்கினான். துஃவையல் கொஞ்சம் குரலை செருமிக் கொண்டு பேசினான்.
“அபுதாபி ஹோட்டல் கொஞ்சம் எக்ஸ்பென்ஸ் அதிகமாயிடுச்சு. அதனால தான்”
துஃவையலின் சமாதானத்திற்கு அசோக் சிரித்துக் கொண்டே தலையாட்டினான். என்னதான் ஆருசாவிலிருந்து ஆறரை கிலோமீட்டர் தள்ளி அந்த விடுதி இருந்தாலும், முக்கியமாக போகிற வழி கரடு முரடாக இருப்பினும் அந்த விடுதியைக் கண்டதும் அனைத்து பயணிகளும் மனநிம்மதி அடைந்தனர். துஃவையல் பெருமூச்சு விட்டான்.
அந்த தங்கும் விடுதி இரு அடுக்கு கட்டிடமாக இருக்க அதன் முன் அழகான பாக்கு மரங்கள் உள்ளங்கை விரித்து வரவேற்பது போல் நின்றிருந்தது.
விடுதிக்கு முன்னே நீள்வட்ட வடிவில் நீச்சல் குளம் இருந்தது. அவர்கள் விடுதியில் நுழைந்து உள்ளே செல்ல வரவேற்பறையில் ஒரு கருப்பின ஆணின் உருவம் ஆப்ரிக்க நாட்டு பாரம்பரிய உடையில் அழகான ஓவியமாக தொங்கவிடப்பட்டிருந்தது. அதன் அருகே ஒரு அலமாரியில் ஆப்பிரிக்க மக்களின் நாகரீகத்தை குறிக்கும் பொருட்கள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. வரவேற்பு அறையில் அசோக் வைஷ்ணவி இருவரும் தங்கள் அறை சாவியை வாங்கிக் கொண்டு செல்ல வந்திருந்த ஜோடிகள் அனைவருக்கும் ஒவ்வொரு அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அவர்கள் மறுநாள் காலை செரங்கெட்டி எனப்படும் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு பயணமாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அது ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பூங்கா. அவர்கள் திட்டமிட்டப்படி தான்சானியா காடுகளுக்கு பயணமாகினர். செரங்கெட்டி காடுகளில் பயணம் ஆப்பிரிக்கன் சவானா காடுகளில் சமவெளிப் பயணமாக இருந்தது. அவர்களது சோல்புல் ஜர்னி பயணத்தில் தீவு காடு மலை பாலைவனம் தற்போது சமவெளி காடுகளாக ஆப்பிரிக்க காடுகளைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடாகி இருந்தது.
மிருகங்களுக்கான மிக அழகிய படர்ந்த நில அமைப்பு தான்சானியா காட்டு சமவெளிகள். மூன்று நாள் பயணமாக அவர்கள் தான்சானியாவில் உள்ள செரங்கெட்டி தேசிய பூங்காவை சவாரி பயணத்தில் சுற்றிப் பார்க்க அகிர்டா என்னும் ஆப்ரிக்க இளைஞன் வழிகாட்டியாக இருந்தான். அதில் அனைவரும் ஆருசா எனும் தான்சானியா சிறு நகரத்துக்கு வந்திரங்கிய அன்று ஒரு நாள் மட்டும் ஓய்வெடுக்க, அசோக் வைஷ்ணவியை பார்த்தான். வைஷ்ணவி அவன் மீண்டும் நேரத்தை வீணடிக்காது சுற்றிப் பார்க்க அழைக்கிறான் என்பதை உணர்ந்து தான் வரவில்லை எனத் தலையை பலமாக மாட்டேன் என்பது போல் தலையசைக்க, அசோக் சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினான். இம்முறை அவன் அவளை மீண்டும் வற்புறுத்தவில்லை. அன்று இரவு வரை பயணிகளுக்கு ஓய்விருந்தது அசோக் வெளியே சென்றவன் மதியம் முடிந்து மாலை தான் திரும்பி வந்தான். வைஷ்ணவிக்கு அவன் எங்கே சென்றான் என்று கேட்க ஆவலாக இருந்தது. ஆனாலும் மௌனமானாள்.
அவன் சென்றப்பின் வைஷ்ணவிக்கு வருத்தமாக இருந்தது. அவனுடன் சென்றிருந்தால் மிக அழகான இடங்களை ரசித்து பார்த்து இருக்க முடியும். அசோக் மாலை திரும்பி வருகையில் தனது கைகளில் இரண்டு சிறிய பொட்டலங்கள் வைத்திருந்தான்.
