Skip to content
Post Views: 2,322
கீதம் – 6 
அன்று தான் தன் மருத்துவமனைக்கு பணி செய்ய முதன் முதலாய் வருகை தந்திருந்தான். நீண்ட நாள்கள் கழித்து வரும் அவனின் வருகை அங்குள்ளவர்களுக்கு ஆனந்த மழை பொழிய செய்திருந்தது. நோயாளிகள் வருகை அதிகம் இருந்ததால் காலம் தாழ்த்தாமல் அவர்களை பரிசோதித்து வெளியே அனுப்பிய பின்னரே, தன் புதிய பணியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ரவி.
Advertisement
இவனோ இன்று நந்துமா யாரென அறிந்து அவரை பாராட்ட வேண்டும் என அவளை எதிர்பார்த்து காத்திருந்தான். இவனின் அதிர்ஷ்டம் அவளுக்கு அன்று வார விடுமுறை. நான் பார்க்க நினைக்கிற ஆளை தவிர மற்றவங்களை பார்க்கின்றேன். ஏனோ அவளை சந்திக்க வேண்டும் என மனம் அதிகம் ஏங்கியது.
சரி அவளை பற்றி தெரிந்து கொள்வோம் என ஸ்டாப் ப்ரொபைல் எடுத்து பார்த்தான். அவளின் புகைப்படம் அதில் இல்லை. வீட்டு முகவரியோ ஹாஸ்பிடலில் இருந்து நான்கு வீடு தள்ளி காட்டியது. ” ஓ. பக்கத்துல தான் வீடா.. அதான் இங்கேயே சுத்திட்டு இருக்காளா.. சரி அப்போ வர சொல்லியே பார்த்து விடலாம்” என எண்ணி கேட்டால், அவளின் விடுமுறையன்று பக்கத்து கிராமங்களில் உள்ள பள்ளிகள் தோறும் சென்று கவுன்சிலிங் கொடுக்க சென்று விடுவாள் என கூறி விட்டனர்.
Advertisement
Advertisement
அதனை கேட்டவனோ ஆச்சர்யம் கொண்டான். தான் செய்ய நினைக்கிற ஒவ்வொரு செயலையும் அவள் செய்து கொண்டு இருப்பதை அறிந்தும், தன்னை போலவே மருத்துவத்தை நேசிக்கும் பெண்ணை பற்றி அறிந்து கொண்டும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான். அவளின் துணை கொண்டு தானும் தன் இலட்சியத்தை அடைந்து விடலாம் என எண்ணி மகிழ்ந்தான்
**
Advertisement
ஒரு வாரம் கடந்த நிலையில் அன்று தான் நந்திதா வேலைக்கு வந்து இருந்தாள். ஒரு டெலிவரி கேஸ் அப்போது தான் முடித்து, குழந்தையை செக் செய்து கொண்டு இருந்தார் ரவி. தற்கொலை செய்து கொள்ள, கையில் நரம்பை கட் செய்து கொண்டு, கிளினிக் உள்ளே வரமாட்டேன் என ஆட்டோவில் இருந்து இறங்காமல் ஒரு பெண்மணி அழிச்சாட்டியம் செய்து கொண்டு, அழுது ஆர்ப்பாட்டம் செய்வதால் உடனே வரும்படி இண்டெர்காமில் அழைப்பு வர, சிசுவை விட்டு உடனே செல்ல முடியாது என்ற நிலையில் தன் மகனுக்கு கால் செய்து வேகமா கீழே போய் முதலுதவி செய்ய சொல்லியும், அதற்குள் தான் வந்து விடுவதாக கூறினார்.
தந்தை சொன்னதை கேட்டவன் வேகமாய் கீழே ஓடி வந்தான். அறையில் வரும் போதே ” நீங்க செத்து போனா உங்க புருஷன் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இருப்பாரு. உங்க பிள்ளைங்க தான் தெருவில் நிற்க போறாங்க பரவாயில்லைன்னா செத்து போங்க. எங்க யாருக்கும் நட்டமில்லை. போங்க ” என்றபடி அவர் கைகளை ஒரு பெண் இறுக்க பற்றி கொண்டதை கண்டான்.
” அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிருவானா, நான் விட்ருவேனா, அவன் குடலை உருவி மாலையா போட்டற மாட்டேன்..” அத்தனை வலியிலும் பல்லை கடித்து கொண்டு அவர் கத்த,
” கரெக்ட்க்கா. ஆனால் அவரு குடலை உருவி மாலையா போட, நீங்க உசுரோட இருக்கணுமே. என்ன பண்ணலாம் ” என செவிலியரிடம் கண் காட்டி ரத்தத்தை துடைக்க வைத்தாள்.
” இந்த நர்ஸ் ஊசி மருந்து போட்டு கட்டினா தான், நீங்க பொழைக்க முடியும். பண்ணுவோமா..” என்றப்படி கொஞ்சம் நகர்ந்து நின்று, ஆரவ்வை பார்க்க, அவனும் வேகமாய் சென்று காயத்தின் அளவை பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்தான்.
” நல்லவேலை காயம் ஆழமா படலை. ஒரு இன்ச் கொஞ்சம் தள்ளி வெட்டிருந்தா உங்களை காப்பாத்த முடியாது.. ஏம்மா இப்படி பண்றீங்க..,” என கட்டு போட்டு, ஊசி போட்டு முடித்து தான், பக்கத்தில் நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தான்.
அவனை பார்த்தவுடன் புன்னகை புரிய , ” நான் உங்களை பார்த்ததில்லை சிஸ்டர். உங்க பேர் என்ன? ” என கேட்க ஆரம்பிக்கும் போதே ரவி உள்ளே வந்து விட்டார்.
” ஷி இஸ் சேவ்., ” என ஆரவ் சொல்ல, ரவியோ ” எத்தனை தடவை தான் கையை அறுத்துகுவிங்க… போன மாசம் தான் அவ்வளவு சொல்லி அனுப்புனேன்.. திருப்பி வந்தா என்ன அர்த்தம். உங்க பசங்கள பத்தி யோசிக்கவே மாட்டிங்களா.., ” என அவரும் பரிசோதிக்க அந்த பெண்மணியோ ஓவென்று கத்தி அழுக ஆரம்பித்து விட்டார்.
” அவரு குடிச்சி குடிச்சி சம்பாரித்த காசை எல்லாம் கரியாக்கிட்டு வர்ராரு. நான் என்னத்த பண்ண, இப்படி அறுத்துக்கிட்டு கிடந்தா பத்து நாளைக்கு சும்மா இருக்காரு. அப்புறம் திருப்பி ஓடுறாரு.., அந்த மனுஷன் திருத்தவே மாட்டாரு. நான் செத்து போனா கூட பாட்டிலோடு தான் சுடுகாட்டுக்கு வந்து நிற்பாரு, அவரை யாராவது எதாவது சொல்ராங்களா. புருஷன அடக்க துப்பில்ல, இதுல பொம்பளை பிள்ளை வேற பெத்துட்டானு என்னை தான் திட்றாங்க. இந்த பேச்சை கேட்க செத்து போகலாம்னு தான் தோணுது. அதுக்கும் எனக்கு கொடுப்பினை இல்லை…, என்ன பண்றதுன்னு தெரியலையே..,” என்று கதறி துடிப்பவரை சமாளித்து, ஊசி போட்டு உறங்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த சிசேரியன் கேஸ் முடிந்து, அடுத்து ஒரு நார்மல் டெலிவரி பார்த்து முடித்தும், மணி பத்தினை கடந்தும், பணியாளர்கள் யாரும் இன்னும் காலையில் சாப்பிட கூட போக முடியவில்லை. அடுத்த கேஸ் இன்னும் மேலே முடியவில்லை. அங்கும் ஓட்டம் தான். அதற்குள் இந்த பெண்மணியும் வந்து விட., என்ன செய்வதென்று யாருக்கும் புரியவில்லை.
