Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தித்திக்கும் நிலவு

Thiththikum Nilavu 3

 

வீட்டிற்குள் வந்த அகரன் கூடத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான். கூடத்தில் யாரும் இல்லை. ஆதிரா தந்தை என்ன சொல்வாறோ என்று கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்.

அவளை பார்த்த அகரன் “ இப்ப எதுக்கு என் முகத்தையே பாத்துட்டு இருக்க வீட்டுக்கு வந்தவங்களுக்கு சாப்ட எதாவது கொடுக்கனும்னு தெரியாதா?” என்றான்.

சத்தம் கேட்டு வெளியில் வந்தார் ஆதிராவின் தந்தை ராஜமாணிக்கம். தந்தை வெளியில் வந்தவுடனே ஆதிரா தனது அறைக்குள் சென்று விட்டாள். அங்கு நின்று அவரிடம் யார் வாங்கி கட்டுவது.



Advertisement

வந்தவனை பார்த்து அவர் “வா” என்று அழைக்கவில்லை. உள்ளே திரும்பி “பார்வதி இராவுக்கு இடியாப்பமும் தேங்காபாலும் சேத்து பன்னிரு” என்று குரல் கொடுத்தார்.  அவர் கூறியதை கேட்ட அகரன் முகத்தில் புன்னகை விரிந்தது. கணவரின் குரல் கேட்டு அடுக்களைக்குள் இருந்த பார்வதி கூடத்திற்கு வந்தார்.

அகரனை பார்த்து மலர்ந்த முகத்துடன் “வா அகரா நல்லா இருக்கியா?” என்றார்.

“நல்லா இருக்கேனுங்கத்த நீங்க எப்படி இருக்கீங்க மாமாவ நல்ல பாத்துக்கிறீங்களா” என்றான்.

Advertisement

“உன் மாமாவ பாத்தா எப்படி தெரியுது” என்றவரிடம் “கொழுப்பு கொஞ்சம் அதிகமா  இருக்கும் போலியே அத்த அத கவனிக்காம விட்டுட்டிங்களே” என்றான் குறும்பாக.

Advertisement

“ஆத்தீ நா இல்ல” என்று அவர் அடுக்களைக்குள் செல்ல பார்க்க “அட இருங்க அத்த” என்று அவரை இருக்க வைத்து மேலும் தன் மாமாவை வம்பிழுக்க அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தவரோ அதற்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை போல் நாளிதழ் படித்துக் கொண்டிருப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தார்.

அவன் தன்னை கோவப்படுத்தியாவது பேச வைக்க தான் இவ்வளவு பேசுகிறான் என்பது அவருக்கும் தெரிந்து தான் இருந்தது. அதற்கு இடமளிக்க கூடாது என்று தான் அமைதிமயாக இருந்தார். அவரின் அமைதியை பார்த்து விட்டு அதற்கு மேல் அவரை சோதிக்காமல் “நான் கிளம்புறேன் அத்தை” என்று அவன் கிளம்ப எத்தனிக்க மாணிக்கம் வேகமாக மனைவியை பார்த்தார். அவரின் பார்வையை உணர்ந்த பார்வதி “சாப்டுட்டு போ கண்ணா” என்றார்.

“இல்லத்த வீட்டுல எல்லாரும் சாப்டாம காத்துட்டு இருப்பாங்க நான் இன்னொரு நாள் இங்க சாப்டுறேன்” என்று சொல்லி விட்டு சென்றுவிட்டான்.

Advertisement

அவன் சென்றதும் மாணிக்கம் மனைவியை பார்க்க ‘இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு தெரியலயே’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்.

சிறிது நேரம் சென்று கணவரை சாப்பிட அழைக்க அவர் வேண்டாம் என்றுவிட்டு  படுத்துவிட்டார்.

அவர் தீவிர யோசனையில் இருப்பது தெரிந்ததால் பார்வதியும் சென்று விட்டார். “என்னம்மா அப்பா வரல” சாப்பிட்டு கொண்டே ஆதிரா கேட்க “அப்பா வேண்டாம்னு சொல்லிட்டார்டா” என்றார்.

“அத்தான் வந்தது அப்பாக்கு கோவமாம்மா” என்றாள் வருத்தமாக. உடனே பார்வதி “நீ  வேறடா  அவன் வந்ததுல அவருக்கு கோவம் இல்ல அவன் சாப்டாம போய்ட்டானேன்னு தான் இவரும் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டாரு” என்றார் கணவரை அறிந்தவராய்.

