Skip to content
Post Views: 6,401
அத்தியாயம் 37:
ஐந்து வருடங்கள் கடந்தது.
திருச்செந்தூர் முருகன் கோவில். ஆதியின் குடும்பம் மொத்தமும் வந்திருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அருணுக்கும், ஸ்னேகாவிற்கும் திருமணம் முடிந்திருந்தது.
அருண் காதலித்த அவர்களின் ஜுனியர் அதே சினேகாதான். இரண்டு வருடங்களுக்கு முன்பு கௌரிக்கும் வசந்தனுக்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர்களுக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான்.
Advertisement
வசந்தன் அக்ரிகல்ச்சர் ஆஃபிசராக இருக்கிறான். வேலை வாங்கிவிட்டு வந்துதான் கௌரியை பெண் கேட்டான், ஆதியின் சம்மதத்தோடு.
முதலில் சித்ரா ஏகப்பட்ட கோளாறு சொன்னாலும் சந்தியா சில பல திருவிளையாடல்கள் செய்து ஒத்து கொள்ள வைத்தாள்.
கௌரி கல்யாணத்தோடு சுந்தரமும் சித்ராவும் திரும்பவும் ஆதி வீட்டிற்கே வந்துவிட்டனர். இந்த வீட்டில் இருந்துதான் கௌரியை கோலாகலமாக அனைவரும் சேர்ந்து வசந்தனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
Advertisement
அருண் கல்யாண விஷயத்தில் சினேகாவை முதலில் அவளின் கார்மெண்ட் பெக்டரியில் வேலைக்கு சேர்த்தாள் சந்தியா.
Advertisement
ஆம். சந்தியா கடைசி வருடம் ப்ராஜெக்ட் செய்யும்போது கர்ப்பமாகிவிட்டாள். குழந்தை பிறந்து சிறிது மாதம் ரெஸ்ட் எடுத்தவள் பிறகு அரவிந்தின் மில்லிலேயே வேலைக்கு சென்றாள் பயிற்சிக்காக.
பிறகு ஒரு வருடங்கள் கழித்து அவளே ஒரு கார்மெண்ட் கம்பெனி ஆரம்பித்தாள், ஆதியின் தூண்டுதலினால். பின்பு “தியா” என்ற பிராண்ட் நேமில் அவளே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளை தயாரிக்கிறாள்.
இந்த மூன்று வருடங்களில் தியா ப்ராண்ட் மார்க்கெட்டில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. கடந்த மாதம்தான் அவர்கள் ஊரில் ஒரு அமைப்பு சந்தியாவிற்கு இளம் தொழிலதிபருக்கான அவார்ட் வழங்கியது.
Advertisement
கௌரி படித்துவிட்டு ஒரு IT கம்பெனியில் வேலை பார்த்தவள் பிறகு சந்தியாவின் கம்பெனியிலேயே கம்ப்யூட்டர் பிரிவின் பொறுப்புக்கு வந்துவிட்டாள்.
அருணும் இரண்டு வருடங்கள் சென்னையில் வேலை பார்த்தவன் , சந்தியா கம்பெனி ஆரம்பிக்கும்போதே வந்து இணைந்து கொண்டான். எல்லோரும் கார்மெண்ட் பேக்டரியை இணைந்து நடத்தினாலும் தியா பிராண்ட் மட்டும் சந்தியாவின் சொந்த முயற்சி. அவள்தான் அதற்கு மெட்டீரியல், டிசைன், உழைப்பு எல்லாம் போடுவது.
சந்தியா ஆதியின் மகள் உமையாள். நான்கு வயதாகிறது. எல்கேஜி படிக்கிறாள். அவர்கள் வீட்டின் செல்ல சிட்டு. தாத்தா பாட்டிகளுக்கு மகாராணி. அத்தை சித்தப்பாவின் விளையாட்டு பொம்மை. அம்மா அப்பாவின் உயிர்.
தற்போது சந்தியாவிற்கு ஐந்து மாதம். மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறாள்.
அருண் காதல் விஷயத்தில் சினேகாவை அவள் கம்பெனியில் வேலைக்கு சேர்த்தவள், பிறகு குடும்பத்தில் ஒருத்தியாக்கிவிட்டாள். சினேகாவும் அவள் வீட்டில் ஒரே மகள். அவள் பெற்றவர்களுக்கு ஒரே மகளை கூட்டு குடும்பத்தில் கொடுக்க முதலில் பயம். பிறகு மகளின் பிடிவாதத்தால் ஒத்து கொண்டார்கள்.