” இவங்களோடு மல்லு கட்ட முடியல. எப்போ என்ன பண்ணுவாங்க என்றே சொல்ல முடியவில்லை. அட்டெண்டர் ஒரு ஆள் கிட்டவே இருங்க. இல்லைனா எந்திரிச்சதும் திருப்பி எதாவது பண்ணிக்க போறாங்க. இவங்க புருஷன வந்து என்னை பார்க்க சொல்லு. போலீஸ்ல காம்ப்ளைன்ட் கண்டிப்பா இந்த தடவை கொடுத்தே ஆகணும். அடுத்த அட்டெம்ப்ட் பண்ணா பொழைக்க வைக்க முடியாது.
மத்தவங்க போய் வேகமா சாப்பிட்டு வாங்க. அடுத்து ஒரு சர்ஜரி கேஸ் இருக்கு. க்விக்., சட்டுனு வரணும்., ” என செவிலியர்களை அனுப்பி விட்டு, ” ஆரவ் நீ கொஞ்சம் இரு,. இந்த லேடி என்ன பண்ணும்னு தெரியாது. நந்து நீயும் இரும்மா..,” என சொல்லி விட்டு அவர் மேலே சென்று விட்டார். வேகமாய் அவளினை பார்த்தான். தான் காண எண்ணியவளை கண்டு விட்ட புன்னகை அவன் முகத்தை நிறைத்தது .
” வெல்… நீங்க தான் நந்திதா ஸ்ரீயா.., ” என புன்னகையுடன் அவன்
கேட்க
என்னடா நம்ம முழு பெயரையும் சொல்றாரு. நம்மள இன்னைக்கு தானே பார்க்கின்றார் என்ற கேள்வி தொக்கிய பார்வையுடன் “எஸ் சார்..,” என்றாள்.
அவளின் கேள்வி பார்வையிலேயே ” உங்கள பத்தி ரம்யா, அம்மா அடிக்கடி சொல்லி இருக்காங்க. அதான் முன்னேயே தெரியும். பட் நேர்ல இப்போ தான் பார்க்கின்றேன். எக்ஸாம் நல்லா பண்ணிங்களா. .” நீண்ட நாள் பழக்கம் போல் அவன் இலகுவாய் பேச,
அவளும் தயக்கம் ஏதுமின்றி ” ஓ.. மேடம் சொன்னார்களா சார். ம்ம். நல்லா பண்ணி இருக்கேன்..,” என்றாள்.
“ஆமா., அதென்ன அந்த அம்மாவை சாக சொல்றிங்க.., அவ்ளோ கோபமா அவங்க மேல., ஏன்? “
” கோபமெல்லாம் இல்லை. புரியாம இப்படி பண்ணிட்டு வர்ராங்கலேன்னு வருத்தம். பின்னே என்ன சார் இதோட மூணு தடவை கையில் கட் பண்ணிட்டு வந்துட்டாங்க. பத்து வயசுல ஒரு பொண்ணு இருக்கு. கிளினிக் உள்ளேயே வரமாட்டேன்னு எங்க எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. மெதுவா அதட்டி சொல்லி பார்த்தும் கேட்கல.
