Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிரில் ஒரு சஞ்சாரம்

உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 18

  அத்தியாயம் 18

மறுநாள் காலை மத்திய செரங்கெட்டி பகுதியில் இருந்து மீண்டும் வண்டியில் காடு வழி பயணம் தொடங்கியது. இன்று அவர்கள் பார்த்திராத சில மிருகங்கள் கண்ணுக்கு தட்டுப்படும் என்று அகிர்டா கூறினான். அவன் சொன்னது போலவே ஹையினா மிருகமும் யானை கூட்டங்களும் ஜீப்ரா வரிக்குதிரை கூட்டங்களும் சிறிது தூரம் செல்ல கண்ணுக்கு அகப்பட்டது. ஒரு இடத்தில் வண்டி மெதுவாக செல்ல முன்னேயும் பின்னையும் வண்டிகள் இருக்க அசோக் முன்னே இருந்த கதவின் வழி சட்டென்று கீழே இறங்கினான். அசோக் கீழே இறங்கியதைக் கண்டதும் வைஷ்ணவி சத்தமிட்டாள். அவள் கத்த கத்த கேப்ரியல் அடலின் இருவரும் திரும்பினர். அவர்களும் கீழே இறங்க வைஷ்ணவியும் கீழே இறங்கினாள். அசோக் தனது கேமராவை எடுத்து கீழே நடந்து கொண்டிருந்த ஒரு ஆமையை புகைப்படம் எடுத்தான். அது மெல்ல அந்த பக்கம் நடந்து கொண்டிருந்தது. அருகே ஏதோ நீர்நிலை இருக்க வேண்டும். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கவே தூரத்தில் கூட்டம் கூட்டமாக சத்தம் கேட்க அகிர்டா சத்தமிட்டான்.

“வண்டியில் ஏறுங்க”

அசோக் சுற்றிலும் முற்றிலும் பார்த்து வைஷ்ணவியின் கரம் பிடித்து வண்டியை நோக்கி ஓட அடலின் கேப்ரியல் இருவரும் உள்ளே ஏறினர். அசோக், வைஷ்ணவி ஏறியதும் கதவுகள் பூட்டப்பட்டது. சற்று நேரத்தில் தூரத்தில் ஹையினா கூட்டங்கள் தெரிந்தன. வைஷ்ணவி அசோக் முதுகில் படார் படார் என அடித்துக் கொண்டு இருந்தாள். அங்கிருந்த அனைவரும் அவளை பார்க்க அதைப்பற்றி சிறிதும் கவலை இல்லாது அசோக்கை அடித்துக் கொண்டிருந்தாள். அசோக் அவள் கைகளைப் பிடித்து விட்டு அவளைக் கேட்டான்.



Advertisement

“ஏ சீனிப் பட்டாசு எதுக்கு இப்படி என்னை அடிக்கிற?”

“அறிவு இருக்கா உனக்கு? ஒரு போட்டோக்காக உயிரை கொடுப்பியா? தத்தி! எருமை! உருப்படாத எருமை!”

அவள் சகட்டு மேனிக்கு திட்ட அசோக் சற்று நேரம் பேச்சற்று நின்றான். வைஷ்ணவி பேச்சை நிறுத்தவே இல்லை. ஸ்டானும் பென்னியும் சிறிது நேரம் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வைஷ்ணவி சிறிது நேரத்தில் தான் மட்டும் தான் கத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அமைதியாக மொத்த இடமும் அமைதியானது. அகிர்டா உட்பட அனைவருமே வாய்மூடி அமர்ந்திருந்தனர். ஸ்டான் பின்னிருக்கும் சீட்டில் இருந்து அசோக்கின் காதுகளில் ஆங்கிலத்தில் சொன்னான்.

Advertisement

“நல்ல திட்டு வாங்கியிருப்ப போல மொழி தெரியாட்டியும் தெளிவா புரியுது”

Advertisement

அவன் சொல்ல அசோக் ஆம் என்பதாக தலையசைத்தான். வைஷ்ணவி முகத்தை திருப்பிக் கொண்டு வேறு புறம் பார்த்தாள். சிறிது நேரம் மௌனத்திற்கு பின் அசோக் அவளது கரங்களைப் பற்றிப் பேசினான்.

