Skip to content
Post Views: 3,848
ஆச்சரியம், அதிர்ச்சி, துக்கம், கோபம், விரக்தி இன்னும் என்னவெல்லாமோ ஜானகியிடம்!
ஜகது தன் பேரனுக்கு கல்யாணம் என்று சொல்லி, “பொண்ணு யாருன்னு பார்த்தா நீ ஆச்சர்யப்படுவ!” என்று சொல்லிய போது கூட, அவரின் பேத்தி ஜான்வி தான் கல்யாணப் பெண்ணாக இருக்க கூடும் என்று அவர் கொஞ்சம் கூட நினைக்க வில்லை!
இத்தனைக்கும் அவர் பெண்ணின் பெயர் ஜான்வி தேவி என்றும் அவள் ஒரு டாக்டர் என்று சொல்லிய போது கூட அவள் தன் பேத்தியாக இருப்பாள் என்று அவர் நினைக்கவேயில்லை!
அவரைப் பொறுத்தவரை அவரின் பெண் விஜி, அவள் காதல் கணவன் மற்றும் குழந்தை ஜான்வியோடு எங்கோ வடக்கே வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்றே நேற்று வரை அவரின் எண்ணம்!
Advertisement
சரவணனின் எண்ணமும் அதே தான்!
அதனால் தான் அவன் தன் தங்கையை தன் வடக்கத்திய நண்பர்கள் நெட்வொர்க்கில் தான் இன்னமும் தேடிக் கொண்டு இருக்கிறான்!
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு முறை அவனுக்கு ஜகதீஸ் பற்றிக் கூட தெரிய வந்தது!
Advertisement
ஆனால் அந்த ஜகதீசின் மனைவியின் பெயர் ஊர்மிளா, அவளுக்கு இரண்டும் ஆண் குழந்தைகள் என்று தெரிய வர, அவன் அந்த ஜகதீஸ், தன் தங்கை கணவன் அல்ல என்று முடிவுக்கு வந்து, அதை மேலும் விசாரிக்கவில்லை!
Advertisement
இப்போது கிட்டதட்ட தன் இளவயது தோற்றத்தில் ஜான்வியை அவர் கண்டவுடன் யாரும் சொல்லாமலே அவருக்கு புரிந்து விட்டது!
ஓடிப் போய் கட்டிக் கொண்டார் பேத்தியை!
“டீ.. ஜகது, இது கனவில்ல தானே! நான் பார்க்கிறது நிஜம் தானே, இவ என் பேத்தி ஜான்வி தானா?” அவர் உணர்ச்சிவசப்பட்டு அழவே தொடங்கி விட்டார்!
Advertisement
ஜானவிக்கும் அழுகை வந்து விட்டது!
“ஏய்.. தான் ஆடாட்டியும் தன் தசை ஆடும்னு சொல்லுவாங்கல்ல, அது மாதிரி, உன் பேத்தி உன்னைத் தேடிக்கிட்டு தாண்டி வேலைப் பார்க்கிற சாக்கில் இந்த ஊருக்கே வந்தா!” என்றார் ஜகது!
“அப்படி வந்தவளை நாங்கள் அடையாளம் கண்டுக்கும் முன்பே, அவளை நம்ம பேரன் பரணிக்கு கட்டி வைக்க முடிவு செய்து இருந்தோம்!
அதுவும் இல்லாம, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க!” என்றார் கனகு!
“ஜான்விம்மா, நீ கொஞ்சம் வெளியே இரும்மா, நாங்க கொஞ்சம் தனியா பேசணும்” என்று கனகு அவளை வெளியே அனுப்பி விட்டார்!
“நம்ம பேரன் பரணியோட வேற நல்ல மாப்பிள்ளை, ஜகது குடும்பத்தோட ஒரு நல்ல குடும்பம் எங்க இருக்கு!
எனக்கு ரொம்ப சந்தோசம் தாண்டி! ஆமா விஜி எங்க? மாப்பிள்ளை எங்க?” என்று ஜானகி கேட்டவுடன் எல்லோர் முகமும் மாறியது!
எல்லோரும் தடுமாறிக் கொண்டு இருக்க, கனகு தான் முன் வந்தார்!
