Skip to content
Post Views: 1,212
கீதம் 💜 25
காலை சூரியன் இன்னும் விழித்தெழவில்லை. பிரம்ம முகூர்த்தத்தில் ஆரவ், நந்திதாவின் திருமணம் இன்று நடைபெற உள்ளது. காலில் சக்கரம் கட்டாத குறையாய், அங்கே இங்கே ஓடி வேலை செய்து கொண்டு இருந்தான் ராஜேஷ். மச்சான் இருக்க மலையேறலாம் என்ற வார்த்தைக்கு இணங்க அனைத்து வேலைகளையும் கனகச்சிதம்மாய் ரவியோடு இணைந்து செய்திருந்தான். தர்ஷி மேடையில் அமர்ந்த இடத்தில் இருந்து எழாமல் போனில் அனைத்தையும் செய்ய சொல்லி கத்தி பேசி கொண்டிருந்தாள். இதோ இன்னும் சிறிது நேரத்தில் முகூர்த்தம்.
Advertisement
பட்டு வேட்டி, சட்டை சரசரக்க மாப்பிள்ளை கோலத்தில் ஆரவ் மந்திரம் சொல்லி கொண்டு இருக்க, மாம்பழ வர்ணத்தில், கரும் பச்சை நிற பார்டரில் பட்டு சேலை அணிந்து, தங்க பதுமையாய் நந்திதா ஸ்ரீ நடந்து வந்து கொண்டிருந்தாள். அங்கே அமர்ந்து இருந்தவர் அனைவரின் பார்வையும் அவர்கள் மேல் தான் இருந்தது.
ஜோடி பொருத்தத்தை பார்த்து அனைவரும் வியந்தனர். கல்யாணமே பண்ண மாட்டேன் என வீம்பாய் இருந்தவளை, மனதை மாற்றி தன் வீட்டுக்கே மருமகளாய் ஏற்று கொண்ட ரவியை அனைவரும் புகழ்ந்தபடி இருந்தனர். ஹாஸ்பிடலிலும் யாருக்கும் இவர்களின் காதல் கல்யாணம் பற்றி தெரியாது.
Advertisement
Advertisement
ஒரே இடத்திலே இருந்தும் நேற்று மதியம் வரை ஹாஸ்பிடலில் வேலையை பார்த்து கொண்டு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என நேர்மையாய் இருந்தவர்களை கட்டி இழுத்து தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் ஒரு வாரத்தில் வேலையை முடித்து, அவனோடு செல்ல வேண்டும் என்ற ஆசையில் துரிதமாய் இவள் பணியோடு ஒன்றிணைந்து இருக்க, அவனோ இவளை அழைத்து செல்ல விசா, மற்ற திருமண வேலைகள் என இருவரும் பிஸியாய் இருந்தனர். தேவையற்ற பேச்சுக்கள் கூட வைத்து கொள்ளாமல் இருக்கும் நல்ல பிள்ளைகளாய் வலம் வந்தனர்.
பெரியவர்கள் விரும்பி நடத்தி வைக்கும் திருமணம் தான் என அனைவரும் எண்ணினர். மருத்துவர்கள், உற்றார், உறவுகள் இவர்களை விட இவர்கள் உதவியால், வாழ்வில் செழுமையாய் வாழும் உள்ளங்களும் வாழ்த்துவதற்கு மண்டபத்தில் குமிந்து இருந்தனர்.
Advertisement
சுகந்தி, வைபவ் இருவருக்கும் ஸ்ரீ தங்களை விட்டு சிறிது காலம் வெளிநாட்டில் வசிக்க போகிறாள் என்பது தவிர வேறு எந்த கவலையும் இல்லை. தன் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தது எண்ணி முகம் மலர்ந்து, அகம் பூரிக்க, மேடையின் ஓரம் நின்று இருந்தார். எந்த விசேஷத்திற்கும் போக விரும்பாதவர் அங்கே மேலே நிற்கவே கூச்சப்பட, ராஜி தான் அதட்டி, உருட்டி, அவரை நிற்க வைத்து இருந்தாள்.
