‘ஒண்ணும் இல்ல பா.’ என்பது போல் தலையசைத்தவள் முகத்தில் இழைந்தோடும் புன்னகை அவருக்காக அவள் சிந்துவது என்பது அவருக்குத் தெரியாதா என்ன? “சரி மா” என முடித்துக் கொண்டார் அரவிந்தன்.
ஏன் அப்படி ஒரு கேள்வி என அவளும் கேட்கவில்லை, ஏன் அப்படி ஒரு முகபாவம் என அவரும் கேட்கவில்லை. அவரவர் நத்தை கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டனர்.
இரயில் நடைபாதையில் அமர்ந்திருந்த இருவரும் மீண்டுமாக அவரவர் உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர். வேக நடை போட்டு ஓடும் மனிதர்களும், ஏன் நடக்கிறோம் என்ற களைப்பும் சோம்பலுமாக நடக்கும் மனிதர்களும் என இருவகை ஜனங்களையும் பார்த்து அமர்ந்திருந்தார் அரவிந்தன். அரவிந்தன் இரண்டாம் வகைக்குள் அடங்கி வருடங்கள் இரண்டு ஆகிவிட்டதால் வேக நடை போடுபவர்களை ஆர்வமாகப் பார்த்தார்.
சென்னையில் எங்கும் எப்பொழுதும் கூட்டமும் வேகமும் இருக்கத் தான் செய்கிறது. வேக வேகமாக ஓடியும் இவர்களால் நேரத்திற்கு எங்கும் செல்ல முடிவதும் இல்லை, நேரத்திற்கு எதையும் செய்ய முடிவதும் இல்லை. பின் ஏன் இந்த ஓட்டம்? எதை நோக்கி இத்தனை அவசரம்? ஒரு நாளாவது இவர்களுக்கு நின்று அவர்கள் தோட்டத்து மலரை நுகர நேரம் கிடைத்திருக்கிறதா? தீரா தேடல்… நிற்காத ஓட்டம்! ஓடும் மனிதர்களை அமைதியாகப் பார்த்து அமர்ந்திருந்தார் அரவிந்தன்.
நின்றிருந்த இரயில் கிளம்ப தயாரானது. இது கிளம்பிய பின் இவர்களுக்கான இரயில் வரும் என்பதால் கிளம்ப தயாராகும் இரயிலில் கவனம் செலுத்தாதவளின் கவனத்தை ஈர்த்தாள் அந்தப் பெண். ஓடி சென்று ரயிலில் ஏறிய இளம் பெண் மூச்சுவாங்க, “பை பா… பை மா. லீவுக்கு வரேன். லவ் யூ ண்ணா” எனக் கையசைத்தாள்.
செல்லும் மகள் மீண்டும் பத்திரமாக வருவாள் என்ற நம்பிக்கையில் அவர்களும் சிரித்த முகமாகக் கையசைத்தனர். “பை டி”, அண்ணன் முத்தம் ஒன்றைப் பறக்க விட்டான். பதில் முத்தம் ஒன்றைப் பறக்கவிட்டவள், “அண்ணிய எனக்கு பிடிச்சு இருக்கு ஓக்கே சொல்லிடு” என சிரித்தாள்.
இவனும் மீசையை வருடுவது போல் புன்னகையை கைக்குள் மறைத்து, “போடி” என்றான் செல்ல அதட்டலோடு. “கல்யாணத்துக்கு நாள் ஃபிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க. ஓடி வந்துடுறேன்” என்றாள் பெண்.
இரயிலைப் பார்த்து அமர்ந்திருந்த யசோவின் கண்கள் தேவையே இல்லாது நகரும் இரயில் பெட்டிகளின் ஒவ்வொரு வாயிலையும் தவிப்போடே பார்த்தன.
“ஃப்ரென்சோட கடைசியா ஒரு டிரிப் போய்ட்டு வரேன்.” எனக் கன்னம் தட்டிச் சென்றவன் வரப் போவதில்லை என தெரிந்தும் பார்வையை அலையவிட்டாள்.
“இதுக்கு அப்பறம் நம்ம ஹனிமூனுக்கு தான் அடுத்த டிரிப். கோபப்படாத… ஒரே ஒரு வாரம். வந்துடுவேன்.” என்று கூறிச் சென்றவன் வாக்கை அப்படியே நம்பினாள்.
