12 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,477
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 12-1
.
Advertisement
வழி முழுவதும் அழுது… அடம்பிடித்து… கண்ணயர்ந்திருந்தான் ரகு. கூறுவதைப் புரிந்து கொள்ளும் வயது தான் ரகுவிற்கு என்றாலுமே, ‘தான் திருச்சியில் இருப்பதால் இவர்களுக்கு என்ன?’ என்ற கேள்வி அவனுள் அலையாய் எழுந்து மதில் சுவராய் அவனைச் சுற்றிக் கொண்டது.
“அப்பாக்கும் அம்மாக்கும் உன் கூட இருக்க ஆசை இருக்கும் தான? தள்ளி இருந்தா, அப்பறம் உன் தங்க தம்பி கூட எல்லாம் எப்படி கிளோஸ் ஆவ?” என்ற பதில் கலந்த கேள்விகள் அவனைச் சுற்றியிருந்த சுவரை உடைக்கும் திராணி அற்று போயின.
Advertisement
Advertisement
சென்னையில் கால் பதித்த ரகுவை ஆசையோடு அக்ஷராவும் பிள்ளைகளும் வரவேற்றனர். தூங்கி எழுந்திருந்த ரகுவிற்கு அது இதமாகவே இருந்தது.
“அண்ணா ண்ணா” எனத் தன்னையே சுற்றி வந்த வருணும் நிவேதாவும் அவனைப் பெரியவனாக உணரச் செய்தனர். குடும்பமாக வெளியே சென்றனர். புதுத் துணி, புதுச் சைக்கிள் எனப் பலதும் வாங்கி வந்தனர். ரகு பூரித்துப் போனான்.
Advertisement
பூங்கா, கடற்கரை, உணவகம், கடைத் தெரு எனச் சுற்றி வந்த ரகு தன் விடுமுறையை சென்னையில் நன்றாகவே கொண்டாடினான்.
“சந்தோஷமா?” என்ற தகப்பனிடம், “எஸ் அப்பா” என்றான் ரகு, தன் புது சைக்கிளை ஓட்டிக் கொண்டே.
“வீட்டுக்குப் போகும் போது இத எடுத்துட்டு போகணும் அப்பா” என்றவனுக்கு அதில் அவன் பேபியோடு பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை மட்டுமே ஓங்கி நின்றது.
ஐந்து வருட வாழ்வை அப்படி எல்லாம் சுலபமாக ரகு மறந்து விடுவானா என்ன? மனம் கனத்தது. பெருமூச்சோடு மகனின் தலையை வருடிவிட்டுச் சென்றார் நகுலன்.
அப்பா, சின்னம்மா, வருண், நிவேதா என அனைவரும் அவனைச் சுற்றி வர நன்றாகத் தான் சென்றது ரகுவின் சென்னை வாழ்வு. எல்லா ஜோரும் முதல் நான்கு நாள்களுக்கு மட்டுமே. அதன்பின் ஆரம்பித்தது அழுகையும் சண்டையும்.
ஒரு வாரம் தாக்கு பிடித்த ரகு அப்பாவிடம், “வீடுக்கு எப்போ அப்பா போறது?” என ஆரம்பித்தான்.
வீட்டின் நினைவு அவனை ‘ஹோம் சிக்’ ஆக்கியுள்ளது என்றால் நம்ப முடியுமா நகுலனால்? ஆனால் அது தான் உண்மை. தன் கூட்டைத் தானே பறவை தேடும். ரகுவும் தன் வீட்டினர் நினைவால் வாடிப் போனான்.
“இனிமேல் இது தான் ரகு உன் வீடு. பழகிக்கோ” என்றார் பெற்றவர்.
கண்களில் நீர் முட்டிக் கொண்டு வர, “வீட்டுக்கு போகணும் பா” என்றான் மகன் தவிப்போடே.
“மிடில் ஸ்கூல் போக போற ரகு. பிக் பாய்ஸ் டொன்ட் கிரை” என்றவர் சிறிது நேரம் அவனோடு இருந்துவிட்டு அவர் வேலையைப் பார்க்க சென்றார்.
ஒரு வாரத்தில் ‘அண்ணன்’ ஜோர் எல்லாம் அடங்கியதும், ரகு மூன்றாவது மனிதனாகத் தெரிந்தான் அந்த வீட்டுக் குழந்தைகளுக்கு. இவன் எதை எடுத்தாலும், “என்னுது” என தம்பியோ தங்கையோ பிடுங்கிக் கொண்டனர்.
