Skip to content
Post Views: 1,308
கீதம்
16
விசாரணைக்கு என்று நேரம் காலம் பாராமல் ஓடி, அவர்களை சிறையில் அடைத்த பின்பே அமைதியானார் விஜய். தங்கை வீட்டுக்கு வந்தவர் நந்துவையும் மேலே வர சொல்லி பேசி கொண்டு இருந்தார்.
” இப்போதான்மா எனக்கு நிம்மதியா இருக்கு. இவனுங்க வாயில் இருந்து ஒன்னு கூட வெளியே எடுக்க முடியல. கல்லுளிமங்கன் மாதிரி வாயை மூடிட்டு கமுக்கமா எல்லாம் பண்ணி இருக்கானுங்க. ” நெஞ்சில் கையை வைத்து கொண்டு ஆழ்ந்த பெருமூச்சு விட்டார்.
” டென்ஷன் ஆகாத அண்ணே!, அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே.”
Advertisement
” இந்த வேலையில என்னிக்கு அமைதியா இருக்க முடியுது. அது எல்லாம் கனவுல தான் நடக்கும். அப்பப்பா! எப்படி எல்லாம் தப்பு பண்றதுனு புக் போடலாம் போல. அதுவும் நேக்கா யாருக்கும் தெரியாம மறைச்சு பண்றதுல இவனுங்களுக்கு எல்லாம் பட்டம் கொடுக்கலாம் போலடா., ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியாம மறச்சு வைக்க கூடிய விஷயமா ? ” சலிப்புடன் தான் பதில் பேசினார்.
” ஆமாண்ணே, இவரும் சொல்லிட்டு இருந்தாரு, இப்போ வேணா அந்த பொண்ணுங்களுக்கு இது பத்தி விவரம் தெரியாம இருக்கலாம். அவங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை, டெலிவரின்னு வரும் போது மனசளவில் பாதிப்பு வர வாய்ப்பு இருக்குனு ரொம்ப வருத்தப்பட்டார்.” சற்று கரகரத்த குரலில் சாவித்ரி சொல்ல.
” சார், ரெண்டு மூணு பொண்ணுங்க காணாம போயிட்டாங்கனு சொன்னாங்களே. அது என்னாச்சி ?” என்றாள் நந்து.
Advertisement
” கொஞ்சம் பெரிய பொண்ணுங்கமா அவங்க. டென்த் வரை படிச்சிருக்காங்க. இவனுங்க எதோ தப்பா பண்ண பார்குறானுகன்னு பயந்துட்டு எங்கேயோ ஓடி போய்ட்டாங்க. அவங்களையும் தேடிட்டு இருக்கேன் . இன்னைக்கு வேற இவனுக மேல புதுசா ஒரு கம்பிளைன்ட் வந்துருக்கு. அதையும் பார்க்கணும்.” வருத்தம் கலந்து குரலில் கொஞ்சம் கரகரக்க தான் பேசினார்.
Advertisement
” எனக்கு இதை நினைச்சாலே ரொம்ப கஷ்டம்மா இருக்கு சார். அவங்க பியூச்சர்ல எதுவும் ப்ராப்ளேம் வந்தா, என்னாகுமோன்னு பயமா கூட இருக்கு. ?”
” பொண்ணுங்கன்னாலே கிள்ளுக்கீரையினு தானம்மா பல பேரு நினைச்சுட்டு இருக்காங்க. என்னைக்கு திருந்த போறாங்க.” ஆதங்கத்தில் புலம்பினார் சாவித்ரி.
” ஹ்ம்ம்.., இவனுங்க பண்ண பிராடு தனத்துல பிறந்த குழந்தைங்க, அந்த பொண்ணு மாதிரி பிறந்துட்டா என்ன பிரச்சனை வெடிக்குமோ ? அதை நினச்சாலே .., ” அடுத்த வார்த்தை சொல்ல கூட நா எழவில்லை. அவருக்கும் மனம் கனத்து விட்டது.
Advertisement
சற்று நேரம் அமைதியில் கழிய நந்து தான் பேச்சை மாற்றினாள்.
