14-2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 14-2
.
Advertisement
“யசோ… நீ ஃபுளூட் வாசியேன்… இந்த மழைக்கும் அதுக்கும் சுகமா இருக்கும்” என்றான் சித்தார்த். பெண்ணின் மீது உடன் பிறப்பைக் காட்டிலும் அதிக பாசம் கொண்டவன் என்பதால் சித்தார்தின் கோரிக்கைகளை யசோதரா நிராகரிப்பதே இல்லை.
Advertisement
‘பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
Advertisement
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்’ என ஆரம்பித்தவளோடு விகான் பாட ஆரம்பித்தான்.
‘எங்கே எனது கவிதை’ எனக் காற்றோடு கலந்துவிட்ட காதலனை எண்ணி குழல் படித்தாள் யசோ.
Advertisement
‘ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் ஏங்குதே’ ஏங்கிய யசோவோடு புல்லாங்குழலும் ஏங்கித் தவித்தது.
‘முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே’ நிறைவேற வழியே இல்லை எனத் தெரிந்தும் மனம் ஆசை கொண்டு சுணங்கியது.
கண்மூடி யசோ வாசித்துக் கொண்டிருக்க, உயிரை மீட்டும் அந்தப் புல்லாங்குழலின் இசை பலரின் கைப்பேசிக்குள் அடங்கியது.
மழைச் சாரல், சூடான தேநீர், இசை, அரட்டை, ‘தூங்க விடுங்க பா’ என்ற கோரிக்கை… அதட்டல், தூக்கம், என அன்றைய இரயில் பணம் ஒரு முடிவுக்கு வந்தது. விடியலில் தங்கள் வாத்தியங்களோடு பெங்களூரு வந்து சேர்ந்தனர் அந்த ஏழு நபர்கள் கொண்ட இசைக் குழு.
முழுக்க முழுக்க பிரபுவின் உழைப்பால் உருவாக்கப்பட்ட இந்த இசைக்குழு, விழாக்கள் மற்றும் திருமண வரவேற்புகளில் தங்கள் திறமைகளைக் காட்டிவந்தனர். சமூக வலைத்தளங்களின் உதவியோடே பிரபலமாகிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததும் அதன் மூலமே.
அவர்களுக்காக முன்பதிவு செய்திருந்த ஹோட்டல் அறைக்குள் புகுந்து கொண்டனர். நிகழ்ச்சி நடக்கவிருக்கும் இடம் சென்று அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஒரு நாள் முன்பதாக வந்திறங்கியிருந்தனர்.
மேடை அளவு, ஒலி அமைப்பு, மின்சார இசை கருவிகளுக்கான இணைப்பு என அவர்கள் கேட்டிருந்ததிற்கு ஒரு பங்கு அதிகமாகவே ஏற்பாடுகள் நடந்தேறிக் கொண்டிருக்க, பிரபு கூறிய சிறு சிறு மாற்றங்களையும் ஏற்பாடு செய்து தருவதாக மேற்பார்வையாளர் முகம் சுழிக்காது கூறவும் திருப்தியோடே கிளம்பினர்.
“என்ன டா இங்க நமக்கு வேலையே இல்ல. பெரிய இடத்து கச்சேரின்னா இது ஒரு வசதி இல்ல? சரி இப்போ என்ன பண்றது?” ஷர்வன் கேட்க,
“ம்ம்… மணி பத்து தான் ஆகுது. ஈவ்னிங் ஆறாகிடும் இடம் ரெடி ஆக. நாம ஒரு ஏழு மணிக்கா வந்து ரிகர்சல் பார்த்தா போதும். மால்… ஷாப்பிங் போறவங்க கிளம்புங்க. ஹோட்டல் வரவங்க ஆறு மணிக்கு வந்திடுங்க, நேரா இங்க வரதா இருந்தா ஏழு மணிக்குள்ள வந்திடுங்க. எல்லாருக்கும் ஓக்கே தான?” எனப் பிரபு பார்க்க அனைவரும் சரி என்பது போல் தலையசைத்தனர்.
“நானும் விகானும் அக்கா வீட்டுக்கு போறோம். யாரெல்லாம் வர்றீங்க?” என்ற பிரவுவோடு அனைவரும் கிளம்பத் தயாரானர். மதிய உணவு வரை அங்கேயே அரட்டை கச்சேரி அரங்கேறியது. பிசிபெல்லாபாத்தோடு உருளை வருவல், வெங்காய ரெய்தா, சோறு, ரசம், தயிர் சாதம் எனச் சுலபமாகச் செய்யும் வகைகளைச் செய்து அனைவர் வயிற்றையும் தமக்கை நிரப்பிவிட்டார்.
