Skip to content
Post Views: 11,897
அத்தியாயம் 7
“ப்ச்!” என்ற சலிப்புடன் அலைபேசியை சைலன்ட் மோடில் வைத்துவிட்டு உணவருந்திக் கொண்டிருந்த அர்ஜுனிற்கு எண்ணங்கள் வேறு இடத்தில் இருக்க, மீண்டும் மீண்டுமாய் வந்த அழைப்பில் எரிச்சலாய் உணர்ந்தான் அவன்.
Advertisement
“அர்ஜுன்! ஈவ்னிங் உன் ஆபீஸ் வர்றேன்! நீ அங்க தானே இருப்ப?” என்று வந்த தீபக் அங்கிருந்த பாத்திரங்களை திறந்துப் பார்த்துக் கொண்டிருக்க,
“பிரணித்தா!” என்ற பெயரில் அர்ஜுன் எண்ணிற்கு அழைப்பு வரவும் நின்று கொண்டிருந்த தீபக்,
Advertisement
Advertisement
“என்ன டா! வர வர கால்ஸ் அதிகமா வர்ற மாதிரி இருக்கு?” என்றான் அர்ஜுனிடம்.
“ஆபீஸ் எதுக்கு?” என்ற அர்ஜுன் இரண்டாவது கேள்வியை கண்டு கொள்ளவில்லை.
Advertisement
“வேற எதுக்கு? விவேக் சாரை பார்க்க தான். நீ இருந்தா வர்றேன். இல்லைனா நீ எப்ப இருக்கியா அப்போ வர்றேன்!”
“அதென்ன மாமாக்கு மட்டும் அவ்வளவு பயம்?”
“அங்க வாங்குன அடி அப்படி!” என்றவன்,
“இதென்ன டா நசநசன்னு விடாம கூப்பிட்டுக்கிட்டு.. என்னனு கேளு! இல்ல சுவிட்ச் ஆஃப் பண்ணு!” அதிர்ந்த அலைபேசி சத்தத்தில் கூறிய தீபக் அர்ஜுன் முறைப்பில் தோசையை எடுத்து தட்டில் வைத்து அமர்ந்தான்.
அர்ஜுனுக்குமே கோபம் வர தான் செய்தது. அதை அவளிடமே காட்டி விட கூடாது என்று தான் ஏற்காமல் இருக்கிறான் அழைப்பை. கடந்த பத்து பதினைந்து நாட்களாக அடிக்கடி என்பதை போல ஏதேனும் காரணம் சொல்லி தினமும் அல்லவா அழைக்கிறாள் ப்ரணித்தா.
“மாமா இன்னைக்கு ஈவ்னிங் லீவ்! அக்காக்கு செக்கப் இருக்கு. என்னனு சொல்லு நான் சொல்லிடறேன்!” அர்ஜுன் சொல்ல,
“ஓஹ்! சரி அப்ப நாளைக்கு வர்றேன்! வேற ஒண்ணுமில்ல டா. லோன் கம்பீளீட் பண்ணிடலாம்னு இருக்கேன். சார்கிட்ட தானே பணத்தை சேவ் பண்ணி வச்சிருக்கேன். அதான்!” என்றான் தீபக்.
“ஹ்ம்ம் கல்யாணம் பண்ண போறன்னதும் பொறுப்பெல்லாம் தானா வருது போலயே!” என்று அர்ஜுன் சிரிக்க,
“அப்படி தான் போல டா! சரி விடு கூச்சமா இருக்குல்ல!” என்று சொல்ல, அர்ஜுன் இன்னும் சிரிக்க, நான்காம் முறையாய் அழைப்பு.
“சரி டா! சாப்பிட்டு கிளம்பு! நான் ஆபீஸ் கிளம்புறேன்!” என கைகழுவி எழுந்தவன் மொபைலை அட்டன் செய்து காதில் வைத்தபடி கிளம்பினான்.
“ப்ரணி! என்ன நீ? விடாம கால் பண்ணிக்கிட்டு… கால் அட்டன் பண்ணலைனா வேலையா இருப்பாங்கன்னு தெரியாதா உனக்கு?” என பேசிக் கொண்டே வந்தவன், காரில் கனெக்ட் செய்தான் அலைபேசியை.
