Skip to content
Post Views: 6,283
காதல் அன்று
ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார் இராஜேந்திரன்.
கிச்சனில் பாத்திரங்கள் டொம் டொம் என்று உடைப்பட்டுக் கொண்டிருந்தன!
ஈஸ்வரியின் கோபத்தின் அளவை அவர் அறிந்து இருந்ததால் அவரால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை!
Advertisement
இப்போது மட்டுமல்ல, என்று புத்திக்கெட்டுப் போய் அவளிடம் சபலம் கொண்டு மாட்டிக் கொண்டாரோ அந்தநாள் முதல் இந்த நிமிடம் வரை அவருக்கு தினம் தினம் ஒரு போராட்டம் தான்!
நந்தினிக்கு அவர் செய்த துரோகத்திற்கு நியாயமாக இன்னும் அனுபவிக்க வேண்டியது!
அவரின் பெற்றோர் செய்த புண்ணியமோ, அல்லது முன்னோர்கள் செய்த புண்ணியமோ இன்று வரை அவரைக் காத்துக் கொண்டிருக்கிறது!
Advertisement
உண்மையில் அவர் நந்தினிக்கும் நேர்மையாக இல்லை, அவரின் மீது இன்னமும் பாசம் வைத்து இருக்கும் மகன் ராகவிற்கும் அவர் நேர்மையாய் இல்லை!
Advertisement
செய்த துரோகமும், செய்துக் கொண்டிருக்கிற துரோகமும் அவரின் இரவுத் தூக்கத்தை கெடுத்து அவரை நிம்மதி இல்லாமல் தான் வைத்துக் கொண்டிருக்கின்றன!
தூக்கமாத்திரை உதவியில்லாமல் அவரால் தூங்க முடியாது!
இப்படி யாருக்குமே நேர்மையாக இல்லாத ஒரு பாழும் ஜென்மம் அவர்!
Advertisement
பூமிக்கு பாரமாய்!
ஈஸ்வரியின் ஆட்டத்துக்கு துணை போகாமல் குறைந்த பட்ச நியாயத்தோடு கூட அவரால் நடக்க முடியவில்லை!
ஆரம்பத்தில் எதெற்கெடுத்தாலும் தாலியைக் கழற்றி தூக்கிப் போடும் ஈஸ்வரியின் அக்கிரமம், அவரைப் போன்ற குடும்ப மானத்தைப் பெரிதாக கருதி வாழ்பவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதான்!
அவர் இதுக்கு பயப்படுகிறார் என்று தெரிந்து கொண்ட ஈஸ்வரி, தொடர்ந்து இதுபோல செய்கைகளை செய்வதையே வாடிக்கையாக கொண்டு, அவரை கண்ட்ரோல் எடுத்தாள்.
மேலும் இன்னொரு டெக்னிக்கையும் அவள் பயன்படுத்தினாள்.
அதாவது ஒருவரை அடிமைப்படுத்த வேண்டும் என்றால், அவரை தனிமைப்படுத்த வேண்டும்! என்பதே அது!
அவள் இராஜேந்திரனின் நலம் விரும்பிகள், சொந்தக்காரர்கள், நண்பர்களை முதலில் அவரிடம் இருந்து மெல்லமெல்ல அதையும் இதையும் சொல்லி சொல்லி பிரித்து விட்டாள்.
அப்புறம் இன்னொரு ஆயுதம் அழுகை!
லேசாக அவர் குரல் உயர்த்தினால் கூட ஓவென்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரைக் கூட்டுவது!
அப்புறம் இருக்கவே இருக்கு அவரின் இரவு நேர சபலங்கள்!
ஆண்டுகள் செல்ல செல்ல இராஜேந்திரன் முழுமையான டம்மிபீஸ் ஆகிவிட்டார்.
ஈஸ்வரியை எதிர்ப்பானேன், நிம்மதியை தொலைப்பானேன் என்று!
ஆனால் அவர் இதில் பலியாக்கியது ராகவைத் தான்!
அவள் இல்லாத பழியெல்லாம் ராகவின் மீது சொல்லும் போதும், அவன் அப்படி செய்துருக்க மாட்டான் என்று உள்மனம் நம்பினாலும் ஈஸ்வரியின் திருப்திக்காக அவனை செய்யாத தப்புக்குக் கூட தண்டித்தார்.
