Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 23.1

அவங்க பேர் கோமதி..” என்றதுமே, 

சந்தீப் சட்டென திரும்பி ரியானை பார்க்க.. அவனின் விரக்தி படிந்த முகமே அவனின் மனவோட்டத்தை கட்டியம் காட்டியது.



Advertisement

இவர்கள் நிலை தெரியாமல் தொடர்ந்தாள் இனியாள்.

“அவங்க சென்னை போறேன்னு சொன்னாங்க. 

Advertisement

Advertisement

என் நிலைமைய சொல்லும் போதே அவன் என்னை தேடறது தெரிஞ்சது. 

அவங்ககிட்ட அவன் தான்னு காட்டி சொல்ல, அவங்க இருந்த சீட்டுல என்னை அவங்க மடியில படுக்க வச்சு.. பெட்சிட் போட்டு என்னை கவர் பண்ணி அவங்க கூட வந்த மாதிரி இருந்துட்டாங்க. 

Advertisement

ட்ரைன் கிளம்பி கொஞ்ச தூரம் வந்ததும், டிடிஆர்கிட்ட பேசி ஃபைன் கட்டி சீட் கன்ஃபார்ம் பண்ணி அவங்களோட கூட்டிட்டு வந்தாங்க.

சென்னை வந்ததும், “உன்னோட ஊருக்கு போறதுக்கு இந்த காசை வச்சுக்கோ..”ன்னு அவங்க கொடுத்தாங்க. 

எனக்கு திரும்ப அங்கே போகவே பயம். 

ஏற்கனவே அம்மா மாதிரி தானே பொண்ணும்..ன்னு சொல்லிட்டே இருப்பாங்க. 

நா எப்படி‌ போனேனோ அப்படியே தான் திரும்பி போனாலும், அவங்க என்னை அப்படி பார்ப்பாங்களா..? 

என்னை புருஞ்சுக்கிட்டு ஏத்துப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை. 

அதனால, “மேடம், ப்ளீஸ் எனக்கு இங்கே எதாவது வேலைக்கும், தங்கறதுக்கு ஒரு இடமும் மட்டும்‌ ஏற்பாடு பண்ணிக்கொடுங்க..” ன்னு அவங்ககிட்ட அழுது கேட்டேன்.

அவங்களும் என்னை ஒரு இடத்துல வேலைக்கு சேர்த்து விட்டுட்டு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டல்ல சேர்த்தும் விட்டாங்க.

அவங்க போன் நெம்பரை கொடுத்து, லோக்கல் கார்டியன்னு அவங்க பேரையும் அட்ரஸ்ஸையும் கொடுக்க ஈசியா எனக்கு இடமும் கிடச்சது.

அதன் பிறகு வாழ்க்கை கொஞ்சம் நிம்மதியா தான் போச்சு. 

ஏற்கனவே பட்ட அனுபவத்தால.. இந்த முறை யாரையும் என்னை நெருங்காத படி தான் என் நடவடிக்கையை மாத்திக்கிட்டேன்.

வேலைக்கு போயிட்டே டெய்லரிங் கத்துக்கிட்டேன். எதாவது ஒரு சந்தர்ப்பத்துல உதவுமுன்னு.

உலகத்துல உள்ள எல்லா நாடுகளையும் புரட்டிப்போட்ட கொரோனா என்னோட வாழ்க்கையையும் மறுபடி புரட்டி போட்டுச்சு.

நான் தங்கியிருந்த ஹாஸ்டல்ல கொரோனா ஊரடங்கு அறிவிச்சதும் மொத்தமா எல்லாரும் கிளம்ப.. 

“ஹாஸ்டல் க்ளோஸ் பண்ணி வைக்க போறோம். நீயும் கிளம்பு..” ன்னு சொல்லிட்டாங்க.

எனக்கு தான் போக்கிடமே கிடையாதே..! நான் எங்கேன்னு போவேன்..? 

அதனால அங்கேயே தங்கிக்க அனுமதி கேட்டு அவங்ககிட்ட போனேன்.

ஆனா அவங்க, “இங்கே பாரும்மா.. இங்கே தங்கினாலும் சாப்பிட உனக்கு எந்த வசதியும் இல்லை. 

வெளியே ஹோட்டல்ஸ் கூட லாக் பண்ணிடுவாங்க. சாப்பிடாம எப்படி இருப்பே..? 

அதனால உனக்கு தெரிஞ்சவங்க வீட்டுக்காவது போ..” ன்னு சொல்லிட்டாங்க.

அப்பவும் நான் தயங்க, அவங்களே லோக்கல் கார்டியன்னு பேர் கொடுத்தவங்களுக்கு கால் பண்ணிட்டாங்க.

