Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை – 5

புகுந்த வீட்டிற்கு செல்லும் மகள்களுக்குத் துணிகளைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தார் செல்லியம்மா,  இடையிடையே முந்தானையில் கண்ணீரை துடைத்துக்கொண்டார்.

 

 



Advertisement

பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் என்பது ஒரு பக்கம் சந்தோசம் என்றாலும் இனி அவர்களுடைய வாழ்வு வேறு எங்கோ தானே அதோடு இனிமேல்  பிறந்தவீட்டுக்கு வரவேண்டுமென்றால் புகுந்த வீட்டினரின் அனுமதி பெற வேண்டுமே, மகள்கள் இல்லாத வீடு எப்படி இருக்குமோ என்ற யோசனைகள் மீண்டும் கண்ணீர் சிந்த வைத்தது.

 

Advertisement

 

Advertisement

“புகுந்த வீட்டில எல்லாம் வேற மாதிரி இருக்கும் நம்ம வீட்டில இருக்குற மாதிரியே வேணும்னு நினைக்கக் கூடாது, மாமனார் மாமியார் ஏதாவது சொன்னாலும் பொறுத்து போவணும், சரின்னு கேட்டுக்கணும், நீங்களா  எதையும் செய்யக் கூடாது”.

 

Advertisement

 

 

“அந்த வீட்டில உங்க மாமியார் சொல்றதுதான் அவங்கள கேட்டுத்தான் எதையும் செய்யணும் முக்கியமா சமையல் உங்களுக்குத் தோணுனத்தை செய்யக் கூடாது மாமியார்கிட்ட கேட்டுக்கணும்”.

 

 

“நாத்தனார் வந்து போகும்போது முகம் கோணாமா நடத்துங்கோங்க அந்த வீட்டுக்கு ஒரே பொண்ணு அதும் மூத்தவங்க மரியாதையா நடந்துக்கணும் புரியுதா ரெண்டுபேருக்கும் மண்டைக்குள்ள ஏறுச்சா” என்று ஒரு மாதமாகவே வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார் செல்லியம்மா.

 

 

செவ்வந்தியும் கனகமும் தாயின் காலடியிலே அமர்ந்திருந்தனர் துணிகளை மடக்கி தாயிடம் கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் விழிகளும் நிறைந்துகொண்டே இருந்ததது, மகேசு இரண்டு நாட்களாக அமைதியாகவே இருக்கிறான் பெரியமனித தோரணை வந்துவிட்டது பிள்ளைக்கு.

 

 

அக்காள்களின் திருமணம்… இனி அவர்கள் வேறு வீடு சென்றுவிடுவார்கள் தாயும் தந்தையும் உடைந்து போவார்கள் அவர்களைத் தேற்ற வேண்டும் என்பதெல்லாம் புரிந்தது பழனிச்சாமியுடனே சுற்றிக்கொண்டிருக்கிறான் அவருக்கு உதவியாக.

 

 

தாய்க்கு நிகராகத் தன்னை பார்த்துக்கொண்ட இருவரிடமும் ஏதோதோ சொல்ல வேண்டும் என்று நெஞ்சில் முட்டி நிற்கிறது அவனால் பேசமுடியவில்லை, இன்று காலைக் கனகம் அவனை அழைத்தாள்.

 

 

“என்னய்யா மகேசு ஏன் ஒருமாதிரி இருக்க நாங்க எங்க போறோம் இங்க பக்கத்துலதானே நினச்சா வரப்போறோம் நீயும் அங்க வந்து பாக்கலாம் அம்மா அப்பாக்கு நீதான ஆதரவா இருக்கணும்” என்றவளை கட்டிக்கொண்டு ஓவென்று அவன் அழுததை பார்த்துக் கனகம் தடுமாறிவிட்டாள்.

 

 

உடன்பிறப்புகள் இருவரையும் சேர்த்து செவ்வந்தி அணைத்துக்கொண்டாள், பிள்ளைகளைப் பார்த்துக் கலங்கி நின்ற மனைவியைத் தாங்கிக்கொண்டார் பழனிச்சாமி.

 

 

சிறிதும் அல்லாமல் பெரிதும் அல்லாமல் ஒரு மண்டபத்தைப் பிடித்திருந்தார் பழனிச்சாமி, இரண்டு கட்டில் இரண்டு பீரோ மற்ற பொருட்கள் அனைத்தும் ஒன்று வீதம் சீரைச் சபையில் நிறைத்திருந்தார்.