“என்னம்மா சொல்ற அப்ப அத்தான்கிட்ட அப்பா பேசிட்டாரா ” ஆர்வமாக கேட்டாள். “ம்க்கும் பேசிட்டாலும் அதுலா பேசலடி அவன் மேல  கோவம் போகல ஆன பாசமும் கொறையல” என்றார்.

“எப்படிம்மா இவ்வளோ உறுதியா சொல்ற” என்று கேட்டாள்.

“நீ ஊர்ல இல்லாதப்ப ஒரு நாள் அகரன் வீட்டுக்கு வந்தான்” என்று அன்றைய தினத்தின் ஞபாகத்தில் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு வருடம் முன்பு அரிசி லோடு சம்பந்தமாக ஆதிராவின் வீட்டிற்கு பேச வந்தான் அகரன். அவன் வீட்டிற்குள் வரும் போது மாணிக்கம் கூடத்தில் தான் அமர்ந்திருந்தார். வந்தவனை பார்த்துவிட்டு அவர் அமைதியாக இருந்தார். அவன் “அத்தை” என்று அழைக்க பதறிக் கொண்டு வெளியில் வந்து கணவரையும் மருமகனையும் மாறி மாறி பார்த்தார். வீடு தேடி வந்தவனை கணவர் அவன் மனம் நோகும்படி எதுவும் சொல்லிவிடுவாரோ? என்ற பயத்தில் இருந்தார். அதில் இத்தனை நாட்கள் கழித்து வீடு வந்திருந்தவனை அவர் அழைக்க மறந்து விட்டார். கணவர் தன்னை முறைக்க என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். அவரை பார்த்த அகரனும் அரிசி லோடை பற்றி மட்டும் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

அவன் சென்ற பின்பு மாணிக்கம் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

“வீட்டுக்கு வந்தவனை வான்னு சொல்ல முடியாதா உன்னால நான் பேசுனாதான் பேசுவியா? எப்பயும் அவனை மடியில போட்டு சீராட்டுவியே இன்னைக்கு ஒரு வாய் தண்ணயாச்சி குடுத்தியா? மணி என்னன்னு பாரு எப்டியும் சாப்டுருக்க மாட்டான்  வந்தவன சாப்ட வைச்சு அனுப்பாம ஏன் வந்தனு கேட்டு அவன வீட்ட விட்டு அனுப்பிட்ட” என்று அவர்  கூற “எதே நான் ஏன் வந்தனு கேட்டேனா?” அவர் பாவமாக கேட்டார்.

“பின்ன வந்தவனுக்கு விருந்தா வச்ச எப்ப போவான்னு பாத்துட்டு தான நின்ன? அதான் இந்த வீட்டு வாசல மிதிக்க வேண்ணான்னு போயிட்டான்” என்று திட்ட ஆரம்பித்து வீட்டுக்கு வந்தவரை எப்படி கவனிக்க வேண்டும் என இரண்டு நாட்கள் பாடமெடுத்தார்.

இரண்டு நாட்கள் கழித்து கணவர் சாமாதானமாகி விட்டார் என்று நினைத்து “காப்பி தண்ணி கொண்டு வரவாங்க?” என்று கேட்க “இப்ப என்கிட்ட கேட்குறத அன்னைக்கு வீட்டுக்கு வந்தவன் கிட்ட கேட்ருந்தா நான் சந்தோசபட்டுருப்பேன்” என்று கொட்டு வைத்தார்.

அன்று நடந்ததை சொல்லி முடித்து “அதுக்கு அப்பறம் எத்தனை நாள் அதையே சொன்னார்ன்னு தெரியுமா?” என்றார். இவற்றை கேட்டுக் கொண்டிருந்த ஆதிராவிற்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தை தன்னவனை வெறுத்துவிடவில்லை தன்னவன் மேல் கொண்ட அன்பு இன்னும் மாறவில்லை என்பதால் வந்த மகிழ்ச்சி. “அப்ப சரிம்மா” என்று மனநிறைவுடன் தூங்க சென்றாள்.

———————-

அகரன் அவன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்த உள்ளே அவனின் வண்டி  சத்தத்தை கேட்ட செல்வி “அம்மா அண்ணா வந்தாச்சு சீக்கரம் சாப்பாடு எடுத்து வைங்க பசிக்குது” என்றாள்.

“ஏன்டி இவ்ளோ நேரம் உன்ன சாப்ட தான சொல்லிட்டு இருந்தோம் வேண்ணான்னு சொன்ன?” என்றார் யசோதா.