சுட சுட செய்து கொடுத்த தேங்காய் போலியோடு அக்கா வீட்டில் தம்பிகள் தங்கிவிட மற்ற ஐவரும் ஊர் சுற்ற என கிளம்பிவிட்டனர்.
“யசோ பத்திரம் டா சித்து” எனப் பிரபு யசோதராவின் பொறுப்பை சித்துவிடம் ஒப்படைக்க, ஸ்வர்ணாவிற்கு எரிச்சலாக வந்தது.
“எனக்கு ரொம்ப நாள இங்க இருக்க ஆஞ்சனேய கோயிலுக்கு போகணும்ன்னு ஆசை வரிங்களா?” என ஸ்வர்ணா கேட்க, ஷர்வனும் சிந்துஜாவும் “ஆள விடு” எனக் கிளம்பி விட்டனர். சித்து “போலாமா?” என யசோவை பார்க்க, அவளும், ‘சரி சித்து’ என அவர்களோடு கிளம்பத் தயார் ஆனாள்.
அனைத்திற்கும் இவள் அனுமதியைப் பெற்று தான் செய்வானாமா என்ற எரிச்சல் ஸ்வர்ணாவின் நிம்மதியைக் களைந்து மாதங்கள் பல ஆகிறது என்பது செய்தி.
எல்லாம் சரியாகத் தான் சென்றது ஆலயத்தின் முன் வரும் வரை. அந்தப் பாறை மீது வீற்றிருந்த கோயிலைப் பார்த்த யசோவிற்கு தொண்டைக் குழி அடைத்துக் கொள்ள, ஸ்வர்ணாவின் கைபிடித்து நிறுத்தியவள், தான் ஹோட்டல் செல்லவதாகக் கூறிக்கொண்டு கிளம்பிவிட்டாள். ஏனோ அந்தக் கோயில்… அந்தச் சூழல்… அந்தக் கூட்டம், அவளைக் கலவரப் படுத்தியது. கிடைத்த பேருந்தைப் பிடித்து அங்கிருந்து கிளம்பினாள் பெண்.
முன்னே சென்றுவிட்ட சித்துவின் அருகே ஸ்வர்ணா தனியே வரவும், “யசொ… யசோ எங்க?” என பதறினான். அவளுக்காக அவனின் பதற்றம், சுத்தமாக ஸ்வர்ணாவிற்கு பிடிக்கவில்லை. தன் மீது அக்கறை காட்டிய சித்துவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்ட யசோவை ஸ்வர்ணாவிற்கு சுத்தமாக பிடிக்காது என்பதால், “அவ ஒண்ணும் குழந்தையும் இல்ல. நான் அவ பேபி சிட்டரும் இல்ல” என்றாள் சலிப்பு தட்டிய குரலில்.
அவளை ஏற இறங்கப் பார்த்தவன் எரிச்சலோடே, “உன்ன நம்பின என்னை சொல்லணும்” என வெளியே ஓடினான். ஆனால் அவளை அங்குக் காணவில்லை. மொழி தெரியா ஊரில் வாய் பேச முடியாத பெண் என்ன செய்வாளோ என மனம் அங்கலாய்த்தது.
‘ஏய் யசோ… தனியா எங்கப் போன? நானும் வரேன். எங்க இருக்க?’ என சித்து குறுந்தகவல் அனுப்ப, ‘பஸ்ல இருக்கேன். ஒரு பிரச்சனையும் இல்ல. என் சைல்ட்ஹுட் ஃப்ரெண்ட், பார்வதிய பஸ்ல பார்த்தேன். அவ கூட இருந்துட்டு, ஏழு மணிக்கு நேரா ரிகர்சல் வந்திடுறேன். சிந்துகிட்ட கேட்டு ரூம் போய் என் ஃபூளூட்ட மட்டும் எடுத்துட்டு வந்திடு பிளீஸ்’ எனப் பதில் அளித்தாள்.
உயர்த்திய கட்டை விரலோடு ‘டன்’ என்ற தகவலை அனுப்பி வைத்தான் சித்தார்த்.