“அங்க பாரு! உன்னை மாதிரியே ஒன்னு நடந்து வருது!”

“என்னை மாதிரியா?!”

Advertisement

அவள் திரும்ப ஒரு குட்டி யானை ஒன்று அங்கும் இங்கும் ஆடிக் கொண்டே வந்து கொண்டிருந்தது. அதைக் கண்டதும் ஏன் மறுபடியும் அடி வேணுமா என அசோக்கை முறைத்தாள் வைஷ்ணவி.

“வைஷு! அதுக்கு முன்னாடி பாரு!”

அவன் சொல்ல அதற்கு முன் ஒரு அழகான பறவை நடந்து வந்து கொண்டிருந்தது.

“நீ யானையைத் தானே நினைச்சே?”

எனக் கேட்டு அசோக் சிரிக்க வைஷ்ணவியும் சிரித்தாள். பின்பு இருவருக்குள்ளும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பாடாகியது.

“இங்க பாரு கண்ட இடத்துல அப்படியே விட்டுட்டு போக கூடாதுன்னு உன்கிட்ட சொன்னேன்னில. முன்னாடியே பேசித் தானே வந்தோம். நீ பாட்டுக்கு இறங்கிப் போற. இந்த டிராவல்ல உனக்கு எது ஆனாலும் எனக்கு எது ஆனாலும் ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷனில் தான் இருக்கணும் புரியுதா?”

வைஷ்ணவி சொல்ல அசோக் ஆம் என்பதாக தலையசைத்தான். வேறொன்றும் பேசவில்லை. அதன் பின் ஒரு இடத்தில் அரை மணி நேரம் நிற்க அங்கே வரிக்குதிரை கூட்டம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. தூரத்தே இரு பெண் சிம்மங்கள் அதில் ஏதாவது ஒன்றை வேட்டையாடி விட முயன்றுக் கொண்டிருந்தது. அசோக் திரும்பி வைஷ்ணவியை பார்க்க இம்முறை வைஷ்ணவி தைரியமாகவே அதை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த காட்சிகள் அழகாக புகைப்படங்களிலும் மனதின் திரைகளிலும் பதிய பதிய அது முடிந்ததும் மாலை நெருங்க ஹாட் பலூனில் பயணம் ஏற்பாடாகி இருந்தது. மிகப்பெரிய பலூன் வானத்தில் பறக்க அதன் கீழ் தொங்க விடப்பட்டிருக்கும் கூடை போன்ற அமைப்பில் மனிதர்கள் கீழிருக்கும் மிருகங்களைக் காணலாம்.

அசோக் வைஷ்ணவி இருவரும் ஏற அந்த பலூன் காற்றில் பறக்கும் தொடங்கியது. கீழே யானை கூட்டங்கள், வரிக்குதிரை கூட்டங்கள் மான்கள் சாரை சாரையாகச் செல்வதைக் கண்டுக் களித்தனர். சிகப்பு நிற பலூனின் கீழ் வைஷ்ணவி நிற்க அசோக் அதை புகைப்படத்தில் செதுக்கினான். இறுதியாக மீண்டும் வண்டியில் பயணிக்கையில் அவர்கள் பார்த்தது ஒரு மரத்தில் பெண் சிம்மம் ஒன்று மேல் ஏறி அமர்ந்திருந்தது.

“இது மிக மிக அரிதானது சிறுத்தைகள் மரத்தின் மேல் ஏறி அமரும் ஆனால் பெண் சிம்மம் ஒன்று ஏறி அமர்ந்திருப்பது வெகு அரிதான காட்சி” என அகிர்டா விவரிக்க அனைவரும் அதனை பார்த்துக் கொண்டிருந்தனர். மெல்ல சூரியன் பின்னே மறைய தொடங்கும் நேரம் வர அவர்கள் செரங்கெட்டி பகுதியில் இருந்து விடைபெற்று மீண்டும் ஆருஷா விடுதிக்கு வந்தடைந்தனர். அசோக் பயணம் முடிந்ததும் அகிர்டாவுக்கு தான்சானியா சில்லிங்கில் மூன்று லட்சம் கொடுத்தான். வைஷ்ணவி அவனது செய்கையில் ஆச்சர்யப்பட்டு நோக்க அகிர்டா ஒரு பல்கலைக்கழக மாணவன் என்பதும் தன் படிப்புச் செலவைச் சமாளிக்க அவன் வழிகாட்டியாக இருப்பதையும் அறிந்தாள்.