ராகவும் கூட தான் ஈஸ்வரியிடம் கூட கூட பேசினால், அல்லது எதிர்த்து சண்டையிட்டால் வீணாக அப்பாவின் நிம்மதிதான் தொலைகிறது என்றே ஆரம்பத்திலிருந்தே அவனும் ஒதுங்கிப் போய் விட்டான்!
அவள் அவன் அப்பாவிற்கு தெரிந்து பாதி தெரியாமல் பாதி என்று அவனுக்கு செய்யும் கொடுமைகளைக் கூட பொறுத்தே போனான்.
இத்தனைக்கும் இராஜேந்திரன் இருப்பது நந்தினி சீராக கொண்டு வந்த வீடு!
அதில் ராகவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் திண்ணை!
கேட்டால் அவன் ஸ்மோக் பண்ணுகிறான், ஈஸ்வரிக்கு ஒத்துக் கொள்ளவில்லை! என்ற காரணம்!
நாள் கிழமை என்றால் கூட அவனுக்கு வீட்டில் சாப்பாடு கிடைக்காது, அவன் பள்ளியில் இருந்து வருவதற்குள் ஈஸ்வரியின் உடன்பிறப்புகள் காலியாக்கி விடுவார்கள்!
ஆரம்பத்தில் வந்து போய் கொண்டிருந்தவர்கள் பின், இங்கேயே நிரந்தரமாகவே தங்கி விட்டனர்!
சும்மா காதில் கேட்பவர்களுக்கே நெஞ்சம் கொதிக்கும் பல விஷயங்கள் அந்த வீட்டில் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தன!
நந்தினியின் நகைகள் அனைத்தும் ஈஸ்வரியின் வசம்!
இத்தனைக்கும் நந்தினி உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரைப் பார்த்துக் கொள்ளவென்று வந்த வேலைக்காரி தான் இந்த ஈஸ்வரி!
கேட்டால் தன்னை நர்ஸ் என்றே சொல்லிக் கொண்டு அந்த புனிதமான தொழிலைக் கேவலப்படுத்துவாள்.
நர்ஸ் எல்லாம் இல்லை, நந்தினியின் உடலைத் துடைத்து விட்டு, வேறு உடை மாற்றிவிடும் வேலைக்கு வந்தவள்தான் இந்த ஈஸ்வரி!
அதற்கே நந்தினி அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடிதான் வந்தாள்!
அவர்கள் கெட்ட நேரமோ என்னமோ, விதியின் சதியோ தெரியவில்லை! அன்று அவளுக்குப் போய் இரக்கப்பட்டு விட்டார் அவர்!
கேன்சர் பேசன்டான நந்தினிக்கு கீமோதெரபி கொடுக்கப்பட்டதால் அவரின் தலைமுடி முழுவதும் கொட்டத் தொடங்கிய காலம் அது!
அப்போது எல்லாம் அவரின் முகத்தைப் பார்க்க அவருக்கே பிடிக்காமல் போய் இருந்தது!
முடிந்தவரை அவர் யாரையும் சந்திக்கவே விரும்பவில்லை!
ஈஸ்வரி வேண்டுமென்றே அவரிடம் போய், “அக்கா இந்த போட்டோவுல இருக்கிறது நீங்கதானே, எப்படி இருந்து இருக்கீங்க அக்கா, இப்ப உங்களைப் பார்த்தா எனக்கே மனசு கஷ்டமா இருக்கு” என்று சொல்லி சொல்லி, நந்தினியின் தன்னம்பிக்கையை மேலும் மேலும் இப்படி பேசி பேசியே குறைத்துக் கொண்டிருந்தாள்!
ஒரு கட்டத்தில் அவருக்கு வாழும் ஆசையே இல்லாமல் போய் விட்டது!
ஏனென்றால் அவள் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் ரூமிலேயே அரங்கேறிய அசிங்கம்!