“சாரி மாமா!” என்றவள் குரல் உள்ளே போய்விட,
“சரி சொல்லு!” என்றான் அமைதியாய்.
“கோவமா இருக்கீங்களா?”
“இல்ல ப்ரணி! சொல்லு!”
“நாளைக்கு சண்டே மாமா! அதான் வெளில போலாமேன்னு…” என்றவள் அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.
எப்பொழுதாவது அவனை அழைப்பது தான். தன்னை தொந்தரவாய் நினைத்துவிட கூடாது என பார்த்து பார்த்து அவனிடம் பழகிக் கொண்டிருக்கிறாள்.
நான்கு முறை வெளியில் அழைத்தால் தான் ஒரு முறை அவன் வருவான். இனியும் அப்படி விட முடியாதே! ஞாயிறு விடுமுறை. அனன்யா அழைப்பின் பேரில் அங்கே சென்று விட்டால் அங்கே அவளும் இருப்பாளே என நினைக்கும் போதே எதாவது செய் என்று தோன்றிய கணம் அவனுக்கு அழைத்தவள் அழைத்துக் கொண்டே இருந்தாள் அவன் அழைப்பை ஏற்கும் வரை.
“இல்ல ப்ரணி! நீ போய்ட்டு வா! அனுக்கு நெக்ஸ்ட் வீக் ஃபன்க்ஷன் இருக்கு. சோ கிப்ட் வாங்க போறேன்!” என்றான் எடுத்ததுமே!
“ஓஹ்! ஆமால்ல? அப்ப நானும் வாங்கணுமே! நானும் வர்றேன் மாமா!” என்றாள் உடனே!
“ஹே! இப்ப என்ன வாங்க போற நீ? இது ஜஸ்ட் சின்னதா பண்றது தான்.. வளைகாப்புக்கு வேணா வாங்கு நீ. இப்ப வேணாம்!”
“இல்ல மாமா நீங்க வாங்குறீங்க! நான் எப்படி சும்மா வர்றது?”
“ப்ரணி! நான் அனுக்கு செய்யுறது வேற! நீ செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல!” என்றதும் முகம் சுருங்கிவிட்டது பிரணித்தாவிற்கு.
“நான் வாங்குறேன்னு தெரிஞ்சாலே வேணாம்னு தான் சொல்வா! நீ எதுக்கு சும்மா செலவு பண்ணிட்டு? அப்புறமா பார்த்துக்கலாம்.!”
“அப்ப சும்மா உங்களோட வரட்டுமா? எனக்கு ரூம்ல இருந்து போரா இருக்கு. ரொம்ப நாள் ஆச்சு வெளில போய்!”
தன் தனிமை தன் ஆதரவற்ற நிலை. இந்த இரண்டும் தான் ப்ரணித்தாவின் பலம் என அவளே எண்ணி அது அர்ஜுனை கவலை கொள்ள செய்யும் என தெரிந்தே கூற,
“சொன்னா கேட்க மாட்டேங்குற! சரி ஓகே! நாளைக்கு பார்க்கலாம்!” என்று கூற,
“ஃபன்க்ஷன் அப்பவும் என்னை மறந்துடாதீங்க மாமா! நாம சேர்ந்து போகலாம்!” என்றாள்.
“ஹ்ம் சரி டா!” என்றவன் எண்ணம் என்னவோ நேற்றைய தினத்தை தான் சுற்றி வந்தது.
நினைக்க வேண்டாம் என நினைத்தும் மனம் அதனுள் சிக்கிக் கொண்டது தான் நிஜம்.
விவேக் கைகளில் நிறைந்திருந்த புகைப்படங்கள். எதற்கென கண்டதும் புரிந்ததே! உடனே அங்கிருந்து கிளம்பி விட்டவனுக்கு மனம் மட்டும் அங்கேயே நின்றது.
‘இதென்ன வேண்டாத நினைவுகள்!’ என ஒதுக்கி தள்ளிவிட முடியாமல் நெஞ்சம் எங்கும் முள்ளாய் ஒரு உணர்வு குத்த ஆரம்பித்தது.
மூன்று வருடங்களாக அவன் படும்பாடுகள் சொல்லில் அடங்கிடாதது. அதனால் தானோ என்னவோ ப்ரணித்தாவால் அவனை கொஞ்சமும் நெருங்கிட முடியாததும்.
