Skip to content
Post Views: 7,058
பகுதி 21
சம்யுக்தாவின் பிடிவாதத்தாலும், முகுந்தின் ஆசைக்காகவும் மருத்துவமனை வாசம் முடிந்து வந்த ஆரம்பத்தில், இரவு உணவுக்காக என பார்க் வரை சென்ற முகுந்த், வெண்பாவுடன் சேர்ந்து நன்றாக விளையாட பழகி, இப்போது கிடைக்கும் இடைவெளியிலெல்லாம் அவர்களின் வீட்டிற்கே செல்ல ஆரம்பித்திருந்தான்.
Advertisement
தினமும் ரியான் வீட்டிற்கு வருவதற்கு முன்னே.. சம்யுக்தா வருவதாய் இருந்தால், அவளே அவனை இவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவாள்.
பின்னர் ரியான் வந்து அவர்கள் அப்பார்மெண்ட் அருகே காரை நிறுத்தி போன் செய்ததும் முகுந்தை கொண்டு விடுவது வாடிக்கையான நிகழ்வாகி போனது.
Advertisement
Advertisement
அந்த ஏற்பாட்டில் முகுந்த் ஏக குஷியில் திளைக்க, அவனை பெற்றவனோ பயத்தில் தவித்தான்.
ஏற்கனவே இரு முறை அவனை வேறு ஒருவரிடம் பார்த்துக்கொள்ள கொடுத்து.. பெற்ற அடி வாழ்நாளில் அவ்வளவு சுலபமாக மறக்குமா.. அவனுக்கு..?
Advertisement
முதலில் எல்லாம், ‘அப்பா வந்தாச்சு முகுந்த்..’ என சொன்னதும் உற்சாகமாகவே வந்துவிடுவான் பிள்ளை சம்யுக்தாவுடன்.
ஆனால் நாட்கள் போகப்போக தனியாக இருந்தவனுக்கு, சம்யுக்தா.. வெண்பா.. அடிக்கும் கூத்தோடு, இனியாளின் அன்பும் கிடைக்க.. அதையே விரும்ப ஆரம்பித்தான் அவனும்.
‘இன்னும் கொஞ்ச நேரம்..’ என கேட்டு, திரும்ப திரும்ப அழைக்க வைத்த பிறகே வருவான். அதும் தூங்கும் நேரம் நெருங்குவதை கொண்டே.
அன்று மூன்று முறை அழைத்தும், முழு அழைப்பு போயும்.. போனை சம்யுக்தா எடுக்காமல் போக,
பார்த்து சலித்தவன் ஒரு முடிவோடு அவர்கள் வீட்டுக்கே சென்று காலிங் பெல்லை அழுத்தியிருந்தான்.
அன்று மழை பெய்ததால், பார்க் போகாமல் வீட்டிலேயே விளையாட்டோடு உணவு உண்ட பிள்ளைகள் இருவரும் குளிருக்கு இதமாய் பெட்டில் விளையாடியபடி உறங்கியிருந்தனர்.
அவர்களுக்கு தொந்தரவாக இருக்க வேண்டாம்.. என நினைத்து சம்யுக்தா தனது லேப்டாப் போடு ஹாலில் இருக்க, இனியாளும் தனது கை வேலையில் மூழ்கியிருந்தாள்.
தனமும் குளிரால் நேரமே தூங்க சென்றிருந்தார்.
சம்யுக்தாவின் போன் பெட்ரூமில் சைலண்ட் மோடில் இருக்க, ரியான் அழைத்ததே தெரியவில்லை அவர்களுக்கு.
வீட்டின் அழைப்பு மணி ஓசையில்.. தனது வேலைக்காக வேறு ஒரு கலர் நூலை எடுக்க எழுந்த இனியாள் சென்று திறக்க, அங்கே முறைப்போடு நின்றிருந்தான் ரியான்.
“எங்கே.. எ.. புள்ள..?” என பற்களை கடித்தபடி கேட்க,
பதில் சொல்லாமல் இனியாளும் முறைக்கவே செய்ய, “உங்கள தான் கேட்கறேன்.. என் புள்ள எங்கே..?” என்றான் லேசான பதட்டத்தோடு.
கதவை திறந்து அமைதியாய் நின்ற இனியாளை கண்டு, “யாருக்கா..?” என சம்யுக்தா கேட்க,
“பேபி.. இட்ஸ் மீ..” என்றான் ரியான் கொஞ்சம் சத்தமாக.
“பாஸ்..! உள்ளே வாங்க..” என்றபடி அவளும் அவசரமாக எழுந்து வர, இனியாள் அவ்விடம் விட்டு விலகி உள்ளே சென்றிருந்தாள்.
