Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 16

காதல் இன்று

அந்த அப்பார்ட்மெண்ட் வாசலில் இறங்கி நிமிர்ந்து பார்த்த போது, அன்புவின் கால்களுக்கு அதில் நுழையவே கொஞ்சம் கூச்சமாக இருந்தது!

எவ்வளவு பிரமாண்டமான கட்டிடங்கள்!

இங்கு தான் ஜீவாவின் வீடா?



Advertisement

இப்படிப்பட்ட பின்னணியில் இருக்கும் ஆளா, நம் ஊரில் வந்து மக்களோடு மக்களாக பழகியது!

கொஞ்சம் காசு பணம் வந்தவுடனேயே பவுசு காட்டும் கும்பலை அன்புவும் கண்டிருக்கிறான்!

ஜீவாவின் கம்பெனி பற்றியும் வெண்ணிலா சொல்லியிருக்கிறாள். போனில் போட்டும் காட்டியிருக்கிறாள்!

Advertisement

அதில் வேலை செய்பவர்களே அத்தனை நாகரிகமாக வசதியாக இருந்தார்கள்!

Advertisement

இவன் அதன் முதலாளி!

ஆனால் எந்த வேலையையும் இறங்கி செய்யும் தொழிலாளியும் கூட! அதுவே இந்த சின்ன வயதிலேயே அவன் பெற்றிருக்கும் வெற்றியின் ரகசியமாக இருக்க வேண்டும்!

வெண்ணிலா ஜீவாவோடு இங்க்லிஷில் பேசியபடி முன்னே நடந்து சென்று கொண்டிருந்தாள்!

Advertisement

எப்படி இவர்கள் தமிழில் பேசுவது போலவே இங்கிலிஷிலும் இயல்பாய் பேசுகிறார்கள்!

அதுவும் வெண்ணிலா பேசுவது அவனுக்கு சின்ன வயதில் இருந்தே ஆச்சரியம்!

அவள் ஆசிரியர்கள் சொல்லியும் பார்த்திருக்கிறான்!

ஏனென்றால் இவனுக்கு தெரியும் அளவுக்கூட அருணுக்கு ஆங்கிலம் தெரியாது!

ஆள் பார்க்க நல்ல சிவப்பா, அழகா இருப்பதால் படித்தவர் மாதிரி கொஞ்சம் தோற்றம் இருக்கும்!

கையெழுத்து வேறு ரொம்ப ஸ்டைல் ஆக,  பெயரில் இருக்கும் ஏவும் ஆரும் மட்டும் தான் தெரியும் மற்றது எல்லாம் அப்படியே அலை அலையாக டாக்டர் மருந்து சீட்டில் எழுதுவது போல போடுவார்!

மற்றபடி, “டேக் யுவர் சீட்” என்றால் உடனே சேரை தூக்க செல்லும் அளவுக்குதான் அவர் ஆங்கில அறிவு!

அதே மாதிரி வசந்தாவுக்கு தினப்படி பூவைக் கொண்டு போய் மொத்த விலை மார்கெட்டில் போடும் போது அன்பு கூட இல்லையென்றால் கொஞ்சம் கணக்குப் போட தடுமாறுவார்!

ஆனால் இந்த வெண்ணிலா மேத்ஸ் டீச்சர்!

அபாகஸ் அப்புறம் பிங்கர் மேத்ஸ் என்று என்னென்னமோ படித்து விட்டு சொல்லிக் கொடுக்கும்!

யாரோ ஆங்கிலத்தில் பொளந்து கட்டும் அப்பாவிற்கும் கணக்கில் புலியாக இருக்கும் அம்மாவிற்கும் பிறந்த பெண் இவள் என்றால் நம்பலாம், ஆனால் அருண் வசந்தாவுக்கு இப்படி ஒரு பெண்ணா?

இல்லை, இந்த சினிமாக்களில் வருவது போல, யாராவது பெண் பிள்ளை வேண்டாம் என்று சொல்லி ஆஸ்பத்திரியில் குழந்தையை ஏதும் மாற்றி விட்டார்களா?

