11-2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,376
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 11.2
.
Advertisement
உடையை களைந்து ஷவருக்குள் நுழையும் முன் பூந்துவலைகள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியின் ஆள் உயரக் கண்ணாடியில் தன்னை ஆராய்ந்தான். திடகாத்திரமான உடல். அதில் குறை ஒன்றும் இல்லை. முகம் கழுத்து என ஆராய்ந்தான். உற்றுக் கவனித்தால் மிக மிக மெலிதான் கோடு ஒன்று தெரிந்தது. தங்கச் சங்கிலிக்கு பின் அதுவும் மறைந்துவிடும்.
களிம்பைச் சரியாகத் தடவி வந்தால் இருக்கும் சிறு சிறு கோடு போன்ற தழும்புகளும் நாளடைவில் காணாமல் போய்விடும் என்றிருக்கிறார் மருத்துவர். தன்னையே பார்த்து நின்றவன் கண்களின் திருப்தி பரவியது.
கண்ணாடி முன் நின்றிருந்தவன் காதுகளில் வெளியே மகளின் அழுகை சத்தம் கேட்கவும் இடையில் டவலோடு வந்தவன் பார்வையில் கை கால்களை ஆட்டி அழுத்துக் கொண்டிருந்த மகள் விழுந்தாள். குனிந்து தூக்கவும் மின்னல் என அழுகை மறைந்து, ஈ என முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு மகளிடம்.
Advertisement
“கண்ணீர் இல்லாத ஆக்டிங் அழுகையா இது?” சிரித்துக் கொண்டே கன்னத்தின் இதழ் ஒற்றி எடுத்தான்.
Advertisement
“சேந்தாப்புல ஒரு மணி நேரம் தூங்க மாட்டீங்களா நீங்க? அப்பா குளிக்க வேண்டாமா?”
“ஆ ஈ”
“புது இடம் என் பட்டு பேபிக்கு பிடிக்கலியா? அதுதான் தூக்கம் வரலியா?”
Advertisement
“ஆ ஊ ப்ப் ட”
“சரி… நீயும் குளிக்கணும் இல்ல… வா அப்பா கூட குளிப்பியாம். அப்பறம் பால் குடிச்சுட்டு பாட்டி மடியில தூங்குவியாம்” எனச் செல்லம் கொஞ்சிக் கொண்டே மகளோடு ஷவருக்கு அடியில் நின்றான் கௌதமன்.
இதமான சூட்டில் பூந்தூரல் இருவரையும் நனைத்தது. அப்பாவின் பாதுகாப்பான அணைப்பில் மகள் சிரித்தாள். ஆ ஊ என்று கையை காலை ஆட்டி அவள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள்.
“நீ கொஞ்சம் பெருசானதும், அப்பாவும் நீயும் மழையில நனையலாம் சரியா… அது இன்னும் நல்லா இருக்கும்” என்றான். கூறியபின் சிரித்தான்.
“யாழி பேபியோட அப்பாக்கு மழைல நனைய பிடிக்கும்” என்றவன், “இன்னும் என்ன என்ன பிடிக்கும் உன் அப்பாக்கு?” என மகளிடம் கேட்டான்.
தகப்பன் முகத்தில் அடித்து, “ஈ ஆ” என்றாள் மகள்.
“கரெக்ட்! எனக்கு என் குட்டி யாழி பேபிய தான் ரொம்ப பிடிக்கும். என் தங்ககுட்டி யாழி பேபிக்கு அப்பாவ பிடிக்கும்… மழை பிடிக்குமா?” எனச் செல்லம் கொஞ்சினான் தகப்பன்.
வாய் குவித்து புருவம் சுருக்கி, “ஆ ஆ ஊ” என்றாள் மகள்.
“யாழி பேபி… உங்களுக்கு நாலு மாசம் கூட முழுசா ஆகல. இன்னும் தலை கூட ஒழுங்கா நிக்கல. அதுக்குள்ள பேசணுமா உங்களுக்கு?” என மகளின் குட்டி வயிற்றில் மூக்கை உரச, கெக்க பிக்க என மகள் காலை அந்தரத்தில் உதைத்துச் சிரிக்க ஆரம்பித்தாள்.
