Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 4

அத்தியாயம் 4

எத்தனை எத்தனை நிகழ்வுகளை கடந்து அனைவரின் கண்களையும் மறைத்து என தான் கட்டி வைத்த தனிக் கோட்டை ஒன்று சரிவதை போல ஒரு நொடி உலகமே நின்றதாய் தான் தோன்றியது ப்ரணித்தாவிற்கு.



Advertisement

‘இவள் எதற்காக இப்பொழுது இங்கே வர வேண்டும்?’ நினைக்கும் பொழுதே தோன்றியது என்னவோ விஜயலக்ஷ்மிக்கு ஒரு வருடத்திற்கு முன் தான் அழைத்தது தான்.

படிப்பு முடிந்து இந்தியா வருவதாய் இருந்தவளை ப்ரணித்தா பேசி தானே அங்கேயே வேலை பார்க்க வைத்தது.

Advertisement

Advertisement

இப்படி சொல்லாமல் வந்து நிற்பாள் என நினைக்கவே இல்லை.

‘ஒண்ணுமில்ல ப்ரணி! வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் தானே ஆச்சு? எதாவது லீவ் கிடைச்சிருக்கும். இங்க எல்லாரையும் பார்த்துட்டு போக வந்திருப்பா!’ தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் ப்ரணித்தா.

Advertisement

‘ஒரு மாசம் இருக்குமா லீவ்? எப்போ கிளம்புவா?’ அடுத்த நொடி இப்படி தான் தோன்றியது.

“அஞ்சு வருஷமா நான் காத்திட்டு இருக்கேன். வேணாம்னு போனா தானே! இப்ப எதுக்கு வரணும்? ஒருவேளை அவளை பார்த்திருப்பானோ அர்ஜுன். அவ பார்த்திருப்பாளா?” புலம்பல் அதிகமாக அதிகமாக நெஞ்சமெல்லாம் எரிந்தது விஜயலக்ஷ்மி மேல் உண்டான ஆத்திரத்தில்.

“அர்ஜுன்! நான் இருக்கேன் உனக்கு! ப்ளீஸ்! என்கிட்ட வந்துடு. அவ வேண்டாம். நிச்சயதார்த்தம் நடக்க போற நேரம் நீ வேண்டாம்னு போனவ உனக்கு வேண்டாம் அர்ஜுன்!” என்று சத்தமாய் அவள் கூற, விடுதியில் அவளுடன் தங்கி இருக்கும் பெண் அவளை வித்யாசமாய் பார்த்து, 

“ஆர் யூ ஓகே?” என்று கேட்டுவிட்டு சென்றாள்.

‘இது சரி வராது. நேர்ல பார்த்து அவளை அனுப்பி விட்டா தான் நாம நினைச்சது நடக்கும்!’ எண்ணிக் கொண்டவள் அந்த வார இறுதியில் கிளம்பிவிட்டாள் விஜயலக்ஷ்மியை காண அவள் வீட்டிற்கே!.

“எனக்கு எதுவுமே சரியாப்படல விவேக்! என்னவோ நடக்குது. ஆனா நம்ம கண்ணை மறைச்சு நடக்குது” தனதறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டே கூறினாள் அனன்யா.

“எதுவோ புரியுற மாதிரி தான் இருக்கு! ஆனா ஒண்ணுமே சுத்தமா புரியல. எந்த பக்கம் போனாலும் கேட்டை சாத்தி வச்ச மாதிரி பீல் ஆகுது. நீங்க என்ன நினைக்குறிங்க?” நடந்தப்படியே கேட்டு, யோசிப்பதாய் இரு விரல்களை காற்றில் ஆட்டி, கண்களோடு கவனத்தையும் மேல்நோக்கி வைத்து அனன்யா குழம்பி விவேக்கையும் குழப்பப் பார்த்தாள்.

அவளை மெதுவாய் இழுத்து தன் அருகில் கொண்டு வந்து நிற்க விட்டவன் அவள் வயிற்றில் அழகாய் பாந்தமாய் வயிற்றில் இருக்கும் குழந்தை தன் கையிலேயே இருப்பதை போல பிடித்துக் கொண்டு,

“அம்மும்மா! அம்மா கண்டதையும் மைண்ட்ல மனசுல வச்சுட்டு சுத்துறாங்க. நீங்க அதெல்லாம் எதையும் காதுல வாங்கிக்க கூடாது சரியா! இன்னும் நாலே மாசத்துல நீங்க அப்பா கைக்கு வந்துடுவிங்களாம். அப்பா உங்களை பத்திரமா பார்த்துப்பேனாம். டீல் டியர்?” என்று கேட்டு முத்தாய்ப்பாய் முத்தத்தையும் அங்கேயே கொடுக்க,

“தள்ளுங்க அங்குட்டு!” என அவனை தள்ளிக் கொண்டு வந்து படுக்கையில் விழுந்தாள்.

