Skip to content
Post Views: 2,065
கீதம் – 7 
தன் அறையின் பால்கனியில் அமர்ந்து, தூரத்தே தெரிந்த தன் அத்தை வீடுகளை பார்த்து அத்தனை ஆத்திரம் வந்தது தர்ஷிக்கு. ஒரே ஊரில் அடுத்தடுத்த வீடுகளில் தான் வசித்தனர். கூப்பிடு தூரம் தான். கத்தி பேசினாலே போதும். அங்கே வரை கேட்கும். இத்தனை அருகில் இருந்தும், தங்களுக்கு அவர்கள் செய்த கொடுமைகளை தாய் உரைக்க கேட்டு, மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிகிறது. தன் வீட்டிற்கு வந்த நாள் முதல் நடந்தவைகளை தர்ஷியின் மனம் அசை போட ஆரம்பித்தது.
Advertisement
” அக்காவ், வெரசா ஓடி வா.. இந்தா என் மருமகள் வந்துட்டாலே.., கார் வந்துருச்சு., ” என்றவாரே விமலாக்கும் குரல் கொடுத்து கொண்டே தான், தெரு முனையில் வந்து கொண்டு இருந்த காரை நோக்கி வேகமாய் தன் வீட்டில் இருந்து ஓடி வந்தார் பரிமளா. தர்ஷி இறங்கி நின்றவுடன் ” வாடா என் செல்லம், நல்லா இருக்கியா? என்ன பெத்த ஆத்தா மாறி இருக்கியே… எம்புட்டு நாளாச்சு உன்னை பார்த்து..,” என கையிலே திருஷ்டி கழித்து, முகவாயில் கொஞ்சி மகிழ்ந்தவர், ” உன்னை கண்ணுல கூட காட்டாம, உங்க அம்மா ஒளிச்சு வச்சிட்டாலே…, எப்படித்தா இருக்க , ” என அவளை பேசவே விடாமல், அவர் மட்டுமே பேசி கொண்டு இருக்க,
” இவ ஒருத்தி, அங்குட்டு தள்ளுடி.., வந்த பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க கூட விடாம, பேசிக்கிட்டே இருப்பா., ” என்றவாறே அவரோடு சேர்ந்து ஆலம் சுற்றி தங்கள் அண்ணன் மகளை வரவேற்றனர்.
Advertisement
Advertisement
வந்த உடனே தன் மேல் அன்பை பொழியும் அத்தைகளை கண்டு தர்ஷியின் முகமும் புன்னகையை பூசி கொண்டு, ” அத்தை, எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்., நல்லா இருக்கீங்க தானே, எத்தனை வருஷம் ஆச்சு உங்களை பார்த்து, நான் தான் ஊர்க்கு வரல, நீங்களாவது வந்து என்னை பார்த்து இருக்கலாமே., என இவளும் மூச்சு விடாமல் அவர்களை போலவே கேள்வி கேட்டு, பதில் சொல்லி, என காம்பௌண்ட் சுவற்றின் உள்ளே கூட செல்லாமல் பேசி கொண்டே இருக்க,
அதுவரை அவர்களின் சம்பாஷணையை தலையிடாமல் ஒதுங்கி நின்ற சகுந்தலா ” தர்ஷி, வந்த பிள்ளை எம்புட்டு நேரம் தான் தெருவுல நிற்ப, வீட்டுக்குள்ள போ” என கூறியபடியே கைகளை பற்றி கொண்டு உள்ளே செல்ல, ” வீட்டுக்கு வாங்கத்தே, அங்கே பேசலாம்., ” என்றவாறே இவளும் உள்ளே செல்ல, ” நீ போத்தா, பொறகு வாரோம்.,,” என வழிவிட்டனர்.
Advertisement
” என்னம்மா., அத்தைங்கட்ட பேச கூட விடாம இப்படி இழுத்துட்டு வர்ற., என்னாச்சும்மா., என்றவளிடம்
” ஊருல இருந்த வந்தவ வாசலில் நிற்கலாமா., அதான் கூட்டி வந்தேன்., நீ குளிச்சி முடிச்சு வந்து மொத சாப்பிடுத்தா., அப்புறம் பேசலாம்.,” என ஒன்றும் கூறாமலே மேலே அனுப்பி வைத்தார்.