இரண்டு வருடங்கள் நத்தையென நகர்ந்தாயிற்று. அவளும் நகரும் எண்ணத்தோடு நத்தையின் வேகதைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறாள்.
‘ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ.. ஓ..
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ …
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ
பா..வம் ரா..தா’ காதில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
யசோவும் பாவமாகத் தான் தெரிந்தாள் அவளைப் பார்த்த தகப்பன் கண்களுக்கு. மகள் உயிராய் நேசித்த ஜீவன்கள் திரும்பி வரமுடியா தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள் என மகள் புரிந்து கொண்டதோடு, இழப்பையும் ஏற்றுக் கொண்டாள் என்றாலும் அவள் முகத்தில் அவ்வப்போது ஏற்படும் தவிப்பு மட்டும் மாறாது நிலைத்து நிற்கிறது.
கைப்பேசி ஒலித்தது. நேரம் பார்த்தாள்… இன்னும் தூங்கலையா என நினைத்துக்கொண்டே காணொளியை உயிர்ப்பித்தாள். பால் பற்கள் மின்னச் சிரித்தான் குழந்தை ஆத்விக்.
“கிளம்பிட்டியா யஷோ?”
மான்வியின் கேள்விக்கு ஆம் என்பதாகத் தலை அசைத்தாலும் கண்கள் அவள் மடியில் அமர்ந்திருந்த ஆத்விக்கைத் தழுவியே நின்றது.
குழந்தை தன் கரம் நீட்டி திரையில் விரிந்த புன்னகையோடு இருந்த யசோவை அடித்தான்… சிரித்தான்… ஏதேதோ மழலையில் கதைத்தான். யசோவின் விழிகள் குழந்தையை வாஞ்சையோடு வருடின.
குழந்தையின் உறங்கும் நேரம் தாண்டிவிட்டிருக்க, ‘தூங்கு’ என்பதாக கை அசைத்தாள் யசோ.
மாட்டேன் என்பது போல் தலை அசைத்தான் குழந்தை.
“அது தானே… சார் தூங்கிட்டாலும்” எனச் சிரித்தாள் மான்வி. “ரொம்ப பண்றான் இந்த வாலு பையன். உன்ன ரொம்ப தேடறான்.” என்றாள்.
புன்னகைத்தாள் யசோ.
“டாடா சொல்லு… படுப்போம்” குழந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மான்வி. மூன்று மாதங்கள் முன்பே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடலாம் என முடிவெடுத்த பின்னும் இரவு தூக்கத்திற்கு யசோவின் மார்பைத் தேடுவதை விடவில்லை குழந்தை. தள்ளி இருந்தால் பழக்கம் மாறிவிடும் என்றனர். அதை கடைப்பிடிக்கக் குழந்தையை விட யசோவிற்குத் தான் கடினமாக உள்ளது.
ஆத்விக்கின் கண்கள் சொருக ஆரம்பித்தன.
‘தூங்கு’ என மீண்டும் யசோ செய்கை செய்து, ‘டாடா’ எனப் புன்னகை முகமாக முடித்தாள்.
கைப்பேசியில் இருந்து பாடல்கள் மீண்டும் காதுக்குள் ஒலிக்க ஆரம்பித்தது. அதை அணைத்து நேரத்தைப் பார்த்தாள். தெரிந்த முகங்களைக் கூட்டத்தில் தேடி ஓய்ந்தாள்.
“யசொ மா”
‘அப்பா?’ பார்வை அப்பாவின் பக்கம் திரும்பியது.
“பத்திரமா போயிட்டு வரணும். போய் சேர்ந்ததும் காள் போடு. அப்பறம் அங்க இருந்து கிளம்பும் போதும்… சரியா? ஃபீவர்… சளி மருந்து எடுத்து வச்சிருக்க தானே? இந்த சீசன்ல பெங்களூர்ல நினைச்சா மழை பெய்யுமாம். அதுனால குடை இல்லாம வெளியில போகாத. புதுசா பழகிற யாரையும் சட்டுன்னு நம்பி அவங்களோட எங்கயும் தனியா போயிடாத…” என நூற்று ஓராவது முறையாக மகளுக்கு அறிவுரை அளிக்க ஆரம்பித்தார் அரவிந்தன்.