“நீ தான் பெரியவன்… விட்டுக் கொடுத்து போ.” என்றார் அப்பா.
அவன் பேபி இப்படி பிடிங்கி கொண்டு ஓடுவாள் தான். ஆனால் இவன் அவளைச் சும்மா எல்லாம் விட மாட்டான். விரட்டி பிடித்து அவளிடம் சண்டைக்குச் செல்வான். ஆனால், அவன் பேபியிடம் சண்டையிட்டுப் பிடுங்கிக் கொண்டு ஓடுவது போல் இவர்களோடு சண்டையிடத் தோன்றவில்லை ரகுவிற்கு. பெரியவனாய்… ரகு ஒதுங்கிக் கொண்டான்.
அன்னையும் பாட்டியும் இவனுக்குப் பிடித்த உணவைக் கொடுத்து பழக்கி இருக்க, “இது எனக்கு பிடிக்காது” என்றான் தட்டில் இருந்த சோற்றையும் கீரையையும் பார்த்தவன். கூட்டு, பொரியல், அசைவம் இல்லாத போது முட்டையாவது அவன் தட்டில் இருக்கும்… இப்படி மசிக்கப்படாத கீரையை எப்படி உண்பதாம்? உணவு உள்ளே இறங்குவேனா எனச் சண்டித்தனம் செய்தது.
“இது என்ன பழக்கம்? இது பிடிக்காது அது பிடிக்காதுன்னு? கொடுக்கிறத சாப்பிட்டுப் பழகு. வருணும் நிவியும் சாப்பிடுறாங்க பாரு…” என்றார் அக்ஷரா. அவருக்கு வேலைக்கும் செல்ல வேண்டும், மூன்று பிள்ளைகளையும் பார்க்க வேண்டும். இப்படி ஆளாளுக்கு பிடித்ததை எல்லாம் செய்ய முடியாதே.
கொடுத்ததை விழுங்கி சென்றவன் அடுத்த ஐந்தாவது நிமிடம் அத்தனையையும் வாந்தி எடுத்தான். “கொழுப்பு டா உனக்கு. இத சாப்ட்டு வாந்தி பண்ணுவியா நீ? எனக்கு நிறைய வேலை இருக்கு…. நைட்டுக்கும் இது தான் இன்னைக்கு” என்ற சிற்றன்னை, “உன் பாட்டி உன்ன நல்லா கெடுத்து வச்சிருக்காங்க” என பாட்டியையும் சேர்த்தே வசை பாடினார்.
இரவு இவனுக்காக தோசை இருந்தது. அதனோடு பொடி இருக்க, ரகு கடினப்பட்டு ஒற்றை தோசையை விழுங்கி சென்றான். அன்று இரவு, பல வருடங்களுக்குப் பின் மீண்டுமாக வயிறு வலித்தது ரகுவிற்கு. ஆனால், இம்முறை சின்னவனுக்கு அது பசி என நன்றாகவே புரிந்தது.
தனி அறையில், தென்றல் காற்றோடு தவழ்ந்து வரும் சந்திரிகாவின் பாடலுக்கு பழக்கப்பட்டவனுக்கு, ஏசி அறையில் உருண்டு புரளும் வருணோடு ஒரே கட்டிலில் தூக்கம் பிடிக்கவில்லை.
உணவு, உறக்கம், தோழமை என எதிலும் ஒத்துவராத வீட்டில் ரகுவால் இருக்க முடியாது போகவும் ஒரே வாரத்தில், “வீட்டுக்கு போணும்” என அப்பாவிடம் கேட்க, அவரோ, “இது தான் உன் வீடு. கொஞ்ச நாள்ல பழகிடும்” என்றார்.
“இங்க என்ன இல்லன்னு திருச்சிக்கு போக கேக்குற?” என அக்ஷரா கேட்டார்.
“ரகு கண்ணு” எனப் பள்ளியில் இருந்து வரும் ரகுவிற்கு ஏதேனும் ஒரு பழரசம் கொடுக்கும் பாட்டியின் அக்கறை இல்லை.
“ரகுக்கு என்ன வேணும்ன்னு கேட்டு அதையே செய்.” எனத் தன்னையே முதன்மை படுத்தும் தாத்தாவின் அன்பு இல்லை.