” இனி அவனுங்க வெளியே வர முடியாது தானே. ஜாமின்ல கூட விட்றாதீங்க. வருஷ கணக்குல உள்ளே வச்சா தான் அடுத்தவனுக்கும் பயம் வரும்.” நந்து சொல்ல
” அதெல்லாம் வர முடியாது. இன்னொரு கேஸ்ல வேற மாட்டி இருக்கான். பாலியல் புகார்ல ஒரு பொண்ணை கொலை செஞ்ச கேஸ வேற தோண்டி எடுத்துட்டேன். கான்பர்மா வரவே மாட்டாங்க. என்ன இந்த கேஸ்ல ஒரே ஓரு வருத்தம். நீங்க ரெண்டு பேரும் பண்ண நல்ல காரியத்தை வெளியே சொல்லாம மறைச்சுட்டேன். ” என்றார் ஆதங்கமாய்.
” விடுங்க சார். இதுக்கெல்லாம் கவலைப்பட்டுகிட்டு. அடுத்து அந்த பொண்ணுங்க வாழ்க்கைக்கு என்ன பண்ணனு யோசிப்போம். அப்ப தான் எனக்கு முழுசா சந்தோசம் கிடைக்கும்.” அவளின் மனதை எண்ணி பெருமை கொண்டது ஆரவ் மனம்
அப்போது தான் ரம்யாவோடு போனில் பேச ஆரம்பித்தவனுக்கு அட்டென்ட் செய்ததும் நந்துவின் குரலை கேட்டதும், அவளை பார்க்காமல் இந்த ஓரு வார தண்டனை, நாளையோடு முடிந்து எப்போடா ஊருக்கு கிளம்பி அவள் முன் சென்று நிற்கலாம் என்றே மனம் துடித்தது.
கையில் கட்டுடன் Op யில் அமர்ந்தால் பலருக்கும் பதில் சொல்லி மாளாது என்றே கீழே செல்லாமல் இருந்தான். கேஸ் பற்றிய முடிச்சு அவிழ்ந்து மனம் சிறிது அமைதியுற, மனம் கவர்ந்தவளை பற்றிய நினைவுகள் மன்னன் மனதில் புயலினை போல சுழற்றி அடித்து, அவனையும் தன்னோடு இணைத்து சுழல செய்தது. அந்த வேதனை தாளாமல் தான் தர்ஷி வீட்டுக்கு கிளம்பி வந்து இருந்தான் ஆரவ். இரு நாட்களுக்கு முன்னர் தான் மருத்துவமனை ஒன்றினை வாங்கி முடித்து இருக்கும் நிலையில், அதன் ரிஜிஸ்டிரேஷன் வேலைக்காக என வந்து உள்ளான்.
எத்தனை யோசித்து பார்த்தும் அவள் ஏன் தன்னை நிராகரித்தால் என்றே அவனுக்கு புரியவில்லை. ஒரு வேளை வேறு ஒருவனை காதல் செய்கிறாளா ?என்ற நினைவே அவனை கொன்றது.
அவளுக்கும் தன்னை பிடித்து உள்ளதா, தன்னை தவிர்க்க எண்ணி தடுமாறியது எதனால் என ஏதோதோ தோன்ற எப்போதடா அவளை பார்த்து பேசுவோம் என்றே நிலை கொள்ளாமல் தவித்தான்.
**
” ஆரவ் தம்பி, நீங்க எப்போ பாரின் கிளம்புவீங்க” என்ற சகுந்தலையின் கேள்வியில் திரும்பி பார்த்தவன்.
” எப்படியும் அடுத்த மாசத்துக்குள்ள கிளம்பிருவேன்மா. விசா கிடைச்ச உடனே கிளம்ப வேண்டியது தான், ஏன்மா கேக்குறீங்க.” என்றவனிடம்.
” இவளுக்கு வேலை பார்க்கனு புதுசா ஆஸ்பத்திரி வாங்கிட்டோம். அண்ணாவோடது தான் வாங்கி இருக்கோம். அவரு பார்த்துக்குவாரு தான் இருந்தாலும் இதை எல்லாம் இவ பார்த்துக்குவாளான்னு பயமா இருக்கு தம்பி. விளையாட்டு பிள்ளை வேற, என்ன பண்ணுமோ ? ” என கவலையாக கேட்டவரிடம். தர்ஷி படிக்க உதவி செய்தவர் தன் மகன் புதிதாக தொடங்க உள்ள மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாலும், பண நெருக்கடி நிலையிலும் அதை விற்று விட முடிவு செய்திருந்தார். ராம்நாடு நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற மருத்துவமனை என பெயர் பெற்று இருந்ததால் இவர்களே அதை வாங்கிவிட்டனர். தானே அவளுக்கு அனைத்தையும் கற்று கொடுத்து உதவி செய்கிறேன் என சொன்னதால் வேறு எதை பற்றியும் யோசிக்கவில்லை.