அவங்க, “கிளம்பி என்னோட வீட்டுக்கு வா..”ன்னு சொல்ல, எனக்கும் வேற வழியில்லாம தான் அங்கே போனேன்.

அங்கே போனப்போ தான், அவங்க எவ்வளவு வசதியானவங்கன்னு தெரிஞ்சுது. 

அவங்க லாக்டவுன்னால சர்வண்ட்ஸ் யாரும் வரமாட்டாங்கன்னு என்னை அலோவ் பண்ணறாங்க.. ன்னு நானும் அங்கே தங்க முடிவெடுத்தேன்.

அந்த வீட்டுல என்னை சேவ் பண்ணி ஹாஸ்டல்ல விட்டவங்க பொண்ணும் இருந்தாங்க.

என்னை அவங்க நல்லா தான் பார்த்துக்கிட்டாங்க.

ஆனா.. அவங்க பொண்ணு மட்டும் சோகமா எதோ யோசனையில இருப்பாங்க எப்பவும். 

நானும் அங்கே ஒரு சர்வன்ட் அளவுல வேலைய பார்த்துட்டு ஒதுங்கி இருந்தேன்.

கொரோனா லாக்டவுன் பிரியட் முடுஞ்சதும் எப்பவும் போல நானும் அவங்க ஹெப்புக்கு நன்றி சொல்லிட்டு ஹாஸ்டலும் வந்துட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு அவங்க என்னைத்தேடி வந்தாங்க.

அப்போ..

“அம்மாடி.. நல்லா இருக்கீயா..?”  

“நல்லா இருக்கேங்க. நீங்க, உங்க பொண்ணு எல்லாம் நல்லா இருக்கீங்களா..?” என்றாள் அக்கறையாய்.

“என்னத்த சொல்ல..? என் பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணி.. கஷ்டப்பட்டு காப்பாத்தி வச்சிருக்கோம்..” என கலங்கிய குரலில் அவர் சொல்ல,

“என்னங்க சொல்றீங்க..? அச்சோ..! ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாங்க..?” என்றாள் பதறி.

“எல்லாம் அந்த ஆண்டவன் அவளுக்கு கொடுத்த குறையால தான்..”

“குறையா..‌ என்ன சொல்றீங்க..?”

“என்னோட பொண்ணோட கர்ப்பப்பை ரொம்ப பலகீனமா இருக்காம். 

அதனால அவளால கருத்தரிக்க முடியாது. 

அப்படியே கருத்தரிச்சாலும் அதை தாங்கற வலிமை அதுக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க..” என்று அவர் அழ,

“அய்யோ ஆண்டவா.. உங்கள மாதிரி நல்லவங்களுக்கா அந்த ஆண்டவன் இப்படியான சோதனையை தரனும்..” என இனியாளும் வருந்த,

“என் பொண்ணோட புருஷன் குழந்தை இல்லைன்னா மறுமணம் பண்ணிப்பேன்னு என் பொண்ணை இங்கே அனுப்பி வச்சிட்டான்.

இனி என் பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு. 

அவளுக்கு அவ புருஷன்னா உயிரு. இனி அவரோட வாழ முடியாதோன்னு தான் இப்படி ஒரு முடிவை எடுத்துட்டா..” என மீண்டும் அவர் கண் கலங்க,

“அந்த ஆண்டவன் உங்களுக்கு நிச்சயமா ஒரு நல்ல வழி காட்டுவார். தைரியமா இருங்க..” என ஆறுதல் சொன்னவளின் தலையில் அலுங்காமல் ஒரு குண்டை தூக்கி போட்டார், 

‘நன்றிக்கடன்..’ என்ற அஸ்திரத்தை வைத்து.

“இனி அவ சந்தோஷமா வாழறதும்.. இல்ல, ஒரே அடியா இறந்து போறதும் உன் கையில தான் இருக்கு. 

எங்களுக்கு நீ தான் உதவனும்..” என இனியாளின் கரத்தை பற்றிக்கொண்டு கண்ணீர் உகுத்தவரை.. உதறி தள்ளவும் முடியாமல், 

அதற்காக அவர் கேட்பதை கொடுக்கவும் முடியாமல் இருக்கொல்லி எறும்பாக தவித்தாள்.

இறுதி வாய்ப்பாக, “சட்டப்படி வாடகை தாயா இருக்கனுமுன்னா நிறைய பார்மாலிட்டிஸ் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். 

அதுல குறிப்பா அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்கனுமுன்னு சொல்வாங்க. 

ஆனா எனக்கு ஆகலையே. அப்புறம் எப்படி நீங்க சொல்றது நடக்கும்..?” என வினவ,

“லீகலா தான் முடியாது. நம்ம இல்லீகலா தான் பண்ணப்போறோம். 