“இது செவ்வாழை, இது பூவன், அதோ அது ரஸ்தாளி. நீ இன்னும் பெருசாகு, எந்த எந்த பழத்த… என்ன பருவத்துல வெளிநாட்டுக்கு அனுப்பறோம்ன்னு எல்லாம் சொல்லி தரேன். பெருசானதும் நீ தான் நம்ம தோப்ப பாத்துகணும்” எனத் தன்னை தோளில் சுமந்து பலதும் சொல்லித் தரும் தாத்தா இல்லை.
“வரைய ஆரம்பிக்கும் போது முதல்ல லைட்டா வரையணும். சரியா வந்த பிறகு தான் அத டார்கென் பண்ணணும். அப்போ தான் அழிச்சா தடம் வராது” எனப் பாடம் கற்பிக்கும் ஐயா இல்லை.
“பசிக்குதா? ஊட்டவா?” எனக் கேட்டு, நிலா சோறு ஊட்டி, “ஏன் தூக்கம் வரல? வா படு” எனத் தன்னை தன் மடியில் போட்டுத் தாலாட்டு பாடும் அன்னை இல்லை என ரகுவிற்கு கத்தி அழ வேண்டும் போல் இருக்க, “அம்மா வேணும்” என சந்திரிகாவிற்காக அழ ஆரம்பிதான்.
அவன் அழுதாலே அவனைச் செல்லம் கொஞ்சி மலை இறக்கும் ஐயாவை காணவில்லை. “எனக்கு ஐயாட்ட போகணும்” என ஒருவர் பின் ஒருவராக வரிசைக்கட்டி அவன் நினைவில் வர அவனைக் கட்டுப்படுத்த முடியாது போனது.
“ஐயா அம்மா எல்லாம் நானும் இவளும் தான்” என அப்பா, சிற்றன்னையைக் காட்டிக் கூறினார். அவன் ஐயா, அம்மா இடத்தில் வேறு ஒருவரா? ரகுவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தனிமை வலியை நீக்கிய உறவுகளைத் தன் உயிரோடு இணைத்தபின் ‘மாற்றிக்கொள்’ என்றால் எப்படி முடியும் அவனால்.
“நோ…” என தன்னால் ஆன மட்டும் அழுதான்.
வெறி பிடித்தவன் போல் “பேபி… என் பேபி” என முழித்திருந்த நேரம் எல்லாம் வாசலை நோக்கி அழுது கொண்டே ஓடினான் மகன். ஓரளவிற்கு மேல் பொறுக்க முடியாது, சுள்ளென்று அக்ஷரா முதுகில் வைக்க, அடங்கிப் போனான் ரகு.
அடி என்ற ஒன்றை பேபியிடம் மட்டுமே வாங்கி பழக்க பட்டிருந்தவனுக்கு முதன் முதலாக அடி என்றால் என்ன என்று புரிந்தது. அது உடலை மட்டும் அல்ல, மனதையும் வலிக்கச் செய்யும் என்றும் புரிந்தது.
“நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா திருச்சி பக்கம் கூட்டிட்டு போகவே மாட்டோம், சமத்தா இருந்தா லீவுக்கு போலாம். அப்பறம், இது தான் உன் வீடுன்னு புரிஞ்சுக்கோ. நாங்க தான் உன் அம்மா அப்பா. புரியுதா? வருணும் நிவேதாவும் தான் உன் தம்பி தங்க. புரியுதா?” எனச் சத்தம் போட்டவரை, துடித்த உதட்டைக் கடித்து, கண்கள் குளம் கட்ட பார்த்தான் ரகு.
அதே ஐந்து வயது அழுத்தமான… பிடிவாதமான ரகுவை நகுலன் பார்த்தார். மகனை அவர் அணைத்துக் கொள்ள, அவனுக்கு அந்த அணைப்பும் பிடிக்கவில்லை. அணைத்தவரையும் பிடிக்கவில்லை. அதன் பின் ரகு அழவோ பிடிவாதம் பிடிக்கவோ இல்லை. கொடுத்ததை உண்டான். பள்ளிக்குச் சென்றான்.