அனைத்து பிள்ளைகளுக்கும் நல்ல முறையில் திருமணம் நடந்து முடிந்தால் திருச்செந்தூர் வருவதாக சிவகாமி வேண்டியிருந்தார். அதனால்தான் இப்பயணம்.
தரிசனம் முடிந்து வெளியில் வந்தார்கள் குடும்பத்துடன். அப்பொழுது கூட்டத்தில் வரிசையில் நின்றதால் சந்தியாவிற்கு மயக்கம் வரும் போல் இருந்தது.
வியர்த்து போய் அங்கு பிரகாரத்தில் ஓரமாக இருந்த கருங்கல் மேடையில் அமர்ந்தவளை சுற்றி அவளின் குடும்பமே கூடி கொண்டது.
உமையாள் சந்தியாவின் வயிற்றில் கை வைத்து “தம்பி சேட்டை பண்றானாம்மா” என்று கேட்டு கொண்டிருந்தாள்.
அருணும் வசந்தனும் அவசரமாக வாசலுக்கு ஓடி ஒருவர் இளநீரும், ஒருவர் பாலும் வாங்கி வந்தனர்.
கௌரியும் சினேகாவும், சந்தியாவிற்கு விசிறி கொண்டிருந்தனர். சிவகாமி மருமகள் முகத்தை துடைத்து விட்டு கொண்டிருந்தார்.
ஈஸ்வரனும் சுந்தரமும் பக்கத்தில் நின்று “என்ன கண்ணு செய்து. டாக்டர்ட்ட ஓர் எட்டு போயிட்டு வந்துருவோமா” என்று கேட்டு கொண்டிருந்தனர்.
ஆதி அவளை கண்களில் கவலையோடு பார்த்து கொண்டு சிறிது தூரத்தில் நின்றான்.
இதில் செல்வம், பத்மா, சித்ரா மற்றும் அவரின் மடியில் கௌரியின் மகன் பிரணவ். இவர்கள் மட்டும் தனியாக அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
பத்மாதான் கேட்டார். “என்ன அண்ணி. உங்க மருமகளுக்கு நீங்க போய் என்னன்னு பாக்கலையா” என்று.
“ம்ஹும். அங்கதான் அவ்ளோ பேர் நிக்குறாங்களே. நாமளும் அங்க போய் என்ன பண்றது. நமக்கே இங்க கோயில்ல கூட்டத்தில முடியல. எல்லாருமே சொன்னோம் கொழந்தை பொறந்தபிறகு வேண்டுதல் முடிக்கலாம்ன்னு. எங்கயாவது கேட்டாளா. குடும்பத்தோட சேந்து டூர் போணுமாம். அது அவ ரொம்ப நாள் ஆசையாம். அப்படின்னு சொன்ன பிறகு என்ர அக்காவுக்கும் மாமாவுக்கும் தாங்குமா. புள்ளத்தாச்சி புள்ள ஆசைபடுதேன்னு கிளம்பிட்டாங்க. இப்ப அவஸ்தை படறது யாரு. ஏன் அண்ணி. என்னை கேக்கறீங்க. நீங்க போய் உங்க மகளை பாக்கலையா”
“அட போங்கண்ணி. என்னைக்கு என் மகளை உங்க குடும்பத்தில கட்டி குடுத்தேனோ, அன்னைக்கே போய்டுச்சு என் உரிமை . என்ன எங்க அவளை பாக்க விடறாங்க. என் மக நாலு நாள் தங்கறேன்னு வருவா. அன்னைக்கே மாப்பிள்ளை நைட் வீட்டுக்கு வருவாரு. உடனே இவளும் கிளம்பி போய்டுவா. உமையாள் பொறக்கும் பொது ஒம்பதாம் மாசம் வளைகாப்பு போட்டு இருபத்து அஞ்சு நாள், எப்படித்தான் விட்டாங்களோ. அப்புறம் புள்ளை பொறந்தவுடனே பதினாறாம் நாள் கூட்டிட்டு போயாச்சு. அதுக்கு பிறகு இப்பவரைக்கும் வந்து ஒருநாள் தங்கல. நாங்கதான் இப்படி வந்து சேந்துக்கறோம். நா போய் இப்ப அங்க என்ன பண்றது” என்று சந்தோஷமாகவே புலம்பினார்.