‘நினைக்காதே! நினைக்காதே!’ என்ற நினைப்பிற்கு மாறாய் நினைவெல்லாம் அனன்யா திருமணத்திற்கு பின் சென்று நின்றது அர்ஜுனிற்கு.
சட்டென்று காரை நிறுத்தியவன் அமைதிக்காக சில நொடிகள் எடுத்துக் கொண்டு தண்ணீரைப் பருகியவன் மீண்டுமாய் காரை இயக்கினான் பழைய நினைவுகளோடு.
“விஜி! இதை எல்லாருக்கும் குடு!” விவேக் அனன்யா திருமணத்தில் மண்டபத்தில் விஜயலக்ஷ்மி கைகளில் தரப்பட்ட அக்ஷயப்பூக்கள் அடங்கிய பாத்திரத்தை கைகளில் பிடித்துக் கொண்டு அங்கிருந்த அனைவர்க்கும் அதை கொடுக்க ஆரம்பித்திருந்தாள் விஜயலக்ஷ்மி.
முழு நீல வண்ண வேலைபாடுடைய தாவணியில் அர்ஜுன் முன் நின்று “எடுத்துக்கோங்க!” என்றவள் தோற்றம் இப்பொழுதும் மனம் நிறைக்கும் அவனுக்கு.
“ரொம்ப அழகா இருக்க டா!” அர்ஜுன் அருகில் அமர்ந்திருந்த கயல்விழி விஜயலக்ஷ்மியிடம் கூற,
“அத்தை! உங்க பொண்ணு அங்க இருக்காங்க!” என விஜயலக்ஷ்மி கூறினாள் அவரிடம்.
“நான் இந்த பொண்ணை சொன்னேன். என் பொண்ணு என்னைக்கும் அழகு தான். இன்னைக்கு தான் நீ பொண்ணு மாதிரி அழகா தெரியுற!” என்று கயல்விழி கிண்டல் செய்ய, அர்ஜுன் சிரிக்க,
“மாப்பிள்ளை தங்கச்சிகிட்ட வம்பு பண்றீங்க இல்ல?” என்று முறைத்தவள் பின் சிரித்துவிட்டு நகர்ந்தாள்.
கயல்விழி இதய நோயாளி. பார்த்து பார்த்து கையாள வேண்டியவர். இத்தனை நாட்களும் அனன்யா உடன் இருந்து பார்த்துக் கொண்டிருக்க, அன்னைக்காகவே பெங்களூருவில் இருந்து மாற்றல் கேட்டிருந்தான் அர்ஜுன் கூட.
அனன்யாவின் தாய்மாமா என்ற முறையில் கயல்விழியின் மூத்த அண்ணன் அண்ணி என முறையாய் முன்பே வந்துவிட்டனர் கயல்விழியின் மூத்த அண்ணன் குடும்பமாய்.
“ம்மா! தீபக் வந்திருக்கான். இதோ வர்றேன்!” என தீபக்கை கூட்டி வர சென்றிருந்தான் அர்ஜுன்.
ப்ரணித்தா அப்பொழுது தான் விடுதியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்தது. சொந்தங்கள் என அனைவரையும் அறிவாளே தவிர்த்து யாரோடும் அதிகமாய் நெருக்கம் கிடையாது பிரணித்தாவிற்கு.
“சொல்ல சொல்ல கேட்காம ப்ரணி ஹாஸ்டல் போய்ட்டா! எங்களுக்கு தான் யாருமில்லாம மறுபடியும் வீடு வெறிச்சோடி இருக்கு. வீட்டுக்கு கூப்பிட்டாலும் வர மாட்டுறா! நாங்க பொண்ணா தான் பாக்குறோம் அவளை. என்ன இருந்தாலும் பெரியப்பா தானேனு அவ நினைக்குறா!” என கயல்விழியிடம் அத்தனை வருந்தி இருந்தார் அவர் அண்ணன்.
அவரின் பேச்சை மறுக்க முடியாமல் கடமைக்காக என்று தான் ப்ரணித்தா அனன்யாவின் திருமணத்திற்கு வந்ததும்.