ஐந்தாம் வகுப்பு வரை, “வெரி ஸ்மார்ட்” என ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்ற அதே ரகு, “டிரை, யூ கேன் டூ” எனும் நிலைக்கு இறங்கிப் போனான். எல்லா பாடங்களிலும் குறைந்த மதிபெண்ணில் தேர்சி பெற்றான். ஒட்டு மொத்தத்தில் ஒளி மங்கிய கண்களும் துவண்ட மனதோடும் ரகு, ரகுவாக இல்லை. மாதங்கள் சென்றன. தன் குடும்பத்தை இழந்து தவித்த ரகுவிற்கு அரையாண்டு விடுமுறையும் வந்தது.
பள்ளி நாள்களில், பள்ளி முடிந்ததும் அங்கிருந்தே மாலை வகுப்புகளுக்குப் பிள்ளைகள் சென்றுவிடுவர். அதன்பின் அங்கிருந்து நகுலனோ அக்ஷராவோ வீட்டிற்கு வரும் வழியில் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வருவர். ஆனால் அதை விடுப்பு நாள்களில் செய்ய முடியாதே.
விடுப்பு வந்தாலே அக்ஷரா, பாண்டியில் இருக்கும் அவரின் பெற்றோர் வீட்டுக்கு நகுலனோடு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு சென்றுவிடுவார். மூன்று அண்ணன்களைக் கொண்ட அக்ஷாராவின் குடும்பம் பெரிது. இரண்டு நாள்கள் குடும்பமாக இருப்பவர்கள், பிள்ளைகளைத் தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு சென்னைக்கு அவர்கள் வேலையைப் பார்க்கத் திரும்பிவிடுவர். இது வழமை.
இம்முறை ரகுவையும் அவர்களோடு அழைத்துச் செல்ல, அந்த கூட்டமும் பிள்ளைகளின் ஆர்பரிப்பும் ரகுவை அதிகமாக ஏக்கம் கொள்ள வைத்தது. பிள்ளைகள் அவர்களின் தாத்தா பாட்டியோடு இருக்க, ரகுவிற்கும் அவன் உறவுகளை நோக்கி மனம் அலைபாய்ந்தது.
ஆசை எல்லாம் மனதோடு மட்டுமே. வயதுக்கு அதிகமாகவே இறுகிப் போயிருந்தவன் அவன் ஆசைகளை அப்பாவிடமோ, சிற்றன்னையிடமோ பகிர்வது இல்லை. அடிவாங்கிய பின் அவன் சிற்றன்னையிடம் எண்ணி எண்ணிப் பேசுவான். அதாவது கேட்கும் கேள்விக்குப் பதில் வரும். அவரை “சின்னம்மா” என்றதை மாற்ற அந்த வீட்டுப் பெரியவர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
சிற்றன்னையின் தகப்பனுக்கு ரகுவை மிகவும் பிடித்தது. சின்ன பிடிவாதமும், வெளியே காட்டாத சினமுமாகச் சுற்றி வரும் சின்னவனின் தோரணை அவரை ஈர்த்தது.
தன்னை தாத்தா என அழைக்கும் குட்டியிடம், “இவங்க சின்னம்மா இல்ல டா… அம்மா” என அன்போடு கூறி, மாற்ற முயன்றார் பெரியவர்.
“இவங்க அம்மா இல்ல. என் அம்மா… அம்மாச்சி கூட திருச்சில இருக்காங்க” என்றான் கண்ணீர் தளும்ப. பெரியவர் உருகிப் போனார்.
“என் அம்மாச்சி, தாத்தா, ஐயா, அம்மா, பேபி எல்லாரும் அங்க இருக்காங்க. நான் மட்டும் தனியா இங்க இருக்கேன். பேபி என்னை தேடுவா” என அன்போடு பேசியவரிடம் உடைந்தான் ரகு. விசும்பிய சின்னவனை அணைத்துக் கொண்ட பெரியவருக்கு மகள் மேலும், மருமகன் மேலும் சொல்லொன்னா கோபம்.
“இவ்வளவு வருஷமா அங்க விட்டுட்டு திடீர்ன்னு கூப்பிட்டு வச்சுக்கிட்டா அந்த குழந்தைக்கு என்ன புரியும்? அம்மா அப்பாட்ட இருந்து பிரிச்சு வச்சிருக்க வில்லன் வில்லி மாதிரி ஆகிட்டீங்க நீங்க. நிவேதா, வருண விட நீ இவனத் தான் கவனிக்கணும். நீ அத செய்யறீயா?” என அவர் பொரிந்து தள்ள,
“நீ ஒழுங்கா கவனிச்சுகிட்டா அவன் ஏன் அம்மாவ வெளியில தேட போறான்? என்னைக்குனாலும் இவன் தான் உனக்கு மூத்தவன் மறந்திடாத.” என மகளுக்கு அறிவுரை கூறினார் பெரியவர்.
