Skip to content
Post Views: 6,819
அத்தியாயம் – 14
“ஹாய் ஐ அம் ரஞ்சித்!!!” என தனக்கு முன்னால் நீட்டப்பட்ட கரத்தையே வெறித்திருந்தாள் வந்தனா.
Advertisement
நிச்சயம் இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த முகத்திலே தெரிய, அதை உணர்ந்தது போல் ஆர்ப்பாட்டமாய் சிரித்து வைத்தான் அவள் எதிரில் இருந்தவன்.
Advertisement
அதில் தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த வந்தனா அவன் முகத்தை நோக்க,
Advertisement
“ஹப்பாடா பார்த்துட்டிங்களா?? நான் கூட உங்களுக்கு கழுத்து சுளுக்கு பிடிச்சுக்கிச்சு போல, உங்களை நிமிர வைக்க வாலினி வாங்கிட்டு வரணுமோன்னு நினைச்சேன்.. நல்லவேளை நிமிர்ந்து பார்த்துட்டீங்க!!” என சொல்லிவிட்டு அவன் மீண்டும் வெடிச்சிரிப்பு சிரிக்க,
Advertisement
‘பைத்தியமோ இவன்’ என்று தான் அவனைப் பார்த்திருந்தாள் வந்தனா.
“என்ன?? நான் லூசான்னு டவுட்டா இருக்கா??” என அவனே அதையும் கேட்டு வைக்க,
வந்தனா அவசரமாய் இல்லை என்பதாய் தலையசைத்து மறுத்தாள்.
“நீங்க நினைச்சாலும் நான் உங்களை ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்.. நான் ரொம்ப ஜோவியல்” என தன்னைக்குறித்து அவனே பெருமை பேச,
‘என்னை விட்டுவிடேன்’ என்பதைப் போல் அவஸ்தையாக நெளிந்தாள் வந்தனா.
அதற்குள் இவளைக் காக்கவே மலர் அங்கே வந்துவிட, “இந்தா புள்ளை யாரு இது?? எதுவும் வம்பு பண்ணானா?? எதுக்கு இப்படி பயந்து போய் நின்னுகிட்டு இருக்க நீ??” என வந்தனாவிடம் கேட்ட மலர், அவள் பதிலுக்குக் கூட காத்திராமல்,
“யோவ்!! யாருய்யா நீ?? காலேஜுக்குள்ள வந்து ஒரு புள்ளைகிட்ட கலாட்டா பண்ற அளவுக்கு பெரிய டேஷா நீ??” என ரஞ்சித்திடம் அவள் எகிறிக் கொண்டு இருக்க,
“மீ?? யோவ்???” என அவளின் பேச்சில் அதிர்ந்து, மலரைக் கேள்வியாக நோக்கினான்.
“என்ன மீ அம்மின்னுட்டு?? இப்படி போற வார பொம்பளைப் பிள்ளைககிட்ட இனிமேல் வம்பு வளர்க்குறதைப் பார்த்தேன்.. அந்த அம்மிக்கல்லை உன் மண்டையில தூக்கிப் போட்டிருவேன்.. ஜாக்கிரதை!!” என எச்சரித்து விட்டு அவள் வந்தனாவை இழுத்துக் கொண்டு முன்னே நடக்க,
“எக்ஸ்க்யூஸ் மீ!! நில்லுங்கங்க!! நான் யாருன்னு தெரியாம நீங்க பாட்டுக்கு பேசிட்டு போய்ட்டே இருக்கீங்க!!” என அவனும் பின்னாலே ஓடி வந்தான்.
“ஆமா இவர் பெரிய ஜனாதிபதி!! போயா அங்குட்டு!! அப்பறம் போலீஸ்ல புடிச்சு கொடுத்துருவேன்” என மலர் மிரட்ட,
“ஒரு போலீசையே எப்படிங்க போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுப்பீங்க??” என்றான் சிரித்துக்கொண்டே அவன்.