இல்ல இந்த திருக்குறளில் சொல்லியிருப்பது போல, ஒரு பிறவியில் படித்தது அடுத்த பிறவியில், அக்கவுண்டஸ் டெர்மில் சொல்வது போல  கேரி பார்வர்ட் ஆகி விட்டதா?

அன்புவும் வெண்ணிலாவுக்காக கரஸில் பிகாம் படித்து தான் இருந்தான். எம்காம் சேர்ந்து ஒரு செமெஸ்டர் மட்டுமே எழுதினான், பின் அதில் இன்ட்ரஸ்ட் இல்லாமல் போய் விட்டது!

இதெல்லாம் கல்யாணப் பத்திரிக்கையில் போட தான்!

இவன் படிக்காததால், வெண்ணிலாவின் டிகிரியையும் போட விட மாட்டார் அருண் மாமா! அதனால் அவள் பெயருக்குப் பின் அந்த டிகிரியைப் போட வைக்க வேண்டும் என்பதற்காகவே படித்தான்!

இப்போது தான் எல்லாம் மாறி போய் விட்டதே!

ஆனால் இந்த மாற்றம் அவனுக்கு வருத்தத்திற்கு பதில் சந்தோசத்தையே தந்தது!

ஏதோ ஒரு குற்றவுணர்ச்சியில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்த உணர்வையும்!

அதன் முன்னே செல்லும் அவர்களை அன்பு பிரமிப்புடன், பார்த்துக்  கொண்டே  அவர்களோடு நடந்து சென்றான்.

இங்கா நம் வெண்ணிலா இரண்டு நாளாய் இருந்தாள்!

வீட்டைத் திறந்தவுடன் அவனுக்கு இன்னமும் ஆச்சரியம்!

இது என்ன பைபிள் வாசகம்! இந்த ஜீவா கிறிஸ்டியனா என்ன?

அப்பார்ட்மெண்ட் வீடுகள் எல்லாம் புறாக்கூண்டுகள் போல தான் இருக்கும் என்று இதுவரை எண்ணியிருந்தவன் எண்ணத்தை முழுவதுமாக மாற்றியது ஜீவாவின் அந்த வீடு!

“வாங்க அன்புண்ணா”, என்று உள்ளே அழைத்து சென்று உட்கார சொல்லி ஜூஸ் கொடுத்தான் ஜீவா.

ஜூஸை குடித்து விட்டு, “என்ன வெண்ணிலா, எந்த ஹாஸ்டல்ல தங்கணும்னு பார்த்து வச்சுட்டியா?” என்று அன்பு வெண்ணிலாவைப் பார்த்துக் கேட்டான்.

“ம்ம்.. பார்த்துட்டேன் மாமா, இங்க என் ஆபிஸ் பக்கத்துலையே ஒரு நல்ல பிஜி இருக்கு. நானும் விசாரிச்சுட்டேன்!” என்றாள் வெண்ணிலா.

“அப்ப கிளம்பு, நான் உன்னை ஹாஸ்டலில் சேர்த்து விட்டுட்டு நான் ட்ரைனைப் பிடிக்கணும்” என்றான் அன்பு, அவன் கொண்டு வந்த அவளின் துணி மணிகள் அடங்கிய அவளின் பாகைக் கொடுத்து.

மதி தான் வசந்தாவிற்கு தெரியாமல் அவற்றை பாக் செய்து வளர் வீட்டில் வைத்திருந்து பின் அன்பு மூலம் கொடுத்து விட்டிருந்தாள்!

“ரொம்ப தாங்க்ஸ் ஜீவா சார், நீங்க மட்டும் உதவலைன்னா வெண்ணிலாவுக்கு இந்த வேலையும் இப்போது நல்லபடியா இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினதும் சாத்தியமே ஆகியிருக்காது!”

அவள் அங்கிருந்து கிளம்பப் போகிறாள் என்பதை நினைத்து ஜீவாவின் முகம் சுண்டிப் போயிற்று!