“இப்பதான் அண்ணே வந்துருச்சேம்மா அப்பறம் என்ன? சரி சரி பேசிட்டே இருக்காமா சாப்பாடு வைங்க” என்றாள்.

“வந்து நீயே எடுத்து வை இப்படி உக்காந்துட்டு எதுவும் செய்யாம எல்லாரையும் வேல வாங்குறது தான் உன் வேலையா?” கண்டிப்புடன் யசோதா சொன்னார்.

“இப்ப எதுக்கு அத்த அவள திட்டுறீங்க நீங்க உக்காருங்க நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்” என்று உள்ளே சென்று விட்டாள் வீட்டின் மூத்த மருமகளும் சேரனின் மனைவியுமான நந்தினி.

“இப்டி வீட்டுல எல்லாரும் அவளுக்கு செல்லம் கொடுத்தா அவ எப்டி உருப்படுவா?” என்றார்  யசோதா.

இரண்டு தலைமுறைக்கு பின் முதல் பெண் குழந்தை என்பதால் செந்தமிழ்ச்செல்வி அனைவருக்கும் செல்லம். யாராவது கண்டிக்க வேண்டுமே என்று யசோதா கண்டிப்புடன் தான் நடந்து கொள்வார் மகளிடம்.

“அவ இப்ப என்ன கெட்டு போய்ட்டா யசோம்மா?” என்று குளித்து விட்டு வந்த அகரன் கேட்க அதன் பின் யசோதா வாய் திறக்கவில்லை. அகரன் உணவு மேசைக்கு வந்ததும் அனைவரும் ஆஜராகிவிட சாப்பிட அமர்ந்தனர்.

அகரனின் அருகில் அமர்ந்த இளங்கோ “சாப்ட போறியா?” என்றான் மெதுவாக.

“அப்பறம் எதுக்கு இங்க உக்காந்துருக்கேன் நீ சாப்டுறத வேடிக்க பாக்கவா” என்றான் அகரன்.

“இல்ல நீ உன் மாமனார் வீட்டுல இருந்து விருந்து சாப்டு வந்துருப்பன்னு நினைச்சேன்” என்ற இளங்கோவை முறைத்த அகரன் சாப்பிட ஆரம்பித்தான்.

பின் சேரனின் முகத்தை பார்த்து விட்டு “அண்ணா இந்த மாசம் அந்த ஜவுளி கடைக்காரர் சரியா லோன் கட்டிட்டாரா?” என்று கேட்டான்.

“அது உன் வேலதானா அகரா? நானே உன்கிட்ட அத பத்தி பேசனும்னு இருந்தேன்டா என்ன சொன்ன அவர்கிட்ட இந்த மாசம் மட்டும் இல்ல பழைய பணத்தையும் சேத்தே கட்டிட்டாரே?” என்று விட்டு “இந்த பிரச்சனைய பத்தி நான் உன்கிட்ட சொல்லவே இல்லையே” என்று கேட்டான்.

“நீங்க சொல்லலன்னா என் அண்ணன் முகத்தை பாத்தே எதோ பிரச்சனைன்னு கண்டுபிடிக்க தெரியாதா?” என்று சொல்லி “நீங்க வேலை செய்யுற இடத்துல விசாரிச்சேண்ணா” என்றான். சேரன் வாஞ்சையாக தம்பியை பார்த்தான்.

“நானும் உனக்கு அண்ணன்தாண்டா” என்று சொன்ன இளங்கோவை பார்த்து “யாரு நீயா?” என்று அகரன் கேட்க “உன்ன விட நான் 5 மாசம் 20 நாள் மூத்தவன்டா” என்று  கணக்கு சொன்னான் இளங்கோ.

“இப்ப அதுக்கு என்ன தம்பி செய்யனும்” என்று நந்தினி கேட்க “நீங்க இருங்க அண்ணி” அகரன் அண்ணியிடம் சொல்லிவிட்டு இளங்கோவை பார்த்து “என்னடா” என்றான்.

“அண்ணன் கேட்காமயே அவன் பிரச்சனையை முடிச்சிட்ட நான் கேட்டத எப்ப செய்ய போற? என்று கேட்டான். “நாளைக்கு காலைல 11 மணிக்கு வா எல்லாம் பேசியாச்சு” என்றான். இளங்கோ புன்னகையுடன் “தம்பியுடையான் படைக்கு அஞ்சான் ” என்று உற்சாகமாக உண்டான்.

