Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 21.1

நாட்காட்டியில் தேதிகள் வேகமாய் கழியத்தொடங்க, அன்று சந்தீப் அலுவலகம் வரும் போது தன்னோடு மலரையும் உடன் அழைத்து வந்திருந்தான்.

“வாம்மா.. எப்படி இருக்கே..? நீயும் கூட வர்றேன்னு சந்தீப் சொல்லவே இல்ல..” என ரியான் கேட்க,



Advertisement

“நா நல்லா இருக்கேன் சின்னத்தான். முகுந்த் என்ன பண்ணறீங்க..?” என அவனிடமும் சிறிது நேரம் விளையாட்டாய் பேசி, 

அவனுக்காக வாங்கி வந்திருந்ததை கொடுத்துவிட்டு வந்து.. ரியானுக்கு எதிரிலிருந்த சேரில் அமர்ந்தாள்.

Advertisement

Advertisement

“அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்துட்டு போனது. அதுக்கு அப்புறம் ஆளே வரலையே.. ஏம்மா..? வேலை அதிகமோ..?” என ரியான் விசாரிக்க,

“எங்க சின்னத்தான்.. இந்த மழை சீசன் வந்தாலும் வருது.. மாத்தி மாத்தி சளி காய்ச்சல் ன்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தரா படுத்தி எடுத்திடுச்சு..” என சலிப்போடு சொன்னவள்,

Advertisement

“சின்னத்தா.. நா ஒரு முக்கியமா விசயம் பேசனுமுன்னு தான் இன்னைக்கு வந்தேன்..” என்றிட,

“சொல்லும்மா.. என்ன விசயம்..?” என்றான் யோசனையாக .

“அத்தான்.. அடுத்த மாசம் புரட்டாசி அமாவாசைக்கு இறந்தவங்களுக்கு படையல் போடறது நம்ம வழக்கம். 

இதுவரை நீங்க வெளிநாட்டுல இருந்தீங்க. இந்த வருஷம் அதை செய்யலாமேன்னு..” என்றதும்,

ரியானின் முகத்தில் அப்பட்டமான வலியின் சாயல்.

“அவங்க இறந்த சமயத்துலையும், முகுந்தை பார்த்துட்டு எதையும் ப்ராப்பரா பண்ணல.. 

இதுவரை அங்கே நீ இருந்ததால.. எதுவும் பண்ண முடியல. 

இப்போ நீ இருக்கறதால.. ஐயரை கூப்பிட்டு வீட்டுலையே வச்சு திவசம் கொடுத்து படையல் போடலாமுன்னு மலர் சொல்றா.. நீ என்ன நினைக்கறே..?” என சந்தீப்பும் சேர்ந்து சொல்ல,

“செய்யனும் தான். ஒரு மகனா.. கணவனா.. அவங்களுக்கு முறையா அப்போ செய்ய வேண்டியதைக்கூட செய்ய முடியாத நிலையில இருந்ததால.. அது பத்தி யோசிக்கவே இல்ல.. கண்டிப்பா பண்ணலாம்.

ஆனா.. அதுக்கு என்ன செய்யனுமின்னு எனக்கு தெரியாதே..” என்றான் சங்கடமாக.

“நாங்க எதுக்கு இருக்கோம் சின்னத்தான்..? 

அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம். உங்க சம்மதத்துக்காக தான் வெயிட்டிங்..” என மலர் சொல்ல, 

“நான் செய்யறதுக்கும் எதாவது லிஸ்ட் இருக்கா..?” என கேட்ட ரியானிடம்,

“உங்களுக்கு இங்கே.. என்ன, எங்கே.. கிடைக்குமுன்னு தெரியுமா என்ன..? 

அதெல்லாம் என்னோட வீட்டுக்காரர் பார்த்துப்பார்..” என்றவள்,

சொன்னபடியே அனைத்து ஏற்பாட்டையும் சரியாக செய்ய ஆரம்பித்திருந்தாள்.

நாட்கள் மெதுவாக நகர தொடங்க அந்த நாளும் வந்து சேர்ந்தது.

விடிகாலையிலேயே பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று.. அங்கு செய்ய வேண்டிய காரியங்களை முடித்து வந்து.. மதியம் வீட்டில் படையல் போடுவது.. என முடிவெடுக்கப்பட்டிருந்ததால், 

சந்தீப்பின் குடும்பம் முதல் நாள் இரவே ரியானின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

சந்தீப்பின் இரு பிள்ளைகள் இருக்க.. அன்று முகுந்த் சமத்தாக அங்கே இருந்து கொண்டான்.