சாக துடிக்கிறவங்க கிட்ட செத்து போங்க அப்படின்னு சொன்னா, நீ சொல்லி நான் ஏன் பண்ணனும்னு அதிர்ச்சியாகி நிற்பாங்க. அந்த கேப்பில் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிற வேண்டியது தான்…, நமக்கு அவங்கள எப்படியாவது காப்பாத்தணும் , அதான் இந்த ட்ரிக்., ” என்பதை கேட்டவன்
” நிறைய சூசைடு கேஸ் வருவார்களா., போலீஸ்ட இன்போர்ம் பண்ணுவீங்க தானே.., “
” ம்ம்., அதெல்லாம் பாலோவ் பண்றோம் சார்., இங்க இப்போ நிறைய தற்கொலை முயற்சி பண்றவங்கள தான் கூட்டிட்டு வர்ராங்க. சிட்டில பொண்டாட்டியை அடிச்சு கொடுமை பண்றாங்கன்னு வருவாங்க. கிராமத்தில் படிக்காதவங்க குடிக்கு அடிமையாகி, அவங்க வீட்டுல இப்படி பண்றாங்கனு வருவாங்க. குட்டி பொண்ணுங்க கூட வர்ராங்க சார்., என்ன பண்றதுன்னு தன் தெரியல., ரொம்ப கஷ்டமா இருக்கு.,
மறுவாழ்வு மையம் போய் திருந்தி வந்தாலும், ஊருக்கு ரெண்டு கடை திறந்து வச்சிட்டு வாங்க வாங்கனு கூப்பிட்டு, குடிக்க கொடுத்தா, எவன் திருந்துவான். முதல்ல அவங்களை தான் அடிச்சு வெளுக்கணும். ஆனால் நம்மாலே முடியாதே., என்ன பண்றது..,” என பேசி கொண்டு போனவளை பார்த்து, அவனின் மனதில் அவள் இன்னும் அழுத்தமாய் பதித்தாள்.
” ம்ம்., அதுக்கு ஏதாவது பண்ணுவோம்..,” என தலையை ஆமோதிப்பாய் ஆட்டி விட்டு, கேஸ் சீட் எடுத்து எழுத ஆரம்பித்து விட்டான். அடுத்த வேலையை பார்க்க நந்துவும் அங்கிருந்து சென்று விட்டாள். ஆனாலும் அவளை பற்றிய சிந்தனையே மனதில்.
” காலேஜ் பொண்ணுங்க பசங்கள லவ் பண்ணிட்டு, ஜாலியா சுத்தும் போது, அதை எல்லாம் தவிர்த்து, இந்த வயதில் இப்படி பக்குவமா பேசிட்டு இருக்காளே , இவளோடு வாழ்க்கையை வாழ கொடுத்து வச்சி இருக்கனும்., அவனை எப்படி எல்லாம் பார்த்துக்குவா., ” என மனம் சிந்திக்க, தலையை உலுக்கி கொண்டு சுயம் பெற்றான்.
” இவளை பத்தி நான் ஏன் யோசிக்கணும், தர்ஷி சொன்னது நிஜமாயிரும் போலயே., வாயை வச்சிட்டு சும்மா இல்லாம என்னனெமோ சொல்லி, என்னையும் இப்படி யோசிக்க வச்சிட்டாளே., ” என அவளோடு மனதோடு பேசி கொண்டு இருந்தவன், சிறிது நேரத்தில் வழக்கமான பணிகளுக்கு உள்ளே ஆழ்ந்து விட்டான்.
அப்பெண்ணின் கணவனை மறுவாழ்வு மையத்திற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே, உங்கள் மனைவி இனி உங்களுக்கு, இல்லைனா தற்கொலைக்கு தூண்டி விடுறிங்கனு சொல்லி கேஸ் போட்டு உள்ளே போட்டு விடுவோம் என்று பயமுறுத்தியும், இன்னும் பல அறிவுரைகளையம் அவருக்கு கூறி அனுப்பி வைத்தனர்.
***
” காலையில இருந்து ஒரே வேலைக்கா, சாப்பிட கூட நேரமில்லை. என்ன பொழப்போ.., ” என பக்கத்து வீட்டு ராணி அக்கா புலம்பி கொண்டு இருந்தார் சுகந்தியிடம். அதை கேட்ட வைபவ் ” ஏன்கா, காலையில இருந்து ஒரே வேலையை தான் செஞ்சாங்கன்னு சொல்ராங்களே. இவங்க வேலையை பார்க்க ஒர்த் இல்லையா.., இல்லை அந்த வேலை அவ்ளோ கஷ்டமா இருக்கா.., என்னனு புரியலையே.., ” என ராணியின் காலை வாரினான்.