அன்று இரவு ஆருசாவில் தங்கி காலை மீண்டும் பயணம் கிளிமஞ்சரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் விமான நிலையம் வந்தடைந்தனர்.

அது துருக்கியில் இருந்தது. இந்த பயணத்தில் இது ஐந்தாவது இடம். துருக்கி அதன் கலாச்சாரத்திற்கும் உணவிற்கும் தனித்துவத்திற்கும் பெயர் போன நாடு. அங்கே இறங்கியது இங்கு என்ன இவர்கள் காணப் போகிறார்கள் என்பதை அறிய வைஷ்ணவிக்கு ஆவலாக இருந்தது ஒவ்வொரு அதிசயங்களாக இது ஐந்தாவது அதிசயம். இந்த அதிசயம் எதுவென்று யாரிடம் கேட்பது அசோக்கிடம் கேட்காமல் இருந்தாள். அன்று காலை அவர்கள் வழக்கம் போல் ஒய்வெடுக்க செவிச்டிவி எனும் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்கள் காணப் போவது இரு மருங்கிலும் பாறைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு அதன் வழியே நீர் பாயும் அழகு. சீனப் பள்ளத்தாக்கு பெரிதானதாக இருக்க இது சற்று வித்தியாசமானது. இரு இமாலய பாறைகளுக்கு இடையே இருவர் மட்டுமே நடந்துப் போகக் கூடிய இடைவெளியில் தெளிந்த நீரோடை பாய்ந்தது. முக்கியமாக அந்த பாறைகள் இருபுறமும் ஒரு ரம்பம் கொண்டு அறுத்து பின் செதுக்கியது போல் படிக்படிக்கட்டாக காலத்தால் செதுக்கிய சிற்பமாக நின்றது அந்த வெண்மையும் இளச்சிவப்புமானப் பாறைகள். அங்கே செல்வது கடினமானது. சில முறை சுற்றுலா பயணிகளை உயிர் சேதம் கருதி துருக்கி அரசு அனுமதிப்பதில்லை. இம்முறை துஃவையல் சிறப்பு அனுமதி வாங்கி இருந்தான். சிறிது நேரம் மலை ஏற்றத்திற்கு பிறகு அங்கே செல்ல வேண்டும்.

மறுநாள் பல பாறை வழிகள் தாண்டி நதிநீர் ஓட்டத்திலேயே அவர்கள் நடந்து செல்ல, அசோக் ஒரு குறுகிய ஆபத்தான சறுக்கும் பாதை வர யோசித்தான். வைஷ்ணவியால் வர முடியுமா என்பது போல் பார்க்க கேப்ரியல் அடலின் தம்பதியர் முன்னே நடந்துக் கொண்டிருந்தனர். வைஷ்ணவி அசோக்கை பார்த்தாள். அசோக் அவளை அழைத்துக் கொண்டு நடந்தான். சில இடங்களில் பாறைகள் வழுக்குவதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அசோக்கின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள் வைஷ்ணவி. அசோக் அவளை மெதுவாக சில இடங்களில் முன்னே நடத்திச் சென்றான். சில இடங்களில் அவளை முன்னே செல்ல வைத்து அவன் பின்னே வந்தான். அடலின் ஒரு முறை வழுக்கி கீழே விழ ஸ்டானும் பென்னியும் அவரை வலுவாக பிடித்துக் கொண்டனர். அதற்குப்பின் முன்னேறத் தடுமாற அசோக் அவரை தட்டிக் கொடுத்துச் சொன்னான்.

