வெந்து தணிந்தது காதல்! -15
தனது வீட்டு வாசலில் எப்பொழுதும் குழுமி இருக்கும் ரசிகர்களின் கூட்டத்தோடு சேராமல் சற்று ஒதுங்கி நின்று அவள் வீட்டு பால்கனியையே பார்த்துக் கொண்டிருந்தான் ஷிவ்.
எதேச்சையாக வெளியே வந்த நவிராவுக்கும், இத்தனை மாதங்கள் கழித்து அவனைத் திடுமெனப் பார்க்கவும் அவளையும் அறியாது கண்களில் கண்ணீர் உபயம்!
ஆனால் விருப்புக்கும் வெறுப்புக்கும் நடுவில் நின்று அந்தக் கண்ணீரை கீழே சிந்த விடாமல் பார்த்துக் கொண்டவள்.. சட்டெனத் திரும்பி மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டாள். உள்ளே சென்றதும் அவள் மொபைல் அலறியது.
Advertisement
அழைத்தது, ஷிவ் தான்.
“என்ன பேச இவன்கிட்ட? அவன் காதலிக்கிறேனு சொன்ன ஒரே காரணத்துக்காகவோ.. இல்ல, அவன் காதலைச் சொன்னதும் நான் அக்செப்ட் செய்துட்டேன்ற காரணத்துக்காகவோ அவன் என்ன பண்ணாலும் நான் அமைதியா இருக்கணுமா?” என்று யோசித்தாள் தான் அவள்.
ஆனாலும் அவன் செய்த அதே போல, “நீ பேசலையா, இப்போ இது என் முறை. சோ, நானும் பேசமாட்டேன்.” என சிறு பிள்ளை போல வீம்பு செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை.
Advertisement
எனவே ஃபோனை அட்டென்ட் செய்தவள், அவன் ஹலோ என்னும் முன்பாகவே..
Advertisement
“இங்க பாரு, இப்ப எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. இப்போதைக்கு உன் கிட்ட பேச முடியாது. நான் போயிட்டு, மத்த வேலையெல்லாமும் முடிச்சுட்டு வர ஈவினிங் ஆகிடும். அப்புறம் பேசிக்கலாம்.” என்று விட்டு போனை வைத்துவிட, அந்த ஃபோனையே வெறித்தான் ஷிவ்.
அவனுக்குத் தெரியும், அவள் எங்கே செல்கிறாள் என்று. அவளது ஒவ்வொரு நேரமும் அவனுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுத் தான் இருந்தது.
ஏன், இன்னும் ஆறு மாதங்கள் கழித்து அவள் என்ன செய்யப் போகிறாள் என்று கூட அவனுக்குத் தெரியும்.
Advertisement
இதெல்லாம், ‘இங்க பாரு.. என்னோட மொத்த டைம் டேபிளும் நான் உன்கிட்ட முழுசா கொடுத்துட்டேன்.. நான் என்னென்ன செய்யறேன்னு நீ கண்காணிச்சுக்கோ..’ என்பது போல அடிபணிதலாய்.. அடிமைத்தனமாய் நிச்சயமாய் அல்லாது,
‘இங்க பாரு.. இந்த இந்த நேரத்துல எல்லாம் நான் ரொம்ப பிசியா இருப்பேன். அப்போ என்ன தொந்தரவு பண்ணாத. எனக்கு என் வேலையும் முக்கியம், நீயும் முக்கியம். ஏற்கனவே கமிட்டான விஷயங்களை நான் மாத்தணும்னு கேட்காத.’ என்பதான புரிவித்தல் அது!
ஆனால் இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
தன்னுடைய காதலுக்கு அவள் மறுப்பே தெரிவிக்காமல் சம்மதித்து விட்ட ஒரே காரணத்துக்காக அவளை ரணப்படுத்துகிறானோ? என்ற சந்தேகம் அவனுக்கு இப்பொழுது இருந்தது.