“எதேய்???” என மலர் புரியாமல் விழிக்க,
“அவர் திருச்சி டி.எஸ்.பி டி!!” என மெதுவாய் அவளிடம் முணுமுணுத்தாள் வந்தனா.
தன் நடையை நிறுத்தி, நன்றாக அவனை மேலிருந்து கீழாக மலர் ஆராய்ச்சியாகப் பார்க்க,
அவனும் கையை இடுப்பில் ஊன்றி ஸ்டைலாக கண்ணாடியை சரி செய்து, ‘எப்புடி??’ என்பதைப் போல் புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க,
“பைத்தியமே தான்!!” என முணுமுணுத்த மலர்,
“நீங்க யாரா வேணும்னா இருந்துட்டு போங்க!! மொதல்ல எதுக்கு இவ கிட்ட கலாட்டா பண்ணிட்டு இருக்கீங்க??? போலீஸ்னா என்ன வேணும்னாலும் பண்ணலாமா?? சட்டம் எல்லாருக்கும் ஒன்னு தான்!!” என மலர் அப்போதும் மல்லுக்கு நிற்க,
தான் யார் என்று அறிந்த பின்னும் இப்படி தைரியமாக எதிர்த்து நின்ற மலரின் மேல் சுவாரசியம் கூடியது ரஞ்சித்திற்கு.
“இந்தா!! இந்த பார்வையாலேயே பட்டம் விடுற வேலையெல்லாம் இங்க வேண்டாம்.. கண்ணுமுழியை நோண்டி கருவாட்டுக் குழம்புல போட்டு கொதிக்க விட்டிடுவேன் ஜாக்கிரதை!!” என அவனின் பார்வையைக் கண்டு மலர் மிரட்ட,
அதற்கும் ஆரப்பாட்டமாய் சிரித்து வைத்தான் ரஞ்சித்.
“ஷ்!! மலர்!! வா போகலாம்!!” என வந்தனா அவளின் கைபிடித்து இழுத்து முன்னே செல்ல,
“இந்தாங்க வந்தனா!! நில்லுங்க!! நேத்து வீட்டுல தான் பேசலைன்னு, என் வேலையெல்லாம் உங்களுக்காக விட்டுட்டு இங்க வந்தா இப்போவும் என்னைக் கண்டுக்காம போறீங்க!!” என அவன் வழிமறிக்க,
“வீட்டுக்கு வந்தாங்களா??” என்றாள் மலர் குழப்பமாக,
ஏனெனில் நேற்று அவளுடைய குடும்பம் மொத்தமும் பழனி சென்றுவிட்டதால், இவர்களின் வீட்டில் நடந்தது தெரியாமல் போக, அவள் கேள்வியாய் வந்தனாவைப் பார்த்து நிற்க,
“அட அவங்க கூச்சப்படுறாங்க!! விடுங்க அவங்களை.. நான் தான் நேத்து அவங்களை பொண்ணு பார்த்திட்டு வந்தேன்.. நிச்சயத்துக்கு இன்னைக்கு நாள் குறிக்கப் போறாங்க” என அவன் லேசாய் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்ல,
மலர் அதிர்ந்து போய், ‘இந்தப் பைத்தியம் உளறுவது உண்மையா??’ என்பதைப் போல் வந்தனாவைப் பார்க்க,
அவளின் முகம் வேதனையில் கசங்க, நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
சங்கீதாவின் திருமணம் முடிந்த கையோடு அங்கிருந்து நாட்டரசனை அழைத்துக் கொண்டு இளவரசி கிளம்ப, அவரும் அதிசயமாய் எதுவும் பேசாமல் அவர்களுடன் கிளம்பியதே இளவரசிக்கு உள்ளுக்குள் உறுத்தினாலும், அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
மாலை போல் வயலூரில் அவர்கள் வந்து இறங்க, மலரை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு உள்ளே நுழைந்தது தான் தாமதம், இளவரசி இத்தனை நேரம் அடக்கி வைத்ததை மொத்தமாக கொட்டித் தீர்த்து விட்டார்.