அந்த விடுதியின் முன்னே இருந்த தோட்டத்தில் கற்பாறைகள் போன்ற இருக்கைகள் இருக்க அதன் முன்னே இருந்த நீச்சல் குளத்தின் அருகே பயணிகள் கூடியிருந்தனர். அசோக் வருவதை அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வைஷ்ணவி கண்டு விட்டு அவனைக் காண அறைக்குள் சென்றாள். அசோக் தனது கைகளில் இருந்த பொட்டலங்களை வைத்து விட்டு குளிக்கச் சென்றான். வைஷ்ணவி தனது அலைபேசியை. நோண்டிக் கொண்டு இருந்தவள் அவன் வந்ததும் கேட்டாள்.
“மதியம் எதாவது சாப்டியா அசோக்?”
வைஷ்ணவி கேட்க அவளிடம் கவனம் செலுத்தாதவாறு பதில் அளித்தான்.
“ம் சாப்பிட்டேன். நீ என்ன சாப்பிட்டே?”
“பிலால் னு என்னமோ குடுத்தாங்க அரிசி மாதிரி இருந்துச்சு கூட சிக்கன் சைடிஸ்”
அசோக் சொல்லி விட்டு தனது கையில் இருந்த பொட்டலத்தை நீட்டினான்.
“இது தான்சானியா ஃபேமஸ் ஸ்ட்ரீட் புட். நீயும் சாப்பிடு கீழ இருக்குறவங்களுக்கு கொடு”
“இது என்ன அசோக்?” வைஷ்ணவி கேட்க
“நியாமா கோமா!” என்று பதிலளித்தான் அசோக்.
“என்னது நீயாம்மா கோமாவா?”
வைஷ்ணவி ஆச்சர்யப்பட அசோக் இறுகிய முகத்துடனேப் பேசினான்.
“இதுக்கு பேரு ரோஸ்டட் மீட். நீ சாப்பிடலைன்னா அவங்களுக்கு கொடு”
அசோக் சொல்லிவிட்டு நகர வைஷ்ணவி மேலும் கேட்டாள்.
“என்ன? நல்லா சுத்தி பார்த்தீயா? எங்கெங்கெல்லாம் போனே?”
அசோக் தனது கைகளில் இருந்த பெட்டியை தன்னுடைய கைகளுக்குள் அடக்கியவன் அவளை திரும்பிப் பார்க்காமலேயே முன் அறைக்கு செல்லும் போது பேசினான்.
“அவ்ளோ அக்கறை இருந்திருந்தாக் கூட வந்திருக்க வேண்டியதுதானே?”
அவன் சொல்ல வைஷ்ணவி திகைப்போடு அவனைப் பார்த்தாள்.
“ஏன் என்கிட்ட இன்னைக்கு ரொம்ப சண்டை போடுற மாதிரியே பேசுறே! நான் உன் கூட சுத்திப் பார்க்க வரலைன்னு இவ்வளோ கோபப்படற?”
அசோக் அவளது குரலில் நிதானித்தான்.
“அப்படி எல்லாம் இல்லை. டயர்டா இருக்கு”
அசோக் சொல்லி விட்டு படுக்கையில் சாய வைஷ்ணவி அவன் கொண்டு வந்திருந்த உணவு பொட்டலத்தை எடுத்துக் கீழே சென்றாள். கீழ் இருந்த அனைவருக்கும் அதைக் கொடுத்துவிட்டு அவள் மட்டும் சாப்பிடாமல் இருக்க அசோக் வெகு நேரம் கழித்து இரவு உணவு ஏற்பாடாகி இருக்கும் சமயம் கீழே வந்தான். தோட்டத்தில் கேம்பயர் போல் நெருப்பு மூட்டும் இடம் இருக்க சுற்றிலும் பயணிகள் அனைவரும் அமர்ந்திருந்தனர். வைஷ்ணவி அசோக்கிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தாள் முன் போல அவன் இயல்பாக இல்லை முக்கியமாக தன்னை தவிர்ப்பதில் ரொம்ப கவனமாக இருக்கிறான்.
வைஷ்ணவி இடையே மாலை ஏதாவது குளிர்பானங்கள் வேண்டுமா என்று கேட்கப் போகும் போது கூட தொந்தரவு செய்யாதே எனச் சொல்லி இருந்தான்.