வைபவ் மனமோ தனக்கு நல்ல அறிவுரை கூறி இத்தனை நாள் தன்னை வழிநடத்திய சாரே அவன் மாமாவாக வந்ததை எண்ணி மகிழ்ச்சியில் பூரித்து நின்றான். கமிஷனர் விஜயகுமார், இந்துமதி தம்பதிகள் நந்திதாவின் தாய், தந்தையாக இருந்து சடங்குகள் செய்து, கன்னிகாதானம் செய்ய தயாராய் நின்றிருந்தனர்.
துள்ளும் மனதை அடக்கி கொண்டு அவளையே பார்த்திருந்தான் ஆரவ். முகமோ நிலவென ஜொலிக்க, அன்னநடை இட்டு அவள் நெருங்க நெருங்க தன் வாழ்வின் மிக முக்கிய தருணத்தை ரசித்து கொண்டு காத்திருந்தான் அவள் மனதை வென்ற அந்த கள்வன். தன் அருகே அவள் அமர்ந்தவுடன் கன்ன குழி சிரிப்பில் ரசித்து பார்த்து, அவளையும் நாணமுற செய்தான்.
மங்கள நாணை அனைவரும் ஆசிர்வதித்து தர ராஜி, அதை எடுத்து கொண்டு அய்யர் வசம் தருவதற்காக வந்து கொண்டு இருந்தாள். ரம்யாவும், தர்ஷியும் நாத்தி முடிச்சு போட ரெடி ஆகி நிற்க, ராஜேஷ் இவன் தோள் ஒட்டி தோழனாய் கீழே அமர்ந்திருந்தான். சாவித்ரி, ரவி முகத்தில் சிரிப்பு பொங்க தன் மகனின் திருமணத்தை ஆசை தீர கண்டு கொண்டிருந்தனர்.
மங்கள நாணை கையில் எடுத்தவன் அவள் விழி அழகில் சுற்றம் மறந்து,
“என் மனைவி, என் உரிமை” என கூறி கொண்டே அனைத்து முடிச்சையும் அவனே போட்டு தர்ஷியை பார்த்து குறும்பாய் சிரித்தான்.
” என் ஆரவ் மச்சான் அடிமை உலகின் அரசனாய் இன்று முதல் முடி சூட்டி கொண்டார் ” என ராஜேஷ் கலாய்க்க, அனைவரின் வாழ்த்தொலியும், சிரிப்பொலியும் அரங்கேற இனிதாய் ஒரு இல்லறம் நல்லறம் காண அடி எடுத்து வைத்தது.
அடுத்தடுத்து சடங்குகள், மறுவீடு, என நாள் மகிழ்ச்சியில், பரபரப்பில் கழிய , இரவின் குளுமையில் மருத்துவ நண்பர்கள், நண்பர்களோடு ரிசப்ஷனும் இனிதே முடிவுற, பதினோரு மணி அளவில் தான் வீட்டுக்கே திரும்பி வர முடிந்தது.
அவனின் கீதம் சங்கீதம் இசைக்க ஸ்வரங்களை தேடி நாணத்தில் முகம் சிவக்க அமர்ந்து இருந்தாள்.அவளை அலங்கரிக்கவென தர்ஷியும், ராஜியும் போட்டி போட்டு கொண்டு அழகை இன்னும் அழகாக்கி கொண்டிருந்தனர்.
” நந்து, அங்க போயும் பேஷண்ட் கதையை பத்தி பேசாம ரெண்டு பேரும் ஒழுங்கா உங்க வேலையை பாருங்க ..,” என ராஜி சீண்ட.
” கத்தி குத்து நடந்த இடத்தில், காதல் கூத்து நடத்தி, அந்த ரணகளத்திலும் குதூகலமா இருந்தவங்க இவங்க, அவங்கட்ட நீ இப்படி எல்லாம் சொல்ல கூடாது ” தர்ஷி கலாட்டா செய்து கொண்டு இருந்தாள்.
“இங்கே பாரு, அண்ணே, பத்து பிள்ளை பெத்துக்க போறதா சொல்லிருக்காங்க. ரெண்டு எனக்கு, ரெண்டு ரம்யாக்கு, ரெண்டு தர்ஷிக்கு, மிச்சத்தை வேணாம் அந்நியத்துல கொடுத்துக்கோ. டீல் ஓகே தானே. அப்புறம் கூட இன்னும் எக்ஸ்ட்ரா வந்தா அடுத்து முடிவு பண்ணிக்கலாம் ” என ராஜி கிண்டலில் இறங்க, இவர்கள் பேச்சினை விட காலையில் அவளவன் செய்த குறும்புகளை எண்ணி வெக்கத்தில் இன்னுமே சிவந்துகொண்டிருந்தாள்.