அங்கே தான் அர்ஜுனை முதல் முதலாய் கண்டதும். அத்தனை நெருக்கமில்லை என்பதால் இதற்கு முன் பார்த்ததே இல்லை என்று தான் நினைத்தாள் அவனை.
அர்ஜுன் மட்டும் வர, “தீபக் எங்க டா?” என்ற அன்னைக்கு,
“அவன் இன்னும் சாப்பிடலைன்னு சொன்னான். மேல சாப்பிட கூட்டிட்டு போனா நீ போ நான் வர்றேன்னு சொல்லிட்டான். வருவான்!” என்றிருந்தான்.
“வா ப்ரணி!” என பெரியப்பா தன் பக்கம் ப்ரணித்தாவை அழைத்துக் கொள்ள, அவர் அருகே தான் கயல்விழி மகனோடு அமர்ந்திருந்தார்.
“சரியா முஹூர்த்த நேரத்துக்கு வந்திருக்க!” என்று கயல்விழியும் புன்னகைத்தார். அர்ஜுனிடம் கூட சிநேகமாய் ஒரு புன்னகை தான்.
அப்பொழுதே அவனைப் பிடித்துவிட்டது. “நியாபகமிருக்கா அர்ஜுன்! ப்ரணி! உன் சின்ன மாமா பொண்ணு! சின்ன வயசுல எல்லாம் ஒன்னா விளையாடுனீங்க! இப்ப ஆளுக்கொரு பாக்காம இருக்கீங்க!” என்ற அன்னைக்கும் அதே புன்னகை தான் அவனிடம்.
அனைவரும் அட்சதை தூவ அங்கே திருமணம் நடைபெற, ப்ரணித்தாவிற்கு பார்வையை திருப்ப முடியவில்லை அர்ஜுனிடம் இருந்து.
அவனைப் பற்றி பெரியப்பாவிடம் தான் கேட்டு தெரிந்து கொண்டாள். “படிச்சு முடிச்சதும் வேலைக்குன்னு பெங்களூர் போய்ட்டான். அங்க தான் இருக்கான்!” என்று கூறி இருந்தார்.
பார்த்ததும் பிடித்தம். தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் இது காதல் என்ற முடிவிற்கு வர வைத்தது பிரணித்தாவை.
அதன்பின் கயல்விழியோடு நெருக்கம் காட்ட ஆரம்பித்தாள் ப்ரணித்தா. அர்ஜுன் இரண்டு மாதங்களில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டான்.
வந்தவனை விவேக் பேசி பேசியே தன்னோடு வைத்துக் கொண்டான்.
விஜயலக்ஷ்மிக்கு அது இறுதி வருட மருத்துவப் படிப்பு. வீட்டிம் செல்லமாய் இருந்தவள் அண்ணியாய் வந்த அனன்யாவிற்கும் செல்லமாகிப் போனாள்.
அர்ஜுன், விஜயலக்ஷ்மி, ப்ரணித்தா மற்றும் புதிதாய் திருமணமான விவேக் அனன்யா என அனைவருக்குமே அழகான நாட்கள் அவை!
அனன்யாவைக் காணவோ இல்லை கம்பெனி சார்ந்த விஷயமாகவோ என விவேக் வீட்டிற்கு செல்லும் நேரங்களில் தான் அர்ஜுன் விஜயலக்ஷ்மியை மீண்டும் மீண்டும் காணும் வாய்ப்பும் வந்தது.
முதலில் சாதாரணமாக கடந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் அவள்மேல் ஒரு பிரியம் உண்டாக, அதை யாரிடமும் அவன் பகிர்ந்திருக்கவில்லை.
அதே நாட்களில் தான் அர்ஜுன் வீட்டிற்கு சென்று கயல்விழியுடன் தன் உறவை பலப்படுத்த முயன்றிருந்தாள் ப்ரணித்தா.
அர்ஜுனுமே அவளை தோழியாய் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவள் வரவு இருந்தது.
அன்னை தந்தை என யாரிடம் சென்று பேசிட முடியும் அவளால்? அதனால் தான் தங்களைத் தேடுகிறாள். பாவம் தானே! என்று தான் முதலில் ப்ரணித்தாவை இரக்கம் கலந்த பார்வை பார்த்தான் அர்ஜுன்.