” பயப்படாதிங்கமா, ப்ராக்டிஸ் பண்ணா தான் இவளுக்குனு பேஷண்ட் தனியா வர ஆரம்பிப்பாங்க. இல்லைனா புது டாக்டர்னு எல்லாரும் வர தயங்குவாங்க. ஒரு வருஷம் வேலை எல்லாம் கத்துட்டு, அப்புறம் MD சீட்டில் உட்கார்ந்து வேலை பார்க்கட்டும். அதுவரை முதலாளியம்மான்னு யாருக்கும் சொல்ல வேண்டாம். அங்க உள்ள சூழ்நிலை என்னனு இவளும் கத்துக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.” என்றவனை பார்த்து கொண்டு இருந்தவள்.
” பார்த்தியா, எனக்காக எவ்வளவு யோசிக்கிறானு. இவனிருக்க பயமெதற்கு, ” என அவனை காட்டி தாயிடம் கலாய்த்தவளை கண்டு.
“சும்மா இருடி , பிள்ளையை எப்போ பாரு எதாவது சொல்றது தான் உனக்கு வேலைய போச்சு. இவளை நான் என்னனு சொல்றதுன்னு தெரியல. ” சடைத்தவரை.
” உங்க மகனை பத்தி நான் தப்பா சொல்லல தாய்குலமே, எனக்கு பதிலா என்னை பத்தி யோசிக்க நீங்க இருக்கீங்கன்னு தான் சொல்றேன்” என்றாள் கண் சிமிட்டி.
” தர்ஷி , எல்லா நேரமும் நமக்காக ஒருத்தங்க கூடவே இருக்க முடியாது. சுயமா நீயே பண்ண ஆரம்பி, புது விடு, புது ஹாஸ்பிடல் நீ எப்படி மேனேஜ் பண்ணுவியோன்னு தான அம்மாவே பயந்துட்டு கவலைபடுராங்க “
” அதெல்லாம் நல்லா பார்த்துக்குவேன். இன்னும் என்ன சின்ன பிள்ளை மாதிரி நினைக்க வேண்டாம்னு சொல்லு.”
” பேச்சுல காட்டாதே, உன்னோட செயல்ல காட்டு, அப்போ நம்புவாங்க.., ” என்றவனிடம்.
” இன்னும் ரெண்டே வருசத்துல என் திறமை எல்லாம் காட்டி, எவ்ளோ பெரிய டாக்டர் ஆகுறேன்னு பாருடா, ” என சவால் விட்டவளிடம்.
” அல் தி பெஸ்ட் மேடம், மொத பண்ணுங்க, அப்புறம் சொல்லுங்க. “அவளிடம் சொல்லி கொண்டு இருந்தவன் கையில் கட்டி இருந்த வாட்சில் மணியை பார்த்து கொண்டு
“எனக்கு லேட்டாகுது , இப்போ சாப்பிட்டு நான் ஊருக்கு கிளம்புனா தான் பார்க்க முடியும்” என்றான் வேகமாக.
“யாரை பார்க்கணும்? “
அய்யோ உளறிட்டேனே ஓரு நொடி ஜெர்க் ஆனவன் ” என்னை பார்க்க எத்தனை பேர் வெயிட் பண்றாங்க தெரியுமா? அய்யா ரொம்ப பிஸி.” காலரை தூக்கி விட்டு ஆரவ் கெத்து காண்பிக்க.
” எத்தனை பேரு வெயிட் பண்ணாலும் நீ பார்க்க மாட்டேன்னு தெரியும் அப்புறம் என்னடா ? ” சிரித்து கொண்டே அவனை டேமேஜ் செய்தாள்.
” ஆமா, பார்த்தா மட்டும் உடனே ஓகே சொல்லுற போறாங்க., என் கவலை எனக்கு , என்ன சொல்ல போறாளோ ? ” மனதில் எண்ணி கொண்டே “” பார்க்கும் போது நடக்க வேண்டியது நடக்கும், இப்போ நகரு.,” கிளம்ப தயாரானவனிடம் வம்பிழுத்து கொண்டே அனைத்தும் எடுத்து வைக்க உதவி செய்தாள்.
**
அவனை பார்க்காமல் தவிர்த்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையில், எங்கு நோக்கினும் அவன் ஞாபகமே. அவளால் எப்போதும் போல் ஒன்றி பணியில் ஈடுபட முடியவில்லை. கைகள் தானாக வேலை செய்தாலும் நினைவுகள் அவனோடு சென்று விடுகிறது. அதை அவளும் உணர்ந்து இரு நாட்கள் ஆகிறது.