இரவில் தாயும் மகளும் பேசியபடியே பொழுது போனது. நிலத்தை குத்தகை விட்ட கதை, இப்போ நடக்கும் நிலவரங்கள் என அனைத்தையும் பற்றியும் பேசியவர் மறந்தும் தன் நாத்திகளை பற்றி மூச்சு விடவில்லை. இரு நாட்கள் தூக்கம், அரட்டை என நன்றாக தான் சென்றன. தன் அறையை ஒழுங்குபடுத்தி, ஊரிலிருந்து கொண்டு வந்தவைகளை அடுக்கி வைத்தும், நிற்க கூட நேரம் இல்லாமல் நாள் கழிந்தது.
மூன்றாம் நாள் காலையிலேயே அவளின் அத்தைகள் பரிமளாவும், விமலாவும் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். வந்தவர்களை வரவேற்று, காலை சாப்பாடு முடிந்தவுடன், பேச்சுவாக்கில் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்.
பரிமளா ” இங்கேரு அண்ணி.. உன் பொண்ணை படிக்க வைக்கணுன்னு சொல்லி ஏதோ ஊருக்கு கூட்டி போய், மறச்சு வச்சு படிக்க வச்சிட்ட. அவளும் படிப்பு முடிச்சு வந்துட்டா. இன்னும் எதுக்கு காத்துட்டு நிற்கனும்?
எம்புட்டு படிச்சாலும் பொட்ட கோழி கூவி பொழுது விடியாது. எம் மவன் அவளுக்காக எம்புட்டு வருஷம் தான் காத்து கிடக்கிறது. அவம் அழகுக்கு ராணி மாறி பொண்ணு கிடைக்கும். சொந்தம் விட்டுட கூடாதுன்னு தான் உன் பொண்ணை கேக்கிறோம். என்ன சொல்லற..,” என்றவரை எதை கொண்டு சாத்த என்றே அவருக்கு புரியவில்லை. அப்போதும் ஒரு வார்த்தை பேசாமல் தான் முறைத்து பார்த்து கொண்டு இருந்தார்.
எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு, ரவுடி ஒருவனோடு இணைந்து பல திருட்டு வேலைகள் செய்தும், கொலை செய்துவிட்டு அதை மறைத்து திரிவதாய் பேச்சும், ஊரில் நடக்கும் அனைத்து மொள்ளமாரி வேலைகளுக்கும் காரண கர்த்தவாய் திரியும் மருதுவின் பார்வை தர்ஷியை தொடர்ந்து வருவது அறிந்து தானே அவளை கண் காணாத ஊருக்கு அனுப்பி படிக்க வைக்க அனுப்பியதற்கு காரணம்.
மீண்டும் அவனுக்கு மணம் பேச வந்துள்ள தன் நாத்தனாரிடம் என்ன சொல்லி திசை திருப்பவென்று அவர் யோசிக்கும் முன்பே,
” ஒன்னு மருதுக்கு வாக்கப்படு. இல்லை என் புள்ளை கண்ணய்யனை கட்டிக்கோ. முடிவு தெரியாம இன்னைக்கு போறதா இல்லை..,” என முந்தியை இழுத்து சொருகி கொண்டு, விமலா தர்ஷியை பார்த்த பார்வையில் அவளுக்கு ஒன்றும் புரியவே இல்லை.
முதல் நாள் தன்னை பாசத்தோடு வரவேற்று பேசியவர்கள் இன்று இப்படி பேசுவது ஏன் என புரியாமலே ” என்னத்தை சொல்றிங்க. நான் ஏன் உங்க புள்ளைங்கள கட்டிக்கணும். ரெண்டு பேருமே என்னை விட பத்து பதினைஞ்சு வருஷம் பெரியவங்க. படிப்பும் இல்லை, நான் எப்படி அவங்கள கல்யாணம் பண்ண முடியும்? ” கேள்வியை முடிக்கும் முன்பே
விமலா ” எங்க பிள்ளைகளை எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுமா, நீ தான் சீமையிலே படிச்சு வந்த சித்ராங்கி ஆச்சே., ம்குக்ம்.., ” என இழுத்து பேசி, ” இந்தா உன் வாயிலேயே வந்துருச்சு இல்ல சேதி, படிக்கலயாம், பொறவென்னத்த நீ சொல்லுவ, உன் மனசுல தான் அவன் இருக்கானே.
