Skip to content
Post Views: 6,027
அத்தியாயம் 36:
சந்தியா சொன்னதை கேட்டதும் யோசித்தான் தீபன். நீ ரொம்ப புத்திசாலின்னு கேள்விப்பட்டேன் டாலி. அம்மா செண்டிமெண்ட் வச்சி என்ன ஏமாத்தலாம்ன்னு பாக்கறியா. உன்ன எங்கம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் டாலி. அதனால எந்த வகையிலாவது நீ அவங்க மருமக ஆனா அவங்க ரொம்ப சந்தோஷமாதான் பீல் பண்ணுவாங்க” என்றுவிட்டு கட்டிலை சுற்றிக்கொண்டு அவள் அருகில் சென்றான். சந்தியா அதற்கு மேல் ஓட முடியாமல் சுவரோடு ஒட்டி நின்று கண்களை மூடி கொண்டாள்.
பிறகு “என்ன விட்ரு” என்று சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள். அவள் அழுகையை பார்த்ததும் அவளை தொட போன அவனின் கைகள் அந்தரத்தில் நின்றது.
பிறகு அவனும் கண்களை இறுக மூடி பல்லை கடித்து கொண்டு அவள் தோளில் கை வைக்க போனான். அதை பார்த்ததும் சந்தியாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் வேண்டுமென்றே இன்னும் சத்தமாக அழுதவள், சேலையில் அவன் கையை வைத்ததும் வேகமாக பிடித்து தள்ளினாள்.
Advertisement
அழுதுகொண்டே “ப்ளீஸ் என்ன விட்ரு . எனக்காக இல்லாட்டியும் என் வயித்துல இப்ப பாப்பா இருக்கு. அதுக்காகவாது என்ன ஒன்னும் செஞ்சிறாத. உங்கம்மா உன்னை வளத்த மாதிரி என் குழந்தையை நான் வளக்கணும். உன்ன காப்பாத்துன பாவத்துக்கு எனக்கும் என் பிள்ளைக்கும் இந்த அசிங்கத்தை பண்ணாத” என்று சொல்லிவிட்டு ஓவென்று அழுதாள்.
அவள் தள்ளியதும் ஓரடி பின் சென்று திரும்பவும் அவளை அணைக்க வந்தவன் அதிர்வோடு நின்றுவிட்டான்.
“நீ நீ உண்மையைத்தான் சொல்றியா டாலி”
Advertisement
“ஆமா. இன்னும் என் மாமாட்ட கூட இந்த உண்மைய சொல்லல. எனக்கே மதியம்தான் தெரிஞ்சது. என் மாமா தூங்கிட்ருந்தாங்க. அவங்க தூங்கி எழுந்திரிச்சதும் சொல்லலாம்ன்னு நா சந்தோசமா வெய்ட் பண்ணிட்டிருக்கும்போதுதான் உன் ஆளுங்க என்ன தூக்கிட்டு வந்துட்டானுங்க” என்றுவிட்டு திரும்பவும் சத்தம் போட்டு அழுதாள்.
Advertisement
சிறிது நேரம் அதிர்ச்சி, பிறகு துக்கம் என்று கலவையான மனநிலையில் நின்றவன், அவளின் அழுகை சத்தத்தில் களைந்தான்.
“ஹே டாலி. அழாத. அழாத. நா ஒன்னும் பண்ணல. ப்ளீஸ் அழாத. இந்த மாதிரி நேரத்தில இப்படி அழக்கூடாது. பேபிக்கு ஏதாவது ஆகிட போகுது” என்று தீபன் அவளை சமாதான படுத்தி கொண்டிருந்தாலும் சந்தியா விடாமல் தேம்பி கொண்டிருந்தாள்.
அவளுக்கு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தான்.
Advertisement
அந்த நேரத்தில் அந்த ரூமின் கதவை பலமாக தள்ளினார்கள். கதவை திரும்பி பார்த்த தீபன் ஒரு பெருமூச்சுடன் “உன் மாமாதான் நினைக்கிறேன் டாலி. அவன் நல்லவன்தான். உன்ன நல்லாத்தான் பாத்துப்பான். நீ அவனுடையவள்ன்னு புத்திக்கு தெரியுது. மனசு ஏத்துக்க மாட்டேங்குது. ஒரு வருசமா என்னோட நினைவுலையும் கனவுலயும் நீ மட்டும் தான். மறக்கிறது கஷ்டம்தான். ஆனாலும் ட்ரை பண்றேன். இல்ல சைக்யாட்ரிஸ்ட்ட பாக்க வேண்டியதுதான். எங்கம்மாக்கு நான்னா உயிர். அவங்க எப்படி என்ன தனியா விட்டுட்டு போகலாம். அவங்க இடத்துல உன்ன வச்சு பாக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேன். இப்ப உனக்குன்னு ஒரு பேபி வர போகுது. அந்த பேபிய, எங்கம்மா என்ன வளத்த மாதிரி நீ வளக்கணும். பேபிய நல்லா பாத்துக்க டாலி. நா இனிமே உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன். கனடாவுக்கே திரும்ப போறேன். நீ எப்பவும் சந்தோசமா இருக்கணும். உனக்கு எப்ப என்ன கஷ்டம்னாலும், நீ என்கிட்ட உதவி கேக்கலாம்” என்றவன் அவளை ஒருதரம் நன்றாக பார்த்துவிட்டு போய் கதவை திறந்தான்.
