Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ -3

பகுதி 3

‘வீ. எஸ். பொட்டிக்..’ என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த கடையிலுள், தனது கைவண்ணத்தை காட்டிக்கொண்டிருந்தாள் அமிழ்தினியாள். 



Advertisement

அவளருகே போனில் ஜேசுதாஸ், அவரின் இனிய குரலால் இனிமையை பரப்பிக்கொண்டிருந்தார்.. மெல்லிசையாய்.

அவளை தாண்டி கூட.. அடுத்தவருக்கு அந்த இசை கேட்குமா..? என்பது சந்தேகமே.. அவ்வளவு குறைவான சத்தத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது அது. இது எப்போதும் அவளின் வழக்கம்.

Advertisement

Advertisement

தனியாக இருக்கும் நேரங்களில்.. அவளின் துணை இந்த இசை மட்டுமே.. 

மனதில் தோன்றிய கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விசயம் என்பதால்.. கவனமாக, தனது வேலையில் ஆழ்ந்திருந்தவளை கலைத்தது.. உள்ளே ஆட்கள் வருபதை உணர்த்த வைத்திருந்த சிறு மணிகளின் ஓசை.

Advertisement

கதவு திறந்து வந்தவரை கண்டவள் புன்னகை முகமாக, “வாங்க ஆன்ட்டி..” என்று அழைத்தபடி பாடலை நிறுத்தினாள்.

“உன்னோட இந்த சிரிச்ச முகத்தை பார்த்தாலே தனி உற்சாகம் வந்திடும் போ…” என்று சொன்னபடி வந்தவர்,

“அம்மாடி.. நீ போன தடவை ரெடி பண்ணி கொடுத்த சுடிதார் எல்லாமே என்னோட மகளுக்கும், மருமகளுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு. 

அதே அளவுல வேற டிசைன்ஸ் இருந்தா எடுத்து கொரியர் பண்ண சொல்லி என்னை.. பாடா படுத்திட்டு இருக்காங்க ரெண்டு நாளா..” என்றிட, 

“அதுக்கு என்ன ஆன்ட்டி.. இருக்கறதை காட்டறேன் பாருங்க. அது சேட்டிஸ்ஃபைடா இல்லன்னா.. உங்களுக்கு எந்த மாதிரி வேணுமுன்னு சொல்லுங்க ரெண்டு நாள்ல நா ரெடி பண்ணி கொடுக்கறேன்..” என்றதும்,

“சரிம்மா.. நீ இருக்கறத காட்டு. அதை போட்டோ எடுத்து அவங்க ரெண்டு பேருக்கும் அனுப்பிவிடறேன். 

அதுல அவங்க எதாவது ஆல்ட்ரேஷன் சொன்னா அதை மட்டும் செஞ்சு கொடுத்திடு..” என்றவர்,

இனியாள் எடுத்து காட்டியவற்றில் தன் மனதிற்கு பிடித்தவற்றை படம் பிடித்து அனுப்பி விட, 

அவர்களோ வீடியோ கால் மூலமாக.. மேலும் சிலதை பார்த்து அதில் அவர்களின் தேவையை சொல்லி, தேர்ந்தெடுத்து.. என நேரம் சென்று கொண்டிருந்தது.

அதற்கிடையே துணி தைக்கவென வந்திருந்தவர்களையும் பார்த்து, அவங்களின் தேவைக்கு ஏற்ப அளவெடுத்து.. என பரபரப்பாக இருந்த நேரத்தில் வந்து சேர்ந்தனர் வெண்பாவுடன் சம்யுக்தாவும், தனமும்.

பொட்டிக் ஆரம்பித்த புதிதில் பெரிதாக வியாபாரம் இல்லாமல் இருந்ததால் இனியாளுக்கே அங்கே அதிக வேலை இருக்காது. 

அதனால் குழந்தையோடு தனம் வீட்டிலும், சம்யுக்தா கல்லூரிக்கும் சென்று விடுவது வழக்கமாக இருந்தது.