ஏண்டி, ஊருல இருக்கும் போது எவன் கூடவோ சுத்திட்டு இருந்தியாம். காத்து வாக்குல பேச்சு வந்துச்சு. என்ன கருமம்டி இது. எங்க அண்ணன் இருந்தா இப்படி நீ சீரழிஞ்சு வந்ததுக்கு வெட்டி போட்டு இருக்கும். ம்க்கும்.., என்னத்த சொல்ல., அவரு அல்பாயசுல போனதால அம்மாவும் பொண்ணும் ஆடிக்கிட்டு இருக்கீங்க. ஊர்ப்பேச்சை ஒதுக்கி வச்சு உன்னை கட்டிக்க நினைச்சா, சிலுப்பிட்டு வாரிகா., ., ” நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதை கேட்டு அதிர்ச்சியோடு பார்த்தாள்.
தான் கேட்டவை அனைத்தும் உண்மையா, என்ன நடக்கிறது இங்கே என ஒன்றும் புரியாமல் அன்னையை நோக்க, அமைதியாக இரு என கண்ணிலே ஜாடை காட்டினார்.
அதற்குள் பரிமளா, ” என்னடி பார்க்குற., சொத்துக்காக தான் உன்னை உசுரோட வச்சி இருக்கோம். இல்லைனா எப்போவோ கொன்னு போட்டு போயிருப்போம். இனி வெளியில் எங்கேயும் அனுப்புற மாதிரி எல்லாம் இல்லை. சொல்றது புரியுதா, ஆத்தாளும், மகளும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க., அதுவரை வாசலை தாண்டி எங்கேயும் காலை வைக்க முடியாது.” என்றவாறே கதவை ஓங்கி சாற்றி விட்டு இருவரும் வெளியே செல்ல எழுந்தனர். தங்கள் வார்த்தைக்கு மறுபேச்சு பேச கூடாது, சொல்வதை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்பதை போல படபட பட்டாசாய் பொரிந்து தள்ளி விட்டனர். வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தவர்களை பார்த்து, அது வரை ஊமையாய் இருந்த சகுந்தலா வாயை திறந்து பேச ஆரம்பித்தார்.
” இந்தா., நில்லுங்க, வீடு தொறந்து இருந்தா உள்ளே வந்து தின்னுட்டு குரைச்சிட்டு போவிங்களா ., உங்க பூச்சாண்டிக்கு எல்லாம் இங்கே யாரும் பயப்பட மாட்டோம். நீங்க பேசுறதுக்கு எல்லாம் அத்தாட்சி எதுவும் இல்லாம இருந்துச்சி. அதான் உங்கள தூக்கி போலீஸ்ல புடிச்சி கொடுக்க முடியாம இருந்தேன்.
இப்போ பேசுனது எல்லாம் என் பையன் ரெகார்ட் பண்ணி வைக்குற மாதிரி, இந்த ரூம்ல கேமரா வச்சிட்டு போயிருக்கான்..” அவர் கூறியதை கேட்டு அவர்களோ திருதிருவென முழிக்க,
” என்ன பார்க்குறீங்க. யாருடா இவ பையன்னு யோசிக்கிறீங்களா. என் பொண்ணு ஒருத்தன் கூட சுத்திட்டு இருந்தான்னு வாய் கிழிய பேசுனீங்களே. அதே ஆரவ் தான். நான் செத்தா கொள்ளியும் போடுவான். உசுரு இருக்க வரை என் பொண்ணையும் பார்த்துக்குவான்…,” என்றவர் தொடர்ந்து
” ஊருக்கு போன உன் பையன தூக்கி, ஜெயிலுக்கு உள்ளே போட்டாச்சு. இனி அவனால் வெளியே வர முடியாது. வாயை மூடிக்கிட்டு ஒழுங்கா இருந்தா நீங்களும் வுட்டுக்குள்ள இருக்கலாம். இல்லனா உங்களையும் தூக்கி வச்சுருவேன். சொல்றது புரியுதா., என அதிகாரமாய் பேசிவிட்டு