“மெதுவா டி! என் பேபிமா பாவம்ல?”

“யோவ்! போயா!” என்றவள் திரும்பிக் கொள்ள,

“ரொம்ப கோவமோ?” என்றவன் அவளருகே வந்து அணைத்தபடி படுத்துக் கொண்டான்.

“என்ன பண்ணிட்டு இருக்க நீ? அதுவும் பிள்ளையை வயித்துல வச்சுக்கிட்டு?” என தலையை வருடிக் கேட்க,

“அதான் பேச வேண்டியதெல்லாம் அங்கேயே பேசியாச்சுல்ல? தள்ளிப் படு டா!” என்றவள் வாயை மூடியவன்,

“புருஷன் டி!” என்று சொல்ல, அவன் கைகளுக்குள் அவள் இதழ்கள் அசைந்தது தெரிந்து,

“பச்சையா திட்டுற! அதான! சரி விடு! ரூம்குள்ள தானே!” என்றவன் கையை எடுத்தான்.

“அப்படி தான் சொல்லுவேன்! நடு ஹால்ல என்ன நடு ரோட்ல நின்னு கூட சொல்லுவேன்! என்ன செய்ய முடியும் உங்களால?”

“மூச்சு வாங்குது பாரு! முதல்ல எழுந்து உக்காரு!” என அமர வைத்தவன்,

“தண்ணி வேணுமா?” என கேட்டு, குடிக்க கொடுத்து சில நொடிகள் அமைதியாய் இருக்க அவளை தலை சாய்த்தான் தன் தோளோடு.

“அர்ஜுன்க்காக தான் புலம்புறனு தெரியுது. ஆனா ஏன்னு புரியல!” என்றான் தெளிவாய்.

“என்ன புரியல? அவன்கிட்ட பொண்ணு பார்க்கலாமானு கேட்க சொன்னேனே கேட்டீங்களா?” என்றாள் நிமிர்ந்து கோபமாய் முறைத்து.

“டென்ஷன் ஆகாத டி! அவனே இப்ப தான் கொஞ்ச நாளா ஒட்டி வர்றான். நான் கல்யாணம்னு சொன்னா அடுத்து இந்த வீட்டுப் பக்கம் வருவானா? அதுவும் விஜி வந்திருக்க நேரம் எப்படி பேச அவன்கிட்ட?”

“அது தான் நானும் யோசிக்குறேன்! விஜி கல்யாணமே வேண்டாம்னு சொல்றா! அவன் கல்யாணம்னு பேசவே விடமாட்டுறான்” என இடைவெளிவிட்டவள்,

“ஒருவேளை ரெண்டு பேரும் லவ் பன்றாங்களோ?” என்று கணவனைப் பார்க்க,

“பண்ணிட போறாங்க! நீ வேற! வந்து ஒரு வாரம் ஆகப் போகுது! ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா சுத்தி இப்ப தான் எங்க ஜாயின் பண்றதுன்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கா. கூடவே இன்னும் படிக்கணும்.எக்ஸாம் கிளியர் பண்ண போறேன்னு சொல்லிட்டு இருக்கா!” என்ற விவேக்,

“உன் தம்பி அதுக்கும் மேல! விஜி பக்கமே திரும்ப மாட்டுறான். நானும் விஜி வந்ததுல இருந்து அர்ஜுனை பார்த்துட்டு தான இருக்கேன்? அவன்கிட்ட இப்படி எதுவும் கேட்டு வச்சுடாத! கொலைவெறில இருப்பான். இவங்க ரெண்டு பேருக்குமெல்லாம் இனி எந்த காலத்துலயும் செட்டாகாது” என்றான்.

“ஆனா உங்க அம்மா அப்பாக்கு அந்த ஆசை இருக்கு!” என்றாள் கவலையாய்.

“அவங்களுக்கு மட்டுமா? ப்ச்! விடு! அதை பேசி என்னாகப் போகுது?”