ஆரம்பத்துல இருந்து கடைசி வரை என்னோட பொண்ணு பேர் மட்டும் தான் கொடுக்க போறோம். 

அதுமட்டுமில்ல இப்போ இருக்க இக்கட்டான சூழ்நிலைய சாதகமா பயன்படுத்தி, 

எல்லார்கிட்டையும் என் பொண்ணு தான் கன்சீவா இருக்கான்னு சொல்லிட்டா பின்னால எந்த இஸ்யூவும் வராது. 

அவ புருஷனை அவ சமாளிச்சுப்பா. 

நீ குழந்தைய பெத்து கொடுத்ததும், என் பொண்ணு சந்தோஷமா அவ புருஷனோட வாழப்போயிடுவா. 

அப்புறம் நான் தனியா தானே இருப்பேன். 

நானே.. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய உருவாக்கி கொடுத்து என்கூடவே வச்சுக்கறேன்..” என அவர் சொன்னதிலேயே, 

‘அவர்கள் தீர்மானமான முடிவை எடுத்துவிட்டு தான் தன்னிடம் வந்திருக்கிறார்கள்..’ என்பது தெளிவாக,

நன்றி கடனுக்காக.. அவர்களுக்கு உடன்பட்டாள் இனியாள்.

அதற்கு முதல்படியாக ஹாஸ்டலில் இருந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டாள் இனியாள்.

இனியாள் சம்மதித்து இங்கே வந்ததும் அவர் மகளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

“ரொம்ப தேங்க்ஸ் அமுதா..” என அவர் சொல்ல,

“என்னோட பேர் அமுதா இல்லைங்க.. அமிழ்தினியாள்..” என்று திருத்த,

“அவ்வளவு லென்த்தா எதுக்குன்னு நானே சுருக்கிட்டேன். இனி நீ அமுதா தான்..” என்றவள்,

அடுத்த நாளே மருத்துவமனை அழைத்து சென்று அவளை முழுவதுமாக பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

‘அவர்கள் எல்லாம் சரியாக உள்ளது..’ என்றவுடன் கருத்தரிப்பதற்கான வழிமுறைகள் தொடங்கப்பட்டது.

அதன் பலனாய் அடுத்த மாதமே இனியாள் கருத்தரித்திருந்தாள்.

கொரோனா காலம் என்பதால்.. அனைவரும் மாஸ்கோடு சுற்ற, யாரும் யாரையும் அடையாளம் காணும் நிலையில் இல்லாது இருந்ததே..!

பெண்கள் மூவருமே வீட்டிலிருந்து வெளியே வரும் போதே மாஸ்க்கோடு வருவதும், 

கொரோனாவை காரணம் காட்டி.. யாரையும் பார்க்க அனுமதிக்காமல் போக, அவர் மகள் கர்ப்பமாக இருப்பதாய் அருகே இருந்தவர்களை நம்ப வைப்பது சுலபமாக போனது.

கர்ப்ப கால தொந்தரவுகளையும் கடந்து, ஹார்மோன் ஊசி போடப்பட்டதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளே இனியாளை பாடாய் படுத்தியது.

சாதாரணமாக திருமணம் முடிந்து கர்ப்பம் தரித்திருந்தால், தனது உணர்வுகளுக்கு வடிகாலாய் கணவன் அருகே இருப்பான். 

ஆனால் மருத்துவ முன்னேற்றத்தில் ஒரு படி நிலையாம் இந்த வகை கருவுற்றலில் உண்டாகும் தேவையை.. கன்னிப்பெண்ணாய் அவள் கடந்து வருவதற்கு பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

நாட்கள் மாதங்களாக மாற இனியாளின் வயிறும் வேகமாக வளர்ந்தது.

ஐந்து மாதங்கள் கடந்து.. வயிற்றில் இரு வித அசைவை கண்டு, அடுத்த முறை மருத்துவமனை சென்ற போது விசாரிக்க, 

“ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கற மாதிரி கேட்கறே..? சிங்கிள் பேபி.. தான்..” என அடித்து அந்த மருத்துவர் சொல்லிவிட இனியாளும் அதையே நம்பினாள்.

கொரோனா கட்டுப்பாட்டால் மருத்துவமனைக்கு மூவருமாக சென்றாலும், 

டாக்டர் அறைக்குள் நோயாளியை தவிர‌ யாரையும் உள்ளே விடாமல் இருக்க இந்த விசாரணை.. அவரின் பதில் எதுவும் மற்றவர்களுக்கு தெரியவில்லை.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஸ்கேன் மற்றும் டெஸ்ட் அனைத்தும் தனியாகவே எதிர்கொள்ள வேண்டிய நிலை இனியாளுக்கு. 

ஒரு வித பயமும், தவிப்பும் ஆரம்பத்தில் இருந்த போதும்.. அதே தொடர்ந்ததால் நாளடைவில் பழகிப்போனது அவளுக்கு.