 

 

மகள்களுக்கு நகை புடவை அனைத்தும் ஒன்றுபோலவே  வாங்கிவிட்டார்கள் பழனிச்சாமி தம்பதியர்.

 

 

குறுகுறுவென்று தன்மீது படியும் பார்வையில் மெல்ல தலையை உயர்த்தி பார்த்தாள் கனகம் “என்ன பாக்கவே மாட்ற தாலி கட்டவா இல்ல  அப்படியே  எழுந்திருச்சு போகவா” என்றான் ராஜகுமாரன் அவளை முறைத்துக்கொண்டு, இதற்க்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவள் விழிக்க.

 

 

“என்னதிது மாப்பிளையை இப்படி பாத்திட்டிருக்கா உங்க பொண்ணு கொஞ்சம் தலையைக் குனிய சொல்லுங்க பாக்குறவங்க என்ன நினைப்பாங்க” என்றார் ராக்காயி.

 

 

செல்லியம்மா அவள் தலையில் கொட்ட கையை உயர்த்த “அத்த வேண்டாம் நான் தான் அவளைப் பேசறதுக்காகக் கூப்பிட்டேன் நீங்கக் கொட்டறதா இருந்தா என்னைத்தான் கொட்டணும்” என்றான் மாப்பிள்ளை.

 

 

சட்டென்று கையைப் பின்னில் இழுத்துக்கொண்டவர் “ஐயோ மாப்ள அப்படிலாம் இல்லங்க” என்று நெளிந்தார்.

 

 

‘இவன் நல்லவனா கெட்டவனா? நான் பாட்டுக்குச் சிவனேன்னுதானே இருந்தேன் குறுகுறுன்னு பாத்து என்னைப் பாக்கவெச்சு, இப்போ அவங்க அம்மாகிட்ட பேச்சு வாங்க வெச்சு எங்க அம்மாவைக் கொட்டவெச்சு ஏண்டா ஏன்’ என்று அவனை முறைத்தாள் கனகாம்பரம்.

 

 

யோககுமாரனுக்கும் செவ்வந்திக்கும் சிறிது நேரத்திற்கு முன்பே திருமணம் முடிந்திருந்தது, தம்பதியராக இளையவர்களை வாழ்த்த நின்றிருந்தனர் இந்த நொடிவரையுலுமே யோகன் செவ்வந்தியிடம் பேசியிருக்கவில்லை.

 

 

அவளிடம் என்றில்லை அவன் யாரிடமும் பேசவில்லை அவனின் குணமே அதுதான் என்றார் ராக்காயி என்றால் அதற்கும் சேர்த்துவைத்து அனைவரையும் பேச்சிலே கட்டிவைத்திருந்தான் ராஜகுமாரன்.

 

 

மாமனாரும் மாமியாரும் எபோழுதோ அவன் வலையில் விழுந்து விட்டனர், முதல்நாள் இரவு நிச்சயம் முடிந்து மண்டபத்தில் மகேஷை பிடித்துக்கொண்டான் வெகுநேரம் அவனோடு பேசிக்கொண்டிருந்ததை தமக்கைகள் இருவரும் மனநிறைவோடு பார்த்திருந்தனர்.

 

 

இப்பொழுது மகேஷை கேட்டால் சின்ன மாமா தான் கங்கைகொண்ட சோழபுரத்தை ஆண்ட ராஜேந்திரசோழன் மறு பிறவி எடுத்து வந்திருக்கிறார் என்பான்.

 

 

“எம்மா தாலி கட்டவா… நீ சொல்லு நீ சொன்னாதான் கட்டுவேன் உன் பேச்சை  எப்போ மீறியிருக்கேன்” என்று கையில் தாலியை வைத்துக்கொண்டு வம்பு செய்தவனை பார்த்து விழி பிதுங்கியது ராக்காயிக்கு.

 

 

நேற்றும் இப்படித்தான் நிச்சயத்திற்கு மேடையேற அழைத்தபோது “எங்க அம்மா சொன்னாதான் ஏறுவேன்” என்று வம்பு வளர்த்தான்.

 

 

“என்ன பந்தியில ஜாங்கிரி வெச்சிருக்கீங்க எங்க அம்மாக்கு லட்டுதான் பிடிக்கும் அவங்ககிட்ட கேட்டுத்தான் வெச்சீங்களா” என்றவனை பார்த்துக் கனகத்திற்கு உண்மையிலே வயறு கலங்கியது.