இளவரசிக்கு இவ்வளவு கோபம் வரும் என்பதையே, இத்தனை வருட திருமண வாழ்க்கையில் இன்று தான் கண்டுகொண்ட நாட்டரசன் பேச்சிழந்து சமைந்து போய் நின்றுவிட்டார்.
“உங்களுக்கு என்ன பெரிய சண்டியருன்னு நினைப்பா?? எப்போடா எதுனா பஞ்சாயத்து பண்ணி, இருக்குறவங்க நிம்மதியை கெடுக்கலாம்னு கங்கணம் கட்டிக்கிட்டே இருப்பீங்களா??” என வீட்டிற்குள் வந்ததுமே இளவரசி ஆரம்பிக்க,
வந்தனா அங்கே இருந்தால் அதற்கும் நாட்டரசன் ஏதாவது சொல்வார் என அவள் உள்ளே சென்றுவிட,
நாட்டரசன் தான் இத்தனை நாள் கழித்து மனைவி தன்னிடம் பேசிவிட்ட மகிழ்ச்சியில், அவரின் கோபத்தைக் கூட சட்டை செய்யாமல்,
“எதுக்கு இப்படி கோவப்படுறவ?? போ போய் காபி போடு கொஞ்சம்.. எங்க போய் எம்புட்டு ருசியா சாப்பிட்டாலும், நம்ம வீட்டில சாப்பிடுற சுகமே தனிதான்” என சாய்வாக சோபாவில் அமர்ந்து கையை உயர்த்தி சோம்பல் முறித்தபடி அவர் கூறவும்,
அடுத்த நொடி அவரின் காலுக்கு மிக அருகில் வந்து விழுந்தது பித்தளைப் பானை ஒன்று.
அது ஏற்படுத்திய சப்தத்தில் உள்ளே இருந்த வந்தனா கூட அடித்துப் பிடித்து வெளியே ஓடி வர,
நாட்டரசனோ ஒரு நொடி அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்தபடி எழுந்து நின்று விட்டார்.
“எப்படி எப்படி?? இப்போ மட்டும் நம்ம வீடா?? அன்னைக்கு என் வீட்டுல இருந்து கெளம்புன்னு இதே வாய் தான வரைமுறை இல்லாம பேசுச்சு.. அப்பறம் இன்னைக்கு மட்டும் என்னவாம்?? நேரத்துக்கு தகுந்த மாதிரி மாத்தி மாத்தி பேசுறதெல்லாம் ஒரு பொழைப்பா??” என இளவரசி ஒரு முடிவில் இருக்க,
அதிர்ச்சியில் இருந்து தெளிந்த நாட்டரசனுக்கு, லேசாய் பயம் கூட வந்துவிட்டிருந்தது இளவரசி நின்றிருந்த தோரணையில்.
“நீங்க எல்லாம் பெரிய மனுசன்னு ஊருக்குள்ள சொல்லிராதீங்க!! முதல்ல நீங்க மனுசன்னே யாரும் நம்ப மாட்டாங்க.. உங்களையும் ஒரு ஆளுன்னு மதிச்சு அவங்க கல்யாணத்துக்கு கூப்பிட்டா போனோமா, சப்பிட்டோமா, ஆசிர்வாதம் பண்ணிட்டு மொய்யை எழுதிட்டு வந்தோமான்னு இல்லாம இப்படித்தான் அங்க போய் நாட்டாமை பண்ணி பஞ்சாயத்தை கூட்டுவீங்களா?? எம்புட்டு ஆசையா அந்தப்புள்ளை கல்யாணத்துக்கு தயாராச்சு.. கடைசியில எல்லாத்தையும் நாசம் பண்ணி, அது முகமே களையில்லாமா போச்சு.. ஏதோ அவக நல்லவங்களா இருக்கப்போயி உங்களை சும்மா விட்டாங்க.. இல்லை, என் புள்ளை கல்யாணத்துல நீ யாருடா வம்பு பண்ணன்னு நல்லா கன்னம் கன்னமா நாலு அப்பு அப்பி விட்டுருப்பாங்க” என அவர் ஆற்றாமையுடன் பொருமித் தள்ள,
‘என்ன அப்புவாங்களா??’ என என்ன இப்படி பேசுகிறாள் இவள் என்பதைப் போல் தான் நாட்டரசன் பார்த்திருந்தார்.