” அமைதியா இருக்கா, ஒன்னும் பண்ண மாட்டேன்னு நினைச்சுட்டு இருக்காதிங்க. என் புள்ளை படிச்சு முடிச்சிட்டு வரணும்னு தான் சும்மா இருந்தேன். வாலாட்டிகிட்டு வந்திங்க, நறுக்கி புடுவேன். ஒழுங்கா இருந்தா உங்களுக்கு நல்லது. புரிஞ்சுச்சா. கிளம்பு, கிளம்பு காத்து வரட்டும்…,” என எகத்தாளமாய் பேசிய தாயையும், மிரண்டு போய் வீட்டை விட்டு விழுந்தடித்து கொண்டு ஓடும் அத்தைகளையும் மாறி மாறி பார்த்து கொண்டே நின்று இருந்த தர்ஷி
” அம்மா. இங்கே என்ன நடக்குது. இத்தனை நாள் பாசமா பேசிட்டு இருந்த அத்தைங்க இப்படி கேவலமா நடக்கிறாங்க.ஆரவ் பத்தி தப்பு தப்பா பேசுறாங்க. என்னையும் பேச வேணாம்னு ஜாடை காட்டுறிங்க. அமைதியா ஒன்னும் சொல்லாம பொறுமையா இருந்த நீங்களும், கோபமா, தைரியமா பேசுறீங்க. எனக்கு ஒன்னும் புரியல. என்னை சுத்தி என்னமோ நடக்குது, என்னனு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..,.” அழுகை, கோபம், இரண்டும் கலந்து தர்ஷி உணர்ச்சிவசப்பட்டு பேச,
அவரோ கூலாக ” ஒன்னும் இல்லைடா, பயப்படாதே., அம்மா பார்த்துகிறேன். நீ உள்ளே வா.,உனக்கு நிறைய சொல்ல வேண்டியது இருக்கு., ” அவளை அணைத்து கொண்டு தேற்றி, கதவை உள்ளே தாளிட்டு கொண்டு மாடிக்கு கூட்டி சென்றார்.
*****
டைனிங் ஹாலில் அமர்ந்து உணவை கொறித்தபடி சாப்பிட்டு கொண்டு இருந்த ஜுபியை பார்த்து ” என்னடி காலையில இருந்து டல்லா இருக்குற. ஏன் அக்கா கல்யாணத்துல எதுவும் பிரச்சனையா ? ” வாயில் உணவை விழுங்கி விட்டு கேசியர் உமா கேட்க
” இல்லைக்கா, வீட்ல எந்த ப்ராப்ளமும் இல்லை. கல்யாணம் நல்ல படியா முடிச்சிட்டு, மனசு நிறைஞ்சு அவ்ளோ சந்தோசமா டியூட்டிக்கு வந்தேன். காலையில் பார்த்த பர்ஸ்ட் கேஸ் டெத். டோபமைன் இன்ஜெக்ஷன் கேட்டாருனு எடுத்துட்டு திரும்பறேன். கண்ணு வழியா ஜீவன் போயிருச்சு. சின்ன வயசு வேற. அவங்க வீட்டுல கத்தி கதறி அழுகிரதை பார்த்து நெஞ்சே வலிக்குது. எவ்ளோ தான் நம்மளும் அழுகையை கட்டுப்படுத்திட்டு நிற்கிறது சொல்லு. மனசு விட்டு போகுது. ச்ச்சே., ஒரு நல்ல நாள்ல கூட நிம்மதியா இருக்க முடியல..,” என உச்சு கொட்டி புலம்பினாள் ஜூபி .
” இப்படி எல்லாம் நம்ம யோசிக்கவே கூடாது. நம்மள கண்ட்ரோல் பண்ணிட்டு, திடமா நின்னு அவங்களுக்கு ஆறுதல் சொல்ல தான் பார்க்கணும். கூட சேர்ந்து ஒப்பாரி வச்சா இன்னும் ரெண்டு பேர் மயங்கி நெஞ்சு வலின்னு விழுவாங்க. பிறப்பையும் இறப்பையும் ஒரே மாதிரி தான் பார்க்கணும். சுக துக்கம் எல்லாம் மறந்து தான் நிற்கனும். நீ இப்போ தானே வந்திருக்க. இன்னும் ஒரு வருசத்துல இதெல்லாம் பழகிரும். பீல் பண்ணாம சாப்புடுற வேலைய பாரு..,” வயதில் மூத்தவளாய் செவிலியர் பிருந்தா அவளை தேற்றினார்.