அடுத்த நாள் மதியத்திற்கு வெங்கடேஷ், சம்யுக்தா இருவர் வீட்டிலிருந்தும் கண்டிப்பாக வர வேண்டும்.. என ரியான் அழைப்பு விடுத்திருந்தான்.

அதன் படி அதிகாலையில் கிளம்பி சந்தீப் மற்றும் ரியான் குடும்பம் மட்டும் பேரூர்‌ சென்று வந்து சேரவே பத்து மணியாகி இருந்தது.

படையல் வைக்க மட்டும்.. வீட்டிலேயே செய்வது தான் அவர்கள் முறை.. எனச்சொல்லி, 

படையல் இலைக்கு அளவாக மூன்று வகை பொறியியல்.. கூட்டு, இரண்டு வகை குழம்பு.. என செய்ய ஆரம்பித்தாள் மலர்விழி.

மற்றவர்களுக்கு உயர்தரமான ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் கொடுத்திருக்க, 

‘அளவாய் செய்வது தானே..’ என ஆரம்பித்தவளுக்கு உதவ என.. சரியாக வந்து சேர்ந்தனர், சம்யுக்தா குடும்பமும், வெங்கடேஷ் தன் அம்மா மரகதத்தோடும்.

பெண்கள் அதிகமாய் இருக்க, சமையல் செய்வது பெரிய வேலையாய் தெரியாமல் போனதால் அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாம் தயாரானது.

குழந்தைகள் அனைவரையும் சம்யுக்தா பார்த்தக்கொள்ள, முதல் நாளே கழட்டி துடைத்து வைக்கப்பட்டிருந்த போட்டோக்களை எடுத்து, அதை சாமி கும்பிட‌ எதுவான இடத்தில் வைக்க வெங்கடேஷ் ரியானுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். 

சந்தீப் ஐயரை அழைத்து வர, இதுவரை இறந்தவர்களுக்கு திதியும் கொடுக்காததால்.. சின்னதாக ஒரு யாகம் வளர்த்து எல்லாமே செய்வது.. என்ற முடிவின் படி ஆரம்பமானது பூஜை.

பெண்களும் வேலை முடித்து, ஹாலுக்கு வர.. அப்போது தான் சம்யுக்தா, அமிழ்தினியாள் இருவரும் அந்த மூன்று பேரின் புகைப்படத்தையும் கண்டனர்.

அவர்களோடு நின்றிருந்த மலரிடம், “அக்கா.. இதான் பாஸோட‌ பேரண்ட்ஸ் அண்ட் வெய்ப்பா..?” என சம்யுக்தா வினவ,

“ஆமா..” என்றாள் அவளும். 

சில நிமிடம் அந்த போட்டோக்களையே பார்த்து கொண்டிருந்த இனியாள், யாகம் தொடங்கி சில நிமிடத்தில்,

“அம்மா, நான் பிள்ளைங்கள கூட்டிட்டு வீட்டுக்கு போறேன்..” என தனத்திடம் சொல்ல,

“இப்ப தான் ஆரம்பிக்கறாங்க. இப்ப போனா நல்லா இருக்காது. அதும் முகுந்த் இங்கே இருக்கனுமே..” என சொல்ல,

“இந்த புகை அவங்களுக்கு சேராம, அங்க பாருங்க.. ரெண்டு பேரும் கண்ணை கசக்கறாங்க. 

கொஞ்ச நேரம் வெளியவாச்சும் இருக்கோம்..” என்றவளின் பேச்சும் சரியாக பட, ‘சரி..’யென தலையசைத்திருந்தார் தனமும்.

வேறு யாரிடமும் சொல்லாமல் சுவர் ஓரமாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஷோஃபாவில் அமர்ந்திருந்த குழந்தைகளிடம் சென்றவள் அழைக்க, 

ஏற்கனவே புகையால் எரிச்சலில் இருந்தவர்களும் குஷியாகி அவளோடு சென்றிருந்தனர்.

நேரம் கடக்க முறையாக ரியான் எல்லாம் செய்து முடிக்க, “உங்க அப்பா அம்மாக்கு முடுஞ்சது. 