அவன் மெதுவான சுரத்தில்லாத குரலில், “மயூ கிட்ட சொல்லிட்டு கிளம்பு வெண்ணிலா” என்றான்.

“கண்டிப்பா சார், அவங்க கிட்ட சொல்லாம எல்லாம் நான் போக மாட்டேன்” என்றாள் வெண்ணிலாவும்.

கூடவே அவளுள்ளும் வருத்தம்! இனி ஜீவா சாரைப் பார்க்க முடியாதே! என்ன காரணம் சொல்லி இங்கு வருவதும், பார்ப்பதும்!

பார்ப்பதே இனி முடியாது என்கிறபோது மற்றவை.. ? அவளுள் ஏதோ கொஞ்சம் உடைந்து தான் போன மாதிரி இருந்தது!

மயூ பேசினாள்.

“வெண்ணிலா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும், முடியுமா உன்னால்?”

“என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க, இத செய்யுன்னு சொல்லுங்க செய்றேன்” என்றாள் வெண்ணிலாவும்  நன்றியுணர்ச்சியுடன்!

“இல்ல நம்ம வீட்டுல பார்த்த இல்ல அந்த ரோஜா செடிகள்! அதுங்க எல்லாம் என்னோட பசங்க மாதிரி!

அதுங்க வாடினா, இல்ல பட்டுப் போய் விட்டா என்னால தாங்கிக்கவே முடியாது!

இந்த ஜீவா, ஏதோ வாட்டர் இரிகேசன் மாதிரி எதோ செஞ்சு வச்சுட்டு தான் வெளியூர் போய் வரதா சொல்றான் தான்!

ஆனா நாம நேரா இருந்து தண்ணீர் விட்டு, பார்த்து பார்த்து வளர்க்கிறது எப்படி, இது எப்படி?

அவனுக்கு தொடர்ந்து இங்கேயே இருக்கவும் முடியாது!

இங்க நான் இப்ப தான் செங்கல்பட்டு அருகில் ஒரு கிராமத்தில் என்னோட நாலாவது கார்மென்ட் பாக்டரியை தொடங்கியிருக்கேன்!

அதான் ஆரம்பக் கட்ட வேலைகள் இங்க நிறைய இருக்கு, என்னாலையும் அங்க வந்து தொடர்ந்தா போல இருக்கவே முடியறது இல்ல இப்பெல்லாம்!

அதனால் தான் உன்கிட்ட ஹெல்ப் கேக்குறேன், நீ பிஜில எல்லாம் தங்க வேணாம், பேசாம இங்கயே இருந்துடேன், உனக்கும் ஆபீஸ்க்கு ரொம்ப பக்கம், என் செடிகளும் உன் கேர் ஆப்பில் இருக்கும்! என்ன சொல்ற?” என்று கேட்டாள் மயூ!

வெண்ணிலா அப்படியே அதிர்ந்து போய் விட்டாள்!

மயூ சொன்ன மாதிரியே இங்கேயே இருந்து விட அவளுக்கு ஆசை தான்!

ஆனால் அவள் வீட்டில் சம்மதிப்பார்களா? என்ற நிராசையுடன் அன்புவைப் பார்த்தாள் வெண்ணிலா!

“என்ன? வீட்டில் எப்படி சொல்வது என்று நினைக்கிறியா?”

“ம்ம்..” என்றாள் வெண்ணிலா ஒற்றை வார்த்தையில்!

“போனை உன் மாமா கிட்ட கொடு” என்று சொல்லி  அன்புவுடன் பேசினாள்.

அவள் சொன்னத்துக்கெல்லாம் , “சரிங்க மேடம் சரிங்க மேடம்” என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான்!

அது தான் மயூ மேஜிக்!

அப்படி தான் பேசி யாரையும் எதற்கும் சம்மத்திக்க வைத்து விடுவாள் எப்பவும்!

ஜீவா இவர்களின் பேச்சுக்களில் கலந்து கொள்ளாமல் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்!

உள்ளுக்குள் ஆனந்தம்!

