Skip to content
Post Views: 7,094
பார்ட்டி முடிந்து சில நாட்கள் கடந்திருக்க அன்று ஞாயிறு என்பதால்.. வீட்டிலிருந்த ரியான் இரவு உணவை செய்து முடித்துவிட்டு,
“முகுந்த்.. வாங்க சாப்பிடலாம்..” என அழைத்தவனுக்கு எவ்வித பதிலும் இல்லாமல் இருக்க யோசனையோடு அறைக்குள் நுழைந்தான் ரியான்.
Advertisement
அங்கு முகுந்த் இல்லாமல் இருக்க, “எங்க இருக்க கண்ணா..?” என கேட்டபடியே வீட்டின் ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டே வந்தவன்,
பிள்ளை.. பால்கனி அருகே ஆவலாக குழந்தைகள் விளையாடும் இடத்தை பார்த்து கொண்டு நிற்பது தெரிந்தது.
Advertisement
Advertisement
“இங்கே இருக்கீங்களா..?” என்று பின்னோடு வந்து தூக்கி கொண்ட ரியான்,
“என்ன பார்க்கறீங்க..?” என்றான் புன்னகையோடு மகனிடம்.
Advertisement
“ப்பா, அங்க..” என கை நீட்ட,
“என்ன..? ஓ..! அது ப்ளே ஸ்டேஷன். சோ, குட்டீஸ் விளையாடறாங்க..” என்றான் விளக்கமாக.
“அச்சோ.. நோ ப்பா.. அங்க..” என்றான் தந்தை தவறாக சொன்னதற்கு.. தன் நெற்றியில் லேசாக தட்டி மீண்டும் கை நீட்டி.
யோசனைமிக, ‘எதை காட்டுகிறான்..?’ என பிள்ளை கை நீட்டிய திசையை பார்க்க,
அங்கே ஒரு பெண் சிறு பிள்ளை ஒன்றிற்கு உணவு ஊட்டிக்கொண்டிருப்பது முகம் தெரியாவிட்டாலும்.. மின் விளக்கு ஒளியில் பிம்பமாக நன்றாக தெரிந்தது.
கல்மேடை ஒட்டிய கம்பி வலையை பிடித்து குழந்தை வேடிக்கை பார்த்தபடி நிற்க,
அருகே நின்று குழந்தை சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு.. உணவை ஊட்டிக்கொண்டிருந்தாள் அந்த பெண்.
அந்த காட்சி கண்ணுக்கு அழகாய் இருந்த போதும்.. மகனின் ஏக்கம் மனதை வாட்ட,
“ஓ.. உனக்கும் பசி வந்திடுச்சா..? வாங்க நம்மளும் போய் சாப்பிடலாம்..” என்றான் அறிந்தும் அறியாத பாவனையில்.
“ப்ம்ச், ப்பா.. அது அந்த ஆன்ட்டி ஃபுட் கொக்கறது நல்லா இக்கு.. என்க்கு அப்புடி வேணு..” என்றான் குழந்தை ஆசையாய்.
அவனின் ஏக்கம் புரிந்தாலும்.. அதை இன்னமும் காட்டிக்கொள்ளாமல்,
“அதான் கண்ணா.. அவங்க மாதிரி அப்பாவும் உன்னோட ஃபேவரேட் ஃபுட் செஞ்சு உள்ளே வச்சிருக்கேன். நம்ம சாப்பிடலாம் சரியா..?” என்றபடி அவனோடு திரும்ப,
“நோ.. அது மாறி..” என்றான்.. அவன் கையிலிருந்து துள்ளி இறங்க முயன்றபடி.
அவன் விழாமல் பக்குவமாய் நிற்க வைத்தவன், “அங்கே வச்சு சாப்பிட கூடாது கண்ணா. அது ஹய்ஜினிக் இல்ல.
பசங்க விளையாடறதுல தூசு.. குப்பை ன்னு ஃபுட்ல விழும்..” என வாய் சொல்லும் போதே,
அந்த தாய் ஊட்டும் விதத்தை அவதானித்தவனுக்கு கண்ணில் மெச்சுதலே.
ஏனெனில் அழகாய் மூடியிட்ட கண்டெய்னர் பாக்ஸில் உணவிருக்க.. அளவாய் அதை எடுத்து கொண்டு.. அதை மூடிவிட்டு ஊட்டுவதும்,
நன்றாக மூடி திறக்க ஏதுவான வாட்டர் பாட்டிலில் தண்ணீரை வைத்திருந்த விதமும்.. அந்த தாயின் குழந்தை மீதான அக்கறையை பறைசாற்றியதே.. பின் மெச்சாமல் இருக்க முடியுமா..?
தந்தை சொல்வதை காதிலே வாங்காமல், “ப்பா, அப்புதி ஊத்தி..” என மீண்டும் மகனின் வார்த்தையில் நிகழ்வுக்கு வந்தவனுக்கு..
‘மகனுக்கு எப்படி சமாதானம் சொல்வது..?’ என்றே புரியவில்லை.