“அதுவும் சரிதாண்ணி . அங்க பாருங்க. ஏற்கனவே ஆதி அவனை அவன் பொண்டாட்டி பக்கத்தில விடலன்னு முறைச்சிக்கிட்டு நிக்கிறான். இதுல நம்ம வேற எதுக்கு” என்று பேசி கொண்டிருந்தார். செல்வமும் ஆதியை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டிருந்தார்.
இது எல்லாவற்றையும் எதிரில் ஒரு குடும்பம் அமர்ந்து ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருந்தது.
அவர்கள் வேறு யாருமல்ல ஸ்ரீதரின் குடும்பம்தான். ஸ்ரீதர், அவனின் தாத்தா பாட்டி, அம்மா, அப்பா, அவன் மனைவி நிவேதிதா அனைவரும் அமர்ந்து சந்தியாவை பார்த்து கொண்டிருந்தனர்.
சந்தியாவிற்கு உடல் மட்டும் முன்னைவிட பூசியிருந்தது. தாய்மையின் அழகோடு, குடும்பத்தினரின் அன்பிலும், கணவனின் காதலிலும் மிக மிக அழகாயிருந்தாள்.
ஆதியும் உடல் உழைப்பினாலும், சந்தியா அவன் வாழ்க்கையில் மற்றும் குடும்பத்தில் கொடுக்கும் மகிழ்ச்சியினாலும் முழு ஆண்மகனாக இன்னும் கம்பீரமாக நிமிர்ந்து நின்று அவளை பார்த்து கொண்டிருந்தான்.
சந்தியா இளநீரை குடித்துவிட்டு எல்லோரிடமும் , தனக்கு ஒன்றுமில்லை, எல்லோரும் சற்றுநேரம் அமருங்கள் என்று அமைதி படுத்திவிட்டு ஆதியை பார்த்தாள்.
இவ்வளவு நேரம் அவளை கவலையோடு பார்த்து கொண்டிருந்தவன், இப்பொழுது அவள் பார்த்ததும் முறைத்தான்.
அவனும் பலமுறை சொல்லி பார்த்தான். இந்த பயணம் இப்பொழுது வேண்டாமென்று. அவனை கெஞ்சி கொஞ்சி சரிக்கட்டி கிளம்பியிருந்தாள்.
இப்பொழுது முறைத்தவனிடம் உமையாளை அனுப்பினாள். உமையாள் அவனிடம் வந்து “அப்பா தூக்குங்க” என்று கையை நீட்டினாள்.
சந்தியாவின் மறு உருவாக இருக்கும் மகளை தூக்கி அணைத்து கொண்டவன் “அம்மா என்ன சொல்லி அனுப்புனாங்க கண்ணு” என்று கேட்டான்.
“ஆதி அப்பா கோச்சி , சந்தியா அம்மா பத்து அம்முச்சி வீட்டுக்கு கோயிங் ப்பா ” என்று உமையாள் சொன்னதை கேட்டதும் சிரிப்பு வர பார்த்தது ஆதிக்கு.
அவனுக்குத்தான் தெரியுமே. மாமியார் வீட்டுக்கு செல்லும் மனைவியை எப்படி பின்னாலேயே சென்று அழைத்து வருவது என்று.
சிரிப்பை மறைத்து கொண்டு உமையாளிடம் அவனும் ஏதோ சொல்லி அனுப்பினான்.
உமையாள் சந்தியாவிடம் சென்று “சந்தியா அம்மா அம்முச்சி வீட்டுக்கு கோயிங், ஆதி அப்பா ஹாப்பி அண்ணாச்சிம்மா” என்று கூறியதும் உமையாளை சிவகாமியிடம் அனுப்பிவிட்டு ஆதியை திரும்பி முறைத்தாள் சந்தியா.
அப்பொழுது சந்தியாவை நோக்கி வேணுகோபால் தாத்தாவும், அலமேலு பாட்டியும் வந்தார்கள். அவர்களை பார்த்து ஆச்சரியமும், சந்தோஷமுமான சந்தியா அவசரமாக எழுந்தாள்.
அவளை கைபிடித்து அமரவைத்து பக்கத்திலேயே அமர்ந்தார்கள் தாத்தாவும் பாட்டியும்.
“எத்தனை மாசம்மா” என்றார் பாட்டி.
“அஞ்சு மாசம் பாட்டி” என்றவள் தொடர்ந்து “எப்படி இருக்கீங்க தாத்தா. என்னல்லாம் நியாபகம் இருக்கா உங்களுக்கு. இங்க எங்க தனியாவா வந்தீங்க” என்று தொடர் கேள்விகளை கேட்டாள் சந்தியா.