“அண்ணன் உடையானும் படைக்கு  அஞ்சான்தான்” என்ற எழில் அகரனை பார்க்க “நீ கேட்ட வண்டிய இன்னைக்கு ஆடர் கொடுத்துட்டேன் ஒரு வாரத்துல வீட்டுக்கு வந்துரும்” என்றான் அகரன். எழில் இளங்கோவை பார்த்து கண்சிமிட்டிவிட்டு விசில் அடித்துக் கொண்டே உண்டான்.

“அண்ணி  பாப்பாவுக்கு மருந்து கொடுத்துட்டு தான தூங்க வச்சிங்க” என்ற அகரனின் கேள்விக்கு “ஆமா தம்பி” என்று பதில் கொடுத்தாள்.

என்னவோ இளங்கோவிடம் சரளமாக பேசும் நந்தினி அகரனிடம் கேள்வி கேட்டால் மட்டுமே பதில் வரும். அவன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் அவனின் கம்பீர குரலுக்கு முன்னால் அவளுக்கு சரளமாக பேச வராது.

இரவு அனைவரும் ஒன்றாக உண்பது அவ்வீட்டில் அனைவரும் விரும்புவது. வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டு உண்பதில் அலாதி இன்பம். அவ்வீட்டிற்கு வந்ததும் நந்தினியும் அதனை பழகிக் கொண்டாள் விருப்பத்துடன். யார் இரவு வருவதற்கு தாமதம் ஆனாலும் காத்திருப்பார்கள் மற்றவர்கள். வெளியில் உண்ண நேரும் சமயங்களில் முதலிலேயே வீட்டிற்கு அழைத்து சொல்லிவிடுவர்.

“சேனாப்பா இன்னும் இரண்டு நாள்ல வேல முடிஞ்சி ஆரம்பிச்சுரலாம்” என்றான் அகரன்.

“சரி கண்ணா” என்பதை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை சேனாதிபதி. அவருக்கு சிலம்பம் பயிற்றுவிக்கும் பள்ளி ஆரம்பித்து தந்திருக்கிறான். அதன் தொடர்ச்சியாக பக்கத்து ஊரிலும் ஆரம்பிக்க வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

———-

மறுநாள் காலை ஊர் தலைவர் அம்மையப்பர் வீட்டின் இருக்கையில் அமர்ந்திருந்தார். தன் அருகில் பவ்யமாக அமர்ந்திருந்த ராகவனிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக இதேயே கூறும் தந்தையின் வார்த்தைகளில் கொஞ்சமும் சலிப்பு எதுவும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான் ராகவன்.

சமயலறை வாசலில் நின்று இதனை பார்த்துக் கொண்டிருந்த இளமதி அவ்வீட்டு தலைவி பாக்கியலட்சுமி மற்றும் ராகவனின் மனைவி சுசீலா ஆகியோர்களிடம் “இவனுக்கு மட்டும் எங்க இருந்து தான் இவ்ளோ பொறுமை வந்துச்சோ அதுவும் அப்பாகிட்ட எப்டி புதுசா கேட்குற மாதிரியே கேட்குறான் பாருங்க” என்று கொட்டாவி விட்டுக் கொண்டே அறையிலிருந்து வந்த முகிலன் சொன்னான்.

“இரண்டு நாள் தலைமறைவால இருந்தீங்க எப்ப வந்தீங்க கொழுந்தனாரே?” என்று கேட்டாள் சுசீலா.

“அதான் உங்க புருசன் மாட்டிகிட்டானே இனிமே என் காதுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு தலைமறைவு வேணான்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான்.

“உங்க விவரம் ஏன் கொழுத்தானரே என் புருசனுக்கு  இல்ல?” என்று அவள் கேட்க “அவனுக்கு அறிவு அவ்ளோ தான் அண்ணி எங்க அம்மா என்னை மட்டும் கொஞ்சம் அறிவா பெத்துட்டாங்க என்ன பன்ன” என்று சிரிக்காமல் சொன்னான். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்து விட்டார்கள்.

“இரண்டு நாளா உன் கையால சாப்டாம சாப்பாடே உள்ள இறங்கலம்மா இன்னைக்கு என்னம்மா காலைல” என்று அன்னையிடம் கேட்டான்.

“சாப்பாடுலா இருக்கட்டும்ண்ணா முதல்ல குளிச்சியா? பல்லாவது விலக்குனியா? அப்பாக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்” என்று இளமதி சொல்லி முடிப்பதற்குள் “டேய் சின்னவனே இங்க வா” என அவனை அழைத்தார்  தந்தை.

