Skip to content
Post Views: 807
கவிதை 6
அடுத்த நாள் நீல நிற சுடிதாரை அணிந்து கொண்டேன்…
பயமும் தயக்கமுமமாக இருந்தது…
உணர்வுகளை அடக்கிக் கொண்டே, வெளியே வர, என் அம்மா எனது உணர்வுகளை உள்வாங்கி இருப்பார் போலும், “பயப்படாம பேசும்மா” என்றார்.
Advertisement
நானும், “சரிம்மா” என்று சொல்லிக் கொண்டே ஸ்கூட்டியில் கிளம்பி விட்டேன்…
பெரிய தூரம் இல்லை…
பக்கம் தான்…
Advertisement
அவனது ஃபிளாட்டுக்கும் வந்து விட்டேன்…
Advertisement
அவன் வாசலில் எனக்காக காத்துக் கொண்டு நின்று இருந்தான்.
என்னை பார்த்து புருவத்தை ஏற்றி இறங்கியவன், “அழகா இருக்க” என்றான்…
நானும் மென் சிரிப்புடன் ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு, அவன் அருகே சென்று கையை பற்றிக் கொண்டேன்.
Advertisement
“என்னடி கை இப்படி குளிருது?” என்று கேட்டான்…
“பயமா இருக்கே” என்றேன் தழுதழுத்த குரலில்…
“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே, என்னுடன் லிஃப்ட்டில் ஏறிக் கொண்டான்…
எனக்கு இதயம் நின்று விடும் உணர்வு தான்…
ஒரு வழியாக அவன் வீட்டுக்கும் சென்று விட்டேன்…
கதவை திறந்து கொண்டு அவன் முன்னே செல்ல, நான் தயக்கமாக பின்னே சென்றேன்…
அங்கே சோஃபாவில் அமர்ந்து இருந்தார் அவன் தாய் மீனாட்சி…
புடவை அணிந்து இருந்தார்…
தலையில் ஆங்காங்கே நரை முடிகள் இருந்தன…
என்னை ஆராய்ச்சியாக பார்த்தார்…
நான் மென்மையாக சிரிக்க முயன்றேன்…
“புடவை கட்டுற பழக்கம் இல்லையா?” என்று கேட்டார்…
முதல் கேள்வியிலேயே தடுமாறி விட்டேன்…
“அது” என்று ஆரம்பித்த எனக்கு வார்த்தைகள் வரவில்லை…
“சாரி உடுத்து ஸ்கூட்டி ட்ரைவ் பண்ணுறது கஷ்டம் தானேம்மா, வெயில் வேற” என்றான் பிரபஞ்சன் எனக்காக.
“நீ என்ன அவளுக்காக பதில் சொல்லிட்டே இருக்க?” என்று அடுத்த இடியை என் தலையில் போட்டார்…
கறார் என்று தெரியும்…
இந்தளவு கறார் என்று இப்போது தானே தெரியும்…
“எப்படி இருக்கீங்க அத்தை?” என்று கேட்டேன்…
நேற்று அவன் பேசிய போலவே பேசலாம் என்று பார்த்தேன்…
ஆனால் அதற்கும் ஆப்பு வைத்து விட்டார்…
“கல்யாணம் பண்ணாமல் அத்தையா? ரொம்ப தான் அவசரம் உனக்கு” என்றார்.
என்னை வந்ததில் இருந்தே ஏதாவது சொல்லிக் கொண்டு இருந்தார்…
வாழ்க்கை முழுக்க இவருடன் எப்படி குப்பை கொட்டுவது என்று இப்போது நினைக்கவே மலைப்பாக இருந்தது.
கஷ்டப்பட்டு சிரிக்க முயன்று தோற்றுப் போனேன்…
என்னைப் பார்க்க பிரபஞ்சனுக்கு பாவமாக இருந்து இருக்க வேண்டும்…
“எல்லாத்துக்கும் குறை சொல்லிட்டே இருந்தா எப்படிம்மா?” என்று கேட்டான்.