பயணிகள் அனைவரும் பாட்டுப் பாட, நடனமாட, சிரிப்பொலியும் கும்மாளமுமாக நிமிடங்கள் நகர்ந்துக் கொண்டிருந்தது. ஸ்டான் பென்னி இருவரும் நடனம் ஆடினர். ரெய்ச்சல் அடலின் இருவரும் பாட ஆரம்பித்தனர்.
இன்னொரு குழுவில் இருந்த ஒரு இளைஞன் தன் கையில் இருந்த கித்தாரை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆப்பிரிக்க இளைஞன் அக்ரிடா ட்ரம்ஸ் வாசிக்க அந்த இடமே ஒரு இசை கச்சேரி அரங்கமாக மாறியது. வெகுநேரம் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தது. வைஷ்ணவி கூட அவர்களுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். அசோக் அமர்ந்திருப்பதைக் கண்ட துஃவையல்,
“அசோக் நீங்க பாடலைனா எப்படி?! பாடுங்க!”
துஃவையல் சொன்னதைக் கேட்டு ‘இவனுக்கு பாடக் கூடத் தெரியுமா?”
வைஷ்ணவி ஆச்சரியம் மிக அசோக்கை நோக்க அசோக் தன் கரங்களில் கிட்டாரை வாங்கி வாசிக்கத் தொடங்கினான். வைஷ்ணவி தன் கண்களை இமைக்க கூட இயலாது அவனது குரலின் இனிமையில் சிலையென சமைந்து இருந்தாள். “என்ன வேலையில் இருக்க அசோக்?” என்ற தனது கேள்விக்கு அவன் சொன்ன வார்த்தைகள் நினைவுகளில் நிழலாடியது. “என் வேலை நேரத்தை நானே தீர்மானிக்கிற அளவுக்கு ஒரு வேலையில் இருக்கிறேன்”
வைஷ்ணவி இமைகளை படபடத்து அசோக்கைப் பார்க்க அவன் சாம் ஸ்மித் ன் ஐ அம் டூ குட் அட் குட்பைஸ் என்ற பாடலை பாடினான். அந்தக் குரலின் இனிமையோடு அந்த வார்த்தைகளும் அவன் குரலில் மிகுந்திருந்த உணர்வுகளும் அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்திருந்ததது. அவன் பாடலை பாடி நிறுத்தியதும் கரவொலி சத்தம் நிற்க வெகு நேரமானது. வைஷ்ணவி இன்னும் அந்த இசையின் அதிர்விலேயே அமர்ந்திருந்தாள்.
அதுவும் அந்த வார்த்தைகள் அவளது காதல் வலியை கிளறி விட்டுச் சென்றிருந்தது.. அதன் தமிழாக்கம்
You must think that I’m stupid
You must think that I’m a fool
You must think that I’m new to this
But I have seen this all before
I’m never gonna let you close to me
Even though you mean the most to me
‘Cause every time I open up, it hurts
So I’m never gonna get too close to you
Even when I mean the most to you
In case you go and leave me in the dirt
நான் ஒருபோதும் உன்னை என்னிடம் நெருங்க விடப் போவதில்லை நான் ஒருபோதும் உன்னை என் அருகில் இருத்தி வைக்கப் போவதில்லை. நீ என்னை கடினமானவன் இரக்கமற்றவன் என எண்ணிக் கொள்ளலாம். இதயமற்றவனாக எழுதிக் கொள்ளலாம். ஆனால் என்னுள் பரவும் அச்சம் உன்னை எட்டவே வைத்திருக்கிறது. மீண்டும் ஒரு பிரிவை மீண்டும் ஒரு வலியை நான் அனுமதிக்க இயலாது நிற்கிறேன். நாம் மிகச் சிறந்த ஜோடி தான் ஆனால் இருவரும் இனி சேர்ந்து இருப்பதில் அர்த்தம் ஒன்றுமில்லை. நான் பிரிவை சந்திப்பதில் பெரும் அனுபவசாலி ஆம் நான் பிரிவை சந்திப்பதில் பெரும் அனுபவசாலி.