“டீ ஜானு, இத்தனை நேரம் உனக்கு நல்ல சேதியா சொன்ன எங்களுக்கு, உன்கிட்ட சொல்ல ஒரு துக்க செய்தியும் இருக்கு!
அதைக் கேட்டு நீ ரொம்ப உணர்ச்சி வசப்படக் கூடாது சரியா?” பீடிகையுடன் ஆரம்பித்தார் கனகு!
“டீ ஜகது, இவ என்னடி சொல்றா, எனக்கு ரொம்ப பயமா இருக்கே? முதல்ல விஜி எங்க சொல்லுங்க?” ஜானு பதற,
அவரை இருபக்கமும் ஜகதுவும் கனகுவும் அணைத்துக் கொண்டு, கனகு சொன்னார்.
“இப்ப விஜி உயிரோடவே இல்ல ஜானு! கொரானாவின் போது இறந்து விட்டாள்!”
ஜானுவின் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது! அவருக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது!
அப்படியே தள்ளாடி, சோபாவில் அமர்ந்தவரிடம்,
“ஜானு மனசை திடப்படுத்திக்கோ, ரொம்ப உன்னைப் படுத்திக்காத!” தோழிகள் இருவரும் அவரை ஆறுதல் படுத்தினார்கள்!
“இல்லடி , அவளை நான் பார்க்கலைன்னாலும் எங்கோ கண் காணாத இடத்தில் புருஷன் குழந்தைன்னு சந்தோசமா இருக்கிறதா நினைச்சுட்டு இருந்தேன், இத்தனை வருசமா?
இப்படி நடந்திருக்கும்னு நான் கனவுலயும் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை!” அவர் கேவினார்!
சரவணனும் கண் கலங்கி தான் விட்டிருந்தான். கூடவே அவனுக்கு கேள்வியும்!
“அது சரி. அவள் மாப்பிள்ளை எங்கே?” என்று கேட்க கனகு அன்று ஜான்வி தன்னிடம் சொன்ன விபரத்தை சொன்னார்.
“இருக்காது. இருக்கவே இருக்காது. என் பொண்ணு டைவர்ஸ் பண்ற ஆள் இல்லை!
அவன் மீது ரொம்பவும் ஆசை காதலோட தான் இருந்தா! இந்த மாதிரி சில்லறை பிரச்சினைக்கு எல்லாம் டைவோர்ஸ் வரை போற ஆள் இல்லை அவள்! இதில் ஏதோ தப்பு நடந்து இருக்கிறது!” என்றார் ஜானகி.
“ஆமா பெரியம்மா, எனக்கும் அப்படி தான் தோணுது! விஜி ரொம்ப மெச்சுரிட்டி உள்ளவள்! இப்படி ஒரு முடிவு எடுத்து அவ புருசனைப் பிரிஞ்சி இருந்திருக்கான்னா, வேறே ஏதோ ஸ்ட்ராங் ஆன ரீசன் இருக்கு!” என்றான் சரவணனும்!
“ஆனா ஜான்வி அவ பப்பா ரொம்ப நல்லவன்னு சொல்றாளே!” என்றார் கனகு!
“அவன் பொண்ணுக்கு வேணுமின்னா அவன் நல்லவனா இருந்து இருக்கலாம், ஆனா அவன் என் பொண்ணுக்கு செய்து இருக்கிறது பச்சை துரோகம்!” கோபப்பட்டார் ஜானு!
சரவணனுக்கும் அதே நிலை தான்! அதே எண்ணமும் கூட!
“அது சரி. இந்த ஊர்ல தன் பெண்ணைக் கட்டிக் கொடுக்க ஜகதீஸ் சம்மதம் சொல்லி இருக்க மாட்டானே!” சரியாகவே கணித்தார் ஜானு!
“ஆமாம்!” என்றார்கள் தோழிகள் இருவரும் ஒரே குரலில்!
“நாங்க அவர் கிட்ட பொண்ணு கேட்டதுக்கு, அவளை இந்த ஊருக்கு வேலைக்கு அனுப்பியதே தப்பு, இதுல பொண்ணு வேறே கேக்குறீங்களான்னு ஒரே சத்தம்!”