அவனை முறைத்தவரோ, “சரி இரு” என்று என்று என்னிடம் சொல்ல, நானும் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
பிரபஞ்சனும் அங்கே அமர்ந்து கொள்ள, “வந்தவங்களுக்கு காஃபி கொடுக்க வேணாமா?” என்று கேட்டார் அவர்…
அவனும் சிரித்துக் கொண்டே எழுந்து உள்ளே செல்ல, எனக்கோ ஆச்சரியமாக இருந்தது…
அவனை நேர்த்தியாக வளர்த்த பெருமை அவருக்கு தான் சேரும்…
எப்போதுமே அவன் கட்டுப்பாட்டை பார்த்து பிரமித்து இருக்கின்றேன்…
இன்று தான் காரணம் தெரிந்தது.
அவன் சென்றதுமே என்னை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “வீட்ல உன்னை சரியா வளர்க்கலையா என்ன?” என்று கேட்டார்.
சுருக்கென்று தைத்தது எனக்கு…
என்னை வேண்டாம் என்கின்ற தோரணையிலேயே பேசிக் கொண்டு இருக்கின்றாரே…
கண்களும் கலங்கி விட்டன…
அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தேன்.
என்ன பதில் சொல்வது இதற்கு?
“உன் அம்மாவும் இப்படி தான் போல” என்று ஜாடை பேசினார்…
கோபம் வந்தது அடக்கிக் கொண்டேன்…
என் பிரபஞ்சனுக்காக அடக்கிக் கொண்டேன்…
அவனோ காஃபி கொண்டு வந்து நீட்டினான்…
குடிக்கவே மனம் இல்லை…
அவனை ஏறிட்டுப் பார்த்தேன்…
எனது கலங்கிய கண்களை பார்த்தே அவன் தாய் ஏதோ பேசி இருக்கின்றார் என்று கண்டு கொண்டவனோ, “குடி” என்றான் மென்மையாக…
வாங்கிக் கொண்டே அமர்ந்து இருந்தேன்…
“அப்போ இந்த பிள்ளையை தான் கல்யாணம் முடிக்க போறியா?” என்று என் முன்னாலேயே கேட்டார்…
அவனுக்கே அந்த கேள்வி ஒரு மாதிரி ஆகி விட, “என் முடிவுல மாற்றம் இல்ல” என்றான் அழுத்தமாக…
குரலில் அழுத்தம் அப்படி இருந்தது…
என் காயப்பட்ட மனதுக்கு அது மருந்தாக இருந்தது…
அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை…
முள்ளில் இருக்கும் உணர்வு…
பிரபஞ்சனின் தாயும் ஏதாவது என்னை அசைத்து பார்க்கலாம் என்று முயன்று பார்த்தார்…
முடியவில்லை…
இருக்கும் வன்மம் எல்லாம் தீர்த்து விட்டு, “அம்மா கிட்ட சொல்லு, பேசி முடிச்சிடலாம்” என்றார் என்னிடம்…
“சரி ஆன்டி” என்று சொல்லிக் கொண்டே எழுந்த நான், “வர்றேன்” என்று மேலோட்டமாக சொல்லி விட்டு விறு விறுவென வெளியேறி விட்டேன்…
பிரபஞ்சன் என்னை பார்த்து விட்டு, “அம்மா நான் விட்டுட்டு வர்றேன்” என்று சொல்லிக் கொண்டே பின்னால் வந்தான்…
நான் அவனை பார்க்கவில்லை…
லிஃப்ட்டில் ஏறிக் கொண்டேன்…
அவனும் ஏறிக் கொண்டான்…
“ஹரிணி” என்று அழைத்துக் கொண்டே கையை பிடித்துக் கொள்ள முயல, சட்டென உறுவிக் கொண்டே, “ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றபடி அப்படியே நின்று இருந்தேன்…
கண்ணில் இருந்து கண்ணீர் சட்டென வழிந்தது…
வேகமாக துடைத்துக் கொண்டேன்…
“என்னடி ஆச்சு?” என்று கேட்டான்…
முதல் நாளே அவன் அம்மாவை பற்றி அவனிடம் குறை சொல்ல எனக்கு இஷ்டம் இல்லை…
அதே சமயம், என்னால் இந்த வலியை தாங்கிக் கொண்டே நிற்கவும் முடியவில்லை…
அழுகை வந்தது…
“ஒன்னும் இல்ல” என்றேன் தலையை தாழ்த்திக் கொண்டே…
கீழ் தளமும் வந்து விட்டது…
வேகமாக ஸ்கூட்டி அருகே செல்ல, அவனோ என்னை மறித்து நின்றபடி, “அவுட்டிங் போகலாம் வா” என்றான்…
“இல்ல நான் வீட்டுக்கு போகணும்” என்று அவனை பார்க்காமலே சொல்ல, “வர சொல்றேன் ல” என்று சொல்லிக் கொண்டு, எனது பையை வாங்கியவன், தனது பைக்கில் ஏற, “என்னை கஷ்டப்படுத்தாதீங்க பிரபஞ்சன்” என்றேன்…
“ஏறுன்னு சொல்றேன்” என்றான் அதட்டலாக…
அவன் என்ன செய்வான்?