ஒரு பக்கம் நந்தினியின் தன்னம்பிக்கையைக் குறைத்துக் கொண்டே, ஒரு பக்கம் ஏற்கனவே மனைவியின் அருகாமை கடந்த இரண்டு வருடங்களாக கிடைக்கப் பெறாமல் கொஞ்சம் “காய்ந்து” போயிருந்த இராஜேந்திரனின் அந்த 40 ப்ளஸ் வயதுக்குரிய சபலப்புத்தியையும் தூண்டிவிட்டாள், அவர் முன்னாடி ஏடாகூடமாக வந்து!
ஒரு கட்டத்தில் அவரை முழுவதும் தன் வசத்தில் கொண்டு வந்து விட்டாள்.
இப்போது நந்தினி எப்போது சாவார், அவர்கள் திருமணம் எப்போது என்பதே கேள்வி!
அவ்வளவு விரக்தியிலும் நந்தினி ஒரு காரியம் செய்துவிட்டே போனார்!
பார்த்தசாரதியை தன்னைப் பார்க்க வரும்படி சொல்லியனுப்பியவர், அவரிடம் தன் காலத்திற்கு பின் அவர் தான் ராகவின் பொறுப்பை ஏற்க வேண்டுமென்றும், அவனின் கல்யாணம் அவர் பொறுப்பு, என்றும், பிற்காலத்தில் சொத்து பிரச்சினை வந்தால், கட்டாயம் வரும், அப்போது அவர் தான் அவன் பக்கம் நிற்க வேண்டும் என்று சத்தியம் வாங்கி விட்டார்.
“நீங்க தான் மாமா அவனுக்கு எல்லாமே! என் அப்பா அம்மா இப்ப உயிரோட இல்லை, கொஞ்ச நாள் முன்னாடி பைக் ஆக்சிடன்ட்ல இறந்துட்டாங்க, ராகவுக்கு இப்ப யாருமில்ல! அவங்க அப்பா மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல, நீங்க தான் அவனைப் பார்த்துக்கணும்” என்று சொல்லி விட்டே இறந்தார்!
ராகவ் படித்து முன்னேறி விடக் கூடாது என்பதில் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்தாள் ஈஸ்வரி!
அதனால் முதலில் அவனின் சாப்பாட்டில் கை வைத்தவள், அவன் அதையும் சமாளித்து ( நம் வித்யாவின் மறைமுக உதவியோடு) அவன் ப்ளஸ்டூ நல்லமார்க் எடுத்தே பாசாகிவிட, அடுத்து அவனைக் காலேஜில் சேரவிடாமல் செய்யவென்று காலேஜ் அட்மிசன் நடக்கும் நேரம் தன் “வருடாந்திர ஹனிமூன்காக” குலுமணாலிக்கு இராஜேந்திரனைக் கூட்டிக்கொண்டு சென்று விட்டாள்!
இங்கே ராகவ், அப்பா வருவார், வருவார் என்று காத்திருந்தான்! அட்மிசன் கிட்டத்தட்ட முடிந்தே விட்டிருந்தது எல்லா கல்லூரியிலும்!
அவர், அவன் சாப்பாட்டிற்கு என்று கொடுத்து விட்டு சென்றிருந்த காசும் செலவாகி விட்டிருந்தது!
தன் தொழில்முறை நண்பர்களுடன், ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்த பார்த்தசாரதி, அங்கே “யுவர் ஆர்டர் ப்ளீஸ்” என்று வெயிட்டராக வந்து நின்ற ராகவைக் கண்டு அதிர்ந்து போய், அவனிடம் விவரம் கேட்டார்.
அவன் சொன்னதைக் கேட்ட அவருக்கு ரத்தக்கண்ணீர் வந்தது!
நந்தினி அவனை வளர்த்தது எப்படி? இன்று அவன் சாப்பாட்டிற்காக என்று வெயிட்டர் வேலை பார்ப்பது என்ன?
அவர் கடுங்கோபம் கொண்டு, அவனை அழைத்து சென்று தன் இன்ப்ளுயன்சில் ஒரு கல்லூரியில் பிபிஏ சேர்த்து விட்டார். கூடவே ஹாஸ்டலும் ஏற்பாடு செய்து விட்டார்!
அடுத்து பிஜி படிக்க சொல்லி அவர் சொன்ன போது ராகவ் அதை மறுத்து விட்டு ஒரு வேலையில் சேர்ந்து விட்டான்!