“பரவாயில்லை பேபி. முகுந்த் எங்கே..?” என்றான் பதட்டத்தை மறைத்தபடி.
“மழை குளிருக்கு நேரமே தூங்கிட்டாங்க பாஸ். உள்ளே வாங்க..” என மீண்டும் அவனை அழைக்க,
‘பெண்கள் மட்டும் தனித்திருக்கும் வீட்டிற்கு இந்த நேரத்தில் வந்து நிற்பதே தவறாக தோன்றியது அவனுக்கு. இதில் உள்ளே செல்வதா..?’ என நினைத்தவன்,
“இல்ல பேபி. நீ முகுந்தை தூக்கிட்டு வா.. லேட்டாச்சு..” என்றான் உறுதியாக.
அவன் உள்ளே வராமல் போனதில் வருத்தமிருந்தாலும்.. அவனை மீற முடியாமல் குழந்தையை எடுக்கவென திரும்ப,
“சம்யும்மா.. இப்ப தான் பார்த்தேன். புள்ள நல்லா அசந்து தூங்கறான்.
இப்ப தூக்குனா அவன் தூக்க கலக்கத்துல அழுவான். காலைல கொண்டு போய் விட்டுடுலாம்..” எனச் சொல்ல,
ரியானுக்கு அப்படி ஒரு கோபம் எழுந்தது.
‘என்னோட புள்ளைய கொடுக்க இவங்களுக்கு என்ன..?
அவன் மேல எனக்கில்லாத அக்கறையா இவங்களுக்கு..?’ என மனதில் நினைத்தவன்,
“அதெல்லாம் நான் ஹேண்டில் பண்ணிக்கறேன் பேபி.
போ, போய் எடுத்துட்டு வா அவனை..” என்றவன், விடாப்பிடியாக குழந்தையை வாங்கி கொண்டே அங்கிருந்து சென்றான்.
அன்று முதல்.. எதாவது காரணம் சொல்லி.. முடிந்தவரை அங்கு அனுப்பாமல்.. தனது வேலையையும் விட்டுவிட்டு.. அவனுக்காக எங்காவது வெளியே கூட்டி சென்று.. தூங்கும் நேரம் அழைத்து கொண்டு வீடு வருவது.. என அங்கே அனுப்பவதை முடிந்த வரை தவிர்த்தாலும்,
ஒரு சில நேரம் குழந்தைக்காக.. அவனின் ஆசைக்காக அனுப்ப வேண்டியும் வந்தது.
அதில் இனியாளுக்கு, “குழந்தையோட இந்த சின்ன ஆசைய கூட நிறைவேத்த முடியாம அந்த புள்ளைய கஷ்டப்படுத்தறானே..” என ரியானின் மீதான கோபம்.. இன்னமும் கூடியதே அன்றி குறையவில்லை.
அப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க, தொடர்ந்து மூன்று நாட்களாய் அங்கு அனுப்பாமல் தவிர்த்தவனுக்கு.. அன்று வார விடுமுறையாக இருந்ததால் பிள்ளையின் பிடிவாதத்திற்காக வேறு வழியின்றி அனுப்பியிருந்தான்.
அங்கு சென்ற சிறிது நேரத்தில் குழந்தைக்கு இயற்கை அழைப்பு வர, அவர்களிடம் சொல்ல கூசி, “அப்பாகிட்ட போலா..” எனச்சொல்ல,
சம்யுக்தா வெளியே கடைக்கு சென்றிருக்க இனியாள் எவ்வளவு கேட்டும், “இப்போதே போக வேண்டும்..” என உதட்டை பிதுக்கி நின்றவனை கண்டு தனம்,
“நான் கொண்டு போய் விட்டுட்டு வர்றேன்..” எனச்சொல்லி அவனோடு கிளம்பினார்.
முகுந்த் சென்று அரை மணி நேரமே கழிந்திருக்க, “எப்படியும் இப்போதைக்கு வரமாட்டான்.
அதுவும் மூன்று நாள் கழித்து தான் சென்றிருக்கிறான்..” என்ற எண்ணத்தோடு ஹாலில் தனது லேப்டாப் போடு இலகுவாக அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான் ரியான்.
அழைப்பு மணி ஓசை கேட்க, யோசனை படிந்த முகத்தோடு வந்து கதவை திறந்தவன் முகுந்த் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்ததால் பதறி தான் போனான்.. என்னவோ என..
அதனால், “வாங்கம்மா..” என அவரை அழைத்த கையோடு,
“கண்ணா.. என்னாச்சு..?” என அவனை கையில் வாங்கிக்கொண்டு தவிப்போடு கேட்க,
அவனோ ரியானின் காதருகே சென்று தனது தேவையை சொன்னதும்.. பெரும் நிம்மதியும், அதோடு சேர்ந்து சிரிப்பும்.. எழுந்தது அந்த தந்தைக்கு.