இன்னும் முடியவில்லை என்பதைப் போல்,
“உங்களைக் கட்டுன பாவத்துக்கு நானும், நமக்கு பொறந்த பாவத்துக்கு என் பொண்ணும் தான் உங்க ஆட்டத்தை எல்லாம் சகிச்சுட்டு போறோம்னா நீங்க எல்லாருகிட்டயும் இப்படி துள்ளிகிட்டு திரியுறீங்க??? தெரியாமத் தான் கேக்குறேன் அந்தப் பையன் அப்படி என்ன தப்பு பண்ணான்?? அவன் அவனோட வேலையைத் தான செஞ்சான்.. அவன் தப்பானவனா இருந்தா சங்கீதா வீட்டுக்காரரே அந்தப் பையனை புக் பண்ணியிருப்பாரா?? இல்லை நம்பி தான் உள்ள விட்டிருப்பாரா?? பெத்தவங்களும் கட்டிக்கப் போறவனுமே சும்மா இருக்கப்போ உங்களுக்கு என்ன வந்துச்சுங்குறேன்?? அவன் ஏதோ நல்லவனா இருக்கப்போயி நீங்க பண்ண கூத்துக்கு எல்லாம் உங்களை அடிக்காம விட்டுட்டு போய்ட்டான்.. அவன் இடத்தில நான் மட்டும் இருந்தேன், உங்க மண்டையை பொலந்துருப்பேன்” என அவர் நிச்சயம் செய்துவிடுவேன் என்பதைப் போலக் கூற,
வந்தனா கூட, ‘என்ன இன்னைக்கு அம்மா இவளோ பேசுறாங்க??’ என திகைத்துப் போய் பார்த்திருந்தாள்.
நாட்டரசனின் நிலையைக் கேட்கவே வேண்டாம், ‘என்ன அடிப்பாளா??’ என இளவரசியின் இந்த புது அவதாரத்தை கிரகித்துக் கொள்ள முடியாமல் அவர் சிலையாய் சமைந்திருக்க,
“இதே மாதிரி இன்னும் ஏதாவது ஆகாத போகாத வேலையெல்லாம் பண்றதா மனசுல உத்தேசம் இருந்தா இப்போவே சொல்லிருங்க.. நானும் என் புள்ளையும் உங்க வீட்டை விட்டு கிளம்பிடுறோம்.. எனக்கு என்ன போக போக்கத்து போயா கெடக்கேன்.. என் புள்ளைக்காக தான் இத்தினி நாளும் உங்களை சகிச்சிட்டு இருந்தேன்.. இனியும் அப்படியே இருப்பேன்னு கனவு காணாதீங்க.. என் புள்ளைக்குப் பிடிக்காத ஏதாவது நடத்த திட்டம் போட்டீங்க.. நான் மனுஷியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்..” என எச்சரித்து விட்டு அவர் வந்தனாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட,
நாட்டரசனுக்கு ஏதோ மழையடித்து ஓய்ந்தது போல் இருந்தது.
இப்படி ஒரு ரூபம் இளவரசிக்குள் இத்தனை வருடம் இருப்பதே தெரியாமல் வாழ்ந்திருக்கிறோமே என அவர் அதிர்ச்சியில் இருந்தே வெளிவராமல் இருக்க, இளவரசியின் ஆட்டத்தில் அவர் செய்து வைத்திருந்த குளறுபடியை சுத்தமாக மறந்து ஏதோ மந்திரித்து விட்டதைப் போல் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டவர், மறுநாள் காலை தான் வெளியே வந்தார்.