மயுவிடம் பேசி முடித்தபின், “மேடம் உன்னை இங்கேயே தங்கிக்க சொல்றாங்க! எதுவும் நினைக்க வேணாம், யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க இந்த ஏரியாவில். அதனால் இது தான் சரியான பாதுகாப்பான இடம்! நீ இங்கிருந்தே வேலைக்குப் போ!

ஊருக்குப் போய் வீட்டில் எல்லோருக்கும் இத சொல்லி உனக்கு  போன் பண்ண சொல்றேன்! சரியா.. பத்திரமா இரு” என்று சொல்லி அன்பு , மயூவின் வார்த்தைக்காக வெண்ணிலாவை ஜீவா வீட்டிலேயே விட்டு விட்டு கிளம்பினான்!

அவனை இருவரும் போய் ட்ரைன் ஏத்தி விட்டு தான் வந்தார்கள்!

இரவு தூங்கவதற்கு முன் தன் ரூமில் தண்ணீர் இல்லையென்று வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கிச்சன் பக்கம் போனாள்  வெண்ணிலா!

அதற்கு அருகில் தான் ஜீவாவின் அறை. அங்கு ஜீவாவின் பேச்சு சத்தம் கேட்டது!

மயுவிடம் தான் போனில் பேசிக்கொண்டிருந்தான் ஜீவா!

“ஐ லவ் யூ மயூ.. ஐ லவ் யூ ஸோ மச்.. உம்மா உம்மா” என்று போனிலேயே முத்த மழை பெய்துக் கொண்டிருந்தான் அவன்!

அதைக் கேட்டு விட்ட வெண்ணிலாவின் முகம் கூம்பிப் போய் விட்டது!

காரணமில்லாமல் கோபமும், அழுகையும் வந்தது!

கூடவே மயூ மேல் கொஞ்சம் பொறாமையும்!

இது என்ன வினோதம்! அநியாயமும் கூட! ஜீவாவும் மயூவும் அவளுக்கு செய்திருக்கும் உதவியை மறந்து இப்படி அவர்கள் வாழ்க்கையைப் பார்த்துப் பொறாமைப் படுவதா!

அவள் மனசாட்சி அவளைத் திட்டியது!

என்றாலும் அவள் மனது பிடிவாதமாய் அவன் பின்னே தான் சென்றது!

உள்ளுக்குள் போராட தொடங்கினாள் வெண்ணிலா!

என்ன இது? அழகா ஒரு வேலை கிடைச்சாச்சு, தங்க ஒரு பாதுகாப்பான ரம்யமான சூழ்நிலையில் ஒரு இடமும் கிடைச்சாச்சு! சந்தோசப்படுறதுக்குப் பதில் இது என்ன பைத்தியக்காரத்தனம்!

அறிவு என்ன லாஜிக் பேசினாலும் சமாதானம் செய்தாலும் அவள் மனம் அடங்க மறுத்து அது ஜீவா பின்னால் தான் சென்றது!

அப்படியே கண் மூடிக் கிடந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது!

மறு நாள் காலை.

வெண்ணிலா எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று வந்தவள், அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்!

அவளிடம் சானிடரி நாப்கின்கள் இல்லை!

அவள் கிளம்பும் போதே அவர்கள் கடையிலேயே இருக்கும் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ள நினைத்து இரண்டு முறை போனாள்.

போகும் போதெல்லாம் வசந்தா கல்லாவில் உட்கார்ந்து இருந்ததால், “உனக்கு இப்ப எதுக்கு இப்ப?’ என்ற கேள்வியைத் தவிர்க்க எண்ணி அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தவளுக்கு மறந்து போய் விட்டது!

மறுபடி இங்கு வந்தவுடன் தான் நினைவும் வந்திருந்தது!

அன்று மதியம் உணவு வாங்க கீழே போகும் போது, அங்கிருந்த டிப்பார்ட்மென்ட் கடையில் வாங்கி வந்து விடலாம் என்று அவள் இருக்க, அப்போது ஜீவாவே புட் ஆர்டர் பண்ணி விட்டதால் அப்போது முடியவில்லை!