அவளை பார்த்து சிரித்த தாத்தா “ஏன் உனக்கு நியாபகம் இருக்கா எங்களை” என்றவர் உமையாளை காட்டி “உன் மகளா” என்றார்.
அதற்குள் சந்தியாவின் குடும்பம் அவர்கள் சந்தியாவிடம் பேசி கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, அனைவரும் அருகில் வந்தனர். செல்வமும் பத்மாவும் அவர்களை யாரென்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தனர். சந்தியாவும் அவள் குடும்பத்தினரை தாத்தா பாட்டியிடம் அறிமுகப்படுத்தினாள்.
அதற்குள் ஸ்ரீதரின் அப்பாவும் இவர்களிடம் வந்தார். பாட்டியும் தாத்தாவும் உமையாளை கூப்பிட்டு கொஞ்சினர். சந்தியா அங்கேயே நின்ற ஆதியை அருகில் அழைத்து மூவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.
வேணுகோபால் ஆதியிடம் “என்ன பண்றீங்க தம்பி” என்றார்.
“விவசாயம் பாக்கிறேங்க” என்றான் ஆதி.
அதற்குள் ராகவன் “நீங்க இந்த வருஷம் நம்மாழ்வார் அவார்ட் வாங்கினீங்க. இயற்க்கை விவசாயி ஆதித்யன் தான” என்றார்.
“ஆமாங்க” என்றான்.
அதற்கு வேணுகோபால் தாத்தாதான் “பலே பலே நாட்டுக்கு நல்லது பண்ற விவசாயியா . நிறைய பொறுமை இருக்கணும். அதான் இந்த சந்தியா பொண்ணையே சமாளிக்கிறீங்க” என்றவர் “அப்புறம் நீ என்ன பண்றம்மா. கிராமத்தில வந்து புருஷன், குழந்தை குட்டின்னு மட்டும் இருந்துட்டியா” என்று கிண்டலடித்தார்.
அதற்கு சித்ரா “என்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க. எங்க மருமகள என்ன சாதாரணம்ன்னு நினைச்சீங்களா . அவளும் அவார்ட்லாம் வாங்கிருக்கா” என்றதும் கேள்வியாக சந்தியாவை பார்த்தவரிடம் “கார்மெண்ட் பேக்டரி வச்சிருக்கோம். அப்புறம் தியா விமென்ஸ் அண்ட் கிட்ஸ் வியர் எங்களோடதுதான். நானும் என் பேஃமிலி மெம்பெர்ஸ் சேர்ந்துதான் பிசினஸ் ரன் பண்றோம் தாத்தா” என்றாள்.
“ஓ. சந்தோஷம்மா. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பேன்ன்னு நானும் பாட்டியும் பேசிக்குவோம். அத இன்னைக்கு முருகன் எங்களுக்கு காட்டிட்டான். எப்பேர்ப்பட்ட புருசனும் குடும்பமும் உனக்கு கிடைச்சிருக்குன்னு. நல்லா இரும்மா. நாங்க கிளம்புறோம்” என்றவரிடம்
“இருங்க தாத்தா. எங்களோட வந்து சாப்பிட்டுட்டு போங்களேன்” என்றதற்கு “இல்லம்மா. நாங்க அபிஷேகத்துக்கு குடுத்துருந்தோம். என் பேரனுக்கு பரிகாரம் சொல்லிருந்தாங்க . அத நிறைவேத்தனும். நாங்க கிளம்புறோம்மா” என்றுவிட்டு அவர்கள் கிளம்பவும்தான் சந்தியா ஸ்ரீதர் நிவி கல்பனாவை பார்த்தாள்.
ஸ்ரீதரும் நிவியும் ஒரு தயக்கத்துடன் இவளிடம் வராமல் இருந்தனர். கல்பனா சந்தியாவை பார்த்ததும் வழக்கம் போல் முகத்தை திருப்பி கொண்டார்.
சந்தியா சிறிதும் யோசிக்காமல் கிளம்பி அவர்களிடம் சென்றாள். அவள் எழுந்து தங்களிடம் வருவதை பார்த்ததும் அதற்கு மேல் பொறுக்காமல் ஸ்ரீதரே அவளிடம் சென்றான். நிவியும் கல்பனாவும் அங்கேயே அமர்ந்திருந்தனர்.
சந்தியா “நல்லா இருக்கீங்களா சீனியர்” என்று கேட்டாள்.