“முடிஞ்சா பாருங்க இல்லைனா இங்கே இருங்க!” ஆனால் அடலின் அதற்கு முன்னதாகவே முன்னே நடந்து செல்ல ஆரம்பித்தார். அனைவரும் புன்னகைத்தனர். வைஷ்ணவி அதை கண்டதும் மெல்ல தனக்குள் நம்பிக்கை வந்தவளாக ஏறத் தொடங்கினாள். பாறை இடங்களில் நடக்க சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. ரெய்ச்சல் தனது முதலுதவி மருந்துகளை அனைவருக்கும் தந்து உதவிக் கொண்டே வந்தாள். இடுங்கிக் கொண்டே பாறைகளுக்கு இடையில் நடக்க வேண்டியதாக இருந்தது. கீழே வழுக்கி விழ காயங்கள் ஏற்பட்டது. ஓரிடத்தில் வைஷ்ணவியின் பாதத்தில் ரத்தம் வருவதைக் கண்டு அசோக் நிறுத்தினான்.

“ரொம்ப சிரமமா இருக்கா?”

அசோக் வினவ “இல்லை நான் வரேன்” என்று சொல்லி நடந்தாள் வைஷ்ணவி. பத்து நாட்களில் அவளது பயத்தை மூட்டைக் கட்டியிருந்தது அந்த பயணம்.

ஒரு வழியாக அவர்கள் வர வேண்டிய இடமும் வந்தது. இவ்வளவு நேர வலிகளுக்கு அது மிகவும் தகுதியானது தான் என்று தோன்றியது வைஷ்ணவிக்கு. இரு பக்கமும் பாறைகள் ஒரு கூரான ரம்பத்தை வைத்து பாறையை இருமருங்கிலும் செதுக்கியிருந்தால் எப்படி வரி வரியாக விழுந்து இருக்குமோ அப்படி வரி வரியாக பாறையில் அச்சு இருக்க வெண்ணிறமும் செந்நிறமும் கலந்ததாக இருந்த பாறையின் இடையில் நதிநீர் ஓடியது.

அந்த நதி தான் மனிதரின் அசுத்த கைப்படாது எவ்வளவு தூய்மையாக இருந்தது. உள்ளே இருப்பது அப்படியே தெரிய அசோக் தன் ஆடைகளைக் கலைந்து அந்த தண்ணீருக்குள் குதிக்க வைஷ்ணவி புன்னகையுடன் தானும் அந்த தண்ணீரில் விழுந்தாள். ஸ்டான் பென்னி ரெய்ச்சல் அடலின் காப்ரியல் என அனைவரும் தண்ணீரில் குதித்து நீந்தத் தொடங்கினர். அசோக் வைஷ்ணவியைப் பார்த்து புன்சிரிப்புடன் கேட்டான்.

“என்ன நடந்து வந்த வலிக்கு எல்லாம் worth aa(தகுதியான)”

எனக் கேட்க வைஷ்ணவி 100 பர்சன்ட் என்று உரக்கச் சொல்லி நீரில் மூழ்கினாள். பின் அசோக் வைஷ்ணவியின் கரம் பிடித்து பாறைகளுக்கு இடையே நதியில் நடந்தப்படி கூட்டிச் சென்றான். தண்ணீரில் நடந்து வளைந்து நெளிந்த பாதையில் பாறையின் அழகை ரசித்து நடந்து சென்றனர் இருவரும்.

வைஷ்ணவி முதல் முறையாக அப்போது தான் அவனுடன் இணைந்து வைத்த விதியை ஆச்சர்யமாக நினைத்துப் பார்த்தாள்.