‘இந்தளவுக்கு புகழோட உச்சில இருக்கிற அவ, இப்படி ஒருத்தனை லவ் பண்றேன் அப்டிங்கறதையும், ஒரு ரிலேஷன்ஷிப்குள்ள இருக்கான்றதையும் எந்த ஒரு தயக்கமும் இல்லாம எல்லார்கிட்டயும் சொல்லியிருக்கா.
ஆள் யாரு அப்படிங்கறத மட்டும் தான் அவ சொல்லல. அதுவும் நான் கேட்டுக்கிட்டதுக்காக. ஆனா நான் அவளுக்கு என்ன தான் அங்கீகாரம் கொடுத்திருக்கேன்? என்ன செய்யறேன் நான் அவள?’ என்று அவனை நினைத்து அவனுக்கே கசப்பாய் இருந்தது.
அவன் நிமிர்ந்து பார்த்த பொழுது நவிராவின் கார், அவனைக் கடந்து சென்று கொண்டிருந்தது. விரக்தியுடன் தனது காரில் ஏறி அமர்ந்தான் ஷிவ்.
அவனுக்குத் தெரியும் நன்றாகவே.. இவனைப் போல அல்ல நவிரா என்று. நவிரா ரொம்பவுமே நல்லவள்! நேர்மையானவளும் கூட!!
ரொம்ப மெச்சூர்ட். ஆனாலும் கூட, என்னை மாதிரி அவ இந்த விஷயத்த ரொம்ப சாதாரணமா எடுத்துக்க மாட்டா. அதே மாதிரி நான் அவள அலட்சியமா நடத்துன மாதிரியும் என்ன நடத்த மாட்டா.
அப்படி நடத்தணும்னா அட்லீஸ்ட் ஒரு நாலு நாளைக்காவது போன எடுக்காம இருந்திருப்பா.” என்று எண்ணியவனுக்குத் தான் ரொம்பவும் கீழிறங்கியதாய் உணர்வு.
அதை சரி செய்யும் நோக்கோடு தனது காரையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான் ஷிவ்.
அங்கே நவிராவும், தனது உயிர்த் தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தாள். அதாவது விழா மாலை தான். ஆனால் இவள் அப்படி எந்த விழாவுக்கும் செல்வதில்லை. அப்படிச் சென்றாள் என்றால், எல்லாருடைய கவனமும் இவள் மீது தான் இருக்கும்.. அதனால் அந்த விழா நாயகனுக்கோ, நாயகிக்கோ அப்பொழுது முக்கியத்துவம் இருக்காது என்று இது போன்ற நட்புகளின் விழாவுக்குத் தனியாக சென்று அவர்களுக்கு பரிசு கொடுத்து விட்டு வருவாள்.
இந்த முறையும் ஹெலன் வீட்டுக்குக் காலையிலேயே சென்றாள். தனியாகத்தான்.
ஹெலனின் பெற்றோர் அவளுடன் இப்பொழுது இல்லை. அவர்கள் இருவரும் ரிட்டயர்மென்ட் வாங்கிக் கொண்டு வேறு மாகாணத்தில் செட்டில் ஆகிவிட்டனர்.
ஹெலன் தனியாக வீடு எடுத்து வேலைக்குச் சென்று கொண்டு இருக்கிறாள். பின்னாலே துரத்தி வரும் பத்திரிக்கை கூட்டத்தினரிடம் ஒரு கையசைவுடன் விடை பெற்று ஹெலனின் வீட்டுக்குள் வந்தாள் நவிரா.
ஹெலனுக்கு அத்தனையாய் சந்தோஷம்! அவர்கள் இருவரும் பள்ளிக்காலத்தில் இருந்து தோழிகள். நவிராவின் மன அழுத்தத்தை கொஞ்சமாய் மீட்டதில் ஹெலனுக்கும் பங்கு உண்டு. ஆனால் அவளை இந்த இசைத் துறையில் நுழைத்ததில் முழு பங்குமே ஹெலனுக்குத் தான்!