“நாங்க சரி இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு திரும்பவும் பேசி பார்ப்போம்னு இருந்தோம், அதுக்குள்ள இங்க சமய சந்தர்ப்பம் உடனடியா அவங்க கல்யாணத்தை ஏற்பாடு பண்ண வேண்டியதா போச்சு!” என்றார் கனகு!
“ஆஹா உலக மகா நடிப்புடா சாமி!” என்று மனதுள் நினைத்துக் கொண்டான் மணி!
தண்ணீர் கொண்டு வந்தவன், மனதுள், “ஏய் கிழவி, பக்கா ப்ளான் போட்டு, இதை நடத்தியதே நீ தான், இப்ப சமயமாம், சந்தர்ப்பமாம்!
யப்பா.. இது மட்டும் பாலிட்டிக்ஸ்க்கு வந்துச்சு எல்லா பயலும் காலி!” என்ற எண்ணமே!
“அந்த வெண்ணை என்ன வேணாம்னு சொல்றது!” என்றார் கடுப்புடன் ஜானகி!
“என் பேத்தி கல்யாணம் இது! நான் நடத்துவேன்! ஒரு பய என்னைக் கேக்க முடியாது! சரவணா, நீ சீக்கரம் இங்க பக்கத்துல எதாச்சும் வீடு கிடைக்குதான்னு பாரு! அங்க நம்ம வீட்டுல இருந்து பொண்ணை அழைச்சுட்டு போறது தான் முறை!”
“அதுக்கென்ன அவசியம்!” என்றார் ஜகது!
“இல்லடி, அது முறையில்ல! என் பேத்திக்கு யாரும் இல்லைனா சரி! இப்ப தான் நான் வந்துட்டேன் இல்ல! அப்ப என் வீட்டுல இருந்து தான் நான் பொண்ணை அனுப்பி வைக்கணும்!”
“அதுக்கு சொல்லடி, இங்க உங்க வீடே இருக்கும் போது, நீ எதுக்கு வேற வீடு பார்க்கணும்?” என்றார் கனகு!
“என்ன ஆத்தா சொல்ற? அந்த வீடு தான் ரொம்பவும் பாழடைஞ்சு கிடக்கே, இதுல ஆவி பேய் நடமாட்டம் வேற இருக்குன்னு பேசிக்கிறாங்க! நீ வேற அந்த வீட்டுக்கு போய் இவங்கள தங்க சொல்ற?” என்றான் மணி.
“அடப் போடா, கிறுக்கா! அந்த பேயே நான் தான்!” என்றார் கனகு!
“என்ன ஆத்தா புதிர் போடுற?”
“புதிரும் இல்ல ஒரு வெங்காயமும் இல்ல! நான் தான் சூர்யத்தம்மா மாதிரி சுருட்டு பிடிச்சுக் கிட்டு அவங்கள மாதிரி புடவைக் கட்டிக்கிட்டு அந்த வீட்டில் நடமாடி பேய் புரளியைக் கிளப்பி வச்சுருக்கேன்!”
“நீ ஏண்டி அப்படி பண்ணின?” கேட்டார்கள் ஜானுவும் ஜகதுவும்! ஜகதுவுக்கே இது புது நியூஸ்!
“ஆமா, பின்ன? நீங்க கொஞ்ச நாள் ஆள் வச்சு சுத்தம் பண்ணி பராமரிச்சீங்க, அப்புறம் விட்டுட்டீங்க! அந்த வீட்டில் கண்ட களவாணி பயல்கள், கண்ட கண்ட வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சாங்க!
பார்த்தேன், நான் பேய் வேஷம் போட்டு புரளிய கிளப்பி, அங்க யாரும் போக முடியாத படி பண்ணிட்டேன்.
மாசம் ஒரு தரம் வெளியூர்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்து உள்ள மட்டும் சுத்தம் செய்வேன்!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் நம்ம ஊரில் பெயிண்டர் முருகேசனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும்!
அவன் பொண்ணை நான் சரியான சமயத்தில் நான் நல்ல வழிக்கு கொண்டு வந்து விட்ட நன்றி அவனுக்கு!
நானா வெளியில் சொல்ல மாட்டேன் ஆத்தா என்று சொல்லி விட்டான்!