எல்லாவற்றிற்கும் மகள் நன்றாகவே தலை அசைத்தாள். ஏழெட்டு மாதங்களாகவே இப்படித் தான் தலை ஆட்டுகிறாள். சுற்றம் உணர்ந்த பின்… தன்னை உணர்ந்தபின், இப்படி தான் தலை ஆட்டுகிறாள். கடந்து வந்த பாதை முழுவதும், எந்த முக சுணக்கமும் இல்லாது தன்னை தாங்கி நின்ற தகப்பனிடம் தலையாட்டாது இருக்க முடியவில்லை யசோவால்.
“பத்திரமா இருந்துடுவ இல்லமா?” அப்பா அங்கலாய்த்தார். அவரின் பதற்றம் உணர்ந்தவளாய் மெல்ல அப்பாவின் கரம் பற்றி அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். மகள் இசைக் கச்சேரிக்காக வெளியே தங்க இருப்பதால் தந்தைக்குப் பயம் பிடித்துக் கொண்டதின் விளைவே இந்த அறிவுரை. வாய் பேச முடியாத மகள் என்ன செய்வாளோ என்ற பயம். அவசியம் இல்லாத பயம் என்று அரவிந்தனுக்கு புரிந்தாலும்… தந்தை ஆகிற்றே!
யசோதராவின் மனநிலைக்கு இசை நல்லது என பரிந்துரைக்கபட்டதும், குணமாகிக் கொண்டிருந்த மகளை இசைக் கல்லூரியில், இரண்டு வருட டிப்ளமோ கோர்சில் சேர்த்துவிட்டார் அரவிந்தன். அனைத்து விதமான இசைக் கருவிகளையும் முதலில் பரிச்சயம் செய்தனர்.
அந்த முதல் ஆறு மாதங்களில், அவளோடு சுற்றித் திரிந்த வகுப்புத் தோழர்கள் வயலின், செல்லோ, கிட்டார் என நரம்பு இசைக் கருவிகளை தேர்ந்தெடுக்க இவளும் அதன் பக்கம் தன்னை ஈடுபடுத்த முயன்றாள். செல்லோ எடுத்துப் பயில முயன்று தோன்றாள். வயலினை வாசித்தாலும், மனம் அதில் லயிக்கவில்லை. கீ போர்டில் விரல்கள் விளையாட மறுத்தன.
முன்ஜென்ம விட்ட குறை தொட்ட குறை என்பது போல் புல்லாங்குழலுக்கும் யசோவை பிடித்தது போல. இவளைப் புல்லாங்குழல் கவர்ந்து இழுத்தது. வேண்டாம் என அதைவிட்டுத் தள்ளி நின்றாலும், ‘வாயேன்… என்னை தொடேன்… எனக்குள்ளாக ஊதித்தான் பாரேன்’ என இவளை தன்னை நோக்கி இழுத்தது.
யசோதராவின் இதழ்கள் குவிந்து பிராண வாயுவை ஊத… விரல்கள் புல்லாங்குழல் துவாரங்களில் நளினத்தோடு விளையாட அந்தக் குழல் எழுப்பிய ஓசையைக் கேட்டவர்கள் தங்களையும் மறந்து நின்றனர்.
அப்படியான ஒன்று தான் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் நடந்தது. அன்று, விகான், ‘காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே’என்ற பாடலின் பின்னணி இசையைக் கையாள, அதற்கு யசோ புல்லாங்குழலை வாசித்தாள்.
தன் ஜீவனின் ஒரு பாதியை தொலைத்தவள் அதைத் தேடி தன்னையும் இழந்தவளாய் தன் ஒட்டு மொத்தச் சோகத்தையும் மூச்சுக் காற்றின் வழி வெளியனுப்ப, புல்லாங்குழலுக்கும் அவள் சோகம் புரிந்தது போலும், அவள் ஏக்கத்தை… தேடலை… சோகத்தைச் செவ்வனே கேட்டு கொண்டிருந்தவர்களுக்குள் இறக்கியது.
காதை பிளந்து கொண்டு, ‘நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே; முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்‘ என மனதின் அடியாழம் வரை இறங்கும் யசோவின் வாசிப்பில் உருகவில்லை என்றால் அவனுக்குக் காது கேளாது என்றே அர்த்தம்.