 

 

‘இவன் சரியான அம்மா கோண்டு போலவே ஆண்டவா போச்சா என் கல்யாண வாழ்க்கைக்கு சங்குதானா’ என்று இரவெல்லாம் உருண்டுகொண்டிருந்தாள்.

 

 

“சீரையெல்லாம் மண்டபத்திலேயே ஒரு பக்கமா அடுக்கிடுங்க வரவளுங்க பாக்கட்டும்” என்றிருந்தார் ராக்காயி, அதன்படி ஒருபக்கம் சீர் அனைத்தையும் அடுக்கியிருந்தனர்.

 

 

அதைப் பார்த்துக்கொண்டே வந்தவன் “என்ன கட்டில்ல மயில் செதுக்கியிருக்கு எங்க அம்மாவுக்கு…”  என்றவன் தொடங்க “என்ன உங்க அம்மாக்கு மயில் புடிக்காது மாடுதான் பிடிக்குமா இப்போ மாட்டைச் செதுக்கணுமா அதுல, என்னதான்டா பிரச்சனை உனக்கு? உங்க அம்மா சொல்லி உன் வாழ்க்கைல எதை நீ கேட்டிருக்க ஏண்டா இப்படி அழிச்சாட்டியம் பண்ற” என்றான் செந்தில்.

 

 

நண்பனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டான் ராஜகுமாரன்,  பழனிச்சாமியும் செல்லியம்மாவும் அவனைக் கலக்கத்தோடு பார்த்திருந்தனர் நன்றாகத்தானே பேசினார் இப்பொழுது ஏன் இப்படி, அதும் நேற்று மண்டபம் வந்த பிறகுதான் இப்படி ஒருவேளை… மண்டபம்வரை வந்தபிறகு உண்மையான குணத்தை காண்பிக்கிறாரோ என்றெல்லாம் அவர்கள் யோசனை சென்றது.

 

 

அப்படி இப்படி என்று மணமக்கள் மேடையேறிவிட்டனர் “அவ்ளோதான் என்கிட்டயிருந்து இனிமே நீ தப்பிக்க முடியாது” என்றான் தாலிகட்டும்பொழுது என்றால் குரலிலோ முகத்திலோ கொஞ்சமும் கடுமையில்லை.

 

 

ஆசிர்வாதங்கள் பரிசுகள் அனைத்தும் பெற்றாயிற்று என்னையும் கொஞ்சம் கவனியேன் என்ற வயிற்றின் கதறலுக்கு செவிசாய்த்து இறுதியாகப் பந்தியிலும் அமர்ந்தாயிற்று.

 

 

“சாம்பார்ல இன்னும் கொஞ்சம் காய் போட்டிருக்கலாம், ரசம் என்ன இனிச்சு கிடக்கு மளிகை கடைக்காரருக்குப் புளி எடுக்கக் கை எட்டலயோ, கூட்டுல பருப்பை காணும் பொரியல்ல தேங்காயை காணும் பாயாசத்துல முந்திரியை காணும்” என்று வைக்கும் அணைத்து பொருட்களையும்  ராக்காயி  பதம் பார்க்க.

 

 

எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையென்று உணவை ருசிபார்த்து கொண்டிருந்த ராஜகுமாரனின் மீது கனகத்தின்  வீட்டினரின் பார்வை திரும்பியது,  நேற்றிலிருந்து அவன் தங்களை காத்திருக்கிறான் என்பது இப்பொழுது புரிந்தது அவர்களுக்கு.

 

 

தாயைவிட தந்தையை பார்த்துதான் வெடித்து அழுதாள் கனகம் அவள் கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீரை அடக்கி அவர் நின்ற கோலம் மனதை பிசைந்தது.

 

 

“ஏங்க பிள்ளைக்கு நல்ல வார்த்தை சொல்லி அனுப்புங்க” என்றார் செல்லியம்மா, மனிதருக்குப் பேச்சு வரவில்லை மகள்களின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார் கனகாம்பரத்தின் கைகளில் அந்தச் சின்ன ரேடியோ பொட்டியை வைத்தவர் “அப்பா ஞாபகமா உன்கிட்டயே இருக்கட்டும்” என்க தேம்பிக்கொண்டிருந்த மனைவியின் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான் ராஜகுமாரன்.