அடுத்தடுத்த நாட்களில் அர்ஜுன் மாமா என அவளே சாதாரணமாய் அழைத்து பேச ஆரம்பிக்க, இவனும் இலகுவான தோழமையைக் கொடுத்தான் என்று தான் கூற வேண்டும்.
விவேக் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஓடி இருக்க அன்று கயல்விழியை அழைத்துக் கொண்டு அனன்யாவைக் காண விவேக் இல்லத்திற்கு வந்திருந்தான் அர்ஜுன்.
“ம்மா! என்னம்மா சொல்லாம வந்திருக்கிங்க?” என்று கேட்ட அனன்யா வெளியே செல்ல கிளம்பித் தயாராகி இருந்தாள்.
“ஆமாமா பொண்ணுகிட்ட பெர்மிஸ்ஸன் கேட்டுட்டு வந்திருக்கலாம்ல?” என்று கலையரசி கிண்டல் செய்ய,
“அப்படி சொல்லல த்தை!” என்றவள் அன்னையைப் பார்க்க,
“சும்மா தான் டா! பாக்கணும்னு தோணுச்சு. அர்ஜுன் தான் வாங்கனு கூட்டிட்டு வந்தான்!” என்று சொல்ல,
“இன்னைக்கு செக்கப் நாள் இல்ல? செக்கப் முடிச்சுட்டு தான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் அர்ஜுன்.
“நீ போய்ட்டு வா அனு. இன்னொரு நாள் நீ நம்ம வீட்டுக்கு வா அவர் கூட!” என்று அன்னை சொல்ல,
“வாங்க த்தை! வா டா அர்ஜுன்!” என்று விவேக்கும் வந்திருந்தான்.
“அவங்க வர்றது இருக்கட்டும். இன்னைக்கு ஒரு சொந்தக்காரங்க கல்யாணம். விவேக் அப்பாவும் வீட்டுல இல்ல. அதான் இவங்களை மட்டும் போய்ட்டு வர சொன்னேன்!” என்ற கலையரசி,
“நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு சீக்கிரமா வாங்க! அம்மா இங்க தான் இருப்பாங்க!” என்றதும்,
“இல்ல பரவால்ல அண்ணி!” என்று மறுத்தார் கயல்விழி.
“ம்மா! நாங்க போய்ட்டு வந்துடுறோம்.. ப்ளீஸ் ம்மா! இங்கேயே இருங்களேன்!” என அனன்யாவும் கெஞ்சலாய் கேட்க,
“ண்ணா! நீ போற வழில என்னை ட்ராப் பண்ணிடு!” என கல்லூரிக்கு தயாராகி வந்த விஜயலக்ஷ்மி அதன்பின் தான் கயல்விழி அர்ஜுனைக் கண்டவள் வரவேற்றாள்.
“நான் அனு கூட ஒரு மேரேஜ் போறேன் விஜி! காலேஜ் இந்த பக்கம் இருக்கே!” என்ற விவேக்,
“ஒண்ணு பண்ணலாம்!” என்றவன்,
“அர்ஜுன்! அத்தை இங்க இருக்கட்டும். நீ விஜியை ட்ராப் பண்ணிட்டு ஆபீஸ் போ! ஈவினிங் வேணா அத்தையை பிக்கப் பண்ணிக்கோ! இல்ல அத்தை இங்கயே ஸ்டே பண்ணினாலும் ஓகே!” என்று சொல்ல, கயல்விழியால் அதற்குமேலும் மறுக்க முடியாதே!
அர்ஜுன் தன் அன்னையைப் பார்க்கவும் சம்மதமாய் தலையசைத்தார் கயல்விழி.
“ஈவ்னிங் வந்து கூட்டிட்டு போ அர்ஜுன்!” என்றார் மகனிடம்.
“தேங்க் யூ த்தை!” என கயல்விழியைக் கட்டிக் கொண்ட விஜயலக்ஷ்மியைப் பார்த்து,”அய்யோ என் அம்மா பாவம் டி!” என அனன்யா கத்த,
“கடிச்சு வச்சா மாதிரி சொல்றிங்க! எவ்ளோ சாப்ட்டா கிஸ் பண்ணினேன் தெரியுமா?” என்றாள் விஜயலக்ஷ்மி.
அந்த நாள் மறக்க முடியாத நாள் தான் அர்ஜுனிற்கு.