அதற்குள் கதவை உடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தீபன் கதவை திறந்ததும் ஆதி வேகமாக அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். பக்கத்தில் அரவிந்தும், லோக்கல் போலீஸ் ஆட்களும் நின்றிருந்தனர்.
தீபனை திரும்பவும் அடிக்க போன ஆதியை சந்தியா வேகமாக தடுத்தாள்.
அவளை பாய்ந்து கட்டி கொண்ட ஆதி “உனக்கு ஒன்ணுல்லையே பொம்மு. நல்லாதான இருக்க” என்று விட்டு அவளை ஆராய்ந்தான்.
“மாமா நா நல்லாத்தான் இருக்கேன்” என்று சந்தியாவும் அவனை கட்டி கொண்டாள்.
அவளை விடுவித்துவிட்டு தீபனை அடிக்க போன ஆதியை பிடித்து கொண்ட சந்தியா “மாமா அவரை அடிக்காதீங்க. அவர் என்ன ஒன்னும் செய்யல. இனிமே செய்யவும் மாட்டேன்னு சொல்லிட்டாரு” என்றதும் ஆதி திரும்பி தீபனை ஆச்சரியம் பிளஸ் சந்தேகமாக பார்த்தான்.
அந்த தீபன் பயங்கர சோகத்தில் இருப்பதாக பட்டது ஆதிக்கு. அரவிந்த் அங்கு நடப்பதை அமைதியாக கவனித்து கொண்டிருந்தான்.
அப்பொழுதுதான் அங்கு வந்து சேர்ந்த வசந்தனும் அருணும் வேறு தீபனை அடிக்க பாய்ந்தார்கள். அந்த நேரம் அங்கு வந்த விஜய் அவர்களை தடுத்து, தீபனையும் அவன் ஆட்களையும் ஸ்டேஷனுக்கு அழைத்து போக சொன்னான்.
சந்தியாவை திரும்பவும் ஒருமுறை பார்த்து கொண்ட தீபன் அங்கிருந்து விடுவிடுவென்று வெளியேறபோனான்.
அவனை “தீபன் ஒரு நிமிஷம்” என்று நிறுத்திய சந்தியா “கடவுள் யாரையும் அப்படி அனாதையா விட்டுடறதில்ல. உனக்கும் உங்கம்மா இடத்தில இருந்து உன்ன பாத்துக்கிற மாதிரி கண்டிப்பா ஒருத்தங்க கிடைப்பாங்க” என்றதும் அவளை பார்த்து ஒரு மென்னகையை சிந்தியவன் கிளம்பிவிட்டான்.
மற்ற காவல் துறையினரும் சென்றதும் அரவிந்த் விஜயை பார்த்து கேட்டான்.
“ஏன் டீஸிபி. இவதான் அவனை அடிக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டிக்கிட்ருந்தான்னு பாத்தா நீயும் அவனை பாதுக்காப்பா அனுப்பி வச்சுட்ட” என்றதும்
“இங்க நடந்ததெல்லாம் நானும் கேட்டுக்கிட்டுதாம்பா இருந்தேன். அவன் உண்மையிலேயே திருந்திட்டான். அப்புறம் சிஸ்டர். நா விஜய். ஆதியோட பிரெண்ட். கங்கிராஜுலேஷன் போத் ஆஃப் யூ” என்று ஆதியை கட்டிக்கொண்டான்.
சந்தியாவை தவிர அனைவருமே விஜயை என்னவென்று பார்த்தனர்.
விஜய் ஆதியிடம் “என்ன மேன் பாக்கிற. நீ அப்பாவாக போற. அதுக்குதான் வாழ்த்து சொல்றேன்” என்றதும்
அருணும் வசந்தனும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.