“அதுக்குள்ள உன்ன தேட ஆளா?” என சிரித்த பார்வதி, “எப்படி மாறிட்ட… சட்டுன்னு அடையாளமே தெரியல. நீ வந்து கை பிடிக்கவும் யாரு இந்த பொண்ணுன்னு சத்தியமா நினைச்சேன். எத்தன வருஷ ஆச்சு உன்ன பார்த்து?” எனப் பார்வதி விரல் விட்டு எண்ணவும், யசோ ‘ஐந்து’ என விரல்களை விரித்துக் காட்டினாள்.
“ஆனாலும் நீ இப்படி மாறியிருக்க வேணாம் டி யசோ… ஸ்கூல் படிக்கும் போது கிள்ள சதை இல்லாம ஒல்லிக்குச்சியாட்டம் இருந்த. இப்போ பாரு கொழு மொழுன்னு… கோவில் சிலை மாதிரி செழிப்பா… ரொம்ப தான் அழகாயிட்ட.” என கன்னம் வருடி பார்வதி ஸ்லாகிக்க, தாய்மையால் வந்த மாற்றம் என எப்படி இவளிடம் கூறுவது? தனக்கென கணவனும் இல்லை அவன் கொடுத்ததும் இல்லை எனும் போது இவளிடம் எப்படிக் கூறுவது?
“பாட்டி வீட்டுக்குப் போயிருந்த போது உன் அம்மா பத்தி கேள்வி பட்டேன். சாரி டி… உனக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாம போச்சு. உன் அப்பா எப்படி இருக்காங்க?”
‘ஏதோ இருக்காங்க’ என இவள் கைகளால் பதில் கூறவும், “இன்னைக்கு மௌன விரதமா?” என பார்வதி குழப்பப் பார்வை பார்த்தாள்.
‘வோக்கல் கார்ட் டேமேஜ் ஆகி வாய்ஸ் போயிடுச்சு’ என எழுதிக் காட்டவும், “எப்படி… எப்போ?” பார்வதி பதறிப் போனாள்.
‘அம்மா கூடவே போயிடுச்சு’ என்ற பதிலில் பார்வதியின் கண்களால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
“பாட்டி சொல்லிச்சு. நீ அழுத சத்தம் நாலு நாள் ஆச்சு அடங்கன்னு.”
நான்கு நாள்கள் அவள் குரல் ஒலித்ததா? ஆம்… ஒலித்ததே. அம்மா அம்மா என அழுது புரண்டும் அம்மா வரவே இல்லையே. தொண்டை வலித்த போதும் குரல் இருந்ததே.
அவனைப் பார்த்து… சலனமில்லாது படுத்திருந்த அவன் முகம் பார்த்து அவன் பெயரை அழைத்தது தான் அவள் கடைசியாக உரைத்தது என்றால், அம்மாவோடு குரலும் சென்றது என்பது சுத்தப் பொய். அவனோடு… அவனோடு தன் குரலும்… நிறைவான வாழ்வும் சென்றேவிட்டது.
நீளமான பெருமூச்சு ஒன்றை யசோ விட, “ப்ச். இப்போ தான் மெடிசின் நல்லா வளர்ந்துடுச்சே. டிரீட்மென்ட் பார்த்தியா?” என்றாள்.
எதற்குப் பேச வேண்டும்? யாருக்காகப் பேசவேண்டும்? அவனோடு சென்றதை மீண்டும் கட்டி இழுக்க மனம் இடம் கொடுக்கவில்லையே. ‘ஃபிரியா விடு…’ என எழுதிக் காட்டினாள்.
“டாக்டர என்ன சொல்றாங்க? ஒன்னும் பண்ண முடியாதா?”
டாக்டரா? ஹ ஹ ஹா… வேண்டாத குரலை மீட்டெடுக்க அவரை ஏன் பார்க்க வேண்டுமாம்? உள்ளுக்குள் சிரித்த யஷோதரா, மென் புன்னகையோடு பார்வதியை பார்த்தாள். ‘அத விடு’ என கையசைத்தவள், ‘ஊருல எல்லாரும் ஓக்கேவா? ஃப்ரெண்ட்ஸ் கூட டச்ல இருக்கியா?’ எனப் பேச்சின் திசையை மாற்றினாள்.
“வருஷம் ஆகுது அந்தப் பக்கம் போயி… நம்ம ஸ்கூல் குரூப்ல சேத்து விடறேன்.”