காரில் ஏறியதும் பேச ஆரம்பித்தவள் பேசிக் கொண்டே தான் வந்தாள் அவனிடம். அவனால் தான் இயல்பாய் இருக்க முடியவில்லை.
“தேங்க்ஸ் அர்ஜுன்!” என காரில் ஏறிக் கொண்டதும் கூறியவள் சாதாரணமாய் பேசிக் கொண்டு வர, ஆம் இல்லை என்பதைப் போன்ற வார்த்தைகள் தான் அவனிடம்.
“இதென்ன டேஷ்போர்ட்ல் இவ்ளோ ஸ்வீட்ஸ்?” என குட்டி குட்டியாய் இருந்த டப்பாக்களை காட்டிக் கேட்டாள்.
“வேணும்னா எடுத்துக்கோ!” என்றான் அமைதியாய்.
“வேணும் தான். அதெல்லாம் சொல்ல வேணாம். நானே எடுத்துப்பேன். ஏன் இங்க இருக்கு? அண்ணிக்கு வாங்கிட்டு வந்து குடுக்க மறந்துட்டீங்களா?” என்றதும் சிரித்தவன்,
“ஸ்வீட்ஸ்னா வாங்கி குடுக்க மட்டும் தான் செய்யணுமா? சாப்பிட கூடாதா?” என்றான் அப்போதும்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும். பதில் கேள்வி கேட்குறீங்க!” என்றவள் பாதுஷா ஒன்றை எடுத்துக் கொண்டு,
“உங்களுக்கு?” என்றாள்.
“ஹ்ம்!” என்றவன் ஒன்றை வாங்கிக் கொண்டான்.
“ஸ்வீட்ஸ் பிடிக்கும். டிரைவ் பண்ணும் போது எடுத்துப்பேன்னு தெரிஞ்சு அம்மா தான் இப்படி வாங்கி வைக்குறாங்க!” என்றான்.
“ஓஹ்! ஆமாமா ஒரே செல்ல பையன் இல்ல? அண்ணி நிறைய சொல்லிருக்காங்க!” என்று சொல்ல,
“இதுல டபுளா அவளுக்கு போயிருக்கும்!” என்று சிரித்தான் அர்ஜுனுமே!.
அப்படி ஒரு நாள் அதன்பின் இருவருக்கும் வாய்க்கவே இல்லை. விஜயலக்ஷ்மிக்கு அது சாதாரண ஒரு நாள் தான். அர்ஜுன் அந்த நாளை எத்தனை நாட்கள் தித்திப்பாய் நினைத்துக் கொண்டான் என அவனுக்கு மட்டுமே தெரியும்.
இவை எதுவும் அறியாமலே அப்பொழுதெல்லாம் ப்ரணித்தா வானத்தில் பறந்த நாட்கள் அவை. விஜயலக்ஷ்மி என்று ஒரு பெண் அர்ஜுன் மனதில் இருக்கும் இடம் இவள் அறியாமல் அவனை சுற்றி வந்தே தன்னை புரிய வைத்து விடலாம் என நினைக்க, அர்ஜுன் எண்ணம் அதில் சுத்தமாய் தேங்கவில்லை என்பது மிக தாமதமாக தான் புரிந்து கொண்டாள் அவள்.
அடுத்த ஒரு வருடமும் அப்படியே தான் ஓடியது.
‘இனியும் ஏன் சொல்லாமல் இருக்க வேண்டும்? கயல் அத்தை தன்னை இப்பொழுதே பாசமாய் பார்த்துக் கொள்பவர் நிச்சயம் மருமகளாய் ஏற்றுக் கொள்வார். அர்ஜுனுக்கும் தான் தன்னைப் பிடிக்குமே! அவன் மறுக்கவே மாட்டான்!’ என உறுதியாய் எண்ணி அர்ஜுனிடம் தன் காதலை சொல்ல ப்ரணித்தா கிளம்பி வந்திருக்க, அர்ஜுன் அன்று வேறு சிந்தனையில் இருந்தான்.
“மாமா! நான் ஒண்ணு பேசணும்னு உங்களை வெளில கூட்டிட்டு வந்தேன். நீங்க என்னவோ டீப் திங்கிங்ல இருக்கீங்க போல!” என்று ப்ரணித்தா கேட்க,
“ஹ்ம்! ஆமா ப்ரணி! கொஞ்சம் கன்ஃபியூஷன்!” என்றான் அவன்.