‘யாரிவன்? என் பாலைவனத்தில் பூந்தென்றலாக வீசுகிறான்? என் பரிதவிப்புகளின் முகவரி அனைத்தையும் அறிகிறான்! என் குழந்தைத்தனத்தை மூடிய காயங்களின் கடினமான ஓடுகளை நொடிகளில் உடைத்து எறிகிறான்? யாரிவன்? எனக்கு யாரிவன்? நண்பனா?; இல்லை’

அவள் நினைவுகளில் நின்றிருக்க அசோக் அவளைப் பார்த்து பெரிதாகப் புன்னகைத்தான். வைஷ்ணவி மனதில் அந்த நொடி அவன் முகம் அப்படியேப் பதிந்து போனது. அவர்கள் திரும்பி வர அனைவரும் சந்தோஷமாக குளித்து முடித்து மலை இறங்கினார்கள். பின் மீண்டும் தங்கள் விடுதிக்கு வந்தனர். வைஷ்ணவி தன் கூந்தலை மெல்ல கோதி அசோக்கிடம் திரும்பினாள். அசோக் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். மறுநாளே அவர்கள் இத்தாலி செல்வதாக இருந்தது. இன்னும் மூன்று நாட்களில் அவர்கள் பயணம் முடிகிறது. இன்னும் என்னென்ன இடங்கள் இருக்கும் என்று வைஷ்ணவிக்கு தெரியவில்லை. அதற்குள் அவளது மனது அசோக்கிடம் மயங்கிப் போகுமோ? காதலனைப் பிரிந்து இரு வாரத்தில் அசோக் காட்டிய பரிவு என்ன உணர்வுகளில் வரும்? உன்னிடம் ஈர்க்கப்பட்டேன் என்று சொன்னால் அசோக் என்ன நினைப்பான்?

மனித நினைவுகள் போல் இறைவன் அளித்த தண்டனை எதுவுமில்லை. நடந்ததை நினைத்தும், நடக்கப் போவதாக நினைத்தும், எத்துணைக் காயங்களை அது இதயத்திற்கு பரிசளிக்கிறது.

“நாளைக்கு:காலைல கிளம்பறமா அசோக்?”

“இல்லை நாளைக்கு ஒரு நாள் இருக்கணும். இங்கே எல்லாரும் ரெஸ்ட் எடுப்பாங்க நீயும் ரெஸ்ட் எடு நான் ஒரு இடத்துக்கு போயிட்டு வந்தர்றேன்”

அசோக் சொல்ல வைஷ்ணவி தயங்கிப் பின் கேட்டாள்.

“இப்படித்தான் என்னை விட்டுட்டு தான்சானியாவுல ஏதோ ஒரு இடத்துக்கு போன! அங்க போய் என்ன செஞ்ச?”

அவள் கேட்க அசோக் தன் பெட்டியில் இருந்த ஒரு சின்ன கிஃப்ட் பாக்ஸை நீட்டினான். வைஷ்ணவி அதை வாங்கிப் பார்க்க அதில் அழகான நீல நிற கல் பதித்த செயின் மின்னியது.

“இது தான்சானைட் கல். இதை பட்டைத் தீட்டி விற்பனை செய்யற இடத்துக்குப் போனேன். தான்சானியாவுல மட்டும் தான் கிடைக்கும். ரொம்ப ரொம்ப ரேர் ஆன ஜெம். டைமண்ட் ஐ விட காஸ்ட்லி”

அவன் சொல்ல அவள் அதை ஆச்சரியமாக பார்க்க,

“நீயும் டிசம்பர் மாதத்தில தானேப் பிறந்த அதான் உனக்கும் ஒண்ணு வாங்கினேன்”

அவன் சொன்னதும்,

‘அப்ப டிசம்பர் மாதத்தில பிறந்த இன்னொருத்தர் யாரு?’

என்று கேட்க நினைத்த மனதைக் கட்டுப்படுத்தினாள் வைஷ்ணவி. வைஷ்ணவிக்கு அவன் இரு செயின்கள் வாங்கி இருந்தது தெரிந்தது. ஒன்று தனக்கு என்றால் இன்னொன்று யாருக்காக இருக்கும்.

வைஷ்ணவி அதைக் கேட்கவும் முடியாது கேட்காது இருக்கவும் முடியாது சற்று நேரம் அமைதியாக பார்த்தாள்.

“ஏன் வைஷு என்னாச்சு?” அவள் தயங்கி நிற்பதைக் கண்டு அசோக் கேட்டான்.