அனைவரும் வந்து வாழ்த்து சொல்லி கொண்டிருக்கும் வேளையில் காத்தாயி பாட்டியும் வந்தார். இவள் கையை பற்றி கொண்டு, ” நிறைய குழந்தை குட்டியை பெத்து சந்தோசமா வாழணும்டி ராங்கி, உன் மனசு போலவே மவராசன் கிடைச்சுட்டான்.” சந்தோஷத்தில் அவர் பேசி கொண்டிருக்க.
அவரை பார்த்து சிரித்தபடி ” பாட்டி, நீங்க கவலையேபடாதீங்க, பத்து பசங்க கான்பார்மா உண்டு. அது இன்னும் கூடுறது உங்க பேத்தி கையில தான் இருக்கு. எல்லாம் அவள் செயல்” குறும்புடன் கண்ணடித்து கூறி அவரையே வெட்கப்பட வைத்து ஓட விட்டான்.
அருகில் நின்றிருந்தவர்கள் கேலி செய்து சிரிக்க ஆரம்பிக்க, அவன் சொன்னதை எண்ணி நாணத்தில் முகம் சிவக்க, அவனை பார்க்க முடியாமல் வெட்கி தலை குனிந்து தான் சிறிது நேரம் நின்று இருந்தாள். மீண்டும் அவளை சீண்ட ஆரம்பித்து இருந்தவனிடம் ” டேய்., பேசாம இருக்க மாட்டியா, ஏன்டா படுத்துற., எல்லாரும் நம்மள பார்த்து கிட்டு இருக்காங்க. அடங்குடா. ” அவளிடம் திட்டு வாங்கியபின் தான் கொஞ்ச நேரம் அமைதியாய் நின்றான்.
காலையில் சாப்பிட செல்ல, அங்கேயும் ரகளை செய்து விட்டான். சம்பிரதாயத்துக்கு ஊட்டி விட சொல்ல, இலையில் உள்ளதை முழுவதையும் ஊட்டி விட்டே தீருவேன் என சொன்னவனை தாஜா செய்து தான், அவளே சாப்பிட முடிந்தது.
அக்கினி வலம் வர பற்றிய கரங்களில் அத்தனை இறுக்கம். விடாமல் வம்பு செய்தவனை கண்ணை சுருக்கி காட்டி, ப்ளீஸ் என கெஞ்சிய பின்னே தான் விட்டான். இவன் செய்யும் குறும்புகள் அவளுக்கு மட்டுமே புரியும் வண்ணம் இருந்ததால் சிலவற்றை சொல்ல கூட முடியவில்லை.
அதே போல வெளிநாட்டுக்கு சென்றால் வெள்ளைகாரியை கல்யாணம் பண்ணி வந்துருவான் என பெண் பார்க்க சொன்ன அத்தையோ இவர்களை வாழ்த்து வந்து ” நல்லவேலைடா, நம்ம ஊர் பொண்ணை கட்டிக்கிட்ட, எங்க எவளையாவது இழுத்துக்கிட்டு வந்துருவேன்னு பயந்துட்டு இருந்தேன். ” என்றவுடன்
அவரை அருகே குனிய சொல்லி ” அத்தை, என்னை சுத்திட்டு இருந்த அஞ்சாறு பொண்ணுகளை தவிக்கவிட்டுட்டு வந்து தான் இவளை கல்யாணம் பண்ணிருக்கேன். அங்க போனா தான் தெரியும், அவங்க என்ன அடி கொடுக்க போறாங்கன்னு” பயந்தபடி பம்மிய குரலில் சொல்ல, அவரோ திருதிருவென முழிக்க ஆரம்பித்தார்.