தன் மனதில் இருப்பதை யாரிடமாவது கூறினால் மனம் அமைதியாகி விடுமோ என பல சிந்தனைக்கு பிறகு தான் ப்ரணித்தாவிடம் இப்படி கூறினான் அர்ஜுன்.
“என்னனு சொல்லுங்க மாமா! முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்!” ப்ரணித்தா சொல்ல,
“ஹெல்ப்பா?” என்று சிரித்தவன்,
“உனக்கு விஜயலக்ஷ்மி தெரியுமா ப்ரணி? விவேக் மாமா சிஸ்டர்?” என்று கேட்க,
“ஹ்ம் தெரியுமே! என்கிட்ட கூட அந்த பொண்ணு நல்லா பேசும்! அனு அண்ணி மேரேஜ்ல தான் பார்த்து பேசினேன். அப்புறம் அவங்க காலேஜ் பக்கத்துல ரெண்டு டைம் பார்த்து பேசி இருக்கேன்!” என்ற போது புன்னகையுடன் தான் இருந்தாள்.
“ஹ்ம்ம்! எனக்கு விஜியைப் பிடிச்சிருக்கு ப்ரணி!” என்று சட்டென்று அவன் சொல்லிவிட, இதயம் நின்று துடித்ததைப் போலானது தான் கேட்ட செய்தி ப்ரணித்தாவிற்கு.
“மாமா! என்ன சொன்னிங்க?” மீண்டும் உறுதிப்படுத்த கேட்டாள்.
“ஏன்? நம்ப முடியலையா?” என்று சிரித்தவன்,
“ஏன்? எப்படி? எதுக்குன்னு எல்லாம் எனக்கு தெரியாது! பட் பிடிச்சிருக்கு!” என்றான்.
“பிடிச்சிருக்குன்னா?” என்று கேட்பதற்குள்ளே தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது வார்த்தைகள் ப்ரணித்தாவிற்கு.
“பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்கு.. வேற என்ன சொல்ல?” என்றவன்,
“இப்பவுமே உன்கிட்டயும் சொல்லிருக்க மாட்டேன். அக்கா நேத்து பேசும் போது சொன்னா அவங்க வீட்டுல விஜிக்கு மாப்பிள்ளை பாக்குறதா. அதான் எப்படி இதை வீட்டுல சொல்றதுன்னு ஒரு தயக்கம்!” என்று சொல்ல, பேச்சச்சு போனாள் ப்ரணித்தா.
பிடிச்சிருக்கு என்ற சொல்லிற்கே அவள் மூச்சுக்கு தவிக்க, இவன் பெண் பார்க்க சொல்லும் அளவில் இருப்பதில் அவன் விருப்பம் புரிந்து மனம் சுக்கு நூறாய் உடைந்தது.
“அம்மாக்கும் விஜிக்கும் நல்ல பாண்டிங் இருக்கு. அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றவன்,
“மாமா எதுவும் நினைச்சிக்க மாட்டாங்க தான்.. ஆனாலும் நினைச்சிட்டா…” என்றவன் தயக்கம் நன்றாய் புரிந்தது.
“அதான் எப்படி ஓபன் பண்றதுன்னு ஒரே கண்ஃபியூஷன்!” என்றவன் முகத்தில் அழகான புன்னகை.
“விஜி யூஎஸ்ல படிக்க அப்ளை பண்ணிருக்காளாம். ஆனா கலை அத்தை அனுப்ப மாட்டேன் சொல்லிட்டாங்க போல. சோ இன்னும் நாலு மாசத்துல அவ மெடிக்கல் கம்ப்ளீட் பண்ணிட்டா மேரேஜ் தானாம்!” என்றவன்,
“ஹே! என்ன ஃப்ரீஸ் ஆகிட்ட?” என்று ப்ரணித்தா முன் கைகளை அசைக்க,
“இல்ல மாமா!” என்றவள் புன்னகைக்க முயன்றாள்.