மறுநாளும், இளவரசி முகம் கொடுத்து பேசாமல் அவருக்குத் தேவையானவற்றை மட்டும் செய்து கொண்டிருக்க, நாட்டரசனுக்கு, ‘இதென்னடா நமக்கு வந்த சோதனை!!’ என்று தான் தோன்றியது.
மலரும் பழனி சென்றுவிட்டதால் தனியே அவளை மட்டும் கல்லூரிக்கு அனுப்பப் பிரியப்படாமல் வந்தனாவையும் இளவரசி வீட்டிலே இருக்கச் சொல்லிவிட, அவளும் எப்பொழுதும் போல் தன்(னவன்) நினைவுகளில் மூழ்கிக் கிடந்தாள்.
சரியாக பத்து மணி போல், அவர்களின் வீட்டின் முன்பு அந்த பிரம்மாண்டமான மகிழுந்து வந்து நின்றது.
காரின் விலையே கோடியை நெருங்கும்.
‘யாருடா அது??’ என்பதைப் போல் இளவரசி வெளியே வர,
காரினுள் இருந்து ஆர்ப்பாட்டமான சிரிப்புடன், பட்டு வேஷ்டி சட்டை சகிதம் நெற்றியில் பட்டையுடன், பார்த்தாலே பெரிய இடம் என தோன்றும் வகையில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் இறங்க,
அவரைத் தொடர்ந்து, கச்சிதமாய் இன் செய்யப்பட்ட வெள்ளை சட்டை, காக்கி பேண்ட்டுடன் அதே சிரிப்புடன் முப்பது வயதுக்குட்பட்ட ஒரு இளைஞன் ஒருவன் இறங்கினான்.
‘யார் இவர்கள்??’ என இளவரசிக்கு குழப்பம் வந்த பொழுதும், வீட்டுப் படியேறி வந்தவர்களை முறையாக வரவேற்று அவர் உள்ளே அழைக்க,
தன் அறையில் இருந்து வயலுக்குச் செல்ல அப்போது தான் கிளம்பி வந்த நாட்டரசனின் கண்களில் இவர்கள் விழுக, ‘போச்சுடா!!’ என மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டார்.
“என்ன நாட்டரசன்!! இப்படி சொல்லாம கொள்ளாம திடீர்ன்னு வந்து நிக்குறாங்களேன்னு ஷாக் ஆகிட்டீங்களா??” என கேட்டுக்கொண்டே மீண்டும் அந்த மனிதர் ஆர்பாட்டமாய் சிரிக்க,
‘இவருக்குத் தெரிஞ்சவங்களா??’ என யோசனையாய் கணவனைப் பார்த்திருந்தார் இளவரசி.
தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “வாங்க வாங்க ஐயா!! உட்காருங்க!! தம்பி நீங்களும் உட்காருங்க” என அவர்களை வரவேற்ற நாட்டரசன்,
“இளவரசி!!! என்ன பார்த்துக்கிட்டே நிக்குற?? போ போய் வந்தவங்களுக்கு தண்ணீ கொண்டா” என ஜம்பமாய் விரட்டினார்.
அவரை முறைத்துக்கொண்டே உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்த இளவரசி, “டீயா?? காபியா?? எது குடிப்பீங்க அண்ணே??” என உபசரிக்க,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா.. நீ வந்து இப்படி உன் வீட்டுக்காரர் பக்கத்துல உட்காரு!! முக்கியமான விசயம் ஒன்னு பேசணும்” என அவர் ஆரம்பிக்க,
குழப்பத்துடன் நாட்டரசனுக்கு அருகே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கொண்ட இளவரசி, கேள்வியாய் அவர்களைப் பார்க்க,
“நீங்க இப்படி முழிக்கிறதைப் பார்த்தா அரசன் இன்னும் உங்ககிட்ட விசயத்தைச் சொல்லலைன்னு நினைக்கிறேன்.. நல்ல விஷயத்தை யார் சொன்னா என்ன?? நானே சொல்றேன்..” என பீடிகையுடன் தொடங்கினார் அந்தப் பெரியவர்.