அவன் சொன்னதை கேட்டவுடன் நந்துவுக்கோ சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் இருந்தது. ” என்னடா சொல்ற, நிஜமாவே லவ் பண்ணி விட்டுட்டு வந்தியா, ஏன்டா இப்படி பண்ண, உன் பொண்டாட்டி வேற பக்கத்துல நிக்குறா, பயமேயில்லாம சொல்லிட்டு இருக்க, ” அவனை திட்ட தொடங்க .
“அம்மா பார்த்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லி சண்டை கட்டி தான் இவளை என் தலையில கட்டி வச்சுட்டாங்க. நீங்க ரெகமண்ட் பண்ணி சொன்ன பொண்ணையும் வேணாம்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றது., வேற வழியே இல்லை.,” பாவமாய் சொன்னவனை அவர் பரிதாபமாக வேறு பார்த்தார்.
” மொதலே என்கிட்டே சொல்லி இருக்கலாமே, நான் ஹெல்ப் பண்ணி இருப்பேனே..,இப்போ வந்து சொல்லுற., ” என்றவரிடம்.
” நான் என் பொண்டாட்டி கிட்ட தான் ஹெல்ப் கேட்டேன். அவ பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா. என்னை நம்பவே இல்லை. நீங்க வேணா அவகிட்ட போய் சொல்லி பாருங்க, நம்புறாளா, இல்லையானு உங்களுக்கே தெரியும் ” அவரையும் ஏத்தி விட்டு, நந்துவையும் பார்த்து சிரிக்க, அப்போது தான் அவன் வம்பு செய்கிறான் என்பதே அந்த அத்தைக்கு புரிந்தது. நந்துவும் சிரிப்பை அடக்க முடியாமல் தத்தளித்தவள் அவன் சிரித்தவுடன் இவளும் சிரித்து விட்டாள்.
” உங்க அம்மா உன்னை எந்த நேரத்துல பெத்தாலோ, ஏட்டிக்கு போட்டியா பேசி வாயை புடிங்கிட்டு இருக்குற. நல்லவேளை அந்த டாக்டர் பிள்ளை தப்பிச்சது. எம்மா, இவன்கிட்ட நீ வந்து மாட்டணும்னு உன் தலையில் இருந்தா என்ன செய்ய முடியும். பார்த்து இரும்மா., எப்போ எது பண்ணுவான்னு சொல்ல முடியாது. ” கடுப்பில் அவர் செல்ல.
“ஏங்க இப்படி அவங்ககிட்ட வம்பு பண்றீங்க, பாருங்க புலம்பிட்டி போறாங்க. “
“பின்ன என் கேரக்டர் பத்தி தப்பாய் பேசுனா, சும்மா இருக்கவா, அதுவும் இல்லாம நம்ம ரெண்டு பேருக்கும் சண்டை வரதுக்கு காரணமே இவங்க பண்ண வேலை தானே. இல்லைனா நிம்மதியா இருந்துருப்போம்ல.” அவன் கடுப்பாய் சொல்ல.
” இப்படியும் யோசிங்களேன். அந்த போட்டோ தானே நம்ம ரெண்டு பேரும் எந்த அளவு ஒருத்தர ஒருத்தர காதலிக்கிறோம்னு நமக்கு தெரிய வச்சது. இல்லைனா நமக்கே புரிஞ்சிருக்காதே.” அவள் எடுத்துரைக்க தலையாட்டி ஆமோதித்தான்.
இரவு ரிசப்ஷனில் அவளை பார்வையாலே பதற வைத்தான். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் யாருக்கும் கேட்காமல் கிசுகிசுக்க இவளால் தான் அங்கே நிற்க முடியவில்லை. ” நீ போட்டோக்கு பண்ணத எல்லாம் இன்னைக்கு நேருல எனக்கு பண்ணனும், இல்லைனா உன்னை விடவே மாட்டேன். இத்தனை நாள் தப்பிச்சு ஓடி கலாட்டா பண்ண தானே. இனிமே முடியாது. ” என்றவனை பார்க்க கூட முடியாமல் நாணம் தடுத்தது.
சில மருத்துவர்கள் வர நேரமாக அவர்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை. நேரமோ பத்தினை கடக்க நொடிக்கொரு தரம் அவளை பார்த்து மணியை காட்டி ஜாடை செய்ய பாவையவள் என்ன செய்திடுவாள்.