இருளடைந்த கொடு வனத்துக்குள் தனித்திருந்த சிறு பெண்ணை, கைப்பிடித்து விளக்கருகே அழைத்து வந்தவள், ஹெலன்!
ஹெலனுக்கு மறைத்து நவிராவின் வாழ்வில் இதுவரை எதுவுமே இல்லை. ஆனால் இப்பொழுது ஒன்றை ஒன்றே இருக்கிறது. அது ஷிவ்வுடனான காதல்.
ஷிவ்வைப் பார்த்த பிறகு அவள் இந்த மூன்று மாதங்களில் ஹெலனை சந்திக்கவில்லை தான். அவளுடன் பேசவில்லை தான். ஆனால் இப்பொழுது சந்திக்க வந்திருக்கும் இந்த பொழுதிலுமே.. அவனைப் பற்றி எதுவும் கூறுவதாக இல்லை நவிரா.
அதற்கு காரணங்கள் இரண்டு!
முதல் காரணம், ‘அவன் வீட்டுல இப்போதைக்கு இந்த காதலை வெளிப்படுத்த முடியாதுன்னு சொல்லிட்டான். நான் பொதுவா யாரையாவது காதலிக்கிறேனு சொல்றது வேற.. ஆனா இவன தான் காதலிக்கிறேன்னு என் சம்பந்தப்பட்ட ஒருத்தர் கிட்ட அறிமுகப்படுத்தறது வேற.’ என்று எண்ணியிருந்தவள் இப்பொழுது அடுத்ததாக ஷிவ்வின் நடவடிக்கையால் இன்னும் ஒரு காரணத்தையும் இணைத்துக் கொண்டாள்.
‘முதல்ல எல்லாம் சரியாகட்டும்.. அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்..’ என்ற விரக்தி நிலையே அவளது இறுதி எண்ணமாக இருந்தது.
ஆனாலும் இப்பொழுது சந்தோஷமாகத் தன்னை எதிர்கொள்ளும் தோழியிடம் மகிழ்வைப் பூசிக்கொண்டே ஒட்டிக் கொண்டாள்!
உள்ளுக்குள் அத்தனையாய் இதயம் வதைபட்டு இருந்தாலும், அதைச் சற்றுமாய்க் கூட வெளிக் காண்பிக்க இயலவில்லை நவிராவால். ஏனென்றால் இந்த நேரம் அவளது தோழிக்கானது.
அதைக் கருத்தில் கொண்டு வேகமாக ஹெலனிடம் சென்று, அவளை அணைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினாள்.
அதன் பிறகு ஹெலனின் விருப்பப்படி அவளது மிகவும் பழைய ஒரு பாடலை பாட ஆரம்பித்தாள் நவிரா. அது ஆணவன், தன் காதலியிடம் கல்யாணத்திற்குக் கேட்கும் நிகழ்வு.
இந்த ப்ரொபோசல் சீன், “கோல்டன் அவர் ஆஃப் லவ்” என்ற தலைப்பில் நவிரா பாட வந்த புதிதில் எழுதி இயற்றியது.
அந்தப் பாடல் இப்பொழுது வரைக்கும் ஹெலனின் ஃபேவரிட் பிளே லிஸ்டில் இருப்பது.
“ஹே நவீ.. எனக்கு கோல்டன் அவர் ஆஃப் லவ் நீ பாடணும், இன்னைக்கு..” என்று அவள் சிரித்தபடியே கேட்க, நவிராவோ..
“ஓஹோ.. மேடம் எதோ ஸ்வீட் நியூஸ் வெச்சிருக்கீங்க போலவே எனக்கு?” என்று ஆத்மார்த்தமான சந்தோஷத்துடன் கேட்க..