இன்னும் மாதம் கூட.. உட்கார, நடக்க முடியாமல் பெறும் அவதி கொண்டாள். 

கோமதிக்கு அவளின் வயறு இருக்கும் நிலை கண்டு சந்தேகம் எழ, அதை தன் மகளிடம் சொன்னவுடன், 

அவளும் ஸ்கேன் ரிப்போர்ட்டை ஆராய.. அதில் இவர்கள் நினைப்பது போல இல்லாமல் இருக்க அதோடு அவர்களும் அதை கண்டு கொள்ளவில்லை.

தாயும் மகளும்.. நல்ல சத்தான ஆகாரம், நல்ல பாடல்கள் கேட்க வைப்பது, வீட்டிற்குள்ளே நடை பயில வைப்பது.. என டாக்டர் சொன்ன எல்லாவற்றையும் செய்து அவளை நன்றாகவே கவனித்தும் கொண்டனர்.

எல்லாரையும் போல, கை நிறைய வளையலோடு தன் பிள்ளையிடம் காட்டி பேச வேண்டும்.. என்ற ஆசையெல்லாம் எழுந்தாலும், 

‘அதை நிறைவேற்றிக்கொள்ளும் தகுதி தனக்கில்லை..’ என்பதால், அவளின் எண்ணத்தை மனதோடு புதைத்துக்கொண்டாள்.

அடுத்த சில நாளில்.. கோமதி, தன் மகளோடு ஒரு‌ பெட்டி நிறைய வளையல்களை கொண்டு வந்து அவளின் இரு கைகளிலும் மாட்டிவிட, இனியாளுக்கு சந்தோஷத்தில் கண்ணீர் பெருகியது.

“ரொம்ப தேங்க்ஸ் அக்கா..” என்றாள் உள்ளார்ந்து. 

இப்போது எல்லாம் “அக்கா..” என‌ அழைக்க ஆரம்பித்து இருந்தாள் கோமதியின் மகளை. 

“என்னோட பிள்ளை சந்தோஷம் எனக்கும் முக்கியமில்லையா..?” என அவர் சொன்ன போது தான் நிதர்சனம் புரிந்தது இனியாளுக்கு.

‘இன்னும் இரண்டு மாதத்தில் இந்த பிள்ளை அதற்குரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமே..! 

அதன் பிறகு அந்த குழந்தைக்கும் தனக்குமான உறவு..?’ என நினைக்கும் போதே நெஞ்சம் வலித்தது இனியாளுக்கு.

ஆனால்.. அது தானே அவர்களுக்குள்ளான ஒப்பந்தம். 

எனவே அதைக்கொண்டு மனதை இப்போதே பிரிவுக்கென திடப்படுத்த ஆரம்பித்தாள் இனியாள்.

மந்திரம் போல அதை சொல்லிக்கொண்ட போதும், குழந்தை தன் மணிவயிற்றில் உதைத்து விளையாடும் போது, உயிர் வரை வலித்தது அந்த பிஞ்சை பிறந்ததும் பிரிய வேண்டுமே என எண்ணி.

ஒரு முடிவுக்கு வந்தவளாய் அன்று மதிய உணவின் போது, “அக்கா, குழந்தை பிறந்ததும் உங்ககிட்ட கொடுத்துட்டு ஒதுங்கி போயிடனுமின்னு தான் நான் நினைச்சிருந்தேன். 

குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமுன்னு உங்களுக்கும் தெரியும் தானே..? 

அதனால குழந்தைக்கு மூணு மாசமோ.. நாலு மாசமோ.. நான் தாய்ப்பால் கொடுக்கட்டுமா..? 

எப்படியும் இங்கே தானே நானும் இருக்க போறேன்..” என தயங்கிக்கொண்டே தனது யோசனையை கூற,

தாய்.. மகள், இருவரும் அப்போதைக்கு எந்த பதிலும் கூறாவிட்டாலும்.. 

இரவு உணவின் போது சம்மதம் சொல்லிவிட அத்தனை சந்தோஷம் இனியாளுக்கு. 

எப்படியும் கொஞ்ச நாள்.. தான் பெறப்போகும் பிள்ளை தன் மடியில் இருக்க போகிறான்.

அதற்கு பிறகு.. இனி என் வாழ்க்கையில் வேறு எதுவுமே வேண்டாம். 

அந்த பிள்ளையோடு இருந்த அந்த நாட்களின் நினைவிலேயே மீதமுள்ள வாழ்நாளை ஓட்டிவிடலாம்.. என முடிவெடுத்தவளை, 

அந்த குழந்தையை காக்க வேண்டியே.. அவர்களை விட்டு.. ஓட வைத்த விதியை என்ன சொல்வது..?!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!