Skip to content
Post Views: 10,161
அத்தியாயம் 8
காலையில் அலுவலகம் செல்ல கிளம்பி வெளியே வந்த அர்ஜுன் சாப்பிட அமர்ந்தவன்,
Advertisement
“ம்மா! என்று குரல் கொடுக்க, சமையலறையில் இருந்து வந்தார் கயல்விழி.
“வந்துட்டேன் அர்ஜுன்!” என்றவர்
Advertisement
Advertisement
“நைட்டு எப்ப டா வந்த? பத்து மணி வரை உனக்காக முழிச்சுட்டு இருந்தேன்!” என்றபடி பொங்கலை வைத்தார் அவனுக்கு சாப்பிட. கூடவே அவன் விரும்பி உண்ணும் ஜாங்கிரியும் அங்கே இருக்க,
“நேத்து எட்டு மணிக்கு கிளம்ப வேண்டிய லோட் எல்லாம் டைம்க்கு ரெடியாகல! மாமா வேற அங்க இல்ல. ஆபீஸ்லேர்ந்து வீட்டுக்கு போய்ட்டாங்க. குடோன்ல இருந்த ஆளுங்களை வச்சு மேனேஜ் பண்ணனுமே!. கம்பெனில நான் இருந்தேன். அதான் அனுப்பி வச்சுட்டு வர லேட் ஆகிட்டு. நான் தான் லேட் ஆகும் வெளில சாப்பிடுக்குறேன் சொன்னேனே! ஏன் அவ்வளவு நேரமெல்லாம் முழிச்சுட்டு இருக்கீங்க? நான் வரும் போது பதினோரு மணி இருக்கும்!” என்றான் அன்னையிடம்.
Advertisement
“நேத்து நைட்டு அனு போன் பண்ணினா டா! எல்லாம் நல்ல விஷயமா தான்!” என்றதும் பக்கென்றானது அர்ஜுனிற்கு.
மாப்பிள்ளை பார்ப்பது பற்றி பேசி நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நல்ல விஷயம் என்றால்? நினைக்கும் போதே மனதில் பதற்றம்.
“அனு நாத்தனார் விஜிக்கு பையன் பாக்கறதா அன்னைக்கு சொன்னாளே!” என்று சொல்லவும்,
“அதுக்குள்ளவா பாத்தாச்சு?” என்றான் சட்டென்று.
ஏற்கனவே பார்த்து வைத்துவிட்டு தான் பேச ஆரம்பித்திருப்பார்களோ? இனி என்னவென்று தான் பேச சொல்வது? என மனம் அதற்குள் என்னவெல்லாமோ நினைத்து கனம் கூடிட,
“ஆமாமா! சொன்னா ஷாக் ஆயிடுவ!” என்று சிரித்தார் கயல்விழி.
சாப்பிடவும் முடியவில்லை. இதென்ன இவ்வளவு கனம் என நினைக்காமல் இருக்க முடியவில்லை. அன்னையை பார்த்தவன் பார்த்தபடி இருக்க,
“நம்ம அனு தான் விவேக்கிட்ட பேசி இருக்கா விஜியை என் தம்பிக்கு குடுங்கன்னு…” என்று சொல்லவுமே விழிகள் சுருங்கி பின் அகலமாய் விரிய அத்தனை வெளிச்சம் அவனுக்குள்.
“ம்மா?” என்றவனுக்கு அத்தனை ஆச்சர்யம்.
“விவேக் அவங்க வீட்டுல பேசி இருக்காங்க. அனு அத்தைக்கும் மாமாக்கும் கூட ரொம்ப சந்தோசமாம். அடுத்து தான் அனு என்கிட்ட கேட்டா!” என்றவர்,
“கரும்பு தின்ன கூலி வேணுமா? விஜி மாதிரி பொண்ணை நான் வேண்டாம்னு சொல்லுவேனா?” என்று சொல்லிய அன்னை முகத்தில் முழு நிறைவு தெரிய , அர்ஜுன் முகத்திலுமே புன்னகை.