அவனின் முதலாளி அவனுக்கு சிறு வயதில் இருந்தே பழக்கமான, அவனின் கிரிக்கெட் தோழன்! அவர்கள் கிரிக்கெட் டீமில் சீனியர்!
அவன் அப்போதே கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து விட்டு, சிறிய அளவில் தன் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக ஆரம்பித்த அந்த கம்பெனி, ராகவின் டெடிகேசனான உழைப்பால், திறமையான மார்கெட்டிங் உத்திகளால், சர் என்று அதன் கிராப் மேலே ஏறி விட்டது!
ராகவின் நுனி நாக்கு ஆங்கிலம், அந்த கம்பெனிக்கு நிறைய குளோபல் ப்ராஜெக்ட்களை கொண்டு வந்தது!
அவர்களே எதிர்பார்க்காத அளவில் இருந்தது அந்த கம்பெனியின் வளர்ச்சி!
அதற்கு அடித்தளம், ராகவின் மார்க்கெட்டிங் திறமை, ப்ளஸ் சேல்ஸ் ஸ்கில்ஸ்! கூடவே மிகவும் பலமான டெக்னிக்கல் டீமும்!
இப்போது ராகவ் கை நிறைய சம்பாதிக்கிறான், சீக்கிரம் அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்ய வேண்டியது தானே என்று உறவுகள் நச்சரிக்க, ராஜேந்திரன் வேறு வழியில்லாமல் அவனின் ஜாதகத்தை எடுக்க வேண்டியிருந்தது!
அப்போது ஈஸ்வரி அவரிடம் தீர்மானமாய் சொல்லி விட்டாள்.
“அவனுக்கு கல்யாணம் கில்யாணம் பண்ணி வச்சி, சொத்துக்கு வில்லங்கத்தை உண்டு பண்ணின, நான் அப்படியே தூக்கில் தொங்கி விடுவேன், சும்மா இல்ல, போலீஸ்க்கு லெட்டர் எழுதி வச்சிட்டு!
என் சாவுக்கு நீயும் உன் பிள்ளையும் தான் காரணம்னு!”
இராஜேந்திரன் அதிர்ந்து தான் போனார். அவள் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போகக் கூடியவள் என்பதால், அவர் அந்த முயற்சியைக் கை விட்டார்.
ஆனால் அவர் சமூகத்திற்கு முன்பாக அப்படி இருந்து விட முடியவில்லை!
எனவே பார்ப்பவர்களிடம் எல்லாம்,” நம்ம ராகவிற்கு பொண்ணு பார்த்துக் கொண்டிருக்கிறேன், எதாச்சும் பொருத்தமான பொண்ணு இருந்தா சொல்லுங்க” என்பார்!
பெரும்பாலும் ஈஸ்வரியைப் பற்றி அறிந்தவர்கள், அவரிடம் மேற்கொண்டு எதுவும் பேசவே மாட்டார்கள்!
அவளைப் பற்றி தெரியாதவர்கள், “ஓ அப்படியா சரி, பையன் ஜாதகத்தைக் கொடுங்க” என்று கேட்டுவிட்டால், அவர் பான்ட் பாக்கெட்டில் இருந்து அவனின் ஜாதக ஜெராக்ஸ் காப்பியை எடுப்பவர், அவர்களிடம் காண்பித்து விட்டு, பின், நைசாக அவர்கள் கையில் இருந்து அதை மீண்டும் வாங்கி தன் பாக்கெட்டிலேயே வைத்துக் கொள்வார்!
இந்த ட்ரிக்கை ரொம்ப நாள் கழித்து தான் உணர்ந்தார்கள் உறவினர்கள்!
உணர்ந்தவர்கள் சும்மா இருக்க வில்லை! நேராக சென்று பார்த்தசாரதியிடம் சொல்லியும் விட்டார்கள்!
அதன் பின் தான், அவர் தமிழரசு வீட்டிற்கு வாணியைப் பெண் கேட்டு வந்ததும், பின் வித்யா ராகவ் கல்யாணம் நடந்ததும்!
தான் இத்தனை முட்டுக்கட்டை போட்டும், இந்த ராகவ் பயலுக்கு கல்யாணம் நடந்து விட்டதே! என்று ஈஸ்வரிக்கு ஆங்காரம் தாளவில்லை!