அவனை எதற்காக சும்மா மனது வலிக்க வைக்க வேண்டும்? என்று நினைத்துக் கொண்டே பைக்கில் ஏறி இருந்தேன்…
எதுவும் பேசவில்லை…
அவனும் பேசவில்லை…
பைக் புறப்பட்டது…
சற்று நேரத்தில் நாங்கள் வழக்கமாக சந்திக்கும் பாழடைந்த கட்டிடம் அருகே வந்து வண்டி நின்றது…
நானும் இறங்கிக் கொண்டே விறு விறுவென உள்ளே நடந்தேன்…
அவனும் பின்னால் நடந்து வந்தான்…
கொஞ்ச தூரம் சென்றதுமே, என்னை இழுத்து சுவரில் சாயவைத்தவன், எனது கழுத்தை பற்றி, எனது கலங்கிய விழிகளை பார்த்துக் கொண்டே, “என்னடி?” என்று கேட்டான்.
எனக்கு சட்டென அழுகை வந்து விட்டது…
அவனிடம் சொல்ல கூடாது என்று நினைத்தாலும் அழுகை என்னை காட்டிக் கொடுத்து இருக்க, “உங்க அம்மா என்ன எல்லாம் கேட்டாங்க தெரியுமா?” என்று அழுகையுடன் கேட்டேன்…
என்னை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “என்ன கேட்டாங்க?” என்று கேட்டான்…
அவனுக்கே எனது அழுகை ஒரு மாதிரி ஆகி இருக்க வேண்டும்…
“என்னை சரியா வளர்க்கலையான்னு கேட்டாங்க, என் அம்மாவும் இப்படி தானேன்னு சொன்னாங்க” என்று அழுகையும் விம்மலுமாக சொல்லி முடித்துக் கொண்டே, அவன் ஷேர்ட்டை பற்றி, அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டேன்…
எனது வலியை சொன்னேன் தவிர்த்து, அவன் அம்மாவுக்கு ஒரு வார்த்தை கூட நான் திட்டவில்லை…
அவனுக்கு கஷ்டமாக இருக்கும் என்று எனது கோபத்தை எல்லாம் எனக்குள் புதைத்துக் கொண்டேன்…
என்னை இறுக அணைத்துக் கொண்டே, முதுகை வருடிக் கொடுத்தான்…
அவனுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை…
அவன் தாய் பேசியது அதிகப்படி என்று அவனுக்கும் புரிந்து இருக்க, “சாரி டி” என்றான்…
அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, “எதுக்கு நீங்க சாரி சொல்றீங்க?” என்று கேட்டேன்…
மென்மையாக சிரித்தபடி, என் இதழ்களில் மென்மையாக இதழ் பதித்து விலகியவன், “எனக்காக பொறுமையா இருந்து இருக்கியே… அம்மா பேசுனது தப்பு தான்… ஏதோ ஆதங்கத்தில் பேசிட்டாங்க போல, சீக்கிரம் சரி ஆயிடுவாங்க” என்றான் என் நெற்றி முட்டிக் கொண்டே…
நானுமே, “சரி ஆயிடுவாங்க தானே” என்று கேட்க, அவனும், “ம்ம் கண்டிப்பா” என்றான்…
“சிரிடி” என்றான்…
மெலிதாக சிரித்தேன்…
மீண்டும் என் இதழ்களை சிறை செய்து விடுவித்தான்…
என் மன வலிக்கு அவன் முத்தங்கள் ஆறுதலாக இருந்தன…
அதனை தொடர்ந்து இருவரும் வீட்டுக்கு கிளம்பி விட்டோம்…
என் முகத்தை பார்த்தே, என் அம்மா ஏதோ பிரச்சனை என்று யூகித்து விட்டார்…
தூண்டி துருவி விசாரித்தார்…
நான் மேலோட்டமாக சொன்னேன்…
அவரை பற்றி பேசியதை எல்லாம் சொல்லவில்லை…
மனவருத்தப்படுவரே…
“போக போக சரி ஆயிடும் மா” என்றார் அவர்…