‘வேண்டாம்’
“ஏன்?” எனக் கேட்க நினைத்து, அதைக் கேட்காது, “ஈவ்னிங் சிக்ஸ்சுக்கு நம்ம லாவன்யாவோட பையனுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே பார்ட்டி. நீயும் வா டி. அவ ரொம்ப சந்தோஷ படுவா”
‘கல்யாணம் ஆகி குழந்த இருக்கா? வாவ்.’
“மேடம் ஸ்கூல் படிக்கும் போதே பாஸ்கரனோட செஞ்ச வேலைக்கு இதுவே லேட்” என பார்வதி சிரிக்க, இவளால் சிரிக்க முடியவில்லை.
“நாம டென்த்தோ… ட்வெல்த்தோ படிக்கும் போது தான நடந்துது? அப்போ அவ்வளவு பெருசா தெரிஞ்சுது.” என வருடங்கள் முன் நடந்ததை நினைத்துச் சிரித்தாள் பார்வதி.
‘லவெல்த்’ என யசோவின் மூளை சரியான விடையை எடுத்துக் கொடுத்தது.
இவர்கள் மூவரும் அருகரே வசித்து வந்ததால் சிறு வயது முதலே நல்ல நட்பு மூவருக்குள்ளும். இதில் லாவன்யா இவர்களை விட ஒரு வருடம் மூத்தவள். ஆனால் இவர்களோடு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றாள்.
புத்தகம் ஒன்றை வாங்க லாவன்யா வீட்டிற்குச் சென்ற அன்று என்ன நடந்ததோ… லாவன்யாவும் அவனும்… அது தான் அந்த பாஸ்கரும் லாவன்னும், அணைத்த வண்ணம் இருந்ததை அவளின் அம்மாவும் பக்கத்து வீட்டுப் பெண்மணியும் பார்த்துவிட்டனர். பெண்ணோடு சேர்த்து பையனையும் அவர் அடித்துவிட, பிரச்சனை இருகுடும்பங்களையும் தாண்டி பள்ளி வரை பரவியது.
இருவரும் பள்ளியில் கேலிப் பொருளாக போனதோடு லாவன்யாவின் பெற்றவர்கள் அதன்பின் பெண்ணை நம்பவே இல்லை. வீட்டில் காவல்… வழியில் காவல்… பள்ளியில் தினம் தோறும் விசாரிப்பு எனக் கூண்டிற்குள் தள்ளப்பட்டாள்.
அந்த ஒரு விடயம் மற்றவருக்குப் பேச்சு பொருளாக மாட்டுமே போக, யசோவின் வாழ்வை அந்த விடயம் புரட்டிப் போட்டதை யசோ மட்டுமே அறிவாள்.
மழையின் நனைந்து நின்றிருந்த யசோவைத் தேடி அவன் வந்ததின் ஆரம்பப் புள்ளி பாஸ்கர், லாவன்யாவின் இந்த நிகழ்வு தானே… ஆம்… இது தான்.
வீட்டில் நடந்த விஷயத்தைப் பெற்றோர்களே பள்ளி வரை இழுத்து விட்டதனால் லாவன்யாவால் வெளியே தலை காட்ட முடியாது போனது. பாஸ்கரன் வீட்டில் ‘படிக்கும் போதும் படிப்ப மட்டும் பாரு. கவனத்த சிதற விட்டு படிப்போட சேர்த்து எதிர்காலத்தையும் கெடுத்துக்காத’ என்றதோடு விட்டுவிட்டனர். அவனும் பள்ளியில் எழுந்த கேலிப் பேச்சுகளை பெரித்தாக எடுத்து கொள்ளாது தட்டி விட்டுச் சென்றுவிட்டான்.
ஆனால்… லாவன்யாவின் வீட்டில் அதை எளிதில் விடவில்லை. போதாத குறைக்கு, ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்தாலே ‘கவனம் பாடத்துல இருக்கணும். ஆம்பள மாதிரி தொடைச்சுட்டு போக முடியாதுன்னு நினைவிருக்கட்டும்’ எனப் பள்ளியிலும் ஆசிரியர்களிடம் இருந்து குத்தலாக பேச்சுக்களை கேட்க வேண்டியதாக போனது.
லாவன்யாவின் நிம்மதியும் போய்… படிப்பும் கெட்டு… நன்றாகப் படித்துவந்த பெண் பன்னிரண்டாம் வகுப்பில் தோற்று, தற்கொலைக்கு முயன்று, , மீண்டும் பன்னிரண்டாம் வகுப்பில் படித்து, சொற்ப மதிப்பெண்ணில் பள்ளியை முடித்து, அவள் கனவாகிய மருத்துவப் படிப்பும் எட்டா கனியாகி… அப்பப்பா, ஒற்றை அணைப்பு என்னவெல்லாம் செய்துவிட்டது லாவன்யாவின் வாழ்வை.