“இது ரொம்ப விலை அதிகம்!” வைஷ்ணவி சொல்ல அதற்கு

“அதனால நான் கொடுத்த வாங்கிக்க மாட்டியா?” என அசோக் மறு கேள்வி கேட்டான். வைஷ்ணவி சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

“நீ துபாய்ல எனக்கு என்ன வாங்கி கொடுத்த ஞாபகம் இருக்கா?”

அவன் கேட்க வைஷ்ணவி கோபமாக அவனை பார்த்தாள்.

“அது நாம ரெண்டு பேரும் இந்த ட்ராவல் முடிஞ்ச உடனே தான் பார்க்கணும் பேசுனது. உன்னை யாரு அதுக்குள்ள பிரிக்கச் சொன்னா?”

அசோக் அவனது சீனிப் பட்டாசு வெடித்ததில் சிரித்தான்.

“நான் அதை பிரிக்கவெல்லாம் இல்லை சீனிப் பட்டாசு”

அசோக் சொல்ல

“அப்புறம் எப்படி அதில இருக்கிறது காஸ்ட்லின்னு உனக்கு தெரியும்?”

வைஷ்ணவி மீண்டும் கேட்டாள்.

“நீ நகை கடை ஒன்னுக்கு மட்டும் தான் வாஃபி மால் ல போனே போனே. நகைனா காசு அதிகமா தான இருக்கும் அதனால சொன்னேன்”

அவன் வார்த்தைகளில் மடக்க அவனது கைகளில் இருந்து பெட்டியை வெடுக்கென்று வாங்கிச் சென்றாள் வைஷ்ணவி. அசோக் சிரித்து விட்டு வெளியே நடக்க இருக்கையில் அமர்ந்தவள் தன் கைகளில் அந்த நெக்லஸ்சை ஏந்தினாள். மெலிதான ஒரு செயின் அதன் டாலரில் நீள்வட்ட வடிவில் ஒரு நீல நிறக்கல் மிக மிக அழகாக இருந்தது.

“இதை பார்க்கும் போது உன்ன தான் தோணுச்சு படபடன்னு பட்டாசு பல வண்ணத்தில வெடிக்கிற மாதிரி இது மேல ஒரு கலர் ஆனா கொஞ்சம் சாச்சு கீழே பார்த்தா மெல்லிசான ஒரு கலர் மாறும் பர்பிள் ரோஸ் னு மாறும் நீ அது மாதிரி தான்”

அவன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளை அசைப் போட்டுக் கொண்டு தன் துணிகளை எடுத்து வைத்தாள் வைஷ்ணவி. மறுநாள் அதிகாலை துருக்கியில் அவனுடன் சுற்றிப் பார்க்க கிளம்பினாள். மற்ற பயணிகள் அனைவரும் அங்கே தங்கி இருந்து இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு மறுநாள் மாலை வருவதாக இருந்தது. அவர்கள் அனைவரும் அங்கே பொருட்களை வாங்க இஸ்தான்புல் நகரத்தில் ஒரு நாள் செலவிட அசோக்கோ வேறு திட்டம் வைத்திருந்தான்.

இஸ்தான்புல்லில் இருந்து அவன் பமுக்களே என்னும் பழங்கால ரோமானியர் வாழ்ந்த செதிலடைந்த கட்டிடங்கள் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படும் இடத்திற்கு போக எத்தனித்திருந்தான். க்ஷ‌ வைஷ்ணவி அவனுடன் அன்றிரவு அவனுடன் போகலாமா வேண்டாமா என யோசித்து படுத்திருந்தாள்.

‘மனதில் ஏன் இந்த சலனம்? அவன் அருகே வேண்டும் என்கிறது! அவன் அருகாமையும் வேண்டும் என்கிறது இந்த பாழாய்ப் போன மனம். அவனுடன் சென்றால் நிச்சயம் பிபி முந்நூறு வரை எகிற வைப்பான் அதே சமயம் நான் அறிந்திறாத என்னை, முக்கியமாக ஒரு புது உலகத்தை அவன் எனக்கு அறிமுகப்படுத்துவான் அதற்கு எதை வேண்டுமானாலும் விலை கொடுக்கலாம்’