அருண் சந்தியாவிடம் “அண்ணி. உண்மையாவா. நா சித்தப்பா ஆயிட்டேனுங்ளா” என்றுவிட்டு ஆதியை கட்டி கொண்டான்.
ஆதி சந்தியாவைதான் என்னடி என்று பார்த்தான். அவள் திருதிருவென்று விழித்து கொண்டிருந்தாள்.
வசந்தனும் போய் ஆதியை கட்டி கொண்டு “மச்சான், என்ன இவ்வளவு சீக்கிரம் மாமா ஆக்கி போடுவன்னு நா நினைக்கவே இல்ல மச்சான்” என்றான்.
ஆனால் அரவிந்தும் விஜயும் அமைதியாக ஆதியையும் சந்தியாவையும் பார்த்து கொண்டிருந்தனர்.
ஆதி சந்தியாவிடம் “என்னடி பொம்மு நடக்குது இங்க” என்று கேட்டான்.
ஏனென்றால் ஆதி, சந்தியா படித்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அதனால் முதல் நாளிலிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுடன்தான் நடந்துகொண்டான் சந்தியாவிடம்.
இப்பொழுது விஜய் கூறியதை கேட்டதும் நம்பாமல் சந்தியாவிடம் என்னவென்று கேட்டு கொண்டிருந்தான்.
அதற்கும் சந்தியா தயங்கியதால் அரவிந்த் “டேய் போலீஸ். ஒழுங்கா நீ என்ன வாய்ஸ் ரெக்கார்டர்ல கேட்டன்னு சொல்லு” என்றதும்
விஜயும் நடந்ததை கூறியவன் “சிஸ்டர் ப்ரெக்னண்டா இருக்கேன்னு சொன்னதும்தான் அவன் டோட்டலா சேஞ் ஆயிட்டான்” என்றதும் இப்பொழுது அனைவரும் சந்தியாவை பார்த்தனர்.
அதற்கு சந்தியா “அந்த தீபன் போய்ட்டானா” என்று வாசலை எட்டி பார்த்துவிட்டு “அது ஒண்ணுல்ல கைஸ். அவன் அம்மா சென்டிமெண்ட்ல வீக்குன்னு அவன் கதையை கேட்டதும் தெரிஞ்சது. நீங்கள்ளாம் என்ன காப்பாத்த வர வரைக்கும், நா சும்மாவா நிக்க முடியும். அதனால சும்மா சின்னதா, என் வயித்துல பாப்பா இருக்குன்னு ஒரு பொய் சொன்னேன்” என்றதும் ஆதியை தவிர எல்லோருக்கும் மயக்கமே வந்துவிட்டது.
ஆதிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
அரவிந்த் தான் “அம்மா சதிலீலாவதி. அரை பைத்தியமா இருந்தவன கரெக்ட்டா முழு பைத்தியம் ஆக்கிட்டியா. அன்னைக்கே போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு சொன்னேன் அவன்கிட்ட. தம்பி ஒழுங்கா இதோட தப்பிச்சி போயிடு. அவள்ட்ட மாட்டிக்காதன்னு. கேட்டானா. இப்ப பாரு எப்படி பேயடிச்சவன் மாதிரி போறான்னு” என்றதும் எல்லோருமே சிரிக்க ஆரம்பித்தனர்.
விஜய்தான் “சந்தியா சிஸ்டர். அரவிந்த் உங்கள பத்தி சொல்லும்போது கூட நா நம்பல. ஆனா நீங்க சான்சே இல்ல போங்க. நல்லா சமாளிச்சீங்க அவன. ஆனா அவனுக்கு நீங்க ப்ரெகனன்ட் இல்லன்ற விஷயம் தெரிஞ்சிதுன்னா. திரும்பவும் முருங்கை மரம் ஏறிட்டான்னா. என்ன பண்றது” என்றதும்
“அது… போலீஸ் அண்ணா. அவன் திரும்பவும் கனடாக்கே போறேன்னு சொல்லிட்டான். எனக்கு திரும்பவும் தொந்திரவு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டுதான் போனான். அதோட அவன் நீங்கல்லாம் நினைக்கிற மாதிரி ரொம்ப டெர்ரர்லாம் இல்ல. இன்ஃபெக்ட் நா அழறத கூட தாங்கிக்க முடியாம கண்ண மூடிக்கிட்டான். அத பாத்ததுக்கு பிறகுதான் எனக்கே ஒரு நம்பிக்கை வந்துச்சு. அதையும் தாண்டி அவன் என் குழந்தை எங்கன்னு கேட்டான்னா, அது குழந்தையே இல்லையாம். எதோ கட்டி இருந்தததான் நா குழந்தைன்னு நினைச்சிட்டேன்னு கண்ண கசக்கிட வேண்டியதுதான்” என்று அவள் கூறியதும் எல்லோருக்குமே சிரிப்புதான்.