அந்த ஆங்கில பாடலின் வரிகளை மனதிற்குள் உருப்போட்டே வைஷ்ணவி அப்படியே அமைந்திருந்தாள். அவள் கண்களின் ஓரம் நீர் வருவதை அசோக் தன் பாடலின் ஊடே கவனித்துக் கொண்டிருந்தான். இரவு உணவு முடிந்து மீண்டும் அவர்கள் அறைக்குள் வந்ததும் வைஷ்ணவி கண் மூடி அமர்ந்திருந்தாள் அவனிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை அவனிடம் நீ பாடகனா என்று கேட்பதற்கு கூட வைஷ்ணவிக்கு தோன்றவில்லை. அந்தப் பாடல் வரியின் காயங்கள் உள்ளூர ஏதோ செய்தது.
‘நீ செய்வது எதுவும் எனக்குத் தெரியாது என்று நினைத்திருந்தாய் ஆனால் எனக்கு தெரியும் நீ வலியை மட்டுமே பரிசளிப்பாய் என்று தெரியும் அதனால் பிரிந்தே இருப்போம். என் அச்சங்களை மேலிட வைக்க உனக்கு இங்கே அனுமதி இல்லை’
வைஷ்ணவி அழவே கூடாது என்றிருந்த தன் வைராக்கிய அணையை முழுவதுமாக உடைத்து வைத்திருந்தான் அசோக்.
மறுநாள் காலை அவள் கண்களில் மெலிதான வீக்கம் இருந்தது. அசோக் அதைப் பார்த்ததும் வருத்தமுற்றான். அசோக்குக்கு, தான் அந்தப் பாடலை பாடியிருக்கக் கூடாது என்று தோன்றியது. அவளை அன்று இயல்பாக்க வேண்டும் என்று நினைத்திருந்தான்.
அதிகாலையிலேயே விடுதியில் இருந்து கிளம்பி செரங்கெட்டி தேசிய பூங்கா செல்ல வண்டி ஏற்பாடாக இருந்தது. தான்சானியாவில் உள்ள ஒரு டூர் பேக்கேஜ் நிறுவனத்திடம் மூன்று நாட்கள் சுற்றுலா பேசியிருந்தான் துஃவையல். ஒரு நெடிய ஜீப் போல் வண்டி இருபுறமும் கண்ணாடிகள் இல்லாது வெறுமனே இரு தடுப்புகள் இடைவெளியில் வெறும் தார்பாலின் சீட் மட்டுமே மூட இருந்தது. அதன் உள்ளே எட்டு பேர் அமர்ந்துக் கொள்ளலாம். அந்த வண்டியின் மேல் நின்று மிருகங்களைப் பார்ப்பதற்கும் வசதி இருந்தது. உள்ளே அக்கிர்டா, ஓட்டுநர் அருகில் அவர்களுக்கு கைடாக அமர்ந்திருந்தான்.
அந்த வண்டியில் காலையில் அவர்கள் பயணம் சமவெளி காடுகளுக்குள் சென்றது. வைஷ்ணவி சாளரம் ஓரம் அமர்ந்திருக்க பாதை மண் பாதையாக தான் இருந்தது. தூரம் செல்ல செல்ல அசோக்கிடம் ஏதோ கேட்க வைஷ்ணவி திரும்ப மண் பாதை சரிவில் மீண்டு வண்டி நன்கு குலுங்கியது. அசோக் அருகில் தான் அமர்ந்திருந்ததால் இருவர் முகமும் நேரே உரசிக் கொள்வதாக இருக்க ஒரு நொடி இருவரும் இமைகள் மூடாது பார்த்துக் கொண்டனர். வைஷ்ணவி ஒன்றும் பேசாது முகத்தைத் திருப்ப அசோக் மறுபுறம் திரும்பினான். அசோக் ஒரு வெள்ளை நிற சட்டை பழுப்பு நிறத்தில் அரைக்கால் சட்டை தலையில் ஒரு கேப் அணிந்திருந்தான். வைஷ்ணவி ஒரு லாங் பிளாரல் கவுன் அணிந்திருந்தாள். அவள் தலையிலும் ஒரு கேப் இருந்தது. அசோக் அவள் கூந்தல் அழகாக படர அவளை ரசிக்கத் தூண்டிய மனதிற்கு ஓரப் பார்வைகளில் சிறிது கரிசனம் காட்டினான்.