“உன்கிட்ட கேட்க சொன்னா அனு!” என்று கயல்விழி அவன் முகம் பார்க்க,
“என்ன பாக்குறீங்க ம்மா? கமான் கேளுங்க!” என்றான் சிரித்தபடியே.
“என்ன இருக்கு கேட்க? நானா யாரையாச்சும் கட்டி வச்சா தான உண்டு உனக்கெல்லாம்? எங்க விஜியை வேணாம்னு சொல்லு?” என்றார்.
“ம்மா! மிரட்டுறிங்க!” என்றான் இன்னும் அதிகமாய் புன்னகைத்து.
“நீ வேண்டாம்னு சொல்லல. யோசிக்கவும் இல்ல. அப்ப உனக்கும் ஓகே தான் இல்ல அர்ஜுன்?” என்றார் அவன் முகத்தின் உணர்வுகளை மட்டுமாய் பார்த்து.
“இப்ப தான் வேணாம்னு சொல்லு பாக்கலாம்னு சொன்னிங்க. இப்ப நீங்களே கேட்குறீங்களே?” என்றவனுக்கு நேராய் சொல்லிட முடியவில்லை. இருக்க இருக்க மனதின் கனம் எல்லாம் காற்றாய் பறந்து கொண்டிருக்க, சாப்பிடும் மனநிலையும் இல்லை. தட்டில் இருந்ததை முடித்தவன் அருகே ஜாங்கிரியை அன்னை நகர்த்த,
“ஸ்வீட் எல்லாம் வச்சு கொண்டாடுறீங்க ம்மா!” என்றான் அதை எடுத்தபடி.
“எப்பவும் உனக்காக வாங்குறது தான். இன்னைக்கு இப்படி நல்ல செய்தியோட உனக்கு தரணும்னு இருந்திருக்கு!” என்றவர்,
“நீ சொல்லு அர்ஜுன். அக்காகிட்ட என்ன சொல்லட்டும்?” என்றார் அவன் முடிவும் முக்கியமே என்று.
“அக்கா என்ன சொல்றா ம்மா?”
“அவ தான் டா ஆரம்பிச்சது! நீ சொல்லு!” என்று சொல்ல,
“நான் சொல்ல என்ன இருக்கு? உங்க எல்லாருக்கும் ஓகேனா கன்டின்யூ பண்ணுங்க!” என்றான் முழுதாய் ஜாங்கிரியை உண்டு முடித்து.
“இது போதும்! நேத்து எனக்கும் உன்கிட்ட சொல்லாம தூக்கமே வர்ல. அனு உனக்கு நைட்டு கால் பண்ணிருக்கா. விவேக் தான் நீ குடோன்ல பிசினு சொல்லி இருக்காங்க. ஒன்பதரைக்கு எனக்கு போன் பண்ணி நீங்க ஏன் ம்மா தூங்காம இருக்கீங்க. காலையில கேட்டு சொல்லுங்க. உடம்ப பார்த்துக்கோங்கன்னு திட்டி தூங்க சொன்னா!” என்று சொல்ல,
“ஹ்ம்ம்!” என்றவனுக்கு மனதின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க தெரியவில்லை. யாரிடமாவது தன் மகிழ்ச்சியை பகிர வேண்டும். ஆனால் யாரிடம்?” என்று நினைக்கவுமே தான் அன்று ப்ரணித்தாவிடம் இதை கூறியது நியாபகம் வந்து அவளுக்கு அழைத்தபடி அன்னையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் அலுவலகம்.
“சொல்லுங்க மாமா!” என்றவள் அர்ஜுன் அவனாய் அழைத்ததில் மகிழ்ந்து இணைப்பை ஏற்றிருக்க,
“ப்ரணி! நிஜமா நீ ரொம்ப லக்கி ஒன்!” என்று அதீத மகிழ்ச்சியில் அவன் கூற, ப்ரணித்தாவின் கண்கள் ஒளிர்ந்தது அவன் தன்னை கூறிய விதத்தில்.