அடுத்த நாள் அவரே அழைத்து பிரபஞ்சனின் அம்மாவிடம் பேசினார்…
அவர் சற்று கறாராக பேசினாலும், மகனுக்காக திருமண விஷயத்தை பார்க்க சம்மதம் சொல்லி இருந்தார்…
கொஞ்சம் கொஞ்சமாக திருமண வேலைகளை ஆரம்பித்து இருந்தார்கள்…
எதிர்பார்த்த தருணம் தான்…
ஆனாலும் பிரபஞ்சனின் அம்மா பேசிய வார்த்தைகளின் காயம் என் மனதில் இருந்ததால் என்னவோ திருமண விஷயங்களில் ஆசையாக ஈடு பட முடியாத மனநிலை தான்…
ஜாதகம் பார்க்கவில்லை…
பிரபஞ்சன் பார்க்க வேண்டாம் என்று சொல்லி இருப்பான் போலும்…
பெண் பார்க்க வர இருந்தார்கள்…
முதல் நாள் அவன் அழைத்து இருந்தான்…
என் குரலே சோர்வாக இருந்தது…
அவனுக்கும் புரிந்து விட்டது…
என்னை தொந்தரவு செய்யவில்லை…
“கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே ஓகே ஆயிடும்… நீ எதுவும் யோசிக்காதே” என்றான்…
கொஞ்சம் தெம்பாக இருந்தது…
நான் சோர்ந்து போனால் அவனும் சோர்ந்து போய் விடுகின்றானே…
அதற்காகவே இந்த நினைவுகள் எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு திருமண விஷயத்தில் ஈடு பட ஆரம்பித்து விட்டேன்…
பெண் பார்க்க வந்தார்கள்…
பிரபஞ்சனின் அம்மா, அன்று போல பேசவில்லை…
சாதாரணமாக பேசினார்…
அவரும் இதனை ஏற்றுக் கொண்டு ஆக வேண்டும் என்று மனதை தயார் படுத்த தொடங்கி விட்டார் போலும்…
பிரபஞ்சனும் அவரை மாற்றி இருப்பான் என்று நம்பிக்கை வந்தது…
திருமணத்துக்கு தேதியும் குறித்தாகி விட்டது…
சைவ முறைப்படி தான் திருமணம்…
நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து இருந்தோம்…
திருமணம் அன்று அலங்காரம் செய்து விட்டு, அப்பாவையும் வணங்கி விட்டு, அம்மாவிடமும் ஆசீர்வாதம் வாங்கி விட்டு கோவிலுக்கு புறப்பட்டு இருந்தேன்…
செந்நிற புடவையில் நான் அங்கே சென்று இறங்கிய நேரம், ஏற்கனவே அங்கே வந்த பிரபஞ்சன் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பேசிக் கொண்டு இருந்தான்…
வேஷ்டி சட்டையில் ஆளுமையாக நின்று இருந்தவனை ஆசையுடன் பார்த்தேன்…
நான்கு வருட காதல் இன்று நிறைவேற போகின்றது…
பிரபஞ்சனின் அம்மாவை பற்றிய சில நெருடல்கள் இருந்தாலும் எல்லாமே தள்ளி வைத்து விட்டு, அவனுடனான வாழ்க்கையை அழகாக ஏற்றுக் கொள்ள மனதளவில் தயாராகி விட்டேன்…
அவன் பேசிக் கொண்டே, என்னை ஒரு கணம் ரசனையாக பார்த்து விட்டு பேச்சை தொடர்ந்தான்…
திருடன் அவன், என்னை ரகசியமாக ரசித்து இருக்கின்றான்…
எனக்கு தான் அந்த தந்திரம் தெரியாமல் எனது தம்பியிடம் மாட்டிக் கொண்டே…
“அக்கா பார்த்தது போதும், கொஞ்சமாவது வெட்கப்படு” என்று என்னை கலாய்க்க, சிரிப்பு வந்தது… அடக்கிக் கொண்டே, நடந்து சென்றேன்…
சற்று நேரத்தில் அவன் மணமேடையில் அமர்ந்து விட்டான்…