பிறகு அவள் ஜீவாவோடே காரில் வெளியில் சென்று வந்ததால் அதை வாங்கவே முடியவில்லை!

சரி இப்போது கொஞ்சம் சமாளித்துக் கொண்டு கீழே போய் அந்தக் கடையில் வாங்கி வரலாம் என்று வெளியே வந்தாள்.

வந்தவள் கண்டது, ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவை!

கட்டாயம் அவன் எங்கே எதற்கு என்று கேள்வி கேட்பான், என்ன சொல்வது? அவளுள் கூச்சம்! தயக்கம்!

இரண்டு முறை எட்டிப் பார்த்து விட்டு, கையைப் பிசைந்துக் கொண்டு இருக்கும் போது தான் அவளுக்கு மயுவிடம் இருந்து போன்!

“நிலா, நம் வீட்டு கிச்சனுக்கு பக்கத்துல யுடிலிட்டி ஏரியா மாதிரி ஒன்று இருக்கு இல்லே? வாஷிங் மெஷின் கூட போட்டு வச்சுருக்கமே அந்த இடம் தான்!”

“ஆமா மேடம்!”

“அங்க இருக்கிற கப் போர்ட்ல கீழ் அடுக்குல சானிடரி நாப்கின்ஸ் இருக்கும்! உனக்கு தேவைன்னா யூஸ் பண்ணிக்கோ!”

வெண்ணிலா அதிர்ந்தாள்!

இந்த மயூ, உண்மையில் பெண் தானா? இல்ல யட்சியா!

நான் பீரியட்ஸ் ஆனது இவங்களுக்கு எப்படி தெரியும், அதுவும் என்னிடம் நாப்கின்ஸ் இல்லாததும் இவங்க எப்படி தெரிஞ்சுகிட்டாங்க? அவளுள் கேள்வி! அதைக் கேட்டும் விட்டாள்!

மயூ சிரித்து விட்டு, “ஜீவா தான் எனக்கு போன் பண்ணினான்.

வெண்ணிலா ஏதோ ஒரு இன்கன்வீனியன்சா இருக்காங்க மயூ, நீ பேசு” என்று சொன்னான்!

“அது தான் நானா கெஸ் பண்ணி சொன்னேன்!

ஜீவாவும் இத கெஸ் பண்ணிட்டு தான், அவனே சொன்னா நீ கொஞ்சம் கூச்சப்படுவேன்னு தான் என்னை விட்டு சொல்ல சொன்னான்!

அவனுக்கு நம் பெயின் புரியும் நிலா, எனக்கே கூட கால் பிடித்து விடுவான் அந்த நாட்களில்!” என்றாள் மயூ!

என்ன மனிதர்கள் இவர்கள்! வெண்ணிலாவுக்கு கண்ணீரே வந்து விட்டது!

ஒருவர் மனது அறிந்து செயல்படுவது, அதுவும் தங்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாத அந்தஸ்துல இருக்கும் ஒருவரிடம்!

அவளுக்கு அருண் நினைவு வந்தது!

வீட்டில் வசந்தாவோடு சேர்த்து நான்கு பெண்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று எல்லாம் நினைக்காமல், அவர் வருடம் தவறாது அதுவும் இருமுறை சபரி மலைக்கு மாலைப் போட்டு விடுவார்!

கார்த்திகையில் ஒரு முறை, அப்புறம் சித்திரை விஷுவுக்கு ஒரு முறை என்று!

அவர் பக்தி அவர் விருப்பம் என்று விடுவதற்கில்லை!

நான்கு பெண்களும் ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டு விலக்காகி விடுவர்!

அவர்களை மாட்டுப் பட்டிக்கு அருகில் இருக்கும் ஒரு செட்டில் தான் இருக்க சொல்வார் அருண்!

அவர்கள் எதிரில் வரக் கூடாது, முகத்தில் கூட விழிக்கக் கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள் போடுவார்!