அவள் மனதிற்குள் நினைத்தவளாக மறுநாள் அவனுடன் கிளம்பினால் வெறும் ஆறு மணி நேர பயண நேரம் தான் இருந்தது. ஆறு மணி நேர பயணத்தில் விமான பயணத்தில் அவர்கள் பமுக்கலே வந்தடைந்தனர் ரோமானியர்களின் பழமையான நகரம் அது. அந்த மிகப்பெரிய நகரத்தின் வெறும் எஞ்சியிருந்த எலும்புக்கூடுக் கட்டிடங்களே அவ்வளவு பிரமாண்டமாக இருந்தால் ஒரு உயிர் உள்ள உருவமாக அது எப்படி இயங்கி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருந்தது. அந்த நகரத்தின் பெரும் திடலைப் பார்த்துக் கொண்டே நடந்தால் வெள்ளை கற்களால் ஆன மண் சுவர்கள் தாண்டி கிளியோபட்ரா குளித்த குளம் அங்கு இருப்பதாக சொல்லப்பட்டது.

வைஷ்ணவி அந்த மண் சுவர்களை பார்த்துக் கொண்டே நடக்க அசோக் வரும்போது குளியலுக்கு தேவையான ஒரு ஆடையை எடுத்து வைக்கச் சொல்லியிருந்தான். ‘ஒருவேளை கிளியோபட்ரா குளித்த இடத்தில் குளிப்பதற்குத் தான் இவன்’ அசோக்கை சந்தேகமாகப் பார்த்தாள் வைஷ்ணவி.

அசோக் அவள் மனதை படித்தவனாகப் பேசினான்.

“கிளியோபட்ரா குளிச்ச இடத்தில குளிச்சா எனக்கு மோட்சம் கிடைக்கும்னு எல்லாம் உன்னைக் கூட்டிட்டு வரல. இரு வேறொரு எடுத்து கூட்டிட்டு போறேன் வா”

என்றதும் வைஷ்ணவி மனதில் வார்த்தைகளை வாய் விட்டுப் பேசினாள்.

“நீ என்ன ப்ரொபஷன்ல இருக்க? என்கிட்ட சொல்லவே மாட்டேங்குற! எனக்கு என்னமோ நீ சைக்காலஜி படிச்சிட்டு டாக்டரா இருக்கேன்னு தோணுது. மனசுல நினைச்சது எல்லாத்தையும் சொல்லிடுறே!”

வைஷ்ணவி சொல்ல அசோக் அவளது கரத்தைப் பற்றி நடந்துக் கொண்டே பேசினான்.

“நான் ஒன்னு சொல்லட்டா வைஷூ. உன் கூட பழகுனவங்க எல்லாத்துக்கும் உன் கண்ணைப் பார்த்தாலே நீ என்ன நினைக்கிறனு தெரிஞ்சிரும். இதுக்கு சைக்காலஜி எல்லாம் தேவை இல்லை. உள்ளத காட்டும் பளிங்கு முகம் என்னுது னு உன் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கு”

அசோக் அதைச் சொல்லும் போது அவனது நெற்றியில் இடித்துப் பேச வைஷ்ணவி அவனை முதுகில் அடித்தாள்.

“பின்னே உன்னை மாதிரியா சரியான மாஸ்க் மூஞ்சி”

இருவரும் தங்களுக்கு இடையே ஆண் பெண் தீண்டலில் உள்ள இடைவெளி எப்பொழுது அழிந்தது என்பதை உணர்ந்தனரா இல்லை உணராதது போல் அந்த நொடியின் ரசனையினை அனுமதித்தனரா பிரபஞ்சமே அறியும்.

கவிதை

என் மன வேலியின்

எல்லைக் கோடுகளை

ஏன் அழிக்கிறாய்?

அடைய முடியாத

ஆசைகளின் விதைகளை

ஏன் தூவிச் செல்கிறாய்?

காயம்பட்ட இதயத்தை

காத்து நிற்கும் பூதமடி

என் இறுக்கங்கள்..அதை

காற்றைப் போல் ஊதித் தள்ளி

இயல்பாகிறது உன் நெருக்கங்கள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!