“உன்கிட்ட மட்டும் தான் சொல்லி இருந்தேன் என் மனசுல இருந்த ஆசையை. ஆனா அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நினைக்கவே இல்ல!” என்று சொல்ல, உடனே அவன் கூறுவது புரிந்து கண்கள் சுருங்க இங்கும் அங்குமாய் விழித்தவள் முகத்தில் தீவிரம் படர,
“என்ன சொல்றிங்க மாமா?” என்று கேட்கயில் குரலில் மாற்றம் வந்திருந்தது.
அன்னை பேசியதன் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு வார்த்தையாய் அவளுக்கு விளக்கிக் கூறியவன்,
“இட்ஸ் மிராக்கிள் ப்ரணி! நான் நினைக்கவே இல்ல! அதுவும் அம்மா குட் நேயூஸ்னு சொல்லவும் அரண்டுட்டேன். அப்ப தான் விஜியை அவ்ளோ எனக்கு பிடிக்கும்னு எனக்கே தெரிஞ்சது” என்று சந்தோஷ பிதற்றல்கள் அர்ஜுனிடம் என்றால் கண்கள் நிலைக்குத்திப் போயிருக்க, கல்லென நின்றிருந்தாள் ப்ரணித்தா.
“உனக்கு பெரிய ட்ரீட் நான் தர்றேன் ப்ரணி! அதுவும் விஜியோட சேர்ந்து உனக்கு மட்டும் ஸ்பெஷல் டிரீட்!” என்று அவன் பேச பேச பற்றி எரிந்து கொண்டிருந்தது ப்ரணித்தாவினுள்.
“ஹலோ! ப்ரணி!” நீண்ட நேரமாய் அவள் குரல் இல்லை என்றதும் அர்ஜுன் அழைக்க,
“ஹ்ம் மாமா!” என்று சாதாரணம் போல அழைத்தவள்,
“காங்கிரட்ஸ் மாமா!” என்று பல்லைக் கடித்துக் கூற, அதை அறியவில்லையே அவன்.
“தேங்க்ஸ் டா! மத்ததெல்லாம் பேசிட்டு அம்மாவே கால் பண்ணுவாங்க உனக்கு.” என்று அவன் சொல்வது புரிய,
“மாமா!” என தீவிரமான அழைப்பில்,
“சொல்லு ப்ரணி!” என்றான்.
“எல்லாம் ஓகே தான் மாமா! நீங்க இன்னும் விஜிகிட்ட பேசல இல்ல?” என்றாள் நகத்தைக் கடித்தபடி.
“நானா? ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் அம்மா எனக்கு ஸ்வீட் ஷாக் குடுத்தாங்க. நான் எங்க பேச!” என்றான் அதே நினைவில் மகிழ்வாய்.
“இல்ல மாமா! விஜி படிக்கணும் சொன்னானு சொன்னிங்க இல்ல? நீங்க ஒரு டைம் நேர்ல அவகிட்ட பேசுறது பெட்டெர்ல மாமா?” என்கவும் அவனுமே யோசித்தான்.
எதாவது செய் என்று மனதில் தோன்றிய நொடி அவனை குழப்பிவிட மட்டும் நினைத்து ப்ரணித்தா அப்படி கூறி இருக்க,
“கரெக்ட் தான்! அவங்க வீட்டுல எல்லாரும் பேசி தான் முடிவு பண்ணிருக்காங்க. ஆனா விஜிகிட்ட பேசிட்டாங்களா தெரியலையே!” என அவள் நினைத்தது போலவே அவனும் குழம்பினான்.