“இவருக்கு எப்படி நான் வந்தது தெரியும்” என்று கேட்க அதற்குள் மீண்டும் அழைத்தார்.

எழுந்து அவர் அருகில் சென்று அவர் கேள்வி கேட்பதற்குள் போனை எடுத்து காதில் வைத்து “மில்லுக்கு தான இதோ உடனே வரேன்” என்று சொல்லிக் கொண்டே அடி எடுத்து வைக்க அம்மையப்பர் அவனின் கையை பிடித்துக் கொண்டார்.

“அண்ணே இன்னைக்கு வசமா மாட்டுனான்” இளமதி அண்ணியிடம் சொல்ல “பேசாம சீன மட்டும் பாரு” என்றாள் சுசீலா.

தந்தையிடமிருந்த தன் கையை விடுவித்து கொண்டே “மில்லுக்கு அவசரமா போகனும்ப்பா கைய விடுங்க” என்றான். “இரண்டு நாளா அங்க தானடா இருந்த இரு போகலாம் உங்கிட்ட பேசனும்” என்றார் மீசையை முறுக்கி கொண்டே.

“என்ன பேசனும்  சொல்லுங்க கேட்டுட்டே போறேன்” கையை எடுத்து விட்டு கேட்டான்.

“உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா அவங்க கூட பேசாத பழகாதன்னு சொன்னதையும் கேட்காம கூடசேந்து சுத்துறது மட்டுமில்லாம” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் பொறுமை இல்லாமல் “இதையே எத்தன நாளைக்கு சொல்லுவீங்க” என்றான்.

“என் பேச்சை கேட்கவே கூடான்னு முடிவோட இருக்கியா நீ” என்று கேட்டார்.

“இப்ப உங்க பேச்ச கேட்காம என்ன பன்னிட்டேனாம்”

“போட்டி நடந்த அன்னைக்கு அவன் கூட பேச கூடாதுன்னு உன் கிட்ட சொல்லிதான கூட்டிட்டு போனேன், என் மானமே அங்க சந்தி சிரிச்சிட்டு இருக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நீ அவன் ஜெயிச்சதுக்கு விசில் வேற அடிப்ப” மிரட்டலாக கேட்டார்.

“அப்பா நீங்க என்ன தப்பா நினைச்சிட்டீங்க” என்றான். அவர் என்ன என்பது போல் பார்க்க “நான் அண்ணன் ஜெயிச்சதுக்கு தான் விசில் அடிச்சேன் நம்ம கிட்ட இல்லாத பணமா? ரூ.50000 நமக்கு எதுக்குன்னு அண்ணே சரியா விளையாடி உங்க மானத்தையும் காப்பாத்த 25000 ஜெயிச்சுச்சே அதுக்கு தான் விசில் அடிச்சேன்” என்று பல்டி அடித்தான்.

“உங்க மூத்த பிள்ளயையும் கொஞ்சம் அறிவாளியா பெத்துருக்காம் அத்த அங்க பாருங்க என் கொழுந்தனாருக்கு இருக்க அறிவ” என்று கிசுகிசுப்பாக தன் மாமியாரிடம் கூறினாள் சுசீலா.

அவள் மெதுவாக கூறினாலும் ராகவனுக்கு அது கேட்டுவிட திரும்பி மனைவியை முறைத்தான்.

தான் சொல்லியதை தந்தை நம்பவில்லை என்று முகிலனுக்கும் புரிந்தது ‘ஆண்டவா அடுத்து என்ன சொல்லி சமாளிக்க என்ன காப்பாத்து‘ என்று மனதில் வேண்டிக் கொள்ள அவன் வேண்டியது கடவுளை கேட்டது போலும் வாசலில் அழைப்பு மணியின் சத்தம் கேட்க தந்தை அடுத்த கேள்வியை தொடுப்பத்குள் “யாருன்னு பாத்துட்டு வரேன்ப்பா” என்று வாசலுக்கு விரைந்தான்.

மனதில் ‘தெய்வமே! தெய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே! ‘ என்று நன்றி தெரிவித்து கொண்டே வந்து பார்க்க அதிர்ச்சியில் உறைந்து விட்டான். அவசரமாக கடவுளிடம் தெரிவித்த நன்றியை அவன் வாபஸ் பெற்றான். அப்படி வந்தது யாரோ?

…..தித்திக்கும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!