அவர்கள் இருவருக்குள்ளும் சற்று முன் இதழ் உரசிவிட இருந்த நெருக்கம் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தியிருக்க இருவரும் பேசாது பயணித்தனர். வைஷ்ணவி அவனிடம் எப்படி பேசுவது எனத் தவித்து இருக்க அவள் அருகில் இருந்த சாளரம் வழி ஒரு மிருகத்தின் நீண்ட கழுத்துப் பகுதி செம்மண் நிறத்தில் தெரிய வைஷ்ணவி துணுக்குற்றாள். வண்டியில் ஆச்சரியக் குரல்கள் எழ நீண்ட கழுத்துடன் ஒட்டகச்சிவிங்கி ஒன்றிரண்டு மண் பாதையின் இருபுறமும் நின்றிருந்தது. வைஷ்ணவி தன் இரு கண்களை அகல விரித்து அதை பார்த்ததும் அசோக்கின் கரங்களை தானாக பிடித்தாள். அசோக் புன்னகைத்து அவளது கரத்தின் மேல் தனது கரத்தை வைத்துப் பேசினான்.
“இங்க எல்லா வைல்ட் லைஃப்லையும் பார்க்கலாம் வைஷூ.. இன்னும் ரொம்ப அழகா இருக்கும் போகப் போக”
அவன் சொல்ல அந்த ஒட்டகச்சிவிங்கி அவளது சாளரத்தின் வழி தலை நீட்டி பின் நகர்ந்தது. வைஷ்ணவி மிக அருகில் அந்த நெடிய விலங்கை பிரமிப்புடன் பார்க்க அதன் அருகே இன்னொரு ஒட்டகச்சிவிங்கியும் இரு குட்டிகளும் இருந்தது. இந்தப் பயணம் தன்னுடைய இருவருட சம்பளத்தை எடுத்துக் கொண்டதே என நினைத்தவளுக்கு, இருபது வருடச் சம்பளத்தை கூட கொடுத்து இருக்கலாம் என அப்போது தோன்றியது.
வெளிநாட்டினர் போன்று தான் வாழ வேண்டும் ஆறு மாதம் சம்பாதித்து ஆறு மாதம் உலகத்தில் உள்ள அத்தனை அழகையும் பார்த்து ரசிக்க வேண்டும் வைஷ்ணவி அவனது கரங்களைப் பிடித்துக் கொண்டாள். அடுத்து அந்த வண்டி மெல்ல ஊரத் தொடங்கியது சிறிது நேரம் அந்த வண்டி சென்றதும் வெளியே பதிந்திருந்த அவளது விழிகள் ஒரு காட்சியில் ஸ்தம்பித்து நிற்க வைஷ்ணவி இதயம் படபடக்கத் தொடங்கியது. அவள் பார்வைக்கு வெகு அருகே இருந்த ஒரு கற்பாறையில் ஒரு சிங்கம் தன் பிடரி மயிரைச் சிலுப்பி மெல்ல வாயைத் திறந்தது. வைஷ்ணவிக்கு அந்த திறந்தவெளி சாளரம் வழி சிங்கத்தைக் காண இதயம் படபடக்க மூர்ச்சையடையாத குறையாக வாய் பிளந்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அசோக் அவளது காதுகளில் கிசுகிசுத்தான்.
“அமைதியா இரு!”
அவனது எச்சரிக்கைக்கு மீண்டும் அதே கிசுகிசு குரலில் வைஷ்ணவி திரும்பிக் கேட்டாள்.
“அந்த சிங்கம் அங்க தானே இருக்கு! இப்ப எதுக்கு என்னை அமைதியா இருக்கச் சொல்ற?”
அவள் குரல் ஏற அசோக் அவளது வாய்ப் பொத்த அவனது கரங்களில் முத்தமிட்டது அவளது இதழ்கள். அசோக் ஒரு நிமிடம் திகைத்து விட்டு பின் நிதானமாகி தன் கண்களை அசைத்து கீழே பார் என சைகை செய்ய அவளது சாளரம் தாண்டி ஓரடி இடைவெளியில் பெண் சிம்மம் வண்டியை சுற்றி நடந்துக் கொண்டு இருந்தது. ஒரு பாய்ச்சலில் வண்டியை எட்டி விடும் தூரத்தில் அந்த வண்டியின் அருகே நின்று முன் கால்களை பரப்பி சோம்பல் முறித்தது அந்த சிம்மம்.
கவிதை
அதிசயங்களின் கூடாரம்
அவனது அருகிருப்பு
அவனுள் நானும் என்னுள் அவனும்
பரிபூரணம் உணர உயிரின்
பயணங்கள் யாவும் புதிதாகிறது!