“சரி பேசலாம். இன்னும் ஒரு மாசம் போகட்டும்!” என்று அவனே சொல்லிக் கொண்டு,
“போலாமா ப்ரணி?” என்றவன் அவள் தான் ஏதோ பேச வேண்டும் என அழைத்து வந்தாள் என்பதையே மறந்து போயிருந்தான்.
அடுத்த இரண்டு நாட்களும் விடுதி அறையை விட்டு வெளியே வரவே இல்லை ப்ரணித்தா.
தன் மேலேயே அத்தனை கோபம். அவனை விட்டு விட்டோமோ என்ற கோபம். அவன் தன்னை ஒரு பொருட்டாய் கூட நினைக்கவில்லையா என கோபம்.
என்ன செய்வது என தெரியாமல் அறைக்குள்ளேயே முடங்கி இருந்தாள்.
மருத்துவம் அதற்கான தகுதித் தேர்வு அடுத்ததாய் செயல்முறை என விஜயலக்ஷ்மிக்கு நாட்கள் ஓடியிருக்க, அனன்யாவிற்கு தான் தோன்றியது அந்த எண்ணம்.
“மாமா! எனக்கு ஒண்ணு தோணுது!” என்று அனன்யா கணவனை அழைக்க,
“மாமானு மரியாதையை வந்தா நல்லா விஷயம் தான் சொல்ல போற போலையே?” என்று விவேக் வந்து மனைவி அருகில் அமர,
“ஹ்ம்! எனக்கு பிடிச்ச நல்ல விஷயம் தான். ஆனா நீங்க என்ன சொல்லுவீங்கனு தெரியலையே!” என்றாள்.
“என்னனு சொல்லு அனும்மா!”
“விஜிக்கு மாப்பிள்ளை பார்க்கனும் சொன்னாங்களே அத்தை?”
“ஹ்ம்! ஆனா அவளுக்கு படிக்கணும்னு ஆசை இருக்கு!”
“ஆனா வீட்டுல என்ன சொன்னாலும் ஓகேனு சொன்னாளே விஜி?”
“சரி! இப்ப என்ன பண்ணனும் உனக்கு?”
“இல்ல! உங்களுக்கு அத்தை மாமாக்கு எல்லாம் ஓகேன்னா…. ஏன் விஜிக்கு அர்ஜுனை பேச கூடாது?” என்று கேட்க, முகம் சுருக்கியவன் சட்டென பதில் கூறவில்லை.
“எல்லாரும் ஓகே சொன்னா தான் மாமா!” அனன்யா தயங்கி சொல்ல,
“எனக்கெல்லாம் டபுள் ஓகே தான் அனு! நானும் இப்படி யோசிக்கவே இல்லை பாரேன்! குட் குட்!” என்றவன் மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிய, அது அனன்யாவிடமும் பிரதிபலித்தது.
“சரி அம்மா அப்பாகிட்ட பேசிட்டு அப்புறமா அத்தைகிட்ட கேட்போம். எல்லாம் சரியா வந்தா சந்தோஷம் தான்!” என்றான் மனைவியிடம் செல்லமாய் கன்னம் கிள்ளி.
ப்ரணித்தாவிடம் தன் மனதில் உள்ளதை அர்ஜுன் கூறிய நான்காம் நாளே இப்படி ஒரு நல்ல செய்தி அன்னை மூலம் அர்ஜுனிற்கு வந்து சேர நம்பவே முடியவில்லை அவனால்.
“ஹே ப்ரணி! இட்ஸ் மிராக்கிள்!” என்று தன் மகிழ்ச்சியை கூட ப்ரணித்தாவிடம் தான் முதலில் வெளிப்படுத்தி பகிர்ந்து இருந்தான் அர்ஜுன்.
காதல் கொண்ட உள்ளம் தன் காதலை மட்டும் பெரிதாய் நினைத்திடுமா என்ன? அதன் நேசத்துக்கு சொந்தமான உறவின் காதலையும் நிம்மதியையும் தானே கொண்டாடும்.
இங்கே தனக்கு கிடைக்காத ஒன்று மற்றவருக்கும் கிடைக்க கூடாது என்று வஞ்சத்தை தனக்குள் ஒருத்தி விதைத்துக் கொண்ட நாளும் அது தான்.
அனைத்தின் ஆரம்ப நாளுமே அது தான்.
தொடரும்..
error: Content is protected !!