 

 

 

மருமகனின் முகத்தைப் பார்த்தவருக்கு மனதில் புது தெம்பு பிறந்தது அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது இரண்டு ஜோடிகளும் ஒரே காரில் ஏறிக்கொள்ள மற்றவர்கள் வேனில் ஏறிக்கொண்டனர், செவ்வந்தியும் கனகாம்பரமும் வாழ்வின் புது தொடக்கத்தை தேடி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

 

 

ஆரத்தியோடு புகுந்த  வீட்டிற்குள் அடியெடுத்துவைத்தனர் இருவரும், முதலில் யோககுமரானும் செவ்வந்தியும்  அவர்களுக்குப் பின்னே ராஜகுமாரனும் கனகாம்பரமும்.

 

 

செவ்வந்தியின் மூளைக்குள் எதுவுமே பதியவில்லை கணவன் அவளை நிமிர்ந்து பார்த்தானா என்று கூட அவளுக்குத் தெரியவில்லை, தங்கை கணவரின் குரல் மட்டுமே அவள் செவிகளில் விழுந்தது அவள் கணவன் குரலை இதுவரையிலும் அவள் கேட்கவில்லை.

 

 

கனகம் தமக்கையின் அருகில் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டாள் “என்னாச்சுக்கா ஏன் ஒருமாதிரி இருக்க” என்க “ஒண்ணுமில்ல புள்ள” என்றாள் செவ்வந்தி மெல்ல.

 

 

“என்ன அக்காவும் தங்கச்சியும் புகுந்த வீடு வந்ததுமே தனி ராஜ்ஜியம் தொடங்குறீங்களா” என்றார் ராக்காயின் தங்கை, செவ்வந்தியும் கனகமும் ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழிக்க.

 

 

“அப்பறம் சித்தி போனவாரம் சுரேஷ ஒரு பொண்ணுகூட பாத்தேன் தியேட்டர்ல இல்லடா மாப்ள” என்றான் ராஜகுமாரன் செந்திலை பார்த்து.

 

 

“ஆமா… ஆமா… நான் கூட எங்களுக்கும் சேத்து ரெண்டு சமோசா வாங்கிக்குடுடான்னு கேட்டேன்,  ரெண்டுதான் கேட்டேன்… பேயைப் பாத்த மாதிரி அந்தப் புள்ளய அப்படியே விட்டுட்டு ஓடிட்டான் அப்புறம் நாங்கதான் பத்திரமா பஸ் ஏத்தி விட்டோம்” என்க.

 

 

அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது “வந்தோமோ நல்லத்துல கலந்தோமா போனோமான்னு இருக்கணும் இல்ல நீங்கப் பேசுற எல்லா வார்த்தைக்கும் நான் பதில் பேசவேண்டி வரும்’ என்றான் ராஜா, அதன்பிறகு அவர் இருந்த இடமே தெரியாமல் ஒளிந்துகொண்டார்.

 

 

ஆதவன் மறைய தொடங்கவும் ராஜலட்சுமி வந்து தம்பி மனைவிகளை அழைத்துக்கொண்டு பின்னில் தோட்டத்திற்கு சென்றாள் “வாங்க பின்னாடி தோட்டத்துல பாத்ரூம் இருக்கு ரெண்டுபேரும் குளிச்சிட்டு இந்தத் தடுப்புக்கு பின்னாடி புடவை மாத்திக்கோங்க அப்புறமா உள்ளார போய் அலங்காரம் செஞ்சுக்கலாம்” என்றவள் அங்கேயே வாசல்படியில் அமர்ந்துகொண்டாள்.

 

 

கையைப் பிசைந்துகொண்டு மகளின் அருகில் வருவதும் திரும்பிச் செல்வதுமாக இருந்தார் ராக்காயி “எம்மா… என்ன? எதுக்கு இப்படி பழனிக்கு பாதயாத்திர போறமாதிரி நடந்துக்கிட்டே இருக்க” என்றாள் ராஜலட்சுமி.

 

 

ஒருமுறை உள்ளே எட்டி பார்த்துக் கொண்டவர் “அடியே உன் மாமியார் இன்னைக்கே போய்டுவாங்கன்னுதானே சொன்ன” என்க.

 

 

“ஆமா அவர் கூட்டிட்டு போயிடுவார் நான் ரெண்டு நாள் கழிச்சு போறேன் முன்னாடியே சொன்னதுதான் இப்போ என்னத்துக்கு திரும்பக் கேக்குற” என்றாள் காலை நன்றாக நீட்டி அமர்ந்துகொண்டு.