இத்தனை நாட்கள் டாக்டர் என்ற நிலையில் தான் எல்லோரிடமும் எப்போதும் அன்பாக பேசுவது போல அவனிடமும் பேசுவதாய் எண்ணி இருந்தாள். அதையும் மீறி ஏதோ ஒரு ஈர்ப்பு அவனிடம் உண்டென அவளும் அறிவாள். சாவித்திரி அவனை பற்றி பேசி பேசி என்றோ அவனை பாராமலே அவனை அவளுக்கு பிடிக்கும்.
கடந்து சென்ற நாள்களில் அவனை பற்றி நேரில் அறிந்து, இன்னுமே மனம் தத்தளித்தது. அதுவும் அவன் தன்னை மனைவி என்று உறுதியாய் கூற சுக்கு நூறாய் அவளின் உறுதி உடைந்து விட்டது. இரவில் நித்திரை தொலைத்து உறங்காது உலன்றாள்.
தன் தாயின் நிலை அறிந்து, தம்பியை வளர்க்கும் பொருட்டு தன் சுகமனத்தையும் பெரிதாக எண்ணாது, தியாகம் செய்தவள், எத்தனையோ ஆண்கள் அவள் பின்னே வந்து சுற்றி காதலை சொல்லி, கத்தி கூச்சல் போட்ட போதும், ஒதுக்கி தள்ளி நிமிர்வாய் நின்றவளால், இவன் மிதான தன் பிரியத்தை எப்படி ஏற்று கொள்ள முடியும்? அவனை பாராமலும் இருக்க முடியாது. அவனிடம் வேலை செய்து கொண்டு, அந்த ஊதியத்தில் தன் நிலையை வளர்த்து கொண்டு இருப்பவளால் அவனை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? இந்த கேள்வியே அவளை கொல்லாமல் கொன்றது.
இரு நாட்களுக்கு முன் அன்றுஅவனுக்கென புதிதாக அமைத்த OP அறையில் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தவள், அவன் பெயரை தாங்கிய பிரிஸ்கிரிப்சன் பேடை எடுத்து அடுக்கும் போது, தன்னை அறியாமல் ” எங்கேடா போன என்னை விட்டுட்டு ” என உதடுகள் உச்சரித்ததை அறிந்து, பதட்டமான நிலையில் யாரும். கண்டு கொண்டனரா என சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். யாருமில்லை என அறிந்த பின்பே நிம்மதி கொண்டாள். ஆனால் அவன் தன்னை இத்தனை தூரம் பாதித்துள்ளான் என்பதை அன்று தான் அறிந்தாள்.
” என் மனசு உன்னை தேடுது. யாரையும் ஏத்துக்க கூடாதுன்னு நினச்ச என்னை சாய்ச்சிட்ட., உன்னை நினைக்க மட்டும் தான் முடியும். உன்னை கல்யாணம் பண்ணா எல்லாரும் என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா ? குப்பை மேடு கோபுரத்திற்கு ஆசைப்பட கூடாது. எட்டி நின்னு வேணும்னா ரசிக்க முடியும். உள்ளேயும் போக முடியாது. சாமியும் கும்பிட முடியாது.” ஒரு மனம் அவனை தவிர்க்க சொல்ல.
மறுமனமோ ” அவரு தானே உன்னை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டது. நீயா போய் அவரை லவ் பன்றேன்னு சொல்லி கவுக்கலயே அப்புறம் என்னடி ? ” முரண்டு பிடிக்க இருதலைக் கொல்லி எறும்பினை போல தவித்தாள்.
யோசித்து யோசித்து மண்டை சூடாக்கி நிற்கும் போது தான் ராஜி இவளை காண மருத்துவமனைக்கே வந்துள்ளாள் என்பதை அறிந்தாள்.
” ராஜி, என்னடி புதுசா என்னை தேடி கிளினிக்குக்கே வந்துட்ட.? ” தன்னை காண வந்தவளை படி அருகே அழைத்து சென்று நந்து பேச்சினை துவங்கினாள்.
“மேடம் தான் வீட்டுல தங்குறதே இல்லையாமே. புல்லா இங்கேயே இருந்துட்டு ராத்திரிக்கு மட்டும் தூங்க தான் வர்றியாம். அம்மா புலம்புறாங்க. ஏண்டி இப்படி இருக்க, உன்னை எல்லாம் என்னதான் பண்றதோ? .” ராஜி அங்கலாய்க்க.