தான் அவ்வளவு தூரம் மிரட்டியும் கூட அந்த குட்டி அவள் பேரென்ன ம்ம் வித்யா , அவனைத் தான் கல்யாணம் செய்துப்பேன் உன்னால ஆனத பார்த்துக்கோன்னு சொல்லிடுச்சே!
இதெல்லாம் சவால் விடுற அளவுக்கு இந்த ஈஸ்வரி கம்மியா ஆய்ட்டேனா! எல்லாம் இந்தமனுசன சொல்லணும், அவங்க சபையில் வச்சு கேக்கும் போது மறுக்க முடியலன்னு இங்க வந்து சாக்கு சொல்லிட்டு இருக்கு!
இவனுக்கு எல்லாம் சோத்துல விஷம் வச்சுக் கொல்லணும், இவனால் ஆக வேண்டிய காரியம் இன்னும் கொஞ்சம் இருக்கு! அதனால தப்பிச்சான்!
இதே சபை முன்னால் அசிங்கப்படக்கூடாது என்றுதான், இராஜேந்திரன் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடவே தொடங்கினார் என்பதை ஈஸ்வரி ரொம்ப ஈசியாக மறந்து விட்டாள்!
“என்னை மீறி இந்த கல்யாணத்தை நடத்தி வச்சுட்ட இல்ல, டேய் பார்த்தசாரதி கிழவா, உனக்கும் இருக்குடா” அவள் தொடர்ந்து கத்திக் கொண்டும், கையில் கிடைத்ததை தூக்கிப்போட்டு உடைத்துக் கொண்டும் இருக்க, இங்கே ஹாலில் அமர்ந்து கொண்டு டிவியில் பெப்சி உங்கள் சாய்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்!
—-
தாலி கட்டும் போதே வித்யா ஏதோ யோசனையில் இருந்ததை கவனித்து இருந்தான் ராகவ்!
அவனுள் அப்போதே சிறு புன்னகை!
இப்போது இந்த இரவு தனிமையிலும், அவள் அவன் அறையில் இருந்த அம்மா நந்தினி போட்டோ முன் நின்றுக்கொண்டு ஏதோ தனக்குள் முணு முணுத்துக்கொண்டு, ஏதோ மனப்பாடம் செய்து கொண்டிருப்பவள் போல, தன் கையால் மெதுவாக அவள் நெஞ்சில் குத்திக் கொண்டும் இருந்தாள்!
அவளையே சிரிப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் இப்போதைக்கு வருவதாக இல்லை என்பதுபோல உணர்ந்து, மெல்ல அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.
“என்ன செல்லம் பண்ணிட்டு இருக்க?” என்று அவள் கழுத்தில் முத்தமிட்டவாறே கேட்க,
“அதுவா, நான் எனக்கு நானே கவுன்சிலிங் கொடுத்துட்டு இருக்கேன்!” என்றாள் வித்யா!
“கவுன்சிலிங்கா, அதுவும் இன்னிக்கு போயா? எதுக்குடி செல்லம்?”
“அது வந்து .. மாமா சொன்னா கிண்டல் பண்ணி சிரிக்க கூடாது” என்றாள் பீடிகையுடன்!
ஏற்கனவே கிஸ் பண்ணினால் பாப்பா வந்திடுமா என்று கேட்டவள் தானே? இப்போதும் அந்த ரேஞ்சிற்கு தான் எதாச்சும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டவன், அதையே கேட்டும் விட,
“போ, மாமா, அன்னிக்கு ஏதோ தெரியாம கேட்டுட்டேன், இன்னும் அதையே சொல்லி கிண்டல் பண்ணிட்டு, இப்ப எல்லாம் நான் அப்படி இல்ல, எல்லாம் எனக்கு செலின் அக்கா சொல்லிக் கொடுத்துட்டாங்க!”
“செலின் அக்காவா, யாரு அது?”
“செலின் அக்கா என்னோட ஸ்கூல் சீனியர், ரெண்டு பேரும் எப்போதும் எதாச்சும் பனிஷ்மெண்ட் வாங்கி க்ரவுண்ட்ல தான் இருப்போம்.