“என்ன டி யசோ அவ கல்யாணம் பத்தி பேசினதும்… சைலன்ட் ஆகிட்ட?” பார்வதி கேட்டாள்.
‘ஒண்ணும் இல்ல. சொல்லு பாஸ்கர கல்யாணம் பண்ணிகிட்டாளா?’
“அட போடி… அது பப்பி லவ். அவன் வெளிநாடு போயிட்டதா கேள்வி… அவனுக்கு லவ்வர் இருக்கதா எப்போவே கேள்விப்பட்டேன்”
‘ஓஹ்ஹ்… அப்போ அவ்வளவு தானா?’ முகம் வாடி போனது யசோவிற்கு.
“ஸ்கூல் படிக்கிற வயசெல்லாம் லவ் பண்ற வயசா லூசே? அது ஹார்மோன் பண்ற வேலை. தனிமை கிடைக்கவே காதல்ன்னு நினைச்சு ஆர்வம் தாங்காம என்னவோ பண்ணிடுச்சுங்க. அது ஒரு அட்ராக்ஷன் அவ்வளவு தான். அது புரியவும் விலகிட்டாங்க. இப்போ ரெண்டு பேர் எண்ணமும், வாழ்க்கையும் வேற வேறன்ற முதிற்சி அடைஞ்சு அவங்க அவங்க வாழ்க்கைய எந்த கொளருபடியும் இல்லாம வாழறாங்க. இத போய் அவட்ட கேட்டுட்டு இருக்காத. சரியா?”
‘ம்ம்ம்’ என்றவளுக்குள் மிகுந்த யோசனை. இவள் பொங்கி எழ, இப்படித் தான் அவனும் அன்று கூறினான்.
“ஹை ஸ்கூல் படிக்கிற பசங்க இப்பிடி லவ்வுன்னு சுத்தறது ஒண்ணும் புதுசில்ல. அந்த கலத்துல என் கொள்ளுபாட்டி வயசுக்கு வந்ததும் கல்யாணம் பண்ணி அடுத்த வருஷமே பிள்ளையையும் பெத்துட்டாங்க. அதாவது இருபது வயசு ஆணும் டீன் ஏஜ் பொண்ணும் கல்யாணம் பண்ணி பிள்ளையையும் பெத்துகிட்டாங்க.
டீன் ஏஜ்ல உடம்புல பல மாற்றம் வரும். உடல்ல மட்டும் இல்ல ஹார்மோன்னால மனசுலயும் வரும். அது நடக்காட்டா தான் பிரச்சனைன்னு அர்த்தம். ஹார்மோன்ஸ் தாறுமாறா இருக்கும்ன்னு தெரிஞ்சு தான் அன்னைக்கு அந்தக் கலாச்சாரம் இருந்துது. இவனுக்கு இவளும், இவளுக்கு இவனும்ன்னு சொல்லி குடும்பமே சேர்த்து விட்டுடாங்க. பிரச்சன இல்ல.
இப்போ ஆண்… பெண் சுதந்தரம், கடமைன்னு காலம் மாறிடுச்சு. படிச்சு… வேலைக்கு போய்… சொந்த கால்ல நிக்கிறதுன்னு கல்யாண வயசும் மாறி போச்சு.
நம்மளா எல்லாத்தையும் மாத்தினா ஹார்மோனும் மாறுமா என்ன? இந்த ஃபீலிங்ஸ் இயற்கை. ஆனா… இடம், காலகட்டம் புரிஞ்சு வாழற நாம தான் லிமிட் தெரிஞ்சு பழகணும்.
பாஸ்கரோட பேரன்ஸ் எவ்வளவு பக்குவமா டீல் பண்ணினாங்க. தப்பு சரி எதுன்னு எடுத்து சொல்லி புரிய வைக்கறத விட்டுட்டு உன் ஃப்ரெண்ட அவங்க அம்மா இப்பிடி பண்ணி இருக்க வேண்டாம்.
நீ இத எல்லாம் மண்டைல போட்டு குழப்பிகிட்டு என்னை கேவலமா பாக்காத. நான் ஆரோகியமான ஒரு ஆம்பிள்ளைன்னு சந்தோஷ படு! எனக்கு என் லிமிட் தெரியும். அப்படி ஒன்னும் உன் மேல பாஞ்சுட மாட்டேன்” என யசோவின் கோபம் அறிந்தவனாக அவன் கோபம் கொண்டது இன்றும் நினைவில் அழியாது நிற்கிறது.