“ஹ்ம் அதான் மாமா! அவ என்ன நினைக்குறான்னு தெரியணும் இல்ல? அவங்க வீட்டுல மட்டும் பேசி….” என்றவள் முடிக்காமல் விட,
“யாஹ்! சரி தான் ப்ரணி! தேங்க்ஸ் டா! நான் பார்த்துக்குறேன்!” என்றவன் வைத்துவிட்டான். ப்ரணித்தாவும் நகத்தைக் கடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
அடுத்து அலுவலகம் வரவும் “வெல்கம் டா மச்சான்!” என்று கைகளை விரித்து தன்னறைக்குள் வந்தவனை விவேக் வரவேற்க,
“மாமா!” என்றவன் கூச்சமாய் புன்னகைதான்.
“வெரி ஹாப்பி ஃபார் யூ மேன்!” என்று சொல்லி விவேக் அணைத்துக் கொண்டான். அதிலேயே விவேக் விருப்பம் புரிந்து இளநகை அர்ஜுனிடம்.
“தீபக் வருவான் இப்போ! நான் பேங்க் வர போகணும். அவனோட காசு ஒரு ஒன் லேக் என்கிட்ட இருக்கு. இங்க தான் இருக்கு எடுத்து குடு. நான் மதியமா வர்றேன்!” என்று சொல்லி விவேக் சென்றுவிட்ட சில நிமிடத்தில் தீபக் வந்து சேர்ந்தான்.
“வா டா!” என்ற அர்ஜுன் அவன் வந்ததும் பணத்தை எடுத்து அவன் கைகளில் கொடுக்க,
“விரட்டுற மாதிரி பண்ற!” என்ற தீபக்,
“ஊருக்கு போறேன் டா. அதான் சார்கிட்ட பணம் கேட்டேன். அம்மாகிட்ட குடுத்தா சந்தோசப்படுவாங்கல்ல?” என்று சொல்ல,
“அம்மாவை கேட்டேன் சொல்லு டா! சீக்கிரமே இங்க வர வேண்டியது இருக்கும்னு சொல்லு!” என்றான் அர்ஜுன்.
“என்ன டா பேச்செல்லாம் புதுசா இருக்கு. ஆளும் ஜொலிக்குற?”
“ம்ம்ஹ்ம்ம்! அப்படியா?” என்றவன் முகத்தில் அகத்தின் மலர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது.
“என்னவோ சரி இல்லயே?” என்ற தீபக் கேட்டும்,
“பெருசா ஒன்னும் இல்லையே டா!” என்றவனுக்கு எப்படி சொல்வதென தெரியவில்லை. அனைத்தும் பேசி முடிவாகட்டும் என விட்டுவிட்டான்.
மாலை அனன்யாவிற்கு அர்ஜுனே அழைக்க,
“விஷயம் இப்படின்னு கேள்விப்பட்ட உடனே நீ எனக்கு கூப்பிடணுமா இல்லையா? அக்கான்னு மரியாதை இல்லையா டா உனக்கு? உனக்காக நான் தான் பேசினேன் தெரியுமா? உன்கிட்ட நான் தான் முதல்ல சொல்லணும் நினச்சேன். ஆனா லாஸ்ட் ஆகிட்டேன்!” என்றாள் அனன்யா எடுத்ததும்.
“அனு! என்ன பண்ணி வச்சிருக்க நீ?” என்று கேட்டவன் கேள்வியில்,
“ஏன் டா? உன் வாழ்க்கைக்கு ஒளி ஏத்தி வச்சிருக்கேன் தெரியல உனக்கு?” என்றாள் கிண்டலாய்.
“ஹ்ம்ம்!” என்றவன் அன்று முழுதுமே அத்தனை துள்ளலாய் தான் இருந்தான்.
“எனக்காக இன்னொரு ஹெல்ப் கூட பண்ணணுமே அப்போ நீ!” என்று அர்ஜுன் சொல்ல,
“இதுக்கு மேல என்ன பண்ணனும் உனக்கு?” என்றாள் கிண்டல் கொண்டே!
“சொல்றேன்!” என்றவன்,
“ஆமா விஜிகிட்ட பேசினீங்களா?” என்றான்.