“நான் சொல்றது இப்போ விவேக்! எனக்கு என்னவோ ரெண்டு பேர்கிட்டயும் பேசி பார்க்கலாமோனு தோணுது!” 

“அனு! அதெல்லாம் வேண்டாம். ஐம் வெரி சீரியஸ்! உங்க அம்மா இறந்ததுல இருந்தே இன்னும் அவன் மீண்டு வர்ல. தேவையில்லாம எதுவும் பேசி வைக்காத. நிச்சயமா சொல்றேன். அடுத்து அவனை இந்த ஊர்லயே நாம பார்க்க முடியாது!” என்றான் அத்தனை உறுதியாய்.

அதில் அனன்யா அமைதியாகிவிட, பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், “புரிஞ்சிக்கோ அனு! விஜி வந்த இத்தனை நாள்ல அர்ஜுன் எப்பவாவது ஜஸ்ட் நார்மலா அவளை ஃபேஸ் பண்ணி பார்த்தியா? அன்னைக்கு ஈவ்னிங் டின்னர் கூப்பிட்டியே! வந்தானா?”

“எனக்கு புரியுதுங்க! ஆனாலும் என்னவோ தோணுது. அம்மாகிட்ட அன்னைக்கு சந்தோசமா தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான்” என்றவள் கண்கள் கலங்கப் பார்க்க,

“அவன் பிடிக்காம எதையும் மத்தவங்க இஷ்டதுக்காக பண்றவன் இல்ல!” என்றாள்.

“நாங்களும் விஜிகிட்ட கேட்டிருக்கணும் அட்லீஸ்ட் சொல்லி இருக்கனும் அனு! அதிக நம்பிக்கைல தான் செஞ்சோம். எங்களால தான் எல்லாம்!” என்று அவன் வருந்தவும் தான் சுதாரித்துக் கொண்டாள் அனன்யா.

“நடக்கணும்னு இருக்குறது தானே நடக்கும்? யாரையும் குறை சொல்லி எதுவும் ஆகப் போறதில்ல. என்னவோ மனசு பாரமாகுது. மனசுக்குள்ள மசமசன்னு எதுவோ உறுத்திக்கிட்டே இருக்கு!” என்றாள் நிஜத்தை.

“ஒண்ணுமில்ல! அர்ஜுன், விஜி ரெண்டு பேரும் இப்ப நம்ம கண்ணு முன்னாடியே இருக்காங்க. அவங்கள பார்த்து நீயே டிப்ரெஷன் எடுத்துக்குற! வேற எதுவும் இல்ல. என்னால அர்ஜுன்கிட்ட நிச்சயமா இந்த நேரத்துல பேச முடியாது. பட் விஜிகிட்ட பேசலாம். யாராவது ஒருத்தருக்கு கல்யாண் நடந்தா எல்லாம் சரி ஆகும்!” என்றான் விவேக்.

அடுத்தநாள் மாலை நான்கு மணிக்கெல்லாம் விஜயலக்ஷ்மியின் வீட்டிற்கு வந்துவிட்டாள் ப்ரணித்தா!

“அண்ணி!” என்ற குரலில் அனன்யா வாசலைப் பார்த்தவள்,

“ப்ரணி!” என ஆச்சர்யமாய் அழைத்து வரவேற்றாள்.

“எப்படி இருக்கீங்க அண்ணி?” என்ற ப்ரணித்தா,

“வாழ்த்துக்கள் அண்ணி!” என்றும் சொல்ல,

“ம்ம்!” என்ற அனன்யா இன்னும் யோசனையில் தான் இருந்தாள்.

அன்று ஒரு கோபத்தில் அர்ஜுனிடம் ப்ரணித்தா என்னிடம் பேசவே இல்லை என்று சொல்லி இருக்க, இப்பொழுது அவள் நேரில் வரவும் தம்பியை நினைத்துக் கொண்டவள் ‘சொல்லி இருப்பானோ?’ என நினைத்து நிற்க,

“எங்க அண்ணி விஜி வந்திருக்காளாமே!” என்றாள் கொண்டு வந்த பழங்களை அனன்யா கைகளில் கொடுத்து விஜயலக்ஷ்மியை பார்வையால் தேடியபடி.

ப்ரணித்தாவை அனன்யா தன் திருமணத்தில் இருந்து தான் நன்கு அறிவாள். அதற்கு முன்பும் பார்த்துக் கொண்டாலும் அதிகமாய் பேச்சு வார்த்தைகள் கிடையாது.