இருவரையும் பார்த்து கொண்டு நின்றிருந்த தனத்தை கண்டு, “ம்மா கொஞ்ச நேரம் இங்க உட்காருங்க வந்திடுறோம்..” என அவரை ஹால் ஷோஃபாவில் அமர்த்திவிட்டு, அவர்கள் அறைக்குள் சென்று மறைந்தனர்.
அமர்ந்திருந்த தனம் தன் பார்வையை சுழற்ற அங்கிருந்த மாலையிட்ட மூன்று படங்களும் அவர் கண்ணுக்கு காட்சியானது.
ரியானின் லேசான முக ஜாடை கொண்ட மனிதரை பார்த்ததுமே புரிந்தது அது அவனின் தந்தை என.
அருகே வடநாட்டு பெண்மணியின் போட்டோ பார்த்தவர்.. குழம்பினாலும் அவன் நிறம் கொண்டு,
“ஓ.. அவங்க அப்பா அம்மா லவ் மேரேஜ் போல..” என எண்ணி லேசாக சிரித்தவர், அடுத்திருந்த பெண்ணின் புகைப்படத்தை கண்டு மனம் வருந்தினார்.
முகுந்துக்கு தாயில்லை.. என்பது தான் அவருக்கு நன்றாக தெரியுமே.
அதனால் அந்த பெண் யாராய் இருக்குமென யாரும் சொல்லாமலேயே புரிந்தது தனத்திற்கு.
மூன்று பேரின் பிறப்பு, இறப்பு தேதிகள் அதில் பதிய பட்டிருக்க, மூவரின் இறப்பு தேதியும் கண்டவருக்கு மனம் நெகிழ்ந்து போனது.
‘ஓட்டு மொத்தமாய் அனைவரையும் பரிகொடுத்து நிற்கும் போது.. எப்படி இருக்கும்..!’ என அவரின் யோசனை பயணப்பட்டு கொண்டிருக்கும் போதே, தந்தையும் மகனும் அங்கு வந்து சேர்ந்தனர்.
“சாரிம்மா.. வந்தவங்கள கவனிக்க கூட முடியாம.. போச்சு..” என்றவாரே வந்து,
“முகுந்த், இங்கே பாட்டிகிட்ட இருங்க..” என இறக்கிவிட்டுவிட்டு,
அவசரமாக சமையலறை சென்றவன், எப்போது தயாராக வைத்திருக்கும் ப்ரூட் ஜூஸை இரு டம்ளாரில் ஊற்றி வந்து, ஒன்றை தனத்திற்கும்.. அடுத்ததை மகனுக்கும் கொடுத்திருந்தான்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் வீட்டை கண்ணால் அலசியவருக்கு, ரியானை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவருக்கு நன்றாக தெரியும்.. வேலைக்காக யாரையும் ரியான் வைக்க வில்லை என்பது.
அப்படி இருந்தும்.. ஒரு சிறு தூசி கூட இல்லாமல்.. அனைத்தும் சீராக, சுத்தமாக.. அவன் வைத்திருக்கும் பாங்கு.. சில பெண்களால் கூட முடியாது.. என்பதே அவரின் எண்ணமானது.
ரியான் கொடுத்ததை குடித்துக்கொண்டே நிமிர்ந்தவர் பார்வை.. மீண்டும் அந்த புகைப்படங்கள் மீது விழ,
“கேட்கறேன்னு தப்பா நினைக்காதேப்பா.. எப்படி எல்லாரும் ஒரே நாள்ல.. சொல்ல கஷ்டமா இருந்தா வேணாம்..” என்றிட,
“இதுல என்னங்கம்மா இருக்கு..” என்றவன், தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க,
தனத்தின் கண்களும் கலங்கி போனது அவனின் இன்றைய நிலையை நினைத்து.
“வருத்தப்படாதேப்பா. கஷ்டத்தை கொடுக்கற ஆண்டவன்.. அதுக்கு பின்னாடி பெருசா எதாவது ஒரு நல்லதை நமக்கே நமக்குன்னு கொடுப்பான்னு சொல்வாங்க.
இனி உன்னோட வாழ்க்கையில நல்ல படியா.. சந்தோஷமா இருப்பே..” என வாழ்த்தியவரின் வாக்கு பழித்தது தான்..
ஆனால், அதற்கு முன் மரணத்தை தாண்டிய வலியை இவன் அனுபவிக்க வேண்டி வருமே.. அதை தாங்கும் திறனையும் சேர்ந்து ஆசீர்வாதமாக கொடுத்திருக்கலாம் அந்த தாய்..
error: Content is protected !!