எங்கே பார்வை மாற்றம் மற்றவர்கள் அறிந்து விடுவாரோ என அவனை பாராமல் பார்த்து கொண்டு இருந்தாள். இனி இன்றைய இரவில் என்ன செய்ய போகிறானோ என புது பதட்டம் வேறு அவளை தொற்றி கொண்டது. நடந்தவைகளை எண்ணி கொண்டு கன்னம் சிவக்க இவள் அமர்ந்திருக்க, தங்கள் பேச்சினை கேட்டு தான் வெட்கத்தில் முகம் சிவந்து இருக்கிறாள் என ராஜியும் நினைத்தாள்.
” என்னம்மா, என் மருமககிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கிங்க, அவளை விட்ருந்தா இந்நேரம் அவளே தயாராகி சீக்கிரம் கிளம்பி போயிருப்பா. ரொம்ப லேட்டா பண்ணுறீங்க , பன்னெண்டு மணியாச்சு ” சாவித்திரி வந்து பேசிய பின் தான் சுயம் உணர்ந்து மற்றயோரை ஏறிட்டு பார்த்தாள்.
” தர்ஷி, ராஜி உங்க மாப்பிளைங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரமா உங்களுக்காக வெயிட் பண்ணி நடந்து, களைச்சு போய் இருக்காங்க, ரூம்ல விட்டுட்டு நீங்களும் சீக்கிரம் கிளம்புங்க. ” அவளின் கையில் பால்சொம்பினை எடுத்து கொடுத்து ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்.
மனதில் மகிழ்ச்சியும், தயக்கமும், நாணமும் போட்டி போட மெதுவே தங்கள் அறைக்கு சென்று கதவை தாள் போட்டு திரும்பியவள், அடி மேல் அடி வைத்து அவன் அருகே செல்ல, லாவெண்டர் கலர் சேலையில், மெல்லிய அலங்காரத்தில், தழைய பின்னிய கூந்தல் இடை வரை நீண்டு அசைந்தாட, மல்லிகை சரம் மங்கையவள் தோளை தொட்டு சரசமாட, அழகு சிலையாய் வந்து நிற்கும் தன் மனைவியின் அழகை கண்களால் பருகினான்.
அவளை நோக்கி கையை நீட்டி ” என்னடா தயங்கி நிற்கிற, இங்கே வா ” என கட்டிலை நோக்கி கண் காட்ட, அந்த அலங்காரங்களை கண்களால் ரசித்தபடி அவனை நோக்கி செல்ல சட்டென்று அவள் அங்கே கேட்டது
” யுவர் டைம் இஸ் ஸ்டார்ட் நவ், போய் தூங்குங்க செல்ல குட்டி..,” என்ற தன் குரலை தான்.
” இது வேற நேரம் காலம் தெரியாமா? இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லை. அதுக்குள்ள தூங்கவா” என கடுப்பாய் அணைத்து வைத்தான். அதை கேட்டவுடன் இருந்த தயக்கம் எல்லாம் விலகி ஓட கலகலவென சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“உங்க… உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம்.. ” என சிரித்தபடி குலுங்கியவளை கண்டவன், “என்னை பார்த்து கிண்டல் பண்றதே உனக்கு வேலையா..” என இழுத்தவன் மேலேயே சென்று விழுந்தவளை கைக்குள் அடக்கி இறுக்கி அணைக்க, இருவரின் மூச்சு காற்றும் தழுவி கொண்டது. விழிகளால் அவளின் அழகை ரசித்து கொண்டிருந்தவன் கரங்களும் தன் ரசனையை ஆரம்பித்தது.
அவனின் கீதம் சங்கீதமாய் சிருங்காரம் இசைக்க, உயிரோடு மெய் கலந்து, உயிர் மெய் ஆகி, ஆயுதமின்றி காதல் யுத்தம் புரிந்து, தோற்றவர் வெல்ல, வென்றவர் தோற்க, உறங்கா நொடிகளில் ஒரு நொடியிலும் பிரிந்திடாமல் வெற்றி வாகை சூடி முத்த யுத்தத்தால் காமனை வென்றனர். பிரிவில் தவித்தவர்களை, பிரித்து விடாமல் இரவும் நீண்டு துயில் கொண்டது.
error: Content is protected !!