ஆனால் அந்த சபரிமலை யாத்திரைக்கே இந்த பெண்கள் உழைத்து சம்பாரிக்கும் பணம்தான் தேவை!

அந்த நாட்களில் அவர்கள் ரொம்பவும் கஷ்டப் படுவார்கள்!

ஒன்று அவர் எழு முன்னர் அந்த பனியில் இவர்கள் எழுந்து குளித்து முடித்து விட வேண்டும்! இல்லை அவர் குளித்து முடித்து வெளியே சென்ற பின் தான்!

பள்ளிக்கும் வேலைக்கும் செல்லும் அவர்கள் நேரத்திற்கு கிளம்ப முடியாமல் தவிப்பார்கள்!

அந்த செட்டில் தூங்கும் போது வளர் ஒருமுறையும் மதி ஒருமுறையும் தேள்க்கடி கூட வாங்கி இருக்கிறார்கள்!

அவர்கள் அங்கே தனியாக தூங்கும் போது துணையாக வசந்தாவும் ஒரு கயிற்றுக்கட்டிலில் அந்த பனியில் படுத்துக் கிடப்பார்!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த வெண்ணிலாவுக்கு, இந்த அனுசரணை நெகிழ வைத்தது!

மறுநாளும் அடுத்து வந்த நாட்களும் வெண்ணிலாவுடன் அவள் வீட்டினர் மாற்றி மாற்றி போனில் பேசினர்!

வசந்தாவின் குரலில் சுதாவும்!

அவளுக்கும் அன்புவுக்கும் இன்னும் இரு நாட்களில் திருமணம்!

வெண்ணிலாவுக்கு சொல்ல ஆசை தான்!

சொல்லி அவள் இங்கு வந்து விட்டால், எல்லாக் காரியமும் கெட்டு விடும்!

அதோடு முக்கியமாக அவள் வாழ்க்கையே!

அந்த வினய் எதாச்சும் குழப்பம் பண்ணி அவளைக் கல்யாணம் பண்ண நினைப்பான்!

இல்லை குறைந்தப் பட்சம் அவமானப் படுத்தவாச்சும் செய்வான்! அதுக்கு மட்டும் விடவே கூடாது!

அவள் கல்யாணத்திற்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை!

இது தான் மதி, வளர் மற்றும் அன்பு சுதாவின் நிலைப்பாடு!

வெண்ணிலாவோ ஜீவாவை நினைக்கவும் முடியாமல், நேசிக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்!

“ஏன் கடவுளே இந்த ஜீவாவை எங்க ஊருக்கு அனுப்பினே? என்னை ஏன் இங்க வர வச்சே” என்று அவள் கடவுளையும் திட்டிக் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் அவள் வெளியே சொல்லா விட்டாலும் ஜீவா அவளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்!

இவளுக்கு இங்கே இருப்பதில் விருப்பம் இல்லையா? எனக்கு மட்டும் தானா?

அவன் வெண்ணிலா அங்கு தங்கிக் கொள்ள சம்மதம் சொன்னவுடம் அவ்வளவு சந்தோசம்!

இதை சாத்தியப் படுத்திய மயூவைக் கொஞ்சி தீர்த்து விட்டான்!

எப்படி இந்த மயூ, இவன் மனதைப் புரிந்து வைத்திருக்கிறாள்!

“வெண்ணிலா பிஜிக்கு போகப் போறா, உன்கிட்ட பேசனுமாம்” என்று இவன் சொன்ன இவன் குரலில் அவள் என்ன கண்டாள்? உடனே அன்புவிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டாளே!

அது தான் “ஐ லவ் யூ ஐ லவ் யூ” என்று முத்தமழை பொழிந்து விட்டிருந்தான் போனிலேயே!

இப்போது இவள் பார்த்தால், இது என்ன இந்த வெண்ணிலா சோக மயமாய் இருக்கிறாள்?

அதற்கும் மயூவே பதில் சொல்லி விட்டாள்!

“அவளுக்கு ஹோம் சிக் ஆக இருக்கும்! நீ அவளை இந்த வீக் என்ட் வெளியே கூட்டிட்டுப் போ! கூடவே அந்த வாண்டு வருணையும்!