நானும் சென்று அமர்ந்து கொண்டேன்…
எனது அம்மாவும் அவன் அம்மாவும் முன்னால் நிற்க முடியாது…
இங்கே விதவை என்றால் தள்ளி வைத்தே பழகி விட்டார்களே…
எங்களது உறவினர்கள் தான் தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை செய்து வைத்தார்கள்…
எனது உயிரை திருமணம் செய்ய போகின்றேன்…
மனம் எல்லாம் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது…
ஐயரும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, தாலியை எடுத்து நீட்ட, அதனை வாங்கிய பிரபஞ்சன் என் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுகளை இட்டான்…
சந்தோஷத்தில் இரு துளி கண்ணீர் அவன் கையை நனைத்து இருக்க, அவனோ, என் முத்தமிட்டு விட்டு முன்னால் திரும்பி இருந்தான்.
தைரியம் தான் அவனுக்கு…
அவ்வளவு பேர் முன்னால் நெற்றியில் முத்தம் பதித்து இருக்கின்றானே…
அந்த கணத்தில் எனக்கு தான் இதயத்தில் நீர் வற்றிப் போனது மிச்சம்…
நான் இப்போது திருமதி ஹரிணி பிரபஞ்சன் ஆகி விட்டேன்…
அதனை தொடர்ந்து அனைத்து சம்பிரதாயங்களும் நிறைவடைந்தன.
அன்று இரவை நினைத்து எனக்குள் ஒரு ஆர்வமும் பயமும் உண்டானது…
அவனுடனான முதல் இரவு ஆயிற்றே…
அதனை தொடர்ந்து, எல்லாரும் வரவேற்பு மண்டபத்துக்கு சென்றோம்…
பந்தி, புகைப்படம் என்று களை கட்டியது…
பிரபஞ்சனின் அம்மா ஒரு வார்த்தை கூட தவறாக பேசாதது எனக்கு ஆச்சரியம் தான்…
பிடித்தும் இருந்தது.
அவர் மீது இருந்த வருத்தங்களும் இப்போது குறைந்து இருந்தன…
அதனை தொடர்ந்து என் அம்மாவை அணைத்து அழ ஆரம்பித்து விட்டேன்…
இத்தனை நாட்கள் கழித்து ஒரு பிரிவு…
மனம் வலித்தது…
என் தம்பியையும் அணைத்து விட்டு பிரபஞ்சனுடன் காரில் ஏறி அவன் வீட்டுக்கு புறப்பட்டு விட்டேன்…
வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை அவனுடன் வாழ ஆரம்பிக்க ஆயத்தமாகி விட்டேன்…
இனி என் வாழ்க்கை ஹரிணி பிரபஞ்சனாக இறுதி வரை தொடரும் என்று நினைத்து இருந்த நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அடுத்த ஆறு மாதங்களிலேயே என் பெயருக்கு பின்னால் இருக்கும் அவன் பெயரை நான் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் செல்வி ஹரிணி ராபர்ட் ஆகி விடுவேன் என்று.
நாம் நினைப்பது போல வாழ்க்கை என்றும் அமைந்து விடாதே…
வாழ்க்கை தான் நம்மை இஷ்டத்துக்கு ஆட்டி வைத்துக் கொண்டு இருக்குமே…
சீராக ஆரம்பித்த எனது வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக பல பூகம்பங்கள் வர ஆரம்பித்து இருந்தன…
பூகம்பங்களை பற்றி பார்க்க முதல், என்னவனுடனான அந்த இனிய கணங்களை பார்த்து விட்டு வரலாமே…
error: Content is protected !!