தன் உடன் பிறப்பு விகான் மூலமாக யசோவின் மனதை உருக்கும் இசையைக் கேட்ட பிரபு, யசோதராவை தன் ‘ஏழு ஸ்வரங்கள்’ இசைக் குழுவில் ஏழாவது நபராகச் சேர்த்து கொள்ள விருப்பம் கொண்டான். மாட்டவே மாட்டேன் என நின்றவளை விகான் பேசி பேசியே கரைக்க முயன்று தோற்றதும், “சொல்லுங்க அங்கிள் இது பெரிய வாய்ப்பு இல்லனாலும் அவ டேலன்ட்ட வெளி உலகுக்கு காட்ட உதவும்.” என அரவிந்தனை துணைக்கு அழைத்தான்.
“நம்மள விட்டு போனவங்களோட நம்ம வாழ்க்கை முடியறது இல்ல யசோ மா. இப்படியே நீ இருக்கனால போனவங்க வருவாங்கன்னா சொல்லு… காத்திட்டு இருக்கலாம். பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்புன்னு ஒண்ணு இருந்து தானே ஆகணும் யசோமா.
நடந்திருக்கக் கூடாது தான். ஆனாலும் நடந்திடுச்சு. சில கடினமான இழப்ப தாங்கி… வெளி வந்தே ஆகணும். இல்ல நம்ம வாழ்க்கையோட சேர்த்து நம்ம கூட இருக்கவங்க வாழ்க்கையும் நரகம் ஆகிடும்.
நத்தையா சுருண்டு இருந்தா எப்படி வெளிவருவ? உன்னையே மறக்கடிக்கிற மாதிரி ஏதாவது செய். முதல்ல கஷ்டமா தான் இருக்கும். கொஞ்ச நாள்ல அது உன்னை முழுசா இழுத்துக்கும். காலத்துகிட்ட வலிய குறைக்கிற மருத்து இருக்கு யசோமா. மாசங்கள்… ஏன் வருஷங்கள் ஆகலாம் நம்ம காயத்தோட வலி குறைய. அத நாம ஆறவிட்டா தான் அது ஆறும். நடந்ததையே நினைச்சு நினைச்சு உன் காயத்த நீயே கீறி விட்டுட்டு இருந்தா அது எப்படிக் காயும் யசோ?
எனக்கு நீ இருக்க. உன் முகத்த பார்த்து அப்பா வாழ்ந்துடுவேன். உனக்கு? இந்த புல்லாங்குழல் உன் வலிய குறைக்கும்ன்னா அத பிடிச்சுக்கோயேன். அது உனக்கு நிம்மதியோட சேர்த்து சோறும் போடும்ன்னா ஏன் அத நீ முழு நேரம் செய்யக் கூடாது?
உன் மேல விழுற அடினால நீ கீழ விழலாம் யசோமா. விழுந்தே கிடக்கக் கூடாது. எழுந்து நிக்கணும். உன் அம்மா இல்லாத ஒரு வாழ்க்கைய நான் நினைச்சதே இல்ல. ஆனாலும்… இருக்கேன். என் பிடிமானமா உன்ன பிடிச்சிருக்கேன். நீயும் ஏதாவத பிடிமானமா பிடிச்சு எழுந்து நிக்கணும் யசோ. உனக்கு ஒரு திறம இருக்கு. அது அபாரமா இருக்கு. உன் திறமைக்கான அங்கிகாரம் கிடைச்சா இன்னும் இன்னும் முன்னேற வைக்கும். உன் காயத்த ஆறவிடு யசோ.
அப்பா சொன்னத யோசி மா. உனக்கு சரின்னு பட்டுதுன்னா அந்த தம்பிட்ட பேசு.” என அன்று அரவிந்தன் பேசியது பெண்ணிற்குள் சென்றதோ இல்லையோ அப்பாவின் நிம்மதிக்காக யோசித்தாள். எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது எனத் தெரியாதவளும் எதையேனும் நோக்கிச் செல்ல வேண்டுமே… அதைக்கொண்டே ‘சரி’ என ஒப்புக் கொண்டாள்.
சென்னைக்குள் நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சி என ஆரம்பித்தவள் தன் எல்லையை விரித்திருந்தாள். இது தான் அவளில் முதல் வெளியூர் பயணம் என்பதால் அரவிந்தனுக்குள் படபடப்பு.