 

 

“நல்லா சொன்ன, உன் புருஷனுக்கு ஏதோ அவசர வேலையாம் இப்போதான் போன் வந்திருக்கு உன் மாமியாரை ரெண்டு நாள் இங்கேயே தங்கவெச்சுட்டு போறதை பத்தி உன் அப்பாகூட பேசிட்டு இருக்காரு மாப்ள” என்றார் ராக்காயி.

 

 

“என்னமா சொல்ற வேதாளம் மாதிரி இங்க வந்தாலும் என் தோள்லயே தொங்கணுமா அவங்களுக்கு” என்க.

 

 

“அடியே மெல்ல பேசு, இப்போ அது இல்ல பிரச்சனை இருக்கிறதே ரெண்டு ரூமுதான்,  ஒரு கல்யாணம்ன்னா பரவாயில்ல பெரியவனுக்கு ரூமை குடுத்துட்டு சின்னவனை மொட்ட மாடில படுக்கச் சொல்லலாம் இப்போ நான் என்ன பண்ண”.

 

 

“உன் மாமியார் வேற சின்னவனுக்குனு சொல்லி வெச்சிருந்த ரூமுக்குள்ள போய்ப் படுத்துட்டாங்க கால் வலிக்குதுன்னு, உன் தொம்பி சும்மாவே ஆடுவான் இத அவன்கிட்ட என்னனு நான் சொல்ல” என்றவர் புலம்பிக்கொண்டிருக்க செவ்வந்தியும் கனகமும் குளித்துப் புடவை கட்டி வந்துநின்றனர்.

 

 

‘பிறகு பேசிக்கொள்ளலாம்’  என்று அன்னைக்கு கண் காண்பித்தவள் இருவரையும் அழைத்துக்கொண்டு மற்றோரு அறைக்குள் சென்றாள்.

 

 

தலைவாரி பூமுடித்து முகத்திற்கு கொஞ்சம் பவுடரும் போட்டு அலங்காரம் முடிந்துவிட்டது,  புதுமண தம்பதிகளை உணவருந்த அழைத்துவந்தனர்.

 

 

ஆட்டிவைக்கப்படும் பொம்மைகளைப் போல இருவரும் சொல்வதையெல்லாம் செய்துகொண்டிருந்தனர், உணவு இறங்க மறுத்தது நெஞ்சிற்குள் ஒரு பயபந்து சுழன்றது அடுத்து என்ன என்ற பதட்டம் வேறு.

 

 

“சின்னவனே கொஞ்சம் வாயேன் உன்கிட்ட பேசணும்” என்று ராஜலட்சுமி அவனைத் தனியே அழைத்துச்சென்றாள், அவள் பேசப் பேச அக்காவை முறைத்துக்கொண்டே நின்றிருக்கும் மகனைப் பார்த்து அவனை நெருங்கினார் ராக்காயி.

 

 

“தம்பி நீ சின்னவன் கொஞ்சம் அனுசரிச்சு போயா உனக்கு ரூம குடுத்துட்டு பெரியவன மேல அனுப்ப முடியுமா இல்லனா உன் சித்தி வீட்டுக்கு ராத்திரி போயிடுறீங்களா” என்ற தாயை உக்கிரமாகத் திரும்பிப் பார்த்தான் ராஜகுமாரன்.

 

 

“ஏதாவது யோசிச்சுதான் பேசுறீங்களா,  நான் தனியா இருந்தா எங்கவேனா படுத்துப்பேன் இன்னைக்குத்தான் தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கேன் அந்தப் புள்ளய அவளை என்ன பண்ண, இதுவே அக்காவுக்கு இப்படி நடந்திருந்தா உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் அப்படித்தான  அவங்க வீட்டுலயும்”.

 

 

“வந்த அன்னைக்கே வெளில போகச் சொல்றீங்களா,  இங்க முதல் ராத்திரி இல்ல பிரச்சனை வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு நாம என்ன மரியாதை கொடுக்குறோம் அதுதான் விஷயம் இதுக்குதான் அப்போவே சொன்னேன் இன்னொரு ரூம் கட்டலாம்னு நான் சொல்ற எதைத்தான் நீங்கக் கேக்குறீங்க” என்றவன் விழிகள் மனைவியின் மீது படிந்தது.