“நான் எப்பவும் அப்படி எல்லாம் பிரிச்சுப் பார்த்ததே இல்லப்பா” என்றவர் உண்மையிலுமே நல்ல தாயாகத் தான் இருக்க முயன்றார். ஆனால் எங்கோ பிழறிவிட்டது.
“பிள்ளைய அவன் பாட்டி தாத்தாட்ட இருந்து பிரிச்சு, இருக்க உறவ கெடுத்துக்காத. லீவுக்கு அப்போ அப்போ கூட்டிட்டுப் போ. நீ அவங்களுக்கு நடுவுல இல்லன்னு அவன் நம்பினா தான் அவன் உன்ன நெருங்கவாது முயற்சிப்பான். இல்லன்னா ரகு உனக்கோ உன் புருஷனுக்கோ இல்ல.” என்று மகளுக்குத் தெளிவாக ரகுவின் நிலையைப் பெரியவர் எடுத்துக் கூற, முழு ஆண்டு விடுப்பிற்குப் பிள்ளைகளோடு திருச்சிக்கு கிளம்பியது குடும்பம்.
ரகுவிற்கு, ரம்யமாக சென்றன அடுத்து வந்த நாள்கள். “பேபி பேபி” என ரகு பேபியின் பின் செல்ல, அவனை கொண்டு, குட்டி வாண்டுங்கள் இரண்டும் தாராவின் பின் “பேபி” என நூல் பிடித்துச் சென்றனர்.
எப்பொழுதும் போல், பிள்ளைகளை விட்டுவிட்டு பெரியவர்கள் சென்னைக்குப் பயணப்பட, பிள்ளைகள் நால்வருக்கும் கொண்டாட்டமாக அந்த விடுமுறை சென்றது.
விடுமுறை முடிந்தது. ரகுவிற்கு அடுத்து என்ன என்று தெரியுமே. இரவு தலையணைக்குள் முகம் புதைத்து அழுதான். வர மாட்டேன் என ஆர்ப்பாட்டம் செய்தான். “ரகு!” என அப்பா அதட்டினார். அவனைவிடச் சின்னவர் முன்னிலையில் எப்படி அழுவதாம்? ஒருவருக்கும் தெரியாது கண்ணீர் விட்டு சென்னைக்குக் கிளம்பினான்.
ரகு அழாவிட்டால் என்ன? நான் அழுவேன் என அவன் பேபி, அவனுக்கும் சேர்த்தே அழுந்து கரைந்தாள்.
விடுமுறை முடித்து வீட்டிற்கு வந்த நிவேதா, தாரா பேசுவது போலவே, “அஅ…அம்மா” என புதிதாகத் திக்கிப் பேசவும், ‘இது சரி படாது’ என நினைத்த அக்ஷரா, அடுத்து வந்த விடுமுறைகளில் ரகுவை மட்டும் அவன் தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு தன் பிள்ளைகளோடு விடுப்பைக் கழிக்க அவரின் பெற்றவர் வீட்டை நோக்கிப் பயணப்பட்டார்.
நாக்கின் அடியில் இருந்த சவ்வை வெட்டிவிட்ட பின் உச்சரிப்பு தெளிவாகியது. ஆனால் திக்கல் மாறவில்லை. “இது ஒரு குறையே இல்ல. ஸ்பீச் தெரப்பி போங்க. பேசப் பேச சரி ஆகிடும்” என்றார் மருத்துவர்.
காலம் கடந்ததே ஒழிய பலன் ஒன்றும் இல்லை. இன்று வரை திக்கலை, ஒருவரும் ஒரு குறையாக அவளிடம் காட்டியதில்லை என்பதால் குட்டிப் பெண்ணின் சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி இருப்பதில்லை.
அடுத்த வருடமும் பள்ளி, மாலை பேஸ்கெட் பால் வகுப்பு, டென்னிஸ் வகுப்பு என நாள்கள் கடந்தன ரகுவிற்கு. படிப்பில் ‘படு சுமார்’ என்ற பெயரோடு ஏழாம் வகுப்பை முடித்தான் ரகு.