“நீ பத்திரமா இருந்துடுவ மா. அப்பாக்கு தெரியும்” என அவருக்கே ஆறுதல் உரைத்துக் கொண்டார். பேச முடியா மகளைப் பொத்தி வைத்துக் கொள்ள ஆசை தான். ஆனால் தனக்குப் பின் அவளை அவள் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தகப்பனாய் சற்று விலகி நிற்கிறார். இசைக் குழுவினர் ஒவ்வொருவராக இரயில் நிலையம் வந்தடைந்தனர். “நாங்க இருக்கோம் அங்கிள்” என அரவிந்தனோடு பேசி அவரை சமாதானம் செய்தான் சித்தார்த்.
‘நீங்களும் பத்திரம். நேரத்துக்கு சாப்பிடணும். மறக்காம மாத்திர போட்டுக்கணும். ஒழுங்கா தூங்கணும்’ என மகள் தகப்பனுக்குக் கையசைத்து அறிவுரை கூறினாள். அவரும் சமத்தாக அனைத்திற்கும் மண்டையை ஆட்டி வைத்தார்.
கையில் இருந்த அந்தப் பழைய டைடன் ராகாவில் நேரம் பார்த்தவள், ‘நடு ராத்திரி ஆகதுக்குள்ள கிளம்புங்க அப்பா’ எனச் செய்கை செய்தாள்.
“விசாகன் வரேன்னு சொல்லி இருக்கான் மா. நீ நிம்மதியா போயிட்டு வா” என மகளின் கேசம் வருடினார்.
‘பத்திரம் பா’ எனக் கூறி நண்பர்களோடு இரயில் ஏறினாள் யசோ. முன்பு போல் அப்பாவின் இதயம் பலவீனமாக இல்லை என்றாலும் தனியே விட்டுச் செல்ல யசோவிற்கு பயம். சென்ற முறை அப்பாவிற்கு வலி வந்த போதும் இவள் இருந்தும் இல்லாத நிலை தானே.
அதனாலேயே இனி அப்பாவை விட்டு விலகக் கூடாதென்றும், அவர் சங்கடப்படும் நிலைக்கு அவரை தள்ளக் கூடாதென்றும் முடிவெடுத்தாள். முதல் முடிவை அரவிந்தன் உடைத்து, ‘போ.. போய் உலகைப் பார்’ என விரட்டி விட்டார்.
மகளின் இரயில் புரப்பட்ட பின்னும் அவர் அங்கேயே அமர்ந்திருந்தார். மகளில்லா வீட்டில் எப்படி இருப்பது எனத் தெரியவில்லை. பெண்ணை பெற்றவர் இப்படி யோசிக்கலாமா? மனம் கேட்ட கேள்வியில் சோர்ந்தே போனார்.
பேசமுடியாது என்பது மட்டுமே திருமண வாழ்விற்குப் பெரிய தடங்கலாக இருக்க, மகள் திருமணம் முன்பே தாயாகிவிட்டது அவளின் நல்ல எதிர்காலத்திற்கு எத்தனை பெரிய முட்டுக்கட்டை? பிள்ளைகள் யோசிக்காது செய்யும் செயல்கள் எங்குக் கொண்டு அவர்களை நிறுத்துகிறது? இதெல்லாம் போதாதென்று ஒரு வருட காலம் மகளின் மனநலன் பிழறியிருந்தது வெளியே தெரிந்தால்? மனிதனுக்கு இதை எல்லாம் நினைத்தே நித்தம் தூக்கம் பறி போனது.
மகளின் எதிர்காலம் பற்றி தகப்பன் யோசித்துக் கொண்டிருக்க, அவள் மனமோ இறந்த காலத்தையே அசைபோட்டு… இல்லை இல்லை அதற்குள் மூழ்கி இருந்தது.
இரவு பயணம் என்றதால் பெட்டியின் உள்ளேயும் வெளிச்சம் அணைக்கப் பட்டிருந்தது. இரயிலுக்கு வெளியே இருள் சூழ்ந்திருந்தது. இருளில் நிழலாய் தெரிந்த மரங்களுக்குப் பின் மறைவதும் தெரிவதுமாக கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தாள் நிலவரசி.
சம்பந்தமே இல்லாது “அடுத்த பௌர்ணமிக்கு… சத்தியமா!” என்ற சத்தம் காதுக்குள் ஒலித்தது. சத்தியங்களை உடைப்பதில் அவனை மிஞ்ச ஒருவரும் இல்லை என்பதை அறிந்தும் ஒவ்வொரு முறையும், “பிராமிஸ்?” என கரம் நீட்டி நின்றதின் காரணம் என்ன?