 

 

“வீட்டாளுங்க தவிர எல்லாரையும் அனுப்பிவிட்டுட்டு என்னைக் கூப்பிடு, உன்னை நல்லா வெச்சு பாத்துப்பேன்னு கைபிடிச்சு கூட்டிட்டு வந்த அன்னைக்கே அவளை இப்படி நிக்க வைக்குறேன்னு ஊருக்கே தெரிய வேண்டாம் பாரு” என்றவன் பின்வாசல் வழியாக வயலை நோக்கி நடந்தான்.

 

 

பிறகு சாப்பிடுகிறோம் என்று உறவுகளை அதை இதைச் சொல்லிச் சாப்பிட வைத்து அருகிலிருந்த உறவுகளின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு செவ்வந்தியின் அருகில் வந்தாள் ராஜலட்சுமி.

 

 

“நீ உள்ள போப் பெரியவன்  இருக்கான்” என்றாள்.

 

 

செவ்வந்தியின் விழிகள் தங்கையைப் பார்த்தது, கனகாம்பரம் தமக்கையை பார்த்துப் புன்னகைத்தாள் “நீ போ ராஜா வெளில போயிருக்கான் அவன் வந்ததும் அவன் பொண்டாட்டியை பாத்துப்பான் அதுவரைக்கும் நாங்க இருக்கோமே” என்றாள் ராஜலட்சுமி.

 

 

தங்கையைப் பார்த்துத் தலை அசைத்தவள் நடுங்கும் கைகளைப் புடவை முந்தியில் மறைத்துத் தடுமாறும் நடையோடு அறைக்குள் நுழைந்தாள்.

 

 

வயல் அவர்களுடையதுதான் அறுவடை முடிந்துவிட்டது வெயில் தொடங்குவதால் தர்பூசணி போடலாம் என்ற யோசனை வெறிச்சோடி கிடந்த நிலத்தின் வரப்பில் அமர்ந்துகொண்டான் நினைவுகள் எல்லாம் கட்டிக்கொண்டவளை சுற்றியே சுழன்றது.

 

 

அன்று பேருந்தில் பார்த்தபோது மனதில் பதிந்துவிட்டாள் அவளைத் தேடியே அந்த வழித்தடத்தில் பயணம் செய்தான்

 

 

“கனகாம்பரம் பொருத்தமான பேரு ரசிச்சு வெச்சிருக்காரு என் மாமனார்” என்றான் செந்திலிடம்.

 

 

“ஏதே… மாமனாரா முடிவே பண்ணிட்டியா உன் அம்மாவுக்குத் தெரிஞ்சிது அவரு உனக்கு மாமனார் ஆக மாட்டாரு நீதான் நாரா கிழிஞ்சு தொங்குவ பாத்துக்க” என்றான் செந்தில்.

 

 

செவ்வந்திக்கு வரன் தகையாமல் தள்ளிப்போவதை தெரிந்துகொண்டே யோககுமாரனை பற்றித் தராகரிடம் சொல்லிப் பெண் பார்க்க வைத்து அண்ணனிடம் பேசி அவனைத் தாஜா செய்தான்.

 

 

“நீ இப்படியே பொண்ணு பாத்துட்டே இருக்கப்போறியா, இவங்கள நானும் பாத்துருக்கேன் நல்லா இருக்காங்க சரின்னு சொல்லிடு இல்ல உன்ன இப்படியே கன்னிப்பையனா நிக்க வெச்சுருவாங்க யோசிச்சிக்கோ” என்று.

 

 

அண்ணனின் திருமணம் முடிந்த பிறகு கனகாம்பரத்தை காதலித்து எப்படியும் சொந்தமாக்கிவிட வேண்டும் என்று அவன் திட்டம் தீட்ட அவன் தாய் அவனுக்கு முன்னே முந்திக்கொண்டு பெண்ணை முடிவு செய்துவிட்டே வந்துவிட்டார்.

 

 

“பெரியவனுக்கு இந்த இடம்தான் தகஞ்சு வந்திருக்கு நீயும் சரின்னு சொல்லிட்டா ரெண்டும் பேரும் அக்கா தங்கச்சிய கட்டிக்கிடலாம் இந்தபுள்ளன்னா அக்காவைப் போல மாமனாயும்  பாத்துப்பா”.