நான் அவனுக்கு ப்ராமிஸ் பண்ணியிருந்தேன்! என்னால இப்ப அங்க வர முடியல! நீ இவங்க ரெண்டுப் பேரையும் கூட்டிட்டு போ!”

“சரி” என்றவன், வெண்ணிலாவிடம் இதை சொல்ல,

“அங்க போய் எனக்கு எதுவும் வாங்கி தரக் கூடாது, இப்ப நீங்க செஞ்சுட்டு இருக்கிறதே அதிகம்!” என்ற கண்டிசனோடு தான் அவள் கிளம்பினாள்!

அவர்களை பீனிக்ஸ் மால் கூட்டி சென்றான் ஜீவா.

வெண்ணிலா, அங்கு சென்றவுடன், உற்சாகமாய், “நான் இதை யூடுயுபில் பார்த்துருக்கேன்! வரணும்னு ஆசைப் பட்டும் இருக்கேன்! தேங்க்ஸ் ஜீவா சார்!” என்றாள் சிறு பிள்ளையின் உற்சாகத்துடன்!

உள்ளே போனார்கள்.

வருணை ப்ளே ஏரியாவில் விட்டுவிட்டு இவர்கள் அப்படியே மாலை சுற்றி வந்தார்கள்!

மாலில் அங்கங்கு தென்பட்ட அரைகுறை நாகரிக(?!) ஆடைப் பெண்களைக் கண்டு வெண்ணிலா வெட்கப்பட்டு தலைக் குனிந்து கொண்டாள்!

அவளின் வெக்கத்தை ரசித்த வண்ணம் ஜீவாவும் நடந்தான்!

அவளை ஸ்டார்பக்ஸ் கூட்டி சென்றான் ஜீவா.

இருவருக்கும் அவனே ஆர்டர் செய்தான்.

சாப்பிடும்போது அவள் மேலுதட்டில் ஒட்டிக் கொண்டிருந்த அந்த க்ரீம் சீஸை அப்படியே வழித்து இவன் வாயில் போட்டுக் கொள்ள பரப்பரத்த கையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, “வெண்ணிலா, இந்தாங்க டிஷ்யூ துடைச்சுக்கோங்க” என்று சொல்லி லேசாக துடைத்து விட்டு கையில் கொடுத்தான்!

அங்கே இவர்களோடு ஒரு யூடியுபர் ஒருத்தனும் அவன் கேமரா மேனோடு அங்கே ஷூட் செய்துக் கொண்டிருந்தான்.

கடையை சுற்றி எடுத்துக் கொண்டிருந்தவன் இவர்களையும் கவர் செய்ய முயலும் போது ஜீவா தடுத்து விட்டான்! அவர்களும் சாரி சொல்லி நகர்ந்து விட்டார்கள்!

ஆனால் அவர்கள் கேமிராவில் ஜீவா அவளை ஆசையோடு பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியும், டிஷ்யூ கொண்டு துடைத்து விடும் காட்சியும் பதிவாகிவிட்டிருந்தன!

அவர்கள் சாப்பிட்டு முடித்து வெளியே வந்து வருணை அழைக்கவென்று அவன் இருந்த இடம் நோக்கி செல்ல, எங்கிருந்தோ திடீரென்று  அங்கு வந்த ஒரு இளைஞர் பட்டாளம், வெண்ணிலாவின் மோதுவது போல் வர, ஜீவா மிகவும் இயல்பாய் அவள் இடையில் லேசாக கைப்போட்டு “இந்த பக்கம் வா வெண்ணிலா” என்று அவளைத் திருப்பினான்!

அந்த உரிமையை அவள் உள்ளுக்குள் ரசித்தாள்!

கூடவே  அந்த கும்பலில் இன்னொரு ஜோடிக் கண்கள் அவர்களை குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன!

அவை விஷப் பாம்பு வினயின் கண்கள்!

அவன் எப்போது சென்னை வந்தான்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!