ஓரளவு துணியின் தரம் நன்றாக இருந்ததோடு விலையும் நடுத்தர வர்க்கத்தவரும் வாங்கும் வண்ணம் இருக்க, நாளுக்கு நாள் வியாபாரமும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

விடுமுறை நாட்களில் அக்காவிற்கு துணையாக சம்யுக்தாவும் பொட்டிக் வந்துவிட, கொஞ்சம் உதவியாக இருந்தது இனியாளுக்கு.

மாதங்கள் செல்ல பொட்டிக் அருகிலேயே.. பெண்களுக்கான தரமான ப்யூட்டி பார்லர் ஒன்று உருவாக, அங்கு வரும் பெண்களின் பார்வை.. இவர்களின் பொட்டிக் மேலும் பட, இப்போது ஓரளவு நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

தைக்க கொடுப்பவரின் விருப்பத்தை கேட்டு.. அதை சிறப்பாக செய்து கொடுப்பதோடு, இனியாளும் தனக்கு தோன்றிய வேலைப்பாடுகளை சொந்தமாக உருவாக்கி விற்பனைக்கு வைக்க, அது போன்ற உடைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதனால் வருமானம் கூடிய அதே அளவு அதிக வேலை பளுவும் இனியாளுக்கு சேர துவங்கியது. 

இனியாளின் வேலை பளுவை குறைக்க வேண்டி, “ஆட்களை வேலைக்கு வைக்கலாம்..” என்ற தனத்தின் யோசனையை கிடப்பில் போட்டுவிட்டு, இனியாளே முடிந்தவரை அனைத்தையும் சமாளிப்பதை கண்டவர் குழந்தையோடு கடைக்கு வர ஆரம்பித்துவிட்டார்.

முதலில் தடுக்க நினைத்த இனியாளுக்கு.. அவரின் இருப்பும் சில வலிசல் பேர்வழிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள உதவ, அவரின் வருகையை தடுக்காமல் ஏற்றுக்கொண்டாள்.

குடும்பத்தின் பணச்சிக்கல்களை ஓரளவு சமாளித்தாலும்.. சம்யுக்தாவின் திருமணம், வெண்பாவின் படிப்பு.. என இன்னும் இரு பெரும் பொறுப்பு அவளுக்கு இருப்பதால்.. அவளுக்கு வேலைக்கு ஆட்களை போடாமல்.. தனியாக போராடிக்கொண்டிருக்கிறாள். 

இனி வரும் சம்யுக்தாவின் வருமானத்தையும், தன்னால் முடிந்த அளவு சேமிப்பையும் கொண்டு.. ஒரிரு வருடத்தில் சம்யுக்தாவுக்கு ஏற்ற வரனை பார்த்து மணம் முடிக்க வேண்டும்.. என நினைத்து கொண்டிருக்கிறாள் அமிழ்தினியாள்.

அவளின் எண்ணம் ஈடேற சம்யுக்தா ஒத்துக்கொள்வாளா..? முட்டுக்கட்டை இடுவாளா..? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

“அம்மா..” என்றபடி முயல்குட்டியாய் துள்ளி வந்த குழந்தையை கையில் அள்ளிக்கொண்ட இனியாள், குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு இறக்கிவிட, 

சமத்தாக சென்று தனக்கான குட்டி இருக்கையில் அமர்ந்து கொண்டாள் அவளின் குட்டி இளவரசி.

ஒரு வயதை தொடும் முன்பே கடைக்கு வர ஆரம்பித்ததால், இனியாளின் வேலையை உன்னிப்பாக கவனித்து ஆட்கள் வரும் போது அவள் ‘பிஸி..’ என்பதை உணர்ந்த குழந்தை, அந்த நேரத்தில் மட்டும் சமத்தாக தனக்கான இடத்தில் தனது விளையாட்டு பொருளோடு அமர்ந்து விடுவாள்.

ஆட்கள் இல்லாத நேரத்தில், அவளின் ராஜ்ஜியம் தான் அங்கு நடக்கும்.