” ஏன்டா நீ வேற, அந்த அக்கா காதுல விழுந்துச்சு இன்னைக்கு வைக்க போற பிரியாணிக்கு உன்னை சைடு டிஷ்ஷா மாத்திரிவாங்க..,” அவனின் கேலிக்கு இவளும் பதில் உரைக்க.
” இதுக்கு ஏன் இவ்ளோ நீட்டி முழக்கி சொல்ற..,. ஸ்ட்ரைட்டா குருமா ஆகிருவாங்கனு சொல்லுக்கா. உனக்கு ஒன்னு தெரியுமா? அதுவும் அவங்க நல்லாவே சமைக்க மாட்டாங்க. ஆனால் பேசி பாரேன்.. தாணு செப் மாதிரி, நான் தான் பெரிய சமையல்காரின்னு வேற பீத்திக்குவாங்க. அம்மா ஏன் தான் இந்த அக்கா சொல்ற புருடா எல்லாம் நம்பிட்டு இருக்கோ…, தெரியல.” சிறு பிள்ளைக்கு அவர்களின் பேச்சு வெட்டி அரட்டையாய் தானே தெரியும்.
” அம்மாவுக்கும் அவங்க பொய் தான் சொல்லுவாங்கன்னு தெரியும்டா. ஆனால் நம்மள நம்பி ஒருத்தங்க பேச வரும் போது எப்படி மூஞ்சை திருப்பிட்டு போக முடியும். அவங்களுக்கு துணையாக வீட்டில் யாருமில்லை. தனியா இருக்க பயந்துட்டு, இப்படி வாசலில் உட்கார்ந்து வம்பு பேசிட்டு இருக்காங்க. அதான் ஒன்னும் சொல்றது இல்லை. எல்லாம் கேட்டும் கேட்காத மாதிரி இருப்பாங்க.. சரி., அவங்கல விடு. இந்த தடவை மேத்ஸ் எக்ஸாம்ல மார்க் ஏன் கம்மி ஆச்சு., புரியலையா., நான் வேணா திருப்பி சொல்லி தரவ., என்றபடி அவன் மனதை படிப்பின் புறம் திசை திருப்பி விட்டாள். ஒரு மணி நேரத்தில் வீட்டு பாடங்களை முடிக்க வைத்து, சாப்பிட வைத்து , தட்டி கொடுத்து உறங்க வைக்க முனைந்தவள் மனமோ ஆரவ் கூறிய யோசனைகளை எப்படி செயல்படுத்தலாம் என அவன் சொன்னவைகளை அசை போட ஆரம்பித்தது.
” குடிக்கு அடிமையானவங்க மறுவாழ்வு மையம் போயிட்டு, வீட்டுக்கு உடனே அனுப்பாம, கார்மெண்ட்ஸ் கம்பெனில பேசி, அங்கேயே தங்கி வேலை பார்க்கிற மாதிரி அரேஞ் பண்ணுவோம். ஆறு மாசம் வரை ரூல்ஸ் போட்டு உள்ளேயே இருக்க வச்சிட்டோம்னா, அடுத்து நிறைய பேர் குடியை மறந்துருவாங்க . உமையாள் ஆண்ட்டிகிட்ட நான் பேசுறேன். மொத இன்னைக்கு வந்த கேஸ் அனுப்பி பார்ப்போம். ரிசல்ட் எப்படினு பார்த்துட்டு அடுத்து என்னனு யோசிப்போம்..,” என இரவு வீட்டுக்கு திரும்பி வரும் வேளையில் அவன் உரைத்தவை மனதில் ஓட்டிக்கொண்டே நித்திரையில் ஆழ்ந்தாள்.
********
error: Content is protected !!