“மாமாவும் அத்தையும் அவகிட்ட சொல்லிடுறோம் சொன்னாங்க. உன் மாமாவும் பேசுறேன் சொன்னார். அவ சின்ன பொண்ணு தான டா? வீட்டுல சொன்னா ஓகே தான்!” என்றாள் அனன்யாவும்.
“ஹ்ம்! அப்ப நான் விஜிகிட்ட பேசணும்!”
“அடடா! அர்ஜுன்! நீ தானா?” என்ற கிண்டலில்,
“அனு!” என்று அர்ஜுன் முறைக்க,
“ஹ்ம் ஹ்ம்! நீ நடத்து!” என்றவள்,
“வீட்டுக்கு வந்தே பேசேன்!” என்றாள்.
” ம்ம்ஹும்ம் வேண்டாம் அனு! நான் பேசணும். எங்கனு நீ விஜிகிட்டயே கேட்டு சொல்லு!” என்று கூறி வைத்துவிட்டான்.
விஜயலக்ஷ்மியிடம் மாப்பிள்ளை என்று அர்ஜுனை அன்னை கூற தந்தையும் உடன் இருந்தார். பேச்சுவாக்கில் சொல்வதை போல வீட்டில் அனைவரும் இருக்கும் நேரம் பொதுவாய்
“ரொம்ப நல்ல பையன். ஒரு வருஷமா பார்த்து பழகுறோம். வேற என்ன வேணும்!” என்று கலையரசி சொல்ல,
“ஆமா விஜி! உனக்கேத்த பையன் தான். அதுவும் கயல் எல்லாம் உன்னை தங்கமா பார்த்துக்கவாங்க. எங்களுக்கு பூரண சந்தோஷம்!” என்றார் சந்தானமும்.
விவேக் தங்கையைப் பார்க்க ஒரு புன்னகை கொடுத்தாள் அவனிடம். விவேக்குமே வேறெதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அவளிடம்.
விஜயலக்ஷ்மிக்கு அப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் இல்லை. படிப்பிற்காக மட்டுமே அவள் நினைத்து வைத்திருக்க, கலையரசி முடியவே முடியாது என்றுவிட்டார் ஒரே நாளில்.
அதன்பின் யாரிடம் கூறினாலும் அன்னை காதுக்கு சென்று வேண்டாம் என்ற பதில் தான் வரும் என அவள் அமைதியாகிவிட, அடுத்த பத்து பதினைந்து நாட்களில் மாப்பிள்ளையோடு நிற்பார்கள் என நினைக்கவில்லை அவள்.
அதற்கு எதிர்ப்பும் கூறவில்லை. வீட்டில் சொல்வதை ஏற்பது தானே என எதற்கும் சிரமம் எல்லாம் இல்லை அவளுக்கு.
அனன்யா வந்து அர்ஜுன் உன்னிடம் பேச வேண்டும் என்று கூற,
“ஹ்ம் பேசலாமே அண்ணி!” என்று இலகுவாய் கூறி இருந்தாள்.
அடுத்த நாள் கல்லூரியில் விழா ஒன்று நடைபெற, அது முடியும் நேரத்தை கணக்கிட்டு மதியம் கல்லூரி அருகில் உள்ள இடத்தை கூறி இருந்தாள் விஜயலக்ஷ்மி.
சரியாய் அவள் கூறிய நேரம் வந்திருந்தவன் காரின் வெளியே சாய்ந்து நின்று அவளின் வரவுக்காக காத்திருக்க, கால் மணி நேரம் தாமதமாய் வந்தவள் அவனைக் கண்டதும் அவனாருகே ஓடி தான் வந்தாள்.
“சாரி! லேட் பண்ணிட்டேனா? அப்பவே வந்துட்டீங்களா?” என்றவள் தொலைவில் இருந்து அவனை தேடியபடி அவள் வரும் பொழுதே பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
வெகு சாதாரணப் பார்வை தான் அது வெளிப் பார்வைக்கு மட்டும்.