“அங்கே போய் அதே மாதிரி அப்பா கொடுத்த ஓகே வா..?” என கேட்தற்கும்,
“நோ.. நீ வேணா.. அப்புதி..” என மீண்டும் அந்த பெண்ணை கை காட்ட ரியானுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
‘சொன்னால் புரியும் வயதில்லையே பிள்ளைக்கு..’ என்ற தவிப்போடு,
“முகுந்த்.. அப்பாக்கு வேலை இருக்குடா கண்ணா.
நீ சீக்கிரம் சாப்பிட்டா தானே.. அப்பா வேலைய பார்க்க முடியும்..” என அவனின் சிந்தனையை மாற்றவென அப்படி சொல்ல குழந்தையின் முகம் நொடியில் வாடிப்போனது.
அதையும் தாங்க இயலாது..
“என்னப்பா..” என்றான் இயலாமை தந்த கனத்த இதயத்தோடு அவன் முன் மண்டியிட்டு.
தன் உயரத்திற்கு அமர்ந்திருந்த தந்தையின் இரு கன்னத்திலும் தன் பிஞ்சு விரல் பதித்து,
“மலர் பெம்மா.. தா.. பிகாஷூக்கு ஊட்டிச்சு.. தெய்யுமா..?
என்க்கு நீயே கொடுக்கே.. அன்ட மாறி வேணுமே…” என்றான் ஏக்கம் நிறைந்த குரலில்.
பார்ட்டியில் மலர் அவள் இரண்டாவது மகன் பிரகாஷூக்கு ஊட்டியதை பார்த்து.. இப்போது ஏங்கி கேட்கும் பிள்ளைக்கு என்ன ஆறுதலை தருவது..! என தான் புரியவில்லை ரியானுக்கு.
அவனை அணைத்துக்கொண்டவன், “நம்ம ரெண்டு பேரும் இப்படி நிராதரவா நிற்கனுமுன்னு விதி இருக்குன்னு உனக்கு நா எப்படி கண்ணா.. புரிய வைக்க போறேன்..!” என சொல்லி கண் கலங்க,
தந்தையின் கண்ணீர் மகனை ஏதோ செய்ததோ என்னவோ, சட்டென அணைப்பிலிருந்து விலகி,
“டோண்ட் க்ரை ப்பா.. நா சாப்புடுவே..” என ரியானின் கண்ணை துடைக்க,
தனக்காக பார்க்கும் மகனை நெற்றி முட்டி கொஞ்சியவன்.. அவனோடு உள்ளே செல்ல போக அவனை தூக்கி கொண்டு எழ,
“ப்பா..” என்றான் குழந்தை இழுவையாக,
“என்ன கண்ணா..?” என்றான் கரகரத்த குரலில் ரியான்.
“அடூ.. நா இங்க சாப்புடா..?” என தயங்கி கேட்டவனை புரியாத பார்வை பார்த்தான் தந்தை.
“அங்க பாட்டுட்டு இங்க சாப்புடலா..” என்றவனை கண்டு நெஞ்சம் விம்மியது ரியானுக்கு.
‘அவனுக்கு தாயை தான் கொண்டு வந்து தர முடியாது. ஒரு தாயை காட்டி ஊட்ட சொல்வதையாவது நிறைவேற்றலாமே..’ என்ற எண்ணத்தில்,
“சரி கண்ணா..” என்றவன்,
அங்கு ஒரு சின்ன சேரை கொண்டு வந்து போட்டு,
“ரொம்ப நேரம் நிற்க வேணாம். இதுல உட்கார்.. நான் போய் உன்னோட ஃபுட் எடுத்துட்டு வந்திடுறேன்..” எனச்சொல்லி சென்றவன்,
ஹாலைக் கடக்கும் போது.. மாட்டியிருந்த மூவரின் படத்தையும் பார்த்து.. மௌனமாய் அவர்களிடம் கேள்வி கேட்கவும் மறக்கவில்லை.
அன்று.. அப்படி சாப்பிட ஆரம்பித்த முகுந்த் தினமும் இரவில் அதையே செய்ய சொல்ல,
“வேண்டாம்.. உள்ளே தான் சாப்பிட வேண்டும்..” என கெஞ்சி.. கொஞ்சி.. அதட்டி.. என எந்த பரிமாணமும் வேலைக்கு ஆகாமல்.. இறுதியில் மகனுக்காக தந்தை தான் இறங்கி வர வேண்டி இருந்தது.
எனவே இது அவர்களின் தொடர் நிகழ்வாய் ஆனது.
வேலை முடிந்து வந்ததும்.. சரியாக அந்த இடத்திற்கு வந்து முகுந்த் காத்திருப்பதும்,
அந்த தாய் குழந்தையோடு வந்ததும் இவனும் ரியானை அழைத்து.. தனக்கான உணவை உண்பதும் இப்போது சகஜமாகி போனது.
நாட்கள் செல்ல ரியானின் மனதில், “எல்லாரும் நிலா காட்டி குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கறாங்க.
நா அந்த மம் அண்ட் கிட் காட்டி ஊட்டறேன். இதுல என்ன இருக்கு..?” என உருவேற்றிக்கொள்ள,
இப்போது அது அவனுக்கும் பழகி போன ஒன்றானது.
நிலாவும் அமாவாசை அன்று இல்லாமல் போகுமே.. அப்போது எதை காட்டுவனாம்..?!!!
error: Content is protected !!