யோசனையோடு அமர்ந்திருந்தவளைப் பார்த்த பார்வதி, “இன்னும் என்ன டி?” என்றாள் கேள்வியாக.
‘ம்ம்கூம். நீ? உனக்கு எப்போ கல்யாணம்?’
“பார்க்க ஆரம்பிச்சாங்க, என்னை கல்யாண வீட்டுல பார்த்துட்டு சொந்ததுல இருந்து ஒரு பெரிய இடம் அமையற மாதிரி வந்துது. லாவன்யாவோட வாழ்க்கைய பார்த்த பிறகு, ஒரு அளவுக்கு மேல வசதியானவன் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.
இப்போ எல்லாம் மிடில் கிளாஸ்சால ரெண்டு சம்பளம் இல்லாம சமாளிக்கிறது கஷ்டம். சோ, கையில சம்பாத்தியம் இல்லாம கழுத்த நீட்ட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதுதான், இப்போ தான் வேலை கிடைச்சிருக்கு… இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும்ன்னு சொல்லிட்டேன்.”
‘அவ சந்தோஷமா இல்லியா?’
“வசதியான வீட்டுல இருந்து கேக்கவும், இவங்களும் அவங்க வசதிக்கு மேல செஞ்சு கட்டி வச்சாங்க. ரெண்டாவது மருமக வர வரைக்கும் நல்லா இருந்தவங்களுக்கு அப்பறம் என்னாச்சோ, இவளுக்கு அங்க பேருக்கு கூட மரியாதை இல்ல. ஆனா இவ புருஷன் முன்ன வாய் திறக்க முடியாது. அதுனால எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துது… நம்ம ஸ்கூல் குருப்ல ஒரு நாள் பழச எல்லாம் பேசர வரைக்கும்.
ஏதோ ஒரு அரைவேக்காடு இவளையும் பாஸ்கரை பத்தி பேசி வைக்க, அத அவர் பார்த்துட்டார். இவளும் நடந்ததை மறைக்காம சொல்லிட்டா. அப்போ ஒண்ணும் சொல்லல. ஆனா அதுக்கு அப்பறம் அவங்க வீட்டுல என்ன பேசினாலும், காது கேக்காதது போல போக ஆரம்பிச்சுட்டார். அவட்டயும் முன்ன மாதிரி ஆசையா இருக்கது இல்லயாம். நாலு க்ரெடிட் கார்ட், டெபிட் காட்டுன்னு சுத்திட்டு இருந்தவ, இப்போ செலவுக்கு காசு வேணும்னாலும் கணக்கு காட்டணும். வேலைக்கும் போக விடமாட்டேங்கறாங்க. சின்னதுல நடந்த ஒரு சின்ன தப்பு… இன்னும் அவள துறத்துது… பாவம்.”
வெளியே போக்குவரத்து நெரிசலில் பேருந்து மாட்டிக் கொண்டு நகர்வதும் நிற்பதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. “போச்சு… இந்த ஊர்ல இது ஒண்ணு. போதாததுக்கு தூரல் போடுது. போய்ச் சேர்ந்தமாதிரி தான்” என்றாள் பார்வதி. சற்று நேரம் இருவரும் சாலையை வேடிக்கை பார்ப்பதில் கவனம் செலுத்தினர்.
நினைவு வந்தவளாக பார்வதி, “அன்னைக்கு நடந்தத பாட்டி சொல்லிச்சு. உன் இழப்பு… ப்ச்! மனசே ஆறல. நம்பவே முடில டி. ஜென்மத்துக்கும் சேர்ந்தே இருப்பீங்கன்னு நினைச்சோம். அண்ணாவ மறந்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிப்ப தான?” என்ற கேள்வி காதுகளில் விழுந்தாலும் நகராது நின்றிருந்த பேருந்து ஜன்னலைக் கழுவி விட்டுக் கொண்டிருந்த மழை நீரைப் பார்த்து அமர்ந்திருந்தவளுக்குள் அவன், ‘இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா’ என பாடிக் கொண்டிருந்தான்.
அந்த பேருந்து போலவே அவள் மனமும் அவனை விட்டு நகராது அவன் சாரலில் நனைந்து கொண்டிருந்தது.
…