அன்னை தந்தை இருவர் இவள் கல்லூரி படிக்கும் பொழுது இறந்துவிட தந்தையின் அண்ணன் தன் சுயவிருப்பத்தில் தான் அவர் வீட்டிற்கு ப்ரணித்தாவை அழைத்து சென்றார்.

பெரியப்பா வீட்டில் எந்த குறையும் இல்லை என்றாலும் தன் வீட்டில் இருந்தது போல இல்லை என்ற காரணத்தினாலேயே படிப்பு முடிந்து வேலை கிடைத்ததும் விடுதிக்கு வந்துவிட்டாள் ப்ரணித்தா.

அதே சமயம் தான் அனன்யா திருமணம் கூடவே பெங்களூருவில் இருந்து தன் வேலையை சென்னைக்கு மாற்றிக் கொண்டு என அர்ஜுன் வந்தது.

கண்டதும் காதல்! அதுவே தான்! அர்ஜுனைப் பார்த்ததும் பிடித்துவிட்டது ப்ரணித்தாவிற்கு. பெரியப்பாவின் குடும்பத்தோடு வந்தவள் அர்ஜுன் குடும்பத்தின் மொத்த விவரங்களையும் அவர் மூலம் அறிந்து கொண்டார்.

அர்ஜுன் அன்னை கயல்விழியோடு பழகிக் கொண்டாள்.

தாய் தந்தை இல்லை என்ற கனிவும் இரக்கமுமே பிரணித்தாவுடன் அர்ஜுன் முதலில் பேச காரணமாய் அமைந்தது.

இப்பொழுது வரை அவன் எண்ணம் அது மட்டும் தான். தான் யாருமற்று தற்பொழுது நிற்கும் நிலையில் அவள் வெகு சிறு வயதிலேயே அந்த வலியை கடந்து வந்திருக்க, அதற்காகவே அவளுக்கு கொஞ்சம் சலுகை உண்டு அவனிடம்.

கொஞ்சம் பாவமாய் அவள் முகம் மாறினாலும் இப்பொழுது எல்லாம் அன்னை முகம் கண் முன் தோன்றிவிட, எதற்கும் மறுப்பில்லை என்றானது.

நாட்கள் கடக்க அவளை நல்ல தோழியாய் ஏற்றுக் கொண்டு அவளிடம் அனைத்தையும் பகிரும் அளவுக்கு வந்திருந்தான் அர்ஜுன்.

திருமணமாகி விவேக் வீட்டிற்கு சென்ற அனன்யாவிற்கு பிரணித்தா அவ்வளவு பழக்கமில்லை என்றாலும் அர்ஜுன் மூலம் ப்ரணித்தாவை அறிந்தவளும் சிநேகமாய் தான் பார்த்தாள்.

அதன்பின் தான் தேவைக்காக தானே சென்று அனன்யா விஜயலக்ஷ்மியிடம் பழக ஆரம்பித்தாள் ப்ரணித்தா.

“அண்ணி! நின்னுட்டே தூங்குறீங்களா?” என்று ப்ரணித்தா சிரிக்க, நினைவுக்கு வந்தவள்,

“உக்காரு ப்ரணி! என்ன சாப்பிடுற?” என்று கேட்க,

“எதுவானாலும் ஓகே அண்ணி!” என்றதும் அவளுக்கு குடிக்க ஜூஸ் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தாள் அனன்யா.

“விஜி வந்தது உனக்கெப்படி தெரியும் ப்ரணி?” அனன்யா கேட்க,

“அர்ஜுன் மாமா தான் சொன்னாங்க அண்ணி!”

“அர்ஜுனா?” என்றவளுக்கு தன் சகோதரனை நினைத்தே குழப்பம் தான்.

“பிரண்ட்டை பார்க்க போறேன்னு சொன்னா ப்ரணி! எப்போ வர்றான்னு தெரியலையே! நீ கால் பண்ணிருக்கலாம்ல?” என்று சொல்ல,

“ஓஹ்! மூணு வருஷமாச்சே! வீட்டுல தான் இருப்பான்னு நினைச்சேன்! சரி இன்னொரு நாள் பார்த்துக்குறேன்!” என்றவள்,

“ஆமா எப்போ ரிட்டர்ன் கிளம்புறா?” என்று கேட்க, ‘என்ன இவள்’ என புருவம் சுருக்கி பார்த்தாள் அனன்யா.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!