கண்கள் பார்த்து ஆ ஊ எனப் பேசும் மகளோடு ஆசையாக பேசின்னான். மகளோடு சேர்ந்து சிரித்தான். காணமல் போயிருந்த அவன் சிரிப்பும் உலகமுமாக மாறிக் கொண்டிருந்தாள் குட்டி யாழி பேபி.
ஒருவர் மேல் அன்போ… காதலோ… நேசமோ… தோழமையோ… அரும்ப நொடி நேரம் போதும். ஆனால் அவர்களுக்கான பிணைப்பு காலப்போக்கில் மட்டுமே உருவாகும். அப்படியான வலிமையான ஒரு பாசப் பிணைப்புக்குள்ளாக மகளும் தகப்பனும் கால் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
குளித்து முடித்து மகளோடு கீழே வந்த கௌதமன் கரத்தினில் பால் பாட்டில் கொடுக்கப்பட மகளோடு அவன் அமர்ந்தான்.
மிகப் பெரிய வீடு அது. வீட்டிற்குள் ஒரு அடுக்களை இருந்தாலும், வீட்டிற்கு வெளியே ஒரு அடுக்களை இருக்கும். அதில் தான் வேலையாள் சமைப்பதெல்லாம். மீனாவின் மேற்பார்வையில் வேலையாள் உள்ளே வருவதோடு சரி… மற்றபடி வீடு அமைதியாக இருக்கும். மாடிக்கு செல்லும் படிக்கு அடியில் சிறிய பனை வகை மரம் அழகாக வீற்றிருந்தது. பனையை ஒட்டி செயற்கை அருவியும் குட்டி குளமும் இருக்க, அந்த சலசலப்பு மட்டுமே வீட்டை நிறைத்திருந்தது.
மகள் பால் அருந்தி முடித்திருக்க, “மா… சாப்பாடு” என அவன் முடிக்கும் முன்னமே, “சாப்பிட வா கௌதமா” என அன்னை வந்து நின்றார். முகத்தில் இதம் தொலைந்திருந்தாலும் அதை வார்த்தைகளில் காட்டவில்லை வைஷாலி.
அமைதியாகவே உணவு மேசையில் உணவு பரிமாறப்பட்டது. வாசுதேவன் முகத்தில் பலத்த யோசனை. வைஷாலியின் முகத்தில் குழப்பமும் கவலையும். கௌதமன் முகம், நடு கூடத்தில் மீனாவின் மேற்பார்வையில் கை கால்களை ஆட்டி படுத்திருக்கும் மகளின் பக்கம்.
“தட்ட பாத்து சாப்பிடு கௌதமா” என அன்னை சத்தம் போட்டார்.
“ம்ம்” எனத் திரும்பியவன் பார்வையில் அப்பாவின் யோசனை முகம் விழுந்தது.
“என்னப்பா முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றவனைப் பார்த்து முறுவலித்தவர், “பட ரிலீஸ் பத்தி யோசனை. வேற ஒண்ணும் இல்ல” என்றார்.
“பிரச்சனையா ப்பா?” என அக்கறையாக வினவிய மகனை வாஞ்சையோடு பார்த்தார் தகப்பன். தன் மகனா இது? ஒரு விபத்து ஒருவனை எப்படி எல்லாம் மாற்றிவிட்டிருக்கிறது?
“கொஞ்சம்!” என்றவர், “சமாளிக்கலாம்” என்றார்.
ஒன்றரை வருடங்கள் முன்பு, மகன் ஊர் சுற்ற எனக் கிளம்பிய வேளையில் பூஜை போட்ட படம் பல நூறு கொடிகளை விழுங்கியபின்னும் அதன் பசி அடங்கவில்லை. வெளிவர வேண்டிய நாளில் அது வரும் நிலையிலும் இல்லை. வாசுதவேனுக்குள் அத்தனை பதட்டம். படம் வெளிவருகிறதோ இல்லையோ, படத்திற்குப் போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக வசுலிக்க நிதி நிறுவனங்கள் வந்து நின்றுவிடும். நினைக்க நினைக்க வாசுதேவனுக்கு பதறியது.