விஜயும் “உண்மைதான் சிஸ்டர். அவன் நல்லவன்தான். அந்த ரமேஷ் நில விஷயத்துலயே அவங்கப்பாகிட்ட அந்த நிலம் வேண்டாம், நா வேற இடம் பாத்துருக்கேன்னு சொல்லி, விவசாயத்தை பாதிக்காத இடமா பார்த்து வேறு ஒரு இடத்தை முடிச்சி குடுத்துட்டான். அதுனாலதான் நானும் தயங்கிட்டிருந்தேன், அவன் மேல பொய் கேஸ் போடறதுக்கு” என்றான்.
அருண்தான் “என்னங்ண்ணி நீங்க. நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வரப்போகுதுன்னு நா எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா” என்று சிணுங்கினான்.
“அட கொழுந்தனார் தம்பி. உங்க அண்ணாகிட்ட கேளுங்க. உங்களயும், கௌரியையமே இன்னும் குழந்தைன்னு சொல்லிக்கிட்டு சுத்திக்கிட்ருக்காரு. இப்போதைக்கு நம்ம வீட்டுக்கு நீங்க ரெண்டு குழந்தைங்க போதும் வாங்க” என்று கிளம்பினாள்.
சந்தியாவை கொண்டு வீட்டில் விட்டுவிட்டு ஆதியும் வசந்தும் மட்டும் சென்று போலீஸ் ஸ்டேஷன் பார்மாலிட்டியை முடித்துவிட்டு வந்தனர். தீபன் எந்த பிரச்னையும் பண்ண மாட்டேன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு, அன்றே ஊருக்கு சென்றுவிட்டான்.
அன்று இரவு எல்லா பிரச்னையும் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததால் சந்தியாவின் அம்மா அப்பா உட்பட அனைவரும் ஆதியின் வீட்டில் முற்றத்தில் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் ஆண்கள் வாசலில் சென்று பேசி கொண்டிருந்தனர். உள்ளே கௌரியும் சந்தியாவும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த சிவகாமி மருமகளுக்கு திருஷ்டி சுற்றி போட்டு விட்டு, எல்லா கோயில் திருநீறையும் பூசிவிட்டு கொண்டே இருந்தார்.
சந்தியாதான் “அத்தை எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. நா நல்லாத்தான் இருக்கேன். நீங்க அமைதியா இருங்க” என்று கூறி கொண்டிருந்தாள்.
அவள் பக்கத்தில் வந்தமர்ந்த சித்ராதான் “உன்ன மாதிரி ஒரு மருமக கிடைச்சா என்ர அக்கா எங்கேந்து அமைதியா இருக்கறது” என்றுவிட்டு கௌரியிடம் “கௌரி அடுப்புல பால் வச்சிருக்கேன். போய் எல்லாருக்கும் கலந்து எடுத்துட்டு வா” என்று அவளை அனுப்பிவிட்டு சந்தியாவிடம் “ஏன் சந்தியா. மாசமா இருக்கேன்னு பொய் சொன்னியாம்ல. அதே உண்மையா இருந்தா இந்த வீடு இந்நேரத்துக்கு எவ்ளோ சந்தோசமா இருந்திருக்கும். நீ படிக்கிறன்னு, உன்ன தொந்தரவு பண்ண கூடாதுன்னு ஆதி நினைக்கிறான் போல. ஏன் நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம். நீ பெத்து மட்டும் கொடு. நாங்க வளத்துக்கிறோம்” என்றதும்
கூடவே இருந்த பத்மாவும் “ஆமா சந்தியா. குழந்தை விஷயத்தைல்லாம் தடை பண்ண கூடாது. அப்புறம் நம்ம வேணுன்னு நினைக்கும் போது அது கிடைக்காது” என்று கூறினார்.
அருண் வந்து எல்லா விஷயத்தையும் சிவகாமியிடம் கூறிவிட்டான் போலும்.
சந்தியா அவள் அம்மா மற்றும் சித்ராவிடம் நக்கலாக பதில் சொல்ல போனவள், அவள் முகத்தையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த சிவகாமியை பார்த்ததும் “என்ன அத்தை. உங்களுக்கும் பேர குழந்தை வேணுமா” என்று கேட்டாள்.
அதற்கு அவர் சிரித்து கொண்டே “குழந்தைய யாராவது வேண்டான்னு சொல்வாங்களா கண்ணு. ஆனா உன் படிப்பு, வேலைக்கு இடைஞ்சல்ன்னு நினைச்சீன்னா, உன் வசதிப்படி பாத்துக்க. உன்ர விருப்பம்தான் கண்ணு” என்றார்.