“ஹ்ம்! இப்ப தான்!” அர்ஜுன் சொல்ல,
“சாப்பிடலாமா? மார்னிங்கே சாப்பிடல!” என்றவள் அழைப்பிற்கு, அவன் முன்னாள் கைகாட்ட தலையசைத்து முன்னே சென்றாள்.
சாப்பிட்டு முடிக்கும் வரை பெரிதாய் பேச்சுக்கள் இல்லை. அவள் எளிதாய் அவளின் இயல்பில் இருக்க, அதையும் கவனித்தவன் தானுமே இயல்பாய் இருக்க முயன்றான் என்று தான் கூற வேண்டும்.
“எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல!” சாப்பிட்டு முடித்து அமர்ந்ததும் விஜயலக்ஷ்மி கூற,
“ஹ்ம்ம்!” என்றவன் எப்படி பேச என நினைக்க,
“சடனா மேரேஜ்னு சொல்றாங்க. நான் யூஎஸ்ல நெக்ஸ்ட் மூவ் பண்ணலாம்னு ஆன்லைன்ல அப்ளை பன்னிருந்தேன். அப்பாவும் அண்ணாவும் கூட ஓகே சொல்லிட்டாங்க. அம்மா தான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. மெடிக்கல் ஃபீல்டு என் ஆசைக்காக தான் அம்மா சரினு சொன்னதே!” விஜயலக்ஷ்மி பேச கேட்டுக் கொண்டிருந்தான் தலையசைத்து.
“சொல்ல போனா அண்ணி வந்த ஃபர்ஸ்ட்ல கொஞ்சம் பயந்தேன் எப்படி இருப்பாங்களோனு!” என்று சொல்ல,
“அனுவுக்கா?” என்று சிரித்தான் அவனும்.
“ஹ்ம்! ஆமா! ஆனா அண்ணி ரொம்ப ஸ்வீட்!” என்றவள்,
“கயல் அத்தையும் அண்ணி மாதிரியே தான்! அதனால எனக்கு சந்தோஷம் தான்” என்றாள்.
“கயல் அத்தைக்காக தான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னியா?” என்றவன் கேள்வியில் விழித்தாள்.
“படிக்கணும்னு ஆசைப்பட்டதா சொல்ற! அப்போ கல்யாணம்னு சொன்னதும் வேண்டாம்னு எல்லாம் சொல்லலையா?”
“சொன்னா மட்டும் விட்டுடுவாங்களா?” என சாதாரணமாய் அவள் சொல்ல, அவனுக்கு அது சாதாரணமில்லையே!
“ம்ம்ஹும்ம்! அது அப்படி இல்ல விஜி!” என்றான் தீவிரமாய்.
“சொல்லு! இதை தெரிஞ்சுக்க தான் வந்தேன். உனக்கு ஓகேவா? கயல் அத்தை இல்ல.. நான்.. என்னை தான கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்க?”
இப்படி கேட்பான் என எதிர்பார்க்கவில்லை அவள். திருமணம் செய்ய போகும் பெண்ணிடம் பேசிப் பழக என அவன் நினைத்து வந்திருப்பதாய் தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
“ஸீ! உன்னோட சம்மதமும் விருப்பமும் தான் இங்க ரொம்ப முக்கியம்!” என்றான் எடுத்ததும் தெளிவாய்.
“ஹ்ம்ம்! ஆமா! எனக்கு ஓகே தான்!” சாதாரணமாய் அவள் சொல்லிவிட்டாலும் மனதில் அவன் தன் முடிவைக் கேட்டது ஒரு சாரலை அவன்பால் உருவாக்கி இருந்தது.
“அப்ப படிப்பு?” என்று கேட்க விழித்தாள் அவள்.