அப்படி பிரண்ட்ஸ் ஆனோம். அவங்க பட்டிமன்ற பேச்சாளர் தெரியுமா, அவங்க ஹஸ்பன்ட் கூட லாயர்! லவ் மேரேஜ்! என்று சொன்னவள், அவங்க காதலுக்கு நான் தான் தூது அப்போது” என்றாள் மெல்லிய குரலில்!
“ஓ, இந்த வேலையெல்லாம் வேற செஞ்சு இருக்கியா? அது சரி!”
“இப்ப அவங்க எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டாங்க, மாமா! இனிமே நீ ஒண்ணும் என்னை கிண்டல் பண்ண முடியாது” என்றாள் கொஞ்சிக் கொண்டு!
“ஓ அப்படியா, அப்ப என்ன இப்ப மனப்பாடம் பண்ணிட்டு இருந்த, என்ன அவங்க சொல்லிக் கொடுத்ததை தான் மனப்பாடம் பண்ணிட்டு இருந்தியா?” என்றான் அவன் கிண்டலாகவே!
“அய்யோ அது இல்ல மாமா, நான் தான் சொன்னேனே, எனக்கு நானே கவுன்சிலிங் கொடுத்துட்டு இருந்தேன்னு!
அதாவது, மாமாவை இன்னிக்கு ரொம்ப சந்தோசமா வச்சுக்கணும், மாமாவுக்கு நல்லா கோஆபரேட் பண்ணனும், மாமா சொல்றபடி கேட்டுக்கணும், அப்புறம் கொஞ்சம் வலிக்குமாமே, வலிச்சாலும் பொறுத்துக்கணும்!” இன்னும் அவள் சொல்லிக் கொண்டே போக, ராகவ் அப்படியே உணர்ச்சிப் பெருக்கில் நின்று கொண்டிருந்தான்!
அவளை அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்,
“ஏய், மயிலு, இவ்வளவு லவ்வுக்கு எல்லாம் நான் ஒர்த்தாடி, ஏய் ஏண்டி இப்படி என் மேல பயித்தியமா இருக்க? நான் அப்படி என்னடி ஸ்பெசல் உனக்கு?”
“அதெல்லாம் எனக்கு சொல்ல தெரியாது மாமா. எனக்கு நீதான் உயிர், எல்லாமே நீதான்! நீ கண்ணை மூடிக் கொண்டு கிணத்தில் குதிக்க சொன்னாலும் குதிப்பேன்!” அவள் இறுகக்கட்டிக் கொண்டாள் அவனை!
கொஞ்ச நேரம் அவளை அணைப்பிலேயே வைத்து இருந்தவன்,
“ஆமா என்னமோ எல்லாமே தெரிஞ்சு வச்சுருகேன்னு சொன்னியே, எங்க நீ தெரிஞ்சு வச்சுருக்கிறதை கொஞ்சம் மாமா கிட்ட காட்டு” என்றான் குறும்பாக!
“ம்ம். இரு மாமா” என்றவள், அவன் நெற்றில் ஆரம்பித்து, கன்னங்களில் தொடர்ந்து அவன் இதழ்களில் முத்தமிட்டாள்!
“ஏண்டி இந்த ஆர்டரை மாத்தவே மாட்டியா?” என்று கிண்டல் செய்தவன்,
“ம்ம்.. அப்புறம்” என்று கேட்க,
“அதுதான் தெரியல மாமா” என்றாள் கொஞ்சம் வெக்கத்துடன்!
“எனக்கு இந்த பழைய ப்ளாக்அண்ட்ஒயிட் பட காமெடி ஒண்ணு, தங்கவேல் ஒய்ப் பூரி செய்வது பத்தி சொல்வது, என் தாத்தா இருக்கும் போது அவரோட சேர்ந்து பார்த்து இருக்கேன், அது தாண்டி ஞாபகம் வருது! உன்னைப் பார்த்தால்!”
“அது என்ன காமெடி மாமா?”
“ம்ம் இப்ப ரொம்ப முக்கியம்” என்று சொல்லியவன், அவளைத் தூக்கி கொண்டு சென்றான்.
அவளை, காணக் கிடைக்காத பொக்கிஷம் போல எண்ணி, ரொம்பவும் மென்மையாக கையாண்டான்.
வித்யாவும் அவனை சந்தோசப்படுத்தி சந்தோசமானாள்.
———-
ராகவின் கைவளைவில் படுத்துக் கொண்டு வித்யா கேட்டாள்.