இனி உங்க மனைவிக்கு பண்ணனும். அதற்கு உங்க பையனும் இருக்கனும்..” எனச்சொல்லிட,

முகுந்தை தேட, அப்போது தான் அவன் அங்கில்லை.. என்பதே எல்லாருக்கும் தெரிந்தது.

தனம், மலரிடம் இனியாள் சொன்னதை சொல்ல, 

“சின்னத்தான்.. இனியாள் சொன்ன மாதிரி அவனால இங்கே சமாளிக்க கஷ்டமா இருந்தாலும் இருக்கலாம். விடுங்க நீங்களே பண்ணிடுங்க..” என்றிட,

மனது நெரிடினாலும், புகையில் அவனாலேயே சமாளிக்க முடியாமல் திணறுவதை கொண்டு அவனே செய்து முடித்தான்.

எல்லாவற்றையும் முடித்து.. ஐயருக்கு கொடுக்க வேண்டிய தட்சணை கொடுத்தனுப்பிய பிறகு.. 

படையல் போட ஆரம்பித்ததும் இனியாளுக்கு சம்யுக்தா அழைத்திருந்தாள், “இப்போது பிள்ளைகளை உள்ளே கூட்டிவரலாம்..” என சொல்வதற்காக.

அழைப்பை ஏற்றவளோ, “சம்யூம்மா,  முகுந்த் நேரமே எழுந்ததுக்கு சிணுங்கிட்டே இருந்தான். சாப்பாடு கொடுத்து நம்ம வீட்டுல தூங்க வச்சிருக்கேன்..” என்று சொல்லிட,

விசயத்தை சம்யுக்தா சொன்னதும், “தூங்கற குழந்தைய உசுப்பி.. அவன் அழுக ஆரம்பிச்சா.. உன்னால இதை செய்ய முடியுமா..? 

அவனை பார்க்க தான் உனக்கு சரியா இருக்கும். 

அவன் தூங்கட்டும் விடு. நம்மளே செய்யலாம்..” என சந்தீப் சமாதானம் சொன்ன போதும்.. ரியானின் மனம் மட்டும் ஏனோ தடுமாறிக்கொண்டே இருந்தது.

‘தன் குடும்பம் இல்லாமல் போன அன்றும்.. இப்படி தானே இருந்தது. 

ஒரு வேளை, அவர்களுக்கான நாள் என்பதால் அப்படி தோன்றுகிறதா..? 

இல்லை வேறு காரணமா..?’ என மனம் ஊஞ்சலாடினாலும், மற்றவர் சொல்வதை எல்லாம் இயந்திர கதியில் செய்து முடித்தான்.

எல்லாம் முடிந்து சாப்பிடும் நேரம் நெருங்க, “ரியான், நீ தான்‌ முதல் இலையில உட்காரனும்..” என சந்தீப் சொன்னதும், 

“பேபி, நீ போய் முகுந்தை எடுத்துட்டு வா..” என்றான் உறுதியாக குரலில்.

சம்யுக்தாவிற்கும் அது சரியெனப்பட.. அவர்கள் வீட்டிற்கு விரைந்தாள்.

அங்கு ஹாலில் அமர்ந்திருந்தாள் அமிழ்தினியாள் முகமெல்லாம் இறுகி தலை குனிந்து. 

“அக்கா, குட்டீஸ் எங்கே..? 

இன்னுமா முகுந்த் தூங்கறான். இந்த சிலுப்பி எங்கே..? 

அங்கே சாப்பிட கூப்பிடறாங்க..?” என இலகுவாக பேசியபடியே உள்ளே வர,

“இனி அவனை அங்கே அனுப்ப மாட்டேன்..” என்றாள் இனியாள் உணர்ச்சியற்ற குரலில்.

“அக்கா விளையாடாதே.. எங்கே முகுந்த்..?” என அவள் தேட, 

அவர்கள் பயன்படுத்தும் அறையோ வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

அதைக்கண்டு அதிர்ந்த சம்யுக்தா, “அக்கா.. என்ன இது..? முதல்ல சாவிய கொடு..” என கோபமாய் கேட்க,

“முடியாது..‌ என்ன ஆனாலும் சரி, இனி அந்த வீட்டுக்கு அவனை அனுப்ப மாட்டேன்..” என மீண்டும் கராராய் சொன்னவளை, 

‘என்ன செய்வது..? எதனால் இப்படி..?’ என‌ ஒன்றும் புரியாமல் தவித்தவள்,

வெங்கடேஷின் அழைப்பேசிக்கு அழைத்து நிலைமையை சொல்லி.. தனத்தை அனுப்ப சொல்ல, 

அவனருகே நின்றிருந்த ரியானுக்கு, அச்சுரம் பிசகாமல் வந்து சேர்ந்திருந்தது அந்த வார்த்தைகள்.