“யோசிச்சுக்கோ! வீட்டுல கூட நான் பேசுறேன்!” அர்ஜுன் சொல்ல,
“அதெல்லாம் இல்ல? கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ட்டா அம்மா யூஎஸ் அனுப்பிடுவாங்கன்னு நினச்சேன் தான். ஆனா அதுக்காக அவங்க முடிவு பண்ணின அப்புறம் அடம் பண்ணி எல்லாம்… அந்த அளவுக்கு எல்லாம் இல்லை. அவங்க ஆசையும் முக்கியம் தானே?” என்றவளை இன்னும் பிடித்தது அர்ஜுனுக்கு.
“ஹ்ம்ம்! அப்ப ஓகே! மேரேஜ் அப்புறம் ஸ்டடீஸ்ன்றது…!” என்று இழுத்தவன்,
“ஓகே! யுவர் விஷ்!” என்று முடித்தான் சில எண்ணங்களில் சிவக்க இருக்கும் முகத்தை தெளிய வைத்து.
“போலாமா?” அர்ஜுன் கேட்க, அந்த முதல் பயணம் தான் விரும்பியவளோடு அத்தனை ரசித்து அவளை அழைத்து வந்தான் அவள் வீட்டிற்கு.
அடுத்த ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் என்ற அளவில் பேச்சுக்கள் வந்துவிட்டது வீட்டினில்.
இருவருமே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள். அதனாலேயே பேசிக் கொள்ள சிறு தயக்கம். அலைபேசி வாட்சப் பேமிலி குரூப்பில் இருந்த இருவரின் எண்களும் இருவர் அலைபேசியிலும் பதியப்பட்டது. ஆனாலும் அழைத்துக் கொள்ளவோ செய்தி அனுப்பிக் கொள்ளவோ இல்லை.
நிச்சயம் முடியட்டும் என அர்ஜுன் நினைத்திருக்க, விஜயலக்ஷ்மி அனன்யாவின் அர்ஜுன் புராணம் கேட்டுக் கொண்டிருந்தாள் அடுத்த இரண்டு நாட்களும்.
கிண்டல் எல்லாம் இல்லை. பொதுவாய் வீட்டில் பெரியவர்களும் இருக்கும் நேரம் அர்ஜுன் பற்றிய பேச்சுக்கள் அனன்யாவிடம் அதிகம் இருந்தது திருமணப் பேச்சு உறுதியான பின்பு.
நிச்சயத்திற்கு மூன்று நாட்கள் முன்பு அனன்யாவைக் காண என பழங்களை வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் ப்ரணித்தா.
அர்ஜுன் கூறி இருந்தான் நிச்சய தினத்தை.
“பேசுனீங்களா மாமா? ஒருவேளை அவங்க வீட்டுல கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வச்சிருக்க போறாங்க!” என ப்ரணித்தாவே அழைத்து அர்ஜுனிடம் கேட்க,
“இல்ல ப்ரணி! அவ ரொம்ப கிளியரா இருக்கா. படிக்கணும்னு ஆசை இருக்கு. அதுக்காக பேரண்ட்ஸ் பேச்சை கேட்க மாட்டேன்னும் சொல்லல. மேரேஜ்க்கு அப்புறம் அவ இஷ்டம். அப்ப பாத்துக்கலாம்!” என்று இத்தனை எளிதாய் அவன் முடித்துக் கொள்வான் என ப்ரணித்தா நினைக்கவில்லை.
அதுவும் தனியாய் அவளோடு வெளியில் சென்று பேசியதாய் சொன்னதற்கே நெஞ்செல்லாம் விஷமாய் எரிந்தது ப்ரணித்தாவிற்கு.
அடுத்து கயல்விழியைப் பார்க்க என அவள் வருகை தர அவருமே விஜயலக்ஷ்மியை ஆஹா ஓஹோ என பேசியதில் இன்னுமாய் வன்மம்.
நிச்சய தேதி கூறவுமே அதற்கு மேல் அமைதியாய் இருக்க முடியாமல் வந்துவிட்டாள் விஜயலக்ஷ்மியைத் தேடி.
தொடரும்..
error: Content is protected !!