“மாமா நீ ஹேப்பியா மாமா?”
“ரொம்ப” என்று சொல்லி அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“அப்ப, நமக்கு பாப்பா வந்திடும் தானே?”
“கட்டாயம் வந்திடும், இன்னும் கொஞ்ச நாளில்!”
‘உனக்கு எத்தனை குழந்தைகள் வேணும் மாமா?”
‘எனக்கு ரெண்டு வேணும்! ஒரு பெண், அப்புறம் ஒரு ஆண்!”
“ஆனா எனக்கு இதில் ஆறு, அதில ஆறு வேணும் மாமா!” என்றவளை அவன் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்து விட்டு,
“இப்படி சினிமாத்தனமா எல்லாம் பேசக்கூடாது மயிலும்மா, ப்ராக்டிக்கலா யோசிக்கணும்!
பனிரெண்டு பிள்ளைங்கள எல்லாம் பெத்து, நல்லபடியா வளர்த்து, அவங்களுக்கு நல்ல சாப்பாடு, படிப்பு அப்புறம் தேவையான சொத்து எல்லாம் சேர்த்து வைக்கிறது எல்லாம் சாத்தியமே இல்லை!
எந்த விஷயத்தையும் மனசுல நினைச்ச மாத்திரத்துல வெளியே சொல்லிடக் கூடாது!
நாம பேசுற வார்த்தைகளோட, பேசாத வார்த்தைகளுக்கு என்னிக்கும் மதிப்பு அதிகம்!
இது வரை எப்படியோ, இனி நீ ராகவ் பொண்டாட்டி, இனி எல்லோரும் உன்னை கொஞ்சம் மதிப்பா நினைக்கிற அளவுக்கு உன் நடவடிக்கைகள் இருக்கணும்’!
நீ, இங்க என்கிட்ட இந்த நாலு செவத்துகுள்ள, எப்படி வேணுமின்னாலும் நடந்துக்கோ, ஆனா வெளியில மெச்சுர்டா நடந்துக்கணும்! அட்லீஸ்ட் காட்டிக்கவாவது செய்யணும்! அதுக்கு சட்டுன்னு வாயைவிடாம இருக்கணும்! என்ன சரியா?
அப்புறம் நீயே நினைச்சுப்பாரு, பனிரெண்டு டெலிவரிய உன் உடம்பு தாங்குமா சொல்லு, ஒவ்வொரு டெலிவரியும் ஒரு பொண்ணுக்கு மறுஜென்மம்னு சொல்லி கேள்விப்பட்டுருக்கேன்!
உன் உயிரோட அத்தனை ரிஸ்க் எடுக்க விட்டுடுவேனா நான்!”
“இல்ல மாமா அதுக்கும் நான் ஒரு ஐடியா யோசிச்சு வச்சுருந்தேன்!”
“ஐடியாவா? என்ன அது?”
‘அதுவா, என்னோட யூட்ரஸ்ல ஒரு ஜிப் வச்சு தைச்சுட்டா போதுமே, ஒவ்வொரு வாட்டி பாப்பா வந்தவுடன், அப்படியே அந்த ஜிப்பை திறந்து பாப்பாவை வெளியில் எடுத்திடலாமே! சும்மா சும்மா அதை கிழித்து தையல் போட்டா தானே ஆபத்து!”
“உனக்கு யாருடி இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி கொடுக்கிறது?”
“அதுவா வருது மாமா!”
“நீ ஆசைப் படுறியேன்னு உன்னை டெய்லரிங் கிளாஸ் அனுப்புனதுக்கு, கழுத.. எந்த ஐடியாவை எங்க கொண்டு வந்து இம்ப்லிமென்ட் பண்ணுற”, அவன் காதைப் பிடித்துத் திருகினான்.
“போ மாமா” என்று சொல்லி, அவனை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டு, “டயர்டா இருக்கு, நான் கொஞ்சம் தூங்குறேன்” என்று சொல்லி கண்களை மூடி தூங்கி விட்டாள் அவனின் செல்லமயில்!
“குமரி உருவம், குழந்தை உள்ளம் இரண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ”
ராகவ் மனதில் ஓடியது இந்த பாடல்!
error: Content is protected !!