அந்த வீட்டுக்கு போற வழியை மட்டும் ரொம்ப சுத்தம் பண்ணவே மாட்டேன்! இல்லைனா ஜனங்களுக்கு பயம் போய்டுமே! நான் ஒரு ஒத்தையடிப் பாதையை கொஞ்சம் மறைவா உருவாக்கி வச்சுருக்கேன், அது வழியா தான் போறதும் வர்றதும்!
இங்க ஜான்வி வந்த பின்னே, அவ அம்மா வாழ்ந்த அந்த வீட்டைப் பார்க்கனும்னு ஆசைப் படுறான்னு தெரிஞ்ச பின்னே, நான் முருகேசன் துணையோடு, இப்போ, பெயின்ட் கூட அடிச்சு சுத்தமா ரெடி பண்ணி தான் வச்சுருக்கேன்!” என்றார் கனகு!
எப்போதுமே கனகு கலக்கல் கனகு தானே!
“அவ கல்யாணம் முடிஞ்ச பின்னே , அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியா கொடுக்கலாம்னு இருந்தேன்!” என்றார் கனகு!
“ஆனா இந்த வீட்டை யாருக்கும் தெரியாம சுத்தம் பண்ணி பெயின்ட் அடிக்கிறதுக்கு நான் கொஞ்சம் கஷ்டம் தான் பட்டேன்!” என்றார் கனகு மேலும்!
“ஆமாண்டி, பணத்துக்குக் கஷ்டப்பட்டியா?” என்று கேட்டார்கள் மற்ற இரு தோழிகளும்!
“பணத்துக்கு எல்லாம் இல்லடி, எனக்கு என்ன புள்ளையா குட்டியா, அது பிரச்சினை இல்ல! பணம் எல்லாம் என் கிட்ட இருக்கு!
முருகேசன் அந்த வீட்டுல போய் பெயின்ட் அடிக்கிறத சில பேர் பார்த்துட்டு, அவன் வாயை கிளறி இருக்காங்க.
அவன் வந்து என்ன ஆத்தா சொல்றதுன்னு நின்னான்!
நான் உடனே சந்திரமுகியில் வருவது மாதிரி சொல்லுடான்னு சொல்லிட்டேன்!
அவனுக்கு முன்னாடி அங்கே வேலை செய்தவன் வெளியூர்க்காரன் ஒருத்தன்!
அவன் பேரும் நிஜமாலுமே கோபால் தான்.
உடனே நம்ம முருகேசனும் வடிவேலு மாதிரியே அவன் கிட்ட விசாரித்தவன் கிட்ட அதே டயலாக்கை தான் சொல்லி விட்டான்!
“திடீர் திடீர்னு உடையுதாம், நகருதாம் , அதனால் நம்ம கோவாலு, சீக்கிரமே வேலையை முடிச்சுட்டு போயடுவானாம், நான் தானப்பா தெரியாம குருட்டு தைரியத்தில் இந்த வேலையை ஒத்துகிட்டேன்! என்று புலம்பி சமாளிச்சுருக்கான்!”
இதைக் கேட்ட ஜகதுவுக்கும், சரவணனுக்கும், ஏன் ஜானுவுக்கும் கூட அது வரை இருந்த இறுக்கம் மறைந்து சிரிப்பு வந்தது!
கனகுவுக்கு வேண்டியதும் அது தானே!
—–
பாட்டிமார்கள். “தனியே பேச வேண்டும் கொஞ்சம் வெளியே இரும்மா”, என்று சொல்லி அனுப்பி விட்டதால், ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஜான்வியைத் தன் அறைக்குத் தள்ளிக் கொண்டு வந்து விட்டான் பரணி!
உள்ளேப் போனவுடன் இறுக்கமாக கட்டிக் கொண்டவனை ஜான்வி செல்லமாக திட்டினாள்!
“காட்டான், காட்டான், சரியான காட்டான், இப்படியா வயலண்டா இருப்பீங்க?”
“என்னது காட்டானா, நானா, இதுவே உனக்கு வயலண்டா? காட்டான் எப்படி நடந்துப்பான் தெரியுமா, காட்டானோட வயலன்ஸ் லெவல நீ பார்க்கிறியா இப்ப!”, என்று சொல்லி,
அவளை அப்படியே தன் கட்டிலில் தூக்கிக்கொண்டு போய் போட்டான்!