அன்று இரவு ஆதியின் நெஞ்சில் தலை சாய்த்து படுத்திருந்தவள் அவன் மீசையில் விளையாடி கொண்டே “மாமா” என்றாள்.
“என்னடி பொம்மு” என்றவன் அவளை கட்டிலில் சாய்த்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான். அவன் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவள் “மாமா” என்றாள்.
“பொம்மு . கொஞ்ச நேரம் விடுடி. மாமா மதியம் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா. உலகமே நின்னு போய்டுச்சிடி உன்ன திரும்ப கண்ணுல பாக்குற வரை. சரி உன்ன பாத்ததுலேருந்து எங்கயாவது தனியா இருக்க முடிஞ்சுதா ரெண்டு பேரும். சாப்பிட்டுட்டு சீக்கிரம் மேல வருவன்னு பாத்தா கௌரிட்ட பேச உக்காந்துட்ட. நா எப்ப ரூமுக்கு வந்தேன் தெரியுமா. எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது. என் நியாபகமே வராதாடி உனக்கு” என்றுவிட்டு மறுபடியும் அவள் கழுத்துக்கு சென்றவனை விடாமல் முகத்தை பிடித்து கொண்டவள்
“மாமா எனக்கு குழந்தை வேணும். நாம குழந்தை பெத்துக்கலாம்” என்றாள்.
ஆதி எழுந்து அமர்ந்தவன் “என்னடி. விளையாடறியா” என்றான்.
“இல்ல மாமா. சீரியஸாதான் சொல்றேன். நாம பெத்துக்கலாம்”
“ஏண்டி ஏற்கனவே உனக்கு படிக்கும்போதே கல்யாணம் ஆயிடுச்சி. அதுவே தப்பு. இதில குழந்தை வேறயா. நீயே இன்னும் சின்ன புள்ளத்தாண்டி” என்றதும் கடுப்பாகி எழுந்தமர்ந்த சந்தியா
“எது சின்ன புள்ளையா. அப்படி சொல்லி சொல்லியே என்னட்ட இந்த ஒரு மாசமா என்னென்ன பண்றீங்க. அன்னைக்கு தோட்ட வீட்ல கூட” என்று சொல்ல வந்தவளின் வாயை அவசரமாக பொத்தியவன்
“அடியே . குடும்பம் நடத்துறதும் குழந்தை பெத்துக்கறதும் ஒண்ணாடி. ரொம்ப கஷ்டம் பொம்மு. மசக்கை புள்ளைப்பேறு அதோட படிக்கிறதெல்லாம் சிரமம். நல்லாருக்காது டி”
“மாமா எனக்கு அடுத்த செம் ப்ரொஜக்ட்தான். தியரி பேப்பர் கம்மிதான். காலேஜூகெல்லாம் போக வேண்டாம். அதனால பிரச்சனை இருக்காது”
“சரி இப்ப திடீர்ன்னு உனக்கு ஏன் குழந்தை ஆசை வந்தது அத சொல்லு பொம்மு “
“அது… தீபன்ட்ட குழந்தை விஷயத்துல பொய் சொன்னதே உறுத்திக்கிட்ருக்கு. அதோட நம்ம பேமிலியும் ஆசைப்படறாங்க”
“அடுத்தவங்க ஆசைக்காகவெல்லாம் பெத்துக்க முடியாது டி. எல்லாரும் அப்படிதான் சொல்வாங்க. நாங்க வளத்துக்கிறோம்ன்னு. ஆனா நீதான் எல்லா சிரமமு பாடணும். உன் வலிய யாரும் வாங்கிக்க முடியாது பொம்மு”
“மாமா எப்பன்னாலும் அந்த வலிய நா அனுபவிச்சிதான ஆகணும். அதோட அத்தை ஆசைப்படறாங்க. எப்போதும் அத்தைதான் எனக்காக பாத்து பாத்து செய்றாங்க. அவங்களுக்குன்னு நா என்ன பெருசா பண்ணிட முடியும். இதையாவது நிறைவேத்தி குடுக்கிறேனே” என்று அவள் கூறியதும்
“சரி பொம்மு. நீ முடிவு பண்ணிட்ட. குழந்தைன்னா யாருக்குத்தான் சந்தோசமா இருக்காது. உன்ன போல பொம்ம மாதிரி ஒரு குழந்தைய பெத்துக்கலாம் வாடி” என்று அதற்கான வேலையில் இறங்கினான்.
error: Content is protected !!