” நம்ப நந்து இருந்தா வேடிக்கையா பேசி சிரிச்சுட்டு இருப்போம். அவ இல்லாம கை ஓடிஞ்ச மாதிரி இருக்கு. ஆரவ் சார் கூட தான் ஒரு வாரமா அட்மின் வேலையை பார்த்துகிட்டு இருக்கா. இன்னும் ரெண்டு நாள் முடிச்சுரும்னு சொன்னா, உமா கூறியதை கேட்டவர்,
” ஆமா உமா, சாரும் அந்த பாட்டி கேஸ் பார்த்துட்டு, அவளை தான் தேடுனார். அப்பாடி, அவங்க பண்ண பிரச்சனையில செவுல சேர்த்து ரெண்டு அறை கொடுக்கலாம்னு தோணுச்சு. அவ்ளோ கோபம் வருது.., ” லேப் ஸ்டாப் மருதாம்பாள் சொல்வதை கேட்டு.
” எனக்கும் அப்படிதான் தோணுச்சு ப்பா. பொம்பளயா அது. பதினேழு வயசு கூட இன்னும் அந்த டெலிவரி கேஸ்க்கு ஆகல. முதல்ல ரெட்டை பெண் குழந்தைங்காளாம். ஒரு வருஷம் கூட தான் முடிஞ்சுருக்கும். இப்போ அடுத்த டெலிவரியாம். அதுவும் பையன் வேணுமாம். டெலிவரி முடிச்சிட்டு கட்டுப்பாடு பண்ணுவோமானு தான் சார் கேட்டார். அதுக்கு அத்தனை சத்தம்…,” ராணி சொல்ல
” அந்த பொண்ணு பேந்த பேந்த முழிக்குது. எதுவும் சொன்னா பாட்டி அடிக்குமாம். பயந்துட்டு வாயே திறக்கல. அவ புருஷன்ட நந்து பேசி ஒத்துக்க வச்சிருக்கா போல. அவ பேச்சை கேட்டு இவன் எப்படி ஒத்துக்கலாம்னு அவங்க மகனையும் அடிக்கிறாங்க. என்ன ஜென்மமோ..,” என தலையில் அடித்து கொண்டாள் மேனகா.
” ம்ம்ம் ஆமா ராணி, அவங்க பேத்தியை தான் மகனுக்கு கட்டுனாங்களாம். அவங்க தான் முடிவு எடுக்கணுமாம். என் வாரிசு வர்றத நீ எப்படி தடை சொல்லலாம்னு கேக்குது. ஒரு மணி நேரம் அது கூட போராடி தான் அரை மனசா அப்பவும் ஒத்துக்குச்சு…,” ஜூபி சொல்ல,
” அவங்களா எங்கே ஒத்து கிட்டாங்க ஜூபி ? பொறுமையா சொன்னா கேக்கவே இல்லை. அப்புறம் மேடம் தான், மைனர் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி இதுக்குள்ள ரெண்டு பிள்ளை பெத்துட்டா. இந்த பிரசவமே அவ தாங்குறது கஷ்டம், கர்ப்பப் பை வேற வீக்கா இருக்கு. பையனோ, பொண்ணோ நாங்க கட்டுப்பாடு பண்ணி தான் தீருவோம்., நீங்க ஒத்துக்கலன்னா போலீஸ்ட கம்பளைண்ட் பண்ணி உள்ளே தூக்கி போட்ருவேன்னு மிரட்டினாங்க. அப்பறம் தான் வழிக்கு வந்துச்சு…,” தலையை உலுக்கி கொண்டு பெருமூச்சு விட்டபடியே தொடர்ந்து
“அந்த பொண்ணை பார்த்தா ரொம்ப பாவம்மா இருக்கு. என் பொண்ணை விட அஞ்சு வயசு பெருசு. அதுக்கு மூணு பிள்ளைங்கலாம். தாயில்லா பிள்ளைன்னு கிழவிக்கு இளக்காரம் ரொம்ப தான். கால கொடுமை. ஒன்னும் திருத்தவும் முடில. எல்லாரோட உயிரையும் வாங்குறாங்க. ..” என புலம்பி கொண்டே மதிய உணவை முடித்தனர்.
மதியம் நான்கு மணி அளவில் அந்த குட்டி பொண்ணுக்கு மூன்றாவது பிரசவம் சிசேரியன் முறையில் நடைபெற போகின்றது. வேக வேகமாய் சாப்பிட்டு கொண்டே தான் இத்தனை பேச்சுகளும் நடைபெற்றது. இதை விட்டால் மனதில் உள்ள அழுத்தங்களை வெளியில் சொல்லி அழ கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லையே.
***************
error: Content is protected !!