ஹெலனோ, “கண்டிப்பா ஸ்வீட் நியூஸ் தான்!” என்று கூறியபடி அங்கு இருந்த மைக்கை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.
“ஹேய்.. என்ன மைக் அது இதுன்னு எல்லாம் தடபுடல் படுத்தியிருக்க?” என்று நவிரா ஆச்சரியமாய் கேட்க, ஹெலனோ.. “பர்த்டே பேபியோட விஷ் இது! சோ.. கேள்வி கேட்காம சொன்னத செய்யணும்.” என்று செல்ல உத்தரவுடன் அவளைப் பாட அழைத்தாள்.
“In the moonlight, dreams take flight,
Together, we’ll embrace the night.”
என்ற முதல் இரு வரியைத் தான் நவிரா பாட ஆரம்பித்தாள். ஆனால் அதற்குள் அங்கே சுவர் மறைவில் இருந்து வெளியே வந்திருந்தான் ஷிவ்!
வந்ததோடு மட்டுமில்லாமல், நவிராவை நெருங்கி அவளது கையில் இருந்த மைக்கைத் தன் புறமாய் இழுக்க.. நவிராவின் விழிகளிலோ மொத்தமாய் கரைந்த நிலை!
என்னமோ அத்தனையாய் அடைத்து கிடந்த உயிர், இப்பொழுது தான் நதி வெள்ளமாய்.. மழையூற்றாய்.. திறந்து பரந்து விரிவது போல ஒரு சந்தோஷ பேருணர்வு!
Your voice, a melody so sweet,
With every heartbeat, our souls meet.
என்று அவன் அடுத்த வரிகளைப் பாட வேறு துவங்க.. அவனை அத்தனையாய் கண்களால் ஸ்பரிசித்து..மூச்சின் சுவாசமாய் பரிதவித்து.. உணர்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருக்கிற இவளையே பார்த்தபடி அந்த வரிகளை அவன் பாடி முடிக்க, நவிராவோ தன்னையும் அறியாது அடுத்த இரு வரிகளைப் பாட ஆரம்பித்தாள்!
அதன் பிறகு ஷிவ் பாட, நவிரா பாடவென அந்த சிறு பொழுதில் பெருமழையாய் பொழிந்து, தீர்க்க மாட்டாமல் கொட்டிக் கிடந்தது காதலின் நல்லிசை!
Something feels so magical,
Like a love so pure, so lyrical.
Every moment, every sigh,
You’re my wish beneath the sky.
Tell me now, is this real?
Why does my heart begin to heal?
“சொல் இது மெய் தானா? காதல் துடிப்பின் பெரு வலிகள் எல்லாம், உன் பார்வை தொட்டு அடங்குவது நிஜம் தானா?” என்று அவள் பாடல் வழியே அவனைக் கேள்வியாய் கேட்க.. அவளது கண்களை நேராய்ப் பார்த்த ஷிவ்வோ.. தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்து அதைத் திறந்தபடி அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தான்!
With this ring, a promise true,
Forever, darling, me and you!
அடுத்த இரு வரிகளை அவன் பாடியே முடித்திருக்க.. நவிராவின் கேள்விக்கு கூறிய பதிலிலேயே அவளுக்கு, அவன் வினாவும் தொடுத்திருக்க.. உச்சந்தலை முடி நுனியில் இருந்து உள்ளங்கால் பெருவிரல் நகம் வரை.. அத்தனையாய் ஜில்லிட்ட சிலிர்ப்பு! அப்படியே அவனுள்ளே அவனாகவே மூழ்கி விடத் தவிப்பு, பெண்ணவளின் பெருங்காதலுக்குள்!!
சிலுசிலுவென பெய்த குளிர் மழையில்.. நடு நடுங்கி நிற்கும் சிறு புல்லின் தேக போகமாய் நின்றிருந்த அவளின் நிஜ நெஞ்ச திசைகளில் எல்லாம் திகழ்ந்து.. இசைந்து.. நிலைந்து.. தழைந்தே போனது காதலின் சுக பாகுக் கரைசல்!