இதோ வந்து விட்டேன் என ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த நிலா, காணாதே போனது. கரு மேகம் வானை இருளாக்கியது. இலேசான தூரல் திறந்திருந்த ஜன்னல் வழி உள்ளே நுழைந்து ஓரம் அமர்ந்திருந்தவள் மீது மோதியது.
உறங்காது பேசிக் கொண்டிருந்த இசைக் குழுவிற்குப் பாட ஆசை பிறந்தது. பிரபு மெல்லிய குரலில், “பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்” எனப் பாட ஆரம்பிக்க, “மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே; மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே” என சிந்துஜாவும் இணைந்து கொண்டாள்.
பாடலும் மழையும் யசோவை தன்னுள் இழுத்துக் கொண்டது. இந்த மழையை ரசிக்காதவர்கள் யாரேனும் உண்டா? அவனுக்கும் யசோவிற்கும் கூட இந்த மழை ஸ்பெஷல் தான். சாலையில் கரம் கோர்த்துச் சென்ற அன்றும் சாரல் தானே யசோவை அவன் கரத்திற்குள் தள்ளியது. பன்னீர்ப் பூக்களின் மேல் வீற்றிருந்த அந்த மழைத்துளிகள்… அது சுமந்து வந்த ஏகாந்த மணம்… அதனோடு அவனின் இதமான அணைப்பு…
‘துக்கமாக இருக்கும் வேளை உங்கள் இதயத்தைக் கவனித்தால் தெரியும், ஒருகாலம் உங்களை மகிழ்வித்ததே இன்றைய உங்கள் துக்கத்தின் காரணம் என்று.’ ஹலீல் ஜிப்ரான் வரிகளில் தான் எத்தனை உண்மை! அன்று ருசித்தெல்லாம் இன்று கனக்கின்றது.
கண்களை மூடி ஜன்னலில் சாய்ந்து கொண்டாள் யசோ. ‘பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ அவன் குரல் உள்ளுக்குள் ரீங்கரமிட்டது. முகத்தில் குளிர்ந்த நீர்த் துளிகளோடு அவனின் வெம்மையாக இதழ்கள் மூடியிருந்த இரு இமைகளையும் மென்மையாகத் தீண்டி விலகியது. அன்று போல் இன்றும் யசோவின் உடல் சிலிர்த்தது. கண்களில் ஆரம்பித்த வெம்மை உடல் முழுவதும் பரவியது. அன்றைய நினைவுகள் கனவுகளாக யசோவை நிறைத்தது.
“தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ” சிந்துஜாவும் கண்மூடி ரசித்துப் பாடிக் கொண்டிருந்தாள்.
“உன்ன பாக்க தான் ஓடி வந்தேன்” என அவன் அவளை மழையோடு அணைக்க, “ரொம்ப ஸ்பீட ஓடி வந்திட்ட?” எனக் கோபமாக்க கேட்டாலும் அவன் வந்ததில் அவளுக்கு அப்படி ஒரு பூரிப்பு. அவள் கோபித்துக் கொண்டால் அவனுக்குத் தாங்காது. அவளுக்கும் அவன் மேல் கோபத்தைப் பிடித்து வைக்கத் தெரிந்ததில்லை. இப்பொழுதும் கோபித்தால் வருவானா?
“போகும் போது முகத்த நாலு முழம் நீட்டி வச்சுட்டு, எனக்கு பை கூட சொல்லல. அந்த கன்றாவி சிடுமூஞ்சி முகத்த நினைச்சுட்டே என்னால தூங்க முடியல. அதுதான் வந்துட்டேன். சொல்லு… கோபம் போச்சா?” என கொஞ்சிக் கொண்டிருந்தவனை ‘என்ன கோபம்’ எனப் பார்த்தாள்.
அவன் என்று வந்துவிட்டால் அவ்வளவு தான் அவள் கோபத்தின் ஆயுசு. தன்னை ஒரேயடியாகத் தனியே விட்டுச் சென்றவன் மேல் கோபம் வந்தது நிஜம். ஆனால் இன்று கோபம் இல்லை. இல்லாதவன் மீது கோபம் கொண்டு என்ன பயன் என்ற தெளிவு வந்து விட்டதோ என்னவோ?
மேகம் கலைய, நிலா மெல்ல எட்டிப் பார்த்தாள். எந்த உணர்வுமே இல்லாது அதைப் பார்த்திருந்தாள் பெண்.