தனமும்.. தனது பங்கிற்கு வந்தவர்களின் தேவையை கேட்டு, அதற்கு தக்க இருப்பதை எடுத்து காட்ட துவங்கினார்.

சம்யுக்தா கோவிலில் இருந்து கொண்டு வந்த திருநீரை அக்காவின் நெற்றியில் வைத்து விட்டவள், “அக்கா, டைமாச்சு நா கிளம்பறேன்..” என்று விட்டு திரும்பி, 

“ஏய் சிலிப்பீ.. வர்றேன்டீ..” என சொல்ல,

“பாய் சித்தா..” என்றாள் குழந்தையும் கை அசைத்து சமத்தாக.

சம்யுக்தா கல்லூரி செல்லும் போதும், இனியாள் பொட்டிக் செல்லும் போதும், “அவர்கள் வெளியே போகும் போது பிடிவாதம் செய்யக்கூடாது..” என்ற தனத்தின் பேச்சில் பழக்கி போன பிள்ளை, அவர்கள் கிளம்பினாலும் அழகாய் அவர்களுக்கு கையசைத்து விடை கொடுத்துவிடுவாள்.

‘சூழ்நிலையை உணர்ந்து நடக்கும் பிள்ளைகளை பெறுவதும் ஒரு வரம் தான்..’ என அவ்வப்போது தோன்றாமல் இல்லை தனத்திற்கு.

அது போன்று சூழ்நிலைக்காக.. தனது வாழ்க்கையை இழந்துவிட்டு, வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து, இன்றும் தங்களுக்காய் பாடுபடும் இனியாளை எண்ணி மனதில் எழும் வலியும் குறைவதாய் இல்லை அவருக்கு..

வந்திருந்த ஆட்கள் சென்று, கடைக்குள் மற்ற மூவர் மட்டுமே என்ற நிலைக்கு வந்த பின், தனது வேலையை காட்ட ஆரம்பித்தாள் வெண்பா.

அவளின் சேட்டையை ரசித்தபடி தையல் மிஷினில் அமர்ந்தாள் அமிழ்தினியாள்.

குழந்தையோட வர ஆரம்பித்த புதிதில், வெண்பாவை அடக்கி ஓரிடத்தில் எப்போதும் அமர வைக்க முயன்ற தனத்திடம்,

“அம்மா, விளையாடுற வயசுல குழந்தைய இப்படி ஒரு இடத்துல வச்சிருக்கறது எனக்கு பிடிக்கல. 

ஆனா, நம்ம சூழ்நிலை.. வேற வழியும் இல்லை ன்னு தான் இங்கே அவள வச்சிருக்க அலோவ் பண்ணறேன்.

ரொம்ப அவள அடக்கி வைக்க பார்க்காதீங்க. குழந்தைக்கே உண்டான விளையாட்டு குணத்தோட அவ வளரட்டும். 

இந்த வயசுல அவளை முடக்கி உட்கார வச்சு, நாளைக்கு அவ வளர்ந்ததும், ‘அச்சோ, இதெல்லாம் நம்ம மிஸ் பண்ணிட்டோமே..!’ ன்னு ஃபீல் பண்ணா, அப்போ அதை அவ அனுபவிக்க முடியுமா..?

ஆளுங்க வராத நேரத்துல அவ இஷ்டத்துக்கு இருக்கட்டும். 

வளரும் போது, அவளுக்கு எதை எடுக்கனும் எதை எடுக்கக்கூடாதுன்னு நல்லாவே தெரிஞ்சிடும்..” என இனியாள் சொல்லிவிட,

தாயாய்.. இனியாளின் எண்ணத்தை உணர்ந்து கொண்ட தனமும், அதன் பிறகு ஆட்கள் வரும் போது மட்டும், அவளை தனியாக அழைத்து சென்று ஓரிடத்தில் அமர வைத்து பழக்க, அதுவே வெண்பாவிற்கு பழகி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!