‘என்ன கேட்டான்? இவன் என்னனு கேட்டான்?’ என்று மீண்டும் மீண்டுமாய்.. அவனது அந்த வார்த்தைகள் இன்னுமின்னுமாய் வேண்டும் வேண்டுமாய் இருந்தது!
கண்கள் எல்லாம் மகிழ்ச்சியிலும் கூடவே நெஞ்சம் நிறைந்த காதலிலும் கனிந்து கசிந்து அவள், அவனைப் பார்க்க.. அதே கசிவுடன் தானும் மீண்டும் வார்த்தை தரித்து, வாய் திறந்து கேட்டான் ஷிவ்.
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா கீர்த்து?” என்றிட.. சுற்றம், சுகம், பூமி.. அதைச் சுற்றும் நிலவு.. அத்தனையும் அடங்கும் வானம்.. அந்த அண்டப் பேரண்டம்.. என எதுவுமே அவளது மனதிலோ.. மூளையிலோ அப்பொழுது இல்லவே இல்லை!
அவள் அணுவின் வெடிப்பிலெல்லாமுமாய்.. அதன் ஒவ்வொரு துடிப்பிலெல்லாமுமாய் உள்ளிருக்கும் ஆக்சிஜனின் ஒவ்வொரு துகளிலெல்லாமுமாய் முழு முழுதாய், ஷிவ்! ஷிவ்!! ஷிவ்!!!
கசிந்துவிட்ட கண்ணீரை இப்பொழுதும் கீழே விடவில்லை அவள்!
அதனை உள்ளே இழுத்தபடியே தனது இடக்கையை அவன் முன்பாக நீட்டியிருந்தாள்!
அப்பொழுது எப்படியாய் இருக்கிறதாம் அவனுக்கு?
சுற்றும் முற்றும் இருந்த அத்தனை பொருள்களையும் துகளாய், தூசியாய் தட்டியெறிந்து அவள் நின்றிருக்க.. ஷிவ்வோ, விண்ணை வளைத்து, வில்லாய் மடித்து.. காதலின் உயிர் கொடுத்து.. நாணாய் அதை ஏற்றி.. அம்பே தொடுக்கத் தயாராய் இருந்தான்!
‘அவன் கேட்டா.. அடுத்த வினாடியே தன்னைத் தருவாளாமா அவ?’ நினைந்து நினைந்து பூரித்து.. கர்வித்து.. காதலித்து என, கரைந்தே போனான் ஷிவ்!
அவள் கைப்பிடித்தே மெல்ல மேலெழுந்தவன்,
“என் மேல இன்னமும் கோபம் தான், இல்லடா?” என்று அவள் கண் பார்த்து அவன் கேட்க, அவன் கேட்ட அந்தக் கேள்வியில் அதுவரை காணாமல் போயிருந்த கோபத்தின், வலியின், வாள் தடம் நவிராவுக்குள்.
அந்த வலியின் நிழற்படம் அவளை ஊடுருவ.. சற்றும் தயங்காத குரலில்..
“கல்யாணம் பண்ணிட்டா என்ன விட்டுப் போக மாட்டியா ஷிவ்?” என்றாள் அவள், குரலில் எவ்வித உணர்ச்சியும் இன்றி.
“போகவே மாட்டேன்..” என்று அத்தனை உறுதியாய்.. அடுத்த நிமிடமாய் பதில் கூறியிருந்தான் ஷிவ்!
ஆனால் பொய்யுற்ற நெஞ்சு, தீஞ்சுடத்தான் செய்தது!
‘இவகிட்ட இன்னும் எத்தனையா பொய் சொல்வேன் நான்?’ என்று உள்ளுக்குள் வெந்தே போனான் அவன்!