“நா நல்லாருக்கேன் சந்தியா. நீ நல்லாருக்கன்னு உன்னையும் உன் குடும்பத்தையும் பாத்தே தெரிஞ்சுக்கிட்டோம். உன் ஹஸ்பண்ட் மேல உனக்கு ரொம்ப லவ் போல”
அதற்கு சிரித்த சந்தியா “ரொம்ப. அவர்தான் என்னோட ஆதி மாமா சீனியர். என் சந்தோசம், குழந்தைகள், என் தொழில், என் வாழ்க்கை எல்லாத்துக்கும் அவர்தான் ஆதியும் கூட” என்றாள்.
சிறிது நேரம் அமைதியான ஸ்ரீதர் பிறகு “சாரி சந்தியா முன்ன நடந்த எல்லாத்துக்கும். எனக்கு லேட்டாதான் புரிஞ்சுது. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். அடிக்கடி நினைப்பேன். உன்ன பார்த்து சாரி கேக்கணும்ன்னு. ஆனா தயக்கம். நீ என்ன பேசுவியோன்னு” என்றதும்
“விடுங்க சீனியர். இப்ப எல்லோரும் மூவ் ஆயாச்சு” என்று பேசி கொண்டிருந்தவளிடம் உமையாள் வந்து காலை கட்டி கொண்டாள். அவளை ஆசையாக பார்த்த ஸ்ரீதர் “உன் மகளா சந்தியா” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே அங்கு வந்த நிவி சந்தியாவிடம்
“உன் பொண்ண நான் தூக்கலாமா சந்தியா” என்று கேட்டாள்.
அதற்கு பெரிதாக புன்னகைத்த சந்தியா “இது என்ன கேள்வி நிவி. தாராளமா தூக்கிக்கலாம்” என்றவள் உமையாளிடம் “உமை. அந்த ஆன்ட்டிக்கிட்ட போங்க” என்றாள். குழந்தையை தூக்கி கொண்ட நிவி “உங்க பேர் என்ன பேபி” என்றாள் .
அதற்கு “உமையாள்” என்று அழகாக சொன்ன குழந்தையை கட்டிக்கொண்டு முத்தம் வைத்த நிவி “அழகான பேரு. அப்படியே உன்ன மாதிரி க்யூட்டா இருக்கா” என்றாள் சந்தியாவிடம். பிறகு குழந்தையை ஸ்ரீதரிடம் குடுத்த நிவி “நீங்க அங்க தாத்தா, பாட்டிக்கிட்ட போங்க. நா சந்தியாட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள்.
ஸ்ரீதர் யோசித்தாலும் தயங்கிக்கொண்டே சந்தியா ஃபேமிலியிடம் சென்றான் குழந்தையுடன்.
நிவி சந்தியாவிடம் “எங்களுக்கு குழந்தையில்லை சந்தியா. நிறைய ஜோதிடர்கள் பரிகாரம்ன்னு சொல்லும்போது எனக்கு கோவமா வரும். இந்த தடவை தாத்தா பாட்டி ரொம்ப கெஞ்சினதாலதான் இங்க வந்தேன். ஆனா இங்க வந்து, உன்ன பாத்த பிறகுதான் உண்மையான பரிகாரம் என்னன்னு எனக்கு தெரிஞ்சது” என்றவள் சந்தியாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டு “என்ன மன்னிச்சுடு சந்தியா. நா எவ்வளவு எனக்கு நானே நியாயம் சொல்லிக்கிட்டாலும் உனக்கு நா அன்னைக்கு பண்ணது பெரிய தப்பு. சாரி . வெரி சாரி” என்றவளின் கையை இறக்கிவிட்டு அவளை அணைத்து கொண்டாள் சந்தியா.
“இது என்ன நிவி. சின்ன புள்ளத்தனமா. உன் மேல எனக்கு எந்த கோபமும் கிடையாது. யார் வாழ்க்கையும் யாரும் பிடுங்க முடியாது. எல்லாம் நன்மைக்குத்தான். பாரு. இல்லன்னா எனக்கு என் ஆதி மாமாவும், இப்படியொரு குடும்பமும் கிடைச்சிருக்குமா சொல்லு. நீ சந்தோசமா இயல்பா இரு ஸ்ட்ரெஸ் இல்லாம, குழந்தை தானா பிறக்கும்” என்றவளை பார்த்து சிரித்தாள் நிவியும் குற்ற உணர்ச்சி நீங்கிய உணர்வுடன்.
error: Content is protected !!