“நான் விநாயகம் மா.. இது என் ஒரே பையன் ரஞ்சித்.. வீட்டுக்காரம்மா இவன் சின்ன வயசா இருந்தப்போவே உடம்பு சரியில்லாம தவறிட்டாங்க.. நாங்க திருச்சியில அம்மன் ஜூவல்லர்ஸ்ன்னு மூணு இடத்தில நகைக்கடை வச்சிருக்கோம்.. அது இல்லாம தோட்டம் தொரவுன்னு பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து பத்து கிடக்கு.. ஆனாலும் என் மவன், சொந்தக்காலுல தான் நிப்பேன்னு அவனாவே படிச்சு பாஸாகி இதோ இப்போ திருச்சியில டி.எஸ்.பியா வேலை பார்க்கிறான்.. கொஞ்ச நாள் முன்ன உங்க பொண்ணு போட்டோவும் ஜாதகமும் தெரிஞ்சவர் மூலமா கைக்கு வந்துச்சு.. எங்களுக்கு ரொம்பவே திருப்தி.. அதான் மேற்கொண்டு உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசுனோம்.. அவருக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு.. உங்க மச்சினன் மகளுக்கு கல்யாணமாமே!! அதை முடிச்சிட்டு வந்து மேற்கொண்டு பேசலாம்னு சொன்னாப்பிடி.. நீங்க வந்தது கேள்விப்பட்டதும் நாங்க உடனே கெளம்பி வந்துட்டோம்.. சொல்லாம கொள்ளாம வந்தது தப்பு தான் கோவிக்காதீங்க.. பையனுக்கு பொண்ணை எந்த அலங்காரமும் இல்லாம இயல்பா பாக்கணுமாம்.. அதான் இப்படி திடீர் விஜயம் பண்ண வேண்டியதா போச்சு.. மன்னிச்சுக்கோங்க” என அவர் கையெடுத்துக் கும்பிட்டு விட்டார்.
அவர் சொல்லிய விஷயத்தை ஜீரணிக்க இளவரசிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டாலும், வயதில் பெரியவர் மன்னிப்பு கேட்டதும்,
“அச்சோ என்னங்கண்ணே!! பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு” என இயல்பாய் அவர் பதற,
நாட்டரசனுக்கு இளவரசி கோபம் கொள்ளவில்லை என்பதே பெரும் நிம்மதியைத் தர, மீண்டும் பழைய நாட்டரசனாய் நிமிர்ந்து கெத்தாய் அமர்ந்தவர்,
“ரொம்பவே நல்ல இடம் இளவரசி!! நம்ம புள்ளைக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையை தேடுனாலும் கிடைக்காது!!” என்று பெருமை பேச,
அவரை கண்ணை உருட்டி முறைத்த இளவரசி, “இல்லைங்கண்ணே!! பாப்பா இன்னும் காலேஜே முடிக்கலை.. மேற்கொண்டு படிக்க வேற விருப்பப்படுறா.. அதான்” என அவர் நாசுக்காய் மறுக்க,
நாட்டரசன் ஏதோ கோபத்தில் சொல்ல வரும் முன்பே, “அட அதுக்கென்ன அத்தை!! அவங்க தாராளமா படிக்கட்டும்.. அவங்களுக்கு எப்போ கல்யாணம் பண்ண விருப்பமோ அப்போ வச்சுக்கலாம்.. இப்போ அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தா நிச்சயம் மட்டும் வச்சுப்போம்” என ரஞ்சித் இடையில் புகுந்து பேச,
உண்மையில் இளவரசிக்கு அவனின் பேச்சு பிடித்துப் போனது. அதுவும் ஆன்ட்டி என்றழைக்காமல் சாமர்த்தியமாக அத்தை என உரிமையாய் அவன் அழைத்ததை எண்ணி உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார்.