‘எவ்வளவு தைரியம் இருந்தா.. அவ அம்மாக்கு அவனை திதி கொடுக்க விடாம பண்ணதும் இல்லாம.. இப்படி என் வீட்டுக்கே என் பிள்ளையை விட மாட்டேன்னு சொல்லுவா..?’ என்ற கோபத்தோடு, அங்கிருந்து வேகமாய் சம்யுக்தாவின் வீட்டை நோக்கி நடந்தான்.

அவனின் கோபத்தையும், வேகத்தையும் கண்டு.. மற்றவர்களும் கேட்க, விசயம் அறிந்து எல்லாருக்கும், ‘ஏன்..?’ என்ற குழப்பம் ஏற்பட, 

மரகதத்தை சந்தீப் குழந்தைகளை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு, மொத்தமாக ரியானின் பின்னோடு வந்திருந்தனர்.

இதுவரை வாசலோடு மட்டும் சென்றிருந்தவன், வீட்டிற்கு உள்ளே வந்ததும் வராததுமாக, “ஆமா‌.. உன் மனசு என்ன தான் நினைச்சிட்டு இருக்கே..?  

நானும் ஆரம்பத்துல இருந்து பார்த்துட்டே தான் இருக்கேன்..‌ என்னை பார்த்தாலே முறைக்கறே.. 

என் பையனை என்கிட்ட கொடுக்க அத்தன தடங்கல் பேசறே..

எவ்வளவு தைரியம் இருந்தா.. இப்போ என்னோட புள்ளைய, என் வீட்டுக்கு அனுப்ப முடியாதுன்னு சொல்வே..?” என கோபத்தில் ஒருமையில் பேசி எகிறிக்கொண்டு போக,

“டேய் சும்மா இருடா.. அந்த புள்ள எதோ தெரியாம பண்ணுது. 

என்ன.. ஏதுன்னு கேட்டு.. நம்ம புள்ளைய கூட்டிட்டு போலாம்..” என சந்தீப் அதட்டி ரியானை பிடித்து நிறுத்தியவன்,

“ஏம்மா.. நீ பண்ணறது சரியா சொல்லு..? 

பத்து மாசம் சுமந்து பெத்த தாய்க்கு திதி கொடுக்க கூட விடாம.. புள்ளைய இப்படி கூட்டிட்டு வந்ததே தப்பு. 

இப்போ அவனை அனுப்பவே மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்..?” என தன்மையாக சந்தீப் கேட்க,

“அவன் இனி எங்கேயும் வர மாட்டான். நான் அனுப்ப மாட்டேன்..” என, 

அப்போதும் குனிந்த தலை நிமிராமல் அழுத்தமாக சொன்னவளை கண்டு கோபத்தில் நெற்றி நரம்பு புடைக்க,

“என் மகனை நான் தூக்கிட்டு போவேன். ஏன்னா, அவன் எனக்கும் என் பிருந்தாவுக்கும் பிறந்த மகன்.. 

நான் அவனோட அப்பாங்கற என் உரிமை.. 

உனக்கு அப்படி என்ன உரிமை இருக்கு..? அவனை கொடுக்க மாட்டேன்னு சொல்ல..?” என சொன்னவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் அக்னியாய் சிவந்திருக்க,

“என்ன உரிமையா..? ஏன்.. உன்னோட பொண்டாட்டி சொல்லையா..? அவனுக்கும் எனக்குமான உறவை.. உரிமையை..” என ஆங்காரமாய் கேட்டவள்,

பின் நக்கலாய், “அவனை உன் பொண்டாட்டி பத்து மாசம் சுமந்து பெத்து உன் கையில கொடுத்தாளா..?” என்றவள்,

அடுத்த நொடி விழியில் தீட்சண்யத்தோடு ரியானை பார்த்தவள், 

“அவன் என் மகன்.. என் கருவில் உருவாகி.. பத்து மாசம் சுமந்து.. வலிக்க பெற்ற என் மகன்..” என அவளின் அடி வயிற்றில் கைவைத்தபடி கர்ஜிக்க,

சப்த நாடியும் ஒடுங்கி தடுமாறி கீழே சரிந்தான் ரியான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!