“என்ன ஆச்சு?” என்ற மகனிடம் கூறவா வேண்டாமா என்ற யோசனை தகப்பனிடம். முன்பென்றால், அவனுக்கும் தெரியட்டும் எனக் கூறியிருப்பார். இப்பொழுது தான் உடல் தெறி வருகிறான். இன்னும் மாத்திரைகள் தான் மகனைத் தூங்க வைக்கிறது. மாத்திரைகள் தான் வலியைக் குறைக்கிறது. மாத்திரைகள் தான் டிப்ரெஷனை மகன் அருகில் வரவிடாது காக்கிறது.
இருக்கும் பிரச்சனைகள் மகனுக்கு போதாதா என எண்ணியவர், “இந்த மாசம் ரிலீஸ் ஆக வேண்டியது. இன்னும் போஸ்ட் பிரொடஷன் வேலை இழுத்து அடிக்குது. அதுதான் யோசனை. நாள் தள்ளிப் போக போக பண நெருக்கடி ஆகிட கூடாதில்லையா…” என புன்னகைத்தார்.
அப்பாவின் புன்னகையைப் பார்த்தவனுக்கு விஷயம் அப்படி ஒன்றும் தீவிரமானது இல்லை என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
“ம்ம்ம்” எனக் கேட்டுக் கொண்டான்.
அன்று, வைஷாலியில் தமையன் ஜெகநாதன் வந்தார். வாசுதவேனுக்கும் கௌதமனுக்கும் இடையே படுத்திருந்த யாழினியாள் கைகள் ஆட்டி அப்பாவோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த நீள் இருக்கையில் சின்னஞ்சிறு குழந்தையைப் பார்த்த ஜெகநாதன் நெற்றி சுருங்கியது. கண்கள் வீட்டைச் சுற்றி நோட்டமிட்டது.
வாசுதேவனிடம், “யார் குழந்த மாப்பிள்ளை?” என்றவரிடம், “என் மக மாமா” என முடித்து கொண்டான் கௌதமன்.
“போத்திகிட்டு தூங்கினா என்ன… தூங்கிட்டு போதிகிட்டா என்ன… அப்படி தான மருமகனே” எனச் சிரித்தவர், “கன்னியாகுமாரிக்கு போனியே… இதுக்கு தானா?” என்றவர் பார்வையில் அத்தனை இளக்காரம்.
“ஆமா மாமா” என்றவன் கண்கள் அவரின் பார்வையைச் சற்றும் சளைக்காது பார்த்து வைத்து.
“மருமகள எப்போ கண்ணுல காட்ட போற? இருக்காளா?” என்றவர் பார்வை மீண்டும் வீட்டை ஆராய்ந்து தோற்றது.
“இல்ல மாமா” என்றான் பிசிரில்லாது.
“வா ண்ணா… அண்ணி வரலியா?” என வைஷாலி அண்ணனைப் பிடித்துக் கொள்ள, கௌதமன் மகளோடு இடத்தை காலி செய்தான். ஏனோ… தாய் மாமனைக் கௌதமனுக்குப் பிடிக்காது. நிஷாவின் திருமணம் பின்பு அவரிடம் அதிக மாற்றம். சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றாலும் அன்னைக்காகவும் அத்தைக்காகவும் பொறுத்துப் போகிறான் கௌதமன்.
“என்ன மா… மருமகன் ஏதேதோ சொல்றான்? உண்மையா?” என்றவருக்கு அம்மா என்ன சொல்லப் போகிறார் என மகன் நின்று திரும்பிப் பார்த்தான். மகனின் பார்வையில் என்ன இருந்ததோ, “ஆமா ண்ணா… அப்படி தான் சொல்றான்” என்றார் தயக்கத்தோடு.