‘தன் மகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்’ என்பதே அவருக்கு அடுத்து பேச இலகுவாக இருக்க,
“இல்லைப்பா அவ இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றா!!” என தயக்கத்துடன் மகளின் மனவோட்டத்தை கருத்தில் கொண்டு அவர் பேச,
“நோ பிராப்ளம் அத்தை!! நீங்க அவங்களைக் கூப்பிடுங்க.. அவங்க வந்து என்னைப் பார்க்கட்டும்.. நீங்க அனுமதிச்சா என்கூட பேசியும் பார்க்கட்டும்.. பிடிச்சா நிச்சயம் பண்ணுவோம்.. இல்லையா பஜ்ஜியும் சொஜ்ஜியும் சாப்பிட்டு நடையைக் கட்டுவோம்” என அவன் வேடிக்கையாக பேச,
இளவரசிக்கு அவனின் இந்த இயல்பான பேச்சு மிகவும் பிடித்துப் போனது.
எங்கே நாட்டரசன் அவரைப் போலவே மாப்பிள்ளையை பார்த்து வைத்திருப்பாரோ என்றெண்ணி தான் அவர் மறுத்தது. இப்போது, இந்த வரன் ஒத்து வரும் போல் அவருக்குத் தோன்ற, வந்தனாவை இங்கிருந்தே அழைத்தார்.
ஆனால் இவனின் பேச்சைக் கேட்ட நாட்டரசனுக்குத் தான் யோசனையாக இருந்தது.
‘போலீஸ்ன்னு சொன்னாங்க.. இவன் என்ன சிரிப்பு போலீஸ் மாதிரி பேசிக்கிட்டு இருக்கான்’ என அவர் நினைத்திருக்க,
வெளி முற்றத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த வந்தனா, அன்னையின் அழைப்பில் உள்ளே வர, அங்கு அமர்ந்திருப்பவர்களைக் கண்டு குழம்பினாலும்,
“வாங்க!!” என தன்னைப்போல் வரவேற்றிருந்தாள்.
அதில் விநாயகத்திற்கு ஏக மகிழ்ச்சி.
“நல்ல பொண்ணு தான்” என அவர் நினைத்துக் கொள்ள,
அவரின் மகனோ, வந்தனாவின் அழகில் தன்னை மறந்திருந்தான்.
மகளின் அருகில் வந்த இளவரசி, “தனு குட்டி!! ஷாக்காகத.. இவங்க உன்னைப் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க.. சும்மா சம்பிரதாயத்துக்கு ரெண்டு வார்த்தை பேசிப்பாரு.. நல்ல இடமாத் தான் தெரியுது.. உனக்கு பிடிச்சா மேற்க்கொண்டு பேசுவோம்.. இல்லையா வேண்டாம்னு சொல்லிடலாம்.. நீ ஒன்னும் உன்னை கஷ்டப்படுத்திக்காத!! அம்மா உனக்கு பிடிக்காததை செய்ய மாட்டேன்” என மெதுவாய் அவளின் தலையில் இடியை இறக்கினார்.
தாய் சொன்னதைக் கேட்ட வந்தனாவிற்கு, இப்போதே பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்றிருக்க, உயிரை யாரோ கசக்கிப் பிழிவதைப் போல், அவள் மனமெங்கும் அப்படி ஒரு வலி.
‘தனக்கு ஏன் இந்த சோதனை??’ என அவளின் இதயம் ஊமையாய் கண்ணீர் சிந்த, பாவம் அவளின் நிலையை உணரத்தான் அங்கு யாரும் இல்லை.
அதற்கு பின் என்ன நடந்தது என்ன பேசினார்கள் என்று கேட்டால் வந்தனாவிடம் பதிலில்லை.
அவளின் உலகம், வினய் காதலைச் சொன்ன நிமிடங்களுக்கும் இப்போது இளவரசி சொல்லிய விஷயத்திலுமே நின்று விட்டது.