 

 

“இதுவே வேற யாரவது வந்தா உன் அண்ணனையும் அண்ணியையும் கிண்டல் கேலி பண்ணவோ வீட்டில பிரச்சன பண்ணவோ செஞ்சா என்ன பண்ண, அதான் நான் எல்லாத்தயும் யோசிச்சு இந்த முடிவுக்கு வந்திருக்கேன் நீயும் யோசி” என்றார் ராக்காயி.

 

 

அவனுக்கு யோசிக்க என்ன இருக்கிறது பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி அவன் வாயில் விழுகிறது என்றாலும் உடனே பல்லைக் காட்டி இளித்துவிட முடியாதே ஆகையால் இரண்டு நாட்கள் கடினப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டு மூன்றாம் நாள் சம்மதம் சொல்லிவிட்டான்.

 

 

தாயால் இடையில் எதுவும் ரச்சனை வந்துவிடக் கூடாது,  திருமணம் நின்றுவிடக் கூடாது என்று ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமாகக் கவனத்தோடு இருந்தான் அனைத்தும் சுபமாக முடிந்து மனம் நிறைந்தவள் இன்று மனைவியாக வந்துவிட்டாள்.

 

 

வந்து என்ன செய்ய? அக்காவின் மாமியார் ரூபத்தில் விதி பக்கத்து அறையில் படுத்துக் கிடக்கிறதே.

 

 

“அவளுக்குச் சும்மாவே உன் மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் இதுல கல்யாணம் ஆன அன்னைக்கே இப்படி படுத்துத் தூங்ககூட இடம் இல்லாம… நீயெல்லாம் ஒரு ஆம்பளயான்னு அவ கேட்டா… சொல்ல முடியாது கேட்டாலும் கேப்பா ஆரம்பமே ஜெகஜோதியா இருக்கு இன்னும் என்னல்லாம் இருக்கோ ஆண்டவா” என்றவனின் புலம்பலை நிறுத்தியது அலைபேசி அழைப்பு.

 

 

“சின்னவனே எல்லாரும் போய்ட்டாங்க நீ வா” என்றாள் ராஜலட்சுமி.

 

 

அவன் வந்தபோது சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் கனகாம்பரம் ராக்காயும் ராஜலட்சுமியும் அடுப்படிக்குள் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

 

 

“வா”  என்றழைத்தவனை நிமிர்ந்து பார்த்தவள் அமைதியாக எழுந்து நின்றாள், விழிகள் மாமியாரை தேடியது மகனின் குரல் கேட்டு வெளியில் வந்த ராக்காயி “சின்னவனே நீ மேல போய்ப் படுத்துக்கோ அப்பா திண்ணையில படுத்துகிட்டாரு, ஒரு ரெண்டு நாள் தான அவ என்கூட இப்படியே இங்க படுத்துக்கட்டும்” என்றார்.

 

 

பின்னையே வந்த ராஜலட்சுமி “நான் போய் ரூம்ல படுத்துக்குறேன் புள்ள தூங்கிட்டு இருக்கான்” என்று அவர்களைக் கடந்துசென்றாள் அவன் விழிகள் அவளில் நிலைத்திருந்தது.

 

 

அவனுடைய எண்ணமெல்லாம் இன்று அவளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்பதில்தான் இருந்தது, அவள்மீது பாய்ந்துவிடும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை அவள் தன்னை புரிந்து பிடித்து நேசிக்க வேண்டும் அதன்பிறகே தங்கள் வாழ்வை தொடங்குவது என்று முன்பே முடிவு செய்திருந்தான்.

 

 

தனியாக அறைதான் கிடைக்கவில்லை குறைந்தப்பட்சம் மொட்டைமாடி நிலவொளியில் அவளிடம் கதைகள் பேச அவன் நினைத்திருக்க அதற்கும் தடை போட்டுவிட்டார் ராக்காயி.

 

 

“நீ போய்ப் படுக்கலாம்… பொம்பள மொட்ட மாடில தூங்குறது சரியா இருக்காது அவ இங்கேயே படுக்கட்டும் நீ போ” என்றவர் மருமகளை பார்க்க அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் சுவரோரமாகச் சுருண்டுகொண்டாள் கனகாம்பரம்.

 

 

பொட்டு உறக்கம் இல்லாமல் நிலவை வெறித்துக்கொண்டு விழித்துக்கிடந்தான் ராஜகுமாரன், விடியல் இன்னும் என்ன என்ன கூத்து கட்ட காத்திருக்கிறதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!