எந்த சத்தமும் காட்டாது நடப்பதை எல்லாம் அமைதியாகப் பார்த்து அமர்ந்திருந்த வாசுதேவன் மனதில் அத்தனை ஆத்திரம். மகன் மட்டுமே உலகம் என தன் உலகை மறந்து ஒன்றரை வருடங்களைக் கழித்தவர் இதோ இந்த இரண்டு மாதங்களாக தானே மீண்டும் தன் பட வேலையைப் பார்க்கிறார். கணக்கு வழக்குகளை பார்த்தவரால் எதையும் நம்பவும் முடியவில்லை நம்பாது இருக்கவும் முடியவில்லை.
தங்கையோடு காபியை அருந்திய ஜெகனோடு அறைக்குள் நுழைந்தார் வாசுதேவன். ஒரு மணி நேர வாக்குவாதம் அறையைத் தாண்டி வெளியே வரவில்லை என்றாலும் வெளியே வந்த இருவரின் முகமும் சரியில்லை.
வாசுதேவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஜெகநாதன் முகத்தில் தெரிந்தது என்ன?
“கிளம்பிட்டியா ண்ணா… இரேன்… சப்பிட்டு போலாம்” என்ற தங்கையிடம் தன் மறுப்பை அவர் தெரிவிக்க, “என்ன ண்ணா? பிரச்சனையா?” என முகம் பார்த்தார்.
அவர் என்ன கூறி சென்றாரோ… “மாமா கிளம்பியாச்சா? நான் பேபியோட கடைக்கு போயிட்டு, அவளுக்கு வேணுங்கிறத வாங்கிட்டு வரேன்” எனக் கௌதமன் கிளம்ப, வைஷாலியின் பார்வை முழுவதும் அவன் கரத்தினுள் ஒய்யாரமாகப் படுத்திருந்த குட்டி குழந்தையின் மீதே.
“உன் பையனோட ஆஸ்பித்திரியே கதின்னு உன் புருஷன் கிடக்கும் போது நான் தான் என் தொழிலோட சேர்த்து உங்களுதையும் பார்த்துகிட்டேன். அதுக்கு எனக்கு நல்ல பேர் தந்துட்டார் உன் புருஷன்” என்ற அண்ணன், “குழந்த உருவான நேரமும் பிறந்த நேரமும் உன் குடும்பத்த ஆட்டி படைக்குது. பரிகாரம் இருந்தா பாரு. அதவிட்டுட்டு சும்மா போற என் மேல ஏற வேண்டாம்ன்னு உன் புருஷனுக்கு சொல்லி வை” என கொளுத்தி போட்டு சென்றிருந்தார்.
“அம்மா கிளம்பறோம். நீங்க வர்றீங்களா?” என்ற மகனின் குரல் அவரை உலுக்கியது. மகன் முகத்தில் புதிதாக ஒட்டி கொண்டிருந்த துள்ளலும் சிரிப்பும் அன்னையின் மனதை வருடியது. கணவன் கூறியது நினைவில் வர, அண்ணன் கூறியது பின் சென்றது.
தன் கை முஷ்டியை நக்குவதும், கௌதமன் மார்பில் முகத்தை இடிப்பதுமாக இருந்த குழந்தையில் முகத்தைப் பார்த்தார் வைஷாலி. குட்டி நிலவு ஒன்று கைக்குள் இருப்பது போல் தோன்றியது.
தன் கைக்குள் அடங்கியிருந்த புதையலை அன்னை பார்க்கவும், “என் மக அழகு இல்ல மா?” என்றான் வாஞ்சையோடு.
அன்னையிடம் அவன் பதில் எதிர்பார்த்துக் கேட்கவில்லை. ஆனால், “நீயும் இப்படித் தான் கை கால் முளைச்ச பூ குவியல் மாதிரி இருந்த” என்றார் குழந்தையின் பட்டு கன்னம் வருடி.
“தேங்கஸ் மா” என்றவன் குரல் கமறியது.
சூரியனைக் கொண்டு நிலவு ஒளிருமாம், இது படித்துத் தெரிந்துகொண்டது. ஆனால் இங்கு நிலவு, சூரியனை ஒளிர்வித்து கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்த்தார் வைஷாலி.