இங்கோ அவர்களைத் தனியாக பேச நாட்டரசன் அனுமதிக்காததோடு, தன் மகள் தன் பேச்சை மீற மாட்டாள் என வாக்குறுதி கொடுத்தவர், நிச்சயத்திற்கு நாள் குறிக்கச் சொல்லிவிட, இளவரசிக்கு அவரை எண்ணி ஆத்திரம் வந்தாலும் மற்றவர் முன் காட்சிப் பொருளாக விரும்பாமல் அமைதியாய் இருந்து விட்டார்.
அவர்களும் அங்கிருந்து கிளம்ப, நாட்டரசனை ஒரு வாங்கு வாங்கிய இளவரசி, வந்தனாவின் சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது என உறுதியாய் கூறிவிட, மகள் மேல் உள்ள நம்பிக்கையில் அவரும் அதை கண்டுகொள்ளாமல் வெளியே சென்று விட்டார்.
இங்கு இளவரசியோ, ரஞ்சித்தைப் பற்றி அனைத்தையும் வந்தனாவிடம் கூறியவர்,
“பார்க்க ரொம்ப நல்ல குணமாத் தான் தெரியுறாங்க டா.. நீ யோசிச்சு சொல்லு..” என மறைமுகமாக தனக்கு இதில் விருப்பம் என்பது போல் அவர் பேசிவிட்டுச் செல்ல, மொத்தமாய் கைவிடப்பட்ட நிலை தான் பெண்ணவளுக்கு.
தன் மனதில் உள்ளதை வெளியே சொல்லி அழுவதற்கு கூட முடியாமல், தனக்குள் அவள் மிகவும் இறுகிப் போய்விட்டாள்.
பெற்றவர்களின் விருப்பத்தை மீறவும் முடியாமல், பிடித்தவனுடன் தைரியமாய் சேரவும் முடியாமல், அவளின் ஒவ்வொரு நொடிகளும் நரகமாய் கழிய, இதற்கு தீர்வே இல்லையா என அவளின் மனம் வெறுத்துப் போனது.
அனைத்தையும் எண்ணிப் பார்த்தவளின் முகத்தில் இருந்த வலி, ரஞ்சித்திற்கு ஏதோ கதை சொல்ல, அவனின் வாய் தன்னைப்போல் மலரிடம் நேற்று நடந்ததை ஒலிபரப்பிக் கொண்டு இருந்தது.
‘ஒரு நாள் தான இல்லை.. அதுக்குள்ள இம்புட்டு நடந்துருச்சா??’ என அவள் வியக்க,
“இம்புட்டு நடந்திருக்கு.. வாயைத் திறந்து சொன்னியா நீ??” என வந்தனாவை முறைத்த மலர்,
“உன்னை வந்து பேசிக்கிறேன்.. முதல்ல இந்த கொசுவை அடிச்சுப் பத்திவிட்டுட்டு வரேன்” என ரஞ்சித்திடம் திரும்பிய மலர்,
“இந்தக் கல்யாணம் நடக்காது போலீசு.. அவ வேற ஒருத்தரை விரும்புறா” என பட்டென விஷயத்தை சிதறு தேங்காய் போல் போட்டு உடைக்க,
ரஞ்சித்தை விட வந்தனா தான் அதிகமாய் அதிர்ந்தாள்.
‘ஏண்டி சொன்ன?? அப்பாகிட்ட சொல்லிற போறாங்க!!’ என அவளின் கண்கள் கேள்வி கேட்பதை உணர்ந்தாலும் மலர் அதை கண்டுகொள்ளவில்லை.
“என்ன சாக்கா(ஷாக்) இருக்கா?? அதான் சொல்றேன்.. மரியாதையா இவளை விட்டுட்டு வேற பொண்ணைப் பாருங்க” என அவள் மீண்டும் வலியுறுத்த,
பதிலுக்கு ரஞ்சித் உரைத்த வார்த்தைகளில் வந்தனாவோடு, மலரும் அதிர்ந்து நின்று விட்டாள்.
error: Content is protected !!