ஜான்வி கொஞ்சம் ஜெர்க் ஆனாள்!
“அய்யோ வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டமா?” அவள் திகைப்பில் கண் மூடி கிடக்க, ஒன்றும் நடக்க வில்லை!
பரணி வெறுமனே தன் கைககளை கட்டிக் கொண்டு சும்மா சிரித்துக் கொண்டு நின்று இருந்தான்!
நிம்மதியுடன் எழுந்து உட்கார்ந்தவளிடம், “என்ன டாக்டர் மேடம், பயந்துட்டீங்க போல! அது சும்மா பிரான்க் பண்ணினேன்!
உங்க ஜானு பாட்டி வந்த சந்தோசத்துல இந்த மாமாவைக் கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்கிறீங்களே அது தான்!” என்றான் உல்லாசமாய்!
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” என்றவளிடம், “என்ன ஒண்ணுமில்ல, அங்கே ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருக்கிற நேரம், இங்க மாமா ரூமில் உன்னையே நினைச்சுட்டு ஏங்கிட்டு இருப்பானே, அவனையும் கொஞ்சம் கவனிப்போன்னு தோணுச்சா உனக்கு?
உனக்கு இப்ப எல்லாம் என் நினைப்பே இருக்கிறது இல்ல, அன்னிக்கு பம்ப் செட்டுல குளிக்க போனியே, ஒரு வார்த்தை இந்த மாமா கிட்ட சொல்லியிருந்தா, நானும் அங்க வந்து ரெண்டு பேரும் சேர்ந்து குளிச்சுருக்கலாம்ல, ஆனா அது நடக்காமலே, நடந்த மாதிரி சீன் கிரியேட் ஆகிடுச்சு!”
“அட ஆமாம் இல்ல, நீங்க எப்படி சரியா அங்க வந்தீங்க அங்க அன்னிக்கு?”
“கனகு ஆத்தா தான் என்னை வந்து பிக்கப் பண்ணிக்க சொல்லுச்சு”
“அட என்னை அங்க குளிக்க அழைச்சுட்டு போனதும் கனகு அம்மாச்சி தான்!”
“அது சரி, கட்சிக்காரங்க எப்படி அங்க வந்தாங்க, அப்படியே வந்தா கூட கட்டாயம் நேரா வீட்டுக்கு தானே வந்திருக்கணும்! இந்த மணி தான் அவங்கள கூட்டிட்டு வந்தான்!
கொஞ்சம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, எனக்கு என்னமோ இந்த கனகு ஆத்தா தான் என்னமோ செய்துட்டு இருக்குன்னு தோணுது, சரி விடு, அதனால தான் நம்ம கல்யாணமே பிக்ஸ் ஆனுச்சு!”
“ஆனா, இன்னும் பப்பாவுக்கு தெரியப் படுத்தலேயே, அவரை கனெக்ட் பண்ணவே முடியல இன்னும்!” ஜான்வி கொஞ்சம் வருத்தப்பட்டாள்!
“சரி விடு, திரும்ப ட்ரை பண்ணு!”
“சரிங்க, நாம் இங்க ரொம்ப நேரம் தனியா இருந்தா நல்லா இருக்காது, நான் கிளம்புறேன்!”
அவள் மீண்டும் மீண்டும் ஜக்தீசை தொடர்பு கொள்ள முயற்சித்துக்கொண்டு தான் இருந்தாள்.
அவள் சித்தி ஊர்மிளாவிடம் கூட விஷயத்தை தெரியப் படுத்தி, “ரொம்ப அவசரம் பப்பா கிட்ட பேசணும்” என்று கூட சொல்லியிருந்தாள்!
ஆனால் முடியவில்லை!
ஏனென்றால் ஜான்வியின் முயற்சிகளை எல்லாம், அங்கே எச்சில் தொட்டு அழித்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா!
அதுக்கு காரணமும் இருந்தது!
பாட்டிகளின் கூட்டணிக்கு “வடக்கில்” இருந்தும் ஆதரவு?
சும்மா கலக்குறே கனகு!
error: Content is protected !!