” ஏய், செம் லீவுல இங்கே புல் டே ஒர்க் பண்ண போறேன்னு அம்மாட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன். திருப்பி ஏன் போறேன்னு கேட்டா என்னை என்ன செய்ய சொல்ற?” என கடுப்புடன் கேட்க.
” எனக்கென்னமோ அது காரணம் இல்லனு தோணுது. நிஜமா அது மட்டும் தானா?” அவளை கூர்ந்து பார்த்து கொண்டே நம்பாமல் ராஜி கேட்க
” உன்கிட்ட ஏதாவது சொல்லாம நான் செஞ்சு இருக்கேனா. அப்புறம் என்னடி ..,”
” இந்த புலி இப்படியெல்லாம் பதுங்காதே. சம்திங் ராங். ஒழுங்கா சொல்லு. இல்லை பிச்சிபுடுவேன்..,” மிரட்டி கேட்க
” எதுவும் இல்லடி ” என இவளும் சாதிக்க
” சரி அப்போ நம்ப எல்லாரும் நாளைக்கு மால் போகலாம். லீவு சொல்லிட்டு வந்துரு.” பட்டென்று வேறொன்றுக்கு ராஜி தாவி பதிலை தெரிந்து கொள்ள இவள் முகம் பார்க்க.
நாளை அவன் வந்து விடுவானே என்ற கலக்கத்தில் ஏற்கனவே தடுமாறி இருந்தவள் ஏதோ யோசனையில் ” அவர் ஊருக்கு போற வரை நான் எங்கேயும் வர மாட்டேன். நீங்க வேணா போங்க. என்னை எதிர்ப்பார்க்கத்திங்க ” என சட்டென்று சொல்ல .
” அந்த அவரு.. எவருன்னு சொல்லு. அப்பறம் நானும் எதிர்பார்க்கள ” இழுத்து பேசி இசைப்பாட்டு பாட
” அது… ” என தயங்கியவளை, “இங்கே பாரு உன்னை சின்ன வயசுல இருந்து எனக்கு தெரியும். எவன் பார்த்தாலும் அடிச்சுட்டு வர்றவ நீ. இப்போ உன் முழியே சொல்லுது. யாருகிட்டயோ கவுந்துட்டன்னு. யாருடி அவன். ஒழுங்கா சொல்லு.”
” அவன்னு எல்லாம் சொல்லாத. பிஞ்சிடும். மரியாதையா பேசு” என முகம் திருப்ப,
” சரிமா. எங்க அண்ணனை கண்ணுல காட்டு. நான் காலுல விழுந்து கும்புடுறேன். சீக்கிரம் இவளை கட்டி இழுத்துட்டு போக சொல்றேன்.” தன்
தோழியின் காதலை அறிந்து சந்தோசத்தில் அவள் முகம் மலர.
” அது எல்லாம் கடைசி வர என் வாழ்க்கையில் நடக்காதுடி. வீணா சந்தோசப்படாதே, என் மனசுக்கு அவரை பிடிச்சு இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி நீ நினைக்குற மாதிரி கல்யாணம் எல்லாம் நடக்கவே நடக்காது.” நொடியில் முகம் வாடி ” அந்த பேச்சை விடுடி” என்றவளிடம்.
” அப்படி யாரை உனக்கு பிடிச்சதுன்னு சொல்லுடி. நான் சேர்த்து வைக்கிறேன்.” அவள் கை பிடித்து, முகத்தை பற்றி ஆவலோடு கேட்க.
” சொல்றேன்ல, நடக்காதுன்னு. விடு, நினைச்சுட்டு இருந்தே என் லைவ் முடிச்சுருவேன். கொஞ்ச நாள் கழிச்சு ஊருக்கு போய்டுவாரு. இருக்கும் போது மனசுல நிறைச்சு வச்சிட்டு மிச்ச காலத்தை ஒட்டிருவேன். அவரு யாருன்னு மட்டும் கேட்காத. சொல்ல மாட்டேன். என்னை தவிர யாருக்கும் தெரிய கூடாதுனு தான் நினைச்சேன். ஏதோ வாய் தவறி சொல்லி உன்கிட்ட மாட்டிகிட்டேன். நீயும் இதை மறந்துரு, இப்போ கிளம்பு, அப்புறம் பேசலாம்.” அவளை வம்படியாக வெளியேற்றி விட்டே இவள் உள்ளே சென்றாள்.
error: Content is protected !!